புலரி, அஸ்தமன திரிபு தெரியாமல் விண்மீன்களின் நகர்வு மர்மங்களில் காலாதீதம் கழிப்பவர்களுள் ஒருவன் நான். எங்களுக்குச் செயலாளர், தலைவர், உபதலைவர், கொறடா யாருமில்லை, பொருளாளர் தேவையில்லை. ஆனால் எல்லோரும் பேச்சாளர்கள்தான். எங்கள் குழு கச்சை கட்டினாலும் இச்சை அடங்காதவர்கள். எங்கள் பொதுக்கூட்ட அரங்கம், பாண்டியன் தருமிக்குப் பொற்கிழி வழங்கிய அரண்மனை அல்ல, தருமிக்கு ஈசன் ‘கொங்குதேர் வாழ்க்கை’ இயம்பிய கோவில் பிரஹாரம். கூட்டத்தின்போது யாரும் எவருக்கேனும் பத்துப் பணம் கிடைத்ததா என்ற கேள்வியைப் பரஸ்பரம் கேட்கவே மாட்டோம். பவ்வ ஊர்வை, விண்வெளி திமிங்கிலங்கள், கயல்விழி நாரைகளை விழுங்கும் தீவாய்யாழிகள் எங்கள் கனவுக் கூட்டாளிகள். அவற்றை ஒரு முறையேனும் பூமிக்குக் கொண்டுவருவதே எங்கள் நோக்கம்.
தீனம் ரீங்காரம் பாடும்போதெல்லாம் ஆகாயத்தில் என் உடுமகா திசையைத் தேடிய நாட்களில் அன்று ஆகூழாக உலர்ந்த நாணல் மூன்றை நீரில் ஊரவைத்து மிருதுவானதும் நுனி கிள்ளியெறிந்து, சுருட்டி, வட்ட மோதிரமாய் அணிந்து, ஈம தானமாகக் கிடைத்த மூன்று படி அரிசியைத் தோள்பட்டையில் தொங்கவிட்ட பளுவை, அன்றிரவு காய்ந்த வயிற்றுடன் கிழிந்த பாயில் உறங்கவேண்டாம் என்ற எண்ணம் சுமந்தது. அன்று ஓர் நிசிமட்டும் அம்புலியின் கருணை முகம், தட்டில் பரப்பிய பழைய சோற்றை விட அழகாகத் தோன்றுமென நம்பினேன். வயோதிகர் தமியாளாக மறைந்த முதலாண்டு நிறைவில் மீண்டும் என் ரூபத்தில் வந்து தமையன் தமக்கைக்கு ஆசி சொன்ன அனுபவம் எனக்கு அன்றே முதல்முறை. உன்மத்தம் சடங்கிலா அல்லது வேழ்வியின் வழிமுறைகளிலா என்ற நனவிலி கேள்வியை வாய்வரை செல்ல விடாமல் தடுத்தது வயிறு. மாடவீதியில் அலைந்தவனைச் சகா ஒருவன் ஓட்டு வீட்டிற்குக் கூட்டிச்சென்று பெரியவர் முன் முன்னிலைப்படுத்தி, அவர் என்னைப் பார்த்தும் ,’களையே இல்லையே’ என்றபோது என்றும் போல அன்றும் அன்றாடம் காய்ச்சிக்குப் பட்டினிதான் என ஒரு கணம் நினைத்தது உண்மைதான். ஆனால் அன்று என் காலச் சுவட்டில் மூன்று படி அரிசியும் நூறு பணமும் எழுதியிருந்தது.
பெரியவர் கைப்பையிலிருந்து மூன்று நூல் எடுத்து கண்டவிழ்து சகாவிடம் வலது கையை பின்புறம் சமிஞை செய்து கொடுத்து, ‘நான் ‘த்ருப்தொஸ்மா’ ன்னு கேட்கும்போது ‘ த்ருப்தொஸி’ ன்னு மட்டும் சொல்லு, வேற எதையும் பேசப்பிடாது’என்றபோது ஒரு முறுவலுடன், ‘ஆகட்டும் ஐயரே’ என்றேன். உள்ளே சென்ற நூல்கள் காபித்தூள் பூசப்பட்டு செயற்கை பழமை பெற்று வெளியில் வந்த கையேடு எனக்கும் புது வேடம் தரிக்கப்பட்டது. வேழ்வி நடக்கையில் பிருகஸ்பதி கைகாட்டியதும் யஃஞ குண்டத்தில் சமித்தை சேர்த்தபோது உள்ளூர என் ‘களை’ அல்லது நொடிப் பொழுதில் இனம் மாறிய கண்கட்டுவித்தை , மூன்று படி அரிசியையும் நூறு பணத்தையும் பெரும் வாய்ப்பை கெடுத்துவிடுமோ என்ற பயத்தில் கை நடுங்கியது. என் ரூபத்தில் வந்த மூதாட்டிக்கு ஒரு முறை செய்யவேண்டிய கடனை தீர்க்க ‘களை’ தெரிந்தும் பொருட்படுத்தாமல் படையலிட்டு, விருந்தோம்பி வழியனுப்பிய குடும்பத்தினரின் உதாசீனத்தைப் பார்த்தபோது என் பயம் அனாவசியமானது எனப் புரிந்தது.
கச்சை கட்டில் நூறு பணமும் தோள்பட்டையில் மூன்று படி அரிசியும் சுமந்து மார் நிமிர்ந்து நடக்கையில் வெற்றி வாகை சூடியதுபோலிந்தது. அன்று குன்றின் மேல் நின்று தற்புகழ் பாடினேன். ஒவ்வொரு அடியும் நிலம் அதிரச் செய்தது. முறையாக கற்றால் மறையும் துணைநிற்கும் எனக்கூட நினைத்தேன். வேழ்வியின்போது வாத்தியார் ‘ப்ராசீனாவீதம்’ என்று ஆட்காட்டிவிரலால் தோள்பட்டையில் தொங்கிய அடையாள சரடை காட்டி அரை வட்ட செய்கை செய்தபோது இடத்தோளிலிருந்து வலத்திற்கும் மீண்டும் ‘உபவீதம்’ என்றவுடன் வலத்தோளிலிருந்து இடத்திற்கும் மாற்றவேண்டும் என்ற சூட்சமத்தை முறைப்படி கற்காமலே அனுபவப் பாடமாக கற்ற பெருமிதம், கணக்கு சூத்திரங்கள் கடைசியாகப் புரிந்துவிட்ட இறுமாப்பைக் கொடுத்தது. சிறுத்தை இரையை மரத்தின்மேல் எடுத்துச்சென்று பதுக்குவதைப்போல என் சிறந்த நிலையைக் காத்துக்கொள்ள பெருவீதியிலிருந்து விலகிக் குறுக்கு சந்திற்குள் தற்காப்பிற்காக நுழைந்தபோது ஊழ் என் முன்னே காத்திருந்தது. ‘சகல என்ன கொண்டாட்டமா?’ என்றபோது நொடிப்பொழுதில் புதியது பழையதானதைப்போல், இனம் மாறியதைப்போல், என் நிலைமை மாறியதை உணர்ந்தேன்.
‘அடேய் பாதகா இன்னைக்கு வேண்டாம்டா!.’ என்ற என் கதறல் நரிவாயில் சிக்கிய முயலின் கூக்குரல்போல எழும்பியும் அதைப் பொருட்படுத்தாமல் கவ்வியவாறே இழுத்துச்சென்றது சகா நாரி. காவுக் கிடாபோல குமுறிக்கொண்டு செல்லும்போது கோபுர முகப்பை அன்றைய பொழுதுக்கு முதல் முறையாகக் கண்டேன். எங்களிடையே ஊடாட்டம் அதிகம் உண்டு. பல நாட்கள் சறுக்கு தடங்களில் வழிந்தோடும் நீர், சிரஞ்சீவி சுனையிலிருந்து அபரிமிதமாய் வழிந்தோடும் ஜீவ நதியோ என நினைத்ததுண்டு. நீரின் சலனம் கேட்கக் காவிய செய்யுளையும், சிற்பங்கள் பதுமைகளையும் நினைவூட்டியதுண்டு. பால்யத்தில் பார்த்துள்ளேன், கேட்டுள்ளேன்; பஞ்சத்திற்கு முன், பசிக்கு முன். முழுநிலவில் தேவ அசுர சிற்பங்களின் வெளி விளிம்பு கோலங்கள் கரும் இருட்டோடு கலப்பதைப் பசி மயக்கத்தில் கானல் நீராய் பார்த்திருக்கிறேன், அயலுலகிலா அல்லது ப்ரம்மையிலா நினைவில்லை. அது இப்போது முக்கியமுமில்லை. பதுமைகளைப் போல என்னுடன் பேசின சிற்பங்கள். ஒவ்வொரு தளத்திலும் ஒரு பதுமை, ஓர் கதை , ஓர் புதிர். விடை சொன்னதும் அடுத்தபடி ஏறலாம். இல்லையேல் கரு அரவு கடித்து மீண்டும் முதல் தளத்திற்குத் தள்ளப்படலாம். கடைப்படி பரமபதமேறும் சூட்சமத்தைப் பற்றி கேள்வியுடையது, அங்குக் கலசம்.
கலசம் அன்று மின்னியது. கண்ணாடி, முன் நிற்பதைப் பிரதிபலிக்கும், வெளிப்புற உண்மைகளை மட்டும் காட்டும். கலசம் கண்ணாடியல்ல, அதன்மேல் விழும் ஒளிக்கீற்றை உள்வாங்கிக்கொள்ளும், அபூர்வமாக சில சமயம் பிரதிபலிக்கும். அத்தருணங்களை அற்பர்களால் பார்க்கவியலாது. அன்று பிரதிபலித்தது, அவள் மேல். கீழிருந்து மூன்றாம் தளம், இடப்பக்கம் , ஊர்வலம் போகும் பெண்களுள் ஒருத்தி, நீலநிறச் சீலை. கலசத்திலிருந்து பிரதிபலித்த ஒளிப்பொட்டு அவள் நெற்றியில் விழுந்தது வினோதமான காட்சி. யாளிகள், துவாரபாலகர்கள், தொப்பை அரக்கர்கள், தேவர்கள், புறவை , வேழ கூட்டத்திற்குள் தமியாக நின்றாள். அவள் தோற்றம் ஆபரண பெண் அணிவகுப்பிற்குப் பிணக்கு. மென்மையானவள், கருணை விழிகள், கழுத்தில் ஒற்றை சரடுகூட இல்லாதவள். எதற்காக இந்த கூட்டத்தில் சிக்கிக்கொண்டாள்? கூட்டத்தில் யாசிக்க வந்தவளா? எந்த புராணத்தில் ஆதாரம் கொண்டது இந்த அணிவகுப்பு?
கோவில் கோபுரம் பார்வை நோக்கைப் பொறுத்து நிரந்தர கரும் பலகை, கண்ணாடி, தர்ம போதி மரம், கதைச் சுருள். நட்ட நடுநிசியில் உயிர்பெற்று ஆதிகால சமரை அதே தீவிரத்துடன் தொடர்வர் தேவ அசுரர்கள். றெக்கை மறெதுவாகி ஊர் வளம் வருவார் புள்ளரசன். பெரும் ஆகிருதி அரக்கி, துயிலும் சிசுவை மிரட்சி கொள்ளச் செய்வாள். அலர்மேல் அமர்ந்து மூத்த அகவை பிரம்மா தனக்கென ஸ்தலம் தேடுவார். மருங்கு படுத்த கிரிடீஹாரி, ஊர்ஜிதவான், தன் ஒன்பது அவதாரங்கள் கலியுக வேந்தன் வரவை எதிர்நோக்குவதை மூடிய விழிக் கீறலால் பார்த்துப் புன்னகைப்பார். இழந்த ஆன்மாவைத் தேடி, நெற்றியில் குருதி வழிய நிலத்தின்மேல் ஊர்ந்துசெல்வான் அஸ்வத்தாமன். எண்ணற்ற கார்வை கருவிப் பாணர்கள் கல் நரம்புகளை மீட்டமுடியாமலும், தாளகதி தப்பியும் புலம்புவார்கள். வெய்யோனின் முதல் கதிர் வரை தொடரும் இந்த சதிர்.
இந்த குழப்பங்களுக்குள் அவள். விண்ணுலக சஞ்சாரி அல்ல அவள், அது எனக்கு நிச்சயமாகத் தெரியும். நாழிகை நகர்வு உணராமல் அந்த காட்சியைக் கண்டேன். ஓரை ஒன்றாகியிருக்கலாம், என் கரம் விடுபட்டிருப்பதை அறிய. அல்லது பற்றியிருந்த இன்னொரு கரத்தை உதறித் தள்ளிய ஆக்ரோஷம் அவன் கரம் அறுந்துமிருக்கலாம், நினைவில்லை. அங்கேயே நின்றேன், வசீகரிக்கப்பட்டு.
“என் நிலை பாரும் தருமியே!. சிலையெடுக்கப்பட்டேன், வீணாகப்போனேன். ஆனால் என் கதிக்குக் கரிசனம் வேண்டாம். என் ஆன்மா இங்கில்லை”
எனக்கு மட்டுமா அந்த அசரீரி கேட்டது? என்ன சூட்சமம் அடங்கியுள்ளது இதில்? பெரும் மாயக்கண்ணாடி கோபுரம். கிராமிய மர்மங்கள், ஆன்மாவின் நிலையின்மை, ஏழு கடல் தாண்டி ஏழு மலைத் தாண்டி மாயாவியின் உயிர் பதுங்கியிருக்கும் கிளியின் தொன்மத்திற்குக் கோபுர தளங்களில் இடமில்லை. மித்தத்தில் உறங்கும் கன்னியை சாமத்தில் கடத்தும் கொள்ளிவாய் பிசாசின் உருவச்சிலை காணாது தளங்களில். நல்லத்தங்காள் காரி உமிழ்ந்ததால் புலரி சிகப்பான கதைக்கு இங்கு இடமில்லை. பெருக்கில் ஆடவன் அடித்துச்சென்றதால் ஆலமரத்தில் தொங்கிய கன்னியின் ஆவி சாந்தியடைய அவளைக் கோபுரத்தில் சிலையெடுக்கவில்லை. தொலைந்த தெய்வங்களின் கால குரல்கள் கேட்காது கோபுர சுவர் வாசகங்களில். மகடூஉ முன்னிலைப் பாடுத்துவதில்லை ஹோமம். கோவில் புராணங்கள் வேறு, தாயுஷ் பிதா வழி வந்த மரபு. தீச்சட்டி சுமந்த பகாலி பெண்களுடன் இவளுக்கு உறவு.
திடீர் மழையால் பெருகி ஓடும் காட்டாறு அதிக தூரம் ஓடுவதில்லை, பாலையில் நீர் உலர்வதற்கு அதிக நேரம் எடுப்பதில்லை. சிந்தையில் அவள் தோற்றம் சுமப்பது தோள்பட்டையில் வலித்தது. நிலை தெரியாமல் நகர்ந்து திண்ணை மேல் அமர்ந்தேன். கச்சை கட்டில் நூறு பணம் அப்படியே இருக்கச் சகா காணவில்லை. முன்னே என்ன செய்வது? அடிக்கடி சிந்தைக்குள் வந்து போனாள். நாழி போனதும் ஒரு முடிவிற்கு வந்தேன். அரிசியிருந்தும் என்ன பயன். ஆக்க பாத்திரம் வேண்டாமா ?அரிசியைக் கடையில் கொடுத்துக் கிடைத்த பணத்துடன் கூட்டாளிகளுடன் சமரசம் பேசலாம் என எண்ணினேன். தனிக்கட்டைக்கு வேறு வழியேது? என்னிடம் இல்லாதபோது என்னுடன் பகிர்ந்த உற்றார் உறவினர் அவர்கள்தான். வெகு விரைவில் என் கட்டை வேகும்போது நிற்கப்போவதும் அவர்கள்தான். நொடிப்பொழுதில் மறையும் இச்சையின் படிமத்தைச் சுமப்பது பித்து. மயக்கம் பெண் குரலில் பேசும்.
வீசி நடந்தேன் பரந்தாமன் கடைக்கு. பரந்தாமன் நிச்சயம் அரிசிக்கு எழுபத்தைந்து பணம் கொடுப்பான் ஆனால் காத்து அணுகவேண்டும். வாடிக்கையாளர்கள் முன்னே என் பீடை கோலத்தைச் சகிக்கமாட்டான். திரும்ப ஒரு முறை கோபுர தளத்தைப் பார்த்தேன், அவள் தெரியவில்லை. பரந்தாமனின் பலசரக்கு கடை மொட்டை கோபுரத்திற்கு எதிரில் நேர் வீதியில் ஜன நடமாட்டம் அதிகமுள்ள முத்தம்மாளின் பூக்கடைக்கும் சரவணன் ஜவுளிக் கடைக்கும் நடுவில். குச்ச தூரத்தில் முனியன் கோழி இறைச்சிக் கடை, கையில் நூறு பணம். மனம் தடுமாறியது. முத்தம்மாளின் பூக்கூடைகள் நடுவில் அரை ஆகிருதியைப் பூக்கூடைக்கு பின்னல் நின்று மறைத்து முகம் மட்டும் பரந்தாமனுக்குத் தெரியும் விதம் நின்றேன்.
அங்காடியில் நல்ல கூட்டம். நான் நிற்கும் பக்கம் பரந்தாமனின் கண்கள் பார்க்கவே இல்லை. கூட்டம் குறைந்த பின்னும் என் பக்கம் திரும்பவில்லை.’அட என்னப்பா அப்படி ஒன்றும் மோசம் போனவன் அல்ல நான்’ என எண்ணி பூக்கூடையிலிருந்து விலகி இரண்டடி எடுக்கையில்தான் அவள் தலை உச்சி மட்டும் சற்று தெரிந்தது. பூக்கூடை எங்களுக்கு நடுவில் நின்றிருந்தது. பூக்களின் குவியல் அவள் தலையை மறைத்திருந்தது. குன்றிய தேகம், வகுடெடுத்து வாரிய பின் தலை.
கண்களால் தோற்றத்தை மட்டுமே பார்க்க முடியும். கண்களைக் கட்டினாலும் குரல் அடையாளம் காட்டும். தீவிர அன்னோன்னியம் கொண்டிருந்தால் மௌனித்து இருளில் பதுங்கியிருக்கும் நெருங்கியவளைத் ஊடல் கொண்ட ஸ்பரிசம் சிந்தைக்கு அடையாளம் காட்டும். குறிஞ்சி மலரை குறத்தியின் கண்களைக்காட்டினாலும் நாசி முகர்ந்து அறிந்துகொள்வாள். அதுவரை கண்டிராத சீதையை, ஆரிய ஆகிருதியாலோ, காற்றிலே கரையும் சோகத்தினாலோ, மதி சொல்லும் பிரிவினாலோ அனுமன் கண்டுகொண்டிருக்கலாம். இவை அனைத்தும் பூவுலக தொடர்புகளுக்கே. மனித புலங்களிற்கு மண்ணுலக அனுபவங்களே பொருள் பேழைகள். அயலுக்கும் அகத்திற்கும் அர்த்த, அனுபவ தொடர்புகள் வேண்டும்.
இந்திரனால் சபிக்கப்பட்டு அலகறுந்து மண்ணுலகிற்குத் தள்ளப்பட்ட தேவதையை, பெண் வடிவெடுத்துப் பழிவாங்க வரும் மாணிக்க சர்பத்தை, நீண்ட ஜடையில் கூறிய கத்தியை மறைத்து, ஒரே சூழலில் குரல் வளை அறுக்கத் துடிக்கும் யட்சியை, ஆயிரம் ஜென்மங்கள் ஈசன் புகழ் பாடியும் விண்ணுலகம் செல்ல மறுக்கும் சித்தர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது. கல் வடிவிலிருந்தும் அகல்யையை ராகவனுக்கு அடையாளம் தெரிந்தது. பாலுக்கு பதில் விடம் சுரக்கும் முலைகளை அறிந்தான் கிருட்டிணன். ஆனால் ராமனால் பொன்மானுள் மாரீசனையும், அந்தணனுள் இலங்கேசனை ஜானகியாலும் பிரித்தறிய முடியவில்லை. தோற்றங்கள் குழப்பமானவை.
யோசித்து நின்றேன், திசை தெரியாமல் அலையும் பறவையைப்போல. ‘இன்னுமா இங்க நிக்கற! போய் தொலைடி பீட’ , பரந்தாமன் அவள் மேல் கை ஓங்கியதும் விழித்தெழுந்தேன். ஒரு கணத்தில் அவள் யார் என்பது புரிந்தது. மெதுவாக அவள் திரும்பியபோது பதுமையின் முகம் என்னை நோக்கியது. அவள் விழிகள் மீதமுள்ள மர்மத்தை விளக்கியது. தோள்பட்டையிலிருந்த அரிசியையும் நூறு பணத்தையும் அவளிடம் கொடுக்கும்போது, வேழ்வியின் சாரம் முடிவில் புரிந்தது.