‘வந்தகாளிகோவில்’ பூசாரி சடையாண்டி வகையறாவில் யாருக்குமே ஆண் வாரிசு இல்லை. சின்னச்சடையாண்டிக்கு இரண்டு பெண்குழந்தைகள். அவரின் ஐந்து அண்ணன்மார்களுக்கும் இரண்டு அல்லது மூன்று எனப் பெண்குழந்தைகளே பிறந்தன. அதனால், சின்னச்சடையாண்டிக்கு அடுத்து, ‘வந்தகாளி’க்குப் பூசை செய்ய ஆண் வாரிசு என யாரும் இல்லை. 

கோவில் பூசைக்கட்டளை தன்னுடைய வகையறாவைவிட்டுக் கைமாறிவிடுமோ?’ என்ற அச்சத்தில், பெரிய சடையாண்டி தன் இளைய தம்பி சின்னச் சடையாண்டியை அழைத்து, வந்தகாளி கோவிலுக்கு முன்னால் நிற்க வைத்துப் பேசத் தொடங்கினார்.

“சின்னா! இனி எங்களால பிள்ளைய பெத்துக்க முடியாது. நீதான் இளையவன். எப்படியாச்சும் ஆண்பிள்ளையைப் பெத்துக்கோ. இல்லையின்னா இந்தக் கோவில் பூசைக்கட்டளை நம்ம வகையறாக்கள்கிட்ட இருக்காது. இது இன்னைக்கு நேத்து வந்ததா? எட்டுத் தலைமுறையாயிடுச்சு. இந்த வம்சாவளி நம்மளால கைவிட்டுப்போயிடக் கூடாது. புரியுதா?” என்றார். 

சின்னச்சடையாண்டி, ‘சரி’ என்பதுபோலத் தலையை ஆட்டினான்.  

பெரிய சடையாண்டி, சின்னச்சடையாண்டியை அழைத்துச் சென்று வந்தகாளியின் பாதத்தின்  அடியில் அமர வைத்து, சத்தியம் செய்யச் சொன்னார். வேறு வழியின்றிச் சின்னச்சடையாண்டி சத்தியம் செய்துகொடுத்தான். பெரிய சடையாண்டி வந்தகாளியை வணங்கிவிட்டு, புறப்பட்டார். சின்னச்சடையாண்டி அங்கேயே வெகுநேரம் அமர்ந்திருந்தார். 

இப்போது அவருக்குப் பெரிய மனக்கவலை ஏற்பட்டுவிட்டது. அவர் மாஞ்சோலையைக் காதலித்தபோது, மனம் மகிழ்ந்திருந்தான். அந்தக் காதல் திருமணம் வரை வளரத் தொடங்கியதும் பெரிய சிக்கல் வந்தது. அதைத் தீர்ப்பதற்காக அவன் ஒரு சத்தியத்தைச் செய்துதர வேண்டியிருந்தது.   

“எம்பிள்ளைகள் எதுவும் பூசாரி வேலைக்குப் போகக் கூடாது” என்று  கூறிச் சத்தியம் வாங்கிய பின்னர்தான் மாஞ்சோலை சின்னச்சடையாண்டியைத் திருமணம் செய்தார். இந்தச் சத்தியதைப் பற்றி அவன் தன் அண்ணன்மார்களிடம் கூறவே இல்லை.

முதற்குழந்தை பெண்ணாய்ப் பிறந்ததால் எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை. மாஞ்சோலை மகிழ்ச்சியாக இருந்தாள். 

பெரிய சடையாண்டி தன் தம்பியிடம், “அடுத்த பிள்ளைய ஆணாப் பெத்துடுடா” என்றார்.

“சரிங்கண்ணே!” என்றான் சின்னச்சடையாண்டி.  

அதை அவன் மாஞ்சோலையிடம் கூறியபோது, அவள் அவனிடம் தான் வாங்கிக்கொண்ட சத்தியத்தைத்தான் மீண்டும் நினைவுபடுத்தினாள். 

“எத்தனை பிள்ளைவேணும்னாலும் பெத்துக்குடுக்குறேன். ஆணா, பெண்ணோ எதுவானாலும். ஆனா, என்னோடப் பிள்ளைக யாரும் பூசாரிவேலைக்குப் போகக் கூடாது” என்றாள். இரண்டாவது குழந்தையும் பெண்குழந்தைதான். சிக்கலே இல்லை. 

ஆனால், இப்போது தன் மூத்தஅண்ணன் ‘வந்தகாளி’ கோவிலில் தன்னிடம் சத்தியம் வாங்கிக்கொண்டதால்தான் வேறுவழியின்றி அவன் ‘வந்தகாளி’யிடம் ‘தனக்கு ஆண்குழந்தை வேண்டும்’ என்று கேட்டு, அழுதான். அப்போது அவன் மனதுக்குள் ஒன்று தோன்றியது. ‘அது தானாகத் தோன்றியதா? அல்லது ‘வந்தகாளி’தான் அவ்வாறு தோன்றச் செய்தாரா?’ என்பது அவனுக்குத் தெரியாது. 

‘பிறக்கும் ஆண்குழந்தை மிகுந்த கடவுள் பக்தியுடைய, தெய்வங்களை மட்டுமே பார்க்கக்கூடிய ஞானக்குழந்தையாக இருந்தால், அந்தக் குழந்தை வளர்ந்த பின்னர், அது தானாகவே தெய்வத்துக்குப் பூசை செய்யத் தொடங்கிவிடும். அதை அப்போது யாராலும் தடுக்க முடியாதே!’ என்று அவனுக்குள் தோன்றியது. 

உடனே, ‘வந்தகாளி’யை வணங்கிவிட்டு, எழுந்தான். அவன் மனத்தில் தெளிவு பிறந்துவிட்டது. அன்று முதல் மூன்று மாதங்கள் காளியின் முன்னால் அமர்ந்து நெடுநேரம் கண்களை மூடிக்கொண்டிருந்தான். இரவில் மட்டுமே வீட்டுக்குச் சென்று வந்தான். அடுத்த மூன்று மாதங்கள் இரவில் இவ்வாறுதான் இருந்தான். அப்போது பகலில் மட்டும் வீட்டுக்குச் சென்றுவந்தான். 

சின்னச்சடையாண்டியின் அண்ணன்மார்கள் அவனிடம் பலமுறை வலியுறுத்திக்கேட்டும், ‘தன்னுடைய வேண்டுதல் என்ன’ என்பதை அவன் கூறவே இல்லை. மாஞ்சோலையும் கேட்டுப் பார்த்தாள். சின்னச்சடையாண்டி ஏதும் கூறவில்லை. அடுத்த ஒருமாதம் இரவும் பகலும் ‘வந்தகாளி’யின் முன்பாகக் கண்களை மூடி அமர்ந்திருந்தான் சின்னச்சடையாண்டி.

“நம்ப சின்னான், ஆம்பிள்ளைப் பிள்ளைக்காகத்தான் ‘வந்தகாளி’க்கிட்ட வேண்டுதல் வச்சிருக்காண்டா” என்று பெரிய சடையாண்டி தன் தம்பியர் மூவரிடமும் கூறிக்கொண்டேயிருந்தார்.  

ஏழுமாதங்களுக்குப் பின்னர் சின்னச்சடையாண்டி ‘வந்தகாளி’யை வணங்குவதை நிறுத்தினான். தன் வீட்டிலேயே அடைந்துகிடந்தான். ‘வந்தகாளி’கோவிலிலிருந்து அவனுக்கென வரும் வகையறா வருமானப் பங்குப் பணமும் பொருளும் அவனுடைய குடும்பத்துக்குப் போதுமானதாக இருந்தன. 

மாஞ்சோலை மீண்டும் கர்ப்பமானாள். பெரிய சடையாண்டிக்குக் கொண்டாட்டமாக இருந்தது. தன் தம்பியின் வேண்டுதலை எப்படியும் நிச்சயமாக ‘வந்தகாளி’ நிறைவேற்றுவாள் என்று முழுமையாக நம்பினார் அவர். 

அவர், ‘வந்தகாளி’க்குச் சிறப்புப் பூசைகள் பலவற்றைத் தம் செலவில் நடத்தினார். ஆனால், சின்னச்சடையாண்டி ஒருமுறைகூட ‘வந்தகாளி’ கோவிலுக்கு வரவில்லை. அவளின் உள்மனத்துக்குள் தெரிந்துவிட்டது. தனக்குப் பிறக்கப்போவது ஆண்குழந்தைதான் என்று. அதனால் அவளும் ‘வந்தகாளி’ கோவிலுக்குச் செல்லவில்லை.

சின்னச்சடையாண்டி பித்துப் பிடித்தவன்போல ‘வந்தகாளி’யையே நினைத்துக் கொண்டிருந்தான். அவனுக்குத் தேவை ஓர் ஆண் குழந்தை. அதுவும்   தெய்வத்தை மட்டுமே காணக்கூடிய ‘ஞானக்குழந்தை’. அதற்காகவே அவன் ஏங்கிக் கொண்டிருந்தான். 

சிறுவயதில் சின்னச்சடையாண்டியை மடியில் இருத்திக்கொண்டு, அம்மா மங்களம்மாள் ‘வந்தகாளி’ இந்த ஊருக்கு வந்த பழங்கதையைப் பலமுறை கூறியிருக்கிறாள். அந்தக் கதையைச் சின்னச்சடையாண்டி தன் இரு மகள்களுக்கும் கூறியிருக்கிறான்.

ஊரைச் சுற்றி ஓடும் ஆறு, வெள்ளத்தால் பொங்கிச் சுழித்தோடியது. ஒரு வாரம் வெள்ளக்காடாக இருந்தது ஊர். வெள்ளம் வடியத்தொடங்கிய ஏழாம் நாளில் ஆற்றங்கரையில் ஆங்காங்கே தெய்வச்சிலையின் உறுப்புகள் துண்டு துண்டாகக் கண்டெடுக்கப்பட்டன. 

‘இது எந்த ஊர்த் தெய்வம்? என்ன தெய்வம்?’’ என்றெல்லாம் யாராலும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அத்தனைத் துண்டுகளையும் பொறுக்கியெடுத்து வந்து ஊர்மந்தையில் குவித்து வைத்தனர். 

சடையாண்டி வகையறாவின் மூத்தவரும் கைவினைக் கலைஞருமான கார்கோடன் ஊரார் முன்னிலையில்,  “இது உடைக்கப்பட்ட தெய்வத்தின் உறுப்புகள். ஒட்ட வச்சு உருவாக்குனா தெய்வம் மீண்டும் வந்திறங்கும். ஊரார் ஒத்துழைச்சா, இந்தத் தெய்வத்தை நான் உருவாக்கிக் காட்டுறேன்” என்றார். 

ஊரார்க் கூடிப் பேசினர். ‘மழைவெள்ளம் வந்து ஊரைப் பாதியழிச்சுடுச்சு. மிஞ்சினது உடைந்த சிலைத் துண்டுகள்தான். இதைச் சாமியாக்குவோம். இந்தச் சாமி நம்ம ஊரைக்காப்பாத்தட்டும்’ என்றுதான் முடிவெடுக்கப்பட்டது. ‘தலைக்கட்டு’க்கு இவ்வளவு என வரி விதிக்கப்பட்டது. 

கார்கோடன் சிலைத் துண்டுகளில் இருந்த கைகளின் எண்ணிக்கையையும் அவற்றில் இருந்த ஆயுதங்களையும் பொருட்களையும் பார்த்து, இது, “காளிதேவி” என்று ஊரார்முன் அறிவித்தார்.  

வரியாகத் திரட்டப்பட்டவை தொகையாகவும் பொருளாகவும்  ஊர்மந்தையில் காட்டப்பட்டு, கார்கோடனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒருமாத காலத்தில் துண்டுகளை ஒட்டவைத்து, ‘காளி’யை ஊர் மந்தையில் நிறுத்தினார். 

காளியை உரிய முறையில் ஊர் எல்லையில் நிறுத்தவும், நாள்தோறும் ஐந்துகால பூசை செய்யவும் வெளியூரிலிருந்து பூசாரிகளை வரவைக்க ஊரார் விரும்பினர். 

உடைந்த சிலைக்கு, ஒட்ட வைத்த சிலைக்கும் பூசைசெய்ய  முடியாது என்று வெளியூர்ப் பூசாரிகள் மறுத்துவிட்டனர். ‘ஒட்ட வைத்த சிலையை வணங்கலாம்’ என்று கார்கோடன் அவர்களுக்கு எவ்வளவு சொல்லியும், அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 

இறுதியாக ஊரார்க் கூடிப்பேசி, சிலையைக் கார்கோடனிடமே ஒப்படைத்தனர். அவரே, ‘காளிக்குப் பூசைசெய்யட்டும்’ என்று முடிவெடுத்தனர்.  மீண்டும் தலைக்கட்டுக்கு இவ்வளவு என வரிவிதித்தும் காளிக்கு என விவசாய நிலத்தை ஒதுக்கியும் கார்கோடனின் ஆண்டு வருமானத்திற்கு வழிவகுத்தனர்.

ஊர் எல்லையில் காளியை நிறுவிய பின்னர். காளிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று நினைத்த ஊராருக்கு ஒருமித்த கருத்தாகத் தோன்றியது ஒரேயொரு பெயர்தான். ‘இந்தக் காளி நம்ம ஊருக்குத் துண்டு துண்டாக வந்த காளி. அதனால், இது ‘வந்தகாளி’ என்று அனைவரின் மனமும் ஒத்துக்கொண்டது. 

அன்று முதல் இன்றுவரை கார்கோடனின் வகையறாக்கள்தான் ‘வந்தகாளி’க்குப் பூசைசெய்து வருகின்றனர். இது எட்டாந் தலைமுறை. சின்னச்சடையாண்டிக்கு ஆண்குழந்தை பிறந்துவிட்டால், இவர்களின் வகையறாக்களின் வழியாகவே ‘வந்தகாளி’க்குப் பூசைகள் தொடரும்.  

மாஞ்சோலைக்கு ஆண்குழந்தை பிறந்துவிட்டது. பெரியசடையாண்டிக்குத் தலையில் இடிவிழுந்ததுபோல இருந்தது. ஆம்! சின்னச்சடையாண்டியின் மகனுக்குப் பார்வையில்லை. இமைகள் இரண்டும் திறக்கவே இல்லை. 

சின்னச்சடையாண்டி மனதுக்குள் அழுதான். தன்னுடைய வேண்டுதலில் இருந்த தவறை உணர்ந்தான். ‘தெய்வங்களை மட்டுமே பார்க்கக்கூடிய ஞானக்குழந்தை’ என்ற தன்னுடைய வேண்டுதலின் ஒரு வரி மட்டும் அவனின்  மனச்சுவரில் முட்டி முட்டிச் சிதறியது.   

பெரியசடையாண்டி ‘வந்தகாளி’யிடம் சென்று கத்திக் கூப்பாடுபோட்டுச் சண்டையிட்டார். ‘இனி, நான் இந்தக் கோவிலுக்குள் நுழையப்போவதில்லை’ என்று சத்தியம் செய்துவிட்டு, வந்துவிட்டார். மறுநாள் முதல் அவரின் தம்பியர் மூவர்தான் மாறி மாறி பூசைகளைச் செய்யத் தொடங்கினர்.

மாஞ்சோலைக்குத் துக்கமாகத்தான் இருந்தது. ‘பார்வையற்ற இந்தக் குழந்தை இந்த உலகத்தில் எப்படி வாழப் போகிறது?’ என்று நினைத்து வருந்தினாள். இருந்தாலும், ‘தன் மகனை யாரும் பூசாரியாக்க முடியாதே!’ என்ற மகிழ்ச்சியும் உள்மனத்தில் இருக்கத்தான்செய்தது. 

ஒரு மாதம் கழித்து அவள் தன் மகனுக்குக் ‘காளிப்பிள்ளை’ என்று பெயர் வைத்தாள். அவள் தன் மகனைப் பெயர்ச் சொல்லி அழைக்கும்போதெல்லாம் சின்னச்சடையாண்டிக்கு மனசுக்குள் வலிக்கத்தான் செய்தது. அவள் தன் தவத்தைக் கேலிசெய்வதாகவே நினைத்தான்.  

‘காளிப்பிள்ளை’ வளரத் தொடங்கினான். அவனைத் தன் மடியில் வைத்தே வளர்த்தாள் மாஞ்சோலை. அவனாடு பேசுவதுதான் சின்னச்சடையாண்டியின் பொழுதுபோக்கு. ‘வந்தகாளி’கோவிலிலிருந்து அவனுக்கென வரும் வகையறா வருமானப் பங்குப் பணமும் பொருளும் சிறுக சிறுகக் குறையத் தொடங்கின. 

மூத்தவரும் இளையவனும் வந்தகாளி கோவிலுக்கு வருவதே இல்லை என்பதால், இடைப்பட்ட மூவரும் வகையறா வருமானப் பங்குகளைச் சமமாகப் பங்கிடுவதில் தயக்கம் காட்டினர். மாஞ்சோலை வேறு வழியின்றித் தன் கணவரை ‘வந்தகாளி’ கோவிலுக்கு அனுப்ப நினைத்தாள். 

சின்னச்சடையாண்டி மறுத்துவிட்டான். மாஞ்சோலை வேண்டி, விரும்பி, அழுது, புலம்பிய பின்னர் சின்னச்சடையாண்டி தன்னுடைய குடும்பவருவாய்க்காக ‘வந்தகாளி’ கோவிலுக்குச் செல்லச் சம்மதித்தான். ஆனால், அவன் அங்குச் சென்று கோவில் பணிகளை மட்டுமே செய்தான். ‘வந்தகாளி’க்குப் பூசை செய்யவே இல்லை. 

‘காளிப்பிள்ளை’ நடக்கத் தொடங்கினான். அவன் தன் அம்மாவின் சேலையைப் பிடித்துக்கொண்டே எல்லா இடங்களுக்கும் சுற்றி வந்தான். அவன் அம்மாவின் நிழல் போல அவன் உலாவிக்கொண்டிருந்தான். மாஞ்சோலை அவனை எக்காரணத்தைக் கொண்டு ஊர் எல்லைக்கு அழைத்துச் செல்லவே இல்லை. அவனை ‘வந்தகாளி’யின் முன்னால் நிறுத்தவே இல்லை.

ஒருநாள் உச்சிகால பூசை முடிந்தபின்னரும் சின்னச்சடையாண்டி வீட்டுக்கு வரவில்லை. மதியப் பொழுதில் அவன் காளிகோவிலின் முன்னால் மயங்கி விழுந்துகிடப்பதாகவும் அவன் காளிசிலையின் ‘அபயமுத்திரை’ காட்டிய கையை உடைத்துவிட்டதாகவும் செய்திவந்தது. 

மாஞ்சோலையும் அவளின் இரண்டு பெண்பிள்ளைகளும் ஊர் எல்லையை நோக்கி ஓடினர். ‘காளிப்பிள்ளை’ தட்டுத் தடுமாறி, மண்சாலையில் ஓடினான். 

தன் தம்பி காளிசிலையின் கையை உடைத்த செய்தியைக் கேட்டதும் பெரிய சடையாண்டி மெல்ல புன்னகைத்தார். தன்னிடம் செய்தியைச் சொன்னவரிடம், “அவன் வருத்தப்பட்டு இதைச் செஞ்சிருப்பான். கோபத்துல மயங்கியிருப்பான். முகத்துல தண்ணீர் தெளிச்சா சரியாயிடும்” என்றார்.

அவர் ‘வந்தகாளி’கோவிலுக்குச் செல்ல விரும்பவில்லை. தன்னுடைய தம்பியைப் பார்க்கவும் அவர் விரும்பவில்லை. அவர் தன் மனசுக்குள், ‘பின்னே! ஏழு மாசமா காளிகாலைப் பிடிச்சுக்கிட்டுக் கெஞ்சுனான். ஆம்புளப்பிள்ளையைக் கொடுத்த காளி, குழந்தையோட கண்ணையில்ல பறிச்சுட்டா. யாருக்கு நஷ்டம்?. காளிக்குத்தானே? இனி, எங்க வம்சாவளியில காளிக்குப் பூசை கிடைக்காதே! இதுதான் காளியோட விருப்பம்னா அதுவே நடக்கட்டும். அதுக்காகக் காளி எதைக் கொடுத்தாலும் அதை ஏத்துக்கிட்டு எந்தம்பி சும்மாவே இருப்பானு நினைச்சுட்டாளா காளி? அவன் காளி கையை ஒடிச்சது சரிதான்’ என்று பேசிக்கொண்டார்.  

‘காளிப்பிள்ளை’ தடுமாறி, திசையழிந்து ஓடுவதைத் தொலைவிலிருந்தே பார்த்துவிட்ட பெரிய சடையாண்டி வேகமாக எழுந்து, ஓடிச் சென்று அவனைத் தாங்கிப்பிடித்து நிறுத்தினார். அவன் பதறிக்கொண்டே, அப்பா விழுந்துட்டாராம். காளிகோவில்ல. நான் போகனும். நான் போகனும். என்னைய விடுங்க என்னைய விடுங்க” என்று துள்ளினான். 

“நான் உன்னையக் கூட்டிக்கிட்டுப்போறன்டா. வாடா” என்று கூறி, அவனைத் தன் தோள்மீது சாய்த்து, தூக்கிக்கொண்டு வேக வேகமாகக் காளிகோவிலை நோக்கி நடந்தார் பெரிய சடையாண்டி. 

அங்குக் கூட்டம் கூடியிருந்தது. சின்னச்சடையாண்டிக்கு மயக்கம் தெளிந்துவிட்டது. அவர் மண்தரையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார். உடைக்கப்பட்ட காளியின் ‘அபயமுத்திரை’ காட்டிய கரம் அவனுக்கு முன்னால் வானத்தைப் பார்த்தபடி கிடந்தது.

பெரியசடையாண்டி ‘வந்தகாளி’கோவிலை நெருங்கும் முன்பாகவே அவரின் தோளின் மீது சாய்ந்திருந்த ‘காளிப்பிள்ளை’ தலையைத் தூக்கினான்.  கோவிலுக்கு இடப்புறமாக இருந்த ஆற்றங்கரைப் பகுதியை நோக்கித் தன் தலைத் திருப்பினான். தன் இமைகளைத் திறந்தான். உரத்த குரலில் ‘காளி!’ என்றான். 

பெரியசடையாண்டி, திடுக்கிட்டார். ‘காளிப்பிள்ளை’யைத் தரையில் இறக்கினார். அவனிமைகள் திறந்து, விழிகள் காட்சிகளைக் கூர்ந்து பார்ப்பதைப் பார்த்தார். காளிப்பிள்ளைக்குப் பார்வை கிடைத்துவிட்டதால் அவர் ஆனந்தத்தில் துள்ளினார். காளிப்பிள்ளை ஆற்றங்கரையை நோக்கி ஓடிக்கொண்டே உரத்த குரலில் ‘காளி! காளி!’ என்று கத்தினான். பெரியசடையாண்டி அவனின் பின்னால் தள்ளாடி தள்ளாடி ஓடினார். 

ஆற்றங்கரை மணற்பரப்பில் ஓரிடத்தில் ‘காளிப்பிள்ளை’ நின்றான். தன் இரு கைகளையும் விரித்துக்கொண்டு, ‘காளி! காளி!’ என்றான். அவனுக்குப் பின்னால் பெரியசடையாண்டித் தன்னிரு கைகளையும் கூப்பியபடியே நின்றிருந்தார். ‘காளிப்பிள்ளை’ காளியைப் பார்த்துக் கதறி அழத்தொடங்கினான்.

பெரியசடையாண்டிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவன் பார்த்து அழும் காளியை அவரால் பார்க்க முடியவில்லை. ‘காளிப்பிள்ளை’க்கு முன்னால் ஆற்றுமணலையும் மிகக் குறைவாக நீர் ஓடும் ஆற்றையும்தான் அவரால் பார்க்க முடிந்தது. 

‘காளிப்பிள்ளை’ தன் பெரியப்பாவை நோக்கித் திரும்பினான். அப்போது அவனுடைய இமைகள் மூடியிருந்தன. பெரிய சடையாண்டிக்கு ஒன்றும் புரியவில்லை. இது ஏதோ அருள் விளையாட்டு என்றே நம்பினார். அவரின் உடல் முழுக்க மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன.

 காளிப்பிள்ளை பதற்றமான குரலில், உடல் நடுங்கியவாறே, “பெரிப்பா! காளி கையில ரத்தம் வருது. உடைஞ்ச கையைக் கொண்டு வாங்க. சீக்கிரம் போங்க” என்றான். 

பெரியசடையாண்டி சற்றுத் தயங்கினார். பின்னர், வேக வேகமாக நடந்து, ‘வந்தகாளி’கோவிலுக்குச் சென்றார். 

சின்னச்சடையாண்டி கோவிலின் வெளியே ஊன்றப்பட்ட சூலத்தைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தான். காளியின் உடைந்த கையை எடுத்து மாஞ்சோலை தன் மடியின் மீது வைத்திருந்தாள். இருவர் கண்களிலும் கண்ணீர்ப் பெருகி, வழிந்திருந்தது. 

பெரியசடையாண்டி மாஞ்சோலையின் மடியிலிருந்த காளியின் உடைந்த கையை எடுத்துக்கொண்டு, வேகமாக ஆற்றை நோக்கி ஓடினார். கோவிலின் முன்னால் கூடியிருந்த ஊரார், ‘அவர் காளியின் உடைந்த கையை ஆற்றில் வீசப் போகிறார்’ என்றுதான் நினைத்தனர். அவருக்குப் பின்னால் சடையாண்டி வகையறாவின் நால்வரும் ஓடினர். அவர்களுக்குப் பின்னால் மாஞ்சோலையும் அவளின் இரண்டு பெண்பிள்ளைகளும் ஓடினர். 

பெரியசடையாண்டி காளியின் உடைந்த கையைக் ‘காளிப்பிள்ளை’யிடம் கொடுத்தார். அப்போதும் காளிப்பிள்ளையின் இமைகள் மூடியிருந்தன. கண்களில் கண்ணீர்ப் பெருகி வழிந்துகொண்டிருந்தது. அவன் காளியை நோக்கி மெல்ல நடந்தான். 

பெரிய சடையாண்டி அவனுக்கு வலப்புறமாக அவனை முந்திக்கொண்டு நடந்தார். அவன் இமைகள் காளியை நோக்கியவாறு திறந்திருந்தன. உடனே, பெரிய சடையாண்டி தன்னிரு கைகளையும் குவித்து, ‘காளிப்பிள்ளை’யை வணங்கினார்.

 ஆற்றங்கரைக்கு வந்து நின்ற அனைவரும் காளிப்பிள்ளையின் முதுகைத்தான் பார்த்தனர். ஆனாலும், அவர்கள் அனைவரும் தம்மையறியாமலேயே தம்மிரு கைகளையும் கூப்பிக் ‘காளிப்பிள்ளை’யை வணங்கினர். ‘இவன்தான் இனி நமக்குப் பூசாரி. சின்னப் பூசாரி’ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

‘காளிப்பிள்ளை’ தனக்கு முன்பாக ஆற்றுமணலில் அமர்ந்திருந்த காளியிடம் அந்தக் கையை நீட்டினான். காளி அதை வாங்கித் தன்னில் பொருத்திக்கொண்டார். காளி மெல்ல மெல்ல எழுந்தார். காளிக்கு ஒவ்வொரு கையாக முளைக்கத் தொடங்கின. கைகள் முளைத்துக்கொண்டே இருந்தன. காளி எழுந்துகொண்டே இருந்தார். காளி முழுவதுமாக எழுந்து நன்றாக நிமிர்ந்து நின்றபோது, அவரின் கைகள் எண்ணமுடியாத அளவுக்கு இருந்தன. ஆம்! காளி ஆயிரம் கைக்கொண்டு எழுந்தருளினார். காளி சீற்றத்துடன் பின்னோக்கியே நடந்து, ஆற்றுக்குள் இறங்கத் தொடங்கியதும் ‘காளிப்பிள்ளை’யின் இமைகள் நிரந்தரமாகவே மூடிக்கொண்டன.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *