1.
ஜன்னலுக்கு வெளியே தட்டிய
சூரியக் கதிர்களை
திறந்து வினவியதும்
மடம் பிடுங்கும் கதையாக
அறையை ஆக்ரமித்து
வெளியேற்றியது வெறுமையை
திகழும் பரப்பும் நீடித்து
கண்சிமிட்டி
ஓதுவாரோடு ஓதி விளிம்பில் அமர்ந்தது
புன்னகை பூக்கும் விழிகளால்
வம்பிழுத்து
போதும் போய் விடு என்றது
நீடித்த உக்கிர கதிர்கள்
ஆவேசமாக எதிர்த்து நிறைந்து
மங்கியதும் சூழ்ந்தது
இருள்.
2.
நேயமுகிலின் ஆள்காட்டிவிரல்
குதப்பிய கன்ன
கதுப்புகளில் அமர்ந்திருந்த
புன்னகை அவளுக்கு முன்பாக எழுந்து வலம் வந்தது
எல்லோரிடமும் காட்டியதும்
வெட்கத்தினால் ஒளிந்து
தூங்கும் வரை அவள்
பின்னால் சுற்றி
தூங்கியதும் முகம் முழுதும்
பரவி தங்கியது.
அவள் எழும் வரை வேறு
என்ன செய்ய
(முகுந் நாகராஜின் கவிதை தூண்டல்)
3.
அதிகாலை பறவைகள் எழும்
கணத்தில் கூக்குரலில்
எழும் கற்பனா ஊற்றில்
மை தீரவில்லை
கூரையை நோக்கிய சிதறலில்
வானம் தெறித்தது
கருமையில் நிறங்களை கலக்கும்
நேரம் இமைக்கும் நெடியில்
அடர் சாம்பல் , வெளிர் சாம்பல்
சிவப்பு , மஞ்சள்
தூரிதகதியில் குதிரைகள் ஓட
கையசைத்து பரவியது வெதுவெதுப்பான
கண் கூசும்
பாரம்பரிய வெப்பம்
நினைவோடையில் நீங்கா
இடம் பெற்றவை
4.
வயல் வரப்பினோர
வாய்க்காலில் தெள்ளிய நீரோடையில்
கையள்ளி பருகிய
சிதறலில் கலங்கிய உருவம்
வேகமாக ஓடும் நீல வானம்
கரை சேரா மேகத் துண்டுகள்
அபூர்வமாய் வயல் நண்டு
நீர் மேல் நடக்கும் பூச்சியை
துரத்தும் கொசுக்கள்
வீரியமானதை தெளித்து உற்சாகம்
இழந்து, துவண்ட கால்கள்
மாதா மாதம் அரசு மருத்துவமனையில் மருந்துவாங்க
வரிசையில்
5.
கருமேகத்திரையினூடே சிதறிய
மின்னலொளியில் துலங்கிய
கண நேர ஈர்ப்பில்
குழைவான வழவழப்பான
தடையில்லாத
நித்திரை கலைந்த வெப்ப
மூச்சில்
அலையலையான மோகப் பரவலில்
நிதானமின்றி நுண் கூடலில்
கட்டைவிரலில் நின்று
முத்த பரிமாறலில் திளைத்த
மயக்கத்தில்
உள்ளிருந்து பொறாமையில் புன்னகை பூக்கும்
கடவுளுக்கு தெரியுமா ?
முத்தத்தின் சுவை என்னவென்று
6.
வாடாத பூ ஒன்றை
தேடியலைந்தேன் அணுகியவர்கள்
கைகாட்டிய பூக்கள்
ஒரு நாள் ஒரு வாரத்தில் சருகாகியது
யாருக்கும் தெரியவில்லை
பூச்சந்தையில் வயதான பாட்டியிடம்
கேட்ட போது
“உன் வீட்டுல பாரு” என்றார்
நுண்ணிய தேடலில்
எல்லோருக்கும் பொதுவாய்
கனன்ற தழலின் வெப்பத்தில்
வீடு முழுவதும் பூத்துக் குலுங்குவதை கண்டேன்
தொட முயன்றபோது
கூம்பி மொட்டாகியது
மலர்ந்ததும் உள்ளிருந்து கண்சிமிட்டி எச்சரித்தது
தொடாதே
7.
மின் தூக்கிக்கு அருகே
யாருமில்ல
சிவப்பு எண் கண்களால்
துழாவி , ஒளிர்ந்து அழைத்தது
நெருங்கினேன், வாய்திறந்து
விழுங்கி ஆறாவது தளத்துக்கு
செல்லும் வழியில்.
இன்று ஞாயிற்றுக் கிழமை
எல்லோரும் பயணமாக புறப்பட்டு விட்டனர் , குழந்தைகள் கூட
இல்லை.
வயதானவர்கள் மாலை வரை
வெளியே வர மாட்டார்கள்
தனிமையைப் போக்க நீங்களாவது வந்தீர்கள்
ஆறாவது தளத்தில் மூடிய வாயை
திறந்தது , வெளியேறும் தருணத்தில்
இன்னொரு முறை வருகிறீர்களா?
என கெஞ்சிய குரலில் அழைத்தது
8.
கிளர்ந்தெழும் உணர்வுகளின்
எண்ணிலடங்கா தொடர்ச்சியான எண்ணங்கள் வானத்தை
நிறைத்தது மேகத்தில்
தப்பித்து ஓடியவை
மழையாய் சொரிந்து
என்னவளின் உணர்வுகளோடு ஒன்றிணைந்து மீட்டியது
குறுஞ்செய்தியாக
வாட்சாப்பில் இதய வடிவத்தில் வந்தது
நிலா தூறலில் நனைய
அவளையும் சேர்த்துக் கொண்டேன்