14.என் சக பயணி – விக்ரமாதித்யன் –ச.தமிழ்ச்செல்வன்

1.

முதலில் விக்ரமாதித்யனை- இப்படிப் பேர் சொல்லி அவரைக் குறிப்பிட்டு ஒருபோதும்  பேசியதில்லை- மரியாதைக் குறைவாக எழுதுகிறோமே என்கிற மன அவஸ்தை உடனே வந்து விடுகிறது. நம்பி அண்ணாச்சி அல்லது அண்ணாச்சி என்றே அழைத்துப் பழகியிருக்கிறோம். அண்ணாச்சியைப் பற்றி யோசிக்கும்போதே சில மனத்தடைகள் முன்னுக்கு வந்து  மறிப்பது வழக்கமாகிவிடுகிறது. எனக்கு மட்டும்தான் இப்படியா எல்லோருக்குமா என்று தெரியவில்லை. ஆகவே முதலில் அதைப்பற்றி எழுதிக் “கழித்து” விடுகிறேன். அப்போதுதான் அவரைப்பற்றிச் சரியாக நிதானமாகச் சில வரிகளை எழுத முடியும் என்று தோன்றுகிறது.

விக்ரமாதித்யன் அது குடிகாரரான அவருடைய ஒரு பக்கம் பற்றியது. கோயில் போல ஒரு மனசு அவருக்குள் உண்டு. நானே கும்பிட்டிருக்கிறேன் பலமுறை. அப்படி ஒரு மனசுக்கு இந்தக் குடிப்பழக்கம் எத்தனை அவமானங்களைக் கேவலங்களைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

“என்னை சுலபமாகத் தவிர்த்து விடலாம்

எச்சரித்து அனுப்பிவிடலாம்

“வெளியே போடா” என்கலாம்

மன்னித்து மறந்து போகலாம்

தண்டித்து அனுப்பலாம்

பொருட்படுத்தாமல்

போய்க்கொண்டிருக்கலாம்

எதுவானாலும் உங்கள்

இஷ்டம்தான் ”

என்று செல்கிற “என் வாழ்க்கையில் நீங்கள்” என்கிற அவருடைய கவிதை

“ஒரு கை ஓசையென்பது

உலகத்தில் இல்லை தானே”

என்று முடியும்போது தவிர்க்கவியலாதபடி என் மனம் குற்ற உணர்வு  கொள்கிறது. குடிப்பவர்கள் பற்றி நாம் கொண்டிருக்கும் அணுகுமுறை எத்தகையது என்கிற கேள்வி எனக்குள் எழும்புகிறது. நம் அணுகுமுறை மேலும் அவர்களைக் குடியை நோக்கித் தள்ளுவதாக இருக்கிறதா அல்லது அதிலிருந்து  மீண்டுவர உதவுகிறதா? கவிஞனையே கழிசடையாய் மாற்றும் சமூகத்துக்கு கனிவோடு கொஞ்சம் கவிதைகள் விட்டுச் செல்லும் மனசோடுதான் அவர் இருக்கிறார். ஆனால் நாம்?

“அவனை அடிப்பதென்று

தீர்மானித்துவிட்டால்

அடித்து விடுங்கள் சற்றும்

தயங்காமல்

பிறகு வருவதை

பார்த்துக்கொள்ளலாம்”

“உங்களை யாரும்

கேட்கப்போவதில்லை

சும்மா இருக்க

முடியுமா அதற்காக

குடிகாரன் என்று

குறை கூறுங்கள்

குடித்துவிட்டு வந்து

கலகம் செய்தானெனக் குற்றம்

சாட்டுங்கள்”

என்று ஒரு கவிதையில் பேசும் அண்ணாச்சி இன்னொரு கவிதையில் அடிபட்டவன் புலம்பினால் தீர்ந்தது மறைந்தது (கவிஞனை மட்டும்  தெருவில் திரியவிடும் தமிழ்ச்சமூகம்- என்பது போல) ஆனால் அடித்தவன் வேதனை அலைந்து கொண்டிருக்கும் ஆவியாய் என்று அடித்தவனுக்காக மனம் இறங்குகிறார். அதுதான் கவிமனம்.

