”வேனிற் காலத்தில் வேண்டப்பட்டதாக தோன்றும் நிலவு. குளிர் காலத்தில் குற்றம் சொல்லத் தக்கதாக தெரிகிறது. அப்பா என்ன குளிர்!” என்றார் கனசேகரன். அவரும் தினசேகரனும் நள்ளிரவில் தங்கள் குதிரைகளில் ஒரு கிராமப் பாதையில் மெதுவாகச் சென்று கொண்டிருந்தனர். பனி பெய்வதே தெரியாமல் பெய்து கொண்டிருந்தது. கனசேகரன் கனத்த கம்பளிப் போர்வையை உடலில் சுற்றி இருந்தார். தினசேகரன் மெலிந்த கம்பளிப் போர்வையைப் போர்த்திருந்தார்.
முழு நிலா முகில்களில் புகுந்தும் வெளி வந்தும் விளையாடிக் கொண்டிருந்தது. ஒரு பெரிய முகிலை எடுத்து போர்த்தி ஒளிந்து கொண்டு ”நான் எங்கே இருக்கிறேன் கண்டுபிடி” என்று சொல்லும் குழந்தையைப் போல அது இருந்தது. பிறகு வெடுக்கென முகிலை விலக்கி ”இதோ …இதோ” என்று தன்னைக் காட்டிச் சிரித்தது. நிலா சிரிக்குமா? என்றால் சிரிக்கும். நிலா மட்டுமல்ல இந்த உலகத்தில் எல்லாப் பொருட்களும் சிரிக்கும். இப்படியெல்லாம் தன் மனதில் எண்ணிக் கொண்டு எதுவும் பேசாமல் பயணித்துக் கொண்டிருந்தார் தினசேகரன். நிலா வெளிச்சத்தில் அவர் பார்த்த ஒரு வளைந்து கிடந்த பாறை சிரிப்பது போல இருந்தது.
”இதற்காகத்தான் நான் குளிர் காலத்தில் பயணங்ளை விரும்புவதே இல்லை. கோடை கால பயணங்கள் மட்டுமே இனியவை. அய்யோ இந்த குளிர் என்னை கொன்று விடும் போல இருக்கிறது. என் உடலில் ரத்தம் உறைந்து கட்டியாகி விடும் போல் இருக்கிறது” என்றார் கனசேகரன்.”
”அய்யா ஏன் புலம்புகிறீர்?. சுற்றிலும் பாரும் நிலவின் ஒளிபடும் இடமெல்லாம் எவ்வளவு அழகாக இருக்கிறது” என்றார் தினசேகரன்.
”ஏன் சொல்ல மாட்டாய்? எலும்பா! உன் உடம்பில் தான் ரத்தமே இல்லையே…அது கட்டியாக எங்கே வாய்ப்பு இருக்கிறது? உன் வெற்று எலும்புகள் குளிரை உணர்பவை அல்ல. இல்லாவிட்டால் இப்படி பேச மாட்டாய்” என்றார் கனசேகரன்.
”குளிரை என் எலும்புகள் உணர்கின்றன. ஆனால் குளிரை நான் பொருட்படுத்தவில்லை. என் எலும்புகள் கூட இந்த நிலவின் துண்டுகளே. அவை இந்த நிலவொளியில் மகிழ்ந்து நடனம் ஆடுகின்றன பாருங்கள் அய்யா” என்று தன் போர்வையை விலக்கி தன் உடலைக் காண்பித்தார் தினசேகரன். அவர் உடல் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது.
”சீ அறிவிலியே….குளிரில் நடுங்கிக் கொண்டு நடனமாடுவதாகச் சொல்கிறாயா? உன்னை மதித்துத் கொன்று விடுவேன்” என்று கோபமாக சொன்னார் கனசேகரன்.
”எதற்கெடுத்தாலும் கோபம் கொள்கிறீர். இது நல்லதல்ல. நீர் ஒருபோதும் கனிந்தன் ஆக மாட்டீர். வெறும் கவிஞன் வேடம் போட்டுக் கொண்டே கடைசி வரை இருப்பீர்” என்றார் தினசேகரன்.
