திண்டுவும் முத்துவும் மிதக்கும் வனத்தின் வேர்களைப் பற்றிக் கொண்டே சென்றார்கள். பாடினார்கள், ஆடினார்கள், விளையாடினார்கள்.
”ஒவ்வொரு வேரையும் பிடித்து
உன் உடம்பை இழுத்து நிறுத்து”
தாவித்தாவி கடந்து
தள்ளாடி விழுந்து”
மல்லாடி எழுந்து”
”இதென்ன பாட்டு முத்து?” என்று சிரித்தான் திண்டு.
”வேடிக்கைப் பாட்டு” என்றான் முத்து. பிறகு ”ஆ…..திண்டு பசிக்கிறதே என்ன செய்வது?” என்று கேட்டான்”
”இதோ” திண்டு அவனிடம் ஒரு பழத்தைத் தந்தான். அதை அவன் தன் மேலாடைக்குள் மறைத்து வைத்திருந்தான். அது யுரேனக நகரியின் உணவுகளில் முக்கியமான ஒன்று. நீல நிறமான அந்த பழம் மிகவும் சுவையானது. அதை நீல வைரப்பழம் என்று அழைத்தனர். ஒளிவீசக் கூடியதாக இருந்தது அந்த பழம்.
”இதை எப்போது எடுத்து வைத்தாய்?” என்று முத்து கேட்டான்.
”நாம் புறப்படுவதற்கு சற்று முன்புதான். அத்துடன்…” என்று சொல்லி ஒரு நீர்க் குடுவையையும் மேலாடையில் இருந்து எடுத்தான்.
”ஆ…நீரும் இருக்கிறதா? திண்டு…மகிழ்ச்சி..மகிழ்ச்சி…..மற்றும் மகிழ்ச்சியே என் பயிற்சி” என்றான் முத்து.
”என்ன உளறுகிறாய் முத்து? என்று திண்டு கேட்டான்.
”மகிழ்ச்சி என்பதே உளறல் தானே திண்டு. இந்த உண்மை உனக்குத் தெரியாதா என்ன? மகிழ்ச்சியானவன் மட்டுமே உளற தகுதி கொண்டவன். மேலும் உளறுபவன் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கத் தகுதியானவன்” என்றான் முத்து.
”போதும் போதும் முத்து….நீ சாப்பிடு பிறகு உன் விருப்பம் போல உளறு” என்று சிரித்தான் திண்டு.
முத்து மகிழ்ச்சியாக பழத்தை உண்டான். பிறகு நீர் அருந்தினான். பிறகுதான் அவனுக்கு திண்டு சாப்பிடவில்லை என்ற நினைவு வந்தது.
”நீ சாப்பிடவில்லையே திண்டு…நானே எல்லாவற்றையும் உண்டு விட்டேனே”
”பரவாயில்லை முத்து. எனக்கு பசிக்கவில்லை”
”கொஞ்ச நேரம் கழித்து பசித்தால் என்ன செய்வாய்?”
”அப்போது பார்த்துக்கொள்ளலாம் முத்து”
”உன்னிடம் இன்னொரு பழம் இருக்கிறதா?”
”இல்லை”
முத்து வருத்தம் அடைந்தான். தான் சாப்பிடும் போது அவனுக்குத் தராமல் உண்டு விட்டோமே என்று வருந்தினான்.
”நீ கவலைப்படாதே முத்து. நமக்கு வழியில் ஏதாவது கிடைக்கும். நீ மகிழ்ச்சியுடன் உளறுவதைத் தொடரு” என்றான்.
முத்து சமாதானமடைந்தான். அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். சற்று நேரம் கழித்து திண்டு கேட்டான், ”முத்து ஒரு விஷயத்தை கவனித்தாயா?”
”என்ன திண்டு?”
”பொன்னி ஆற்றில் இறங்கிய போது நம் கால்கள் நனைந்தன. ஆனால் ஆற்றின் ஊடாக நடக்கும் போது கால்கள் நீரை உணரவில்லை”
முத்து வியப்புடன் ”ஆம்” என்றான். பின் ”ஏன்?” என்று கேட்டான்.
”ஏனெனில் அதுவும் ஈர்ப்பு விசை குறைந்த பகுதி என்பதால் அந்த ஆறு நிலத்தைத் தொடாமல் சற்று மேலே ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த மிதக்கும் வனத்தின் மரங்களைப் போல மிக உயரத்தில் எழவில்லை” என்றான் திண்டு.
”ஏன்?”
”மிதக்கும் வனத்தை விட அங்கு ஈர்ப்பு விசை சற்று கூடுதல்”
”ஓ….”
அவர்கள் ஒரு பகல் முழுவதும் நடந்து அந்த மிதக்கும் வனத்தைக் கடந்தார்கள்.
அவர்கள் இருவரும் எங்கு செல்கிறோம் என்பதே தெரியாமல் சென்று கொண்டு இருந்தார்கள். யுரேனஸ் என்னும் மாபெரும் பனிக்கோள்! அதன் உட்புறம் இருக்கும் ஒரு தலைகீழ் உலகில் புவியன்னையின் இரு குழந்தைகள் சுற்றித் திரிவதை பூமியில் உள்ள எவரும் கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்கள் அன்று.
அதே சமயம் பூமியில் கனசேகரனும் தினசேகரனும் திண்டுவின் அப்பாவை வில்வ கோட்டையில் சந்தித்தனர். மரங்கள் அடர்ந்த சிறு காட்டின் நடுவே இருந்தது அந்த கோட்டை. கற்களால் ஆன பெரும் கோட்டை. காட்டில் ஏராளமான வில்வ மரங்கள் இருந்தன.
”நான் உங்கள் இளவரசர் கைம்மா என்ற இளைஞனுக்கு உதவி செய்து விண்ணிற்கு அனுப்பியதை அறிவேன்” என்றார் திண்டுவின் அப்பா.
தினசேகரன் வியப்படைந்தார். கனசேகரனுக்கு அது வியப்பளிக்கவில்லை. திண்டுவின் அப்பா போன்ற ஒருவருக்கு அது தெரியாமல் இருந்தால் தான் ஆச்சரியம் என்று அவர் நினைத்தார். திண்டுவின் அப்பாவுடன் வில்லரும் இருந்தார்.
”நல்லது நண்பர்களே. உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. நீங்கள் என்னை சந்திப்பதற்காக இவ்வளவு தூரம் வந்தீர்கள். நன்றி” என்றார் திண்டுவின் அப்பா.
”உங்கள் குழந்தை மீண்டும் கிடைத்து விடுவான்” என்றார் தினசேகரன்.
”ஆம். நான் உறுதியாக உள்ளேன்“ என்றார் அப்பா.
அப்போது ஒரு வீரன் வேகமாக வந்து திண்டுவின் அப்பாவை அழைத்து அவரசமாக ஏதோ சொன்னான். அவர் பரபரப்படைந்தார்.
”சரி. நீங்கள் இருவரும் ஓய்வு எடுங்கள். நான் ஒரு அவரச வேலையாக சென்று வருகிறேன்.” என்றார்.
பின் கவச உடையணிந்து ஆயதங்களுடன் தன் போர் வீரர்களை உடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.
கனசேகரன் அவர் செல்வதற்கு முன்பாக ”தவறாக இருந்தால் என்னை மன்னிக்கவும். தாங்கள் எதற்காக செல்கிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார்.
”தவறு ஒன்றுமில்லை. அருகே இருக்கும் ஊரில் இரு தரப்பினர் இடையே போர் போல சண்டை நடந்து கொண்டிருக்கிறதாம். அது என்னவென்று பார்க்கத்தான் செல்கிறேன்”
”நாங்களும் வருகிறோம்” என்றார் தினசேகரன்.
”நீங்களுமா…?” திண்டுவின் அப்பா தயங்கினார்.
”ஒற்றர்கள் என்றாலும் நாங்களும் போர் வீரர்கள் தான். போரில் ஈடுபட்டு வெகுகாலம் ஆகிறது என்றாலும் போர்க்கலையை நாங்கள் இன்னும் மறந்துவிடவில்லை” என்றார் கனசேகரன்.
”நல்லது. நீங்களும் வரலாம். ஆனால் பக்கத்து நாட்டு வீரர்களான உங்களை போரில் ஈடுபட அனுமதிக்க முடியாது” என்றார் அவர்.
“இல்லை. நாங்கள் சும்மா உடன் வருகிறோம்” என்றார் தினசேகரன்.
முப்பது வீரர்கள் கொண்ட படையுடன் அவர்கள் அருகே இருந்த ஊருக்கு புரவிகளில் விரைந்தார்கள். அவர்கள் சென்று சேர்வதற்குள் அங்கு போர் செய்து கொண்டிருந்த இரு தரப்பும் மேலும் தூரம் சென்று விட்டிருந்தார்கள். ஊரில் பல வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதால் எரிந்து கொண்டிருந்தன.
”ஊருக்கு நெருப்பு வைத்திருக்கிறார்கள்” என்றார் திண்டுவின் அப்பா.
”பாவம் மக்கள்” என்றார் தினசேகரன். அந்த ஊர் மக்கள் தீயை அணைப்பதற்காக போராடிக் கொண்டிருந்தனர்.
தன்னுடன் வந்த முப்பது வீரர்களில் பதினைந்து பேரை வீடுகளின் நெருப்பை அணைத்து மக்களுக்கு உதவும் படி உத்தரவு இட்டார் திண்டுவின் அப்பா. மற்ற பதினைந்து வீரர்களை மட்டும் தன்னுடன் அழைத்துக் கொண்டு ”நாம் செல்வோம்” என்றார்.
அவர்கள் அந்த அக்கிரமக்காரர்களைத் தேடி விரைந்தனர். அவர்களால் வேறு இடங்களுக்கு மேலும் தீங்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்று மிகவும் அவரசமாக சென்றனர்.
திங்கள் என்ற ஊரின் அருகே போர் நடந்து கொண்டிருந்தது. வாட்களும், வேல்களும் பெரும் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன. காற்றைக் கிழித்துக் கொண்டு அம்புகள் பறந்தன. வெறிக் கூச்சலும் ஓலமும் கேட்டுக் கொண்டிருந்தது. நெருப்புப் பந்தங்களை தூக்கிக் கொண்டு புரவிகளில் விரைந்த சிலரை பறந்து வந்த அம்புகள் துளைத்துச் சரித்தன.
சிறிது நேரம் திண்டுவின் அப்பாவிற்கும் கனசேகரனுக்கும் தினசேகரனுக்கும் உடன் வந்த வீரர்களுக்கும் அங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.
பின்னர் ஒரு பெரிய கொள்ளை கும்பலுக்கும் தங்களுடைய நாட்டின் படை வீரர்களுக்கும் போர் நடக்கிறது என்பதை தினசேகரன் கண்டுகொண்டார்.
”அவர்கள் நம் நாட்டின் வீரர்கள். கொள்ளையர்களுடன் போரிடுகிறார்கள்” என்றார் அவர்.
”ஆம்” என்றார் கனசேகரன். இருவரும் தங்கள் வாட்களை உருவி உயர்த்திக் கொண்டு போரிட தயாரானர்கள். எனினும் திண்டுவின் அப்பாவைப் பார்த்து தயங்கினார்கள்.
திண்டுவின் அப்பா சிலகணம் யோசித்தார். அவர்கள் பக்கத்து நாட்டின் வீரர்கள். கொள்ளையர்களுடன் தான் போரிடுகிறார்கள் என்றாலும் நம் அனுமதி இல்லாமல் எல்லை கடந்து நம் நாட்டிற்குள் வந்திருக்கிறார்கள் என்று அவர் நினைத்தார். இருப்பினும் முதலில் கொள்ளையர்களை ஒழிக்க வேண்டும். மற்றவற்றை பிறகு பேசிக்கொள்வோம் என்று வில்லர் சொன்னதை அவர் ஏற்றுக்கொண்டார். அவர் அனுமதி கிடைத்த அந்த கணமே தினசேகரனும் கனசேகரனும் தங்கள் நாட்டின் வீரர்களுக்கு ஆதரவாகப் போரிட தங்கள் குதிரைகளில் பாய்ந்து சென்றனர்.
திண்டுவின் அப்பாவும் அவரது வீரர்களும் அவர்களுடன் இணைந்துகொண்டு பக்கத்து நாட்டு வீரர்களுக்கு ஆதரவாகப் போரிட்டனர். சில நிமிடங்களில் அறுபதுக்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் வீழ்ச்சியடைந்தனர். பலர் கைது செய்யப்பட்டனர்.
பக்கத்து நாட்டு வீரர்கள் நடுவிலிருந்து ஒரு வெள்ளைக் குதிரையில் விரைந்து வந்த ஒரு வீரன் மிகத் திறமையுடன் போரிட்டான். போர் முடிந்த பிறகு தான் அவனை கனசேகரனும் தினசேகரனும் அடையாளம் கண்டனர்.
”அட…நம் இளவரசர்” என்று வியப்புடன் சொன்னார் தினசேகரன்.
”யார் ? நம்முடைய இளவரசரா?…நம்முடைய இளவரசர் அச்சுவா?” என்று கேட்டார் கனசேகரன்.
”ஆம். அவரே தான்” என்றார் தினசேகரன்.
திண்டுவின் அப்பா ஆச்சரியம் அடைந்தார்.
அச்சு புன்னகையுடன் அவர்களை நோக்கி வந்தார். அவர் திண்டுவின் அப்பாவிற்கு வணக்கம் தெரிவித்தார்.
”மன்னிக்க வேண்டும் காவலர் தலைவரே. உங்கள் நாட்டின் அனுமதி இன்றி எல்லை கடந்து வந்தது தவறுதான். அவசரத்தில் எனக்கு வேறு வழி வழியில்லை. இந்த கொள்ளையர்கள் எங்கள் நாட்டின் எல்லைப்புற ஊர்களை கொள்ளையடித்துவிட்டு உங்கள் நாட்டில் நுழைந்துவிட்டனர். உங்கள் நாட்டின் ஊர்களிலும் இவர்கள் கொள்ளையடித்திருக்கின்றனர். நான் என் படைகளுடன் இவர்களை விரட்டிக் கொண்டு வந்தேன். இவர்கள் அடர் காடுகளுக்குள் புகுந்து தப்பி விடுவதற்கு முன் பிடிக்க வேண்டும் என்பதால் நாட்டின் எல்லை கடக்கும் படி ஆகி விட்டது” என்றார் அச்சு.
”நல்லது இளவரசே. நல்ல நோக்கத்தின் பொருட்டு வந்திருக்கிறீரகள். தங்களுக்கு என் நல்வரவு. நான் இங்கு நிகழ்ந்தவற்றை விளக்கி எங்கள் அரசருக்கு ஓலை அனுப்பிவிடுகிறேன். தாங்கள் எங்களுடன் வில்வ கோட்டைக்கு வாருங்கள். எங்கள் விருந்தினராக தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்றார் திண்டுவின் அப்பா.
அன்று இரவு அவர்களுடன் வில்வ கோட்டையில் தங்கினார் இளவரசர் அச்சு. மறுநாள் அவரை சந்திப்பதற்காக எல்லைநல்லையிலிருந்து அமைச்சர் வந்தார். அவருடன் உரையாடி விட்டு பின் மதியம் இளவரசர் தன் நாட்டிற்குத் திரும்பினார்.
(மேலும்)
