நிழற்செருப்புகள்

பசுமைத் தாழ்வாரத்தில் குடியமர்ந்த சிறிய கிராமம் ‘கந்தளாய்’. மலையும் நதியும் விரல் பற்றியது போல அதன் எல்லைகளைக் கட்டியிருந்தன. அரைக்கதைகேட்ட வரலாறுகளின்மேல் வாழ்ந்த ஓர் அமைதிக்கூட்டம். அதிகாலையில் பறவைகளின் குரலோடு துயிலெழுந்து, மாலையில் காட்டு நாய்களின் குரைப்பொலிகளோடு கண்ணுறங்கும் பொதுக்குடிகள் வாழகம். இரவு முழுக்கப் பாம்புகளின் தேடலோசை மட்டுமே ஊர்ந்துகொண்டிருக்கும் கிராமம். ‘ஒன்றிணைந்த வாழ்வே கிராமம்’ என்ற அர்த்தம் படுகுழிக்குத் தள்ளப்பட இன்னும் சில மாதங்கள்தான் இருந்தன.

சந்திரன் இளஞ்சிறுவன். காலையில் பள்ளிக்குச் சென்று மாலையில் வயலுக்கு ஓடிவந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருப்பவன். முகத்தில் கொஞ்சம் பசுமை, கண்களில் அலாதி ஆர்வம். அவனது தந்தை மதுசங்கரன் கிராமத்தில் மதிக்கத்தக்க அரசு ஊழியர். சமய பேதங்களை வெறுக்கும் அவருள், ‘மனிதன்’ என்பதைத் தவிர வேறு என்ன வேறுபாடு தேவையாக இருக்கிறது? என்ற வினா எப்போதும் பதுங்கி கிடந்தது.

பக்கத்தில் சிங்களக் கிராமம், அதற்கு அடுத்தது தமிழ்க் குடியிருப்புப் பகுதி. ஆனால், எல்லைகள் என்னவோ வரைபடக்காகிதத்தில் மட்டும். வாழ்வில் எல்லைகள் பளிச்சென்று தெரிவதில்லை. சந்திரன் தமிழ்ப் பேசுவான், சிங்களம் சாடுவான். அவனுக்குச் சிங்களம் கற்றுக் கொடுத்தவர் துஷாரா மாஸ்டர். வெண்சட்டை, பசுமைச் சாயல்கொண்ட முகம், கண்ணாடியால் தம் பார்வையை ஒழுங்குபடுத்தியிருப்பார்.

“சிங்களனோ, தமிழனோ ரத்தம் சிவப்புதான் சந்திரா!” என்று மதுசங்கரன் சொல்லும்போது, துஷாராவின் முகம் மெதுவாகச் சிரிப்பதைக் காணலாம்.

அந்தச் சொற்கள் காற்றை வெட்டிச் சென்றன. ஆனால், விரைவில் அந்தக் காற்றே இரத்தம் பறக்கும் காற்றாக மாறியது. கிராமத்தி்ன் விழிகள் திறக்க ஆரம்பித்தன. கிராமத்து வெட்டிப்பேச்சுகளில் சிறுக சிறுகப் பதட்டங்கள் தோற்றிக்கொண்டன.

முந்தைய மாதத்தில் வடக்கில் நடந்த தாக்குதலின் புகைப்படங்கள் ஒரு சிங்கள செய்திதாளில் வந்திருந்தது. பின்பக்கத்தில் பெட்டிச் செய்தியாக, “விடுதலைப் புலிகள் தாக்குதல் – 6 சிப்பாய்கள் கொலை” என்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த நெருப்புத்துளி கந்தளாயியில்கூடப் பஞ்சு போலப் பறந்தது. உடனே, மழை இல்லாமல் வறண்ட நிலம் போல ‘உயிரச்சம்’ கிராமத்தின் மீது விரிசல்விடத் தொடங்கியது.

முதலில் இராணுவ வாகனங்கள் வந்தன. அவர்கள் முகத்தில் புன்னகை இல்லை. அவர்கள் விழிகள் மரணத்தின் வாசல்களைப் போலத் திறந்திருந்தன. அன்றிரவு ஒரு குடும்பத்தைத் தேடி வந்தார்கள். சோதனை. ஆயுதம் இருக்கிறதா என்று பார்த்தார்கள். பின்னர் மீண்டும் மீண்டும் இரவில் மட்டும் வந்தார்கள். சாலைகள் முடக்கப்பட்டன. ஊரடங்கு அன்றாடமாகியது.

மதுசங்கரன் தினமும் அரசு வேலைக்குச் செல்லும் போது, தனது அடையாள அட்டையுடன்தான் நடக்க நேர்ந்தது. சிங்களத்தைப் பாராட்டும் போலிச் சொற்கள் வழியாக அவர் வேலைக்குச் சென்று வந்தார். ஆனால், அவர் தம் உள்ளத்தோடு புலம்புவது தன்னந்தனிமையில்தான்.

“என் கிராமமே! என் பிள்ளைகளின் நிலம் இது. இன்று நானும் அரசின் ஐயத்துக்கு உரியவனோ?!…”

சந்திரன் இன்னும் சிறுவன்தான். ஆனால், காற்றின் போக்கை உணரத் தெரிந்தவன். முந்தைய வாரம் பள்ளியில் சிங்கள மொழியை நடத்திவிட்டு, துஷாரா மாஸ்டர் பேசிக் கொண்டிருந்தார். “மனிதர்கள் எல்லாம் ஒரே செடியில் பூத்த மொட்டுகள்… இனங்களால் நமக்கு வேறுபாடு ஏற்படுவதில்லை.”

அந்த நேரத்தில் திடீரென ஒரு சத்தம். பள்ளி வாசலில் இராணுவ வாகனம். மாணவர்கள் கிளர்ந்தார்கள். ஆயுதம் துலங்கியது. உள்புறம் வந்த அதிகாரி, “இங்க யாராவது புலிகளுடன் தொடர்பில் இருக்கிறதா?” என்று கேட்டார்.

அது வெறும் வினா அல்ல. அது விசாரணை. அது ஒரு வாளின் கூர்முனை.

துஷாரா, எதுவும் பேசாமல் அருகில் நின்றார். அதிகாரியின் பார்வை நேராக அவரிடம்.

“மாஸ்டர், உங்கள் பெயர்?”

“துஷாரா விஜேசிங்க. நான் இங்க இருக்குற ஒரே சிங்கள ஆசிரியர்.”

“அதான் கேட்கிறேன். தமிழ்க் குழந்தைகளுக்குள் யாராவது வேற மாதிரி நடந்து கொள்றாங்களா?”

துஷாரா அமைதியாயிருந்தார். “இவங்க எல்லாம் பிள்ளைகள்தான். நீங்க பயப்படுற மாதிரி பிள்ளைகள் இல்லை.”

அந்த வார்த்தைகள் அதிகாரியின் முகத்தில் இறுக்கத்தைக் கொடுத்தது. ஆனாலும் அவர் மேற்கொண்டு எதையும் கேட்காமல் சென்றுவிட்டார்.

அன்றைய இரவு சந்திரன் நிலவைச் சன்னல் வழியாகத் தேடினான். நிலா இல்லை. இருள் மட்டும் கவிந்திருந்தது. பக்கத்தில் காற்றால் மரக்கிளைகள் அசையும் ஓசை. அவன் இது வெறுங்காற்றா? பாம்பரவமா? அல்லது புலிகளின் நடமாட்டமோ? என நினைத்துக் கொண்டிருந்தபோது அவன் தந்தை வீட்டின் பின்கதவுகளை விரைந்து மூடினார்.

அம்மா அடுப்பில் சாதம் முடித்துவிட்டு எழுந்தாள். தூரத்தில் ஒரு துப்பாக்கிச் சத்தம் கேட்டது. 

‘எதுக்குச் சத்தம்? போர்ப் பயிற்சியா? அல்லது… ஏதாவது ஆரம்பமா?’ என்ற ஐயத்தில் அவன் தந்தை வீட்டின் எல்லாச் சன்னல்களையும் இழுத்து அடைத்தார். இனி, நிலா வந்தாலும் அதைச் சந்திரனால் பார்க்க முடியாது.  

மறுநாள் பள்ளிக்குச் செல்லும்போது, சந்திரன் வழியிடையில் துஷாரா மாஸ்டரைப் பார்த்தான். அவர் மரத்தடியில் நின்று வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“மாஸ்டர், நீங்க ஒண்ணும் சொல்லலையே?”

“எதை?”

“நேத்து துப்பாக்கிச் சத்தம் கேட்டது.”

துஷாரா மெல்லச் சிரித்தார். “சந்திரா, இந்தக் காலத்துல சத்தம் இருப்பதுதான் பாதுகாப்பு.”

“அப்படியென்றால் உண்மையைச் சொல்வது தவறா?”

“இல்ல. இங்க இப்ப வினாவே, ‘உண்மைதான் எப்போதும் பாதுகாப்பா?’ என்பதுதான்!.”

கிராமத்தின் விழிகள் நன்றாகவே திறந்துவிட்டன. பரிதாபங்கள் ஒளிந்து இருந்த ஒளி  நிழல் ஆவல்களாக வலம்வந்தன. கிராமத்தில் வாடிக்கையிலான வார்த்தைகள் மாறின. “அவங்க” – “இவங்க” – “நம்ம” – “அந்தப் பக்கம்” – “இந்தப் பக்கம்” – இவை எல்லாம் புதிய எதிரிகளாக உருமாற்றம் அடைந்தன. தேக்குமரங்கள்கூட மெல்லத்தான் பேசிக்கொண்டன. எளிய வாழ்க்கை ஏதுமற்றுச் சிதறியது.

அவன் நாளைக்குச் சிங்களத்தில் கவிதை எழுதி, வாசிக்க வேண்டும். அதற்குரிய பயிற்சிக்காக அவன் துஷாராவின் வீட்டிற்குச் சென்றான். 

ஆனால், கதவு திறக்கப்படவில்லை. அது வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. துஷாரா இரவே எங்கோ சென்றுவிட்டார். எங்கே என்று யாருக்கும் தெரியவில்லை. “இது என்ன கிராமம்? சிரிப்புகள் சத்தமின்றி மறைந்துவிட்டன. குழந்தைகள் அச்சத்தில் களையிழந்துவிட்டனர்.

ஒருவாரத்திற்குப் பின்னர் மனைவி தன் கணவரிடம், “நம்ம பையன் சிங்கள மொழியை மறந்து வருகிறான். இது அவனுக்கு ஆபத்தல்லவா?” என்று கேட்டார்.

அதற்கு அவர், “தமிழ்மொழி மறந்தால் மட்டும் என்ன பாதுகாப்பு இங்குக் கிடைத்துவிடப் போகிறது?” என்று கேட்டார்.

மறுநாள் விடியலுக்குள் பக்கத்துக் கிராமத்தில் ஒரு வீடு எரிக்கப்பட்டது. அதிலிருந்தவர்கள் சிங்களர். அவர்கள் பெயர்களை இவர்களால் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள இயலவில்லை.

அன்றைய இரவில் சந்திரனால் தூங்க முடியவில்லை. வானத்தில் இன்னும் நிலா வரவில்லை. அதைச் சன்னல் வழியாகத் தேடவும் அவன் விரும்பவில்லை. 

2

கந்தளாயின் தெற்குப் பகுதியில் சுருண்ட தடங்களில் நடக்கின்ற ஒவ்வொரு காலடி ஓசைக்கும் அர்த்தம் இருந்தது. அந்தக் காலடிச் சத்தங்கள் யாருக்காக? யாரிலிருந்து? என்ற சந்தேகங்களுடன் விழிகள் நகர்ந்தன. அந்தப் பாதைகளில் நடக்கும் பாதங்கள் ஒரே மாதிரியான செருப்புகளை அணிந்திருக்கவில்லை. 

சில செருப்புகள் அரசு அலுவலகங்களுக்கும் சில அரசுக் கல்விநிலையங்களுக்கும் சென்றன. பெரும்பான்மையான பாதங்கள் செருப்புகள் இல்லாமல் கால்நடைகளோடு மேச்சலுக்கு மட்டுமே சென்றன. நடக்கின்ற பாதங்களுள் மிகச் சில மட்டும் பூட்ஸ் அணிந்து, நிழலாக நடைபெறும் புலிக்களத்தை நோக்கிச் சென்றன. ஓரிரண்டு செருப்புகள் மட்டும் எல்லாப் பகுதிகளுக்கும் சென்றுவந்து உண்மையின் உருவென்றும் பொய்மையின் நிழலென்றும் தம்மை அறிமுகப்படுத்திக் கள்ளாட்டமாடி ஆதாயம் பார்த்தன.  

துஷாரா, வெண்சட்டையுடன் தன்னுடைய புதிய வீட்டிலிருந்து எப்போதும் போல பள்ளிக்குச் சென்றபோது, அந்த ஒளியில் சிறிது சாயல் மாறியிருந்தது. இப்போதெல்லாம் பள்ளிக்குச் செல்லும் பாதையில் சிறு சிறு இராணுவக் குழுவினரின் சோதனைகள். இந்தப் பகுதியில் இராணுவ சோதனைச் சாவடிகள் மிகுதி. கண்களில் ஐயம். சொற்களில் மர்மம். ஆனால், அவர் முகத்தில் வழக்கம்போல புன்னகை.

மதுசங்கரன் வீட்டிற்கு வாரமொரு முறை வரும் துஷாரா, அந்த நாளில் சிறிது பதற்றத்துடன் வந்தார். கையில் புத்தகங்கள் இருந்தன. ஆனால், அந்தப் பாரம் புத்தகங்களின் அல்ல, மனத்தில்தான்.

சந்திரன் பின்புறம் வீட்டின் அடுக்கில் விளையாடிக்கொண்டிருந்தான். ஆனால், அவன் செவிகள் எப்போதும் விழிப்புடன் இருந்தன. 

“நம்ம கிராமத்துக்குள்ளதான் புலிகள் நுழைஞ்சிருக்காங்க,” என துஷாரா மெல்லச் சொன்னார்.

மதுசங்கரன் அதிர்ச்சியுடன் நேராக உட்கார்ந்தார். 

“நீங்க சொல்றதா உண்மையா? புலிகளா? நம்ம கிராமத்துலையா?”

துஷாரா கண்களைத் தாழ்த்தி, அடுத்த வார்த்தையை வெளியே விடாமல் சுவரை நோக்கினார். பின்னர் சற்று உயர்ந்த குரலில், “உண்மைதான். பூட்ஸூகள் இப்போது நிழற்செருப்புகளாக வந்து விட்டன.”

அந்த வார்த்தைகள் சந்திரனின் காதிலும் விழுந்தன. அதில் ஒரு வார்த்தை மட்டும் அவனுக்குப் புதுமையாக இருந்தது. ‘நிழற்செருப்புகள்!.’

‘ஆகா! இதுவே ஒரு கவிதைக்குத் தலைப்பாகலாமே! ஆனால், இந்தத் தலைப்பே கவிதையை மிஞ்சிவிடுமே!’ என்று நினைத்தான் சந்திரன். ‘நிழற்செருப்புகள்’ என்பது அவனுக்குப் புதிய சொல்தான். அதனால், அதைச் சித்திரம் போலக் கண்முன் வரைந்துகொண்டான்.

‘சின்னச் செருப்புகள். கறுப்புச் செருப்புகள். சத்தமில்லாமல் நடப்பவை. இரவில் மட்டும் வருபவை. ஆயுதங்களோடு யாருக்கும் தெரியாமல் கிராமத்துக்குள் நுழையும் நிழற்செருப்புகள்….’ என அவன் தன் மனத்துக்குள் கவிதையெழுதத் தொடங்கினான்.

“அவங்க, இந்தக் கிராமத்திலிருந்து ஒண்ணும் பண்ணமாட்டாங்க. இது பாதுகாப்புக் கூட்டமாகூட இருக்கும். கொஞ்ச நாள்ல பெரிய வேலை நடக்கப் போகுதுபோல. நான் குடும்பத்தோட வெளியேறவே நினைக்குறேன்.”

மதுசங்கரனின் மனம் துடிக்கத் தொடங்கியது.

“நீங்க இருந்தா நம்ம பிள்ளைகளுக்கு நல்லது.”

“அதான் பிரச்சனையே. ரெண்டுமொழியும் ஒன்ணுசேரக்கூடாது.”

“இல்ல, எங்களுக்குத் தெரிஞ்சவுங்க நீங்க. அதனாலத்தான் கேட்குறேன். நீங்க இங்கேயே இருக்கலாமேன்ணு”.

“தெரிஞ்சவுங்கன்றதுனாலத்தான் சிக்கலே. அவுங்களத்தான் புரிஞ்சுக்க முடியாது. மர்மம் தெரிஞ்சவுங்கக்கிட்டத்தான் அதிகமா இருக்குமுணு ராணுவம் நினைக்குது.” 

அந்தச் சொற்கள் சந்திரன் மனத்தில் பதிந்தன. ‘கண்ணுக்குத் தெரிகிறவனே மர்மமாகி விட்டால், கண்ணுக்கே தெரியாதவன் எப்படி இருப்பானோ?’ என்று சிந்தித்தான் சந்திரன்.

அடுத்த வாரம் முதல் துஷாரா மாஸ்டர் பள்ளிக்கே வரவில்லை.

பிள்ளைகள் சிறிய ஐயத்துடன், “மாஸ்டர் எங்கே?” “மாஸ்டர் எங்கே?” என்று தங்களுக்கு மாறி மாறிக் கேட்டுக்கொண்டனர். ஆனால், அதற்கு யாரிடமும் எந்தப் பதிலும் இல்லை.

மற்ற ஆசிரியர்கள் ஒன்றுசேர்ந்து ஒரேகுரலில் அழுத்தமாக, “அவர் ஊருக்குப் போயிருக்கார்” என்றார்கள். ஆனால், அது உறுதியாகப் பொய்தான் என்று எல்லாப் பிள்ளைகளுக்கும் தெரிந்தது. சந்திரனின் மனத்தில் வெற்றிடம் ஏற்பட்டது.

வெவ்வேறு பாடங்கள் ஒரு பக்கம் மனத்தில் நின்றாலும் துஷாரா மாஸ்டர் சொல்லும் கதைகள் அவன் மனத்திலிருந்து முற்றிலும் மறைந்துவிட்டன. சிங்கள எழுத்துகளோடு வரும் வீரவணக்கக் கவிதைகள் ஒழிந்து விட்டன. பள்ளிச் சுவரில் இருந்த துஷாரா எழுதிய பொன்மொழிகளும் அழிந்தொழிந்தன.

மறுநாள் இரவு, ஒரு சத்தம். தூரத்தில் ஒரு வீடு எரிந்தது. சந்திரன், சன்னல் வழியாகப் பார்த்தான். அந்த இருட்டில் அது ஒரு கதிர்வொளி. நெருப்பின் சிவப்பு. அவன் அப்பா வெளிப்புறத்திலிருந்து ஓடிவந்து வீட்டுக்குள் புகுந்துகொண்டு வாயிற்கதவை இழுத்துப் பூட்டினார்.

“சந்திரா, உள்ள போ. இப்போ நம்ம கண்ணெல்லாம் சுவர்லதான் இருக்கணும். ஆனா மத்தவங்க கண்கள் எங்கெங்க இருக்குதுன்ணு யாருக்குமே தெரியாது.”

அந்த வார்த்தை அவனுக்குப் புரியவில்லை. அவன் தன்னைத் தானே ‘சுவர்?’ என்று கேட்டுக்கொண்டான். ‘அதை ஏன் நான் பார்க்கணும்?’ என்றும் சொல்லிக் கொண்டான்.

அப்பா அடிப்படியில் அம்மாவிடம் பேசுவது அவனுக்குக் கேட்டது. 

“நம்ம கிராமச் சுவர்… அது இப்போ நிழற்சுவரா மாறிட்டுச்சு. யாரு நம்மவங்க? யாரு எதிரிங்க? யாரும் யாருக்கும் புரியாதவங்களா மாறிட்டாங்க” என்றார்.

‘இப்ப அப்பா இப்படிப் பேசுறது அம்மாவுக்குப் புரிஞ்சுருக்குமா? அப்பாவுக்காவது…’ என்று நினைத்துக் கொண்டான் சந்திரன். 

அடுத்த சில நாள்களில் கிராமத்தில் புதிய முகங்கள் தோன்றின. ரவுடி தோற்றமுள்ள சிலர் கிராமத்துக் கோவில் வாசலில் நின்றனர். அவர்கள் தமிழர் போலவே கதைத்தனர். ஆனால், விழிகளில் கனமிருந்தது.

ஒருநாள் மதுசங்கரனைச் சந்திக்க அவர் வீட்டுக்கு இரண்டு பேர் வந்தனர்.

“நீங்க அரசுக்குப் பணியாட்றவங்க, நம்ம கிராமத்துக்குரிய சேவையை ஒப்படைக்கணும். புலிகள் இப்போ பாதுகாப்புக்காக இருக்கிறாங்க. நம்ம உரிமைக்காக!”

மதுசங்கரன் பதற்றத்துடன், “நான் அரசின் ஊழியன். என் வேலை கல்வி, மக்கள் சேவை… ஆயுதம் எடுக்கறது என்னோட வேலையில்லையே” என்றார்.

“அதெல்லாம் நாளைய பேச்சு. இப்போ நம்ம கண்ணெல்லாம் உங்கள மேல இருக்கு. பயப்படாதீங்க, துஷாரா மாதிரியானவர்கிட்ட ஒழுங்கா நடந்துக்கிட்டீங்கனாலே மட்டும் போதும்.”

“துஷாரா! அவர் எங்கே?”

யாரும் ஏதும் சொல்லவில்லை. ஆனால், அந்த வார்த்தையில் ஒரு நிழற்சுவர் மேலெழுந்தது போல இருந்தது. 

சந்திரன் தூக்கம் களைந்து, சன்னல் அருகே வந்து நின்றான்.

மழை வந்தது. நிழல்கள்கூட அடைக்கலம் தேடின. ஆனால், அவன் மனக் கண்ணில் ஒரேயொரு சின்னம் தெரிந்தது. அது சுவரில் எழுந்த அவன் தந்தையின் நடுங்கும் நிழல்.

துஷாரா மாஸ்டர் சொல்லிக் கொடுத்த சிங்கள எழுத்துக்கள் எல்லாம் இனிமேல் அவனுக்கு அச்சம் தரும் சொற்கள்தானா? அவன் கண்களில் புதுமையான வீரம் கிளர்ந்தது.  ‘!நம்ம கிராமத்துக்குள் நிழல் செருப்புகள் வந்திருக்காங்க. அப்போ நம்ம பார்வைதான் ஒளியா இருக்கணும்…’ என நினைத்துக் கொண்டான்.

3

ஜூன் 2, 1986. கந்தளாய் கிராமத்தில் வறண்ட இரவு. இரவு பன்னிரண்டு மணிக்குப் பின்னருங்கூடப் பாம்பும் அசையாமல் ஓய்ந்திருந்தது. அந்த இரவு மழையில்லாதது என்றாலும் நெஞ்சை நனைக்கும் அச்சத்துடன் இருந்தது. எந்தச் சத்தமும் இல்லாத அந்த அமைதி, சூழ்நிலையின் இயல்பு அல்ல. அது புயலுக்கு முன் வரும் பயங்கர அமைதி.

காலையிலிருந்தே மாணவர்கள் தேர்வுக்காகப் பாடப் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தனர். அம்மாமார் நிலத்தில் வேலை செய்து களைத்த நிலையில், சிறிது வெதுவெதுப்பான கஞ்சியை அருந்தினர். மாலைக்குள் வீடு திரும்பினர். கதவுகள் பூட்டப்பட்டன. விளக்குகள் அணைக்கப்பட்டன. ஆனால், காடு மட்டும் விழித்திருந்தது.

சந்திரன் தூங்க முடியாமல், சன்னலுக்கு அருகில் நின்றவாறு வானத்தைப் பார்த்தான். தந்தை வீட்டில் இல்லை. கிளிநொச்சியில் நடைபெற்ற அதிகாரிகளின் கூட்டத்திற்குச் சென்றிருந்தார்.

வானத்தில் நிலா இல்லை. இருந்தாலும் ஒளி போல நிலைதான் இரவின் மேல் ஓடியது. ஆனால், அந்த ஒளி சந்திரனுக்கு நிம்மதியைத் தரவில்லை. மூச்சைத் தடுக்கும்படியான அந்தக் கவலை அவனின் மனத்துக்குள் பரவியது.

அவனுக்கு அந்த இரவு ஏதோ விருப்பமற்ற அச்சத்தை உருவாக்கியது. மரங்களைக் காற்றுக் குலுக்கும் ஓசைகூட அவனைத் தடுமாற வைத்தது. தெருவின் வெறிச்சொற்கள், புலிகள் கம்பியால் கட்டிய சின்னங்கள், வெறும் விழிகளால் பேசும் மௌனமான கிராமம்… இது அவனுடைய பழைய, பழக்கப்பட்ட கிராமமல்ல. கிராமத்தின் முகம் மாறியிருந்தது. எல்லாம் புதிதாய். வேறுமாதிரியாய்.

சற்று தூரத்தில் உள்ள கூரையில்லா வீட்டின் வாசலில் இருள் நடமாடுவது போல இருந்தது. சந்திரன் கண்களை இடுக்கிப் பார்த்தான். யாரோ வீதியில் நடந்துவருவது போலத்தான் தெரிந்தது. அவனது உள்ளம் பலமாகத் துடித்தது. ‘இவை ஏன் நடக்கின்றன? யாருக்காக?’ என்று நினைத்தான். 

இரவு ஒரு மணி. அந்தச் சத்தம் மீண்டும் வந்தது. முதலில் சின்ன சத்தம். பின் பெரிய அதிர்வு. ஒரு வெடிகுண்டு. பிறகு ஒருவனின் அலறல் சத்தம். பின்னர் இன்னொரு வெடிப்பு. ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் மறுபடியும் ஒவ்வொன்றாக விரைந்து ஒளிரத் தொடங்கின. 

சந்திரன் கதவிடுக்கின் வழியாக வாசலைப் பார்த்தான். தெருவில் ஒளியும் இருளும் சண்டைபோடுவது போலத்தான் இருந்தது.

மறுகணத்தில், அடியெடுத்து எங்கும் ராணுவத்தின் பயணங்கள். சிங்கள ராணுவ வாகனங்கள், சினத்துடன் கிராமத்துக்குள் நுழைந்தன.

“புலிகள்! புலிகள்! கந்தளாயில்புலிகள்!” என அறிவிப்புச் சத்தம்.

வீட்டுகளில் மக்கள் நடுங்கினார்கள். சிலர் கையெடுத்து இறைவனைத் தொழுதார்கள். சிலர் குழந்தைகளை உறைவிடத்தில் ஒளித்தார்கள். 

“பதுங்குங்க! பதுங்குங்க! புலிகள் வீடுகளில் இருக்கிறாங்க!”

முன்னைய இரவில், விடுதலைப் புலிகளின் சிறு குழு மிக ரகசியமாகக் கிராமத்தில் நுழைந்திருந்தது. அவர்களின் இலக்கு கிராமத்தில் உள்ள சிங்கள பொதுமக்கள். அவர்களிலும் குறிப்பாக அரசுக்கு ஆதரவளிப்போர். பொதுமக்கள் உறங்கிக் கொண்டிருந்த வீடுகள் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தன. துப்பாக்கிச் சத்தங்கள் கிளம்பின. இரத்தம் சிதறியது.

முதல் வீடு… சிங்களக் குடும்பம் ஒன்று. தந்தை, தாய், இரு பிள்ளைகள்.  அவர்கள் கதவைத் திறந்த நொடியிலேயே, இரு சுவர்களும் சிவப்பாகிவிட்டன. சண்டை இல்லை. எதிர்ப்பு இல்லை. மின்னல் வேகத்தில் நிகழ்த்தப்பட்டன கொலைகள்.

அடுத்து… மற்றொரு வீடு. வயதானவர். அவரைவிட சத்தம் செய்த அவரின் நாய். நாய் எதிர்த்ததால் அது மட்டும்தான் உயிருடன் தப்பியது. சந்திரனின் வீட்டில் ஓசை இல்லை. ஆனால், வீடு முழுவதும் அச்சம் கவிந்திருந்தது.

அவன் அம்மா கதவுகளை இழுத்து அடைத்துக் காத்தார். வீட்டின் உள்ளே இருந்த புத்தகங்கள், உணவு மூட்டைகள், நீர்க் குடங்கள் ஆகிய அனைத்தும் சந்திரனின் பார்வைக்குச் சுழல்வது போலத்தான் தெரிந்தன. அவனுக்குத் தலைசுற்றி, மயக்கம் வருவதுபோல இருந்தது. 

“அம்மா…” என்று அழைத்து எதையோ கேட்க நினைத்தான். ஆனால், அம்மா வெறித்து முறைத்த அந்தக் கடும்பார்வையில் அவனுக்கு அடுத்த சொல் நாவில் எழவில்லை.

வீட்டின் பின்புற வாசலில் ஒரே சத்தம். யாரோ ஓடி வரும் ஓசை. 

“மதுசங்கரன் வீட்டுக்குள்ள யாரும் இருக்கிறாங்களா?” எனக் குரல் ஒலித்து அதிர்ந்தது.

அச்சத்தோடு சந்திரனின் அம்மா கதவைத் திறந்தார்.

“உங்க மாமா? அவங்க இல்லையா?” எனப் போராளி கேட்டார்.

“கிளிநொச்சியில கூட்டம்…அங்கன போயிருக்காவ” என்று தயங்கிக் கூறினார்.

அவர்கள் ஏதும் சொல்லாமல் சென்றுவிட்டனர்.

மறுநாள் காலை. படுகொலையின் தடங்கள். பத்துச் சிங்கள மக்கள் கொல்லப் பட்டிருந்தனர். அவர்களுள் சில குழந்தைகளும் அடக்கம். கிராமமே பரிதாபத்தில் மூழ்கிக் கிடந்தது. பாதைகளில் ரத்தம். சுவர்களில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த சுவடுகள். 

“கந்தளாய்: பயங்கரவாத தாக்குதல் – பத்துப் பேர் படுகொலை.” – அரசு ஊடகங்கள் அறிவித்தன.

சந்திரன், பள்ளிக்குச் செல்லவில்லை. துஷாரா, அதற்குள் மீண்டும் காணாமல் போயிருந்தார். மதுசங்கரன், கிளிநொச்சியில் இருந்தபடியே ராணுவ வலையில் சிக்கிக் கொண்டார். 

அம்மா அவனை அணைத்துக்கொண்டு, “சந்திரா! இது நம்மவர்கள், எதிரிகளாக மாறும் நேரம் சந்திரா. இது நம்ம கிராமமே இல்லையே சந்திரா… நம்ம கதை வேற வழியில போகுதே!…” என்று விம்மினார். 

அம்மா இரவில் மட்டுமல்ல பகலிலும் வாயிற்கதவுகளைத் திறக்கவேயில்லை.

அன்றிரவில் சந்திரன் தானறிந்திருந்த சிங்கள எழுத்துக்களைக் கொண்டு தன்னுடைய தமிழ்ப் பாட ஏட்டில் இவ்வாறு எழுதினான் – “இருளில் மழை இல்லை. ஆனால், ரத்தம் மட்டும் அடங்காமல் சிந்திச் சிதறுகிறது கிராமம் முழுக்க.”

4

இரவில் எதையும் சொல்லாமல் கிராமத்துக்குள் மூவர் நுழைந்தனர். கந்தளாயின் ஒவ்வொரு பாதையும் ஒவ்வொரு மரத்தின் நிழலும் திடீரென்று நுணுக்கமான அச்சம் கொண்டு சிலிர்த்துக் கொண்டது. அவர்கள் வெறும் மனிதர்களல்லர் – நிழற்செருப்புகள். முகத்தில் எச்சரிக்கை. குரலில் இழிவு. உடலெல்லாம் குரூர அமைதி.

முதலாவது வீடு – துஷாரா மாஸ்டரின். கதவின் முன் மெல்ல ஒன்பது அடிகள். தட்டியதும் பல்லாயிரம் புள்ளிகளாக அவன் புன்னகை மறைந்தது. துஷாரா வாசலில் வந்தவுடன் வெறும் ஒரு கணம். ஒரே கணம்தான். அந்தக் கணமே அவன் மார்பில் துளைத்தது ஒரு குண்டு. 

என்றோ வகுப்பறையில் அவர் எழுப்பி ஒரு வினா அவர் உடலைச் சுற்றி ஓடியது – “சந்திரா சிங்களனும் தமிழனும் இருதரப்பா இல்ல…” இப்போது அந்த வார்த்தைகளைப்  போலவே துஷாரும் இருளில் கலந்து விட்டார். 

“மன்னிக்கவும்,” என்ற போராளி மெதுவாகச் சொன்னான்.

ஆனால், சத்தம் இருந்தது. அது மழை போல ஒலிக்கவில்லை. ஆனால் சிதறும் இரத்தம் சுவற்றில் விழும்போது அந்தத் துளிகளுக்கு மிக மெல்லிய ஒலி இருந்தது.

அடுத்த வீட்டில் நிகழ்வுகள் தொடர்ந்தன. ஒவ்வொரு கதவின் பின்னும் ஒரு நிழல். அந்த நிழல்களின் சூடான மூச்சு மட்டுமே தெரியும்.

ஒரு வீட்டில், மூதாட்டி, தனது இறுதி மூச்சுடன், “ஏன்?” என்றாள்.

அதற்குப் பதில் ஒரு குண்டென வந்து அவளை இறுதியாக அமைதிப்படுத்தியது.

சந்திரன் அந்த இரவு தாயுடன் கதவுகளின் பின்புறம் பதுங்கியிருந்தான். அவனது கண்களில் தூக்கம் இல்லை. கதவின் சிறு ஒளிச்சில்லில் கிராமத்தின் இருளை பார்த்துக் கொண்டிருந்தான். அதில் ஒவ்வொரு நிழலும் அசைத்தது. வீடு விட்டு ஓட முடியாத நிலை. வெளியேற முடியாத அச்சம்.

அவன் தாயும் அதேபோல், எண்ணமின்றி அமர்ந்திருந்தாள். அவள் விழிகளின் உள்ளே ஏதோ ஒரு பழைய கறுப்பு-வெள்ளைத் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.

“அம்மா… துஷாரா மாஸ்டர்…” என்றான்.

அவள் பதில் சொல்லவில்லை.

அவனது உள்ளத்தில், துஷாரின் சிரிப்பு மீண்டும் ஒளியின்றித் தோன்றியது. “சிங்களனோ தமிழனோ… ரத்தம் சிவப்புதான்.”

அந்த ரத்தம் இப்போது கதவின் அக்கம் பக்கத்தில் சிதறியது.

மறுநாள் காலை – கிராமத்தின் வாசல்கள்தோறும் ரத்தச் சிவப்பில் ஒரு துயரப் பூ கொடியுடன் மலர்ந்தாடியது.

பத்து உயிர்கள். பசுமை நிலத்தில் சிவப்புத் துளிகள். பாலர் நிழல் போல படுத்திருந்தனர். மற்றொருவர் குண்டடிபட்ட தன் குழந்தையின் உடலைத் தனது மார்பில் இறுதி முறையாக அணைத்தபடியே இறந்திருந்தார்.

அரசு நிர்வாகம் வரவில்லை. ராணுவ வாகனங்கள் தூரத்தில் நிற்கின்றன. கிராமத்தின் ஒவ்வொரு சுவரும் அந்த ‘நிழல் செருபுகள்’ எங்கிருந்தோ வந்துவிட்டு எங்கேயோ மறைந்துவிட்டனர் என்பதற்கான சாட்சியாக அசைவற்று இருந்தன. சில சுவர்களில் மட்டும் தமிழில் எழுதிய “நம்மினம்” என்ற வார்த்தை, இரத்தத்தில் எழுதப்பட்டது போல சிவந்திருந்தது.

சந்திரன், பள்ளிக்குச் செல்லவில்லை. அம்மா வாயிலின் கதவை மூடி வைத்தாள். 

மதுசங்கரன் கிளிநொச்சியில் இருந்து மீண்டும் வரவில்லை. சிங்களக் குடும்பங்கள் பதுங்கும் முகாம்களில் தஞ்சம் பார்த்தன. துஷாரா காணாமல் போனவர் பட்டியலில் சேர்க்கப்பட்டார். அவனது கையில் இருந்த வெண்சட்டை மட்டும், ஒரு தேய்ந்த பனை மரத்தின் கிளையில் நுனியில் அசைந்தது.

கிராமத்துப் பள்ளி மூடியது. முன்னைய மாணவர்கள் – இரு தரப்பாகப் பிரிந்தனர். 

தமிழ் மாணவர்கள் – “அவர்கள் எதைச் செய்தார்கள், அதற்கான பதில்தான்…” என்றனர்.

சிங்கள மாணவர்கள் – “நாங்கள் ஏன்?” என்றனர்.

உண்மை எங்கேயோ நடுவில் இருந்தது. ஆனால், அந்த நடுவில் ரத்தம் நிறைந்த புள்ளிகள் இருந்தன.

அந்த இரவு, சந்திரன் எழுதியது: “நிழல் செருப்புகள் கிராமத்தின் வாசலில் நடக்கின்றன. அவை சொற்களில் பேசவில்லை. ஆனால், உயிர்களை எடுத்துச் செல்கின்றன.”

அடுத்த காலையில் சந்திரன் வாசலில் நின்றான். சூரியனின் ஒளி கிராமத்தின் மீது விழுந்திருந்தாலும் அந்த ஒளிக்குள் வெறும் இருள்தான் பரவியது. மரங்களைத் தொடர்ந்து பறவைகளும் சத்தமின்றி இருந்தன. அந்த நிலைமை புனிதமான அமைதியல்ல. அது மரணத்துக்குப் பிறகான சாவுப் புனிதம்.

அலறல்கள். கண்களில் நம்பிக்கையின்றி ஓடும் மக்கள். எங்கும் ஓரளவு சினம்,  பெரிய அளவில் அச்சம்.

“பத்துப் பேர்… பத்துச் சிங்கள மக்கள்… குண்டடிபட்டுச் செத்தனர்… குழந்தைகள், பெண்கள்… காத்திருக்க முடியாதவர்களே! சிலர் தூக்கிலிடப்பட்டனரே! எரித்த பின்னர் தூக்கு எதற்கு?‘”

அந்தச் செய்தி புயல் வீசியது போலப் பரவியது. முதலில், சந்திரனின் அம்மா ஓடி வெளியே சென்றாள். சந்திரன் பின்னே. ஒரே தெருவில், பழைய வளைவில் இருந்த கூரை வீடுகளின் இடையே – அவை தொங்கின. உடல்கள். அவை தூக்கில் தொங்கவில்லை – அவை எரிந்த பிணங்களைப் போல் தொங்கின.

குழந்தையின் கால்கள் மெல்ல நகர்ந்தன. அதன் கைகள் பதைபதைத்தன. ஆனால், அது உயிரோடு இல்லாமல் தொங்கியது. அது விளக்கின் அருகில் தொங்கியமையால் ஒளியாட்டத்தில் அப்படித் தெரிந்திருக்கலாம். 

மற்றொரு உடல் – வயதான ஒரு சிங்களப் பெண்மணி. எப்போதும் சந்திரனுக்குப் பப்பாளி கொடுப்பவர். இப்போது அவள் கழுத்து கிழிந்தபடி, கண்ணாடியின் ஒளியில் தொங்கினாள்.

மதுசங்கரன் வந்தார். அவரது முகம் இறந்ததுபோலவே இருந்தது.

“துஷாரா!… அவன் என்ன பாவம் செய்தான்?… அவனை… இதுதான் வீரமா?”

மக்கள் ஒன்றாகக்கூடி நின்றனர் – கண்ணீருடனும் சில வினாக்களுடனும். ஆனாலும் யாரும் ஓர் எண்ணமும் சொல்ல முடியவில்லை. வன்முறையின் வண்ணம் இப்போது இரட்டையாகிவிட்டது.

ஏன் இந்தக் கொலை?

ஒரே இனத்தை நோக்கிச் செய்த தாக்குதலா?

பழிவாங்கலா?

தவறான அடையாளமா?

அல்லது… எவரும் விரும்பாத, ஓர் இன அழிப்பு ரீதியா?

ராணுவ வாகனங்கள் வந்தன. அவர்கள் மட்டுமல்ல, அரசின் விசாரணை அதிகாரிகள். ஆனால், அவர்கள் பார்வை, வாடிக்கையாளர் முகத்தில் இருப்பது போலிருந்தது – குற்றவாளியைப் பிடிக்காமல்தான் பாவங்களை எண்ணுகிறார்கள்.

“இது புலிகளா?”

“அவங்களா இப்படித் தூக்கமீது தாக்குதல்?”

“அவங்க யாரும் குழந்தைகளைக் கொல்ல மாட்டேங்களே? அப்போ யார்?”

“ராணுவத்தாளுங்ககூட இப்படித்தான் சொன்னாங்க. ஆனாலும் அவங்க தமிழ்க் குழந்தைகளைக் கொல்றாங்களே. கொல்லனுமுன்னு முடிவெடுத்த பிறவு சின்ன உசிரென்ன பெரிய உசிரென்ன. எத்தனை உயிருன்ற எண்ணிக்கைதானே முதன்மைக் கணக்கு!”

மறுப்புகளும் ஏமாற்றங்களும் கலந்து பொய்யே வெளிச்சமாக அந்த வட்டத்துக்குள் பரவியது.

சந்திரன் எதையும் சொல்லவில்லை. அவன் கண்களில், அந்தத் தூக்கில் தொங்கும் உடல்களின் நிழல் நிலைத்திருந்தது. அவன் கால்கள் நடுக்கத்தில் இருந்தன. அவன் நெஞ்சில் முதல் முறையாக வன்முறை உரையாடலாகப் பதிந்தது.

இரவில் சந்திரன் எழுதினான்: “நிழல் செருப்புகள் மட்டும் இல்லை. இப்போது நிழல் நுணுக்கம். அவை கயிறுகளாகப் பிணைந்திருக்கின்றன. அவை பழிவாங்கவில்லை. அவை எதற்கோ அடித்தளமிடுகின்றன.”

பள்ளிக்குள் நுழைய அச்சம். ஆனால், பசுமைத் தரையில் இரத்தக் கறைகள். பள்ளியின் சுவர் மீது சிங்களத்தில் எழுதி எரிக்கப்பட்ட வார்த்தை. “பயங்கரம் வந்தது.”

அதன் கீழே ஒரே வார்த்தை: “இனவிடுதலை”

ஆனால், அந்தச் சொல் இப்போது இல்லை. அது வெறும் பிணத்தின் மேல் பதிக்கப்பட்ட ரகசியக் குறியாகவே இருந்தது.

கூட்டுத் தூக்கில் ஒருவரும் உயிரோடு இல்லை. ஆனால், சின்ன சத்தம், குழந்தையின் கடைசி அலறல், தாயின் உடலுறுப்பு அறுக்கப்படும் மெல்லிய சத்தம். இவையெல்லாம் சாட்சியமா?

மதுசங்கரன் தொடர்ந்து கதறினார்: “துஷாரா… அவனோட பாவம் தமிழும் பேசுறதுதான்… நான் சிங்களமும் பேசுறேன்… என்னையும் தூக்கில் போடலாமே?…”

அவர் வீதியில் அமர்ந்தார். அருகே பாம்பு போல புழங்கியது ஒரு கயிறு. அதைப் பார்த்ததும், அவர் திடீரென்று எழுந்தார். அந்தக் கயிறு ஒருவனது கழுத்தில் இருந்திருக்கலாம் என்றே அவருக்குத் தோன்றியது.

நாளும் ஒன்றாக விளையாடியவர்கள், ஒரே பள்ளியில் படித்தவர்கள், இன்று முகமூடிகள். சிங்கள பிள்ளைகள் – “நாங்கள் பயமுறுத்தப்பட்டிருக்கிறோம்” என்றார்கள். 

தமிழ்ப் பிள்ளைகள் – “அது நியாயமான தண்டனை” என்றார்கள்.

சந்திரன் தனியாக இருந்தான். அவன் மெழுகுவர்த்தியின் ஒளியில் எழுதியது: “முகங்கள் பேசவில்லை. இப்போது மொழிகள் பேசுகின்றன. ஆனால், மொழி எதுவாக இருந்தாலும் உயிர் போவதில் எந்த வேறுபாடும் இருப்பதில்லை.”

மர்மக் கதையாக வதந்தியாகப் பரவியன. “இரவில் கந்தளாயின் அடியில் ரத்தச் சுரங்கம் தோண்டப்பட்டது” என்றார்கள். 

சந்திரனின் மனத்தில் அது உண்மை போலவே பதிந்தது. அந்தச் சுரங்கம், நிழல் செருப்புகள் நடந்து வரும் பாதையில் – உயிர்களைத் திணித்து எடுத்துச் செல்லும் குழாயாக இருந்தது.

மறுநாள் இரவும் தூக்கமின்றிக் கழிந்தது. காலையிலிருந்து ராணுவம் கிராமத்தையே சுற்றி வளைத்தது. விசாரணைகள் நடந்தன. ஆனால், யாரும் பிடிக்கப் படவில்லை.

ஒரு வாரம் கழித்து, சம்பவம் ஒரு பத்திரிகை பக்கமாக மாறியது.

“கந்தளாய்: பத்து சிங்கள மக்கள் தூக்கில்.” அதன் கீழ், “புலிகளின் தாக்குதலா?”

ஆனால், யாரும் கேட்கவில்லை, “யார் அந்தப் பத்து உயிர்கள்?” என.

அவர்களின் பெயர்கள், முகவரிகள், அவர்களின் புன்னகைகள், ஆசைகள், அச்சங்கள் எவையும் அந்தப் பத்திரிகையில் இல்லை. அவை ரத்தச் சுரங்கத்தில் உதிர்ந்து விழுந்துவிட்டனவோ?.

5

பாதைகள் இருளால் மூடப்பட்டிருந்தன. சந்திரன் வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தான். அவனது கண்களில் உறங்காத இரவுகளின் சுழற்சி. உடல் சிறிது வலிக்க, நெஞ்சுக்குள் ஒரு கொந்தளிப்பு.

அம்மா சமையலறையில் இருந்து சத்தமின்றி அழுதுகொண்டிருந்தாள். மதுசங்கரன் பக்கத்து அறையில். அவரது கண்களில் வினாக்கள், உள்ளத்தில் அவற்றுக்குரிய பதில்கள். ஆனால், அவை ஒன்றையொன்று அடையவில்லை. வினாக்கள் வினாக்களாகவும் பதில்கள் பதில்களாகவும் தனித்தனியே நின்றிருந்தன. அவை ஒருபோதும் ஒன்றுக்கொன்று ஆதரவாக, அருகருகே நிற்க முடியாமல் தவித்தன. 

அதேநேரம், ரேடியோ சத்தம் பரவியது. புலிகள் தலைமை வெளியிட்ட செய்தியாக ஒரு போலிச் செய்தி வெளியானது: “இது இராணுவத்தின் செயல். நாங்கள் சம்பந்தப்படவில்லை.”

அந்தச் செய்தி காற்றாக அலைந்தது. சிலர் நம்பினர். சிலர் புலம்பினர். ஆனால், பெரும்பாலானோர் – ஏற்கனவே தீர்ப்பு எழுதியிருந்தனர்.

“தூக்கில் குழந்தைகளா? இதைப் புலிகள் செய்வார்களா?”

“அவங்க ஏற்கனவே எச்சரிக்கையா சொல்லிருந்தாங்களே!”

“ஆமாம்… ஆனா துஷாரா? அவன் மட்டும் மன்னிக்கக் கூடியவன்தானே?”

“நீ தமிழன். அவன் சிங்களன். அதனால்தான்.”

அந்த வார்த்தைகள் சந்திரனின் உள்ளத்துக்குள் ஒட்டிக்கொண்டன. அவனது மனக்காட்சியில் துஷாரின் முகம். சிரித்தபடி, வெண்சட்டை அணிந்து, ஒவ்வொரு வாரமும் வந்து நின்று சிங்கள எழுத்துகளைக் கற்றுத் தந்த ஆசான்.

இப்போது, அந்தச் சிரிப்பு இல்லை. அந்த குரல் இல்லை. ஆனால், அவர் கற்றுக்கொடுத்த சிங்கள எழுத்துகளுள் சில மட்டும் அவன் நெஞ்சில் எஞ்சியிருந்தன.

சிங்களப் பாடல்கள் அவன் காதுக்கு இனிமை இல்லாத குரலில் ஒலித்தன.

முடிந்ததா எல்லாம்? சமாதானமா, பழிவாங்கலா?

மதுசங்கரன் மதிய வெயிலில் வாசலில் நின்றார். இப்போது ஒரு புதிய அழுத்தம் அவரைச் சுரண்டியது. அவர் தன் மகனை உரக்கக் கூவி, “சந்திரா!” என்று அழைத்தார். 

சந்திரன் எழுந்தான். வீதிக்கு வந்தான். 

“டேய்! இது நம்ம கிராமமேயில்லை. இது நமக்கு உரிமையா இல்லை. நமக்கு இன்னும் உயிர்க்கூட இல்லை” என்றார்.

வீதிக்கு நடுவே நடக்கத் தொடங்கினான். அவன் காலடியில் பூத்திருந்த புன்னகைகள் மெதுவாக நசுங்கின. 

கிராமத்து மந்தையின் நடுவில் இருந்த மேடைச் சுவரில் பெரிய எழுத்துகளில் “மரணம் தாண்டி விடுதலை” என்று எழுதப்பட்டிருந்தன.

அந்த வார்த்தைகளைப் படித்த சந்திரனுக்கு அடுத்த மூச்சு வரவில்லை. அந்தச் சுவரின் மேற்பரப்பில் குருதியின் துண்டுக்கறையிருந்தது. அவன், ‘சுவாரசியமற்ற சுவரழகு போல’ என நினைத்துக்கொண்டான்.

சிங்கள ஊடகங்கள் – “புலிகள் கொடூரம்” என்று எழுதின. 

தமிழ்ப் பத்திரிகைகள் – “தூக்குத் தாக்குதல் – சந்தேகமுள்ள முகங்கள்” என்று எழுதின.

சிங்களப் பொதுமக்கள் சிலர் அரசை வினவத் தொடங்கினர்:

“ஏன் நம்ம மக்கள் பாதுகாக்கப்படல?”

“இது உண்மையா, களவுசெய்யப்பட்ட மறுசெயலா?”

“புலிகள் செய்திருக்க முடியாது. பக்கத்து வீட்டில இருக்கிறவன் சொல்றான் – அந்த இரவு ராணுவம் வந்திருக்கு. யாரும் வெளியே போகல. அப்போ எப்படி இவங்க வந்தாங்க?”

ஆனால், அரசியல் அலைகள் உண்மையை அழுத்தின.

“நாங்கள் கூறியதுதான் இறுதி. புலிகள்தான் காரணம். சுற்றிவளைத்து அழிக்க வேண்டியது அவசியம்.”

ஒவ்வொரு நாளும் சந்திரன் இது பற்றி அவன் தந்தையிடம் கேட்க நினைத்தான். ஆனால், கேட்கவில்லை. இது குறித்துத் தன் தாயிடம் அழ நினைத்தான். ஆனால், அழவில்லை. இது பற்றிப் பள்ளியில் பேச நினைத்தான். ஆனால் பேசவில்லை. இத்தகைய முடிக்க முடியாத தன் எண்ணங்களை நினைத்து அவன் தன்னையே கடிந்து கொண்டான்.

அவன் வீட்டுப் பின்புறம் இருந்த பழைய கிணற்றடியில், காகிதத்தில் கவிதைபோல ஒரு குறிப்பு இருந்தது. அதை எடுத்துப் படித்தான்.

“துஷாரா!

உனது சிரிப்பு என் உள்ளத்தில் இறங்கிவிட்டது. இப்போது என் மொழியில் குழப்பம்தான்.

நீ சிங்களமா, தமிழா? தெரியாது…

ஆனால், நீ மனிதன்… நீ இருந்தாய்.

இப்போது, தெறித்த ரத்தத்தில் மட்டுமே உன் சாயல் தெரிகிறது.”

இது தன் தந்தையின் கையெழுத்து என்பதை அவன் உடனே அறிந்துகொண்டான். ஆனால், இது பற்றி அவன் யாரிடமும் கூறவில்லை. இக்குறிப்பு அவனுடைய மாஸ்டரைப் பற்றியது என்பதால் அதைப் பத்திரப்படுத்திக்கொண்டான். 

புலிகள் தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியாயிற்று – “நாங்கள் இந்நிகழ்வுடன் தொடர்புடையவர்கள் அல்லர் இவை பொய்கள். வழக்கம்போல இதுவும் ராணுவத்தின் புனைவுகளே!”

ஆனால், இது எதிர்மறைப் புனிதம் போலவே பரவியது. யாரும் கேட்காமலேயே தீர்ப்பு எழுதப்பட்டதுபோலத்தான் இது இருந்தது.

அந்த இரவு, மதுசங்கரன் சந்திரனை அழைத்தார். பொன்னாடையில் கட்டி வைத்திருந்த புகைப்படத்தை எடுத்தார். அதை அவனுக்குக் காட்டினார். அதில் அவரது வலது தோள்மீது துஷாரா மாஸ்டர் கைப்போட்டபடி சிரித்துக் கொண்டிருந்தார்.  

“டேய்! இந்த உலகம் உண்மை இல்லையா?” என்று கேட்டார்.

சந்திரன் பதிலளிக்கவில்லை. ஆனால், அவன் உள்ளத்தில் பதிந்தது, “சத்தியம் இந்த நாட்டில் ஒரு கல்லறைதான்” என்று.

6

மழைபொழிந்து கழிந்திருந்தது. வீதிகள் நனைந்து, பனிக்காற்று கிராமத்தின் மீது ஒட்டியிருந்தது. ராசா மாநிலத்தலைவர். அவர் முகத்தில் கடந்து செல்ல முடியாத ஒர சோர்வு இருந்தது. ஆனால், கண்களில் மட்டும் தீ.

அழிவுக்குப் பின்னர் கிராமத்தில் ஏற்பட்ட பதற்றம், ஒருவகையில் அரசியல் பிரச்சனையாய்ப் பெரிதாகிக் கொண்டிருந்தது. நாடு முழுக்க மக்கள் கிளர்ச்சி. அவர்கள் சிந்திக்கத் தொடங்கியிருந்தனர். அதனால் வந்தன எதிர்வினைகளும்.

ராசா செய்தியாளர்கள் கூட்டத்தில் முகம் காட்டினார். பலர் எதிர்பார்த்தது போலவே, அவர் கூறிய முதல் வரிகள், “இது போராட்டத்தின் இருண்ட துளி. இனவாதத்தால் வேரோடு அழிவோம்” என்றே தொடங்கின.

அந்த வார்த்தைகள் காற்றில் குத்திய பிசாசுகளாய் பரவின. சிலர் கைத்தட்டினர். சிலர் பதறினர். ஆனால், புலிகள் தலைமை – அதே இரவு – ஒரு வரியை மட்டும் வெளியிட்டது: “போர் என்பது தியாகமும் ரத்தமும் ஒற்றுமையும். ராசா, எச்சரிக்கப்படுகிறாய்!.”

இது நேரடி எச்சரிக்கை. மரண மிரட்டல். ஆனால், ராசாவின் முகத்தில் அச்சம் தெரியவில்லை. பிறகு வந்த பேட்டி ஒன்றில் ஒரு வினாவினைக் கேட்டார். “ஆயுதப்போராட்டம் நியாயமானதா? அப்படியென்றால், நம்ம பிள்ளைகளுக்கு இருண்ட எதிர்காலத்தைத்தான் தரப்போகிறோமா? எனக்குப் பதில் சொல்லுங்க?”

ராசா, ஆரம்பத்தில் ஆசிரியர். புத்தகங்களால் உயிர் வாழ்ந்தவர். தமிழீழத்தின் சுதந்திரத்தைப் பற்றிய ஆர்வம் கொண்டவராய் இருந்தார். ஆனால், ஆயுதம் எடுத்ததும் அது நீங்கியது. அதனால், பேச்சில் மட்டும் கவனம் செலுத்தினார்.

இருபதுகளில் இயக்கத்தில் சேர்ந்தார். சில ஆண்டுகளுக்குப் பின், மக்கள் சார்ந்த அமைப்பில் உச்சநிலைக்கு வந்தார். ஆனால், புலிகளுக்குள் அவர் மீது வளர்ந்த ஐயம் – அவர் “மிகவும் நியாயமானவர்” என்றதுதான். ஆனால், அவர் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருந்தார். 

அந்தக் காலத்தில், யாரேனும் இனத்தின் சார்பாகக் குரல் கொடுத்தால், அந்தக் குரல்கூட ஐயத்துக்குரியதே. ராசா அதை உணர்ந்தவர். ஆனால், பேசுவதை நிறுத்தவில்லை. 

“தமிழ் மக்கள் உயிர்க் குடிக்கப் போகிறார்கள் என்றால், அதை நாம் பேச வேண்டாம் என யாராவது சொன்னால், நான் என்ன ஊமையா?” என்று கேட்டார்.

ஒவ்வொரு இரவிலும் அரசின் ரகசிய காவல்துறை, புலிகள் முகாம்கள் என இரு பக்கத்திலிருந்தும் அவருக்குத் தொலைபேசியில் அழைப்புகள் வந்தன. “உனக்கு ஒரு வாரம் கெடு. உண்மையா? அல்லது உயிரா?”

அவரிடம் பத்திரிகையாளர் கேட்டார், “உங்களை எதுவும் அஞ்ச வைக்கலையா?”

அவர் சிரித்தார். பின்னர் அவர் மெல்ல சிரித்துக்கொண்டே, “மரணம் என்றால், அதில் நீதியும் இருந்தா பரவாயில்லை. ஆனால், மரணம்கூட இனவாதத்தின் விளைவா என்றால், அதைக் கவிதையாய் எழுத முடியாது” என்றார்.

சிலர் ராசாவை, ‘அரசின் வேலைக்காரன்’ என்றார்கள். மேலும் சிலர் அவரை, ‘இரட்டைக் குரலில் பேசியவர்’ என்று குற்றஞ்சாட்டினர். ஆனால், அவர் ஒவ்வொரு கூட்டத்திலும் சொன்னார் – “நான் எப்போதும் தமிழன்தான். ஆனால், அது மட்டும் போதாது. நான் மனிதனாகவும் இருக்க வேண்டும். நீங்களும் அவ்வாறே”

ஒருநாள் காலை, ஊர்காவல் நிலையம் அருகே வெறும் மோட்டார் சைக்கிள் சாய்த்து நிறுத்தப்பட்டிருந்தது. அதற்கு எதிரே இருந்த கட்டடத்தின் கண்ணாடி சன்னல்கள் சில உடைந்து சிதறின. அந்தக் கண்ணாடியின் வழியே, வாசலில் இருந்தது இடியென குரல் கேட்டது.

“முடிவுக்குத் தயாராகு. நீதிமன்றங்கள் இங்கு இல்லை.”

அதனை ராசா அசைவின்றிச் செவிமடுத்தார். அவரது வீட்டின் முன்பாகக் கூட்டம். சிலர் ஆதரவு. சிலர் எதிர்ப்பு. பதற்றம். குரல். 

“ஏன் நீ இப்படிப் பேசுற? எதுக்காகச் சிங்களருக்கு ஆதரவா சத்தம் கொடுக்குற?”

“அவங்களும் நம்ம போல மனிதர்கள்தானே?!”

“அவங்கதான் நம்மள எதிர்க்குறாங்களே? அரசாங்கமா, ராணுவமா, காவலர்களா, கைக்கூலிகளா என எல்லா விதத்துலையும் நம்மளைத் தாக்குறாங்களே?

“அதுக்காக?”

“நீயும் எதிர்க்கலாமே, எங்களைப் போல” என்று கூறிக் கூச்சலிட்டனர்.

அந்தக் கூட்டத்தில் சந்திரனும் இருந்தான். ஆனால், சற்றுத் தொலைவில். கல்லூரிக்குச் சென்றிருந்த நாள்களில் அவனது விழிகள் ராசாவைத் தேடின. பேச முடியவில்லை. ஆனால், ராசாவின் ஒவ்வொரு சொல்லும் துஷாரின் சிரிப்பைத்தான் அவனுக்கு நினைவுபடுத்தியது. 

ராசா, கடைசியாக மாணவர் பேரவையில் பேசியபோது, “இந்த மண்ணில் தமிழனாக வாழ்வதற்கு, அவனைத் தமிழனாகவே வாழவிடணும். அதற்கான விடுதலை என்பதே, ஒருவரையும் அழிக்காத பாதையா இருக்கணும்” என்றார். 

அதன் பின்னர் அவர் எந்த மேடையிலும் ஏறவில்லை. அவரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. மூன்று நாள்களுக்குப் பின்னர். மின்னல் போல் செய்தி பரவியது, “ராசாவின் மரணம் உறுதி செய்யப்பட்டது” என்று.

மரண அறிவிப்புக்குப் பின்னும் ராசாவின் வார்த்தைகள் வீதிகளில் ஒலித்தன – “விடுதலை என்பது எல்லோருக்கும் சமமாக இல்லையெனில், அது எப்படி விடுதலையாகும்?”

சந்திரன் வீதியோரத்தில் அந்த வாசகத்தைச் சுவாசித்து உணர்ந்தபோது, அவனுக்குள் புதிய சிந்தனை தோன்றியது. “முற்றிருட்டில்கூட ஒளிக்கீற்று இருக்கலாம்தான். ராசாவோடு போனது ஒலி மட்டுமல்ல, யாரும் தீண்டாத அமைதியின் துளியுந்தான்!.”

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *