கிள்ளிவளவன் வாழ்க்கையின் ஓட்டத்தில் இருந்து விலகி வெகு தூரத்தில் இருக்கும் தனிப்பாதை அவன். “வாழ்க்கையில் எப்படியாவது விரைந்து நல்ல நிலையை அடைந்து ஒரு திருப்தியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதிலேயே அவனது சிந்தையும் சிரத்தையும் எப்போதும் சேர்ந்தே இருந்தன. அதற்காக அவன், ஊர்ச் சலசலப்பில் இருந்து விலகி, புதுக்கோட்டையின் புறநகர் பகுதியில் ஒரு வாடகை வீட்டைத் தேடி கண்டு கண்டுபிடித்து அதில் குடியிருந்தான்.
அவன் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்ப்புறம் ஒரு இரட்டை மாடி வீடு இருந்தது. மேல்புறம் ஒரு முதியவர் மட்டும் குடியிருக்கும் சிறு குடிசை இருந்தது.
அவன் தங்கியிருக்கும் வீட்டிற்கு எதிரே இருப்பது அன்பு இல்லம் எனப்படும் அழகிய இல்லம். “
கிள்ளிவளவன் காலையில் அவன் குடியிருக்கும் வீட்டில் தோட்ட வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கும்போது எதிர் வீட்டில் இருந்து இனிமையான இசை கேட்டு கொண்டிருக்கும். சில நாட்கள் அந்த இசை கர்நாடக இசையாகவும், சில நாட்கள் அது மெல்லிசையாகவும், மேற்கத்திய இசையாகவும், சில வேலைகளில் அது தமிழிசையாகவும் இருக்கும். மற்றும் சில வேலைகளில் அந்த வீட்டு இளம் பெண்ணின் இன்னிசையாகவும் அது காற்றில் கலந்து வந்து அவன் காதுகளில் இனிக்கும். கிள்ளிவளவன் அவற்றை ரசித்தபடி தனது தோட்ட வேலையை பார்த்துக் கொண்டிருப்பான்.
ஒரு நாள் பகல் பொழுதில் அவன் பாரதியாரின் பாடல் ஒன்றை கேட்டு பரவசம் அடைந்தான். அது அந்த வீட்டு பெண்ணினுடைய குரல் என்பது அவனுக்கு சில நாட்களுக்கு பிறகே தெரிந்தது.
ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த அந்த இனிய குரல் போகப் போக அவன் காதுகளுக்கு சிம்பொனி இசையாக மாறிப்போனது. காலப்போக்கில் அது காதலாகி கனிந்தது.
திடீரென்று ஒரு புதன் கிழமை காலையில் அவன் கட்டிலில் படுத்தபடி காய்ச்சலில் துடித்தான். பின் தவித்தான். அப்போது வெளிவாசல் கதவு வெளித் தாழ்ப்பாள் மட்டும் போடப்பட்டு, உட்புறம் பூட்டப்படாமல் திறந்தே கிடந்தது. வெளி ஆட்கள் எவரும் எளிதில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைவதற்கான வாய்ப்பும் அதில் மறைந்து கிடந்தது.
புதன்கிழமை அன்று எவரும் உள்ளே வரவில்லை.
இரண்டாம் நாள், அவனது காய்ச்சல் அவனை அலம்பவும் புலம்பவும் செய்தது. அப்போதும் அவனை எவரும் எட்டிப் பார்க்கவில்லை.
மூன்றாம் நாள், அவனது காய்ச்சல் ஒரு தீவிரவாதியின் திருட்டுத்தனத்தை போல் தீவிரமடைந்தது.
அவன் வீட்டு நடவடிக்கைகள் அனைத்தையும் ஒவ்வொரு நாளும் தவறாமல் ஜன்னலின் மறைவிலிருந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்த எதிர் இளம் பெண் அமுதவாணி, அன்று அவனது பரிதவிப்பையும் புலம்பலையும் பார்த்து பதற்றம் அடைந்தாள்.
அவள், மெல்லிய அதிர்ச்சியுடன் வீட்டின் வாசல் கதவைத் திறந்துகொண்டு, அவனது இல்லத்திற்குள் காலடி வைத்தாள்.
அவளைக் கண்ட முதல் கணம், குமாரகுருவின் நெஞ்சில் இடி இறங்கியது. அவன் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்த அந்த இனிய குரலுக்குச் சொந்தக்காரி, அவன் மனதில் வரைந்திருந்த சித்திரப்பாவையாக இல்லை. அவள் கரிய நிறமாக இருந்தாள். அவன் அதிர்ச்சியுடன் அவளை சில கணங்கள் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனாலும், செழுமையான கருமை நிறத்தில் அவளது முகம் பொலிவோடு பிரகாசித்தது. முகத்தில் இளமையின் வளம் கூடியிருந்தது; கண்களில் ஒரு தனித்துவமான ஒளி மின்னியது.
அவளது குரல் அவனது மனதை எவ்விதம் கட்டிப்போட்டதோ, அவ்விதமே அவளது தோற்றமும் இப்போது அவனது இதயத்தை அடிமை கொண்டது. அவன் இத்தனை நாள் பேணிக்காத்திருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஒரே ஒரு நொடியில் மின்னல் தாக்கிய கண்ணாடி போல் நொறுங்கின. அமுத வாணி அவன் அருகில் கட்டிலில் அமர்ந்தாள். அன்பாக அவனிடம் விசாரித்தாள்.
“காய்ச்சல் எத்தனை நாளா இருக்கு? ஏதாச்சும் மருந்து சாப்பிட்டீங்களா?” இப்படி கேட்டபடியே அமுதவாணி அவன் நெற்றியில் கை வைத்து தொட்டு பார்த்தாள். பின் அவனது முகத்தைப் பார்த்தாள். பின் சில நிமிடங்கள் அவனது அறை முழுவதையும் நோட்டமிட்டாள்.
“சரி உங்க பேரு என்ன?”
“என் பேரு கிள்ளிவளவன். உன் பேரு?”
“அமுதவாணி. சரி, நா புறப்படுறேன். எனக்கு வீட்டில நிறைய வேலை கிடக்கு. ரெண்டு நாளா வீட்ல விருந்தாளிங்க இருக்காங்க,” என்றாள்.
”என்ன அமுதா வந்துட்டு உடனே கிளம்புறேன்னு சொல்ற. என்ன மன்னிச்சிடு. எனக்கு காய்ச்சல் எல்லாம் இல்ல. உன்ன பாக்கணும்னு என் மனசு தவியா தவிச்சுக்கிட்டு இருந்துச்சு. இதுவரைக்கும் உன்னை நான் நேர்ல பார்த்ததே இல்லை. இப்ப நீ என்ன பாக்க வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.” இப்படிச் சொல்லிவிட்டு, அவளிடம் தன் முதல் தவிப்பைப் பற்றிக் கேட்டான்.
“நான் உனது இனிய குரலில் மயங்கி போய் அந்த குரலுக்கு சொந்தக்காரியை எப்படியாவது பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் காய்ச்சல் நாடகம்.”
அமுதவாணி அவனைப் பார்த்து புன்னகைத்தாள். வளவன் ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்தபடி அந்தப் பெண்ணை பார்த்துக் கொண்டிருந்தான்.
உடனே அவன் அமுதவாணியிடம் ஒரு கேள்வியை கேட்டான்,
“சரி, உன் வீட்டில் யார் யார் என்ன செய்கிறார்கள் என்று சொல்லவேயில்லையே?”
“அப்பா, அம்மா, ரெண்டு பேரும் வேலைக்குப் போறாங்க. தம்பி பத்தாவது படிக்கிறான். நான் என் பட்டப்படிப்பை முடிச்சு ஒரு வருடம் ஆகிறது. வேலைக்குச் செல்ல விருப்பமில்லை. புத்தகங்கள் படிப்பேன், பாட்டு கேட்பேன், பாடுவேன். சமையல், தோட்ட வேலைகளைப் பார்ப்பேன்.”
“அப்புறம் என்ன…நான் ரெண்டு நாளா காய்ச்சல்ல கத்திக்கிட்டு இருந்தேனே!. அப்ப நீ ஏன் என்ன பாக்க வரல?”
“முதல் இரண்டு நாள் எங்கள் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருந்தார்கள். அவர்களோடு பேசுவதிலும் அவர்களுக்கு பணிவிடை செய்வதிலும் நேரம் போய்விட்டது. ஆனாலும் மனம் உள்ளுக்குள் உங்களை நினைத்து தவியாய் தவித்துக் கொண்டுதான் இருந்தது. மூன்றாவது நாளும் நீங்கள் அதேபோலப் பிதற்றியபோது, மனசு தாங்கவில்லை. என்னால் வீட்டிற்குள் இருக்க முடியவில்லை. ஆனாலும் முன்னே பின்னே தெரியாத, அதுவும் தனியாக இருக்கும் ஓர் ஆணிடம் ஒரு பெண் எப்படி அவனது வீட்டிற்குள் நுழைந்து பேசுவது? அதிலும் அட்ட கருப்பாக இருக்கும் என்னை, மஞ்சள் கிழங்கு போன்ற சிவப்பு நிறத்தில் உள்ள இளைஞன் ஒருவேளை வெறுப்பாக பேசி வெளியே என்னை அனுப்பிவிட்டால் என்ன செய்வது என்பன போன்ற பயமும் பதட்டமும் என்னை படாதபாடு படுத்திக் கொண்டிருந்தது. ஏதோ ஓர் அசாதாரண சக்தி என்ன உங்க வீட்டிற்குள்ள தள்ளி விட்டது, கிள்ளிவளவன்.”
இப்படிச் சொல்லிவிட்டு அவள் அவனிடம் கேட்டாள்: “சரி, நீங்க என்ன வேலை பாக்குறீங்க?”
கிள்ளிவளவன் தடுமாறினான். ஒரு நல்ல வேலையை தேடிக் கொண்டிருக்கும் தற்சமயம் விவசாய வேலைகளைப் பார்க்கும் ஒரு விவசாயி என்பதை
அவளிடம் எப்படி சொல்வது? அவன் அச்சம் கொண்டான். அவனது மௌனமும் தயக்கமும் அவளுக்குப் புரிந்தது.
அமுதவாணி மென்மையாகச் சிரித்தாள். அது, ஆழமான அறிவு கொண்ட ஒருத்தியின் சிரிப்பு.
” நீங்கள் இனிமேல் இப்படி எனக்காக வேஷம் போடும் வேலை எல்லாம் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால் நான் இனி உங்களைப் பார்க்க வர மாட்டேன்”
அவன் முகம் கிழிந்த காகிதமாய் சிதைந்து போனது. அமுதவாணி தொடர்ந்தாள்.
“நீங்கள் எந்த வேலைக்கு போனாலும் நீங்கள் இன்னொருத்தருக்கு அடிமை. நீங்கள் சொந்தமாக உங்கள் மண்ணில் உழைத்தால், நீங்கள் அந்த மண்ணுக்கே எஜமானன். விவசாயம் செய்வதில் என்ன தயக்கம்? இந்த உலகிற்கே நீங்கள் தானே உணவு படைக்கிறீர்கள்! உங்களைப் பார்த்ததில் எனக்கு பெரு மகிழ்ச்சியே. ஆனாலும் இனி நான் உங்களை பார்க்க வரமாட்டேன்”
“ஏன் ?”
“வந்தால் நீங்கள் சும்மா இருக்க மாட்டீர்கள். நீங்கள் ஆசையோடு என்னையே பார்ப்பீர்கள்.”
“அதனால் என்ன நம் இருவர் மனங்களும் தான் ஒன்றாகி விட்டதே பிறகு என்ன?”
“நீங்கள் அப்படியே என்னை பார்த்துக் கொண்டிருந்தால் நானும் உங்களை பார்ப்பேன். பிறகு முத்தம் கொடுக்கத் தோன்றும். கட்டி அணைக்க தோன்றும்.”
“அதில் என்ன தவறு?”
“அது தவறு இல்லைதான் என்றாலும் நம் உடலும் மனமும் பலகீனம் அடைந்து விடும். பிறகு நாம் எல்லை மீறும்படியாகிவிடும்.”
“அப்படி எல்லாம் ஒன்றும் ஆகாது.”
“அப்படித்தான் நம் மனங்கள் நினைக்கின்றது. ஆனால் நம் உடல்கள் அவற்றிற்கு ஒருபோதும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. நம் உடல்கள் எப்போதும் பலவீனமானதாகவே இருக்கின்றன. இனி உங்கள் முழு கவனத்தையும் உங்களது வேலைகளில் செலுத்துங்கள். சரி நான் புறப்படுகிறேன்.” இப்படிச் சொல்லிவிட்டு அமுதவாணி அவனிடம் விடை பெற்றுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள்.
அமுதவாணியின் கரிய முகத்தில் மின்னிய அந்த ஒளியின் பிரகாசத்தால், அவனது தனிமைச் சோலைக்குள் வசந்த மலர்களின் வாசம் காற்று வெளியில் நேசக்கரம் நீட்டியபடி நீச்சல் அடித்துக் கொண்டிருந்தது.
ஒரு வாரத்துக்கு பிறகு அமுதவாணி மீண்டும் குமாரகுருவின் அறைக்குள் கையில் இரு வெள்ளை தாளினை வைத்துக்கொண்டு நுழைந்தாள். கிள்ளிவளவன் அவளை ஆச்சரியத்துடன் வரவேற்றான். இருவரும் வீட்டுத் திண்ணையில் உள்ள சிறிய மேசைக்கு முன்பாக எதிரெதிரே அமர்ந்தனர். அமுதவாணி அந்த வெற்றுத் தாளை அவனிடம் கொடுத்து அவள் சொல்வது போல் எழுதச் சொன்னாள். அவள் சொல்ல ஆரம்பித்தாள். அவன் எழுத ஆரம்பித்தான்.
“கிள்ளிவளவன் என்கிற நான் அமுதவாணி என்ற பெண்ணை மனதார விரும்புகிறேன். அவளைத் தவிர வேறு எந்த பெண்ணின் மீதும் நான் ஆசைப்பட மாட்டேன் ( எங்களுக்கு திருமணம் நடக்கும் வரை) என்று இதன் மூலம் உறுதி அளிக்கின்றேன். அடுத்து அமுதவாணி என்கிற நான் கிள்ளிவளவன் என்ற ஆணை மனதார விரும்புகிறேன். இனி அவனைத் தவிர வேறு எந்த ஆணின் மீதும் நான் ஆசைப்பட மாட்டேன் (எங்களுக்கு திருமணம் நடக்கும் வரை) என்று இதன் மூலம் நான் உறுதி அளிக்கின்றேன்.” அவள் சொல்லி முடித்த பின் இருவரும் அந்த காதல் ஒப்பந்த பத்திரத்தில் கையொப்பமிட்டனர். அதன்பின் கிள்ளிவளவன் அந்த காதல் ஒப்பந்த பத்திரத்தையும், அமுத வாணியையும் மாறி மாறி பார்த்தபடி இருந்தான்.
அப்போது அவர்கள் இருவரையும் எதிர் வீட்டில் மாடியில் நின்றபடி அமுதவாணியின் அம்மாவும் அப்பாவும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர் வீட்டின் முன்பு ஒரு வயதான முதியவர், ”அம்மா தாயே ஏதாவது பிச்சை போடுங்க அம்மா” என்று பரிதாபமாக பலமுறை சத்தமாக கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அந்த பெரியவரின் கூக்குரல் அந்த நால்வரின் காதுகளுக்கும் முற்றிலும் கேட்கவே இல்லை.
