படித்து முடித்த பின்னர் பெங்களூரிலேயே வேலை கிடைத்து செட்டில் ஆகிவிட்டதால் பல வருடங்களுக்கு பிறகு இன்றுதான் அவனைக் காண்கிறேன். முன்பாவது பொங்கல், தீபாவளி என்று ஏதேனும் ஒரு பண்டிகைக்கு வருவேன். திருமணத்திற்கு பின் இந்த வருடத்தில்தான் தீபாவளிக்கென்று சொந்த ஊரில் இருக்கிறேன். அதுவும் மனைவியின் பெற்றோர்கள் தன்னுடைய மகன் குடும்பம் இருக்கும் அட்லாண்டா நகருக்கு செல்லவிருந்தார்கள். அதற்காக வேண்டிதான் எங்களின் இந்த திடீர் பயணமும் கூட.
மாமியார் வீட்டில் மனைவியையும், மகளையும் விட்டுவிட்டு எங்கள் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த போதுதான் அவனைப் பார்த்தேன். பொலிவிழந்து, நலமும் நலிந்தது போல் தோற்றமளித்தான். பதின்மங்களில் கண்டிருந்த அவனுடைய பால் முகமும், உடல் வாளிப்பும் துளி கூட என் கண்களுக்கு தென்படவில்லை; மாறாக அவனை ஆட்கொண்டிருந்தது நாற்பதை எட்டிய சோர்வோ, எதிர்காலத்தைப் பற்றிய ஆழ்யோசனைகளோ, குழப்பங்களோ, மிரட்சியோ அல்லது வேறு காரணங்களோ அவனது முகம் மேகம் திரண்ட வானம் போல் தனது ஒளியைத் தொலைத்திருந்தது.
இடிந்த அரண்மனையொன்றை கடக்கும் வேளைகளில் அறிந்தவர்கள் ஜமீன் வீடு என்று தன்னுணர்வு கொள்வார்களே அதுபோலதான் இருந்தது அவனையும் ஏறிட்டுப் பார்க்க. குளத்திற்குள் புதைந்து கனத்துப் போன துணித்தப்பும் கல்லை பெயர்த்து, கரைக்கு நகர்த்தி வந்தவனாய் என் சங்கடங்களை மீறி ‘பிரகாசு..!’ என்று நட்பாய் புன்னகைத்தேன்.
என்னைக் கண்டதும் அவனும் வலிந்து சிரிக்க முயன்றான். அர்ச்சகர் தட்டை நீட்டும்போது தீபத்தைத் தொட்டு கும்பிட கரங்கள் எழுவது வழக்கம்தானே? எல்லோரும் எப்படி இருக்கிறாய் என்றுதானேக் கேட்பார்கள்? நான் “ஏன் என்னவோ போல் இருக்கிறாய்?” என்றேன். ஆஸ்பத்திரிக்கு சென்று வருகிறேன்… பிரஷர், இருதயப் படபடப்பு, மனநோயாகவும் கூட இருக்கலாம் என… ஏதேதோ பட்டியலிட்டான். அவனைப் பார்க்கவும், அவன் நிலையைக் கேட்டறியவும் பரிதாபமாக இருந்தது.
“நீங்க எப்படி இருக்கீங்க?” என்ற கேள்வியில் சற்றுத் தடுமாறி எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் என் பகட்டான வாழ்வை மறைக்க முயன்று, தோற்று, “நல்லாருக்கேன்” என்றேன். நான் கொண்டுச் சென்றிருந்த சிவப்பு நிற ராயல் என்ஃபீல்ட் பைக்கின் மீது பார்வையை படரவிட்டபடி. அதிலிருந்து கவனத்தை திசை திருப்பியபோது திரை அணைந்திருந்த எனது ஸ்மார்ட் வாட்சில் அவன் உருவம் சிறியதாகி சரிந்திருந்தது.
பள்ளிக் காலங்களில் நண்பர்கள் யாரும் பார்க்காத நிலையில் அவனை எனது ஹெர்குலஸ் சைக்கிளில் ஓரிரு முறை ஏற்றியிருக்கிறேன். பிரகாசும் சிலரோடுதான் பேசுவான் என்பதை விட ஓரிருவர்தான் அவனுடன் நெருங்கிப் பழகி வந்தனர் என்பதுதான் உண்மை. பலர் அவனுடைய உடல்மொழியை வைத்து சீண்டிப் பார்ப்பதையே முழு நேர வேலையாகக் கொண்டிருந்தனர். அப்படியும் சிலர் அவனோடு தாமாக கனிந்து பேச முயன்றாலும் கிசுகிசு போல ஊர் நண்பர்கள் வட்டத்தில் சம்பந்தப்பட்டப் பெயர்கள் சில நாட்களுக்கு அடிபடும். நானும் கூட அவனிடம் ஒரு மனிதாபிமான முறையில் மட்டுமே பழகி வந்திருக்கிறேன் என்பது தனிப்பட்டமுறையில் அனுதாபத்திற்குரிய விஷயம்தான்!
“இப்ப எங்கே இருக்க?”
“ஊர்லதான் இருக்கேன் மணி. ஒரு இடத்துல இருந்து எங்கேயும் வேலை செய்ய முடியல!” என்றான் பாவமாக.
இரண்டு கைகளில் ஒன்றில் மெல்லிசான வெண்ணிற பையொன்றை பிடித்து நின்றான். மருந்து பொதியாக இருக்கலாம். மீசை, தாடியை ஒட்ட கத்தரித்திருந்தான். ஆங்காங்கே ஓரிரு முடிகள் நரைக்க ஆரம்பித்திருந்தது. அவன் அணிந்திருந்த வெளிர் வயலெட் சட்டை நீலம் கூடிவிட்ட பழைய வெள்ளைத் துணி போல் நிறம் மங்கியிருந்தது.
“ஏம்ப்பா..?”
“அதான் சொன்னேனே பிரஷர், இருதயப்படப்புன்னு…”
“ஹ்ம்”
“….”
“முன்னாடி ஜெயபால் கடையில இருக்கேன்னு கேள்விப்பட்டேனே..!” நான் நினைவுக் கூர்ந்தது சுமார் பத்து வருடங்களுக்கு முந்தைய கணக்கு என என்னுடைய தலை தீபாவளி கோலாகலத் துணுக்குகள் இதழில் மிளிர்ந்து மறைந்தன.
பிரகாஷ் அப்பா வைத்திருந்த டீக்கடையும், ஜெயபால் அப்பாவுடைய மளிகைக்கடையும் அருகருகே இருந்தன. ஜெயபால் அப்பா அவனுக்கு படிப்பு வரவில்லை என்று எட்டாம் வகுப்போடு நிறுத்திவிட்டு கடையிலேயே போட்டுவிட்டார். பிரகாஷ் நன்றாகப் படித்தான் என்றாலும் சம்பள ஆளின் செலவைக் குறைக்க தனது மகனை பத்தாவது முடித்த கையோடு டேபிள் துடைக்கவும், குரலெழுப்புபவர்களுக்கு டீ – பலகாரங்கள் எடுத்து வைக்கவும் தனது டீக்கடையில் இருத்திக் கொண்டார். அவனது சற்று நளினம் ததும்பும் பேச்சையும், பாவனைகளையும்தான் அவரால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. அதனாலேயே எப்போதும் அவனை சிடுசிடுத்துக் கொண்டேயிருப்பார்.
எங்க அப்பா அப்போது வயல் நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துக் கொண்டிருந்தார். நான் சுமாராக படித்தாலும் எம் சி ஏ வரை எனக்காகவும், ஓரளவு நல்ல மதிப்பெண்கள் எடுத்துக் கொண்டிருந்த தம்பி பி ஈ கம்யூட்டர் சயின்ஸ் முடிக்கும் வரையிலும் வயல், வரப்பென்று கஷ்டப்பட்டார். இப்போது சோஃபாவில் அமர்ந்து ஹாயாக டீபாயில் கால் நீட்டி டிவி பார்ப்பதும், தம்பி பிள்ளைகளோடு விளையாடுவதும் திரிவதுமாக இருக்கிறார்.
பிரகாஷ் ஊருக்கு வந்துவிட்டதின் காரணத்தைக் கேட்கலானேன்…
பிரகாஷும் ஜெயபாலும் நெருக்கமான நண்பர்கள். அந்த நட்பு, ஜெயபால் காளையார் கோயிலில் தனியாக மளிகைக் கடைத் தொடங்கி, சமையல் மற்றும் உபரி வேலைகளுக்காக பிரகாஷை தன்னோடு வைத்துக் கொள்ளுமளவிற்கு பல ஆண்டுகள் தொடர்ந்திருக்கிறது. கல்யாணமாகி இருவரும் தத்தம் மனைவி, பிள்ளைகளோடு அங்கேயே வெவ்வேறு வீடுகளில் தங்கி வியாபாரம் பார்த்து, வசிக்குமளவிற்கு ஒரு கட்டம் வரை எல்லாம் நன்றாகவேச் சென்றிருக்கிறது.
இருப்பினும் இடையிடையே பிரகாஷின் மனைவி அவனை அங்கிருந்து கிளப்பி வர முயன்றிருக்கிறாள். ஜெயபால் மற்றும் பிரகாஷின் நட்பு பாராட்டல் மற்றும் நெருக்கங்கள் ஜெயபால் மனைவிக்கும் கூட பிடித்தும் பிடிக்காமலும் இருக்கவே, அவளும் அவ்வப்போது பிரகாஷை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறாள். ஜெயபால் சற்று அழுத்தமானவன் என்பதால் அவனிடம் எதுவும் அச்சமயம் பலிக்கவில்லை.
ஒரு நாள் எங்கள் ஊரைச் சேர்ந்த இளஞ்சூரியன் அங்கே சென்றிருக்கிறான். அவனும் எங்கள் வயதையொத்தவன்தான். ஜெயபால் அப்பாவிற்கு பங்காளி உறவு முறையில் வரும் ஒன்றுவிட்ட சொந்தக்காரனும் கூட. சிங்கப்பூரில் ஏதோ ஓட்டலில் வேலை செய்கிறானாம். சின்ன வயசிலிருந்தே கலகலப்பாக கேலியும், கிண்டலுமாய் சுற்றிக் கொண்டிருப்பான்.
“என்னடா அஜக்கை இன்னும் நீ விடல போல..?” என்று பிரகாஷை குறிப்பிட்டுக் கேட்க, ஜெயபால் கொள்ளென சிரித்திருக்கிறான். அவர்கள் பேச்சு சத்தமும், சிரிப்பு சத்தமும் தெள்ளத்தெளிவாக விளங்கும் தூரத்தினில்தான் பிரகாஷும் அன்று நின்றிருந்திருக்கிறான். கடைக்கு வாடிக்கையாக பொருள் வாங்க வரும் ஒரு இளம்பெண் கூட அப்போது அர்த்தத்தோடு அவர்கள் இருவரையும் பார்த்து, சிரித்து நகர்ந்திருக்கிறாள்.
இளஞ்சூரியன் அப்படி பேசியதெல்லாம் பிரகாசிற்கு பழகிய காயங்களே என்றாலும், ஜெயபாலும் சேர்ந்து அவனோடு கொள்ளென சிரித்து வைத்ததுதான் பிரகாஷிற்கு அன்று ரொம்பவே வலித்திருக்கிறது. கனன்ற கோபம் கண்ணீராய் பெருக்கெடுத்திருக்கிறது. கிணற்று நீராய் தனக்குள்ளேயே வடித்தோய்ந்திருக்கிறான் அந்த நாள் முழுக்க. எதையும் அவர்கள் முன் காட்டிக் கொள்ளாமல் மௌனமாய் அன்று நேரத்திற்கே வீட்டிற்கு திரும்பியிருக்கிறான். என்றுமில்லாமல் இனி அவன் ஜெயபால் கடையில் இருக்கப் போவதில்லை என்று சொன்னது அவனுடைய மனைவிக்கு திகைப்பையும் ஒரு மகிழ்ச்சியான விடுபடலையும் ஒருங்கே ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயபால் தன் தவறை உணர்ந்து எவ்வளவோ அவனை சமாதானப்படுத்த முயன்றிருக்கிறான். ஏன் பிரகாஷிற்கு கூட மணித்தியாலங்கள் செல்ல செல்ல தனது அவசர முடிவை மாற்றிக் கொள்ளதான் தோன்றியிருக்கிறது. அவனது இரட்டை மனநிலையைக் கண்டு, அதுவரை ஒரு முடிவிலிருந்த அவனது மனைவி வெகுண்டு எழ, வேறு வழியில்லாமல் ஊருக்கு வந்து சேர்ந்திருக்கிறான்!
இதுபோன்ற நிலையை தனது பள்ளி நாட்களில் அவன் அவ்வப்போது எதிர்கொண்டிருந்தாலும் இப்போதும் அதே போல் நிகழ்வது மிகுந்த வருத்தத்தை அளித்திருக்கிறது.
“சரி உங்க டீக்கடை என்னாச்சி?” என்று பேச்சை மாற்றினேன்.
“நான் ஜெயபாலோடவே சுத்திட்டு இருந்ததால, என் மேல கோபப்பட்டு அப்பா அதை தங்கச்சி புருசன்கிட்ட ஒப்படைச்சிட்டாரு. இருந்தாலும் தங்கச்சி நான் ஊருக்கு வந்ததும் கடையில என்னையும் நிக்க சொல்லிச்சி. ஆனா எனக்கும் அவ புருசனுக்கும் ஒத்து வரல. வேலையாள் மாதிரி நடத்தினான். அப்புறம் தங்கச்சியே என்னை போயிடுண்ணேன்னு சொல்லிடுச்சி..!” பெருமூச்சு விட்டுக் கொண்டான்.
“அப்புறம் வேறெங்கையும் ட்ரை பண்ணலையா?”
“நம்ம துரை இருக்காப்ள ல்ல..?”
துரை எங்களுக்கு இரண்டு வயது சீனியர். நாங்கள் பத்தாவது படித்தபோது அவர் ப்ளஸ் டூ மாணவர். அவரோடும் பிரகாஷ் கொஞ்ச காலம் சுற்றிக் கொண்டிருந்தது நியாபகத்திற்கு வந்தது.
“ஆமா…!” என்றேன் சுவாரசியமாக இன்னொரு கதையைக் கேட்க.
“மதுரைல பில்டிங் மெட்டீரியல் கடை வச்சிருந்தாப்ள. அங்க கொஞ்ச மாசம் இருந்தேன். வொய்ஃபும் அங்க வர அடம்பிடிச்சா. ஆனா சம்பளம் செட் ஆகல. பதினைஞ்சாயிரத்த வச்சி என்ன பண்ண? அதுவும் கூட சரியா பிஸினஸ் இல்லாம சில சமயம் லேட்டா கிடைக்கும். ஒரு நாளு துரை என்னைக் கூப்பிட்டு, இப்ப சேல்ஸ் சரியில்ல. நீ கொஞ்ச நாள் ஊர்ல இருந்துட்டு வாயேன்னு சொல்ல எனக்கு வேற வழி தெரியல. திரும்பவும் ஊருக்கு வந்துட்டேன்..” என்றான் வருத்தத்துடன். ஆனால் கதை இன்னும் முடியவில்லை என்றே தோன்றியது.
“அப்புறம்?”
“அப்புறம், நீங்கதான் மளிகை கடையில நின்னுருக்கியளே… என்னோட நகைகளை வச்சு ஏதாவது சின்னதா ஆரம்பிங்கன்னு எம் பொண்டாட்டி சொல்லவும், தட்ட முடியாம அதையும் செஞ்சுப் பாத்தேன் மணி, ஆனா எல்லாம் நஷ்டமாயிருச்சி! நகைகளும் இன்னும் பேங்க்லதான் கெடக்கு!” அவன் நிலைமை இவ்வளவு மோசமாகியிருக்க வேண்டாம் எனத் தோன்றிற்று. எத்தனை சங்கடங்கள்!
“உங்க அப்பா எதுவும் ஹெல்ப் பண்ணலையா?” அவரும் ஓரளவு சொத்து பத்தெல்லாம் சேர்த்துதான் வைத்திருந்தார்.
“அவருக்கு நம்ம மேல நம்பிக்கை இல்ல மணி. கேட்டா சண்டதான் வரும். எங்களால அம்மாவுக்கும் கஸ்டம்!”
“ம்ம்” அவனுக்காக மீண்டும் அனுதாபப்பட மட்டுமே முடிந்தது!
“எனக்கென்னவோ திரும்பவும் ஜெயபால்ட்டயே போனா உன் நிலைமை சரியாகும்னு தோணுது!”
“அதுவும் பேசிப் பாத்தேன் மணி. சரி வான்னு அவனும் கூப்பிடதான் செஞ்சான். ஆனா அவனுடைய வொய்ஃப் ஒத்துக்கல! கொவிச்சிட்டு போனார்ல போவட்டும்னு சந்தர்ப்பத்தை நல்லாவே யூஸ் பண்ணிக்கிட்டாங்க”
இருதரப்பு நிலைமையையும் என்னால் உள்வாங்கிக்கொள்ள முடிந்தது.
“அப்புறம் திருச்சியில் இருக்க நம்ம காதர் கனியோட ஃபாஸ்ட் புட் கடையில கூட மூணு, நாலு மாசமா பில்லு போட்டுக்கிட்டு இருந்தேன். மனம் தெறந்து பேச ஃப்ரெண்ஸ்னும் யாரும் அங்க இல்ல. ஃபேமிலியயும் கூட்டிட்டு போக முடியல. பைத்தியம் பிடிச்ச மாதிரி தனியா இருக்க என்னவோ மாதிரி இருந்திச்சி. உடம்பும் சுணங்கிக்கிட்டு போக, அவரும் என் நிலைமையை புரிஞ்சிக்கிட்டு ஊருக்கு போயிட்டு, சரியானதும் வாங்கன்னு சொல்லி அனுப்பி வச்சிட்டாரு. அப்புறம்தான் ஆஸ்பத்திரி, ஆஸ்பத்திரியா அலைய ஆரம்பிச்சோம்!”
“என்ன சொன்னாங்க?”
“எனக்கு என்னென்னவோ பண்ணுது. ஆனா அந்த டாக்டரு ஒன்னுல்லேண்ணே சொல்றாரு…! அப்புறம் அவரு குடுக்குற மாத்திரையை சாப்பிட்டா எங்கேயும் போக முடியல; எந்த வேலையும் செய்ய முடியல!”
“ம்ம்”
“ஆனா எம் பொண்டாட்டி நம்ப மாட்டுக்குறா! சம்பாதிக்க பிரியப்படாம வீட்டிலேயே கிடக்க பிளான் பண்றேனு ஏதாவது பேசி, பொலம்பி என்னை மேலும் நோகடிக்கிறா..!”
எனக்கு என்ன சொல்வதென்று எதுவும் சரியாக பிடிபடவில்லை. ஆனாலும் அவனுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ முடியுமா என்று யோசிக்க ஆரம்பித்தேன்…
என்னுடைய நண்பனான மகேசின் ஞாபகம் வந்தது. அவனும் எங்கள் ஊர்க்காரன்தான். தற்சமயம் குடும்பத்தோடு பாண்டிச்சேரியில் வசிக்கிறான். அவனுக்கும் கூட ரெஸ்ட்டாரெண்ட்தான் தொழில். உதவும் மனமுள்ளவன்.
“நம்ம மகேசு…” என்று நான் வாயெடுக்க,
“மகேசு போன மாசம் திருவிழாவுக்காக ஊருக்கு வந்திருந்தாப்ள! ரொம்ப நாளைக்கு அப்புறம் அவர் கூட வண்டியில போனேன்… மனசு விட்டு நிறைய பேசினோம். நம்ம ஸ்கூல் டேஸ் கதைகள்தான் நிறைய பேசினோம்!” என்றான் கண்கள் மினுங்க! எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
இவனுடைய பிரச்சனைதான் என்ன என்பது போல் யோசனை செய்யலானேன்.
தனது இயல்புகளை புரிந்தவர்கள் யாரும் பேச, பழக, பக்கத்தில் இருந்தால் அவனுக்கு பிடிக்கிறதெனப் பட்டது.
“அவன்கிட்ட ஏதும் கேட்டுப் பாத்திருக்கலாம்ல..?” என்றேன் ஆதரவாய்.
“இல்ல மணி. எனக்கு கூச்சமா இருந்திச்சி. அன்னைக்கு அவரோட ஒரு ரவுண்டு போனதே போதும்! ரொம்ப நாளைக்கி அப்புறம் அவ்வளவு சந்தோசமா இருந்திச்சி!”
அவன் அப்படி சொன்னபோது நான் ஊகித்திருந்ததும் சரியெனப்பட்டது.
ஜெயபாலுக்கும் எனக்கும் அவ்வளவு பழக்கமில்லை. ஆனால் எனக்கென்னவோ இவன், அவனைவிட்டு பிரிந்து வந்ததுதான் இப்படியொரு போராட்டமாக மாறியிருக்கக் கூடுமோ என்ற ஐயங்கள் தொடர்ந்து மேலோங்கியபடி அடங்கியும் கொண்டிருந்தன. ஆனால் அவன் திரும்பவும் கூப்பிட்டு வைத்துக் கொள்ளும் எந்த முகாந்திரமும் பிரகாஷின் பேச்சில் தென்படவேயில்லை. அவனைப் பற்றி பேச்செடுத்தாலும் கசக்கும் எச்சிலைப் போல எதையும் முழுமையாக சொல்ல முடியாமல் பாதியை விழுங்கினான்.
“சரி குடும்ப செலவுக்கெல்லாம் இப்போ என்ன பண்ற..?” ஏதேனும் உதவும் அக்கறையுடன் கேட்டேன்.
“கஷ்டந்தான் படறேன் மணி. சின்ன பையனுக்கு வேற இந்த மாதம் ஃபீஸ் குறைஞ்சது அஞ்சாயிரமாவது கட்டணும்னு சொல்லி ஸ்கூலேர்ந்து ஃபோன் பண்ணிட்டாங்க..!” என்று மீண்டும் தனது கஷ்ட ஜீவனத்தை நினைவுக் கூற ஆரம்பித்தான். என் பர்சில் அப்போது இரண்டாயிரம் மட்டுமே இருந்தது. சட்டென நீட்ட சிறு தயக்கம். மேலும் ஐயாயிரமாக கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணமும் கூட.
“எந்த ஸ்கூல் பிரகாசு?”
ஒரு தனியார் நர்சரிப் பள்ளியைக் குறிப்பிட்டான். இந்த நிலைமையிலும் பிள்ளைகளை இது மாதிரியான பள்ளிகளில்தான் படிக்க வைக்க வேண்டுமா என்ற மனக்கேள்வி மேலோங்க எனது கருணையுள்ளம் சற்று தடுமாறியது என்றே சொல்வேன்.
“சரி உன் போன் நம்பரை குடு, நான் கான்டாக்ட் பண்றேன்! ஏதாவது சின்னச்சின்ன ஹெல்ப் தேவைப்பட்டா சொல்லு கண்டிப்பா செய்றேன்!” என்று உறுதியளித்தேன். அவன் அப்படிப்பட்டவன் இல்லை என்றாலும் எல்லாம் சட்டென ஒரு வருடத்திற்கான முழுத்தொகையையும் கட்ட முடியுமா? என்று கேட்டுவிடுவானோ என்ற ஒரு முன்னெச்சரிக்கைதான்.
நான் பெங்களூருக்கு திரும்பும் முன்பு அவனைப் பார்த்து ஐயாயிரம் கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானித்திருந்தேன். அதை நான் வாய்விட்டு கூறாவிட்டிருந்தாலும் எனது நம்பிக்கையான வார்த்தைகள் அவனை கொஞ்சம் தெம்பூட்டியிருந்ததை முகத்தில் தென்பட்ட அவனுடைய பழைய பிரகாசிப்பு சாட்சி சொன்னது.
“எதுவும்ன்னா பேச, உங்க நம்பரிலேர்ந்து மிஸ் கால் குடுக்குறீங்களா?” என்று கேட்க,
பண்ணினேன்.
ஊரிலிருந்த இரண்டு மூன்று நாட்களும் இப்போது செல்வோம், அப்போது செல்வோம் என்று அவனை சந்திப்பதை நேரத்திற்கு நேரம் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். ஓயாமல் அவனை சந்தித்து பணம் கொடுக்க வேண்டும் என்ற உந்துதலும் தொடர்ந்து எனது வாக்கை நினைவூட்டிக் கொண்டுதானிருந்தது. ஆனாலும் அவனை நேரில் சென்று பார்க்க பெரும் முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை. அப்பாவை கோபித்துக்கொண்டு இப்போது வாடகை வீட்டில் இருப்பதாக வேறு சொல்லிருந்தான். பகிர்ந்து கொண்டிருந்த எல்லாமும் கைப்பேசித் திரையில் விரல் தட்டித் தட்டி கடக்கும் குறுங்காட்சிகள் நொடிகளில் தோன்றி மறைந்துக் கொண்டிருந்தன. என் மனமும் கூட எந்திரம் போல மாறியிருந்தது.
பெங்களூருக்கு பஸ் ஏறும் நாளும் வந்துவிட்டிருந்தது. மூட்டை, முடிச்சிகளோடு மனைவி, மகளோடும் வந்தும் இறங்கியாயிற்று. இணையம் வழியாக கூட அவனுக்கு பணம் கொடுக்க எந்தவொரு ஏற்பாடும் செய்திருக்கவில்லை. நானே அவனைத் தொடர்பு கொண்டுப் பேசவும் நாளுக்கு நாள் அத்தனை சோம்பல்!
தேவையென்றால் அவனேதான் தொடர்பு கொள்ளுவானே என்ற எண்ணத்தில் என்னை நானே உறங்க வைத்துக் கொண்டிருந்தேன். கொஞ்ச நாளில் அவனைப் பற்றிய நினைவுகளும், தாக்கங்களும் சற்று அடங்கியது போல் உணர்ந்தேன். இப்போது அவனைப்பற்றி அதிகம் நினைப்பதில்லை என்றாலும் எனது வாக்குறுதிகள் காற்றில் பறந்து விட்டது போல் உணர்கிறேன். மறுபடியும் ஜெயபாலுடன் செல்லவிருந்து, பின் முடியாமல் போனதை கூட தாங்கத்தானே செய்தான்?
***

நடப்பைச் சொல்லும் சிறுகதை.
இப்படித்தானே நாம் கடந்து போகிறோம்.
சிறப்பு இத்ரீஸ்.
வாழ்த்துகள்.