கிருஷ்ணன் ரயில்வே ஸ்டேஷனைக் கடக்கும் போதெல்லாம் அந்த நிகழ்ச்சி ஞாபகம் வரும். அரைகுறையாகப் புரிகிற வயதில் நடந்தது. அது ஏன் மீண்டும் மீண்டும் ஞாபகம் வருகிறது. வரவேண்டும் என்று அவன் விரும்பியதாலா? அதுவாக வந்து விடுகிறதா? அந்தக் காலத்தில் ரயில்வே ஸ்டேஷனில் இவ்வளவு வெள்ளை ஒளி உமிழும் விளக்குகள் இருக்கவில்லை. அங்கங்கே உயரமான தூண்களில் மேல் மஞ்சள் ஆவியாக அழுதுவடியும் விளக்குத் தூண்கள் இருந்தன.
எத்தனை வயதில் நடந்தது என்று யூகிக்க முடியவில்லை. நான்கு, ஐந்து ஆறு வயது இருக்கலாம். அம்மாவிடம் அந்த நாள் குறித்து ஒருபோதும் கேட்டதில்லை. பின்னாளில் யோசிக்கும் போதுதான் பதட்டம் வந்தது. அவன் ஏன் அவர்கள் வாழ்வு அன்றைய தினத்தில் தலைகீழாக மாறியிருக்கக்க் கூடும். அம்மா, அப்பா, யாரேனும் ஒருவர் வேறுமாதிரி யோசித்திருந்தால்….! இந்தக் கதையைப் படிக்கப் போய் அது இன்றும் நினைவில் வந்தது.
அன்று இரவு அம்மா ஏழுமணிக்கு மேல் அலுவலக வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தாள். வாரத்தில் இரண்டு மூன்று நாள்கள் இப்படி வருவது வழக்கம். அவன் வீட்டுக்கு முன்னால் விளையாடிக் கொண்டிருந்தான். அம்மா விறுவிறு என்று வீட்டுக்குள் நுழையும் போதே அவளைப் பார்த்து வந்து கொண்டிருந்த அவனைச் சைகையால் அழைத்தாள். என்ன அவசரம்? வாசல்படி அருகில் போனதும், ‘சங்கரி, எங்க நிக்றா? அவளை வேகமாகக் கூப்பிட்டு வா’ என்றாள். ‘அந்தா நிக்காம்மா’ என்று அவன் காட்டிய திசையைப் பார்த்து ‘சங்கரீஈஈஇ.. ஓடிவா ..’ என்று கத்தினாள். சங்கரி ஓடிவரத் தொடங்கியதைப் பார்த்து, அம்மா உள்ளே நுழைந்தாள்.
அம்மா அணிந்திருந்த யூனிஃபொர்மைக் கழற்றி விட்டு, வேறு புடவை அணியத் தொடங்கினாள். அவனையும் வேறு உடை அணியச் சொன்னாள். அவளே அவனுடைய டிரவுசரையும் சட்டையையும் துணிகள் போட்டிருந்த கொடியிலிருந்து எடுத்துக் கொடுத்தாள். சங்கரிக்கு அம்மாவே பாவாடை சட்டையை மாற்றிவிட்டாள். ஏதோ அவசரத்தில் இருப்பது அவனுக்குப் புரிந்தது. சில துணிமணிகளை ஒரு பெரிய பையில் வைத்து கையில் எடுத்துக் கொண்டாள். கதவைப் பூட்டிவிட்டு ஒரு கையில் பையை எடுத்துக் கொண்டு, இன்னொரு கையில் சங்கரியைப் பிடித்துக் கொண்டாள். அம்மா தன் கையைப் பிடித்துக் கொள்ளவில்லையே என்று அவனுக்கு எப்போதும் வருத்தமாக இருக்கும். அவள் சின்னப் பிள்ளையாம்! அதைப் புரிந்து கொண்டவள் போல் ‘சங்கரியின் கையைப் பிடித்துக் கொள்’ என்று சொல்லி விரைவாக நடக்கத் தொடங்கினாள். அம்மாவின் முகத்தில் இருந்த கோபத்தைப் பார்த்து ‘அப்போது எதுவும் கேட்கக் கூடாது என்று அவனுக்குப் புரிந்தது. அந்தக் காம்புவுண்ட் வீடுகளின் சந்திலிருந்து வெளியே தெருவுக்கு வந்ததும் ‘இன்னைக்குப் பாத்து ஒரு குதிரை வண்டிக்காரனையும் காணோம்’ என்று தனக்குள் பேசிக் கொண்டாள்.
தெருவிலிருந்த மஞ்சள் விளக்கு அழுது வடிந்து கொண்டிருந்தது. பத்தடிக்கு மேல் அதன் வெளிச்சம் எங்கும் படவில்லை. நடந்து போகும் பாதையில் அங்கங்கே அதே மஞ்சள் மின் விளக்குகள் ஏனோ தானோ என்று எரிந்து கொண்டிருந்தன. இரண்டு விளக்குகள் அணைந்து அணைந்து எரிந்து கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. அந்தத் தெரு மெயின் ரோடு போய்ச் சேரும் வரை குதிரை வண்டி எதுவும் கண்ணில் படவில்லை. அவனையும் தங்கையையும் பரபரப்புடன் வெகு வேகமாக இழுத்துக் கொண்டு மெயின் ரோட்டுப் பக்கம் நடக்கத் தொடங்கினாள். மெயின் ரோடு முக்கில் ஒரு குதிரை வண்டி நிற்பது தூரத்திலிருந்தே தெரிந்தது. இன்னும் ஒரு ஃபர்லாங் தூரம். அம்மா கையில் பையுடன் மூச்சிரைக்க நடந்து கொண்டிருந்தாள். பிள்ளைகள் இருவரும் ஓட்டமும் நடையுமாக அவளுடன் வந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் மூன்று பேர் வேர்க்க விறுவிறுக்க வந்ததைப் பார்த்த குதிரை வண்டிக்காரன், அவர்களிடம் வந்து ‘எங்க போகணும்மா?’ என்று கேட்ட படியே அம்மாவின் கையிலிருந்த பையை வாங்கி குதிரை வண்டியின் முன்பக்கம் வைத்துவிட்டு, இரண்டு குழந்தைகளையும் தூக்கி, முன் புறத்திலிருந்து வண்டியின் உள்ளே உட்கார வைத்தான். அவனுக்கு அது பிடிக்கும். குதிரையின் முதுகைப் பார்த்தபடியே போகலாம். ‘டக்டக், டக்டக் என்று குதிரை ஓடுவதன் லயம் இன்னும் அவ்வப்போது காதில் ஒலிக்கிறது. ‘எங்கே போகணும்மா?’ ‘ஸ்டேஷனுக்குப் போகணும் நேரமாச்சு. செங்கோட்டைப் பாசஞ்சரைப் பிடிக்க வேண்டும்’ என்றாள். ‘அது வர்ற நேரமாச்சும்மா… விரசலா ஏறுங்க. வந்தாலும் வந்திருக்கும்’ என்று சொல்லிவிட்டு குதிரையை தட்டிவிட்டான். அவனுக்கு அவசரம் புரிந்திருக்கவேண்டும். குதிரை வேகமாக ஓடத் தொடங்கியது.
ஸ்டேஷனில் நுழையும் போதே ரயில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. ஸ்டேஷன் மாஸ்டர் அடித்த விசில் சத்தம் கேட்டது. வண்டியைப் பிடிக்க முடியுமா? கிருஷ்ணனைப் பதட்டம் பற்றிக் கொண்டது. அம்மா தரதரவென்று பிள்ளைகளையும் பையையும் இழுத்துக் கொண்டு வேகமாக நடந்து உள்ளே போனாள். எங்கேயிருந்து எங்கே போனாள்?
ஸ்டேஷனின் உள்ளே நுழையும் இடத்தில் கருங்கற்களால் கட்டப்பட்ட சிறு அறையில் டிக்கெட் கொடுக்கும் அறையிருந்தது. அவர்கள் ஸ்டேஷனுக்குள் நுழையும் போதே யாரோ இரண்டாவது முறை விசில் அடித்துவிட்டார். நீராவி எஞ்சின் கூக்கூஊஊ என்று கூவி, புஷ்,….புஷ் என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு நகரத் தொடங்கிவிட்டது. ’டிக்கெட்’ என்று அம்மா குரல் கொடுத்ததற்கு, ‘டி.டி.ஆரிடம் வாங்கிக் கொள்ளுங்கள், வண்டி ‘மூவ்’ ஆகுது வேகமாய்ப் போங்கள்’ என்று ஸ்டேஷன் மாஸ்டர் கத்தினார்.
வேகமாக அம்மா கிருஷ்ணனையும் அவன் தங்கையையும் இழுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாகப் போனாள். ரயில் நகரத் தொடங்கிவிட்டது. ரயிலில் இருந்த டி.டி.ஆர். அவர்களைப் பார்த்ததும் கீழே இறங்கி அவர்கள் ஏற வழிவிட்டார். இரு குழந்தைகளை அவரே தூக்கி ரயில் பெட்டிக்குள் வைத்துவிட்டு, அம்மாவை ஏறிக் கொள்ளச் சொன்னார். அம்மாவும் ஏறியபின் அவர் ஓடி வந்து ஏறிக் கொண்டார். அந்தக் காலத்து நீராவி இஞ்சின் மெல்ல மெல்லத்தான் இழுக்கத் தொடங்கும். கிருஷ்ணனுக்குப் பதட்டமாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னும் இவ்வளவு தெளிவாக ஞாபகம் இருந்திருக்காது. அது செங்கோட்டைப் பாசஞ்சர் என்று வளர்ந்து பெரியவனான பின் தெரிந்து கொண்டான்.
ரயில் ஓடத்தொடங்கிச் சில நிமிடங்களுக்குள், டி.டி.ஆர். வந்தார். ‘ஏம்மா, இப்படிக் கடைசி நேரத்தில வந்து ஏறுறீங்களே! கொஞ்ச முன்னால வந்தால் என்ன?’ என்றார்.
’அவசரமாக் கிளம்ப வேண்டியதாச்சு. டிக்கெட் கூட எடுக்க நேரமில்லை’ என்றாள் அம்மா.
’எந்த ஊருக்குப் போகணும்?’
ஒரு செகண்ட் யோசித்துவிட்டு, ‘கடலூர்’ என்றாள். அந்த ஊருக்குத் தான் போகவேண்டுமா? அந்த ஊரில் அவனுக்குத் தெரிந்தவரை யாரும் இல்லை. அந்த கூபேயில் இன்னும் நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் அமர்ந்திருந்தனர். அம்மா தரையில் துண்டை விரித்து அவனைப் படுத்துக் கொள்ளச் சொன்னாள். சங்கரியை தன் மடியில் தலையை வைத்துக் கொள்ளச் சொல்லி, அடுத்திருந்த இடத்தில் அவளைக் கிடத்தினாள். அவர்கள் தூங்கிப் போனார்கள்.
ரயில் ஓடிக் கொண்டிருந்தது. ஜன்னல்கள் வெளியே இருள் உலகைக் கவிந்திருந்தது. அங்கங்கே மின் விளக்குக் கம்பங்களில் ஒளி சொட்டுச் சொட்டாகச் சிந்திக் கொண்டிருந்தது. சில விளக்குகள் விட்டு விட்டு எரிந்தன. கொஞ்சம் நேரத்தில் ரயில் பெட்டியைத் தவிர எங்கும் இருள் அழுத்திக் கொண்டிருந்தது. அவள் மனதிலும் எங்கே போவது என்று தீர்மானித்து விட்டிருந்தாள். ’இந்த ஆளுடன் இனி வாழக் கூடாது. அதுக்குப் பிச்சை எடுத்துப் பிழைக்கலாம். ஆனால் அரசு வேலை இருக்கிறதே. இங்கேதான் திரும்ப வர வேண்டும். ஆனால் அவனைப் பார்க்கக் கூடாது. முடிந்த அளவு கமுக்கமாக வந்துவிட்டு, வேறு இடத்திற்கு மாறுதல் வாங்கிச் சென்றுவிட வேண்டும்’ இன்னும் என்னென்னவோ நினைத்துக் கொண்டிருந்தாள்.
அவனுக்கும் ஐம்பது வயதுக்கு மேல் ஆனபின், அம்மாவும் அவனும் மட்டும் இருக்கும் போது கேட்டான். ‘ஏன் அப்படி ரயில் ஏறிப் போனோம்?’ அம்மா மெல்லிய புன்னகையுடன் தயக்கத்துடன் ’அது உனக்கு ஞாபகம் இருக்கா. அங்க ஒரு தெரிஞ்சவர் இருந்தார். கடலூர்ல. அங்க போனோம்’ அதற்கு மேல் பேச விருப்பம் இல்லாதவள் போல் அமைதியாகக் குனிந்து கொண்டாள். அவன் அதற்கு மேல் கேட்கவில்லை.
ஆனால் பிறகு என்ன நினைத்தாளோ ‘அப்பா என்னிடம் எட்டணாவைத் தூக்கி எறிந்தார். ரூபாய் கேட்டேன். ஏதோ பிச்சை போடுவது போல் போட்டார். எனக்கும் கோபம் வந்துவிட்டது. நானும் சம்பாதிக்கிறேன். என் சம்பளம் தான் அதிகம். ஆனால் எனக்குக் கொடுக்கலைன்னா? என்னைக் கிள்ளுக் கீரையாக நினைப்பது போல் இருந்தது. மரியாதை வேண்டாமா? அதான் கிளம்பி விட்டேன்’ இன்னும் பல தகவல்களை அம்மா சொல்லவில்லை என்றே அவனுக்குத் தோன்றியது.
ரயிலில் அவன் படுத்துத் தூங்கியதும் பிறகு பாண்டிச்சேரியில் ஒரு மாமாவின் வீட்டில் அவர்கள் தங்கியிருந்ததும் ஞாபகம் இருக்கிறது. பாண்டிச்சேரியில் இருந்து உருளைக்கிழங்கு போன்ற கற்களை அவன் பொறுக்கி எடுத்துக் கொண்டு வந்து ரொம்ப நாட்கள் விளையாடியது ஞாபகம் இருக்கிறது. அவைதான் நீண்ட காலம் வரை அந்த ஊரை நினைவூட்டிக் கொண்டிருந்தன. அங்கே, மூன்றாவது நாள் காலையில் வீட்டுக்கு வெளியே தெருவில் அவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, அப்பாவும் காசிம்பாயும் தூரத்தில் வருவதை அவன் தான் முதலில் பார்த்தான்.
பல வருடங்கள் கழித்து, மீதிக் கதையை அப்பா ஒருநாள் இட்டு நிரப்பினார். ‘முதலில் உள்ளூரில் எல்லா இடங்களிலும் நானும் காசிம்பாயும் தேடினோம். தினத்தந்தியிலும் மாலைமுரசிலும் செய்திகளைப் பார்த்தோம். போலிஸ் ஸ்டேஷனில் எங்களுக்குத் தெரிந்த ஏட்டையா மூலம் விசாரித்தோம். பக்கத்து ஊர்களில் நகரங்களில் வந்த தற்கொலைச் செய்திகளைப் பார்த்தோம். எங்கேயும் ஒரு தகவலும் கிடைக்கவில்லை. குழந்தைகளுடன் எங்காவது ரயிலில் விழுந்துவிட்டாளா என்று சந்தேகப் பட்டோம். கிணறுகளில் விழுந்து இறந்த செய்திகளைப் பார்த்தோம். உடல்களில் அடையாளங்கள் தேடினோ. ரயில்வே ஸ்டேஷனில் விசாரித்தோம்.
தெருவில், வீட்டருகில் இருந்த குதிரை வண்டிக்காரன் ’ஒரு அம்மாவும் குழந்தைகளும் ரயிலடிக்கு வந்தார்கள். அவசர அவசரமாகக் கடைசி நேரத்தில் ஓட்டமும் நடையுமாகப் போனார்கள். அவர்களை இந்தத் தெருவில் அடிக்கடி பார்த்திருக்கிறேன்’ என்று சொன்னான். அதை வைத்து மதுரைக்குப் போயிருப்பாள் என்று நினைத்தேன். ஆனால் அவளுடைய அப்பா குழந்தைகளுடன் வந்தால் சேர்த்துக் கொள்ளமாட்டேன் என்று ஏற்கனவே சொல்லியிருந்தார். ஆனாலும் தூரத்திலிருந்தபடியே அந்த வீட்டைக் கவனித்தோம். அதனால் அங்கே போயிருக்க மாட்டாள் என்று பிறகு தோன்றியது’ அப்பாவும் அவனிடம் முழுத் தகவல்களையும் சொல்லவில்லையோ? அப்பா அம்மாவாக இருந்தால் கூட எதையும் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாது.
ஒரு வழியாக மீண்டும் ஊருக்கு வந்து சேர்ந்தனர். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று அவனுக்கு நினைவில்லை. எத்தனையோ ஆண்டுகள் கடந்துவிட்டன. என்னென்னவோ நடந்தும்விட்டது. அம்மாவும் அப்பாவும் இறந்து போய் பலவருடங்கள் ஆகிவிட்டன. கடலூரில் இருந்த அந்த மாமா யாரென்று அவனுக்குத் தெரியாது. கணவன் மனைவிக்குள் சண்டை என்று புரிந்து கொண்டு, அம்மாவுக்குத் தெரியாமல் அவர் அப்பா வேலை பார்த்த இடத்துக்குத் தந்தி அனுப்பியிருக்கிறார் ‘இங்கே இருக்கிறாள். உடனடியாகக் கடலூர் வா’.
அவரைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று கிருஷ்ணன் நினைத்தான். மற்ற எதைப் பற்றியும் யாரும் சொல்லவில்லை. வாழ்க்கையின் கதைகளில் முழுமை என்பது இல்லை. திறந்து வைத்துப் படிக்க முயற்சித்துக் கொண்டிருந்த கதைப் புத்தகத்தை மேஜையில் போட்டான். ஒரு சிறுகதையின் ஒரு சம்பவம் ஒரு மின்னலாய்க் கீறிவெடித்து அணைந்துவிட்டது. அந்த நொடிக்குள் அவன் வாழ்வின் மீது விசுக்கென்று ஒரு வெளிச்சத்தையும் பாய்ச்சிவிட்டு ஓடிவிட்டது