”கனிந்தனா? அது என்னய்யா? ஏதாவது வாய்க்கு வந்ததை உளறுவதே உம் முழுநேர வேலையாகி விட்டது”
”கனிந்தன் என்றால் கவிஞன் ஒருவன் தன் கவிதைகளால் கனிந்தவனாக ஆவது. நிலவு ஒவ்வொரு பிறையாக வளர்நது முழு நிலா ஆவது போல. கனிந்து கனிந்தன் ஆகிவிடும் கவிஞன் அன்பு மிக்கவனாக இருப்பான். எல்லோரையும் நேசிப்பான். இதெல்லாம் உமக்கு தெரிய வாய்ப்பில்லை. நீர் தான் உண்மையில் கவிஞனே அல்லவே”
”வாயை மூடும்..” கனசேகரன் தினசேகரனை நோக்கி கையை உயர்த்திய போது அவர் அமர்திருந்த குதிரை கனைத்தது. அவர் அதை கவனித்து விட்டு ”அது சரி நாம் சென்று கொண்டு தானே இருந்தோம்? குதிரையை எப்போது நிறுத்தினோம்?
”அதை உம் குதிரையிடமே கேளும். அதற்கு பதில் தெரியவில்லை என்றால் என் குதிரையிடம் கேளும். அதற்கும் பதில் தெரியவில்லை என்றால் கடைசியாக என்னிடம் கேளும்” என்றார் தினசேகரன்.
”போதும் அய்யா உளறுவது. சற்று நேரம் சும்மா இரும்”
நின்றிருந்த குதிரைகளை மீண்டும் செலுத்திக் கொண்டு அவர்கள் சென்றார்கள்.
“ம்…பின்னிரவு….பாரும் இரண்டு பேர்களின் தோள்களில் கையை ஊன்றி மெதுவாகச் செல்லும் கிழவனைப் போல நிலவு மேற்கு நோக்கி சென்று கொண்டிருக்கிறது” என்றார் கனசேகரன். பிறகு ”திண்டுவின் அப்பா வில்வ கோட்டையில் இருப்பாரா?” என்று கேட்டார்
”அப்படித் தானே நமக்குத் தகவல் வந்தது?”
”ஆம். ஆனால் நாம் அவரை சந்திப்பதற்கு முன் அவர் வேறு எங்கும் சென்றுவிடாமல் இருக்க வேண்டும்”
”அதற்குத்தான் நாம் அவருக்குத் தகவல் அனுப்பி விட்டுச் செல்லலாம் என்றேன்” என்றார் தினசேகரன்.
”அப்படி தெரிவித்துச் செல்வது சரியாக இருக்காது” என்றார் கனசேகரன்.
தினசேகரன் யோசனையில் ஆழ்ந்தார்.
பின்னிரவின் பனியுடன் மெல்லிய காற்றும் இணைந்து கொண்டது.
——–
திண்டுவிற்கும் முத்துவிற்கும் யுரேனஸ் கோளின் யுரேனக நகரில் அந்நாட்டின் மொழி கற்பிக்கப் பட்டது. அவர்களை கவனிக்கும் பொறுப்பு கொண்டிருந்த பெண் அவர்களை அந்த வகுப்பில் சேர்த்திருந்தாள். பூமியில் இருந்து கொண்டுவரப்பட்ட பிற சிறுவர்களும் அந்த வகுப்பில் இருந்தனர். சில நாட்களில் அவர்கள் அனைவரும் திண்டுவிற்கும் முத்துவிற்கும் நண்பர்கள் ஆகி விட்டார்கள்.
திண்டுவும் முத்துவும் யுரேனக மொழியை சில நாட்களிலேயே விரைவாக கற்றுக் கொண்டு விட்டனர்.
அன்று வகுப்பில் ஆசிரியர் கூறினார். ”யுரேனஸ் கோளின் இந்த ஆழ் உலகைப் பற்றி இப்போது ஒரளவுக்கு நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள். இது ஆழ் உலகு என்று மட்டுமல்ல அக உலகு என்றும் அழைக்கப்படுகிறது. சூரிய மண்டலத்தின் பூமியும் மற்ற கோள்களும் புறவுலகு என்றால் அவற்றைக் கட்டுப்படுத்தும் அக உலகமே இந்த யுரேனகம். பூமியில் இருப்பவர்கள் தங்களது விருப்பம் போல் வாழ்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. அங்கிருக்கும் அவர்களது வாழ்க்கையை இங்கிருந்து நாங்கள் தான் தீர்மானிக்கிறோம். யுரேனகம் விரும்பாத ஒன்று பூமியில் நிகழவும் முடியாது. அதே போல் யுரேனகம் விரும்பும் ஒன்று பூமியில் நிகழாமல் போகவும் முடியாது”
ஆசிரியர் ஒரு பெரிய வைரக்கல்லை கையில் வைத்திருந்தார். ”இதைப் பாருங்கள்” என்றார்.
அந்த வைரக்கல்லில் மின்னல் கீற்றுகள் போல வெண் ஒளி தோன்றி தோன்றி மறைந்தது. பிறகு நீல நிற ஒளி அலைகள் தோன்றி மறைந்தன.
”என்ன நடந்தது தெரியுமா? நான் இப்போது பூமியில் சில நிகழ்வுகளை உங்கள் முன்பு நிகழ்த்தினேன். அங்கு நித்திலம் என்று ஒரு தீவுத் தேசம் இருக்கிறது. அங்கு அறிவற்ற மக்கள் நீண்ட காலமாக வாழ்கிறார்கள். அவர்கள் இனி பூமிக்குத் தேவையில்லை என்று கருதினேன். எனவே இப்போது அவர்களை அழித்து விட்டேன். நீங்கள் இந்தக் கல்லில் பார்த்த வெண் மின்னல் கீற்றுகளும் நீல அலைகளும் அங்கு கடலில் தோன்றிய புயலும் பேரலைகளும் தான். அந்த தீவை பேரலைகள் உட்புகுந்து அழித்து விட்டன” என்றார்.
முத்துவிற்கு அழுகை வந்தது. திண்டுவிற்கு கோபமாக வந்தது.
”பூமியில் உள்ளவர்களை ஆட்டிப் படைக்க நீங்கள் யார்? அவர்களை கொல்லும் அதிகாரத்தை உங்களுக்கு யார் தந்தது?” என்று கத்தினான்.
”ஈவு இரக்கம் அற்று இருக்கிறீர்கள்” என்றான் முத்து.
”பொறுமை சிறுவர்களே. முதலில் உன் கேள்விக்கு பதில் சொல்கிறேன். பூமியில் உள்ளவர்களை ஆட்டிப் படைக்க நாங்கள் யார் என்றால்….நாங்கள் தெய்வங்கள் என்பது பதில். இரண்டாவது எங்களுக்கு யாரும் அதிகாரம் தர வேண்டியது இல்லை”
”இல்லை நீங்கள் தெய்வங்கள் அல்ல” என்றான் திண்டு.
”தெய்வங்கள் கருணை உள்ளவை” என்றான் முத்து.
ஆசிரியர் சிரித்தார். ”ஆம் பூமியில் நீங்கள் வழிபடும் தெய்வங்கள் கருணை உள்ளவையாக இருக்கலாம். ஆனால் இந்த பிரபஞ்சத்தில் அவை எங்கே இருக்கின்றன என்று உங்களுக்கும் தெரியாது. எங்களுக்கும் தெரியாது”
”சரி. இன்று வகுப்பு முடிந்தது. அனைவரும் செல்லலாம்” என்றார்.
திண்டுவும் முத்துவும் நீல நிற புற்கள் நிறைந்த இடத்தின் நடுவே இருந்த பாதையில் மௌனமாக நடந்தார்கள்.
”என்ன இதெல்லாம் திண்…டு? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நாம் இங்கிருந்து தப்பவே முடியாதா?” என்று கேட்டான் முத்து.
”நம்பிக்கையுடன் இருப்போம் முத்து. ஏதோ ஒரு காரணம் இல்லாமல் நாம் இங்கு கொண்டு வந்திருக்கப்பட மாட்டோம்” என்றான் திண்டு. பிறகு ”ஒருவேளை இங்கிருந்து நாம் அடையும் விடுதலை இவர்களிடமிருந்து பூமிக்கு கிடைக்கும் விடுதலையாகவும் அமையலாம்” என்றான்.
”உண்மையிலேயே பூமியில் நடக்கும் அனைத்தையும் இவர்கள் தான் நிகழ்த்துகிறார்களா? நம்பவே முடியவில்லை என்றான் முத்து.
திண்டு எதுவும் சொல்லவில்லை. நீல நிற புற்கள் காற்றில் ஆடின. காலையில் மிகச் சிறிய புள்ளியாகத் தோன்றிய யுரேனக அக உலக சூரியன் இப்போது நடுவானில் இறங்கி பெரியதாக தோன்றியது.
”இது நம் சூரியனைப் போல அவ்வளவு வெப்பமாக இல்லையே ஏன்? யுரேனஸ் சூரியனிலிருந்து வெகுதொலைவில் இருப்பதனாலா? என்று முத்து கேட்டான்.
”நம் சூரியன் தான் அனைத்து கோள்களுக்கும் சூரியன். இங்கே நாம் காணும் இது உண்மையில் சூரியனே அல்ல. இந்த அக உலகிற்காக இவர்கள் உருவாக்கியதாக இருக்கக் கூடும்” என்றான் திண்டு.
முத்து வியப்படைந்தான்.
—-
கைம்மாவிற்கு தான் விண்ணில் பறக்கத் தொடங்கி எத்தனை நாட்கள் ஆகின என்பதே மறந்து விட்டது. பிரம்மாண்டமான விண்வெளி பேரழகு வாய்ந்ததாக இருந்தது. அதே சமயம் முடிவே இல்லாத அது அச்சமூட்டுவதாகவும் இருந்தது. அவன் செவ்வாய் கோளை நெருங்கிவிட்டிருந்தான். இப்போது அது மிகப் பெரியதாக தெரிந்தது. ரத்த நிறத்தில் எவ்வளவு பெரிய கோள்! பூமியில் இருந்து விலகி விண்ணில் இருந்து பூமியைப் பார்த்தபோது அது மாபெரும் நீல பந்தாக காட்சியளித்தது அவன் நினைவுக்கு வந்தது. ஆழி சூழ் உலகு அது. உடனே, பூமியில் நீல நீர்க் கடல் இருப்பது போல செவ்வாயில் செந்நீர்க் கடல் இருக்குமோ என்று நினைத்தான். ஒருவேளை முழுவதும் ரத்தத்தால் ஆனா பெருங்கடல்கள் அங்கு இருக்குமோ? ஒரு கணம் அந்த எண்ணம் எழுந்தபோது தன் இயந்திர உடைக்குள் தன் உடல் நடுங்குவதை உணர்ந்தான்.
தன் கிராமத்தில் அவர்களது காட்டு தெய்வத்தின் பூசாரியின் நினைவு அவனுக்கு வந்தது. செவ்வாய் கோள் ஒரு போர்க் கடவுள் என்று எப்போதோ அவர் சொல்லி இருந்தார். அவன் செவ்வாய் கோளைப் பார்த்து தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். ”நானும் ஒரு போருக்குத் தான் செல்கிறேன். நான் வெற்றி அடைய நீ எனக்கு உதவ வேண்டும்”
அந்த கணம் விண்ணிலிருந்து ஏதோ ஒரு பொருள் செவ்வாய் கோளில் சென்று விழுந்ததை அவன் கண்டான். அக்கோளில் இருந்து ஒரு நெருப்புத் தூண் போல பிரகாசமான ஒளி எழுந்து மறைந்தது.
(மேலும்)