மண்ணுக்குள் புதைந்த குரல்கள்

1

பூநேரி மண்ணு வழக்கம்போல அமைதியா இல்லை. கடல் காற்று வீசியது… ஆனா அந்தக் காற்றுக்குள்ளே ‘திகில்’ இருந்தது. அம்மன் கோயிலுக்குப் பின்னால இருக்கிற ஒதுங்கிய வீட்டுக்குள்ளே சின்னத்தம்பி உட்கார்ந்திருந்தான். வயசு இருபதுகூட ஆகாத முகம். கண்களில் தூக்கம் இல்லை.

கையில் துப்பாக்கி. மனசுக்குள்ளே ஆயிரம் கேள்விகள். “இன்றுதான்… இல்லாட்டி இனிமே இல்ல” அவன் தன்னோட மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டான்.

பூநேரி சின்ன ஊர்தான். மீன்காரன், விவசாயி, பள்ளிக்கூடம், தேநீர்க்கடை – அவ்வளவுதான். ஆனா அரசியலுக்கு அந்த ஊர் முக்கியமானது. பெரிய இராணுவ முகாம். சுற்றிலும் அகழி. முள்ளுக் கம்பி. துப்பாக்கிக் கோபுரம்.

அந்த முகாமுக்குப் பக்கம்தான் சின்னத்தம்பி பிறந்த வீடு. அப்பா மீனவர். அம்மா வீட்டுப் பணி. அக்கா யுத்தம் தொடங்கிய நாளிலேயே காணாமல் போனவள். அந்த நாளுக்குப் பிறகு சின்னத்தம்பிக்கு யுத்தம் என்பது புத்தகத்திலே படிச்ச வார்த்தை இல்லை. அது உயிரோடு நின்ற வலி.

“நாளைக்குத் தாக்குதல்” அந்த வார்த்தையைச் சொன்னபோது, முகாமுக்குள்ளே இருந்த எல்லாரும் அமைதியானார்கள். செல்வராசா குழுத் தலைவன். முப்பத்தைந்து வயசு. கண்ணாடி அணியாத கண்கள். அவனுக்குத் தெரியும் இதில பலர் திரும்ப வரமாட்டாங்கணு. 

“இது வெறும் முகாம் இல்ல. இது அரசாங்கத்தின் கால். இந்தக் கால் உடையாம இருந்தா, நம்ம ஊர் மூச்சே விடமுடியாது.” 

சின்னத்தம்பி கேட்டான், “அண்ணே… நாமெல்லாம் திரும்ப வருவோமா?” 

செல்வராசா சிரிச்சான். ஆனா, அது சிரிப்பு இல்ல. ஒரு முடிவின் சத்தம். 

தன்னை இயல்பாக்கிக் கொண்டு செல்வராசா, “திரும்ப வர்றவன் வீரன். திரும்ப வராதவனும் வீரன்தான்” என்றான்

இரவு 11 மணி. மழை சின்னதா தூறுது. அந்த மழைக்குள்ளே காலடி சத்தம்கூட மறைந்துபோயிடும். முதல் வெடிப்பு. பூநேரி இராணுவ முகாமின் வடக்கு கோபுரம்

வானத்துக்குப் பறந்தது. அந்தச் சத்தம் கடலையும் மண்ணையும் மனசையும் கிழிச்சது.

சின்னத்தம்பி ஓடினான். முன்னாலே செல்வராசா. பின்னாலே குண்டு சத்தம். இராணுவ வீரன் கண்ணைச் சுழற்றி விழுந்தான். அவன் முகத்தில பயம். அவனுக்கும் அம்மா இருக்கும். ஆனா, அந்த நேரத்தில அது யாருக்கும் நினைவில்லை.

மூன்று நாள். மூன்று இரவு. பூநேரி ஒரு மனித சத்தக் கல்லறையா மாறிச்சு. 241 இராணுவத்தினர் – அவர்களுக்கும் வீடு இருந்தது. அவர்களுக்கும் கனவு இருந்தது. 

சுமார் 500 விடுதலைப் புலிகள். அவர்களில் பலர் பெயர்கூட உலகத்துக்குத் தெரியாம மண்ணோட கலந்தாங்க.

சின்னத்தம்பி பார்த்தான். அவனோட நண்பன் முரளியின் மார்பில் குண்டு துளை. வாயில வார்த்தை வரல. “அம்மா…” அவ்வளவுதான். அந்த “அம்மா” என்ற குரல் பூநேரி முழுக்க எதிரொலிச்சது.

இந்தப் போர் சின்னத்தம்பிக்காக இல்லை. முரளிக்காக இல்லை. இது மேசைக்குள்ளே உட்கார்ந்து வரைபடம் இழுக்கிற அரசியல்வாதிகளுக்கானது. ஒரு பக்கம் “தேசிய பாதுகாப்பு” மற்றொரு பக்கம் “விடுதலை”. ஆனா, நடுவில நின்றது ஒரே மனித உடம்பு.

சின்னத்தம்பி சுவருக்குப் பின்னால ஒளிஞ்சிருந்தபோது அவன், “என் அக்கா இருந்தா இந்தக் காட்சியைப் பார்க்க மாட்டாளா?” என்று நினைச்சான்.

நவம்பர் 14. முகாம் சாம்பல். உடம்பு வலிக்க கண்கள் எரிய சின்னத்தம்பி நின்றான். 

செல்வராசா இல்லை. அவன் கடைசியாக சொன்ன வார்த்தை, “மண்ணு நம்ம பேரை நினைவில் வைச்சிருக்கும்” என்பதுதான். 

வெற்றி யாருக்குன்ணு அந்த நாளைக்குத் தெரியல. ஆனா, தோல்வி மக்களுக்குத்தான்.

போர் முடிஞ்சது. ஆனா பூநேரி மீண்டும் பழைய ஊரா மாறல. தேநீர்க் கடை மூடப்பட்டு. பள்ளிக்கூடம் மூச்சே விடாம. சின்னத்தம்பி கடலைப் பார்த்துக்கிட்டு நின்னான். அவன் கையில இப்ப துப்பாக்கி இல்லை. ஒரு வெறும் கை. “இந்தக் கடல் எத்தனை இரத்தம் கழுவியிருக்கும்?”

பூநேரி ஒரு நாள் வரலாறு புத்தகத்தில ஒரு பத்தி ஆகலாம். ஆனாஇ அந்த மண்ணுக்குள்ள புதையுண்டிருக்கும் ‘அம்மா’ கூப்பிட்ட சத்தம் எப்போதும் உயிரோடே இருக்கும். 

போர் முடிஞ்சு மூணு நாள். காற்று வீசுது. ஆனா அந்தக் காற்றுக்குள்ள புழுங்கிய இரத்த நாத்தம். வெடிச்ச மண்ணோட வாசனை. எரிஞ்ச இரும்போட புகை. சின்னத்தம்பி முகாமுக்குப் பக்கத்தில இருந்த தன் வீட்டின் இடிபாடுகளுக்கு முன்னால நின்னான்.

வீடு இல்லை. சுவர் இல்லை. அம்மா இல்லை. “அம்மா…?” அவன் வாயில வார்த்தை வருது. ஆனா பதில் வரல.

உயிரோட தப்பிச்சவனுக்குத்தான் உண்மையான தண்டனை ஆரம்பம். சின்னத்தம்பி பார்த்தான் – இராணுவ லாரி. அதுக்குள்ள பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. சிலர் பச்சை யூனிபார்ம். சிலர் பழுப்பு நிற உடுப்பு. யாருடைய இரத்தம் யாருன்ணு

வேறுபாடு தெரியாத நிலை.  “எல்லாரும் மனிதங்கதானே…” அவன் மனசுக்குள்ள முதன்முறையா அந்த வினா உதிச்சது.

அடுத்த நாள் காலை. ஒரு ஜீப். ஒரு வெள்ளை வான். அதுக்குள்ள கைக்கோப்பி பிடிச்ச அரசியல் மனிதன். “பூநேரி மக்களுக்கு அரசாங்கம் துணை நிற்கும்” என்று அவன் சொன்ன வார்த்தை மைக்ரோஃபோனுக்குள்ளே ஒலிச்சது. அந்தக் குரல் பூநேரி மண்ணுக்குப் பொய்யாத் தெரிஞ்சது. ஒரு கிழவி, “என் மகன் எங்க? துணையா வேணும்! உயிரோட வேணும்!” என்ற கத்தினார். ஜீப் நகர்ந்தது. வினா அங்கேயே நின்றது.

சின்னத்தம்பி இனிமே ஊரில இருக்க முடியாது. அவன் பெயர் பட்டியலில இருக்கும். அவன் முகம் படத்தில இருக்கும். அவன் நடந்தான். காடு நோக்கி.  அந்தக் காட்டுக்குள்ள இன்னும் சிலர் இருந்தாங்க. 

மாலதி. ஒரு பெண். வயசு இருபத்து மூணு. கையில் துப்பாக்கி இல்ல. ஆனா கண்ணில போரைவிட பெரிய உறுதி.

“நீ சின்னத்தம்பிதானே?” என அவள் கேட்டாள். 

“ஆமா.”

“உன் அக்காவை எனக்குத் தெரியும்.”

அந்த வார்த்தை சின்னத்தம்பியை நிறுத்திச்சு.

“அவள் இறக்கல. ஆனா அவள் சுதந்திரமா இல்லை.”

அந்த ஒரு வாக்கியம் சின்னத்தம்பிக்குப் புது யுத்தத்தைத் திறந்தது. போர் முடிஞ்சாலும் காணாமல் போனவர்களின் போர் முடியல. அக்கா. அம்மா. முரளி. செல்வராசா. யாரும் முழுமையா இறக்கல. முழுமையா வாழல.

அந்த இரவு. சின்னத்தம்பி மாலதியோட காட்டுக்குள் நடந்தான். பின்னால பூநேரி எரிஞ்சுக் கிட்டிருந்தது. முன்னால என்ன இருக்குணு தெரியாது. ஆனா ஒரு விஷயம் மட்டும் அவனுக்குத் தெளிவாத் தெரிஞ்சது.  ‘இது துப்பாக்கியோட மட்டும் முடியாதுன்ணு’.”

2

காடு இருட்டா இருந்தது. ஆனா அந்த இருட்டு பூநேரியோட எரிந்த இருட்டைவிட கொஞ்சம் நிம்மதியா இருந்தது. சின்னத்தம்பி நடந்து நடந்து கால்கள் வலிச்சு மனசு கறுத்து நின்னபோது மாலதி முன்னால நின்னா. சின்ன குடிசை. மர இலைகளால மூடிய கூரை. உள்ளே மெழுகுவர்த்தி ஒளி. 

உள்ளே இருந்தவங்க ஐந்து பேர். யாரும் யூனிபார்ம்ல இல்லை.  யாரும் முழு ஆயுதத்தோட இல்லை. அங்கிருந்தது ஒரு போர் முடிஞ்ச பிறகான உலகம். ஒருத்தர் – காலில்ல. ஒருத்தி – பேச முடியாத நிலை. வயசானவர் – கண்கள் எப்போதும் கதறுற மாதிரி.

“இவங்க எல்லாரும் போர் முடிஞ்சதும் தப்பிச்சவங்க” என்று மாலதி மெதுவாச் சொன்னா. 

இரவு கொஞ்சம் அமைதியானதும் மாலதி பேச ஆரம்பிச்சா. “நான் ஆசிரியை” என்றாள்.

சின்னத்தம்பி நம்ப முடியாம பார்த்தான். 

அவள் அழுத்தமாக மீண்டும், “ஆமா. நான் ஆசிரியைதான். தமிழாசிரியை. தமிழ் சொல்லிக் கொடுத்தேன். ‘மனிதம்’ன்ணு ஒரு வார்த்தை இருக்குன்ணும் அதுக்குப் பொருள் என்னன்ணும் குழந்தைகளுக்குச் சொல்லுவேன்” என்றாள்.

“ஒரு நாள் முகாமிலிருந்து வந்தாங்க. ‘விசாரணை’ன்னு சொல்லி என்னைக் கூட்டிப்  போனாங்க.” அவள் பேச நிறுத்தினா.

“அங்க பெயர் இல்லை. வயசு இல்லை. பெண், ஆண் வேறுபாடு இல்லை. இருந்தது ஒரே விஷயம். அச்சம். அங்க நான் பார்த்தேன் உன் அக்காவை.”

அந்த வார்த்தை சின்னத்தம்பியின் மார்பைப் பிளந்தது.

“அவள் உயிரோட இருந்தா. ஆனா அவள் கண்கள் இறந்த மாதிரி இருந்தது. அந்த முகாம் வரைபடத்தில இல்லை. அரசியல்வாதிகள் அதை மறுப்பாங்க. செய்தித்தாள்கள் அதை எழுத மாட்டாங்க. ஆனா அங்க மனிதர்கள் நாள்தோறும் மனத்தாலும் உடலாலும் உடைக்கப்பட்டார்கள்.”

அடுத்த நாள் காலை. தூரத்தில ஹெலிகாப்டர் சத்தம். 

“அரசியல் எப்போதும் காடுக்குள்ளேயும் நுழையும்” என்று வயசாலி பொன்னையா சொன்னார். அவர் ஒரு காலத்தில தொழிற்சங்கத் தலைவர். 

“நாங்க ஆயுதம் எடுத்தது வீரத்துக்காக இல்லை. வாழ்றதுக்காக.” 

அவன் குரல் மரங்களுக்குள்ள அடங்கிப் போச்சு.

அந்த இரவு சின்னத்தம்பி தூங்கல. அவனுக்குள்ள இரண்டு குரல்கள். ஒன்று சொன்னது, “ஓடு. உயிரோட இரு” என்று. இன்னொன்று சொன்னது, “நில்லு. உன் அக்காவுக்காக” என்றது.

அவன் எழுந்தான். மாலதியைக் கேட்டான்.

“அந்த முகாம் எங்க இருக்கு?”

மாலதி நேராப் பார்த்தா.

“அதைத் தெரிஞ்சுக்கிட்டா நீ பழைய சின்னத்தம்பி இல்ல.”

சின்னத்தம்பி சொன்னான், “நான் அதை விரும்பல” என்றான்.

அவன் மீண்டும் ஆயுதம் எடுத்தான். ஆனா இந்த முறை எதிரி ஒரு முகாம் மட்டும்  இல்லை. அது முழு அமைப்பு. முழு அரசியல். முழு மௌனம். காடு முடிஞ்ச இடத்தில மண் மாறிச்சு. அது விவசாய மண் இல்லை. அது கல்லறை மண். அங்க மழை பெய்ஞ்சா மண் கருப்பா ஓடாது. சிவப்பா ஓடும்.

மாலதி சொன்னா, “இங்கதான்” என்று.

சின்னத்தம்பி பார்த்தான். வெளியில பார்த்தா ஒரு கைவிடப்பட்ட தொழிற்சாலை. உடைஞ்ச ஜன்னல். கம்பி வேலி. ஆனா உள்ளே ஒரு தேசம் இருந்தது. பயத்தால் ஆட்சி செய்யப்படும் தேசம். 

இந்த முகாமுக்கு சட்டம் இல்லை. நீதிமன்றம் இல்லை. அரசியலமைப்பு இல்லை. 

ஆனா அதிகாரம் இருந்தது. அந்த அதிகாரம் துப்பாக்கியில பேசிச்சு. 

“இங்க நீ குற்றவாளி இல்லை. அப்பாவியும் இல்லை” என்றாள் மாலதி.

“நீ ஒத்துக்கிட்டா குற்றவாளி. ஒத்துக்கலன்னா அதையும் தாண்டி குற்றவாளி” என்றான் சின்னத்தம்பி.

உள்ளே நுழையும்போது சின்னத்தம்பி ஓர் ஓசையைக் கேட்டான். சத்… சத்… சத்…  இது துப்பாக்கி சத்தம் இல்லை. இது மனித உடம்பில் கம்பு அடிக்கும் சத்தம். ஓர் அறை. இரும்புக் கதவு. உள்ளே ஓர் இளைஞன். கண்கள் கட்டப்பட்டு. கை பின்னால கட்டப்பட்டு. 

அவனிடம் அதிகாரி கேட்டான், “நீ யாருக்குத் தகவல் கொடுத்த?”

“யாருக்கும் இல்ல…” என்றான்.

சொத்.. என்ற ஒலியுடன் ஒரே அடியில் அவன் பல் சிதறியது.

சின்னத்தம்பியின் வயிறு குலுங்கியது.

அந்த அதிகாரி ஒரு சிப்பாய் இல்லை. அவன் உடையில பதவி தெரிஞ்சது.

அவன் சொன்னான், “நாட்டைக் காப்பாத்த சில உடம்புகள் அழியத்தான் வேணும்” என்று.

மாலதி சின்னத்தம்பியை ஒரு பக்கம் இழுத்தாள்.

“அங்க போகாத.”

அந்த பக்கம் பெண்கள் வைத்திருக்கும் பகுதி. அங்க கத்தல் இல்லை. அங்க மௌனம். அந்த மௌனம் கத்தலைவிட பயங்கரம்.

ஒரு பெண் சுவரைப் பார்த்துக்கிட்டு நின்னா. அவள் பேசல. அவள் அழல.

அவள் உயிரோட இருந்தாளா இல்லையா என்றுங்கூடத் தெரியல.

“இங்க பெண் ஓர் உடம்பு மட்டும்” என்றாள் மாலதி.

திடீர்னு ஒரு குரல்.

“தம்பி…?”

அந்தக் குரல் மண்ணுக்குள்ள இருந்து வர்ற மாதிரி இருந்தது. 

சின்னத்தம்பி திரும்பினான்.

அது அவனுடைய அக்காள். முடி வெட்டப்பட்டு. உடம்பு ஒல்லியா. கண்கள் வெறிச்சோடி.

“அக்கா!”

அவன் ஓட முயற்சி பண்ணினான். துப்பாக்கி முனை அவன் மார்பில்.

“ஒரு அடி முன்னால வந்தா இரண்டு சாவு” என்று அதிகாரி சொன்னான்.

அக்கா, “தம்பி… நீ நினைக்குற மாதிரி இது ஒரே பக்கம் இல்ல. அவங்க மட்டும் இல்லை. நம்ம பக்கம் இருந்தவங்களும் தகவல் கொடுத்தாங்க” என்றாள்.

சின்னத்தம்பி உடைந்தான்.  

அவள், “அரசியல் மனிதத்தைச் சாப்பிடும். கொடி எந்த நிறம்னாலும்” என்றாள்.

அந்த நேரம் வெளியில சத்தம். வெடிப்பு. துப்பாக்கி. குழப்பம். யாரோ முகாமைத் தாக்கினாங்க. அரசியல் ஒரு கணம் அமைதியை இழந்தது. சின்னத்தம்பி ஓர் அதிகாரியைத் துப்பாக்கியால் அடிச்சான். முதல் முறை அவன் நேருக்கு நேர் ஒரு மனிதனைக் கொன்றான். அவன் கண்ணில கண்ணீர் இல்லை. பயம் இல்லை. ஒரு வெற்றிடம் மட்டுமே இருந்தது.

மாலதி, “இப்ப! ஓடு! ஓடு!” எனக் கத்தினாள்.

அக்காவை இழுத்துக்கிட்டு சின்னத்தம்பி ஓடினான். பின்னால குண்டுகளின் சத்தம். முன்னால காடு.

அக்கா, “நாம தப்பிச்சாலும் இந்தக் கதை தப்பிக்காது” என்றாள். 

காடு. இரவு. மழை இல்லை. ஆனா, உடம்பு முழுக்க வியர்வை. சின்னத்தம்பி ஓடுறான். அக்கா பின்னால. மாலதி பக்கத்தில. யாரும் பேசல. பேசினா உயிர் போகும்.

3

 

அந்த இரவுல யாருக்கும் தூக்கம் வரல. கண் மூடினா ஒரே காட்சி. இரத்தம். கத்தல். கம்பால் அடிக்கும் சத்தம். சின்னத்தம்பி கண்களை மூடிக்கிட்டு அம்மாவை நினைக்க முயற்சி பண்ணினான். ஆனா அம்மா முகம் வரல. அதுக்குப் பதிலா அவன் கொன்ற அந்த அதிகாரியின் முகம் வந்தது.

“நீ யார்?” என அந்த முகம் கேட்டது.

சின்னத்தம்பி பதிலில்லாம எழுந்து உட்கார்ந்தான்.

அக்கா, “நீ நினைக்குற மாதிரி நான் வலுவா இல்லை, தம்பி!” என்றாள். அவள் கைகள் நடுங்கின. அவள் தொடர்ந்து பேசினாள். 

“அங்க ஒரு நாள் இல்லை. ஓர் இரவு இல்லை. எல்லாம் ஒரே இருட்டு.” 

அவள் கண்ணில கண்ணீர் இல்லை.

“அழுதா மனசு உடையும். அதுக்குப் பதிலா நான் உள்ளுக்குள்ள கொலை பண்ண ஆரம்பிச்சேன்” என்றாள்.

சின்னத்தம்பி புரியாம பார்த்தான்.

“நான் என்னை” என்றாள் அக்காள்.

“அங்க வாழணும்னா நீ ஒத்துக்கணும்” என்றாள்.

“என்ன ஒத்துக்கணும்?” என்று சின்னத்தம்பி கேட்டான்.

அக்கா தலையைக் குனிந்தாள்.

“யாராவது பெயர் சொன்னா அந்த அடிதான் நிக்குது.”

அந்த வார்த்தை சின்னத்தம்பியை மண்ணுக்குள்ள தள்ளிச்சு. 

“அக்கா… நீ—”

“ஆமா” என்று கூறிவிட்டு, சற்றுத் தாமதித்து, “நான் சில பேரைப் பற்றிச் சொன்னேன்” என்றாள்.

காடு அந்த நேரம் மிகவும் அமைதியா இருந்தது.

மாலதி, “இதுதான் அரசியலோட சிறந்த ஆயுதம். உன்னைப் பாதிக்கப் பட்டவனாக்கும். அப்புறம் குற்றவாளியாகவும் மாற்றும்” என்றாள்.

சின்னத்தம்பி தலையைப் பிடிச்சுக்கிட்டான். அவன் யுத்தம் இப்ப வெளியில இல்லை. அது அவன் மனசுக்குள்ள.

“நான் சொன்ன பெயர்கள்ல சிலர் அப்பாவிகள்” என்றாள் அக்காள்.

சற்றுத் தாமதமாக, “சிலர் நம்ம பக்கம் இருந்தவங்க” என்றாள்.

மீண்டும் மிகத்  தாமதமாக, “அந்த இரவுக்குப் பிறகு நான் தூங்கல” என்றாள்.

அக்கா சின்னத்தம்பியின் கையைப் பிடிச்சாள்.

“நீ என்னை வீரியா நினைக்காத! நான் உயிரோட இருக்க மற்றவர்களை உள்ளுக்குள்ள கொன்றவள்” என்றாள் கண்கள் கலங்க.

அவன் திடீர்னு வாந்தி எடுத்தான். அவன் கைகள்ல இரத்தம் இல்ல. ஆனா அவன் மனசு இரத்தமா இருந்தது.

“அப்போ நான் இப்ப என்ன?” என அவன் கேட்டான்.

மாலதி பதில் சொல்லல. ஏன்னா அதுக்குப் பதில் யாரிடமும் இல்ல.

தூரத்தில நாயின் குரைப்பொலி. ஹெலிகாப்டர் சத்தம். 

“அவங்க நம்மை விட்டுட மாட்டாங்க” என்றாள் மாலதி.

அவள் தொடர்ந்து, “நம்ம மேல வழக்கு இல்லை. ஆனா நம்ம மேல கதை இருக்கு” என்றாள். 

“அரசியலுக்குக் கதை முக்கியம். உண்மை இல்லை” என்றாள் அக்காள். 

அந்த இரவு சின்னத்தம்பி, ‘இனி நான் போராளி இல்லை’ என்று முடிவு எடுத்தான். அதைக் கூறினான். 

உடனே, மாலதி “அப்புறம்?” என்று கேட்டாள்.

“நான் சாட்சி மட்டுமே!” என்றான்.

அக்கா அவனைப் பார்த்தாள். மாலதியும் பார்த்தாள்.

“சாட்சியா இருக்கணும்னா நீ முதல்ல உயிரோட இருக்கணும்” என்று மாலதி சொன்னாள்.

சின்னத்தம்பி மெதுவாச் சொன்னான், “சில நேரம் உயிரோட இருப்பதே தண்டனைதான்” என்று.

அந்தக் காலைச் சூரியன்கூடப் பயந்த மாதிரித்தான் உதிச்சது. காடு இன்னும் ஈரமா இருந்தது. ஆனா சின்னத்தம்பிக்குள்ள ஈரம் இல்ல. காய்ந்த வெற்றிடம் மட்டுமே.

மாலதி ஒரு பழைய பை எடுத்தாள். அதுக்குள்ள ஒரு நோட்டு. ஒரு பேனா. ஒரு சிறிய காசெட் ரெக்கார்டர். 

“இது, துப்பாக்கியைவிட ஆபத்தானது” என்றாள்.

சின்னத்தம்பி நோட்டைப் பார்த்தான். 

அதில் அவன், “நான் பூநேரியில் பிறந்தவன். நான் போராளி இல்லை. நான் பார்த்ததை எழுதுறவன்” என்று எழுதினான். அவன் கைகள் நடுங்கின. ஏன்னா, இது சாகுறவனோட நடுக்கம் இல்லை. உயிரோட இருக்கப் போகுறவனோட பயம்.

அதே நேரம் நகரத்தில ஒரு குளிரூட்டப்பட்ட அறை. டேபிள். வரைபடம். சிவப்புப் புள்ளிகள். 

ஓர் அதிகாரி, “பூநேரி சம்பவம் மீடியாவுக்கு வெளியே இருக்கணும்” என்றான்.

மற்றவன், “சாட்சிகள்?” என்று கேட்டான்.

“இருக்கக் கூடாது. அரசியலுக்குச் சத்தம் வேண்டாம். அதுக்கு மௌனம்தான் தேவை” என்றான்.

அடுத்த நாள் செய்தித்தாள்.

“பூநேரி: தீவிரவாதிகளின் உள் மோதல்” – டிவி விவாதம்.

ஒருத்தன், “நாட்டின் பாதுகாப்பு முக்கியம்!” என்று கத்தினான்.

மற்றவன், “அரசியல் சதி!” என்று கதறினான். 

அக்கா அந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு, “நம்ம வலி ஒரு தலைப்புக்குக்கூடப் போதாதா?” என்று கேட்டாள்.

இது இனிக் காட்டுக்குள் வேட்டை இல்லை.  இது சிக்னல். இது தொலைபேசி. இது தகவல். 

மாலதி, “உன் பெயர் ஒரு பட்டியலில இருக்கு” என்றாள்.

“எந்தப் பட்டியல்?” என்று கேட்டான். 

“மறைந்திருக்கும் பட்டியல்” என்றாள்.

அந்தப் பட்டியலில பெயர் வந்தா சாவு வராம இருக்கலாம். ஆனா, வாழ்வு? அது வராது.

அந்த இரவு ஒரு தொடர்பு கிடைத்தது. பழைய தோழன். கருணா. 

“நீ உயிரோட இருக்கிறது மேல இருக்கிறவங்களுக்குப் பிடிக்கல” என்று அவன் சொன்னான்.

“அவங்க உன்னை மீட்க வரல. முடிக்க வர்றாங்க.”

சின்னத்தம்பி, “நீ ஏன் அப்படிச் சொல்ற?” என்று கேட்டான்.

கருணா ஒரு நிமிஷம் அமைதியாக இருந்தான்.

“ஏன்னா நாளைக்கு நீயே என்னை எழுதப் போற” என்றான்.

மாலதி, “நம்ம இங்க இருக்க முடியாது. நாம் தேசம் தாண்டணும். உண்மை! இந்த நாட்டில உயிரோட இருக்க முடியாது” என்று முடிவாகக் கூறினாள்.

அக்கா, “தேசம் தாண்டினாலும் மனசு தாண்டாது” என்றாள்.

சின்னத்தம்பி ஒரு ரகசிய இணைய தளத்தில் ஒரு பதிவை இட்டான்.

பெயர் இல்ல. முகம் இல்ல. ஆனா வார்த்தைகள் இருந்தன. 

“போர் முடிஞ்சாலும் முகாம்கள் முடிவதில்லை. அரசியல் இரத்தத்தால் இயங்குது.”

அந்தப் பதிவு பத்து நிமிஷத்திலேயே நீக்கப்பட்டது. ஆனா மூன்று பேர் அதைச் சேமிச்சிருந்தாங்க. அது போதும்.

அந்த இரவு மாலதி, “இனி நீ ஒரு மனிதன் இல்லை. நீ ஓர் ஆவணம்” என்றாள்.

சின்னத்தம்பி சிரிச்சான். பின்னர் அவன், “ஆவணங்களை எரிக்கலாம்” என்றான்.

மாலதி, “ஆனா நகல்கள் எப்போதும் எங்கோ இருக்கும்” என்றாள்.

அவன் மீண்டும் சிரிச்சான்.

அவள், “உண்மை மெதுவா தான் பயணிக்கும். ஆனா அதை நிறுத்த முடியாது” என்றாள்.

அந்த இரவு எல்லாம் வேகமா நகர்ந்தது. ஒரு நிமிஷத்துக்குள்ள மூன்று தொலைபேசி அழைப்புகள். இரண்டு மின்னஞ்சல்கள். ஓர் எச்சரிக்கை.

மாலதி, “இனி, இது நம்ம கட்டுப்பாட்டில இல்லை” என்றாள்.

 

4

நகரத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டல். கண்ணாடி சுவர்கள். குளிரூட்டப்பட்ட காற்று. அருகில் கடல். அறைக்குள்ள மூன்று பேர். அமைச்சர். உளவுத்துறை அதிகாரி. வெளிநாட்டு பிரதிநிதி.

“பூநேரி பழைய கதை” என்று வெளிநாட்டுக்காரன் சொன்னான்.

“ஆனா இப்ப அது தடையா மாறுது” என்று கூறி அமைச்சர் சிரிச்சார்.

“எல்லா தடையையும் நாங்கள் சரிசெய்வோம்” என்றார் உளவுத்துறை அதிகாரி.

உளவுத்துறை அதிகாரி ஒரு கோப்பைத் திறந்தார். அதில், ‘சின்னத்தம்பி. வயது – 20. நிலை – உயிருடன். பிரச்சினை – அரசுக்கு எதிராகப் பேசுவது’ என்ற குறிப்பு இருந்தது.

வெளிநாட்டுக்காரன், “அவன் சாகணுமா?” என்று கேட்டான்.

அமைச்சர் கண்ணாடி வழியாகக் கடலைப் பார்த்துவிட்டு, “சாவு கவனத்தை ஈருக்கும். அமைதி கவனத்தை ஈர்க்காது” என்றார்.

வெளிநாட்டுக்காரன், “அவனை நம்ம பக்கம் கொண்டு வரணும்” என்றான்.

அதே நேரம் காட்டுக்குள். மாலதி செயற்கைக்கோள் தொலைபேசியை எடுத்தாள். “ஓர் அமைப்பு உன்னைச் சந்திக்க விரும்புது.”

“யார்?”

“பெயர் இல்லை. கொடி இல்லை.”

“ஆனா சர்வதேசம்.”

சின்னத்தம்பி, “அவங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்டான்.

மாலதி மெதுவாக, “உன் மௌனம்” என்றாள்.

அக்கா திடீர்னு உரத்த குரலில், “நீ ஒத்துக்காத!” என்று கத்தினாள். 

மீண்டும் அதே குரலில், “நீ பேசினா நாங்க எல்லாரும் இறந்தவங்க” என்றாள்.

அவள் கண்கள் மீண்டும் அந்த முகாமைப் பார்த்த மாதிரி இருந்தது. 

அவள் அதே குரலில், “அவங்க உன்னை ஹீரோவாக்க மாட்டாங்க” என்றாள்.

மீண்டும் அவள், “உன்னை ஒரு குற்றவாளியாக அல்லது ஒரு பொய்யான சாட்சியாக மாற்றுவாங்க” என்றாள்.

அடுத்த நாள் ஒரு பாதுகாப்பான இடம். முகம் மறைத்த மனிதர்கள். குரல் மாற்றப்பட்ட குரல். 

“நீ எங்களைச் சேர்ந்தா உனக்குப் புதிய பெயர். புதிய நாடு. பாதுகாப்பு.”

சின்னத்தம்பி தொடர்ந்து சில வினாக்களைக் கேட்கத் தொடங்கினான்.

“பூநேரி?”

அமைதி.

“முகாம்கள்?”

அமைதி.

“பெண்கள்?”

அமைதி.

அந்த அமைதி எல்லாப் பதிலையும் சொன்னது. சின்னத்தம்பி நோட்டை மேசையில் வைத்தான். அவன் தீர்க்கமாகப் பேசத் தொடங்கினான்.

“நான் உங்க எதிரி இல்லை. ஆனா உங்க சொத்து ஆகவும் மாட்டேன். நான் பேசினா நீங்க என்னைக் கொல்லலாம். நான் பேசலன்னா நான் நானே என்னைக் கொன்றுக்கிறேன்” என்றான் சின்னத்தம்பி.

அறை ஒரு நிமிஷம் அமைதியா இருந்தது.

அதே நேரம் ஒரு சர்வதேச ஊடகத்தில் ஒரு செய்தி வெளியானது. “ரகசிய முகாம்கள் – சாட்சியின் வாக்குமூலம்.” பெயர் இல்லை. இடம் இல்லை. ஆனா ஆவணங்கள் இருந்தது. ஒலிப்பதிவுகள் இருந்தது. மாலதி அவளோட இரண்டாவது திட்டத்தை இயக்கினாள்.

“நீ மட்டும் இல்லை” என்று அவள் சொன்னாள். 

சற்று தாமதித்து, “உன் சாட்சி பல இடத்தில விதைச்சிருக்கு” என்றாள்.

உளவுத்துறை அதிகாரி அமைச்சரைச் சந்திக்கச் சென்றார். அமைச்சர் ஹோட்டலில் இருந்தார். ஹோட்டலில அமைச்சரின் கை நடுங்கிச்சு. 

அமைச்சர், “யார் கசிவூட்டினது?” என்று கேட்டார்.

உளவுத்துறை அதிகாரி, “நாம நினைச்ச மாதிரி அவன் ஒற்றை மனிதன் இல்லை” என்றார். 

சற்று நிறுத்தி, “அவன் ஒரு தொடக்கம்” என்றார்.

காட்டுக்குள் சின்னத்தம்பி கடைசி வரியாக, “இந்த உலகத்தில உண்மை ஒருத்தனைக் காப்பாத்தாது. ஆனா பல பேரை அமைதியா இருக்கவிடாம வைக்குது” என்று எழுதி, நோட்டை மூடினான்.

அக்கா அவன் கையைப் பிடிச்சாள்.

அவள், “நம்ம வாழ்வோம் தானே?” என்று கேட்டாள்.

சின்னத்தம்பி, “வாழ்வது இப்ப முக்கியம் இல்லை. மறக்கப்படாம இருக்கணும்” என்றான்.

அந்தக் காலையில் சின்னத்தம்பி காணாமல் போனான். காடு இருந்தது. குடிசை இருந்தது. நோட்டு இல்லை. பேனா இல்லை.  அவன் இருந்த இடத்தில் காலடித் தடம் மட்டும். 

 

5

 

நகரம் முழுக்க ஒரே செய்தி.  “பூநேரி சாட்சி – பொய்யான குற்றச்சாட்டு”

அடுத்த நாள். “சர்வதேச அமைப்புகள் – ஆதாரமில்லை”

அடுத்த வாரம். “பழைய காயங்களைக் கிளப்ப வேண்டாம்”

அரசியல் தன் வேலையைச் சரியாகச் செய்தது.

உண்மையை ஒரு வாக்கியமாக்கி, அப்புறம் அந்த வாக்கியத்தையும் அழித்தது.

ஒரு ரகசிய கோப்பு. Subject: S. Status: Missing Threat Level: Neutralized

“Neutralized” என்ற வார்த்தைக்கு உயிரோடு இருக்கிறதா, இல்லையா என்ற அர்த்தமே இல்லை. அதுக்கு அர்த்தம் ஒன்றுதான் – பிரச்சினை முடிந்தது.

அக்கா பெயரில்லா ஊரில் சிறிய வீட்டில இருக்கிறாள். அவள் பேச மாட்டாள். அவள் கதற மாட்டாள். அவள் ஒவ்வொரு நாளும் ஒரே காரியம் செய்கிறாள். ஒரு புத்தகத்தைத் திறந்து ஒரே வரியை வாசிப்பாள். அது, “சில உண்மைகள் சத்தமாச் சொல்ல முடியாது. ஆனா அமைதியாக் கூட மறக்க முடியாது” என்ற வரி. அந்த வரி அவளுக்குத் தெரியும். அதை எழுதியவன் யார் என்று உலகத்துக்குத் தெரியாது.

மாலதி ஒரு நாட்டில் இல்லை. பல நாடுகளில் இருக்கிறாள். 

ஒவ்வொரு செமினாரிலும் அவள், “போருக்குப் பிறகு என்ன நடக்கும்?” என்று கேள்வி கேட்பாள்.

பதில் வராது.

அவள் சிரிப்பாள்.

ஏன்னா, அந்த மௌனம் பதிலைவிட உண்மையாதுதானே!.

பூநேரி இப்ப ஓர் அடிக்குறிப்பு. ஓர் ஆய்வுக் கட்டுரை. ஒரு புள்ளிவிவரம். எண்கள் மட்டும். அந்த எண்களுக்குள்ள முரளி இல்லை. அம்மா இல்லை. அக்காவின் கண்கள் இல்லை. சின்னத்தம்பி இல்லை. சாட்சி சொல்ல முயன்ற ஒரு சாதாரண மனிதன் அவன். அவன் இறந்தானா? வாழ்ந்தானா? அது முக்கியம் இல்லை. முக்கியமானது, ‘அரசியல் மனிதனைக் காணாமலாக்கலாம். ஆனா, அவன் பார்த்த உண்மையை முழுசாப் புதைக்க முடியாது’ என்பதுதான்.

ஒரு வருடம் கழிந்தது. ஒரு பல்கலைக்கழக இணையதளம். “Conflict Testimonies – South Asia”. ஒரு கோப்பு. ஆசிரியர்: Anonymous. அந்தக் கோப்புக்குள்ள ஒரு வாக்கியம்.

“நான் உயிரோட இல்லாம இருக்கலாம். ஆனா நீ இதைப் படிக்கிறன்னா நான் தோற்றுவிடல.”

ஆனால், அந்தக் கோப்பு மூன்று மணி நேரத்தில் நீக்கப்பட்டது. அதற்குள் அதை ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்திருந்தாங்க. 

பூநேரி இப்போது மீண்டும் ஓர் ஊர். பள்ளிக்கூடம் திறந்தாச்சு. தேநீர்க்கடை வந்தாச்சு. ஆனால், அந்தப் பூநேரி மண்ணுக்குள்ள சத்தம் இருக்கு. அது வெடிப்புச் சத்தம் இல்லை. கத்தல் இல்லை. அது மறக்கப்படாம இருக்கிற நினைவின் சத்தம்.  

 

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *