
01.01.2026 வியாழக்கிழமை
அனைவருக்கும் வணக்கம்.
வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
மயிர் மின்னிதழ் மே 2021-ல் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற ஆசையில், எனக்கான ஒரு பயிற்சிக்களமாக இருக்கக்கூடும் என்கிற நம்பிக்கையில்தான் முதல் இதழ் முயற்சியினை மேற்கொண்டேன். இடையில் நிறுத்தி விடுவேன் என்கிற கணிப்பும் இருந்தது. எந்த ஒரு செயலையும் நீடித்த அக்கறையோடு என்னால் கைக்கொள்ள இயலாது. அதுதான் என்னுடைய ஒரே பலவீனம்.
ஆரம்ப உற்சாகத்தோடு துவங்கி கைவிட்ட நிறைய இலட்சியங்கள் உண்டு. அவற்றை நினைத்து நான் வருந்தி வருகிறேன். ஒரே விதிவிலக்கு மயிர் மின்னிதழ். ஐந்தாண்டுகள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிறது. அதற்கான முயற்சியை நண்பர்கள் இடைவிடாது துாண்டிக்கொண்டே இருக்கிறார்கள். வாசகர்களாகிய உங்களின் பங்களிப்பும் இருக்கிறது.
இந்த ஆண்டு நிறைய எழுத வேண்டும். நிறைய வாசிக்க வேண்டும் என்கிற ஒரே ஒரு கனவு மட்டுமே. மனிதன் ஒரு கும்பல். ஓராயிரம் மனிதர்களின் குமுறல்களை உள்ளடக்கியவன் என்கிறார் ஓஷோ. அதனால்தான் புத்தாண்டு உறுதிமொழிகள் நடைமுறைச்சாத்தியம் ஆவதில்லை. அக்கணத்தில் உள்ளவன் வேறு ஒருவன். அவன் மட்டுமே எப்போதும் நீடித்து இருப்பதில்லை.
சிறப்பாக எழுதுவதற்கு இடைவிடாத வாசிப்பும், எழுத்துப்பயிற்சியும் கட்டாயம். அதன் ஒரு பகுதியாக நாள்தோறும் ஏற்படும் வாழ்க்கை மற்றும் வாசிப்பு அனுபவங்களை நாட்குறிப்பு என்கிற இந்தப் பகுதியில் எழுதித் தொகுத்து வெளியிடலாம் என்றிருக்கிறேன். தினமும் எழுத வேண்டும் என்கிற பயிற்சிக்கு இது ஒரு அறைகூவலாக அமையக்கூடும். ஆர்வமும் நேரமும் உள்ளவர்கள் இதையும் வாசித்துக் கடந்துவிடலாம். ஒரு எழுத்தாளனின் நாட்குறிப்பு என்பதால் புதியன சில உங்களின் பார்வைக்கு வந்தடையலாம். நன்றி.
—-
இன்று காலையில் மிகவும் தாமதமாகத்தான் எழுந்தேன். பன்னிரெண்டு மணிக்கு அதிர்வெடிகள் ஒலித்தது துாக்கக் கலக்கத்தின் ஊடாக கேட்கத்தான் செய்தது. நண்பர்கள் அப்போதே புத்தாண்டு வாழ்த்துகள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். வாட் சாப்பில் செய்திகள் வந்து விழும் ஒலித்துணுக்குகள். எனக்கு புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லும் சம்பிரதாயத்தின் மீது பெரிதாக ஈடுபாடும் ஈர்ப்பும் கிடையாது. நண்பர்கள் சொல்வதால் பதில் மரியாதை செய்கிறேன். நாளை மற்றொரு நாளே என்பதுதான் என் மனோநிலை.
கடந்த ஒரு வாரமாக சளியும் தொண்டை வலியும். இரவில் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால்தான் துாங்க முடிகிறது. மார்கழி பிறந்ததில் இருந்து குளிர் மிக அதிகமாகிவிட்டது. காலை நடையை ஒத்திவைத்துவிட்டேன். குளிர்ந்த காற்று உள் தொண்டையைத் தாக்கி எச்சில் விழுங்க முடியாத நிலை. வலியுடன் உமிழ்நீரை உள்ளே விழுங்க வேண்டிய சங்கடம். புகைச்சல் வேறு. நோய் மனித உடலை மிகவும் சிறுத்துப்போகச் செய்கிறது. நோய் பீடித்த நாள்களில் மனமும் சோர்வடைந்து விடுகிறது.
எங்கு திரும்பினாலும் மக்கள் தும்மிக்கொண்டும் இருமிக்கொண்டும்தான் இருக்கிறார்கள். நான் மருந்து வாங்கச் சென்ற மெடிக்கலில் பத்துநிமிடத்தில் ஐந்தாறு பேர்கள் காய்ச்சலுக்கும், இருமலுக்கும் மருந்து வாங்கிச் சென்றதைப் பார்க்க முடிந்தது. பருவ கால நோய்களில் உடனே சரிப்படுத்த முடியாத ஒரு பிரச்சினையாக இருமலும் சளியும் இருக்கிறது. என்ன செய்தாலும் ஒருவாரம் பத்துநாள் இருந்து படுத்திவிட்டுத்தான் செல்கிறது. ஆனாலும் தொந்தரவு தாங்க முடியாமல் தலைவலித் தைலத்தையும் சளி இருமலுக்கான மாத்திரைகளையும் எடுத்துக்கொள்கிறோம். முன்பெல்லாம் கை வைத்தியம் என்கிற ஒன்று உண்டு. இந்நாட்களில் அந்தப்பழக்கம் துப்புரவாக காணாமல் ஆகிவிட்டது. எடுத்ததற்கெல்லாம் மெடிக்கல்களை நோக்கி ஓடிப் போகிறோம். இந்திய பாரம்பரிய வைத்தியமும் அழிந்துவிட்ட ஓர் அரியவகை விலங்கினத்தைப் போலாகிவிட்டது.
நோய்கள் அதிகரித்திருக்கின்றன. நீரிழிவும், புற்றுநோயும், இதய நோய்களும் இல்லாத நபர்கள் – நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களை- காண்பது அரிது. நம்முடைய உணவு முறை, பணிச்சூழல் இதற்குக் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். அவை எல்லாவற்றையும் விட சுற்றுச்சூழல் மாசுதான் முக்கியமான காரணமாக இருக்கிறது. மண், நீர், காற்று என மனிதன் வாழ அவசியமானவற்றை நாள்தோறும் எந்தவித பதற்றமும் இன்றி பாழ் படுத்தி வருகிறோம். அவற்றின் பின் விளைவுகள்தான் நோய்கள். புற்றுநோய் இன்று மிகச் சாதாரணமாக காணக்கிடைக்கிறது. குணப்படுத்த முடியாத, வந்துவிட்டால் மரணம் உறுதி என்கிற நிலைதான் புற்றுநோய்களில் பெரும்பான்மை. உணவும் சுற்றுச்சூழல் மாசும்தான் இதற்கு காரணம். மீட்டெடுக்கவே முடியாத ஒரு பேரழிவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சக மனிதர்கள் மீது மட்டுமின்றி சக உயிரினங்களின் மீதும் எவ்வித அக்கறையும் அற்றவர்களாகிவிட்டோம். அதன் பின்விளைவுகள்தான் புதுப்புது நோய்கள். தாண்டக்கூடாத எல்லைகளை நுகர்வின் கட்டுப்படுத்த முடியாத வெறிகளால் என்றோ தாண்டிவிட்டோம். இருக்கும் வரை ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கலாம். நோய்கள் நம்முடைய அன்றாடத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. நோய்கள் சூழ்ந்திருக்கும் உலகு.
—-
குறைந்த பட்சம் ஒரு நாளுக்கு ஐம்பது பக்கங்கள் வாசிக்க வேண்டும் என்கிற திட்டமிடல்.
கவிதா பதிப்பகம் வெளியிட்ட பெருந்தொகை நுாற்களில் அசோகமித்திரன், பிரபஞ்சன், ஜெயகாந்தன் படைப்புகள் முக்கியமானவை. பெரிய நுாற்களாக அவை இரண்டாயிரத்தை ஒட்டி வெளியிடப்பட்டன. இன்று ஜெயகாந்தன் சிறுகதைகளில் ஐம்பது பக்கங்கள் வரை வாசித்தேன்.
தமிழின் மூத்த படைப்பாளிகளை மீண்டும் ஒருமுறை மறுவாசிப்பு செய்து அவர்களைக் குறித்த கட்டுரைகள் எழுத வேண்டும் என்கிற நோக்கம். உதிரிகளாக சில படைப்புகளை வாசிப்பதன் மூலம் குறைந்தபட்ச மதிப்பீடுகளை மட்டுமே அடைய முடிகிறது. எழுத வேண்டும் என்கிற ஆசை உள்ளவர்களுக்கு அவர்களின் முன்னோடிகள் அத்தனைப் பேரையும் வாசித்திருக்க வேண்டிய கடமை உண்டு. அதனால் புதுமைப்பித்தன், க.நா.சுப்பிரமணியன், மௌனி, தி.ஜானகி ராமன், எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, லால்குடி சப்தரிஷி ராமாமிருதம், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன் போன்றோரின் முழுப் படைப்புகளையும் வாசிக்கும் திட்டம் கொண்டுள்ளேன்.

இன்று ஜெயகாந்தனின் சிறுகதைகளை வாசித்தேன். 1960 களில் எழுதப்பட்ட கதைகள். ஆனந்த விகடன், கல்கி போன்ற வெகுமக்கள் வாசிப்பிற்கென வெளிவந்த இதழ்களில் வெளிவந்தவை. ஜெயகாந்தன் படைப்புகளின் மீது எனக்குப் பெரிதாக ஈர்ப்பு ஏற்பட்டதில்லை. முதன்மையான காரணம் அவை காலத்தால் பழமையாகிவிட்டன. அவரின் மொழி நடை தனித்துவம் அற்றது. நாளிதழ் வாசகர்களுக்கு உரியது. கவித்துவம் சிறிதும் அற்றது. புறச்சூழலை சித்தரிக்கும் விதமும், மனித உணர்ச்சிகளை வெளிக்காட்டும் தருணங்களும் மிகையானவை. நுட்பங்கள் குறைவாகவும் தேய்வழக்கான நாடகீயத் தருணங்களும் நிறைந்தவை. இவை ஜெயகாந்தனின் படைப்புகளின் மீது ஒருவித மன விலக்கத்தை உண்டு பண்ணிற்று. ஆரம்ப நிலை வாசகனாக இருபதாண்டுகளுக்கு முன்னர் வாசிக்க ஆரம்பித்த போதும் அவர் என்னைக் கவர்ந்திழுக்கவில்லை. ஆனால் அக்காலத்தில் அசோகமித்திரன் மிகப்பிடித்த எழுத்தாளர்தான். இன்றும் மிகப்பிடித்த எழுத்தாளராக அவர்தான் இருக்கிறார். அசோகமித்திரனிடம் இருப்பதும் பத்திரிகை செய்திக்குரிய படைப்பு மொழிதான். ஆனால் வாழ்வின் நுட்பங்கள் செரிந்திருக்கும். ஒரு வாசகருக்கு படைப்பாளியின் அகம் வெளிப்படும் தருணங்கள் முக்கியமானவை. படைப்பின் வழியாக பல்வேறு கோணங்கள் திறந்து கொள்ளும் தருணங்கள் முக்கியமானவை. அத்தருணங்கள் அசோகமித்திரனின் படைப்புகளில் அதிகம். ஏனெனில் அவர் தன் அனுபவம் சார்ந்த படைப்புகளையே அதிகமும் எழுதினார்.
ஜெயகாந்தனின் படைப்புகள் பல்வேறு பகைப்புலங்களை கொண்டுள்ளன. ஆனால் அவற்றில் அனுபவத்தின் ஆழம் வெளிப்படும் கணங்கள் மிகக்குறைவே. பெரும்பாலான சித்திரிப்புகள் மேம்போக்கானவை. தனித்தன்மையற்றவை. ஜெயகாந்தன் அன்றும் சரி இன்றும் சரி எனக்கு உவப்பானவர் இல்லை. ஆயினும் அவரை முழுதாக அறிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனால் வாசித்து வருகிறேன்.
ஜெயகாந்தன் அவருடைய நாவல்களுக்காகவே இன்று நினைவு கூரப்படுகிறார். ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள் ஆகிய இரண்டு நாவல்களின் வழியாக அவர் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்துவமான ஓரிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். அவரின் சிறுகதைகள் அதிகமும் பேசப்பட்டதில்லை. அவரின் புனைவற்ற எழுத்துக்களும் பெரிதாக விவாதிக்கப்படவில்லை. அவர் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் அவை பொருட்படுத்தப்பட்டன. அவரின் மறைவிற்குப் பிறகு ஐம்பதாண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு அவற்றின் சமகாலத்தன்மையே எதிர்மறையான வாசக மதிப்பீடுகளை உருவாக்கிவிட்டன. எனில் அவரின் முக்கியத்துவம் என்ன? அவரை இன்றும் எதன் பொருட்டு வாசிக்க வேண்டும் என்கிற வினாக்களை எழுப்பிக்கொள்கிறேன்.
தமிழில் ஜெயகாந்தனைப் போல சமகாலத்தை எதிர்கொண்ட இலக்கியவாதிகள் மிகக்குறைவே. அவரின் சமகாலத்தவரான சுந்தர ராமசாமியிடம் ஜெயகாந்தன் எழுதிய, அக்கறைகொண்ட மனித வாழ்வின் சிக்கல்களின் பல்வேறு மாதிரிகள் படைப்புக்களாக வெளிப்படவில்லை. சுந்தர ராமசாமி பிள்ளைகொடுத்தாள் விளை போன்ற பிற்காலத்தில் எழுதிய கதைகளை ஜெயகாந்தன் தன் வாழ்நாள் முழுக்க முயன்றிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. அவர் வாழ்ந்த காலத்தின் சம காலச் சிக்கல்களை முழுதாக எதிர்கொண்டதற்கான சாட்சிகள்தான் ஜெயகாந்தனின் படைப்புகள். விதவைகளின் வாழ்வியல் நெருக்கடிகள், வறுமையின் பிடுங்கல்கள், விளிம்புநிலை மக்களின் வறுமைச்சித்திரங்கள், பாலியல் விழைவால் ஏற்படும் மனித மனங்களின் குணவேறுபாடுகள் என மிக விரிவான கருக்களை ஜெயகாந்தன் எதிர்கொண்டுள்ளார். முயன்று பார்த்திருக்கிறார். அவற்றில் கலைக்குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் அவை போலியானவை அல்ல. ஒரு தலைமுறையை முற்போக்குச் சிந்தனைக்குள் கொண்டுவந்த பெருமை அவருக்கு உரியது. அவரின் படைப்பகளுக்கு சமூகத்தை முன்நகர்த்தும் நோக்கம் ஒன்றே பிரதானம். அதனால் அவர் உரத்துப் பேச வேண்டியிருந்துள்ளது. ஆணித்தரமான கருத்துக்களை படைப்புகளில் புகுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சமகாலத்தை முழுதாக எதிர்கொண்டதன் பின்விளைவாக இன்றைய சமகாலச் சிக்கல்களை அவரின் எழுத்தில் பொருத்திப் பார்க்க முடியவில்லை. காலத்தின் களிம்பினால் அவரின் எழுத்துகள் பழமை படிந்து போய் உள்ளன.

முற்போக்கு எழுத்தாளர்களில் இன்றும் வாசிப்புத் தகுதி உள்ள ஒருவராக ஜெயகாந்தன் மட்டுமே இருக்கிறார். அவரின் அக்னி நீறுபடிந்த தோற்றத்தில் புகைந்து கொண்டுதான் இருக்கிறது.

👍தொடர்ந்து நாட்குறிப்புகள் எழுதவும்