கத்தான்குடியில் ரத்த வாசனை

‘கத்தான்குடி’ மாலை நேரம் எப்போதும் போலவே சற்று அடர்த்தியாக இருக்கும். கடற்காற்று உப்பு மணம் தூக்கி வரும்போது, தெருவோர தேநீர்க் கடைகளில் கண்ணாடிக் கோப்பைகள் ஒலிக்கும். அந்த மாலையில் மட்டும் ஒரு விதமான சுமை காற்றில் தொங்கிக்கொண்டிருந்தது. யாருக்கும் தெரியாத பதட்டம். யாரும் சொல்லாத பயம்.

அப்துல் ரஹ்மான் பள்ளிவாசல் பக்கத்து சந்தில் தன் சைக்கிளை நிறுத்தினான். அவன் வயது இருபத்து ஒன்று. தந்தையை இழந்து, அம்மாவையும் இரண்டு தங்கைகளையும் பார்த்துக் கொண்டிருக்கும் பொறுப்பு அவன் தோளில் இருந்தது. அவன் போர் அரசியலைப் பற்றிப் பெரிதாக யோசித்ததில்லை. அவனுக்குப் போர் என்றால், வேலை இல்லாமை; ஊரடங்கு; இரவில் வெடிச்சத்தம்; காலையில் செய்தித் தாள்.

“மக்ரிப் நேரம் ஆகுது… வா” என்று முஸ்தபா குரல் கொடுத்தான். 

இருவரும் சேர்ந்து பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள்.

அன்று பள்ளிவாசலில் கூட்டம் அதிகம். வெள்ளிக்கிழமை அல்ல. ஆனாலும், ஊரில் சமீப நாட்களாக இருந்த பதட்டம் காரணமாக, பலரும் ஒன்றாகவே பிரார்த்தனை செய்ய விரும்பினார்கள். ‘ஒன்றாக இருந்தால் பாதுகாப்பு’ என்ற நம்பிக்கை.

அந்த நம்பிக்கையே அந்த மாலையில் நொறுங்கப் போகிறது என்பதை யாரும் அறியவில்லை.

அதே நேரம், கத்தான்குடிக்கு சற்றுத் தூரத்தில் உள்ள தென்னந்தோப்பில், மூன்று இளைஞர்கள் துப்பாக்கிகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் சூரியன். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன். அவன் பெயர் அவனுக்கு எப்போதும் பரிகாசமாகவே தோன்றியது. அவன் வாழ்வில் வெளிச்சம் குறைவு. சிறுவயதில் தந்தை இராணுவ சோதனைச் சாவடியில் காணாமல் போனார். 

அம்மா ஒருநாள் அழுதபடி, “நீ பெரியவனானதும் ஏதாவது செய்யணும்” என்று சொன்ன வார்த்தை அவனுக்குள் எரிந்துகொண்டிருந்தது.

“இது அரசியல் வேலை” என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது.

“இது ஒரு செய்தி” என்று சொல்லப்பட்டிருந்தது.

“இது போர்” என்று சொல்லப்பட்டிருந்தது.

ஆனால், யாரும் “இதில் குழந்தைகள், வயதானவர்கள், இறைவனை நினைத்துத் தலை குனிந்து நிற்பவர்கள் இருப்பார்கள்” என்று சொல்லவில்லை. அல்லது சொல்லப்பட்டும் கேட்க விரும்பவில்லை.

சூரியன் துப்பாக்கியைப் பிடித்தபோது, அவன் கைகள் சற்றுத் துடித்தன. “சந்தேகம் வைத்தால் போராளி இல்லை” என்று அவன் தன்னைத் தானே கடிந்து கொண்டான்.

பள்ளிவாசலுக்குள் அமைதி. தொழுகையின் வரிகள் ஒரே ஓசையில் மேலெழுந்து, கூரையின் கீழ் மிதந்தன. அப்துல் ரஹ்மானின் மனம் சற்று நிம்மதியடைந்தது. ‘எல்லாம் சரியாகும்’ என்ற நம்பிக்கை.

அப்போது… முதல் துப்பாக்கிச் சத்தம்.

அது வெடிச்சத்தம் போல இல்லை. அது மின்னல் போல வந்தது. அடுத்த நொடியில் இன்னும் பல சத்தங்கள். கூச்சல். அலறல். இரத்தத்தின் மணம்.

மக்கள் புரியாமல் நின்றார்கள். சிலர் ஓட முயன்றனர். சிலர் விழுந்தார்கள். சிலர் குழந்தைகளைக் கைகளால் அணைத்து மூடிக் கொண்டார்கள். பள்ளிவாசலின் வெள்ளைச் சுவர்கள் நொடிகளில் சிவப்பாக மாறின.

அப்துல் ரஹ்மான் முஸ்தபாவின் கையைப் பிடிக்க முயன்றான். முஸ்தபா அங்கே இல்லை. அவன் இருந்த இடத்தில் இரத்தம் மட்டுமே.

“அம்மா…” என்று யாரோ அலறிய சத்தம்.

“அல்லாஹ்…” என்று யாரோ உச்சரித்த கடைசி வார்த்தை.

இறைவனை நினைத்து தலை குனிந்திருந்தவர்கள், மனிதக் கொடூரத்தால் தரையில் சரிந்தார்கள்.

சூரியன் பள்ளிவாசலுக்குள் நுழைந்தபோது, அவன் கண்களுக்கு முன்னால்  உலகமே உடைந்தது. அவன் எதிர்பார்த்த “எதிரி” எங்கேயும் இல்லை. அவன் பார்த்தது வெள்ளைத் தாடியுடன் தரையில் விழுந்த முதியவர்; சிறுவனின் கையை இறுக்கப் பிடித்திருந்த ஓர் இளைஞன்; பயத்தில் உறைந்த கண்கள்.

ஒரு கணம் அவன் துப்பாக்கியைக் கீழே போட நினைத்தான். அந்தக் கணமே, அவன் பின்னால் இருந்தவன் கத்தினான் – “சுடு! யோசிக்காத!”

அந்த ஒரு வார்த்தை, அவன் மனசில் இருந்த கடைசி மனிதத்தையும் நசுக்கியது. அவன் கண்களை மூடி துப்பாக்கியை அழுத்தினான். சத்தம். இன்னொரு உடல் தரையில்.அந்த நொடியில், அவன் இனிப் போராளி இல்லை. அவன் மனிதனும் இல்லை. அவன் ஓர் இயந்திரம்.

வெளியில், கத்தான்குடி முழுக்க கூச்சல். பெண்கள் ஓடினர். குழந்தைகள் அழுதன. கடைகள் அடைக்கப்பட்டன. இரு பள்ளிவாசல்களில் நடந்த கொடூரம் சில நிமிடங்களில் ஊரெங்கும் பரவியது.

அப்துல் ரஹ்மான் தூணின் பின்னால் விழுந்து கிடந்தான். அவன் தோளில் காயம். வலி தெரியவில்லை. மனசில் இருந்தது ஒரே கேள்வி, ‘நாம் யாருக்கு என்ன செய்தோம்?’ என்பதாகத்தான் இருந்தது.

‘இரவுக்குள் அம்மாவைப் பார்க்க வேண்டும்’ என்ற எண்ணம் மட்டும் அவனை உயிரோடு வைத்திருந்தது. அந்த இரவு கத்தான்குடி தூங்கவில்லை. அழுகை, பிரார்த்தனை, சாபம் அனைத்தும் கலந்த ஓர் இரவு. அடுத்த நாள் காலை, செய்தித்தாள்கள் எண்களைச் சொன்னன – “147 பேர்.”

ஆனால், அந்த எண் ஒவ்வொன்றுக்கும் ஒரு முகமும் ஒரு குடும்பமும் வெறுமையும் இருந்தன.

அப்துல் ரஹ்மானின் அம்மா, அவன் உயிரோடு வந்ததைக் கண்டு அழுதாள். பிறகு முஸ்தபாவின் வீட்டுக்குப் போய், அங்கே இருந்த மௌனத்தைப் பார்த்து இன்னும் அழுதாள்.

“போர் யாருக்காக?” என்று அவள் கேட்டாள். 

பதில் யாருக்கும் தெரியவில்லை.

சூரியன் அந்த இரவு தூங்கவில்லை. அவன் காதில் இன்னும் துப்பாக்கிச் சத்தம். அவன் மூக்கில் இரத்த மணம். அவன் கண்களில் அந்த சிறுவனின் முகம்.

அடுத்த நாள், அவர்களுக்கு வேறு இடத்துக்குச் செல்ல உத்தரவு வந்தது – “இங்குப் பணி முடிந்தது”.

ஆனால், சூரியனுக்கு அது முடிவல்ல. அது தொடக்கம். குற்ற உணர்வின் தொடக்கம்.

கத்தான்குடியில் அரசியல் பேசப்பட்டது. சிலர் கோபத்தில் பேசினார்கள். சிலர் பயத்தில் மௌனமானார்கள். 

“பழி யாருக்கு?” என்ற கேள்வி ஊரெங்கும்.

ஆனால், அப்துல் ரஹ்மான் ஒரு முடிவுக்கு வந்தான். “இந்த வெறுப்பைத் தொடர விடக் கூடாது.”

அவன் காயம் ஆறிக்கொண்டிருந்த நாட்களில், அவன் பள்ளியில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்ல ஆரம்பித்தான். ‘வெறுப்பைவிட மனிதம் பெரியது’ என்று அவன் சொல்லவில்லை, நடந்துகாட்டினான்.

பல ஆண்டுகள் கழித்து, போர் சோர்ந்த ஒரு காலத்தில், ஒரு மறுவாழ்வு முகாமில் அப்துல் ரஹ்மான் ஓர் இளைஞனைச் சந்தித்தான். அவன் சூரியன். இருவரும் ஒருவரை ஒருவர் அறியவில்லை. இருவருக்கும் ஒரே சுமை—நினைவுகள்.  ஒரு நாள், உரையாடலில், சூரியன் உடைந்து அழுதான். 

“நான் செய்தது பாவம்” என்று சொன்னான்.

அப்துல் ரஹ்மான் நீண்ட நேரம் மௌனமாக இருந்தான். பிறகு மெதுவாக சொன்னான் – “நீ செய்ததை நான் மறக்க முடியாது. ஆனா, இந்த வெறுப்பு தொடர வேண்டுமா என்பதை நாம் தான் முடிவு செய்யணும்.”

அது மன்னிப்பு அல்ல. அது மனிதம்.

கத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை ஒரு நாளின் சம்பவம். ஆனால், அதன் நிழல் பல தலைமுறைகள் வரை நீள்கிறது. அரசியல் பெயரில், விடுதலை பெயரில், பாதுகாப்பு பெயரில்—மனிதம் பலமுறை பலியாகிறது.

“இறைவனை நினைத்து தலை குனிந்த இடத்தில், மனிதன் ஏன் துப்பாக்கியைத் தூக்கினான்?”

அந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்கும் நாளே, உண்மையான விடுதலை.

படுகொலைக்குப் பிறகு முதல் வெள்ளிக்கிழமை. கத்தான்குடி பள்ளிவாசலின் கதவுகள் திறந்திருந்தன. ஆனால், உள்ளே நுழைய மனசுகள் தயங்கின. சுவர்களில் இன்னும் முழுமையாக அழியாத இரத்தக் கறைகள், தரையில் புதிதாகப் போடப்பட்ட பாய்கள் ஆகிய அனைத்தும் அந்த இரவை நினைவூட்டின.

“பயப்படாதீங்க… பள்ளிவாசல் இன்னும் பாதுகாப்பான இடந்தான்” என்று இமாம் அபூபக்கர் ஹஸ்ரத் மெதுவாகச் சொன்னார். 

அவர் குரலில் அதிர்வு இல்லை. ஆனால், கண்களில் சோர்வு. அந்தச் சோர்வு ஒரு மனிதனுடையது அல்ல, ரு சமூகத்தினுடையது.

முதல் வரிசையில் சில முதியவர்கள் மட்டுமே அமர்ந்திருந்தார்கள். பின்வரிசைகள் காலியாகவே இருந்தன. தொழுகை தொடங்கியபோது, பள்ளிவாசலுக்குள் மௌனமும் ஒரு சுவராகவே நின்றது.

அப்துல் ரஹ்மான் பள்ளிவாசலுக்கு வெளியே நின்றிருந்தான். அவன் இன்னும் உள்ளே செல்லத் தயாராக இல்லை. அவன் மனசில் பயம் இல்லை, கோபமும் இல்லை. ஆனால், ஒரு கேள்வி மட்டும் இருந்தது – “நாம் இனிமேல் எப்படிச் சும்மா இருக்கப் போறோம்?”

அவன் நண்பன் முஸ்தபாவின் அம்மா, பக்கத்து வீட்டில் தனியாக வாழ்ந்து கொண்டிருந்தாள். அவன் தினமும் அவளுக்குச் சாப்பாடுகொண்டு போனான். ஒருநாள் அவள் சொன்னாள்  -“என் மகனை கொன்றது யார் எனக்குத் தெரியாது. ஆனா, என் மனசில இருக்கிற கோபம் என் ஈமானைச் சாப்பிடுது.”

அந்த வார்த்தை அப்துல் ரஹ்மானை உலுக்கியது.

கத்தான்குடியில் இஸ்லாமிய சமூகம் இரண்டு விதமாகப் பிளந்தது.

ஒரு பக்கம்—“பயப்படணும். அமைதியா இருக்கணும். அரசியலுக்குள் போகக் கூடாது.”

மற்றொரு பக்கம்— “நாம் பேசணும். நம்ம வலி உலகத்துக்குத் தெரியணும்.”

இளைஞர்கள் குழம்பினார்கள். சிலர் மதரஸாக்களில்கூட கூடினார்கள். சிலர் இரவில் ரகசியமாகப் பேசினார்கள். அந்தப் பேச்சுகளில் இஸ்லாம் இருந்தது; ஆனால், மனித கோபமும் கலந்திருந்தது.

அபூபக்கர் ஹஸ்ரத் அதைக் கவனித்தார். மாலையில் அவர் இளைஞர்களை அழைத்தார்.

“இஸ்லாம் நமக்குக் கோபம் காட்டச் சொல்லல. நீதியத்தான் தேடச் சொல்லுது” என்றார்.

அந்த வார்த்தைச் சிலருக்கு அமைதியைக் கொடுத்தது; சிலருக்கு எரிச்சலை மிகுவித்தது.

பெண்கள் தம் துக்கத்தை வெளியில் காட்டவில்லை. ஆனால், வீட்டுக்குள் அது கொதித்தது. ஆயிஷா, கணவனை இழந்த இளம் பெண். அவளுக்கு இரு குழந்தைகள். அவள் முகத்தில் கண்ணீர் இல்லை. ஆனால், இரவில் குழந்தைகள் தூங்கிய பிறகு, குர்ஆன் வாசிக்கும்போது அவள் குரல் உடைந்து போகும். ‘அல்லாஹ் நியாயமானவன்’ என்று அவள் நம்பினாள். ஆனால், ‘அந்த நியாயம் எப்போ?’ என்ற கேள்வி அவளை உறங்க விடவில்லை. பெண்கள் ஒன்றாகக் கூடத் தொடங்கினார்கள். துக்கத்தைப் பகிர்ந்தார்கள். அந்தக் கூடுகைகள் மெதுவாக ஒரு சக்தியாக மாறின.

அரசியல் கத்தான்குடியைச் சுற்றி வலம் வந்தது. தலைவர்கள் வந்தார்கள். வாக்குறுதிகள் சொன்னார்கள். புகைப்படங்கள் எடுத்தார்கள். பிறகு மறைந்தார்கள்.

“நம்ம ரத்தம் அவர்களுக்குச் செய்தி மட்டுந்தான்” என்றார் ஒருவர்.

அப்துல் ரஹ்மான் அதை கேட்டபோது, ஒரு முடிவுக்கு வந்தான் – “நம்ம குரல் நாமே உருவாக்கணும்.”

அவன் இளைஞர்களைச் சேர்த்து ஒரு சமூகக் குழுவைத் தொடங்கினான். அக்குழுவின் பெயர் ‘மௌனத்தை உடைப்போம்’. அது அரசியல் கட்சி இல்லை. ஆயுத இயக்கம் இல்லை. அது ஒரு குரல்.

அந்தக் குழு முதலில் செய்த பணியே, பயத்தைப் பற்றிப் பேசுவதுதான்.

“நாம் பயப்படுறோம் என்று ஒத்துக்கொள்ளறது பாவம் இல்லை” என்று அப்துல் ரஹ்மான் சொன்னான்.

அவர்கள் பள்ளிவாசல்களில், வீடுகளில், பள்ளிகளில் உரையாடல்கள் நடத்தினார்கள். இஸ்லாமிய வரலாற்றில் நடந்த துன்பங்களை நினைவூட்டினார்கள். ஆனால், பழிவாங்கலை அல்ல, சபுர் (பொறுமை) மற்றும் அடல் (நீதி) பற்றிப் பேசினார்கள்.

சிலர் அவர்களைப் “பலவீனர்கள்” என்றார்கள்.

சிலர், “இதுதான் உண்மையான ஜிஹாத்” என்றார்கள்.

ஒருநாள், அப்துல் ரஹ்மானுக்குக் கடிதம் வந்தது. பெயர் இல்லாத கடிதம். 

அதில், “நீங்கள் பேசுவது சிலருக்குப் பிடிக்கவில்லை. எச்சரிக்கை” என்று எழுதப் பட்டிருந்தது.

அவன் பயந்தான். ஆனால், பின்வாங்கவில்லை. அவன் அம்மா சொன்னாள் – “உன் அப்பா உயிரோடு இருந்திருந்தா, இதைத்தான் செய்திருப்பார்.”

அந்த வார்த்தை அவனுக்குத் துணிவைக் கொடுத்தது.

அதே நேரம், சூரியன் இப்போது வேறொரு ஊரில் இஸ்லாமிய சமூகத்தின் வலியைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவன் மனசில் ஒரு விருப்பம் எழுந்தது – “நான் பேச வேண்டுமா?”

அவன் பேசினால், அது உண்மையைத் திறக்கும். அவன் பேசினால், அது அவனை அழிக்கும். அவன் இரவுகளில் ‘துஆ’ கேட்டான். அவன் வாழ்க்கையில் முதல் முறையாக, அவன் கண்ணீர் தொழுகையில் விழுந்தது.

கத்தான்குடியில், ஒரு வருட நினைவுநாள் வந்தது. பள்ளிவாசல் நிரம்பியது. இந்த முறை பயம் குறைவு. துக்கம் அதிகம். அபூபக்கர் ஹஸ்ரத் சொன்னார் – “இந்த மண் சாட்சியமா இருக்கு. நம்ம ரத்தம் வீணாப் போகக்கூடாது. நம்ம பிள்ளைகள் வெறுப்பை மரபாக எடுத்துக்கக் கூடாது.”

அப்துல் ரஹ்மான் கூட்டத்தைப் பார்த்தான். அவன் கண்களில் சிறிய ஒளி.

கத்தான்குடி இஸ்லாமிய சமூகம் இன்னும் காயங்களோடு தான் வாழ்கிறது. ஆனால், அந்தக் காயங்களில் இருந்து ஒரு கேள்வி எழுகிறது – “நாம் துக்கத்தை மட்டும் சுமக்கப் போறோமா அல்லது அதிலிருந்து நியாயமான எதிர்காலத்தை உருவாக்கிக் காட்டப்போறோமா?”

இந்தக் கேள்விக்கான பதில் அடுத்த தலைமுறையின் கைகளில்தான் இருந்தது.

கத்தான்குடி இரவு, பகலைவிட ஆபத்தானது. பகலில் எல்லாம் சாதாரணம் போல தெரியும். கடைகள் திறக்கும். குழந்தைகள் பள்ளிக்குப் போகும். பள்ளிவாசலில் தொழுகை. ஆனால் இரவில் ஒவ்வொரு நிழலும் கேள்வியாக மாறும்.

அப்துல் ரஹ்மான் அந்த இரவு தன் சமூகக் குழுவின் கூட்டத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தான். கடற்காற்று வழக்கம்போல் அடித்தது. ஆனால், அவன் முதுகெலும்பில் ஓடியது குளிர்.

அவன் பின்னால் ஒரு பைக் மெதுவாக வந்தது. ஒலி இல்லை. விளக்கும் இல்லை. அவன் நின்றான். பைக் நின்றது. ஒரு நொடிக்குள் வேகமாகத் திரும்பி, வேறு சந்தில் மறைந்தது. இது எச்சரிக்கையா? அல்லது இது ஆரம்பமா?

அடுத்த நாள் காலை, கத்தான்குடி முழுக்கச் செய்தி கசிந்தது – “நேத்து இரவு சில இளைஞர்கள் பிடிக்கப்பட்டிருக்காங்க.”

யார் பிடித்தார்கள்? ஏன் பிடித்தார்கள்? யாருக்கும் தெளிவில்லை. அப்துல் ரஹ்மான் தெரிந்த பெயர்களைக் கேட்டான். அந்தப் பெயர்களில் அவன் குழுவில் கலந்து கொண்டிருந்த இரண்டு இளைஞர்களும் இருந்தனர். அவன் நேரே காவல் நிலையம் போனான். 

“இது பாதுகாப்பு விசாரணைதான்” என்று அதிகாரி சொன்னார்.

அவன் அதை நம்பவில்லை. 

“அரசியல் பேசாதீங்க. வீட்டுக்குப் போங்க” என்று அதிகாரி அதட்டினார்.

அந்த வார்த்தையில் மறைந்திருந்தது பயம். அழுத்தம். அதிகாரம்.

அதே நேரம், ஊரின் இன்னொரு மூலையில், ஆயிஷாவும் சில பெண்களும் ரகசியமாகக் கூடினார்கள்.

“ஆண்கள் பேசுறாங்க. பிடிக்கப்படுறாங்க. நம்ம பிள்ளைகளுக்கு நாளை யார் பேசப் போறது?” என்று ஆயிஷா கேட்டாள்.

அந்தக் கேள்வி, அந்த அறையில் இருந்த பெண்களின் மனசில் ஒரு தீப்பொறியை இட்டது.

அவர்கள் முடிவு செய்தார்கள் — ‘பெண்கள் பேச ஆரம்பிக்க வேண்டும்’.

அது அரசியல் மேடை இல்லை. அது பள்ளிவாசல் இல்லை. அது வீடுகளுக்குள் நடந்த உரையாடல். 

ஆனால், அந்த உரையாடல்கள்தான் அரசியலுக்குப் பயமாக இருந்தது.

மறுநாள், தேசிய அரசியல் தலைவர் கத்தான்குடிக்கு வந்தார். கறுப்பு கண்ணாடி. பாதுகாப்பு வாகனங்கள். முன்னமே எழுதப்பட்ட உரை. 

“இந்த துயரம் மீண்டும் நடக்கக் கூடாது” என்று அவர் சொன்னார்.

கூட்டத்தில் நின்ற அப்துல் ரஹ்மான் கையை உயர்த்தினான்.

“அதுக்கு நீதியும் உண்மையும் தேவை. எங்களை மௌனமாக்கினா, பாதுகாப்பு வருமா?” என்று கேட்டான்.

ஒரு கணம்— மேடையில் இருந்தவர் தடுமாறினார். பின்னால் இருந்த ஆலோசகர்கள் கண்களால் சைகை காட்டினார்கள்.

“இளைஞரே, இது சரியான இடம் இல்லை” என்று பதில் வந்தது.

அந்தப் பதில், கூட்டத்தைவிட அப்துல் ரஹ்மானின் மனசில்தான் அதிக சத்தமிட்டது.

அன்றிரவு, அவன் வீட்டுக்கு ஒருவன் வந்தான்.  பெயரைச் சொல்லவில்லை. முகம் முழுக்க தாடி. குரல் தாழ்ந்தது.

“நீங்க சரியான கேள்வி கேட்கிறீங்க” என்றான்.

அப்துல் ரஹ்மான் அவனையே உற்றுப் பார்த்தான். உடனே அவன் மீண்டும் சமாதானமாகவே பேசத் தொடங்கினான். 

“ஆனா, எல்லாக் கேள்விகளுக்கும் நேரம் இருக்கு” என்றான்.

“நேரம் யார் கையில்?” என்று அப்துல் ரஹ்மான் கேட்டான்.

அவன் சிரித்துவிட்டு, “அதிகாரத்தின் கையில்” என்றான்.

அவன் போனபின், அப்துல் ரஹ்மான் நீண்ட நேரம் தூங்கவில்லை. அவன் உணர்ந்தான்—‘இது இனிச் சமூக வேலை மட்டும் இல்லை. இது அரசியல் சதுரங்கம்.

அதே நாட்களில், சூரியன் ஒரு முடிவுக்கு வந்தான். அவன் மாற்றுப் பெயரில் ஒரு பத்திரிகையாளரைச் சந்தித்தான்.

இடம்—ஒரு சிதைந்த லாஜ்.

நேரம்—நள்ளிரவு.

“நான் எல்லாம் சொல்லுவேன்” என்றான் சூரியன்.

பத்திரிகையாளர் அவனை உற்றுக் கவனித்தார்.

“ஆனா, அது வெளிவந்தா, நான் உயிரோட இருக்க மாட்டேன்.” என்றான் சூரியன்.

பத்திரிகையாளர், “நீ ஏன் இப்போ பேசுற?” என்று கேட்டார்.

“ஏன்னா, அந்த மௌனம் இன்னும் கொலை செய்றுது” என்றான் சூரியன்.

கத்தான்குடியில் பதட்டம் அதிகரித்தது. பிடிப்புகள். கேள்விகள். அச்சுறுத்தல்கள். அபூபக்கர் ஹஸ்ரத் வெள்ளிக்கிழமை உரையில் சொன்னார் – “நீதி கேட்கறது கலவரம் இல்லை. அநியாயத்துக்கு எதிராப் பேசறது இஸ்லாத்தின் அடிப்படை.”

அந்த உரை பதிவு செய்யப்பட்டு, அடுத்த நாளே, ‘ஆபத்தான பேச்சு’ என்று முத்திரை குத்தப்பட்டது.

இரவில் அப்துல் ரஹ்மானின் சமூகக் குழு கூடினது. அந்த அறையில் இருந்த காற்று கனமாக இருந்தது. 

“நம்ம யாராவது பேசினா, பிடிக்கப்படுறோம். சும்மா இருந்தா, மறக்கப்படுறோம்” என்றார் ஒருவர்.

அப்துல் ரஹ்மான் மெதுவாக எழுந்து, “இந்த இரண்டுக்கும் நடுவுல ஒரு பாதை இருக்கு. உண்மை. அது ஆபத்தானது. ஆனா, அதுதான் விடிவு” என்றார்.

அந்த நொடி, அவன் உணர்ந்தான், ‘நான் இனித் திரும்ப முடியாது’ என்று.

அதே நேரம், தொலைவில் ஒரு செய்தி தயாராகிக் கொண்டிருந்தது. ஓர் ஒப்புதல் வாக்குமூலம். ஓர் அரசியல் உண்மை. பலருக்கு அச்சம் தரப்போகும் வெளிச்சம். சூரியன் அந்த இரவு கடைசி முறையாக ‘துஆ’ கேட்டான், “நான் செய்த பாவத்துக்கு மன்னிப்பு கிடைக்காதா?” என்று.

அவனுக்குப் பதில் கிடைக்கவில்லை. ஆனால், அவன் முடிவு தெளிவாக இருந்தது.

‘கத்தான்குடி’ இப்போது போர்க்களம் அல்ல. அது உண்மை, அதிகாரம், மௌனம் எனும் மூன்று நிழல்கள் மோதும் இடம். அந்த இரவு கத்தான்குடி முழுக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இது விபத்து அல்ல என்பதை எல்லாரும் உணர்ந்தார்கள். இருளில் ஒலிகள் பெரிதாகக் கேட்கும். நாயின் குரல்கூட அச்சமாகத் தோன்றும். அப்துல் ரஹ்மான் ஜன்னலுக்குப் பக்கத்தில் நின்றான். தூரத்தில் இரண்டு ஜீப்புகள் மெதுவாக நகர்ந்தன. விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன.

‘இன்னிக்குத்தான்’ என்று அவன் மனசு சொன்னது.

அதே நேரம், தலைநகரின் ஓரங்கட்டிய பகுதியில் செய்தியறை விழித்திருந்தது. கம்ப்யூட்டர் திரையில் ஒரு வீடியோ. முகம் இருளில். குரல் மட்டும் தெளிவாக.

“1990 ஆகஸ்ட் 3… நான் அங்கே இருந்தேன்.”

பத்திரிகையாளர் ஹெட்ஃபோன் கழற்றினான். அவன் கைகளில் வியர்வை.

“இது போர் தொடுக்கும்” என்று அவன் எடிட்டரிடம் சொன்னான்.

எடிட்டர் பதில் சொன்னார் – “இது போரை முடிக்கவும் கூடும்.”

வெளியிட நேரம் குறிக்கப்பட்டது. காலை 6.00.

கத்தான்குடியில் பெண்கள் தங்கள் திட்டத்தை அமைத்தார்கள். ஆயிஷா தலைமையில் சிறிய குழு. அவர்கள் கையில் பேனர்கள் இல்லை. கோஷங்கள் இல்லை. அவர்களிடம் இருந்தவை பெயர்கள் மட்டுமே!. 147 பெயர்கள். 147 குடும்பங்கள். 147 கதைகள். அவர்கள் முடிவு செய்தார்கள் – அந்த நாளில், ஒரே நேரத்தில், ஒரே மௌனத்தில், அந்த பெயர்களை வாசிக்க வேண்டும். அது சட்டவிரோதமா? யாருக்கும் தெரியாது. ஆனால், அது அரசியலுக்கு ஆபத்தானது.

அபூபக்கர் ஹஸ்ரத்துக்கு காவல் துறையிலிருந்து அழைப்பு வந்தது, “நாளைக்கு உரை வேண்டாம். அமைதியா இருங்க” என்று.

“அமைதி நம்ம கடமை” என்று அவர் சொன்னார்.

“ஆனா, மௌனம் எப்போதும் அல்ல” என்று கூறிவிட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

அந்த நொடியில், அவர் முடிவு செய்தார் – உரை இருக்கும். ஆனால், அது வழக்கமானது அல்ல.

நள்ளிரவு. அப்துல் ரஹ்மானின் வீட்டுக் கதவு மெதுவாகத் தட்டப்பட்டது. அவன் அம்மா பயந்து பார்த்தாள்.

வெளியில் அவன் நண்பன், காவல் துறையில் வேலை செய்யும் சலீம்.

“நீ இப்போ இங்க இருக்கக் கூடாது” என்று சலீம் சொன்னான்.

“ஏன்?” என்று கேட்டான் அப்துல் ரஹ்மான்.

“காலை முன்னாடி உன் பேரு லிஸ்ட்ல இருக்கு.”

“எந்த லிஸ்ட்?”

“பாதுகாப்பு.”

அந்த வார்த்தை அப்துல் ரஹ்மானுக்கு எல்லாவற்றையுமே புரிய வைத்தது.

“நான் போனா… இதெல்லாம் நின்ணு போகும்” என்றான் அப்துல் ரஹ்மான்.

“நீ போனா, உண்மை உயிரோட இருக்கும்” என்றான் சலீம்.

காலை 5.45. கத்தான்குடி பள்ளிவாசலின் ‘மைக் ஆன்’ ஆனது. வழக்கமான ‘அதான்’ இல்லை. அபூபக்கர் ஹஸ்ரத்தின் குரல் மட்டும்.

“இன்று நாம் நீண்ட உரை பேச மாட்டோம். நாம் பெயர்கள் வாசிப்போம்.”

ஒரு கணம் யாரோ ‘மைக்’யைத் துண்டிக்க முயன்றார். ஆனால், தாமதமாகிவிட்டது. முதல் பெயர் வாசிக்கப்பட்டது. பிறகு இன்னொன்று. பிறகு மற்றொன்று. பெயர்கள் – அவை எண்களாக இல்லை. அவை மனிதர்களாகவே.

காலை 6.00. தேசிய ஊடகங்களில் வீடியோ ஒளிபரப்பானது. சூரியனின் குரல் நடுங்கியது. ஆனால், பொய் இல்லை.

அவன் சொன்னான் – “இது ஒரு கண நேர வெறுப்பு இல்லை. இது திட்டமிட்ட அரசியல். நாங்கள் கருவிகள்.”

ஒரு பெயர். ஒரு கட்டளை. ஒரு நேரம். திரையில் நேரம் ஓடியது. அரசியல் அலுவலகங்களில் ‘போன்’கள் அலறின. 

கத்தான்குடியில், பெண்கள் வீடுகளின் வாசல்களில் நின்றார்கள். யாரும் கத்தவில்லை. யாரும் அழவில்லை. அவர்கள் குழந்தைகளின் கையைப் பிடித்திருந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பெயர். அந்த மௌனம், காவல் வாகனங்களின் சத்தத்தையும் அடக்கியது.

அப்துல் ரஹ்மான் ஒரு பாதுகாப்பான இடத்திலிருந்து எல்லாவற்றையும் கேட்டான். ‘மைக்’. ஊடகம். பெண்களின் மௌனம்.  அவன் கண்களில் கண்ணீர்.

“இது தான் நம்ம சக்தியா?” என்று அவன் தன்னைத் தானே கேட்டான்.

அந்த நொடியில், அவன் ‘போன்’ ஒலித்தது.

“நீங்க இப்போ பொதுவெளியில் வந்தா, உங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்” — ஓர் அறியாத குரல்.

அவன் சிரித்தான். பின்னர் மெதுவாகவும் எள்ளலாகவும் “உண்மை வெளிவந்த பிறகு, யாருக்குப் பாதுகாப்பு?” என்று கேட்டான்.

‘போன்’ இணைப்புத் துண்டிக்கப்பட்டது. 

மாலை நேரம்.  அரசு ஓர் அறிவிப்பு வெளியிட்டது – ‘சுயாதீன விசாரணை.’

ஊர் நம்பவில்லை. ஆனால், பயம் மாற ஆரம்பித்தது. கத்தான்குடி அந்த நாள் இரவு முதல் முறையாக அச்சத்தில் அல்ல, எச்சரிக்கையுடன் தூங்கியது. அபூபக்கர் ஹஸ்ரத் பள்ளிவாசல் வாசலில் நின்று சொன்னார் – “வெளிச்சம் வந்தாச்சு. இப்போ, அதைக் காப்பாத்தணும்.”

அரசின் அறிவிப்பு வந்த மறுநாள், கத்தான்குடி அமைதியாகத் தெரியவில்லை. அது அமைதியாக்கப் பட்டிருந்தது. சாலைகளில் சீருடைகள். சந்திகளில் கண்கள். வீடுகளின் வாசல்களில் மெதுவான மௌனம்.

“சுயாதீன விசாரணை” என்ற வார்த்தை ஊரெங்கும் ஒலித்தது. ஆனால், அந்த வார்த்தைக்கு யார் அர்த்தம் எழுதுவார்கள்? அதுதான் இப்போதைய கேள்வி.

அப்துல் ரஹ்மான் பாதுகாப்பான இடத்தில் இருந்து செய்திகளைக் கேட்டான். ஊடகங்களில் அரசியல்வாதிகளின் முகங்கள் மாறின. சிலர் நியாயம் பேசினார்கள். சிலர் பாதுகாப்பு பேசினார்கள். உண்மையை மட்டும் யாருமே பேசவில்லை.

விசாரணைக் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி சர்மா. அவர் முதன்முதலில் சொன்ன வார்த்தை – “அமைதியைப் பாதிக்கக் கூடாது.”

அந்த வார்த்தை, ஆயிஷாவின் காதில் எச்சரிக்கைபோல விழுந்தது.

“அமைதி யாருக்காக?” என்று அவள் பெண்கள் கூட்டத்தில் கேட்டாள்.

எல்லோரும் அவளின் கேள்விக்குச் செவிமடுத்தார்கள்.

அவள், “நமக்கு அமைதி வேண்டுமா, நியாயம் வேண்டுமா?” என்று கேட்டாள்.

பெண்கள் பதில் சொல்லவில்லை. அவர்கள் பெயர்களை எடுத்தார்கள்.

அன்று மாலை, சூரியனின் வீடியோ வெளியான ஊடக அலுவலகத்தில் சோதனை நடந்தது. கணினிகள் எடுத்துச் செல்லப்பட்டன. ‘ஹார்ட் டிஸ்கு’கள் பறிமுதல் செய்யப்பட்டன.

எடிட்டர் மெதுவாகச் சொன்னார் – “நீங்க தாமதமா வந்தீங்க. உண்மை ஏற்கனவே வெளியே போயிடுச்சு.”

அதிகாரி முகம் கடினமானது. 

அவர், “உண்மை யாருக்கு வசதியோ, அதுதான் உண்மை” என்று அதிகாரத் திமிரில் பேசினார்.

அபூபக்கர் ஹஸ்ரத்துக்கு மீண்டும் அழைப்பு – “நீங்க பெயர்கள் வாசிச்சது விசாரணையை பாதிக்குது.”

அவர் அமைதியாகச் சொன்னார் – “விசாரணை உண்மையைத் தேடுதானா அல்லது உண்மையிலிருந்து ஓடுதானா?”

அழைப்பு துண்டிக்கப்பட்டது. அன்று இரவு, பள்ளிவாசலின் ‘மைக்’குக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

அப்துல் ரஹ்மான் முடிவு செய்தான்— அவன் வெளியில் வரவேண்டும். பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு உறுதி செய்தார்கள். ஆனால், அந்தப் பாதுகாப்பு—காகிதத்தில். 

அவன் முதல் பேட்டியில் சொன்னான் – “நாங்கள் பழிவாங்கலைக் கேட்கவில்லை. நாங்கள் நினைவுகளைக் கேட்கிறோம். 147 பேர் எண்கள் இல்லை. அவர்கள் வாழ்க்கைகள்.” 

அந்தப் பேட்டி ஒளிபரப்பான நொடியில், அவனுக்கு எதிரான கோப்புத் திறக்கப்பட்டது.

அதே இரவு, சூரியன் இடம் மாறினான். அவனுக்குப பாதுகாப்பு இல்லம் கொடுத்ததாகச் சொன்னார்கள். ஆனால், அந்த இல்லம் கண்ணாடிக் கூண்டு.

அவன் வழக்கறிஞரிடம் கேட்டான், “நான் சாட்சி சொன்னா, என்ன நடக்கும்?” என்று.

அவர், “நீ பேசினா, வரலாறு மாறும். நீ பேசினா, நீ தனியா இருப்ப” என்றார்.

சூரியன் சிரித்தான். பின்னர் அவரிடம், “நான் ஏற்கனவே தனியந்தான்” என்றான்.

விசாரணைக் குழு கத்தான்குடிக்கு வந்த நாளில் பெண்கள் வீடுகளிலிருந்து வெளியே வந்தார்கள். பேனர்கள் இல்லை. கோஷங்கள் இல்லை. அவர்கள் கையில் வெள்ளைத் துணி. அதில் 147 பெயர்கள்.

குழுவின் வாகனம் நின்றது. ஒரு நிமிடம் எதுவும் நடக்கவில்லை. பிறகு, சர்மா அந்தத் துணியைப் பார்த்தார். அவர் முகம் மாறியது. அவர் எதுவும் பேசவில்லை. அந்த மௌனம் ஓர் அரசியல் உரையைவிடப் பலமாகவே இருந்தது.

அன்றிரவு, ரகசிய அறிக்கையின் சுருக்கம் கசிந்தது. சூரியன் சொன்ன பெயர்கள் அதில் இருந்தன. கட்டளைகள் குறிப்பாக இருந்தன. தவறுகள் அனைத்தும் ‘தனிப்பட்ட நடவடிக்கைகள்’” என்று மிருதுவாக்கப் பட்டிருந்தன.

அப்துல் ரஹ்மான் அதை வாசித்தான். அவன் கோபப்படவில்லை. அவன் புரிந்து கொண்டான், ‘உண்மை முழுதாக வராது. ஆனால், முழுதாக மறையவும் முடியாது.’

அடுத்த நாள் காலை, கத்தான்குடி பள்ளியில் ஒரு புதிய வகுப்பு தொடங்கப்பட்டது. பெயர் ‘நினைவுகளின் வரலாறு’.

அதில் அரசியல் இல்லை. வெறுப்பு இல்லை. மனிதர்கள் மட்டும். ஆயிஷா முதல் பாடம் எடுத்தாள். அவள் சொன்னாள் – “வரலாறு எழுதப்படுவது அரசியலாளர்களால்.

ஆனால், அது வாழப்படுவது மக்களால்.”

மாலை நேரம். அரசு இரண்டாவது அறிவிப்பு வெளியிட்டது – ‘விசாரணையின் எல்லை விரிவாக்கப்படும்.’ 

சிலர் நம்பினார்கள். பலர் நம்பவில்லை. 

அபூபக்கர் ஹஸ்ரத் மெதுவாகச் சொன்னார் – “வெளிச்சம் வந்தது. இப்போ, அதை அணைக்க முயற்சி வரும்.”

அப்துல் ரஹ்மான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். நிழல்கள் நகர்ந்தன. ஆனால், அந்த நிழல்களில் இந்த முறை பயம் மட்டும் இல்லை. எச்சரிக்கையும் இருந்தது.

‘விசாரணை விரிவாக்கம்’ என்ற அறிவிப்பு வந்த மூன்றாம் நாள், கத்தான்குடி மீண்டும் கண்காணிப்புக்குள் போனது. இந்த முறை துப்பாக்கிகள் வெளியில் இல்லை. கேமராக்கள் இருந்தன. பதிவுகள் இருந்தன. ‘பாதுகாப்பு’ என்ற பெயரில் ஒவ்வொரு சுவாசமும் கணக்கிடப்பட்டது.

“போர்க் காலத்திலே இப்படித்தான் இருந்துச்சு” என்றார் முதியவர்.

மற்றொரு முதியவர், “இப்போ, அமைதிக்குள்ள போர்” என்றார்.

அப்துல் ரஹ்மானுக்கு நீதிமன்ற ‘சம்மன்’ வந்தது.

குற்றம்: “சமூக அமைதியைப் பாதிக்கும் வகையில் பொது உரை.”

அவன் அம்மா கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு நெடுநேரம் பேசவில்லை. பின்னர் உறுதியான குரலில், “உண்மை பேசுறது இப்போ குற்றமா இருந்தா, அந்தக் குற்றம் உனக்கு வர வேண்டும்” என்றார்.

அது அப்துல் ரஹ்மானுக்குப் பயத்தைவிட பலத்தைக் கொடுத்தது.

நீதிமன்ற வளாகம் அரசியல் மேடையைவிட அமைதியானது. ஆனால், அந்த அமைதி திட்டமிட்டது.

அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டார் – “நீங்கள் யாருடைய தூண்டுதலால் பேசினீர்கள்?”

அப்துல் ரஹ்மான் பதில் சொன்னான் – “147 பேரின் மௌனத்தால்.”

அறையில் ஒரு நொடி அசைவு. நீதிபதி கண்ணாடியைச் சரிசெய்தார். விசாரணை ஒத்திவைக்கப் பட்டது.

அதே நாளில், இன்னொரு இடத்தில் சூரியனுக்கு நேரடி சாட்சியமளிக்க உத்தரவு. அவனை அழைத்துச் செல்லும் வாகனம் தாமதமானது. மூன்று மணி நேரம். யாருக்கும் காரணம் தெரியவில்லை. 

அவன் வழக்கறிஞர் மெதுவாகச் சொன்னார் – “இது தாமதம் இல்லை. இது நேரம் வாங்குறது.”

சூரியன் ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். அவன் மனசில் ஒரே எண்ணம் – ‘நான் பேசாம போனா, யார் பேசுவாங்க?’.

கத்தான்குடியில் பெண்கள் நடத்தும் ‘நினைவுகளின் வரலாறு’ வகுப்பு, திடீரென அனுமதி இல்லாத ஒன்று என அறிவிக்கப்பட்டது.

காரணம்:

“இளம் மனங்களில் குழப்பம்.”

ஆயிஷா பலமாகச் சிரித்துவிட்டு, “குழப்பம் ஏற்கனவே இருக்கு. நாங்க தெளிவைத்தான் சொல்லுறோம்” என்றாள்.

அந்த இரவு, பெண்கள் இன்னொரு முடிவுக்கு வந்தார்கள். வகுப்பு வீடுகளில் நடக்கும். புத்தகங்கள் இல்லை. கதைகள் மட்டும்.

அரசியல் வட்டாரங்களில், “இந்த விசாரணை எவ்வளவு தூரம் போகணும்?” என்னும் என்ற புதிய பேச்சு நிலவியது. 

அமைச்சர் சொன்னார் – “ஓர் எல்லை இருக்கணும். அந்த எல்லையைக் கடந்தா, எல்லாருக்கும் ஆபத்து.”

அந்த எல்லை யாராலும் வரையறுக்கப் படவில்லை. ஆனால், எல்லாருக்கும் அது தெரிந்தது.

சூரியன் இறுதியாக நீதிமன்றத்தில் நின்றான். அவன் முகம் வெளிச்சத்தில். மறைக்க முயற்சி இல்லை.

“நீங்கள் ஏன் இப்போ பேச முடிவு செய்தீர்கள்?” என்று நீதிபதி கேட்டார்.

சூரியன் சொன்னான் – “அந்த நாள் பள்ளிவாசல்ல நான் பார்த்த கண்கள் இன்னும் என்னைத் தூங்க விடலை. நான் பேசாம இருந்தா, அந்தக் கொலை இன்னும் நடக்கும்.”

அறையில் சிலர் தலை குனிந்தார்கள். சிலர் கோபப்பட்டார்கள்.

அதே நேரம் முக்கிய ஆவணம் கசிந்தது. விசாரணைக் குழுவின் உள்ளக குறிப்புகள். சில பெயர்கள் அழிக்கப்பட்டிருந்தன. சில வரிகள் கறுப்பாக்கப்பட்டிருந்தன. ஊடகங்கள் அதை ‘அரை உண்மை’ என்று அழைத்தன. மக்கள் அதை ‘முழுச் சதி’ என்று உணர்ந்தார்கள்.

கத்தான்குடி மீண்டும் ஒன்று கூடியது. இந்த முறை பள்ளிவாசலில் அல்ல. சாலைகளில் அல்ல. வீடுகளின் வாசல்களில். விளக்குகள் ஏற்றப்பட்டன. யாரும் பேசவில்லை. அந்த ஒளி அரசியல் ஊர்வலத்தைவிட வலுவானது.

அபூபக்கர் ஹஸ்ரத் சொன்னார் – “இது போராட்டம் இல்லை. இது சாட்சியம்.”

இரவு தாமதமாக அரசு தரப்பில் இருந்து ஓர் உள் தகவல் – “சில குற்றச்சாட்டுகள் கைவிடப்படும்.”

அப்துல் ரஹ்மான் செய்தியைக் கேட்டான். அவன் சிரிக்கவில்லை. அவன் கோபப்படவில்லை. 

“உண்மை குறைக்கப்படுது. ஆனா, அது அழியலை” என்று அவன் சொன்னான்.

தூரத்தில், கடல் அலை அடித்தது. அந்த ஒலி மீண்டும் மீண்டும். நீதிமன்றம் அந்த நாள் வழக்கம்போல இல்லை. வாசலில் ஊடக வாகனங்கள். உள்ளே கூடுதல் பாதுகாப்பு. அப்துல் ரஹ்மான் நுழைந்தபோது, சிலர் கண்களைத் திருப்பிக் கொண்டார்கள். சிலர் நேராகப் பார்த்தார்கள். அவன் புரிந்துகொண்டான், ‘இனித் தான் தனி மனிதன் இல்லை. தான் ஒரு சின்னம்’ என்று.

அரசு தரப்பு புதிய மனு தாக்கல் செய்தது – “தேசிய பாதுகாப்பு காரணங்களால் சில சாட்சிகள் மூடிய அறையில் மட்டுமே.”

வழக்கறிஞர் வாதிட்டார் – “மூடிய அறையில் உண்மை பேசினா, அது வெளிச்சம் அடையுமா?”

நீதிபதி ஒரு நொடி மௌனமாக இருந்தார். பிறகு சொன்னார் – “சாட்சியம்—திறந்த நீதிமன்றத்தில்.”

அந்த ஒரு வரி அறையில் இருந்த காற்றை மாற்றியது.

சூரியன் மீண்டும் சாட்சிப் பெட்டியில் நின்றான். இந்த முறை கேள்விகள் கூர்மையானவை. சந்தேகங்கள் திட்டமிட்டவை.

“உங்களை யார் தூண்டினார்?”

“நீங்கள் ஏன் இவ்வளவு தாமதமாகப் பேசினீர்கள்?”

“உங்கள் சொந்த பாதுகாப்புக்காகக் கதை மாற்றலையா?”

சூரியன் ஆழமாக மூச்சு இழுத்தான். பின்னர் பேசத் தொடங்கினான்.

“என்னைத் தூண்டியது அந்தப் பள்ளிவாசலில் இருந்த மௌனம். தாமதம் பயம். இப்போ பேசுறதுக்குக் காரணம் அந்தப் பயம் இனி என்னை ஆளக்கூடாது” என்றான்.

அறையில் சிலர் எழுந்து நின்றார்கள். கூச்சலிட்டனர். நீதிபதி அமைதியாக இருக்கும்படி அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அதே நேரம், கத்தான்குடியில் பெண்களின் ஒளிப் போராட்டம் தேசிய செய்தியாக மாறியது. வீட்டு வாசல்களில் எரியும் விளக்குகள் ஓர் அடையாளமாக மாறின.

பிற நகரங்களிலும் அதே மௌனம். அதே ஒளி. ஓர் அரசியல் ஆலோசகர் சொன்னார் – “இதைக் கட்டுப்படுத்த முடியாதது. இது கோஷம் இல்லை. இது உணர்வு.”

விசாரணைக் குழு இடைக்கால அறிக்கையை வெளியிட்டது. வார்த்தைகள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தன.

“தவறுகள்.” “கட்டுப்பாடு இழப்பு.” “போர்ச் சூழல்.”

அப்துல் ரஹ்மான் அறிக்கையை மூடி வைத்தான்.

“இது முடிவு இல்லை. இது ஆரம்பத்தைத் தள்ளிப் போடுற முயற்சி” என்றான்.

அபூபக்கர் ஹஸ்ரத் ஒரு கூட்டத்தில் சொன்னார் – “சட்டம் தாமதப்படலாம். ஆனால், நினைவு தாமதப்படாது. அதை யாராலும் தடை செய்ய முடியாது.”

அந்த உரை பதிவு செய்யப்பட்டு, நொடிகளில் பரவியது. இந்த முறை அதைத் தடை செய்ய யாரும் முன்வரவில்லை.

அப்துல் ரஹ்மானின் மீது வழக்குத் தொடரப்படவில்லை. ஆனால், அவன் மீது கண்காணிப்பு மட்டும் தொடர்ந்தது.

ஓர் அதிகாரி தனிப்பட்ட முறையில் சொன்னார் – “நீங்க பேசாதிருந்தா, வாழ்க்கை சுலபமா இருக்கும்.”

அப்துல் ரஹ்மான் சிரித்துவிட்டு, “சுலபமான வாழ்க்கை வேண்டாம். நிம்மதியான வாழ்க்கை போதும்” என்றான்.

சூரியனுக்கு அரசு பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டது. ஆனால், அவன் கேட்டதே வேறு. 

“என் சாட்சியத்தை யாரும் மாற்ற முடியாதா?” என்றுதான்.

வழக்கறிஞர் பதில் சொன்னார் –  “இப்போ அது ஆவணமா இருக்கு. அழிக்க முடியாது.”

சூரியன் கண்களை மூடினான். அவன் முதல் முறையாக இலகுவாக மூச்சு விட்டான்.

கத்தான்குடி பள்ளியில் ‘நினைவுகளின் வரலாறு’ வகுப்பு இப்போது மறைமுகமாக அல்ல, திறந்தவெளியில்தான் நடைபெற்றது. அரசு அதிகாரிகள் வரவில்லை. ஆனால், மக்கள் வந்தார்கள். 

ஆயிஷா சொன்னாள் – “நீதி கிடைக்கலன்னாலும் நம்ம பிள்ளைகள் உண்மையை அறிஞ்சு வளரணும்.”

நீதிமன்றம் அடுத்த கட்ட உத்தரவு வழங்கியது – “முழு விசாரணை தொடரும். கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.”

அரசியல் வட்டாரங்களில் பதற்றம். சிலருக்கு நிம்மதி. சிலருக்கு அச்சம். அப்துல் ரஹ்மான் வெளியே வந்தபோது, வாசலில் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன.

அவன் மெதுவாகச் சொன்னான் – “இது தீர்ப்பு இல்லை. ஆனா, பாதை தெளிவாகுது.”

நீதிமன்ற வளாகம் அந்த நாளில் ஒரு நகரமாக மாறியது. வழக்கறிஞர்கள். பத்திரிகையாளர்கள். பாதுகாப்பு வட்டங்கள். கத்தான்குடி மட்டும் அங்கே இல்லை. நாடு முழுக்க அந்த அறைக்குள் நுழைந்தது. அப்துல் ரஹ்மான் முன்புற இருக்கையில் அமர்ந்தான். அவன் மனசில் பயம் இல்லை. ஓர் எதிர்பார்ப்பு மட்டும். விசாரணையின் இறுதி வாதம் தொடங்கியது.

அரசு தரப்பு சொன்னது – “போர்க் கால சூழ்நிலை. கட்டுப்பாடு இழந்த சிலர். முழுப் பொறுப்பும் சுமத்த முடியாது.”

அந்த வார்த்தைகள் நீதிமன்றத்தில் ஒலித்தன. ஆனால், வெளியே மக்கள் அதை ஏற்கவில்லை. பாதிக்கப்பட்டோர் தரப்பு வழக்கறிஞர் எழுந்தார். அவர் கையில் கோப்புகள் இல்லை. அவர் குரலில் மட்டும் உறுதி.

“147 பேர்— ஒரே நேரத்தில், ஒரே இடத்தில், ஒரே நோக்கில். இது விபத்து இல்லை. இது திட்டம். திட்டமிட்ட சதி” என்று கூறிவிட்டு, சூரியனைச் சுட்டிக்காட்டினார். பின்னர், “இந்தச் சாட்சி அதிகாரம் மறைக்க முயன்ற உண்மை” என்றார்.

அறையில் மௌனம்.

சூரியன் கடைசியாகப் பேச அனுமதி கேட்டான். நீதிபதி  ‘சரி’ என்பதுபோலத் தலை அசைத்தார். 

“நான் வீரன் இல்லை. நான் தவறிழைத்தவன். ஆனா, அந்தத் தவறு அரசியல் திட்டத்துக்குள் நடந்தது. நான் ஒருவன் அல்லன். நான் ஒரு மாபெருஞ்சங்கிலியில் ஒரு கண்ணி மட்டுமே” என்றான்.

அதே நேரம், கத்தான்குடியில் மக்கள் பள்ளிவாசல் முன் கூடினார்கள். அவர்கள் தொழுகையில் இல்லை. அவர்கள் காத்திருந்தார்கள். பெண்கள் விளக்குகளை மீண்டும் ஏற்றினார்கள். இந்த முறை ஒவ்வொரு விளக்கும் ஒரு வீட்டில் இல்லை. ஒவ்வொரு விளக்கும் ஒரு தெருவில்.

நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

“ஆவணங்கள், சாட்சிகள், சமூக விளைவுகள் ஆகிய அனைத்தையும் கருத்தில்கொண்டு தீர்ப்பு வழங்கப்படும்.”

அந்த ஒத்திவைப்பு சிலருக்கு நிம்மதி. பலருக்குச் சினம்.

அப்துல் ரஹ்மான் வெளியே வந்தான். பத்திரிகையாளர்கள் சூழ்ந்தார்கள்.

“நீங்கள் திருப்தியா?” என்று ஒருவர் கேட்டார்.

அவன் சொன்னான் – “திருப்தி தீர்ப்புக்குப் பிறகு. ஆனால், நம்பிக்கை இப்போதிருந்தே.”

அந்த இரவு, ஓர் அரசியல் தலைவர் தனிப்பட்ட அறிக்கையொன்றை வெளியிட்டார் – “இந்த துயரம் தேசிய நினைவாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.”

அறிக்கை சுருக்கமானதுதான். ஆனால், அதன் பின்னால் இருந்த அழுத்தம் மிகப் பெரியது.

அடுத்த நாள், பள்ளிகளில் இந்த ‘நினைவு நாள்’ பற்றிப் பேசப்பட்டது. பாடப் புத்தகங்களில் இல்லை. ஆசிரியர்களின் குரலில். 

ஆயிஷா மாணவர்களிடம் சொன்னாள் – “நீதி தாமதமாகலாம். ஆனா, உண்மை உங்களோடே வளரணும்.”

மாணவர்கள் செவிமடுத்து அதைக் கேட்டார்கள். அதுதான் பெரிய மாற்றம்.

சூரியன் பாதுகாப்பு இல்லத்திலிருந்து வெளியே பார்த்தான். வானம் தெளிவாக இருந்தது. 

“நான் தண்டனை அனுபவிப்பேனா?” என்று அவன் தன் வழக்கறிஞரிடம் கேட்டான்.

“சட்டம் சொல்லும்” என்றார் அவர்.

சூரியன் ‘சரி’ என்பதுபோலத் தலை அசைத்துவிட்டு, “நான் தயாராத்தான் இருக்கேன்” என்றான்.

கத்தான்குடி அந்த இரவு அமைதியாக இல்லை. ஆனால், அச்சத்திலும் இல்லை. 

அபூபக்கர் ஹஸ்ரத் சொன்னார் – “நீதிக்காகக் காத்திருக்கறது பலவீனம் இல்லை. அது நம்பிக்கையின் சோதனை.”

வெளிச்சம் இன்னும் முழுமையில்லை. ஆனால், அது அணையவில்லை. தீர்ப்பு நாளின் காலையில் கத்தான்குடி கடல் அமைதியாக இருந்தது. அலைகள்கூட மெதுவாகவே கரையைத் தொட்டன. அந்த அமைதி, நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த ஒரு மூச்சு. நீதிமன்ற வளாகம் நிரம்பியது. உள்ளே இருக்கைகள். வெளியே திரைகள். நாடு முழுக்கக் கண்கள்.

அப்துல் ரஹ்மான் தன் அம்மாவின் கையைப் பிடித்திருந்தான். அவள் மெதுவாகச் சொன்னாள் – “எது வந்தாலும், நம்ம மனசு பொய்யா இருக்கக் கூடாது.”

நீதிபதி தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். அவர் குரல் சீராக இருந்தது. ஆனால், வார்த்தைகள் கனமாக இருந்தன.

“இந்த வழக்கில், ‘நிகழ்வு திட்டமிட்ட வன்முறை’ என்பதை நீதிமன்றம் ஏற்கிறது. சிலர் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும். சிலர் நிர்வாகத் தவறுகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்.”

அறையில் ஒரு நொடி எதுவும் கேட்கவில்லை.

சூரியனின் பெயர் வாசிக்கப்பட்டது.  சாட்சி அளித்ததற்காக அல்ல. செயலில் பங்கேற்றதற்காகச் சட்டப்படி தண்டனை. சூரியன் கண்களை மூடினான். அவன் முகத்தில் அதிர்ச்சி இல்லை. ஓர் ஏற்றுக்கொள்ளல் மட்டுமே.

‘நான் ஒளிந்திருக்கலாம். ஆனா, உண்மையை வெளிச்சம் பார்த்தது’ என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான்.

அதே நேரம் நீதிமன்றம் இன்னொரு அறிவிப்பையும் செய்தது – “இந்த நிகழ்வு தேசிய அளவில் நினைவுகூரப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோரின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படும். இழப்பீடு மட்டுமல்ல நினைவுக் கல்வி நடைமுறைப் படுத்தப்படும்.”

அந்த வார்த்தைகள் கத்தான்குடி மக்களின் காதில் விழுந்து நிம்மதியைத் தந்தன.

வெளியே பெண்கள் விளக்குகளை ஏற்றினார்கள். இந்த முறை அது போராட்டம் இல்லை. அது நினைவு.

ஆயிஷா மெதுவாகச் சொன்னாள் – “நம்ம கதைகள் இப்போ சட்டத்துக்குள் செல்கின்றன.”

அவள் கண்களில் கண்ணீர். அது விடுதலையின் கண்ணீர்.

அபூபக்கர் ஹஸ்ரத் பள்ளிவாசலில் கூடிய மக்களிடம் சொன்னார் – “நீதிமன்ற தீர்ப்பு

முழுமையான நியாயம் அல்ல. ஆனா, மௌனம் உடைந்ததற்கான சாட்சி. இப்போ,

நம்ம கடமை வெறுப்பை மரபாக்காம, நினைவைக் கல்வியாக மாற்றுவது.”

மக்கள் ‘சரி’ என்பதுபோலத் தலையை அசைத்தனர், முதன்முறையாக, பயம் இல்லாமல்.

அடுத்த சில மாதங்களில் பள்ளிகளில் ‘நினைவுக் கல்வி’ தொடங்கியது. பாடப் புத்தகங்களில் எண்கள் மட்டும் இல்லை. பெயர்கள். வாழ்க்கைகள். கேள்விகள். 

அப்துல் ரஹ்மான் அந்த வகுப்பில் பேசினான் – “நாம் ஒரே நாளில் எல்லாவற்றையும் சரி செய்ய இயலாது. ஆனா, ஒரே நாளில் பொய்யை நிறுத்தலாம்.”

சூரியன் தண்டனை அனுபவிக்கச் சென்றான். அவன் செல்லும் முன் கடிதம் எழுதினான், பெயர் இல்லாமல். 

அதில், “நான் செய்தது மன்னிக்க முடியாதது. ஆனா, நான் சொன்ன உண்மை இனிமேல் கொலை செய்ய விடாதுன்னா அதுவே என் சிறிய பிராயச்சித்தம்” என்றும் எழுதியிருந்தான்.

அந்தக் கடிதம் செய்தியாக மாறவில்லை. ஒரு நினைவாக மாறியது.

ஓர் ஆண்டு கழித்து கத்தான்குடியில் ‘நினைவுக் கூடம்’ திறக்கப்பட்டது. அங்கே அரசியல் பேனர்கள் இல்லை. ஆயுதங்களின் படங்கள் இல்லை. 147 பெயர்களும் அவர்களுடைய தொழில்களும் அவர்களுடைய கனவுகளும் இடம்பெற்றிருந்தன. அந்த நினைவுக்கூடத்தின் வாசலில், “மௌனம் கொலை செய்யும். நினைவு காக்கும்” என்று எழுதப்பட்டிருந்தது.

அந்த மாலை, கடற்கரையில் அப்துல் ரஹ்மான் நின்றான். சூரியன் மறைந்து கொண்டிருந்தான். அவன் மனசுக்குள் சொன்னான் – “வெளிச்சம் முழுமை இல்லை. ஆனா, இனி, இருள் தனியா இல்லை.”

இனி, ‘கத்தான்குடி’ ஒரு துயரத்தின் பெயர் மட்டும் அல்ல. ஓர் எச்சரிக்கை. ஒரு பாடம். மனிதநேய சத்தியம். 

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *