மீட்கப்பட்ட நகரத்தின் குறிப்புகள்

சண்முகம், யாழ்ப்பாணம் நல்லூரில் வாழும் சாதாரண ஆசிரியன். அரசியல் பேசாதவன். புலி, அரசாங்கம் என்ற இரண்டிலும் நம்பிக்கை இல்லாதவன். அவனுக்கு வாழ்க்கை என்றால் மனைவி, இரண்டு பிள்ளைகள், சிறிய நூலகம் அவ்வளவுதான்.  போர் மனிதனைத் தேர்வு செய்யாது. ஆனால், போர் வந்தால், எல்லோரும் சிப்பாய்களே!. 

யாழ்ப்பாணம் ஒரு நகரம் மட்டும் அல்ல. ஒரு நினைவு. ஒரு போர்க்களம். ஓர் அரசியல் சதுரங்கப் பலகை. 1995 அக்டோபர் மாதத்தில் யாழ்ப்பாணம் வழக்கம்போல இல்லை. கடற்காற்றுகூடச் சத்தமில்லாமல் வீசிக் கொண்டிருந்தது. வீடுகளின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. கோவில்களின் மணியோசை அடங்கியிருந்தது. துப்பாக்கி சத்தம் மட்டும் பேசிக் கொண்டிருந்தது. அக்டோபர் 17. அந்த நாள் காலை, வானம் கிழக்கிலிருந்து வெடித்தது. விமானங்கள். குண்டுகள். புகை. மக்களின் அலறல்.

“அப்பா…!” எனச் சின்ன மகள் அழுதாள்.

சண்முகம் பிள்ளைகளைத் தள்ளி பின்னால் உள்ள குழியில் இறக்கினான். 

“சத்தம் வந்தாலும் வெளிய வராதீங்க” என்று சொல்லும்போது அவன் குரல் நடுங்கியது.

அதே நேரம், முன்னணியில், இலங்கை இராணுவத்தின் 51ஆவது பிரிவு. 10,000 வீரர்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரே உத்தரவு, “யாழ்ப்பாணத்தை மீட்க வேண்டும்” என்பதே!

கேப்டன் ரவீந்திரன். தமிழ்ப் பேசத் தெரிந்தவன். கிழக்கில் பிறந்தவன். இராணுவத்தில் இருந்தாலும் அவன் மனசுக்குள் ஒரு பிளவு.

“இந்த நகரம் எதிரி நகரமா?” என்று அவன் மனசு கேட்டது. 

ஆனால் கேள்விக்கு இடமில்லை. போரில் கேள்விகளுக்கு நிரந்தரத் தடை உள்ளது.

மற்ற பக்கம், புலிகளின் நிலை. செல்வம். 23 வயது. கிளிநொச்சியில் இருந்து வந்தவன். கையில் AK-47. மனசுக்குள் ஒரே சத்தியம் – “யாழ் விட மாட்டோம்.”

அவனுக்குத் தெரியும் – எண்ணிக்கை குறைவு. ஆயுதம் குறைவு. ஆனால், அரசியல் சொல்லியிருந்தது, “ஓர் அங்குலம்கூட விடக்கூடாது” என்று.

அரசியல் எப்போதும் இளைஞர்களின் உயிரில் எழுதப்படும்.

போர் நகருக்குள் நுழைந்தது. வீதி – வீதியாக. வீடு – வீடாக. சண்முகத்தின் வீடு ஓர் எல்லைக் கோடானது.

ஒரு பக்கம் – இராணுவம். மறுபக்கம் – புலிகள். நடுவில் – ஒரு குடும்பம். 

இராணுவ வீரர், “வீட்டுக்குள்ள யாராவது இருக்கிறீங்களா?” என்று கத்தினான்.

சண்முகம் பதிலளிக்கவில்லை. பயம் பேச விடவில்லை. அடுத்த நொடியே சுவர் உடைந்தது.

கேப்டன் ரவீந்திரன் வீட்டுக்குள் நுழைந்தான். அவன் கண்களில் ஒரு குடும்பம். ஓர் ஆசிரியன். ஒரு குழந்தை.

“பயம் வேண்டாம்” என்று தமிழில் பேசினான்.

அந்த ஒரு வாக்கியம் சண்முகத்தை உடைத்தது.

“எங்களை வெளியே போக விடுங்க சார்…” என்று கெஞ்சினான்.

ரவீந்திரன் தலையசைத்தான். ஆனால் வெளியே – போர்.

அதே நேரம், செல்வம் அதே வீதியில் பதுங்கியிருந்தான்.

அவன் பார்த்தான். இராணுவம் ஒரு வீட்டிலிருந்து மக்களை வெளியே அழைத்துச் செல்கிறது.

அவன் மனசு, “அடிச்சாத்தான் தடுக்க முடியும்” என்று கூறியது.

ஆனால், அவன் விரல் நடுங்கியது. அவன் துப்பாக்கி ஒரு குடும்பத்தையும் ஒரு சிப்பாயையும் ஒரே வரியில் வைத்தது. அவன் சுட்டான். சத்தம். கேப்டன் ரவீந்திரன் விழுந்தான். அவன் இரத்தம் யாழ்ப்பாண மண்ணில் கலந்தது. சண்முகத்தின் மகள் கத்தினாள். செல்வம் ஓடினான். அந்த நிமிடம் யாரும் வென்றவர்கள் இல்லை.

போர் தொடர்ந்தது. அக்டோபர். நவம்பர். டிசம்பர். 500 இராணுவத்தினர். எத்தனை புலிகள்? எண்ணிக்கை இல்லை. ஆனால் ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் ஒரு தாய், ஒரு கனவு, ஒரு முடிவில்லாத கதை ஆகியன உண்டு. யாழ்ப்பாணம் மெல்ல மெல்ல இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

டிசம்பர் 5 இல் ரேடியோவில் ஓர் அறிவிப்பு: “யாழ்ப்பாணம் மீட்கப்பட்டது.”

அரசியல் மேடைகள் பேசின. ஆனால், சண்முகத்தின் வீடு இல்லை. செல்வம் இல்லை. ரவீந்திரன் இல்லை. நகரம் இருந்தது. மக்கள் இல்லை.

பல நாட்களுக்குப் பிறகு, சண்முகம் இடம்பெயர்ந்த முகாமில் இருந்தான். அவன் பிள்ளைகள் மௌனமாக இருந்தார்கள். 

அவன் நினைத்தான், “யாழ்ப்பாணம் யாருடையது?” என்று. 

அரசாங்கத்தினுடையதா? புலிகளுடையதா? அல்லது இறந்தவர்களுடையதா?

அந்த இரவு, யாழ்ப்பாணத்தில் மழை பெய்தது. இரத்தத்தைக் கழுவ மழை போதவில்லை. ஆனால் நினைவுகளை மழை அழிக்காது. முடிவு அல்ல… யாழ்ப்பாணப் போர் ஒரு தலைமுறையின் மனத்தில் நடந்த நீண்ட யுத்தம்.

நகரம் கைப்பற்றப்பட்ட பிறகும்… யாழ்ப்பாணம் “மீட்கப்பட்ட” பிறகு, நகரம் அமைதியாகவில்லை. அமைதி என்ற பெயரில் ஒரு கனமான மௌனம் மட்டும் இறங்கியது. கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், சிரிப்பு இல்லை. பேருந்துகள் ஓடின. ஆனால், பயணங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ‘யாழ்’ இப்போது ஒரு நகரம் அல்ல. ஒரு கண்காணிப்பு முகாம்.

சண்முகம் முகாமில் இருந்து மீண்டும் யாழ்ப்பாணம் வர மூன்று வாரங்கள் எடுத்தது. அவன் வீடு இருந்த இடம் இப்போது ஒரு குன்று. சுவரில்லை. மேஜை இல்லை. நூல்கள் இல்லை. அவன் காலடியில் எரிந்த புத்தகத்தின் பாதி பக்கம். அவன் எடுத்தான். 

அதில், “அறிவு விடுதலையை தரும்” என்று எழுதப்பட்டிருந்தது.

சண்முகம் சிரித்தான். அந்தச் சிரிப்பு அழுகையோட கலந்தது.

அதே நேரம், இராணுவ முகாமில் புதிய அதிகாரி. மேஜர் சமரசிங்க. போர்தான் அரசியல் என்று நம்புகிறவன். 

அவன், “யாழ்ப்பாணம் சுத்தமாக இருக்கணும்” என்றான்.

“சுத்தம்” என்ற வார்த்தைக்கு அவன் அர்த்தமே வேறு.

இளைஞர்கள் பிடிப்பு. சோதனை. கேள்வி. அடி. 

“புலி யார்?” என்பதே அவனுடைய அடிப்படைக் கேள்வி. 

யாழில் அந்தக் கேள்விக்கு யாரிடமும் பதிலே இல்லை.

செல்வம் அப்போது யாழில் இல்லை. அவன் கடல் வழியாக வெளியேறியிருந்தான். புலிகள் பின்னடைந்தார்கள். ஆனால், செல்வத்தின் மனசு பின்னடையவில்லை. ரவீந்திரனின் முகம் அவன் கனவுகளில் வந்தது.

“நான் சரியாச் செய்தேனா?” என்று முதல்முறையாக அவன் மனசு கேட்டது.

போராளிக்கு அந்தக் கேள்வி ஆபத்தானது.

யாழ் பல்கலைக்கழகம் மீண்டும் திறந்தது. ஆனால், மாணவர்கள் பயந்தார்கள். அரசியல் பேச முடியாது. மௌனம்தான் பாடமாகியது. அங்கே மீனா இலக்கியம் படிக்கும் மாணவி. அவள் நம்பியது, ‘போருக்குப் பதில் கதை எழுதணும்’ என்பதைத்தான். அவள் சண்முகத்தை முகாமில் சந்தித்திருந்தாள்.

“மாஸ்டர், நீங்க திரும்ப எழுதணும்” என்றாள்.

“எதை?” என்று சண்முகம் கேட்டான்.

“நம்ம வாழ்க்கையை” என்றாள்.

அந்த இரவு, சண்முகம் முதல் முறையாக ஒரு குறிப்பேட்டை வாங்கினான். எழுத ஆரம்பித்தான்.

“1995. யாழ்ப்பாணம் மீட்கப்பட்டது என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால், என்னிடமிருந்து எல்லாம் பறிக்கப்பட்டன.”

அவன் கை நடுங்கியது. ஆனால், அவன் எழுதுவது நிற்கவில்லை.

இராணுவ சோதனை. மேஜர் சமரசிங்க சண்முகத்தின் வீட்டைப் பார்த்தான். 

“நீ ஆசிரியனா?” என்று கேட்டான்.

“ஆமா” என்று சண்முகம் சொன்னான்.

“அப்போ நீ ஆபத்தானவன்” என்றான்.

அந்த வார்த்தை துப்பாக்கிச் சத்தத்தைவிட கனமானது.

அடுத்த நாள் மீனா காணாமல் போனாள். பல்கலைக்கழக வாசலில் அவளின் ஒரு செருப்பு மட்டும் இருந்தது. ‘யாழ்’ அதைப் பார்த்து மௌனமாய் இருந்தது. யாரும் கேள்வி கேட்கவில்லை. கேள்வி கேட்டவர்கள் இருந்ததே இல்லை.

அந்த செய்தி கிளிநொச்சி வரை சென்றது. செல்வம் கேட்டான். மீனா அவனுடைய பழைய தோழி. 

அவள் அவனிடம் அவ்வப்போது சொல்லியிருக்கிறாள் – “செல்வம், நீ துப்பாக்கி வைக்க. நான் பேனா எடுக்கறேன்” என்று.

அவள் இப்போது எங்கே? அந்த இரவு செல்வம் மீண்டும் துப்பாக்கியை எடுத்தான். அரசியல் மீண்டும் ஓர் இளைஞனை உள்ளே இழுத்துக்கொண்டது.

யாழ்ப்பாணம் அமைதியாக இருந்தது. அமைதி ஒரு பக்கத்து வீட்டு அழுகை போல. கேட்க முடியாது. கேட்க விரும்பவும் முடியாது. “இந்த நகரம் மீட்கப்படவில்லை. இது புதிதாகக் கைதாக்கப்பட்டுள்ளது” என்று எழுதிவிட்டு, சண்முகம் குறிப்பேட்டை மூடினான். 

யாழ்ப்பாணம் இப்போது பேசவில்லை. ஆனால், அதன் ஒவ்வொரு சுவரும் ஒட்டுக் கேட்கிறது.

மீனா காணாமல் போன மூன்றாவது நாள். பல்கலைக்கழக வளாகம் முழுக்க இராணுவம். புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நூலகத்தில் இப்போது சோதனை.

“இந்தக் கவிதை யார் எழுதியது?” என்று ஒரு சிப்பாய் கேட்டான்.

அந்தக் கவிதை தேசம் பற்றியது இல்லை. போர் பற்றியும் இல்லை.  அது ஓர் அம்மாவின் கண்ணீரைப் பற்றியது. ஆனால், இந்த நகரத்தில் கண்ணீரே அரசியல்தானே!.

சண்முகம் அந்த நாள் பல்கலைக்கழகம் போனான். மீனாவின் இடம் காலியாக இருந்தது. அவள் மேசையில் ஒரு காகிதம். அதில், “மாஸ்டர், நாம பேசாம இருந்தா நம்ம வரலாறு வேற யாரோ எழுதுவாங்க” என்று எழுதப்பட்டிருந்தது.

சண்முகம் அந்தக் காகிதத்தை மடித்தான். அவனுக்குள் ஒரு தீர்மானம்.

மேஜர் சமரசிங்க அன்றைய மாலை அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்தான். 

“யாழ் இளைஞர்கள் இன்னும் அடங்கலை. அடக்கணும்” என்றான்.

அந்த வார்த்தை ஓர் உத்தரவு.

அடுத்த நாளே இரவு ஊரடங்கு. வீட்டுக்குள் விளக்கேற்றக் கூடாது. யாழ் மீண்டும்

இருட்டில் தள்ளப்பட்டது.

அதே இரவு கிளிநொச்சியில் செல்வம். அவன் குழுவில் ஐந்து பேர். அவர்கள் எல்லாரும் ஒரே மாதிரி. இளைஞர்கள். அவர்களிடமிருந்தவை முடியாத கனவுகளே!. 

“யாழ் உள்ளே ஓர் ஆள் காணாமல் போயிருக்கா” என்று தலைவர் சொன்னான்.

“நம்ம செய்தி உள்ளே போகணும்.”

செல்வம் மௌனமாய் இருந்தான். அவன் யோசித்தது ஒரு தாக்குதலை அல்ல. ஒரு பதிலை.

யாழில் சிறிய சுவரொட்டிகள். இரவு தோன்றின. 

“மீனா எங்கே?” “யாழ் யாருடையது?” “மௌனம் குற்றம்.” 

எல்லோரும் பார்த்தார்கள். அந்த வார்த்தைகள் சண்முகத்தின் எழுத்து. பெயர் இல்லை. முகம் இல்லை. ஆனால், எல்லோருக்கும் அதைப் பார்த்தபோதே பயம் ஏற்பட்டது.

அடுத்த நாள் சண்முகம் பிடிக்கப்பட்டான். வீட்டிலிருந்து இழுத்துச் சென்றார்கள்.

“நீயா எழுதின?” என்று மேஜர் சமரசிங்க கேட்டான்.

“ஆம். நான் பார்த்ததை எழுதினேன்” என்று சண்முகம் சொன்னான்.

“அதுதான் ஆபத்து” என்றான் மேஜர் சமரசிங்க.

அதே நேரம் யாழ் கடற்கரை. ஒரு படகு.  இரண்டு பேர் இறங்கினார்கள். செல்வம் அவர்களில் ஒருவன். இராணுவக் கண்காணிப்பைத் தவிர்த்து நகருக்குள் நுழைந்தான். அவன் கையில் குண்டு இல்லை. ஒரு காகிதம் மட்டுமே!……..

இரவு. பல்கலைக்கழக சுவரில் பெரிய எழுத்தில், “மீனா உயிரோட இருக்கா. ஆனால், நீங்க மௌனமா இருந்தா அவள் இல்ல” என்று எழுதப்பட்டிருந்தது.

யாழ் அந்த இரவு தூங்கவில்லை.

முகாமில் சண்முகம். அடி. கேள்வி. மௌனம். 

“யார் உனக்கு எழுத சொன்னது?” என்று கேட்டது ஒரு குரல்.

“என் மனசு” என்று சண்முகம் சொன்னான்.

அந்தப் பதில் அவனுக்கு இன்னொரு அடியை வாங்கித் தந்தது.

மீனா இருட்டு அறையில். கண் கட்டப்பட்டு. அவள் பயப்படவில்லை. அவள் நினைத்தது ஒரே விஷயத்தைத்தான் – “நான் திரும்பப் போனாலும் இந்த நகரம் மாறுமா?”

யாழில் சின்ன சலசலப்பு. மக்கள் முதல்முறையாக ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். 

பயம் இருந்தது. ஆனால் மௌனம் உடைந்தது. ஒரு குரல் எழுந்தது. பிறகு இன்னொரு. அது போர்க்குரல் அல்ல. கேள்விக் குரல்.

செல்வம் நகரத்தின் நடுவில் நின்றான். அவன், ‘நான் சுட வேண்டியவன் இல்லை.

நான் சொல்ல வந்தவன்’ என்று நினைத்தான். அவன் திரும்பிப் பார்த்தான். யாழ்

அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.  யாழ்ப்பாணத்தில் அந்தக் காலையில் சூரியன் மெதுவாக எழுந்தது. 

மீனாவைப் பற்றிய செய்தி ஒரு வதந்தியாகத் தொடங்கியது. பிறகு ஒரு நம்பிக்கையாக மாறியது. அடுத்து ஒரு கேள்வியாக. 

“அவள் உயிரோட இருக்கா?”

யாழ் அந்தக் கேள்வியை முதல்முறையாகச் சத்தமாகக் கேட்டது.

பல்கலைக்கழக வாசலில் மாணவர்கள் நின்றார்கள். 10 பேர். 20 பேர். 50 பேர். யாரும் கூச்சல் போடவில்லை. யாரும் கோஷம் எழுப்பவில்லை. அவர்கள் கையில்

ஒரே வாசகம் – “மீனாவை காணோம்.”

அந்த மௌனப் போராட்டம் மேஜர் சமரசிங்கிற்கு முதல் எச்சரிக்கை.

“கலைச்சொல்தான் ஆபத்து” என்று அவன் கீழ்நிலை அதிகாரிகளிடம் சொன்னான்.

“இது ஆரம்பம். இதை இப்போ அடக்கலன்னா நாளைக்கு நகரம் கையில் இருந்து போகும்” என்று கத்தினான்.

அதிகாரம் எப்போதும் பயத்தை முன்னே வைத்து பேசும்.

அதே நேரம் முகாமில் சண்முகம். அவனுக்கு அடிகள் குறைந்தன. அதற்குப் பதிலாக

வாக்குறுதிகள்.

“நீ எழுதுறத நிறுத்து. வீட்டுக்கு அனுப்புறோம்” என்று அதிகாரி சொன்னான்.

சண்முகம் மெதுவாகச் சிரித்தான்.

“எழுதாம இருந்தா நான் உயிரோட இருக்கேன். எழுதினா நான் மனிதனா இருப்பேன்” என்றான் சண்முகம் தீர்க்கமாக.

அந்தப் பதில் அவர்களுக்குப் புரியவில்லை.

யாழ் கடைகளில் அன்று வியாபாரம் இல்லை. ஆனால் பேச்சு இருந்தது. 

“நம்ம பிள்ளைகளுக்கு என்ன நடக்குது?” என்று அம்மாக்கள் பேச ஆரம்பித்தார்கள்.

அப்பாக்கள் தரையைப் பார்த்தார்கள். பயம் இன்னும் இருந்தது. ஆனால், அது மெல்ல மெல்ல கோபமாக மாறியது.

செல்வம் நகரின் ஒரு பழைய வீட்டில். அவனுடன் இன்னும் இரண்டு பேர்.

“இப்ப சுட்டா அவர்கள் சொல்வாங்க – ‘பாருங்க, புலிகள்’ ” என்று செல்வம் சொன்னான்.

“அதுக்குப் பதிலா?” என்று மற்றவன் கேட்டான்.

செல்வம், “அவர்கள் பேசும் இடத்துல நாம பேசணும்” என்றான்.

அடுத்த நாள். யாழ் சந்தை. ஒரு பெண் நடுவில் நின்றாள். மீனாவின் அம்மா.

“என் பிள்ளை எங்கே?”

அவள் குரல் உயரவில்லை. ஆனால், அது நகரம் முழுக்க கேட்டது. அந்த நிமிடம் யாழ் ‘போராட்டம்’ என்னன்ணு நினைவுகூர்ந்தது.

இராணுவம் வந்தது. துப்பாக்கிகள். 

கட்டளை – “கலைங்க!”

யாரும் நகரவில்லை. அந்த மௌனம் துப்பாக்கியைவிட பயங்கரமானது. அந்தக் கூட்டத்தில் செல்வம் இருந்தான். துப்பாக்கி இல்லாமல். கோஷம் இல்லாமல். அவன் பார்த்தது மீனாவின் அம்மாவின் முகம். அவன் மனசுக்குள் ஒரே வார்த்தை – ‘இதுதான் யுத்தம்.’

அன்று மாலை அதிகாரபூர்வ அறிவிப்பு – “ஒரு மாணவி விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.”

யாழ் அந்த வார்த்தையை நம்பவில்லை. ஆனால் அது ஒரு வெற்றி. முதல் தடவை

அதிகாரம் ஒப்புக்கொண்டது.

சண்முகம் அன்று இரவு விடுவிக்கப்பட்டான். வீட்டுக்கு வந்ததும் அவன் மீனாவின் குறிப்பேட்டை எடுத்தான். முதல் பக்கத்தில் அவள் எழுதியிருந்தாள் – “ஒரு நாள்

இந்த நகரம் தன் பயத்தை எழுத ஆரம்பிக்கும்.”

சண்முகத்தின் கண்களில் நீர்.

யாழ் மாற்றத்தை உணர ஆரம்பித்தது. அது புரட்சி இல்லை. போர் இல்லை. ஆனால்,

மௌனம் முழுமையாக உடைந்தது. யாழ்ப்பாணம் அந்த நாளில் மெதுவாக மூச்செடுத்தது. ஆனால், அந்த மூச்சுக்குள்ளே ஒரு கேள்வி இருந்தது – “நம்ம மேல யார் ஆட்சி?”

மீனா இன்னும் விடுவிக்கப் படவில்லை. “விசாரணை முடிவடையவில்லை” என்ற ஒரே பதில்.

ஆனால், யாழ் மக்களுக்கு அது தெரியும். விசாரணை ஒரு காரணம். பயம் ஓர் ஆயுதம்.

மேஜர் சமரசிங்க அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தான். 

“மாணவி பாதுகாப்பாக இருக்கிறார். அரசியல் காரணம் எதுவும் இல்லை.” என்றான்.

அவன் சொன்ன அந்த வார்த்தைகள் முழுக்க அரசியல்.

அதே நேரம் சண்முகம் தன் குறிப்புகளை ஒரு பழைய டைப் ரைட்டரில் அச்சடிக்க ஆரம்பித்தான். பக்கம் பக்கமாக. அது ஒரு நாவல் இல்லை. ஓர் அறிக்கை இல்லை. 

ஒரு சாட்சி. அவன் பெயர் இல்லை. தலைப்பு – “மீட்கப்பட்ட நகரத்தின் குறிப்புகள்.”

பல்கலைக்கழக மாணவர்கள் அந்தக் காகிதங்களை மெல்ல மெல்ல படிக்க ஆரம்பித்தார்கள். ஒருவர் மற்றவருக்குக் கொடுத்தான். ஓர் இரவிலே ஒரு நகரம் முழுக்க. அந்த எழுத்து சுடவில்லை. ஆனால், அது உறங்க விடவில்லை.

செல்வம் அந்த எழுத்தை வாசித்தான். அவன் நினைத்தான் – ‘நான் சுட்டது ஒரு சிப்பாயை. இந்த எழுத்து ஓர் அமைப்பை.’ அவன் உள்ளே ஒரு முடிவு உருவானது.

மீனா அந்த இருட்டு அறையில் ஓர் அதிகாரியை பார்த்தாள். அவன் முகத்தில் கோபம் இல்லை. இரக்கம் இல்லை.

“நீ எழுதுறதை நிறுத்து. உன்ன வீட்டுக்கு அனுப்புறோம்” என்றான்.

மீனா மெதுவாகக் கேட்டாள், “நான் எழுதினதால நீங்க இவ்வளவு பயப்படுறீங்கனா நான் சரியா எழுதிருக்கேன் இல்ல?”

அந்த அதிகாரி முதல் முறையாக அமைதியானான்.

யாழில் மீண்டும் ஒரு மௌனப் போராட்டம். இந்த முறை அம்மாக்கள் முன். கையில் துப்பாக்கி இல்லை. கையில் காணாமல் போன பிள்ளைகளின் படங்கள் இல்லை. அந்தக் காட்சி இராணுவ வரிசையைச் சிறிது குலைத்தது.

மேஜர் சமரசிங்க உள்ளுக்குள் கோபம்கொண்டு, “இதை நிறுத்தணும்” என்று மேலதிகாரிகளிடம் கோரி, அனுமதி பெற முயன்றான்.

அங்கிருந்து வந்த பதில் – “அதிகம் வன்முறை வேண்டாம். வெளிநாட்டு கவனம் இருக்கு” என்று.

அந்த ஒரு வரி அவனுக்குச் சொன்னது, ‘எல்லா அதிகாரத்துக்கும் எல்லை இருக்கிறது’ என்பதை.

அந்த இரவு மீனா விடுவிக்கப்பட்டாள். காரணம் எதுவும் இல்லை. மன்னிப்பு எதுவும் இல்லை. ஒரு ஜீப். ஒரு வாசல். ஒரு விடுதலை. யாழ் அந்தச் செய்தியை மெல்ல ஆனால் ஆழமாக உள்வாங்கியது.

மீனா வீட்டுக்கு வந்ததும் முதலில் செய்தது எழுதும் பணியைத்தான். அவள் எழுதினாள் – “அவர்கள் என் உடலை அடைத்தார்கள். என் குரலை எதைக் கொண்டும் அவர்களால் அடைக்க முடியவில்லை” என்று.

சண்முகமும் மீனாவும் அன்று இரவு சந்தித்தார்கள். 

“இது ஆரம்பம்தான்” என்று மீனா சொன்னாள்.

சண்முகம் தலையசைத்தான்.

“நகரம் இப்பதான் எழுத ஆரம்பிச்சிருக்கு” என்றாள்.

செல்வம், ‘மீனா விடுதலை’ என்ற செய்தியைக் கேட்டான்.  அவன் முதல் முறையாகத் துப்பாக்கியைத் தரையில் வைத்தான். ஆனால், நிரந்தர முடிவு இல்லை. ஓர் இடைவேளைதான்.

யாழ்ப்பாணம் அன்று இரவு அமைதியாக இருந்தது. ஆனால், அந்த அமைதி பழைய மாதிரி இல்லை. அது பயம் இல்லாத அமைதி. யாழ்ப்பாணத்தில் அந்த வாரம் ஒரு புதிய பயம் பிறந்தது. துப்பாக்கிக்கான பயம் இல்லை. குண்டுக்கான பயம் இல்லை. 

காகிதங்களில், அதில் எழுதப்படும் செய்திகளின் மீதான பயம்.

“மீட்கப்பட்ட நகரத்தின் குறிப்புகள்” யாழ் தாண்டிச் சென்றது. கோப்பாய். வல்வெட்டித்துறை. பிறகு கொழும்பு. ஓர் இரவில் நகலெடுக்கப்பட்டுப் பல கைகளுக்குச் சென்றது. யாரோ அதை வெளிநாட்டுப் பத்திரிகையாளருக்கு அனுப்பினார்கள். பெயர் இல்லை. முகம் இல்லை. ஆனால், நகரத்தின் குரல் இருந்தது.

அடுத்த நாள் மேஜர் சமரசிங்க கோபத்தில் இருந்தான்.

“யார் இது?” என்று அவன் மேசையை அடித்துக் கேட்டான்.

“ஓர் ஆசிரியன்.” “ஒரு மாணவி.” “ஒரு நகரம்.” அந்தப் பதில்கள் அவனை இன்னும்

கோபப்படுத்தின.

எதிரியைச் சுடலாம். ஒரு நகரத்தைச் சுட முடியாது.

மீனா பல்கலைக்கழகத்தில் மீண்டும் வகுப்புக்கு வந்தாள். மாணவர்கள் அவளைப் பார்த்ததும் எழுந்து நின்றார்கள். கைத்தட்டல்கள் இல்லை. கோஷம் இல்லை. அந்த மௌன மரியாதை அவளை நடுங்க வைத்தது. 

‘நான் தனியா இல்லை’ என்று அவள் புரிந்துகொண்டாள்.

அன்று மாலை ஒரு ரகசியக் கூட்டம். ஆசிரியர்கள். மாணவர்கள். பத்திரிகைத் தொடர்பாளர்கள். 

சண்முகம் பேசினான் – “நாம போராளிகள் இல்ல. ஆனா நாம பொய் சொல்லப் போறதில்ல.” அந்த ஒரு வரி அந்த அறையை அமைதியாக வைத்தது.

செல்வம் யாழில் மறைந்திருந்தான். அவன் அந்தக் கூட்டத்தை வெளியில் இருந்து பார்த்தான். துப்பாக்கி இல்லாத எதிர்ப்பு. அவன் மனசு சொன்னது – ‘இதுதான் நான் தேடின யுத்தம்.’

அந்த இரவு யாழில் பத்திரிக்கை வந்தது. சிறிய செய்தி – “1995 யாழ் நடவடிக்கைகள்

தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் கேள்வி எழுப்புகின்றன.”

‘யாழ்’ அந்த வரியைப் பல முறை வாசித்தது. 

‘வெளி உலகம் பார்க்கிறது’ என்ற கருத்து அரசை அசைக்கத் தொடங்கியது. அடுத்த நாளே இராணுவ சோதனை. இந்த முறை வீடுகள் அல்ல. அச்சகங்கள். டைப் ரைட்டர்கள் பறிமுதல். காகிதங்கள் எரிப்பு. ஆனால், எழுத்து அந்த நேரமே போயிருந்தது. 

மேஜர் சமரசிங்க மேலதிகாரிகளிடமிருந்து கண்டிப்பைப் பெற்றான், “நீங்க கட்டுப்பாட்டை இழக்குறீங்க” என்று. அவன் முதன்முறையாக உணர்ந்தான் – ‘அதிகாரம் எழுத்துக்குப் பின்தங்குது’.

மீனா ஒரு புதிய கட்டுரையை எழுதினாள். தலைப்பு – “காணாமல் போனவர்கள்

வெறும் எண்கள் மட்டும் அல்லர்.”

அந்தக் கட்டுரை ஒரே வாரத்தில் மூன்று மொழிகளில் மாறியது. பெயர் இல்லை. 

ஆனால், அதில் அம்மாக்களின் கண்ணீர் இருந்தது.

செல்வம் அந்தக் கட்டுரையைப் படித்தான். அவன் கண்களில் முதல்முறையாகக்

கண்ணீர். அவன் நினைத்தான் – ‘நான் சுட்டது ஒரு கணம். இது நிரந்தரம்.’

யாழில் ஒரு புதிய வார்த்தை பிறந்தது. ‘எழுத்து இயக்கம்.’ அது அமைப்பு இல்லை. அதற்குத் தலைவர் இல்லை. ஆனால், அந்த இயக்கத்துக்கு என ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குரல் உயர்ந்து ஒலிக்கத் தொடங்கியது.

அந்த இரவு சண்முகம் தன் குறிப்பேட்டை மூடினான். முதல் பக்கத்தில் அவன் எழுதினான் – “இந்த நகரம் மீட்கப்படவில்லை. இது தன்னைத் திரும்ப எழுதிக் கொள்கிறது.” 

யாழ்ப்பாணம் அன்று அமைதியாகத் தூங்கியது. ஆனால், அந்த அமைதி இனிமேல்

அடக்கமானது இல்லை. அது விழித்த அமைதி. யாழ்ப்பாணம் அந்த நாளில் எந்தக் கொடியையும் தூக்கவில்லை. எந்த கோஷத்தையும் எழுப்பவில்லை. அது நின்று பார்த்தது.

‘எழுத்து இயக்கம்’ எல்லோருடைய வீட்டுக்குள்ளும் போயிருந்தது. ஒரு வீட்டில் அம்மா தன் மகன் காணாமல் போன நாளைப் பற்றி எழுதினாள். மற்றொரு வீட்டில்

ஓர் அப்பா தான் கேட்காத எல்லாக் கேள்விகளையும் காகிதத்தில் கொட்டினான். யாழ் முதல் முறையாகத் தன் பயத்தைச் சொல்ல ஆரம்பித்தது.

அந்த வாரம் இராணுவ முகாமுக்கு மேலிருந்து உத்தரவு வந்திருந்தது – “கட்டுப்பாடு.

அமைதி. வெளிநாட்டு கண்கள்.”

மேஜர் சமரசிங்க அந்த வார்த்தைகளைப் பார்த்தான். அவனுக்குப் புரிந்தது  – ‘இந்தப் போரில் நாம் ஜெயிக்கவில்லை.’

அவன் சண்முகத்தை மீண்டும் அழைத்து, “நீங்க எழுதுறதால நகரம் குலுங்குது”

என்றான்.

சண்முகம் மெதுவாக சொன்னான், “இல்லை சார். நகரம் ஏற்கனவே குலுங்கியதால நான் எழுதுறேன்” என்று.

அந்தப் பதிலுக்கு மேஜர் சமரசிங்க எதுவும் சொல்லவில்லை.

மீனா ஒரு பொதுக் கூட்டத்தில் பேசினாள். அது மேடை இல்லை. மைக் இல்லை. பல்கலைக்கழக மரத்தடி. 

“நாம் எதிரி யாருன்ணு பேச வரலை. நாம் நம்ம காயத்தை ஒப்புக்கொள்ள வர்றோம்.”

அந்த வார்த்தைகள் யாழ் முழுக்க அமைதியாகப் பரவின.

அதே கூட்டத்தில் செல்வம் இருந்தான். இனி, மறையவில்லை. இனி, துப்பாக்கி இல்லை. அவன் முன்னால் வந்து மெதுவாக, “நான் ஒரு சிப்பாயைச் சுட்டேன். ஆனால், அந்த நாள் முதல் என்னையே சுட்டுக்கிட்டே இருக்கேன்” என்று கூறினான்.

யாரும் கத்தவில்லை. யாரும் அடிக்கவில்லை. யாழ் அவனை ஒரு மனிதனாகப் பார்த்தது.

அந்த நாளே ஒரு முடிவு. செல்வம் யாழை விட்டுப் போகவில்லை. அவன் ஒரு சாட்சியாக இருக்க தீர்மானித்தான். “எழுத்து இயக்கத்தோட நான் இருப்பேன்” என்றான். அது அவனுக்கான புதிய ஆயுதம்.

சண்முகத்தின் குறிப்புகள் ஒரு தொகுப்பாக வெளிவந்தன. வெளியீட்டு விழா இல்லை. பத்திரிகை விளம்பரம் இல்லை. ஆனால், அது யாழின் அடையாளமாக மாறியது. முதல் பக்கத்தில் ஒரே வரி – “இந்த நகரம் யாரையும் வெறுக்கவில்லை.

அது மறக்க முடியாமல் போராடுகிறது.”

மேஜர் சமரசிங்க இடமாற்றம் பெற்றான். போகும் போது யாழைப் பார்த்தான். அவன் மனசுக்குள் ஒரு குரல் – ‘நீ நகரத்தை மட்டுமே கட்டுப்படுத்தின. ஆனால், அதன் நினைவுகளைக் கட்டுப்படுத்த உன்னால் முடியவில்லை. யாராலுங்கூட முடியாதுதான் போல’. 

டிசம்பர் 5 மீண்டும் வந்தது. இந்த முறை அறிவிப்புகள் இல்லை. விழாக்கள் இல்லை. யாழ் மக்கள் கடற்கரையில் கூடியார்கள். மெழுகுவர்த்தி இல்லை. பதாகை இல்லை. மௌனம். அந்த மௌனத்தில் இருந்தவை – இறந்தவர்களின் பெயர்கள்,  காணாமல் போனவர்களின் முகங்கள், உயிர்த் தப்பியவர்களின் குற்ற உணர்வு. 

மீனா அந்த நாளில் ஒரு வரி எழுதினாள் – “போர் முடிந்தது என்று சொல்வது எளிது.

ஆனால், அதில் வாழ்வது கடினம்.”

அந்த வரி யாழின் மனப்பாடமாக மாறியது.

சண்முகம் தன் பழைய வீட்டின் இடத்தில் ஒரு குறுமரத்தை நட்டினான். வீடு இல்லை. சுவர் இல்லை. ஆனால், அக்குறுமரத்தின் சிறு நிழல் இருந்தது. 

“இந்த மரம் என்ன சொல்லுகிறது?” என்று பக்கத்து வீட்டுச் சிறுமி வேடிக்கையாகக் கேட்டாள்.

சண்முகம் சிரித்துக்கொண்டே, “இதுவா? ‘இது, இந்த நகரம் ஒரு காலத்தில் எப்படித் துடித்தது’ என்று சொல்லும்” என்றான். 

 

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *