பாப்பா மெளனமாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தது.
“என்னடா செல்லம்?”
தலையசைத்தது.
“அப்பா..”
“என்னடா?”
“நான் இன்னும் கொஞ்சம் வேகமா ஓடிருக்கலாம்லே..”
“வேகமாகத்தான்டா ஓடினே…கீழே விழுந்திட்டில்ல.. அதான்.. முட்டி வலிக்குதாடா பாப்பா?”
“இல்லேப்பா.”
கண்ணோரம் நீர் திரண்டு இருந்தது.
“சரி.. விடு. அதான் ஃபோர்த் ப்ளேஸ் வந்திட்டியே.”
“ஃபஸ்ட்.. வரலையேப்பா.. நல்ல வேளை அம்மா வரலைப்பா.”
“தம்பிக்கு நேத்து தடுப்பு ஊசி போட்டோம்ல . கொஞ்சம் காய்ச்சல் அடிக்குது. அதான் அம்மா வரல..ஏன்டா?”
“ஒழுங்கா படிக்கத்தான் முடில.. ஒழுங்கா ஓடக்கூட முடியாதான்னு திட்டுவாங்கப்பா.”
குழந்தையைப் பார்க்க சங்கடமாக இருந்தது.
பார்வையைத் திருப்பி ரோட்டில் கவனம் செலுத்தினான்.
“அப்பா.. ஃபஸ்ட் பிரைஸ் மூணு கலர் பால்.. செகண்ட் பிரைஸ் ரெண்டு கலர் பால். தேர்ட் பிரைஸ் ஒரு கலர் பால். எல்லாம் பியூட்டிஃபுல்லா இருந்துச்சுப்பா.”
“உனக்கும் தான் கொடுத்தாங்களே பாப்பா.”
திரும்பி பின் சீட்டைப் பார்த்து விட்டு பாப்பா சொன்னது.
“வெறும் செடி குடுத்துருக்காங்கப்பா.”
“செடின்னா என்னடா?”
“எனக்குப் பிடிக்கலப்பா.”
இடுப்பில் குழந்தையுடன் கயல் நின்று கொண்டிருந்தாள்.
“என்னாச்சு?”
பாப்பா தலை குனிந்திருந்தது.
முகவாய் தொட்டு நிமிர்த்தினாள்.
பாப்பா கன்னங்களில் நீர் ஒழுகிக் கொண்டிருந்தது.
“செல்லம்.. ஏன் அழறே?”
கயல் பாப்பாவை இடுப்போடு சேர்த்துக் கட்டிக் கொண்டாள்.
தம்பி எக்கி அவள் தலையைத் தொட்டான்.
“ஃபோர்த் பிளேஸ்மா. கீழே விழுந்திட்டேன்.”
கயல் பதறினாள். “எங்க அடிபட்டுச்சு?.”
பாப்பா ஃப்ராக்கைத் தூக்கிக் காண்பித்தது.
முட்டியில் சின்னக் கீறல்களுடன் லேசாக ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
டிரஸ் மாற்றிவிட்டு காயம் துடைத்து மருந்திட்டாள்.
இவன் அந்தச் செடியை மண்குவளையோடு எடுத்து வந்தான்.
“ஹை..என்னது இது?”
கயல் கேட்டாள்.
“பாப்பாக்கு ஸ்கூல்ல கொடுத்தாங்க.”
“சூப்பர்.. சூப்பர்.”
“போங்கம்மா.. சூப்பர்லாம் இல்ல.”
“சரி.. கயல்.. பாப்பாக்கு ஏதாச்சும் குடிக்க ரெடி பண்ணு.”
தலையசைத்தாள்.
“பாப்பா.. வா.. ”
“எங்கேப்பா?”
விரல் பற்றி அழைத்து சென்றான்.
கொல்லை வாசலுக்கும் கிச்சனுக்கும் இடையே இருந்த நடைபாதையில் அந்த மூட்டை இருந்தது. இழுத்துப் பிரித்துக் கவிழ்த்துக் கொட்டினான். நிறம் மங்கிய பந்துகள். காற்று போன பந்துகள். உடைந்த பந்துகள். கிழிந்த பந்துகள்.
பாப்பா கண்கள் விரியப் பார்த்துக் கொண்டிருந்தது.
“இதெல்லாம் உனக்கு வந்த கிஃப்ட் பாப்பா. ரெண்டு, மூணு வருஷம் இருக்கும்ல.”
தலையசைத்தது.
திரும்ப எல்லாவற்றையும் அள்ளிப் போட்டு மூட்டையாக்கினான்.
கொல்லைப்பக்கம் இருவரும் சென்றார்கள்.
கிணற்றுக்கு குடை பிடித்தது போல் அந்த மாமரம் முரட்டுப்பச்சை இலைகளும், மஞ்சள் கலந்த பச்சை நிறத் தளிர்களுமாய் நின்று கொண்டிருந்தது. பச்சையும், சிகப்புமாய் கனிகள் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன.
“இது என்ன மரம் பாப்பா?”
“மாங்கோ ட்ரீ.”
“இது யார் வச்சது?”
“நம்ப தாத்தாப்பா. நீங்க சின்ன புள்ளையா இருக்கறப்ப வச்சது. மாங்கோ ரொம்ப ஸ்வீட்டா இருக்கும்பா.”
“ஸ்கூல்ல உனக்கு கொடுத்தாங்களே அது என்ன செடி தெரியுமா?”
தலையை இடது, வலமாக ஆட்டியது.
“கொய்யாச் செடி.”
“ஹை. வச்சா அதுவும் பழம் தருமா?”
“நீ வச்சா நிச்சயமாத் தரும்.”
“இப்ப சொல்லு பாப்பா. எது பெஸ்ட் பிரைஸ்? கலர் கலர் பாலா? அந்தச் செடியா?”
பாப்பா ஒற்றை நொடி யோசித்து வேகமாக உள்ளேப் போனது.
மார்போடு அந்தச் செடியை அணைத்து எடுத்து வந்தது. அதன் சட்டையில் ஈரமண் ஒட்டியிருந்தது.
குனிந்து செடியின் உச்சியிலிருந்த இலைக்கு முத்தமிட்டு பின் சொன்னது.
“குனிங்கப்பா.”
கன்னத்தில் பூவருடல் போல் பாப்பா முத்தமிட்டது.
கொய்யாக்கனியின் இனிப்பு முத்தம்.
*******************
சிறப்பான கதை