நிழலுருக்கள்

இரவையாளும் பூதங்களுக்குச் சிறாரை மகிழ்விக்கத் தெரியாது. ஆனால், செயற்கைப் பூதங்களுக்கு நன்றாகவே தெரியும். 

அவளுக்கு அம்மா இல்லை. அக்கம் பக்க வீடுகளில் அவளுக்குத் தோழிகளும் இல்லை. அதனால் அவளுக்குத் தன் அப்பாதான் அம்மாவும் தோழியர்களும். தன் மகள் அதிதியோடு மூன்று வேடத்திலும் வாழ்ந்து கொண்டிருந்தார் சரண். அதற்கு ஏற்ப வழிவகை செய்துகொடுத்துவிட்டது கொரோனா காலத்துக்குப் பின்னான இந்த ‘ஒர்க் ஃபிரெம் ஹோம்’ பணி வாய்ப்பு. அதிதியைப் பள்ளிக்கு அனுப்பும் வரைதான் சரணுக்கு எல்லா வகையான பரபரப்பும் இருக்கும். அதன் பின் கணினி வழியாக எளிய பணிச்சூழல்தான். மீண்டும் அதிதி வீட்டுக்கு வந்தது முதல், இரவு அவள் தூங்கும் வரை சரண் பரபரப்பாகத்தான் இருப்பார். 

இரவு உணவுக்குப் பிறகு அதிதி அதீத மகிழ்ச்சியில் கூடுதலான துள்ளலோடு இருப்பாள். அவளுக்கு அலைபேசி, இணைய விளையாட்டு போன்ற திரைபார்த்தல் தொடர்பான எந்த விளையாட்டையும் சரண் பழக்கப்படுத்தவே இல்லை. அதனால் அதிதியின் விளையாட்டு என்பது ஓடுவதும் ஆடுவதும்தான். கால் ஓய்ந்தால் எதையாவது படிப்பாள், புதுமைகளைக் கண்டறிந்து அவற்றோடு இணைந்து விளையாடுவாள். 

அவளது புதுமைக் கண்டுபிடிப்புகளுள் ஒன்றுதான் இந்த நிழற்பூதங்கள். முதலில் இப்பூதங்கள் அவளது நிழலிலிருந்தே தோன்றின. பின்னர் சரணின் நிழலிலிருந்து அவற்றை அவள் கண்டுபிடித்தாள். பின்னாளில்தான் பெரும் பொருட்களிலிருந்தும் சிறு விலங்குகளிலிருந்தும் பறவைகளிலிருந்தும் கண்டுபிடிக்கத் தொடங்கினாள். அந்தப் பூதங்களுக்குத் தனித்தனியே அவள் பெயரிட்டிருந்தாலும் ஒட்டுமொத்தமாகவே அந்தப் பூதங்களை அவள் மூன்றாகப் பகுத்துப் பொதுப் பெயருமிட்டிருந்தாள். நிற்கும் பூதங்கள், நகரும் பூதங்கள் மற்றும் பறக்கும் பூதங்கள். இவற்றுக்கு அவள் காரணப்பெயர்களையும் இட்டிருந்தாள். நிற்கும் பூதங்களைத் தூங்கும் பூதங்கள் என்றும், நகரும் பூதங்களை அலையும் பூதங்கள் என்றும், பறக்கும் பூதங்களைப் பாயும் பூதங்கள் என்றும் குறிப்பிடத் தொடங்கினாள். வானில் பறக்கும் பறவையின் நிழல் தரையில் இழுபடுவதால் அவை பாயும் பூதங்கள். அசையும் எந்தப் பொருட்களின் நிழலும் அவளுக்கு அசையும் பூதம்தான். அசையாப் பொருட்களின் நிழல்கள் அனைத்தும் அவளுக்குத் தூங்கும் பூதங்களே!.

‘பூதம் என்ற சொல் தன் மகளுக்கு அச்சத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகத்தான் சரண் அவற்றையெல்லாம் தன்னுடைய நண்பர்கள் என்றும் உறவினர்கள் என்றும் அவளுக்குக் கூறியிருந்தார். உண்மையிலேயே சரணுக்கு எந்த உறவினர்களும் நண்பர்களும் இல்லைதான். தன் அப்பாவுக்குப் பூதங்கள் அனைத்தும் உறவுக்காரர்கள், நண்பர்கள் என்பதால்தான் அவர் இரவில் அவற்றை வரவழைத்துத் தனக்கு விளையாட்டுக் காட்டுகிறார் என்று அதிதி நம்பத் தொடங்கினாள். அந்த நம்பிக்கையின் விளைவாக அவள் சற்றுப் பெரிய பூதங்களைப் பெரியப்பா என்றும் சிறிய பூதங்களைச் சித்தப்பா என்றும் அழைத்து மகிழ்ந்தாள். 

ஒவ்வொரு நாளும் அதிதியின் இரவு விளையாட்டுகளுள் ஒன்றாக இந்தப் ‘பூதங்காணும்’ விளையாட்டும் இணைந்து கொண்டது. இதற்காகவே சரண் சில மெழுகுவர்த்திகளை வாங்கி வாங்கி வீட்டில் அவற்றின் இருப்புக் குறையாமல் பார்த்துக்கொண்டார். ஒரு நாள் சமையல் அறை என்றால் மறுநாள் வராந்தா. பிறிதொருநாள் படிப்பறை, அதற்கு அடுத்த நாள் படுக்கும் அறையென அவர்களின் நிழல் விளையாட்டுக்களம் மாறிக்கொண்டே இருந்தது. 

அதிதி இந்தப் பூதங்காணும் விளையாட்டை விளையாடத் தொடங்கும் போது ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்துவாள். சரண் அந்த அறையின் மின்சார விளக்கை அணைத்துவிடுவார். இருவரும் சேர்ந்து அந்த மெழுகுவிளக்கொளியில் சுவர்களில் பல்வேறு நிழலுருக்களை எழச்செய்வர். அவற்றுக்குப் புதுமையாகப் பெயரிடுவர். அவற்றோடு கேலிபேசி உரையாடுவர். அரைமணிநேரத்திற்குள் அந்த மெழுகுவர்த்தி எரிந்து உருகி வழிந்து ஒளிகுன்றி மறையத் தொடங்கும் போது இவர்களின் இந்த பூதங்காணும் விளையாட்டு நிறைவடையும். அதிதி வேறு விளையாட்டுக்குச் சென்றுவிடுவாள். சரண் மின்சார விளக்கை எரியச் செய்துவிட்டு, அதிதியோடு இணைந்து விளையாடத் தொடங்கிவிடுவார். அவள் விளையாடி ஓயும்போதுதான் அவரால் தூங்குவதைப் பற்றியே நினைக்க முடியும். ஒவ்வொரு நாளும் நீளும் இந்த விளையாட்டுகளால்தான் அதிதி தன் அம்மாவைப் பற்றி நினைக்காமல் இருக்கிறாள். அவள் மட்டுமல்ல அவருந்தான். 

வழக்கம்போல இன்றும் அவர்கள் நிழலுரு விளையாட்டைத் தொடங்குவதற்கு முன்பே மின்தடை ஏற்பட்டு வீடு முழுக்க இருள் சூழ்ந்துவிட்டது. அதனால், ஆளுக்கொரு மெழுகுவர்த்தியை ஏற்றி வீடு முழுக்கச் சுற்றி சுற்றி வந்து நிழலுருக்களை எழச்செய்தனர். சில பெரியப்பாக்கள் உத்திரம் வரை நீண்டு வளர்ந்தன. சில சித்தப்பாக்களால் தரையிலிருந்து எழக்கூட முடியவில்லை. நடுத்தர உயரமுடைய நிழல்கள் வீட்டுப் பொருட்களின் மீது படிந்து, படர்ந்து சுவரின் பாதி அளவு வரை உயர்ந்து எழுந்து நின்றன. அந்த நிழற்கூட்டங்களுக்குச் சரண் ‘ஒரே குடும்பத்தினர்’ என்று பெயரிட்டார். உடனே அதிதி, அதில் பருத்த நிழலை அப்பா என்றாள். ஒல்லியான நிழலை அம்மா என்றாள். ஒரே அளவுள்ள  இருவேறு நிழல்களைச் சகோதரர்கள் என்றும் சகோதரிகள் என்றும் உறவுமுறைச் சாற்றினாள். 

பின்னர், ஒவ்வொருவருக்கும் ஒரு பெயரெனத் தானே சிந்தித்து சிந்தித்து வைத்தாள். அப்பா மாலிக் ஆனார். அம்மா அபிராமியானார். சகோதரர்கள் ராமன்-லக்ஷ்மணர்களாயினர். சகோதரிகள் பாத்திமா, எஸ்தர், மேரி, பானு, சுசித்ரா எனப் பெயரை ஏற்றனர். ஒட்டுமொத்தத்தில் அந்த ‘ஒரே குடும்ப நிழல்கள்’ மதச்சார்பற்ற குடும்பமாக மாறிவிட்டது. 

இந்தக் குடும்பத்தை மையப்படுத்திச் சரண் ஒரு கதையைக் கூறத் தொடங்கினார். அதிதி அந்தக் கதையின் இடையிடையே கேள்வி கேட்டும் பதில் கூறியும் ‘உம்’ கொட்டியும் அந்தக் கதையினை ரசிக்கத் தொடங்கினாள்.

“அதிதி! இந்தக் குடும்பம் எங்க வாழுதுன்னு உனக்குத் தெரியுமா?”

“தெரியாது”.

“சமத்துவபுரத்துல.”

“உம்”

“இந்தக் குடும்பத்துக்கு என்ன பேருன்னு உனக்குத் தெரியுமா?”

“தெரியாதே!”

“மாலிக்பாய் குடும்பம்.”

“ஓ!”

“இவுங்க அன்பா, அரவணைப்பா, ஒற்றுமையா, ஒழுக்கமா வாழுற குடும்பம். ஒருநாள் என்னாச்சுன்னு தெரியுமா?”

“என்னாச்சு?”

“மாலிக்பாயிக்கு உடம்பு சரியில்லை. அபிராமியும் குழந்தைகளும் சேர்ந்து மாலிக்பாயை நல்லாப் பாத்துக்கிட்டாங்க. ஆனாலும் மாலிக்பாயின் உடம்பு சரியே ஆகல. அவரோட உடல் நிலை ரொம்ப கவலைக்கிடமாகிடுச்சு. அப்போ அபிராமி என்ன பண்ணுனாங்கணு தெரியுமா?”

“என்ன பண்ணுனாங்க?”

“தன்னோட பிள்ளைகளை எல்லாரையும் கூப்பிட்டு உட்கார வச்சு, ‘உங்க அப்பா பிழைக்குறது கஷ்டம்போல. ஆனா, நீங்க அவரை நெனைச்சு வருத்தப்படாம, அவரு இல்லாமலேயே நீங்க எல்லாம் தைரியமா வாழப்பழகணும். மரணம் இயற்கைதான். அதைப் பார்த்துப் பயப்படாம வாழப் பழகணும். நல்லாப் படிக்கணும். ஒழுக்கமா வாழனும். நெறைய பணம் சம்பாதிச்சு கஷ்டப்படுறவுங்களுக்கு உதவனும். புரியுதா?’ன்ணு கேட்டாங்க. பிள்ளைகளும் சரின்னுட்டாங்க.”

“ஓ!”

“மறுநாளும் அபிராபி தன்னோட பிள்ளைகளைக் கூப்பிட்டு அறிவுரை சொல்லத் தொடங்கினாங்க. ‘நல்லாக் கேட்டுங்குங்க! உங்க அப்பா இல்லாட்டாலோ, நான் இல்லாட்டாலோ உங்க கூடப் பொறந்த சகோதர, சகோதரிகள் இல்லாட்டாலுங்கூட நீங்க தைரியமா வாழணும். அப்படிப்பட்ட தைரியத்தாலத்தான் நம்மலாள மரணத்தை ஜெயிக்க முடியும். மரணம் நம்மளோட ரத்த உறவுகளை, நட்புறவுகள சாகடிச்சு நம்மள கோழையாக்கி அழவச்சிடும். நாம அழுதா அது ஜெயிச்சிடும். நாம விடக் கூடாது. நாம மரணத்தை ஜெயிக்க விடவே கூடாது. தைரியமா அழாம இருக்கணும். நாமதான் மரணத்தை ஜெயிக்கணும். புரியுதா?’ யின்னு கேட்டாங்க. பிள்ளைகளும் ‘புரியுதும்மா. நாங்க தைரியமா இருப்போம்’னு சொன்னாங்க. ஒருவாரம் கழிச்சு அந்த வீட்டுல அழுகைச் சப்தம் கேட்டது.”

“ஓ! மாலிக்பாய் செத்துப் போயிட்டாரா?”

“இல்ல. அபிராமி செத்துப் போயிட்டாங்க. ஒரு வாரத்துல மாலிக்பாய் உடல் நலமாகி உயிர்ப்பிழைச்சுட்டார். பிள்ளைகள் எல்லாம் அம்மாவைப் பத்தி வருத்தப்படாம அவுங்க சொல்லிக்கொடுத்த அறிவுரைப்படியே நல்லா வாழத் தொடங்கிட்டாங்க.”

அதிதி அமைதியாக இருந்தாள். அவள் கண்களில் கண்ணீர்த்துளிகள் துளிர்க்கத் தொடங்கின. 

அவள் கனத்த குரலில், “அபிராமி எப்படிச் செத்தாங்க?” என்று கேட்டாள்.

“அதிதி! மரணம் எப்படி, எப்போ வரும்ணு யாருக்குமே தெரியாது. மூச்சு இருக்குற வரைக்குந்தான் வாழ்க்கை. புரியுதா?” 

“சரி, அம்மா எப்படிச் செத்தாங்க?“

“அதா, இப்போ சொன்னேன்ல அதிதி?”

“இல்ல பா. ‘என்னோட அம்மா எப்படிச் செத்தாங்க?’னு கேட்டேன்.”

சரண் பதில் கூறவில்லை. இருவரும் அமைதியாக இருந்தனர். இருவர் கையிலிருந்த மெழுகுவர்த்தியும் உருகி உருகி அணைந்துவிடும் நிலைக்கு வந்துவிட்டதால், அவர்கள் அவற்றை மேஜையின் மீது வைத்துவிட்டனர். 

அதிதி மெல்லிய குரலில், “அப்பா! சொல்லுங்கப்பா, அம்மா எப்படிச் செத்தாங்க?” என்று கேட்டாள்.

மேஜையின் மீது தள்ளாடி தள்ளாடி எரிந்துகொண்டிருந்த இரண்டு மெழுகுவர்த்திகளுள் ஒன்று முற்றிலுமாக அணைந்துவிட்டது. சரண் பதிலேதும் கூறாமல் அமைதியாக இருந்தார். 

“அப்பா! சொல்லுங்கப்பா, என்னோட அம்மா எப்படிச் செத்தாங்க?” என்று கேட்டாள்.

மற்றொரு மெழுகுவர்த்தியும் அணைந்தது. வீடு முற்றிலும் இருளால் சூழப்பட்டுவிட்டது. சரண் எந்தப் பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தார்.

அதிதி ஏக்கம் மிகுந்த குரலில், “ஏம்பா பேசாம இருக்கீங்க? உங்களுக்குக் கஷ்டமா இருக்கா? நீங்க அழுவுறீங்களா?” என்று கேட்டுக்கொண்டே, இருட்டில் தன் கைகளை மெல்ல நீட்டி, தன் அப்பாவின் முகத்தைத் தேடி, அதனைத் தொட்டு, தன் பிஞ்சு விரல்களால் அவரின் கன்னங்களை வருடி, அவரின் கண்ணிமைகளைத் தொட்டும் தொடாமலும் தொட்டு, கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்கும்போது மின்சாரம் வந்துவிட்டது.

– – –

                

        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *