முகம் கண்ணாடியில் பார்க்கும் முன்பு என்னிடம் நீண்ட காலம் இருக்கும் பரிட்சை அட்டையை எடுத்து கொள்வேன். முகத்தின் வலது பக்கத்தை அட்டையால் மறைத்த பின்பே முகம் பார்ப்பேன்  . நான் மிக மகிழ்ச்சியாக இருக்கும் நொடிகள் அவை . உலகில் எனக்கு மிக பிடித்தமானது எனது இடது பக்க முகம் தான். பழுக்க ஆரம்பித்திருக்கும் மா நிறத்தில் இருக்கும், அங்கங்கு சிறு புள்ளிகளுடன், அந்த புள்ளிகளும் எனக்கு பிடிக்கும், இடது கன்னதிற்கு கீழே இருக்கும் புள்ளியை எப்போதும் தொட்டுப் பார்ப்பேன்.  பிறகு இடது காதோரத்தில் தடவிப் பார்ப்பேன், பிறகு இடது கன்னத்தில் தடவிப் பார்ப்பேன், மிருதுவாக இருக்கும், மெல்ல மெல்ல வலது முகம் மனதிற்குள் வரத் தொடங்கும், சட்டென பூதாகரமாக வந்து நிற்கும், உடனே கண்ணாடியைப் பார்ப்பதை விட்டுவிட்டு பரிட்சை அட்டையை கீழே வீசி அங்கிருந்து நகர்ந்து விடுவேன் .

அப்பாவுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். தங்க மகளே என்று எப்போதும் கொஞ்சுவார். அது மட்டும்தான் அவரை நினைக்க நினைக்க ஞாபகத்தில் வரும்.  பன்னிரெண்டு வருடம் கடந்தாலும் அந்த நாள் இப்போதும் அப்படியே ஞாபகம் இருக்கிறது. அனுஷா எப்போதும் கேட்பாள் “அது எப்படி டீ அஞ்சு வயசில் நடந்தது இன்னும் உனக்கு அப்படியே ஞாபகம் இருக்கு” என்று. அப்பா என்னைத் தொட்ட கடைசி தொடுகை . அதை எப்படி என்னால் மறக்க முடியும் !

அப்போதெல்லாம் வீட்டில் எப்போதும் பட்டாசு மனம்தான் இருக்கும். வீட்டிலேயே பட்டாசு செய்வார்கள், அம்மா, தாத்தா, பாட்டி எல்லோரும் எந்நேரமும் அதைத்தான் செய்து கொண்டிருப்பார்கள். நான் பட்டாசு தூளை தொட்டால் அப்பா திட்டுவார், அன்று அப்பாவுடைய கடைசி நாள், அம்மா வாசலில் அமர்ந்து பாத்திரம் விளக்கி கொண்டிருந்தாள். தாத்தா திண்ணையில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். பாட்டி ஆட்டை வேறு பக்கதில் கொண்டு சென்று கட்ட கயிறை அவிழ்த்து கொண்டிருந்தாள், நான் அம்மாவின் தொந்தரவால் பல் விளக்கி முடித்து விட்டு வீட்டின் உள்ளே சென்றேன். அப்போது திடீரென வெடி வெடித்தது , தொடர்ந்து வெடிகள் வெடித்தன, இப்போது யோசித்தால் சில நொடிகள்தான், ஆனால் ஒவ்வொரு வெடியும் வெடித்து சிதறுவதைப் பார்த்தேன். தீ வெடித்து சீறிக் கொண்டிருந்தன. என்னைத் தாண்டி ஒரு வெடித் துளி பறந்து சென்றது . அப்பா எரிந்த உடலுடன் ஓடி வருவதைப் பார்த்தேன். அந்தக் கணம் என் மீது ஒரு வெடி சிதறி விழுந்தது, என் வலது பக்கம் எரிவதைப் பார்த்தேன். வெறி கொண்ட வலியால் துடித்தேன், அப்பா ஓடிவந்து என்னைத் தூக்கி வாசலில் வீசினார். அப்பாவால் வர முடிய வில்லை, என்னுடைய வலிகளுக்கு இடையில் அப்பா வலியால் கதருவதும் எனக்குக் கேட்டது .

அப்பா இறந்தது அந்த சிறிய வயதுகளில் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை.  வயது ஆக ஆக எனது வலது பக்கம் முகம் தொடங்கி இடுப்பு வரை வெந்த உடல் பிறருக்கு அருவருப்பு தருவதாக பார்க்கப் படுவதை உணர்ந்த பிறகு , எனக்கு அது அருவருப்பான பிறகுதான் அப்பாவை தினம் தினம் நினைக்க ஆரம்பித்தேன். என் உடல் பற்றிய நினைப்பு வரும்போதெல்லாம் அப்பாவை பற்றிய நினைப்பு வரும் .

என் தெருவில் இருக்கும் ஒரு அக்கா “உங்கப்பன் செஞ்ச பாவம்தாண்டி  உடம்பு இப்படி வெந்து கிடக்கு ” என்ற போதுதான் எனக்கு ஏன் இப்படி சொல்கிறாள் என்று புரியாமல் ஆகி பாட்டியிடம் கேட்டேன். பாட்டி அந்த அக்கா வீட்டிற்கு சென்று அவளை கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டினாள் . பிறகு அதுவே மனதில் இருந்தது. மெல்ல மெல்ல காரணத்தை அறிந்து கொண்டேன். எங்கள் ஊரில் எல்லோருக்கும் தெரியும் விசயமாக  இருந்தது .

தேவிகா அக்கா பள்ளிக்கு எங்கள் வீடு வழியாக செல்வதைப் பார்த்து இருக்கிறேன். நான்கைந்து அக்காக்கள் சிரித்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு விளையாடி செல்வார்கள். தேவிகா அக்கா ஒருமுறை எனக்கு தேன் மிட்டாய் கொடுத்து இருக்கிறாள் . பிறகு ஒருநாள் அம்மா தேவிகா அக்கா செத்து விட்டதாக பேசுவதைக் கேட்டேன். செத்தா பிறகு பார்க்க முடியாது என்ற புரிதல் அப்போது இருந்தது. அப்போது அக்காவின் கருப்பு முகமும் மஞ்சள் ரிப்பன் கொண்ட இரட்டை ஜடையும் துணி இறுகிய குண்டான உடலும் ஞாபகத்தில் வந்தன. அந்த அக்காதான் என் உடல் கருகியதற்கும் அப்பா செத்ததற்க்கும் காரணம் என்று ஊரார் சொல்கிறார்கள் என்று அறிந்த போது ஆரம்பத்தில் பகீர் என்றிருந்தது. ஆனால் யாரிடமும் கேட்காமல் மனதிலேயே வைத்திருந்தேன். அம்மா இருந்திருந்தால் கேட்டு இருப்பேன். ஆனால் அம்மா அப்பா இறந்த 15 நாட்களிலேயே இன்னொருவருடன் ஓடிப் போய் விட்டாள். பாட்டியும் தாத்தாவும்தான் என்னைப் பார்த்துக் கொண்டார்கள், இரண்டு பேருமே அதிகம் பேச மாட்டார்கள் . அம்மா மீது வெறுப்பு மட்டும்தான் உண்டு.  அப்பா இறந்த சில மாதங்கள் கழித்தாவது போயிருக்கலாம், நான் ஏதாவது தவறு செய்தால் பாட்டி அம்மாவை அவ பொண்ணுதான என்று திட்டுவாள், வெறி வரும் எனக்கு அப்போதெல்லாம் . ஏனோ தேவிகா அக்காதான் அப்பா இறக்க காரணம் என்று தெரிந்தாலும் எனக்கு அவளை பிடித்து இருந்தது, சொல்லப் போனால் அப்படி தெரிந்த பிறகு அவளைப் பற்றியே எந்நேரமும் நினைத்துக் கொண்டிருந்தேன் , இனியவள் என்ற எண்ணத்துடன் .

அனுஷாதான் அவள் அம்மா சொன்னதாக இந்த நிகழ்வைச் சொன்னாள். அவளுக்கு காட்சி காட்சியாகவே சொல்லும் திறன் உண்டு. ஒருமுறைதான் என்னிடம் சொன்னாள், நான் பல்லாயிரம் முறை என்னுள் அதை ஓட்டிப் பார்த்திருக்கிறேன். ‘பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்தது . தேவிகா அக்காவின் அம்மா வெறி கொண்டு கத்திக் கொண்டிருந்தாள். எதிரே சந்தனம் மாமா நின்று கொண்டிருந்தார். அருகில் என் அப்பாவும், தேவிகா அக்காவின் அம்மா சந்தனம் மாமாதான் தேவிகா அக்காவை கொன்று தூக்கில் மாட்டி விட்டதாக சொன்னாள். சந்தனம் மாமா ” இல்ல , தேவிகாவும் அந்த பையனும் உள்ள இருந்ததை பார்த்தேன், இரு உங்க அப்பன்ட்ட சொல்றேன் ” சொல்லிட்டு இருந்தேன், அந்த பையன் வெளிய வந்து ஓடிட்டான், தேவிகா உள்ள கதவைத் தாள் போட்டுகிட்டா, தட்டனா திறக்கல , நான் ஓடி போய் முருகனை கூட்டி வந்து கதவை உடச்சு திறந்து பார்த்தேன், தூக்கு போட்டு தொங்கிட்டு இருந்தா , நானும் முருகனும் தான் கயித்தை அருத்து கீழ இறக்கினோம்” என்றார். “வேணும்னா முருகனையே கேட்டுப் பாருங்க” என்றார். அப்பா சந்தனம் மாமா அருகில் தலையை சற்றுக் கவிழ்த்த படி நின்று கொண்டிருந்தார். பஞ்சாயத்தில் இருந்த வயசான தாத்தா ” முருகா , இவன் சொல்றது உண்மையா , எப்படி அவ்வளவு உசரத்துக்கு தேவிகா கயிறு மாட்டிக்க முடியும் , ஊரை கூப்பிடாம நீங்களே ஏன் போய் கயித்தை கலட்டுனீங்க ” என்றார் . சில நொடிகள் மவுனமாக இருந்த அப்பா நிமிர்ந்து ” அய்யா , எனக்கு எதுவும் தெரியாதுங்க, சந்தனம் வந்து தேவிகா கதவடச்சு இருக்கா, ஏதாவது பண்ணிக்குவா , வாடானு சொன்னான் ,போய்ப் பார்த்தா தொங்கிட்டு இருந்தா,  அவ்வளவுதான் எனக்கு தெரியும் ” என்றார். வயசான தாத்தா “சின்ன புள்ள பாவம் சும்மா விடாதுடா ,உண்மைய சொல்லு ” என்றார் .  அப்பா ” என் புள்ள மேல சத்தியமா இதுதான் நடந்ததுங்க , அவ ஏன் தூக்கு போட்டா, நான் போறதக்கு முன்னாடி என்ன நடந்ததுனல்லாம்  எனக்கு தெரியாது ” என்றார். வயசான தாத்தா சந்தனம் மாமாவைப் பார்த்து “தேவிகா கூட இருந்த பையன் யாருடா , அவனை கூப்பிடு , உண்மை தெரிஞ்சுடும் ” என்றார் . சந்தனம் மாமா பயப்படுவது தெரிந்தது . அப்போது சட்டென தேவிகா அக்காவின் அம்மா ” அப்ப என் பொண்ணை தேவுடியானு சொல்றீங்களா ” என்று கத்த ஆரம்பித்து விட்டாள், பஞ்சாயத்து முடிவுக்கு எதுவும் வராமல் கலைந்தது .

தேவிகா அக்கா சாபம்தான் என்னை இப்படி ஆக்கிடுச்சுனு நானும் மெல்ல நம்ப ஆரம்பித்தேன். எனக்கு இது எல்லாம் தெரிந்த பிறகு தேவிகா அக்காவை இன்னும் பிடிக்க ஆரம்பித்தது. மெல்ல மனதிற்குள் அக்காவுடன் உரையாடவும் ஆரம்பித்தேன் . ” அக்கா , அப்பா பண்ணினதுக்கு நான் எப்படிப் பொறுப்பாவேன் என்றெல்லாம் கேட்பேன். அவள் என்னிடம் மன்னித்து கொள் என்று சொல்வது போலத் தோன்றும் . என்னைப் பார்த்து வருத்தத்துடன் புன்னகைப்பது போல இருக்கும் .

எனக்கு வெளியில் இருக்கும் நபர்களை விட மனதிற்கு உள்ளே இருக்கும் தேவிகா அக்கவுடனும், அப்பாவுடனும் உரையாடுவதுதான் பிடிக்கும். இருவரும் நான் எதை விரும்பினாலும் மறுக்க மாட்டார்கள், அழகாக எனை நோக்கிப் புன்னகைப்பார்கள் .

என்னுடைய அன்றாட நாட்கள் என்பது இரு பகுதிகள் கொண்டவை, ஒன்று என் உடல் சார்ந்து இருக்கும் மனப் புழுக்கம்,  நான் பார்க்க விட்டாலும் என்னில் இருப்பதை எப்போதும் உணர்ந்த படியேதான் இருப்பேன். துணியால் வெந்த பாகத்தை மறைத்தாலும் பார்ப்பவர்கள் துணிக்குள் என்னைத் தேடுவதை அவர்கள் பார்வைகள் வழியாக அப்பட்டமாக உணர்வேன். குளிக்கும் போது அங்கு சோப்பு போடும் போதுதான் அந்த பகுதிகளைத் தொடுவேன், வெந்து சிறு சிறு மேடுகள் , பிளவுகள் , அலங்கோலமான வரிகள் நிறந்து இருக்கும், பருவம் அடைந்த காலங்களில் எல்லாம் இந்த பகுதிகளை பிய்த்து வீசத் தோன்றும். விரல்களால் பிய்த்துக் கொள்வேன், சில சமயம் இரத்தம் வரும் அளவுக்கு, பிறகு அந்த பகுதிகளைத் தடவி கொடுத்து எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொள்வேன். அன்றாடத்தின் இன்னொரு பகுதி என்பது மகிழ்ச்சி நிறைந்தது, தேவிகா அக்கா என்னுடன் இருப்பது, அப்பாவை மனதிற்குள் பார்ப்பது, அனுஷாவுடன் பேசுவது சிரிப்பது சண்டை போடுவது என்று இனிமையாகச் செல்லும். ஒருநாள் இந்த சமநிலை எல்லாம் குலைந்து போனது,அது சந்தனம் மாமாவை பார்த்த நாள் .

தேவிகா அக்கா இறந்த பிறகு ஊரை விட்டுப் போனவர் பல ஆண்டுகள் கழித்து ஒரு திருமண நிகழ்வுக்கு வந்து இருந்தார் . குண்டான மனைவி , இரு பையன்கள் , கார் என வசதியாக, சந்தோசமாக இருந்தார் . தேவிகா அக்காவை பையனுடன் இருந்ததை சொல்லி வெளியே சொல்லி விடுவேன் என்று சொல்லி மிரட்டி கற்பழிக்க முயன்று மறுத்ததால் காதில் அறைந்து கொலை செய்தவர் இப்போது சந்தோசமாக இருக்கிறார். வெறும் கொலையை மறைக்க துணை புரிந்த அப்பா நெருப்பில் வெடித்து வெந்து செத்து விட்டார். நான் தினமும் பாதி நாள் செத்துக் கொண்டிருக்கிறேன், ஏன் சந்தனம் மாமாவுக்கு மட்டும் தண்டனை இல்லை?. இதை என்னால் ஏற்கவே முடிய வில்லை . மனதில் சென்று தேவிகா அக்காவைப் பார்த்தால் அவள் மவுனமாக பார்த்துக் கொண்டிருக்ருக்கிறாளே தவிர எதுவும் சொல்ல வில்லை .

பிறகு அனுஷாதான் எனக்கு சமாதானம் சொன்னாள்.  “சந்தனம் மாமாவுக்கு இனிமேல் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்குல்ல” என்றாள்.  நான் ” கிடைக்கலனா ” என்றேன். அவள் “அப்ப அடுத்த ஜென்மத்தில் கிடைக்கும் டீ ” என்றாள். நான் “ஒருவேளை இதெல்லாம் நம்ம மனசு சமாதானத்துக்கு சொல்லிக்கறமா, உண்மைல அப்படி ஏதும் தண்டனை கிடைக்காம போச்சுன்னா ” என்றேன். அவள் “நமக்கு வேற வழி இல்லடி ,நம்மிதான் போனம்” என்றாள். ஒருவேளை அடுத்த ஜென்மம், பாவம் அதுக்கு தண்டனை எல்லாம் நாம சும்மா நினச்சுக்குறதுதான், உண்மையில அப்படி எதுவும் இல்லனு இருந்தா” என்றேன்.  அவள் “தெரியலடி” என்றாள். எனக்கு மனதிற்குள் தேவிகா அக்கா முகம் வந்து போனது, பாவம் அக்கா என்று தோன்றியது.

.