“தவிர்க்க

முடியாததை

சகிக்கப்

பழகுவது

மேன்மை”

என்று அவரே சொன்னதுபோல அவரோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் சூழலில் இன்று குடிப்பவர் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ந்து விட்டது. எனக்குக் கவலை எல்லாம் படைப்பாளிகளும், பாட்டாளி வர்க்கமும்  பெரும் குடிகாரர்களாக மாறிவருவது பற்றி மட்டும்தான். இவர்கள் இருவரும்தானே ஒரு சமூகத்தை உருவாக்கும் கர்த்தாக்கள். தொழிற்சங்க இயக்கங்களிலும் குடி இன்று ஒரு தீராப்பிரச்னையாகி வருகிறது. இதற்கான சமூக உளவியலை நாம் அவதானித்து விடைகாண வேண்டும். சும்மா குடிகாரர்களை மட்டும் குறை கூறுவதில் பயனில்லை. ஆனால் குடிப்பவர்களும் யோசிக்க  வேண்டும். அளவுக்கு மீறினால் – அளவு மாற்றம் குண மாற்றத்துக்கு இட்டுச் செல்லுமே-

“நீ

குடித்தாலும்

யோனி தேடும்

போதையிலிருந்தாலும்

உன்னை மறக்காதே

சமூகத்தை மறக்காதே

மத்யவர்க்கம் என்பதையும்

மறக்காதே”

 என்கிற ஓர்மையெல்லாம் மிதமிஞ்சிய அளவு போகும்போது நிற்குமா அண்ணாச்சி? (அளவு என்று நான்குறிப்பிடுவது குவார்ட்டர் / புல் அல்ல. குடித்துக் கொண்டே போகும் வாழ்க்கையின் கால அளவை) கனவுகளுக்கு வர்ணம் பூசும் நம் கவி மூளையும் இந்த உடம்புக்குள்ளேதானே இருக்கிறது? புறமெல்லாம் புண்பட்டால் அகமெல்லாம் அழிந்து போகாதா?

தவிர,

ஜெயமோகன் கூட்டத்தில் அண்ணாச்சி தண்ணியைப்  போட்டு அலப்பரை பண்ணீட்டாராமில்லே, பெருமாள்புரம்னு பேர் வைக்காமே ஏண்டா விஷ்ணுபுரம்னு பேர் வச்சே என்று திரும்பத் திரும்பக் கேட்டு உரிச்சுட்டாராமில்லே என்று நமக்குள்ளே புறம்பேசிக்  கொண்டாடி மகிழும் ஒரு மனப்போக்கு பரவலாக நம்மிடம் இருப்பது இத்தகைய கலாட்டாக்களைப் போற்றும் ஒரு சமூக விரோத மனநிலைதான் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டியதும் இருக்கிறது. போதையின்றி எக்கருத்தையும் எதிர்கொள்ளும் துணிவும் அறிவு நேர்மையும் – அதற்கான ஆரோக்கியமான சூழலையும் – நாம் வளர்த்துக்கொண்டாக வேண்டும் அல்லவா? எதிராளியிடம் அது இல்லாத போதும்கூட.

நிற்க,

ஒருமுறை அண்ணாச்சியும் அவரது துணைவியாரும் திடீரென ஒரு வெயில் பொழுதில் நான் வேலை பார்த்துக்கொண்டிருந்த சேரன்மகாதேவி அஞ்சலகத்தில் பிரசன்னமானார்கள். தம்பதி சமேதராக அவர்களைப் பார்த்ததும் மனம் அதிர்ந்தது. அண்ணாச்சி வெள்ளை வேட்டி வெள்ளை முழுக்கைச் சட்டையில் நெற்றி நிறைந்த திருநீற்றுடன் சிவப்பழமாகக் காட்சியளித்தார். இருவரையும் கையெடுத்துக் கும்பிட்டேன். சாமி இப்படியே நீங்க நல்லா ஆயிரணும் இந்த மதினியைப் படுத்தியது இன்னியோட இந்த போஸ்டாபீசுக்கு வந்திறங்கிய இந்த  நிமிசத்தோட போகட்டும் என்று கண்கள் கசிய மனதுக்குள் வேண்டிக்கொண்டேன்.- நமக்கு சாமி கும்பிடும் வழக்கம் இல்லையென்றபோதும். அதெல்லாம் ஒரு மனநிலைதான். குளிர்பானம் வாங்கிக் கொடுத்து சந்தோசமாக அவர்களை வழியனுப்பி வைத்தேன். அன்று முழுக்க மனம் பரவசமாக இருந்தது. தம்பி லட்சுமி மணிவண்ணனுக்காகவும் அவரோடு வாழும் என் கொழுந்திக்கும் பிள்ளைகளுக்காகவும் கூட இப்படிப் பலமுறை நான் வேண்டிக்கொள்வதுண்டு.

2.

இரண்டாவது மனத்தடைக்குக் காரணம் – முற்போக்கு எழுத்தாளர்கள் பற்றி அவர் கொண்டிருக்கும் (எழுத்தில் வெளிப்படுத்தியிருக்கும்) கேவலமான அபிப்ராயம். சுந்தர ராமசாமி அவர்களின் காலம் தொட்டு உலவிவரும் பொத்தாம் பொதுவான அறுதப் பழைய பார்வையே இவரிடமும் படிந்து கிடப்பது தெரிகிறது. எனினும் மற்றவர்களைப் பார்க்கிலும் ஒரு ஆறுதலான அம்சம் இவர் முற்போக்குப் படைப்பாளிகள் ஒரு சிலரின் படைப்புகளைப் படித்துவிட்டு எழுதுகிறார். சிலருடைய படைப்புகளைப் பாராட்டவும் செய்துள்ளார். நாங்கள் 100 சதம் சரியாகவேதான் காலம் காலமாக இருந்து கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் நான் வாதிட வரவில்லை. அப்படி ஒரு கருத்து எம்மில் யாருக்கும் இல்லை. விமர்சனங்களைப் பெரும் சொத்தாக மதிக்கும் மனநிலைதான் எமக்கு இருக்கிறது. ஆனாலும்……

“செம்மலர், தாமரையில் மார்க்சிய சித்தாந்த சூத்திரங்களுக்கு ஏற்பவும் கட்சிக் கொள்கைகளுக்குத் தகவும் சிறுகதைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன” என்று தடாலடியாக ஒரு கட்டுரையில் எழுதிச்செல்கிறார் அண்ணாச்சி. ஆனால் இது 100 சதம் தப்பான கணிப்பு என்று உரக்கக் கூற விரும்புகிறேன். மார்க்சியப் பார்வையுடன் கட்சிக் கொள்கைகளுக்கேற்ப செம்மலரில் ஒரு கதைக்கூட வரவில்லையே என்கிற கவலைதான் செம்மலரின் ஆசிரியர் குழுவில் பணியாற்றும் எனக்கு இருக்கிறது. செம்மலரில் கூட மார்ச்சியக் கதைகள் வரவில்லையானால் வேறு எதில்தான்  வரும் என்கிற கேள்வியோடு நாங்கள் இருப்பதுதான் இன்றைய யதார்த்தநிலை. இதை எப்போதுதான் புரிந்து கொள்ளப்போகிறீர்களோ? 60 ஆண்டுகளுக்கு முன்னால் சுந்தர ராமசாமி உள்ளிட்ட முன்னோடிகள் முன்வைத்த புளித்துப்போன அதே கருத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்தாமல் அப்படியே வாந்தி எடுத்து வரும் தீராவியாதியிலிருந்து  வெளியே வாருங்கள். இதை அண்ணாச்சிக்காக நான் எழுதவிலலை. அவரைச் சாக்கிட்டு வெளியில் (அமைப்புகளுக்கு ) இருப்பதாலேயே உன்னதமான படைப்பாளிகள் நாம் என்று கருதிக்கொள்வோருக்காகவும் எழுதுகிறேன்.

முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்களாகவும் மாநிலத் தலைவர்களாகவும் இருந்து செயல்பட்டுக்கொண்டு, படைப்புலகில் தடம்பதித்து வரும் நீங்கள் கேள்விப்பட்டிராத சில புதிய படைப்பாளிகளின் பெயர்களைக் கீழே தருகிறேன். எங்கள் மூத்த எழுத்தாளர்களின்  பெயர்களை விட்டு விடுகிறேன். ஆதவன் தீட்சண்யா, சு.வெங்கடேசன். லட்சுமணப்பெருமாள், உதயஷங்கர், பவா.செல்லத்துரை, கீரனுார் ஜாகிர்ராஜா, அ.வெண்ணிலா, ஹரிகிருஷ்ணன், ஜீவி, ஸ்ரீரசா, தேனி சீருடையான், ம.காமுத்துரை, போடி மாலன், கேஜி பாஸ்கரன், நாறும்பூநாதன், மணிமாறன், சுப்பாராவ், ஜனநேசன், மு.முருகேஷ், பா.ராமச்சந்திரன், யெஸ்.பாலபாரதி, கவிஞர் பாலபாரதி, புதுக்கோட்டை சஞ்சீவி, நா.வே.அருள், நவகவியின் இசைப் பாடல்கள், கோவை சதாசிவம், பாஸ்கர் சக்தி, க.சீ.சிவக்குமார், ஜா.மாதவராஜ், காமராஜ் அசோகன் முத்துசாமி எனப் பட்டியல் இன்னும் நீள்கிறது. இதுபோக இன்னும் கலை இலக்கியப் பெருமன்றம், ம.க.இக. படைப்பாளிகள்  வேறு இருக்கிறார்கள். படைப்புகளின் தரம்தரமின்மை குறித்து எங்கள் அமைப்புகளுக்குள் நடக்கும் மனம் திறந்த வெளிப்படையான விவாதங்கள் பற்றி வெளியே தெரியாததும் ஒரு குறைதான்.

குறைந்த பட்சம் பட்டியலிட்டுள்ள இந்த ஒரு 30  பேருடைய படைப்புகளை மட்டுமாவது முழுசாகப் படித்து இதெல்லாம் எப்படி இலக்கியமில்லை என்று யாராவது ஆதாரத்துடன் புரியும்படி எழுதுங்கள். எங்கள் வளர்ச்சிக்கும் அது உதவும். சும்மா ரோட்டில் போற வாற சமயமெல்லம் முற்போக்குகள் முட்டாள்கள் என்ற கருத்துக்களை “உதிர்த்துக்கொண்டு” போகாதீர்கள். அமைப்புக்கு வெளியே இருந்தாலும் சீரியஸ் இலக்கிய இதழ்களில் வெறும் குப்பையாகக் கதை எழுதுவோர் பற்றி ஆதாரத்துடன் காய்தல் உவத்தல் இன்றி நானும் எழுதுகிறேன். அத்தோடு இந்த அமைப்பு – இலக்கியத் தரம் பற்றிய இப்பிரச்னையை முடிப்போம். இன்னும் எத்தனை காலத்துக்கு இதையே உளறிக்கொண்டு திரிவது நாம்? எங்கள் மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமணப்பெருமாளின் “வயனம்” என்கிற ஒரு சிறுகதையை மட்டுமாவது படியுங்கள் என்று மெத்தப் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

“கல் பாறையென்று

கண்டனம் செய்வதெல்லாம்

கசிந்து பெருகும் ஊற்றுக்கண்ணை

கண்டுகொள்ளாத வரைதானே?”

3.

அண்ணாச்சி எழுதியதில் சுமார் 500 கவிதைகளையும் 4 கட்டுரைத் தொகுப்புகள் 2 சிறுகதைத் தொகுப்புகளையும் சில நேர்காணல்களையும் ஒரு சேர கடந்த ஒரு வாரமாக வாசித்தேன். ஏற்கனவே ஆரம்ப காலங்களில் ஆகாசம் நீலநிறத்தில் துவங்கி திருஉத்தரகோசமங்கை தொகுப்பு வரை அவரைப் பின் தொடர்ந்து வாசித்திருந்தேன். அப்புறம் அவரை வாசிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப்பின் இப்போது அவரை வாசிக்கிறேன்.

எனக்கு மிக மிக நெருக்கமான கவிஞராகவே அவரைப் பெரிதும் உணர்ந்தேன். அவர் கொண்டிருக்கும் சைவப் பிடிமானம். சோதிடத்தில் வைத்துள்ள பெரும் நம்பிக்கை. பெண்கள் குறித்துக்கொண்டிருக்கும் பாரம்பரியமான நல்லுணர்வும், கெட்ட உணர்வும் எனச் சில பகுதிகளில் எனக்கு  மாறுபட்ட கருத்தும் உணர்வும் ஏற்பட்டது. ஆனால் குறிப்பிட்ட இவையல்ல  விக்ரமாதித்யன் என்னும் கவியின் அடையாளம் என்பதே நான் உணர்ந்தது,

“தரித்திர தேசத்தில்

தரித்திர கவிஞர்கள்

தரித்திர கவிதைகளே எழுதுகிறார்கள்”

“தரித்திர நாராயணர்களை ஆளும்

தலைவர்கள் மட்டும்

தரித்திரமின்றியே வாழ்கிறார்கள்

மாயமாய்”

”தரித்திர ஜனங்கள்

விழித்துக்கொண்டால்

தரித்திர தேசமாய் இருக்குமா எதுவும்

தரித்திரத்தில்தான் இருப்பார்களா

ஜனங்களும்

காலமே தமிழே சொல்லு

குழந்தைகள் பெண்கள் பசுக்கள்

மீது மட்டும்

தரித்திரம் கவியக்கூடாது

ஒருபொழுதும்..”

கடைசி மூன்று வரிகளை வாசிக்கும்போது உண்மையில் வெடித்து அழுதுவிட்டேன். ஆகாசம் போல என்ன ஒரு பெருமனம்  இவ்வரிகளில் விரிந்து கிடக்கிறது. சங்க கால மனமும் வானம்பாடிகளின் உணர்வும் கலந்த ஒரு அசலான முற்போக்குத் தமிழ்க்கவிதையல்லவா இது.

“விரும்புவது

நதிக்கரை நாகரிகம்

விதிக்கப்பட்டது

நெரிசல் மிக்க நகரம்“

என்கிற தன் விதியை நொந்து ஏராளமான கவிதைகளை அண்ணாச்சி எழுதியிருக்கிறார். தாமிரபரணி அவர் மனதில் சதா வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லாமே ஒருவித nostalgic உணர்வோடுதான் எழுதப்பட்டுள்ளதாக நாம் அவசரப்பட்டு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 17 பேர் (ஒன்றரை வயது குழந்தை விக்னேஷ் உள்ளிட்டு ) தி.மு.க. அரசினால் பட்டப்பகலில் அடித்துக்கொல்லப்பட்டுத் தாமிரபரணியில் வீசப்பட்டது பற்றி அவர் எழுதிய வரிகளை நாம் வாசிக்க வேண்டும்.

“எத்தனை துப்பாக்கிச் சூடுகள்

ஒரு வருஷத்தில்

……

துப்பாக்கிச் சூடுகளாலேயே

துரைத்தனம்

துரைத்தனத்துக்காவே துப்பாக்கிச்

சூடுகள்

துப்பாக்கிகளை நம்பியே துரைகள்

துரைத்தனத்துக்காகவே துப்பாக்கிகள்

ஜாலியன் வாலாபாக்

தாமிரவருணிக்கரை

காலம் இடம் ஆள்கள்தாம்

வேறுவேறு

இன்னொரு கவிதையில் தனது நதியான தாமிரவருணி பற்றி எழுதுவதையும் கவனிக்க வேண்டும்.

இத்தனை வன்கொலையா

இந்த நதியில்

நதியினில் பிணம் விழுந்தால்

நாமென்ன செய்ய

நதியையும் விட்டு வைக்காதா

நம்நாடு

ஒரே நாளில்

பதினேழு உயிர்கள்

கூசாமல் கொலை செய்யும் அரசு

உயிரின் விலையை

தீர்மானிக்கிறார்கள் ஆட்சியாளர்கள்

குழந்தைகளைக் காவு வாங்கும் நதி

உலகிலேயே இல்லை

ஆற்றைக் கறைப்படுத்துபவர்கள்

அயோக்கியர்கள்

எல்லாவற்றையும்

சம்பவமாக்கிவிடுகிறது ஜனநாயகம்.”

இதுவரை விக்ரமாதித்யன் என்றால் சொந்த நொந்த வாழ்வு பற்றிப் புலம்பிக்கவிதை எழுதுபவர் என்றும், குடியைக் கொண்டாடியும் கவிதைக்கு உந்து சக்தி குடியென்று சொல்பவர் என்றும் டாஸ்மாக்கைக் கடக்க முடியாத கவி என்றும் சில முகங்கள், முத்திரைகள் குத்தப்பட்டிருக்கலாம். அவற்றில் உண்மை இல்லாமலில்லை. அதை நம் யாரையும் விட மிக அதிகமாக உணர்ந்திருப்பவரும் அது பற்றி எழுதியிருப்பவரும் அவரே. ஆனால் அவை மட்டுமல்ல விக்ரமாதித்யன். பசியும் பட்டினியும் இயல்பென லபிக்கப்பட்ட மக்களில் ஒருவராக வீடற்ற மனித உயிராக தெருக்களில் திரிந்தலையும் துக்கத்தைச் சுமப்பவராக எப்போதும் வீடு திரும்புதல் பற்றிய கனவுகளோடும் ஏக்கங்களோடும் வாழும் ஒரு விளிம்பு நிலை மனிதராகதான் ஒரு கவியென்னும் தன்னுணர்வு சண நேரமும் விட்டகலாத கர்வத்துடனும் வாழ்கிற கம்பீரமான படைப்பாளி விக்ரமாதித்யன். சொந்த வாழ்வைப் பலி கொடுத்து கவி புனையும் தமிழ்க்கவி.

“இருக்கிற ஸ்திதியைச் சொல்வதுதான் என் வேலை. நம்பிக்கையையோ நம்பிக்கையின்மையையோ பரப்புவது அல்ல” என்கிற பார்வையுடன் அவர் படைக்கிறார். அவருடைய படைப்புகளில் விஞ்சி நிற்பது நம்பிக்கையா அவநம்பிக்கையா என்று பட்டிமன்றம் நடத்துவது வீண்வேலை. ஒரு கலைஞன் இச்சமூகத்தில் இருக்கும் நிலையைக் கூர்மையாகப் பதிவு செய்தால் கூடப் போதும். அதுவே ஒரு முற்போக்கான பணிதான். அது ஏன் இப்படி இருக்கிறது என்று ஆய்வதும் அதற்கான மாற்றுகளை உருவாக்குவதும் அரசியலார்  வேலை. தமிழில் அரசியலார் இந்த மாதிரிப் படைப்புகளை வாசிக்காமலும் ஏறெடுத்தும் பாராமல் இருப்பதுமே ஆகப்பெரும் வியாதியாகும்.

“உள்ளுணர்வும் ஒரு வகையான உள்ளார்ந்த ஓசை ஓழுங்கும் இருக்கிற அளவுக்கு வேறு கவிதை நுட்பங்கள் என் கவிதைக்குள் வரவில்லை“ என்றும் “ மிக இற்று நைந்து போன வாழ்வை வெகு பழைய மொழியில் சொல்லிச் சலிப்பூட்டுகிறேன்“ என்கிற சுயபார்வை அவருக்கு இருப்பது தமிழில் வேறு யாரிடமும் காணமுடியாத வியப்பூட்டும் மனநிலையாகும்.

இக்கட்டுரையில் அவருடைய சிறுகதைகள் பற்றி எழுத இடமில்லை. விரிவாக தனியே எழுதலாம். திரிபு. நேர்ந்தது ஆகிய இரு கதைகளும் உலகத்தரத்துக்கான தமிழ்ச்சிறுதைகள் என்று ஒரு வரியை மட்டும் இப்போதைக்கு எழுதிச் செல்கிறேன்.- பிள்ளைமார் சமூக வாழ்வைப் பின்புலமாகக் கொண்டிருந்தாலும் அது உலக இலக்கியமாக நிற்கிறது. போய்ச் சேர்ந்தான் புதுமைப்பித்தன் / வந்து நிற்கிறான் விக்ரமாதித்யன் என்கிற அவரது வரிகள் இக்கதைகளுக்கு முற்றிலும் பொருந்தும்.

அவருடைய கவிதைகளில் காணக்கிடைக்காத நிதானமும் ஒருங்கிணைந்த பார்வையும் இயங்கியல் பூர்வமான பொருள் முதல்வாதக் கண்ணோட்டமும் கூட அவருடைய கட்டுரைகளில் ஒளிர்வதைக் காணமுடிகிறது. கவிதைகள் பெரிதும் தன்வயமானவையாகவும் கட்டுரைகள் அவ்விதமின்றிப் பூரணமாகவும் வந்துள்ளதாக உணர்கிறேன்.

அவரிடம் நான் காணும் பெரும் குறை, வீடு துறந்து இவ்வளவு அலைந்து திரிந்து எங்கோ சாப்பிட்டு எங்கோ படுத்துறங்கி என்று அமைந்த இந்த வாழ்விலிருந்து அவர் கண்டு சொன்னது மிகமிகக் கொஞ்சமே. சுகுமாரன் கணிப்பது போல நான் கவிஞன் குடித்திருக்கிறேன் என்கிற தன்னுணர்வோடு சலுகை கோரும் ஒருவித மனநிலையே பெரிதும் அவரை ஆக்கிரமித்து இன்னும் எவ்வளவோ பார்த்தும் கண்டடைந்தும் சொல்ல முடியாதபடிக்குத் தடுத்துக் கொண்டு இருப்பதாக உணர்கிறேன். சுடுமணல் கொதிக்கலாம் நெடுந்தேருக்கு என்ன கவலை என்று இனிமேலும் இப்படியே போய்க்கொண்டிருக்காமல் அண்ணாச்சி இன்னும் தன் அனுபவங்கள (அதற்குள்ளளேயே அமிழ்ந்து கிடக்காமல் ) சற்றுக் துாரத்தில் வைத்துப் பார்த்து இன்னும் நிறையச்  சொல்ல வேண்டும். நினைவின் தாழ்வாரங்களைப் போல.

இறுதியாக….

யதார்த்தவாதம் குறித்த அவருடைய வலுவான கருத்துக்கள் முற்போக்காளர்கள் கொண்டாட வேண்டிய கருத்துகளாகும் என்பதைச் சொல்லி முடிக்கிறேன்.

“இந்தச் சமூக அமைப்பில் இன்றைய நிலையில் வாழ்க்கை எப்படி இருக்கிறது, இதில் நேர்கிற சிறுமையும் வீழ்ச்சியும் என்னென்ன ( சில சமயங்களில் இதன் நடுவேயுள்ள மேன்மையும்) சமூக இருப்பு, மனித நடப்பு, சமூக – தனிமனித உறவு நிலைகளின் மாற்றம் ஆகியவற்றை ஒரு படைப்பாளியின் பார்வையில் இயல்பாகவும் சிரத்தையாகவும் கண்டறிந்து முன்வைப்பதே எதார்த்த எழுத்து ஆகும். முன் எப்போதையும் விட எதார்த்த இலக்கியம் இப்போது மிகவும் தேவைப்படுகிறது”

“சராசரி இந்தியர்களின்

சகிப்புத்தன்மையில் மட்டுமே தேசம்

தீப்பற்றி யெரியாமல் இருக்கிறது”

நன்றி

ச.தமிழ்ச்செல்வன்

புதிய புத்தகம் பேசுது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *