கலை என்பது உள்ளத்தில் எழும் உணர்ச்சியின் பிரதிமை. அழகின் வடிவம். கவிஞனோ அல்லது சைத்திரிகனோ ஒரு பொருளைக் காண்கிறான். உள்ளத்தின் நிகழ்ச்சியைக் கவனிக்கிறான். அது அவன் உள்ளத்தைச் சலிப்பிக்கிறது. இருதயத்தை அலைக்கிறது. அந்த உள்ள நெகிழ்ச்சியை. அதன் வேகம் குன்றாமல் வெளிப்படுத்துகிறான். அது கவிதையாக இருக்கலாம். ஓவியமாக இருக்கலாம். அல்லது சிற்பமாக இருக்கலாம். அம்மாதிரி முடிந்த வடிவம்தான் கலை.
கலை என்பது ஒன்றுதான். அதன் இயக்கங்கள் பல துறைகளில் பல வடிவங்களைப் பெறலாம். ஆனால் அதன் நாடி ஒன்று அதன் ரகஸியமும் ஒன்று. அது இதயத் துடிப்பின் பேச்சு. அழகு உணர்ச்சியின் வடிவம். அழகு என்பது உலகத் தோற்றங்கள் மனித எண்ணங்களுடன் ஒன்றுபட்ட ஒற்றுமை. இவ்வித அழகுக்கு அழகு செய்யும் இருதயத்தின் பேச்சுத்தான் கலை.
ஒவ்வொரு தேசத்திற்கும், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தனிப்பட்ட கலாபாவம் உண்டு. கலையின் தத்துவம் ஒன்றுதான். அதன் அடிப்படையான விதி ஒன்றுதான். ஆனால் அது சமுதாயத்தின் வாழ்க்கைக் கண்ணாடி. வாழ்க்கைக் கனவு. ஒரு கலையின் மேதையை அந்தச் சமுதாயம்தான் பூரணமாக அறிய முடியும்.

இலக்கியம் கலைகளில் எல்லாம் உயர்ந்தது. கவிதை கலையின் அரசி. ஓவியமும் சிற்பமும் கலைதான். அவை காணப்படும் கலை. அதாவது அதன் வடிவம் எண்ணத்தைக் கட்டுப்படுத்துகிறது. எல்லைப்படுத்துகிறது. கவிதை அப்படி அல்ல. கேட்கப்படும் கலை. கம்பன் “செவிநுகர் கனிகள்” என்று சொல்லுகிற மாதிரி கவிக்கு காதுகள் பிரதானம். கவிதையில் வடிவெடுக்கும் எண்ணங்கள் உள்ளத்தில் எதிரொலித்துப் பேரலையான கனவுகளை எழுப்புகின்றன. புதிய எண்ணங்களைக் கொண்டுவந்து குவிக்கின்றன. இதனால்தான் “கவிதை கலையின் அரசி” என்று கூறுகிறோம்.
மனிதனின் கனவுகள் வடிவம் பெறும்பொழுது அது கலையாகிறது. அது நடைமுறை உண்மைக்குக் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதாவது நடைமுறை உலகம் அறிந்த இரண்டும் இரண்டும் நான்கு என்ற உண்மைகளுக்கு அதில் இடமில்லை. கலை, உலகத்தைப் புகைப்படம் பிடிக்கும் கருவியல்ல. சிருஷ்டியின் ரகஸியத்தை சிருஷ்டியின் மகத்துவத்துடன் வெளிப்படுத்தும் ஒரு பாஷை. கலை வாழ்க்கை ரகஸியத்தை உணர்த்துவது. வாழ்க்கைத் தத்துவத்திற்குக் கட்டுப்படாதது. ஆனால் வெறும் உயிர்வாழ்தல் என்ற தத்துவத்திற்குக் கட்டுப்படாதது. அதனால்தான் கலைக்கும் நடைமுறை உண்மைக்கும் எப்பொழுதும் ஒத்துவராமல் இருக்கிறது.
கலை தர்மசாஸ்திரம் கற்பிக்க வரவில்லை. ஒழுக்க நுாலை இயற்ற வரவில்லை. உடற்கூறு நுாலை எடுத்துக்காட்ட வரவில்லை. பத்துத்தலை ராவணனும், ஆறு தலை சுப்ரமண்யனும் உடற்கூறு நுாலுக்குப் புறம்பான அபத்தமாக இருக்கலாம். ஆனால் ஒரு கொள்கையை, இலட்சியத்தை உணர்த்தக்கூடியது. அதுதான் கலையின் இலட்சியம்.
கலை ஒரு பொய். அதிலும் மகத்தான பொய். அதாவது மனிதனின் கனவுகளும் உலகத்தின் தோற்றங்களும் எவ்வளவு பொய்யோ அவ்வளவு பொய். இந்தக் கலை என்ற நடைமுறைப் பொய்தான், சிருஷ்டி ரகஸியம் என்ற மகத்தான பொழுதுபோக்கு தான் சிருஷ்டியின் மகத்தான விளையாட்டைக் காண்பிக்கக்கூடிய நிலையிலிருக்கிறது.
தத்துவ சாஸ்திரி ஒரு நாளும் சிருஷ்டியின் மேதையை அறிய முடியாது. என்ன இருக்கிறது என்று பிரித்துப் பிரித்து அளக்கிறான். அறிகிறான். ஆனால் எப்படி இருக்கிறது என்று அவனுக்குத் தெரியாது. தத்துவ சாஸ்திரிக்கு ஒரு கண்ணீர்த்துளி, ஒரு சொட்டு ஜலமும் சில உப்புகளும் என்றுதான் தெரியும். அந்தக் கண்ணீரின் ரகஸியத்தை, அதன் சரித்திரத்தை அவன் அறிவானா? அது கலைஞனுக்குத்தான் முடியும். அவன்தான் தோற்றங்களை ஒன்று பட்ட ஒற்றுமையில் எழுந்த அழகுடன் காண்கிறான். அவன் சிருஷ்டிக்கிறான். அதனால்தான் வாழ்க்கையின் மேதையை அவனால் உணர முடிகிறது. கவிஞன் பக்தனாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், கவிஞன் பக்தனாக இல்லாமலிருப்பதிலும் அதிசயமில்லை. அவன் சிருஷ்டி, அகண்ட சிருஷ்டியுடன் போட்டி போடுகிறது. அதில் பிறக்கும் குதுாகலந்தான் கலை இன்பம்.
மணிக்கொடி, 4.11.1934
நன்றி -ஆ.இரா.வேங்கடாசலபதி.

