கோவை பஸ் ஏறி ஜன்னலோர இடம் கிடைத்த பிறகுதான் கொஞ்சம் ஆசுவாசம் வந்தது. பதட்டம் மெல்ல அடங்குவதை உணர்ந்தேன். கடந்த ஆறு மாதமாக செல்ல எண்ணி இருந்த இடம், இன்று இனி முடியாது என்றெண்ணி கிளம்பி விட்டேன். என் ஆசிரியர் ,ஒரு எல்லை வரை என் குருநாதராக நான் எண்ணிக் கொள்ளும் அகஸ்டின் சார் வீட்டினை நோக்கி .
கர்நாடகா பயணத்தில்தான் இந்த பிரச்சனையை தீவிரமாக உணர்ந்தேன், அரை மணிநேரம் முன்பு இருந்து செலவிட்ட இடத்தின் பெயரை மறந்து போனேன், எவ்வளவு யோசித்தும் ஞாபகத்திற்கு வர வில்லை. சரி இப்போது இருக்கும் இடத்தின் பெயரையாவது ஞாபத்தில் வைத்துக் கொள்வோம் என்று ஒன்றுக்கு ஐந்து முறை இடத்தின் பெயரை மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.  அடுத்த சுற்றுலா தளம் சென்ற பிறகு யோசித்த போது, எவ்வளவு யோசித்த பிறகும் ஞாபகத்திற்கு வர வில்லை . சுரேந்திரன் ஆச்சிர்யபட்டான்,  “ஏதாவது டாக்டரை பாருடா” என்றான் .
எனக்கு பெயர்கள், அன்றாட நிகழ்வுகள் எல்லாம் மறந்து விடுவதில் பிரச்சனை இல்லை. ஆனால் படித்த நூல்களில் வரும் சம்பவங்கள் , கதாபாத்திர பெயர்கள் எல்லாம் மறந்து போவதில்தான் கடுமையான வருத்தம் இருந்தது. சில கட்டுரைகள் எழுதி இணைய இதழ்களில் வெளியிட்டு இருக்கிறேன், அதில் ஒன்று நான்கு காந்திய நாயகர்கள் கொண்ட நூலினைப் பற்றிய கட்டுரை. அந்த கட்டுரை எழுத நூலை மூன்று முறை வாசித்து இருக்கிறேன் . வெளிவந்த ஒரு வருடம் கழித்து அந்த நாயகர்கள் பெயர்களை யோசித்துப் பார்த்தேன்.  ஒருவர் பெயர் மட்டுமே திரும்ப ஞாபகத்திற்கு வந்தது, அதுவும் பாதிப் பெயர் !
எனக்கு நூல்கள் வாசிப்பது கடுமையான பணி. மெதுவாகத்தான் புரியும். ஒன்றுக்கு இரண்டு முறை வாசிக்க வேண்டும். மணிக்கு 50 பக்கங்கள் 60 பக்கங்கள் வாசிப்பவர்களை எல்லாம் பீதியோடு பார்ப்பேன். அவ்வளவு கடினத்துடன் வாசிக்கும் நூல்கள் மறந்து போவது என்பது நூல்கள் வாசிக்கும் ஆர்வதையே இல்லாமல் ஆக்கி விடுகிறது ..
இந்த மனநிலைகளில்தான் திருக்குறள் நூலை வாசிக்க ஆரம்பித்து இருந்தேன்.  அதில் இருந்த ஒரு குறள்  என்னை நின்று பார்க்க வைத்தது . அந்த குறள் கற்ற கல்வி அடுத்த பிறப்பிலும் உடன் வரும் என்று இருந்தது . நான் கடவுள் நம்பிக்கை , நம்பிக்கை இன்மை இரண்டிற்கும் இடையில் இருப்பவன். பொதுவாக எனக்கு உணர முடியாத விசயங்களில், ஞானிகள் என்ன நிலை எடுக்கிறார்கள் என்று பார்ப்பேன், அதைச் சரி என்று எடுத்து கொள்வேன். அவர்களுக்கு அந்த அனுபவங்கள், புரிதல்கள் இருக்கும் ,அதில் நின்று சொல்கிறார்கள், நாம் அதை எடுத்து கொள்வோம் என்று எண்ணத்தில். மறுபிறப்பு நம்பிக்கையும் அப்படியான ஒரு எண்ணத்தில்தான் இருக்கிறது என்று நம்புகிறேன். அனுபவமில்லாத நம்பிக்கைதான், சமீபத்தில் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் தனக்கு ஒரு அனுபவம் வழியாக மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை உருவானது என்று பேசி இருந்தார். அவர் பிடித்தமான எழுத்தாளர் என்பதால் இந்த நம்பிக்கை உண்மையாக இருக்கும் என்ற எண்ணம் உருவானது. திருக்குறள் எனக்கு இந்த விசயத்தில் ஆர்வத்தை உருவாக்கியது. படித்தது மறக்காமலும், இறந்தும் தொடரும் என்று இருக்குமானால் படிப்பது என்பது சற்றும் வீணான செயல் அல்ல என்று தோன்றியது . ஆனால் இதை முழுவதும் நம்பவும் முடிய வில்லை . சில மாதங்களிலேயே மறந்து போகின்ற எனக்கு எப்படி இறந்தும் கூட உடன் வரும் என்ற ஐயம் தோன்றியது .
பள்ளிப் படிப்பு தாண்டி வெளியே புத்தகங்களை நான் வாசிக்க காரணமாக இருந்தவர் அகஸ்டின் சார் . என் கல்லூரிக்கல்வி காலம் வரை கோவையில்தான் இருந்தேன் , பிறகு எனக்கு திருப்பூரில் வேலை அமைய குடும்பத்துடன் திருப்பூர் வந்து விட்டோம். கோவையில் என் வீடு தள்ளி மூன்றாவது வீடுதான் அகஸ்டின் சார் வீடு, அங்கு நாளிதழ்கள், குமுதம், விகடன் போன்ற வார இதழ்கள் முதற்கொண்டு கண்ணாடி சோக்கேசில் அடுக்கி வைக்கப் பட்ட நூல்கள் வரை வாசிக்க நிறைய இருக்கும் . அடுக்கில் ஒளித்து வைக்கப் பட்டிருந்த  போட்டோகள் நிறைந்த நீல வண்ண நூலையும் கூட பார்த்து இருக்கிறேன் . மேலாடையின்றி ஆண் பெண் உடல்கள் வித விதமான கோணங்களில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் கொண்ட நூல் அது . கூடவே நிறைய நவீன இலக்கிய நூல்களும் இருந்தது !
எப்போதும் அங்கேயேதான் கிடப்பேன்.  அகஸ்டின் சார் நார்த்போல் சிகரெட் எந்நேரமும் பிடித்துக் கொண்டிருப்பவர், அவர் மனைவியாக ஸ்டெல்லா ஆன்டி சிடுமூஞ்சியையே முகமாக கொண்டிருந்தவர்.  திட்ட வெல்லாம் மாட்டார், ஆனால் அவர் சிரித்து நான் பார்த்ததே இல்லை. புதிதாக ஆன்டியைப் பார்ப்பவர்கள் அவருக்கு பேச வராது என்றே எண்ணுவார்கள் . சுருள் முடியும், கருப்பு நிறமும் , பிருஷ்டம் பெருத்த உடலும் கொண்டவர். கண் கண்ணாடிக்குள் அவரது விழிகள் பெரிய கோலி உருண்டை குண்டுகள் போல தெரியும். அகஸ்டின் சாரும் ஸ்டெல்லா ஆண்டியும் பேசிக் கொள்ளவே மாட்டார்கள். ஆனால் அகஸ்டின் சார் விரும்பும் நேரத்தில் காபி வரும் , உணவுகள் மேசையில் வந்து இருக்கும் . என் அக்கா சீபா தான் ஸ்டெல்லா அக்காவுக்கு பிடித்தமானவள், அக்கா ஸ்டெல்லா ஆன்டியிடம் பேசிக் கொண்டே இருப்பாள். ஆன்டி அவள் பேசுவதை , அவள் இருப்பதையே கண்டு கொள்ளாதவர் போல தன் பணிகளில் இருப்பார். அக்கா திருமணத்தின் போது ஆன்டி முழு நிகழ்வுகளிலும் கூட இருந்தார் , அக்கா கிளம்பிச் செல்லும் போது யாரும் காணாதிருக்க சுவருக்கு பின்பு சென்று அழுது கொண்டிருந்தார் .
எனக்கு அகஸ்டின் சார் அப்போது ஒரு விளையாட்டு பொருள் போல இருந்தார், என்ன வேண்டுமானாலும் அவரிடம் கேள்வி கேட்கலாம், எல்லாவற்றிற்கும் அவரிடம் விடை இருக்கும் . இல்லாது போனாலும் ஒரு நாளிற்குள் தேடிக் கண்டுபிடித்து சொல்லி விடுவார் . ஒருமுறை அப்பா என்னை அடித்து விட்டார், முகம் வீங்கி விட்டது. நான் அகஸ்டின் சார் வீட்டிற்குப் போய் குனிந்து அமர்ந்து கொண்டேன். ஏதோ கேட்டவர் நான் முகம் நிமிராமல் இருப்பதைப் பார்த்துச் சட்டென அருகில் வந்து என் தாடையை தூக்கி முகத்தைப் பார்த்தார். அவர் முகம் கோபமானது , “அப்பா அடிச்சாரா?” என்று கேட்டார் , நான் ஒன்றும் சொல்லாமல் இருந்தேன். சட்டென வெளியில் சென்றவர் ,நேராக எங்கள் வீட்டுக்குப் போய் விட்டார் ,அப்பா சட்டை இல்லாமல் லுங்கியுடன் சோபாவில் அமர்ந்து இருந்தார், உள்ளே வந்த அகஸ்டின் சாரைப் பார்த்து திகைத்து எழுந்து நின்றார்.  அப்பா அகஸ்டின் சாரைப் பார்த்து ” வாங்க சார் ” என்றார் . அகஸ்டின் சார் அப்பாவை நோக்கி “அவனை அடிக்கிற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க” என்றார். அப்பா சட்டென கோபாமகி “அவ என் மகன்” என்றார்.  அகஸ்டின் சார் மேலும் கோபமானவர், அப்பாவை வெறித்துப் பார்த்து ஒன்றும் சொல்லாமல் வெளியே கிளம்பிச் சென்றார் . அப்பா வருத்தம் கொண்ட முகத்துடன் ஸோபாவில் அமர்ந்தார் . ஆச்சரியமாக மாலை அப்பா அகஸ்டின் சார் வீட்டிற்கு வந்தார். அகஸ்டின் சார் வரவேற்க வில்லை.  அப்பாவே சென்று, அகஸ்டின் சார் அமர்ந்திருந்த முனைக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார். சில நொடிகள் ஒன்றும் சொல்லாமல் இருந்தவர் சட்டென “என்னை மன்னிச்சுடுங்க சார்” என்றார்.  அதுவரை அப்பா வந்ததையே கண்டுகொள்ளாமல் இருந்த அகஸ்டின் சார் பதைத்து “அதெல்லாம் ஒன்னுமில்ல , அவன் உங்க பையன், அவனை நீங்க கண்டிக்காம வேறு யார் கண்டிக்க முடியும் ” என்றார். அன்று இரவு அப்பாவும் , அகஸ்டின் சாரும் ஒன்றாக மது அருந்தினர், அப்போது அப்பாவிடம் அகஸ்டின் சார் “அவனுக்கு நான் சொல்றது எல்லாம் புரியுது, நான் படிச்சதை, தெரிஞ்சுகிட்டதை எல்லாம் பேச எனக்கு இப்ப அவன் மட்டும்தான் இருக்கான்” என்றார். அன்றைய இரவுக்குப் பிறகு அப்பா என்னிடம் ஒரு சின்ன கடுஞ்சொல் கூட சொல்லியது இல்லை .
அகஸ்டின் சாரைப் பார்த்து ஏழு வருடங்கள் ஆகி விட்டது. அவரை விட்டுப் பிரிந்தாலும் அவரிடம் நான் பெற்றுக் கொண்ட வாசிப்பு மட்டும் என்னுடன் எப்போதும் இருந்தது . வாசிக்கும் போதெல்லாம் அவரை நினைத்துக் கொள்வேன்.  அவரை இங்கு வந்த பிறகு நான் இதுவரை சந்திக்காமல் இருந்த காரணம் “நான் பெரிதாக வருவேன்” என்று எதிர்பார்த்தார , ஆனால் என்னால் வளர இயல வில்லை, மிகச் சரியாக தோல்விகளை அளிக்கும் வழியிலேயே மட்டுமே சென்று கொண்டிருந்தேன். தொழில் தாண்டி நிம்மதி அளிக்கும் விசயமாக இந்த வாசிப்பு மட்டுமே இருந்தது. அதுவும் மறந்து போவது அதிகமாகத் தொடங்கியதும் மொத்தமாகவே வாழ்க்கை மீது வெறுப்பு வந்தது . இந்த நிலையில்தான் கல்வி அடுத்த தலைமுறைக்கும் கூட வரும் என்ற குறள் ஒரு நம்பிக்கை கீற்றை அளித்தது. இதை உறுதி செய்து கொள்ளவே நீண்ட நாட்கள் பிறகு அகஸ்டின் சாரைப் பார்க்க சென்று கொண்டு இருக்கிறேன் .
வீடு அப்போது எப்படி இருந்ததோ அதைப் போலவே இருந்தது . காலிங் பெல் அடித்து, காத்துக் கொண்டிருந்தேன். ஸ்டெல்லா ஆன்டி வந்து கதவைத் திறந்தார். முதல் பார்வையில் அவருக்கு என்னைச் சட்டென அடையாளம் கண்டு கொள்ள முடிய வில்லை. சில கணங்கள் கழித்த பிறகுதான் கண்கள் விரிந்து “டே ராஜு ” என்றார். “உள்ள வா “. எப்போதும் அகஸ்டின் சார் இருக்கும் இருக்கையில் அவரைப் பார்க்க முடிய வில்லை, சோபா காலியாக இருந்தது, ஸ்டெல்லா ஆன்டி என்னை உணர்ந்து ” அவருக்கு உடம்பு கொஞ்சம் சரியில்ல, பெட்ரூம் போய்ப் பாரு, நான் காபி எடுத்து வறேன்” என்றார் .
உள்ளே சென்றேன்.  கண்கள் மூடியபடி படுத்து இருந்தார்.  உள்ளே நான் வரும் அசைவை உணர்ந்து கண் திறந்து பார்த்தார் . கண்கள் மெல்ல ஒளி கொண்டன. ” வாடா” என்றார். எழுந்து அமர முயன்றார். அமர சிரமப் பட்டார்.  நான் அவரைத் தொட்டு தலையணையை அவர் பின்பு வைத்து சாய்வாக அமர வைத்தேன். அவரைத் தொட்டவுடன் என் கண்களில் அடங்காமல் கண்ணீர் வந்து கொண்டிருந்தது . அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார்,  அவர் கண்களும் கலங்கி இருந்தன.  “பொண்ணாடா நீ, இப்படி அழுகற” என்றார் சிரித்துக் கொண்டு .
“எப்படி இருக்க? ,  தொழில் எப்படி இருக்கு? ” என்றார். “நல்லா போகுது சார் ” என்று பொய் சொன்னேன் . அவர் நம்ப வில்லை என்று தோன்றியது . ” என்ன இந்த பக்கம் அதிசியமா ” என்றார் . நான் ஒன்றும் சொல்லாமல் இருந்தேன். சிறிது நேரம் இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்தோம். பிறகு அவரே “உன்னை பார்க்கணும்னு எப்பவும் நினைப்பேன்டா , நீ வருவேன்னு ஒவ்வொரு நாளும் எதிர் பார்ப்பேன் ” என்றார் . எனக்கு வெடித்து அழ வேண்டும் போல இருந்தது . “வேலைகளில் மாட்டிட்டேன், அதான் வர முடியல” என்றேன் . பரவால்ல என்பது போல பார்த்தார் .
பிறகு மெல்ல இயல்பு மனநிலைக்கு வந்தேன்.” இப்ப என்ன படிக்கறீங்க?” என்றேன். அவர் “இப்பல்லாம் படிக்கறது இல்லடா, படிச்சா உடனே மறந்துடுது, அடுத்தடுத்த பக்கங்கள் போகும் போது முந்திய பக்கங்களில் என்ன படிச்சேன்னு மறந்துடறேன் ” என்றார்.  எனக்கு தூக்கிவாரிப் போட்டது . ஒன்றும் சொல்லாமல் இருந்தேன்.  பிறகு அவர் “சரி நீ என்ன படிக்கறனு சொல்லு” என்றார். ” எனக்கும் அதே பிரச்னைதான் , ஆனா உங்க அளவுக்கு இல்லை” என்று சொல்லி சிரித்தேன். அவர் “அது பிரச்சினை இல்லடா படிக்கும் போது ஒரு சந்தோசம் கிடைக்கும் , அதுக்காக படி போதும் ” என்றார் . நான் சற்றுத் தீவிரமாகி ” படிச்சது மறக்குதுனா அப்பறம் படிக்கறதுலயே அர்த்தம் இல்லையே ” என்றேன் . அவர் “முட்டாள் தனமா பேசாதே ” என்றார் . மேலும் ” படிக்கிறது நம்மை பக்குவ படுத்தறதுக்கு , அது டூல்தான் , அது வழியாக நாம பக்குவமாவோம் , படிக்கிறது மறக்கறது ஒரு கொடுப்பினைதான் ” என்றார் சிரித்துக்கொண்டே .
“கல்வி அடுத்த அடுத்த ஜென்மத்திலும் நம்ம கூட வரும்னு ஒரு குறள் சொல்லுது” என்றேன். அவர் “ஆமா உண்மைதான், அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருக்கானு தெரியாது, ஆனா நாம படிச்சதால் அடைந்த பக்குவம், முதிர்ச்சி நம்மளை விட்டு போகாதுனு தோணுது ” என்றார் . மேலும் “நீ வாசிக்காதவனா இருந்திருந்தா உன் இயல்புக்கு எப்பவோ தற்கொலை பண்ணி இருப்ப ” என்றார் .
நான் திகிலோடு அவரைப் பார்த்தேன் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *