ரேகா மான்கள்

 அந்த பெரியவரின் தொடர் குறுஞ்செய்திகள் ரேகாவிற்கு சலிப்பைத் தந்தது. அவரிடம் முகநூல் வழி பின்னூட்ட உரையாடல்களோடு மட்டும் நிறுத்தியிருக்கலாம்; கைப்பேசி எண்ணைக் கேட்டபோது கொஞ்சம் யோசித்து அனுப்பியிருக்கலாம்! அல்லது அவள் குறிப்பிட்ட கதைகளை எழுதாமலேயே இருந்திருக்கலாம். ரேகா என்று எனது இயற்பெயரைக் கூட தெரியப்படுத்திக் கொண்டது தவறுதான் என நினைத்தாள். இத்தனைக்கும் நிலாவதனி எனும் புனைப்பெயரில் இதுவரை ஏழு கதைகள்தான் எழுதியிருப்பாள்! நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறாள்!

அதில் மூன்று கதைகள் அப்படியும் இப்படியுமாய் ஒரு இளம்பெண், ஒரு நடுத்தர அல்லது வயதான ஆணையொட்டிப் பயணிப்பவை. அதிலும் வயதில் மூத்த ஆண்களிடம் ஏதோ ஒரு வழியில் பழகும், சிக்கிக் கொள்ளும் சிறுமி அல்லது இளம் பெண்ணைப் பற்றியவை. அதை அவள் கூட எழுதும்போது யோசித்ததில்லை! 

முகநூலில் குறைந்த பட்சம் தனது புகைப்படங்களையாவது பதிவேற்றம் செய்யாமல் இரவு நேரத்து ஒரு வெள்ளை ரோஜாப்பூவையோ, நிலாவையோ ப்ரொஃபைல் பிக்சராகக் காட்டியிருக்கலாமெனவும் விசனம் கொண்டாள். அல்லது தன்னுடைய படத்திற்கு அவர் ஆர்ட்டின் விருப்பக் குறியை அழுத்தியபோதே ‘தேங்க்யூ அங்கிள்!’ என்று அவரது மூக்குக் கண்ணாடியையும், மனதையும் சேர்த்தே நொறுக்கியிருக்க வேண்டும்! 

அல்லாமல் தேங்க்யூ சார்! என்று கண்களில் இதயம் கொப்பளிக்கும் ஈமோஜியோடு ஏன் பதிலளித்துத் தொலைத்தாள்? உடனே அந்தப் பழம் நோ ஃபார்மாலிட்டீஸ், முரளின்னு பேர் சொல்லி கூப்பிட்டாலே நார்மலைசா இருக்கும்னு நினைக்கிறேன் என்று வழிய இவளும் அவரின் பெயரை பாதி சுருக்கி முரளின்னு அழைத்ததுதான் எல்லாவற்றிற்கும் அடித்தளமாக இருந்திருக்க வேண்டும்! 

மிஸ்டர் முரளிதரன் என்று குறிப்பிட்டிருந்தால் கூட ஒரு இடைவெளி இருந்திருக்கும்! அவரும் காவை காவு வாங்கி ‘ரே!’ எனக் கூப்பிட்டதை எல்லாம் ஏன் இவளும் முதலில் ரசித்துத் தொலைத்தாள்? 

ஆமாம் அதுவரை யாரும் அவளை அப்படி ஆதுரமாய் விளித்தது இல்லைதான்! அதற்கு அவளின் குரல் தேன் என்றாலும் நிறம் இனிப்பு கலக்காத சாக்லேட் போல அவள் சந்தித்த பல மனிதர்களுக்கும் கசந்ததும் ஒரு காரணம்! யாரையும் பிடித்தால்தானே பிரியமாய் பெயரை சுருக்கியெல்லாம் கூப்பிட! அல்லது செல்ல பெயரெல்லாம் வைக்க! ஏன் அவளுடைய அப்பா கூட ரே என்று ஒருபோதும் ஆசையாய் அழைத்ததில்லையே..! சேச்சே..! அப்படியெல்லாம் புதுமையாய் யோசித்து அழைக்க அவர் அப்படி ஒன்றும் படித்தவர் இல்லையே என் தன்னைத்தானே சமாதானமும் செய்து கொள்ள அவள் தவறவில்லை. 

இத்தனைக்கும் தன்னுடைய காதலி பெயரைத்தான் உனக்கு வைத்துள்ளார் என அவளுடைய அம்மா ஒரு சந்தேகத்தோடேயே அவ்வப்போதுக் கூறுவாள்! அவளுக்கு வர்ஷினி, தர்ஷினி, கீர்த்தனா என்று ஏதாவது ஒரு பெயர் வைக்கத்தான் அவளுடைய அம்மா விருப்பட்டிருந்தாளாம்! ஆனால் அப்பாக்காரரோ ரேகா என்ற பெயரிலேயே பிடிவாதமாய் நின்றாராம்! சரி, சரி பெயர் வரலாறு போதும்

அடுத்தது ரேகா, முரளிதரனிடம் தன்னுடைய தொடர்பு எண்ணைக் கொடுத்தது தன்னுடைய எழுத்தைப் பற்றி ஏதேனும் பாராட்டிப் பேசுவார் என்ற எதிர்பார்ப்பிலும், ஆசையிலும்தான். அவரும் அதைப்பற்றிதான் பேசத் தொடங்கினார். ஆனால் நலம் விசாரிப்புகளுக்கு பின் முதல் கேள்வியே, “உங்க கதைகள்ல அதிகம் ராதா – சிவாஜி லவ்வாவே வருதே… என்னைப் போன்ற ஆளுங்கன்னா அவ்வளவு பிடிக்குமா?” அந்த கேள்விக்கு ரேகாவும் தடுமாறித்தான் போனாள்! மேலும் அந்த கேள்வி அல்லது அவரின் புரிதலே முரணானது! 

மூன்று கதைகளில் ஒன்று குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல் முறைக்கேடு பற்றியது, அடுத்தது நடுத்தர வயது வாத்தியார் மற்றும் மாணவியின் கள்ளம் கபடமற்ற அன்பை பேசுவது, மற்றொன்று ஒரு இளம்பெண்ணை நகரின் சுரங்கப்பாதையிலிருந்து பின்தொடர்ந்து பின் கூட்டத்தோடு கூட்டமாக மறைந்துவிடும் யாரோ ஒரு முகம் தெரியாத ஆளை வைத்துப் புனையப்பட்ட, ஒரு பெண்ணின் உளவியல் ரீதியான அச்சங்களை தத்ரூபமாக பதிவு செய்யும் கதையாகும்! இதில் எதில் அவர் எடுத்துக்கொண்ட பொருள் பேசும் கதை இருக்கிறது? 

அவர் மீது அவளுக்கு சில நேரம் அளவில்லா கோபம் வந்தாலும், நாண்டுக்கொண்டு சாகும்படி நேருக்கு நேர் நான்கு வார்த்தைகள் சட்டையைப் பிடித்துக் கேட்டு, காறி உமிழ்ந்து, கன்னத்தில் அறைய முடியவில்லை! அவளிடம் அந்த வல்லமை துளியுமில்லை! 

அவள் மென்மை மனதிற்கு ஒருவரின் அன்பை மானசீகமாய் மதிக்கவும், பிடிக்கவில்லையென்றால் வருத்தத்தோடு மௌனமாய் விலகியிருக்க மட்டுமே பெரும்பாலும் பழகியிருக்கிறது! அல்லது தன்னுடையப் போதாமையை நினைத்து எப்போதும் உளைந்துக் குமைகிறது!  

ஒரு மருந்திற்கு செருப்பைக் காட்டுவது போலக் கூட தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி அனுப்ப தயங்கினாள். 

அவரை ஏன் கேட்டதும் முரளி என்று சட்டென பின்னூட்டத்தில் குறிப்பிட்டு பேச ஆரம்பித்தோம்? அவர் இடும் பதில்களுக்கெல்லாம் அனைவருக்கும் செய்வது போல தன்னிச்சையாகவே இதயக்குறி விட்டோம்?  இனி தான் ஏதும் கேட்கப் போய் அவற்றையெல்லாம் தவறாக சித்தரித்து பொதுவில் பதிவேதும் போட்டு விடுவாரோ..? இப்படி அஞ்சிக் கொண்டிருந்த வேளையில்தான் அவரிடமிருந்து வாட்சப்பில் ஒரு ‘குட் நைட்’ வந்து விழுந்தது. பதிலுக்கு குட் நைட் சொல்ல கைகள் தயங்கின. மனமும் படபடத்தது. அடங்குவது போலவும் தெரியவில்லை. பிறகு சிறது நேரம் கழித்து அவருக்கு பதில் குட் நைட் போட்ட பின்னரே அவரால் தனக்கு தீங்கு ஏதும் விளையாது என நம்பினாள். அந்த நம்பிக்கையிலேயே அவர் அனுப்பும் எல்லா மெசேஜ்களுக்கும் பதில் அளித்துக் கொண்டேயிருப்பாள்…?!

ஆறு வயதுக் குழந்தையாக இருந்தபோது உறவுமுறையில் எவனோ வயதில் மிகவும் மூத்தவன் ஒருவன் தவறானத் தீண்டல்களோடு தன்னைத் தூக்கிச் சென்றதை தனது பெற்றோர்களிடம் அப்போதே சொல்லியிருக்க வேண்டும்! பன்னிரெண்டாம் வகுப்பு படித்தபோது கனக வேல் வாத்தியார் மனைவியிடம் சாரைத்தான் பார்க்க வந்தேன், அவர் வீட்டில் இல்லையா? வாசிக்க  புத்தகங்கள் தருவதாக சொல்லியிருந்தார். அதைத்தான் வாங்கிச் செல்ல வந்தேன், இன்ஜினியரிங் படிக்கும் உங்க பையனுக்கு அடிபோட அல்ல என்று எதிர்த்துக் கேட்டிருக்க வேண்டும்! மேலும் என்னுடைய கருந்தோற்றத்தைப் பற்றி பேச நீ யார் என அங்கேயே காளியாடிருக்க வேண்டும்!

சுரங்கப்பாதையில் அதுவும் பகல் நேரத்தில் தனியாக ஒருவன் தன்னைப் தவறான சைகைகளோடுப் பின்தொடர்ந்து வந்து, அவள் பார்க்கும்படி அவள் முன்னாடியே சுவரில் சிறுநீர் கழித்ததை எல்லாம் பயத்துடனே கடந்திருக்க வேண்டாம்! வெளியே ஓடிவந்து கூச்சல் போட்டிருக்க வேண்டும்! கூட்டத்தைக் கூட்டி அவனை கும்மியிருக்க வேண்டும்! காலம் முழுவதும் இப்படி எல்லாவற்றையும் மௌனமாக சகித்தே செல்வதை என்றுதான் கைவிடப் போகிறாள்?

கதைகளில் மட்டும் தன்னுடைய வலியையும், வடுக்களையும் கொட்டித் தீர்த்தால் போதுமா? மனது ஆறிவிடுமா? தீர்வுகள்தான் கிடைத்துவிடுமா? காட்டு யானைகளுக்கு மணிக்கட்டத் தேவையில்லை! மாமிச வாசனைப் பிடித்து வரும் நரிகள் எங்கிருந்துப் பாயுமென ரேகாமான்களுக்கு எப்போதுமேத் தெரியாது!

என்றாலும் இந்த வெண்ணைச் சட்டி முரளிதரனுடனும் கூட இப்படி பொறுத்தும், முடியாமலும் எத்தனை நாட்கள்தான் செல்லும்? அதற்கான அவசியமும்தான் என்ன? ஒரு நாள் ‘உன்னுடைய மகளுக்கும் இப்படிதான் ஓயாமல் வழிஞ்சிகிட்டு மெசேஜ் அனுப்பிக்கிட்டு இருப்பியா? த்தூ!’ என்று துப்பி, செருப்படி கொடுக்கும் நாளும் நிச்சயம் வரவும்தான் போகிறது! எப்படியேனும் ஒரு நாள் அவள் தன்னை மாற்றிக் கொண்டுதானே ஆகவேண்டும்! 

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *