திரும்பிப் பார்க்கும் வழி

1.

‘வெளி ஓயா’ எப்போதும் ஓடும். அது ஓய்றதே இல்லை. 1995 ஜூலை. வெயில் சுட்டெரிக்கிற காலம். மண்ணிலிருந்து எழுந்த சூடும், காற்றிலிருந்து வந்த தூசியும், மனித நெஞ்சுக்குள்ள இருந்த பயமும் என எல்லாங்கலந்து கனமான நாளாக மாறியிருந்தது ஜூலை 28. 

சின்னையாவுக்குக் காலை எழுந்தபோதே மனசுக்குள் ஏதோ கனம் இருந்தது. வெளி ஓயா பக்கம் இருந்து வந்த துப்பாக்கிச் சத்தம் நேத்து இரவு முழுக்க நிற்கவே இல்ல. 

அவன் மனைவி வள்ளி, “இன்னைக்கு ஏதோ நடக்கப்போற மாதிரி இருக்கு…”  என்று மெதுவா சொன்னாள்.

சின்னையா பதில் சொல்லல. கையிலிருந்த தேநீரை அப்படியே வைத்துவிட்டு வெளியே பார்த்தான். வெளி ஓயா கரையிலிருந்த அந்தச் சிறிய கிராமம், ஏற்கனவே பாதி உயிரோடுதான் இருந்தது. ஆண்கள் பலர் இல்லை. சிலர் காட்டுக்குள்ள. சிலர் சமாதிக்குள்ள. சிலர் யாருக்குத் தெரியும் எங்கோ. வள்ளிக்கு பயம். பிள்ளைகள் இருவர் – கணேஷ், மாலதி. இவங்க இரண்டு பேரையும் பார்த்தாலே நெஞ்சு பிளக்குமளவு அன்பு.

“இன்னைக்கு வெளிய போகாதீங்க…” என்று வள்ளி கட்டளையிட்டாள். 

“வெளிய போகாம இருந்தா வயித்துக்குள்ள சோறு போட யார்?” என்று கேட்டுச் சின்னையா சிரிக்க முயற்சி பண்ணினான். ஆனா அந்தச் சிரிப்பு அவனுக்கே சரியா வரல.

அதே நேரம், வெளி ஓயா மறுபுறம் – காடுக்குள்ள. அருண். வயது இருபத்து இரண்டு. விடுதலைப் புலிகளின் ஒரு சாதாரண வீரன். அவன் கையிலிருந்த AK துப்பாக்கி அவனுக்கு ஒரு பாரம் மாதிரி இருந்தது. துப்பாக்கியைவிட கனமானது – அவன் மனசு. 

“இன்னைக்குப் பெரிய மோதல் வரும்” என்று கமாண்டர் சொன்னார்.

300 பேர் வரைக்கும் படை சேர்த்திருந்தாங்க. ஆனா அந்த 300 பேருக்குள்ள எத்தனை பேர் உயிரோட வீடு திரும்ப முடியும்? – யாருக்கும் தெரியாது.

அருண் மனசுக்குள்ள அம்மா முகம் வந்தது. முல்லைத்தீவு கடற்கரை. அவன் போனபோது அம்மா சொன்ன வார்த்தை – “மகனே… நீ வீரன் ஆகனும்ணு நான் கேட்டதே இல்லை. நீ உயிரோட இருந்தா போதும்.” அந்த வார்த்தை இன்னைக்கும் அவன் காதுக்குள்ள சத்தமா ஒலிச்சுக்கிட்டே இருந்தது.

மறுபக்கம் – வெளி ஓயா அருகிலிருந்த இராணுவ முகாம். லான்ஸ் கார்ப்பரல் சமன்.

வயது இருபத்து ஐந்து. கண்டியில் இருந்து வந்தவன். அவனுக்குப் போர்னா வெறுப்பு. ஆனா வேலையா இதுதான்.

“இன்னைக்குக் கவனமா இருங்க” என்று அடுத்தடுத்த அதிகாரி சொல்லிக்கிட்டே இருந்தனர். 

சமன் தன் நண்பன் ரோஷனைப் பார்த்தான். இரண்டு பேரும் சிரிச்சுக்கிட்டாங்க. 

“இந்த ஓயா மட்டும் ஓய்ந்தா, நாமும் ஓயலாம்” என்று ரோஷன் சொன்னான்.

அந்த சிரிப்புக்குள்ள மறைந்திருந்தது பயம்.

காலை 8 மணிக்கு முதல் வெடிப்பு. பூமி அதிர்ந்தது. வெளி ஓயா கரையிலிருந்த மரங்கள் குலுங்கின. பறவைகள் அலறிக்கிட்டு பறந்துபோனது. 

“அம்மா!” என்று கூக்குரலெடுத்து மாலதி அழுதாள். வள்ளி பிள்ளைகளை அணைத்துக் கொண்டாள். சின்னையா வெளியே ஓடிப் பார்த்தான். காற்றிலே புகை. சத்தம் – துப்பாக்கி, குண்டு, கத்தல்.

“போரு தொடங்கிட்டுது…” என்று அவன் மெதுவாகச் சொன்னான்.

காடுக்குள்ள, அருண் ஓடிக்கிட்டே இருந்தான். மண், இரத்தம், வியர்வை – எல்லாம் கலந்து அவன் முகம் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியிருந்தது.

“முன்னால போ!” என்று கமாண்டர் கத்தினார்.

அருண் முன்னேறினான். அவனுக்கு எதிரே இராணுவத்தின் பாதுகாப்பு வரி. மணல் மூட்டைகள். துப்பாக்கி முனைகள். அருண் சுட்டான். யார் விழுந்தார் என அவனுக்குத் தெரியாது. அவனுக்குத் தெரிந்தது ஒன்றே – நின்றா சாவு. ஓடினா சாவு. சுட்டாலும் சாவு.

இராணுவ முகாமுக்குள் குழப்பம். ஒரு வெடிப்பு நேரடியாகப் பாதுகாப்புச் சுவரைத் தாக்கியது. ரோஷன் கீழே விழுந்தான்.

“ரோஷன்!” எனச் சமன் கத்தினான்.

ரோஷன் பேசவே இல்லை. கண்ணு திறந்தபடியே அசையாமல் கிடந்தான். சமன் கையைப் பிடிச்சான். அதில் சூடு இல்ல.

‘இது எதுக்காக?’ எனச் சமன் மனசுக்குள்ள கேட்டான்.

மதியம். வெளி ஓயா நீர் சிவப்பாக மாறியிருந்தது. இரத்தம் ஓடிக்கிட்டே இருந்தது. காடுக்குள்ள புலிகள் பலர் விழுந்திருந்தாங்க. சிலர் கத்திக்கிட்டே உயிர் போனாங்க. சிலரோ சத்தமே இல்லாமல்.  அருண் ஒரு மரத்துக்குப் பின்னால விழுந்தான். காலில் காயம். நடக்க முடியல. அவன் தண்ணீர்ரைத் தேடிப் பார்த்தான். வெளி ஓயா அவன் கண் முன்னால.

‘நான் இங்க சாவேனா?’ எனத் தனக்குள்ளே கேட்டான்.

அதே நேரம், சின்னையா. அவன் வீட்டுக்குப் பக்கத்துல ஓர் உடல் விழுந்திருந்தது. இளைஞன். புலிச் சீருடை. சின்னையா நின்று பார்த்தான். அந்த உடல் அசைந்தது. 

“தண்ணீர்…” என மெதுவான குரல். சின்னையா சுற்றிப் பார்த்தான். யாரும் இல்லை. 

ஒரு நிமிஷம் யோசிச்சான். பின் ஓயா பக்கம் ஓடினான். குடந்தண்ணீர் எடுத்து வந்தான். அந்த இளைஞன் – அருண்.

“நீ யார்?” எனச் சின்னையா கேட்டான்.

“அண்ணா… நான் ஒரு மனிதன்” என அருண் சொன்னான்.

சின்னையா கண்ணு நனஞ்சது.

சாயங்காலம். போர் மெதுவா அடங்க ஆரம்பிச்சது. வெடிப்புகள் குறைந்தன. ஆனா, மரணங்கள் நிறுத்தப்படல. இராணுவம் கணக்கெடுத்தது.

“நம்ம பக்கம் இரண்டு பேர்…” என அதிகாரி சொன்னார்.

அமைதி. 

“மறுபக்கம்?” என யாரோ கேட்டார்.

“300 வரைக்கும் இருக்கலாம்.”

அந்த எண்ணிக்கை காற்றிலே தொங்கியது. எண்ணிக்கையா அது? அல்ல, அல்ல. 300 கனவுகள், 300 உயிர்கள்.

இரவு. வெளி ஓயா கரையில் அமைதி. ஆனா அந்த அமைதி பயங்கர அமைதி. சின்னையா அருணை தன் குடிசைக்குள்ள மறைத்தான். வள்ளி எதுவும் கேட்கல. பிள்ளைகள் அமைதியா இருந்தாங்க.

“நீ நாளை காலையிலேயே போயிடணும்” என்று சின்னையா சொன்னான்.

அருண் தலை ஆட்டினான்.

“அண்ணா… நான் திரும்பிப் போவேனா… அல்ல சாவேனா… எனக்கே தெரியாது.”

சின்னையா மெதுவாக அவனிடம், “இந்தப் போரு ஓயா மாதிரி. ஓடிக்கிட்டே இருக்கும். ஆனா ஒரு நாள்… மனுசன்தான் அதை நிறுத்தணும்” என்று சொன்னான்.

காலை. அருண் ஓயா கரையைத் தாண்டி மெதுவா நடந்தான். அவன் திரும்பிப் பார்த்தான். சின்னையா வீட்டுப் பக்கம். வெளி ஓயா. இந்த மண். அவன் மனசுக்குள்ள ஒரு தீர்மானம். அது துப்பாக்கியைவிட கனமானது.

வெளி ஓயா இன்னைக்கும் ஓடிக்கிட்டே தான் இருக்கு. 1995ல விழுந்த இரத்தம், இன்னைக்கும் அந்த மண்ணுக்குள்ள உறங்கிக்கிட்டே இருக்கு. 

இராணுவம் சொல்றது – “2 பேர் இழப்பு.” புலிகள் பக்கம் சொல்றது – “300 பேர் தியாகம்.” ஆனா வெளி ஓயா சொல்லுற கதையே வேற. “இது எண்களோட போர் இல்ல. இது மனிதர்களோட சாவு.” போர் ஓய்ந்தாலும், நினைவுகள் ஓய்வதில்லை. வெளி ஓயா மாதிரி – என்றும் ஓடிக்கிட்டேதான்.

வெளி ஓயா மீண்டும் காலைச் சூரியனைப் பார்த்தது. நேற்று இரவு அந்தக் கரையில் நின்ற இரத்தத்தின் நிழல்கள், இன்னும் நீரிலிருந்து மறையவில்லை. பறவைகள் திரும்பி வந்தாலும், அவற்றின் சத்தத்துக்குள்ள தயக்கம் இருந்தது. சின்னையா தூங்கவே இல்லை. குடிசையின் முன் அமர்ந்து, ஓயாவைப் பார்த்தபடி இருந்தான்.

நேற்று இரவு அருண் போன பாதையை அவன் கண்கள் இன்னும் தேடிக் கொண்டிருந்தது. ‘உயிரோட போயிருப்பானா?’ – அவன் மனசுக்குள்ளே அந்தக் கேள்வி ஓயாம சுழன்றது.

கிராமம் மெதுவா விழித்துக்கொண்டது. ஒரு வீட்டில் அழுகை. மற்றொரு வீட்டில் அமைதி. சில வீடுகளில் யாருமே இல்லை. வள்ளி சின்னையாவுக்குக் கஞ்சி ஊத்தினாள்.

“இன்னைக்கு இராணுவம் வரும் போல இருக்கு” என்று அவள் மெதுவா சொன்னாள்.

சின்னையா தலையாட்டினான். அவனுக்கு அது புதுசில்லை. போர் வந்த நாளிலிருந்து, ஒவ்வொரு காலையும் அப்படித்தான்.

மறுபக்கம் – காடுக்குள்ள அருண் நடக்கிறான். கால் இன்னும் வலிக்குது. ஆனா நின்றா பிடிக்கப்படுவான். அவன் மனசுக்குள்ள நேற்று இரவு சின்னையா சொன்ன வார்த்தை மீண்டும் ஒலிச்சது – “நீ மனிதனா இரு.”

‘நான் என்ன செய்றேன்?’ என அருண் தனக்குள்ளே கேட்டான். அவன் போற பாதை, மீண்டும் போருக்குள்தான். ஆனா அவன் மனசு அங்க இல்லை.

இராணுவ முகாமில் விசாரணை. 

“நேத்து புலிகள் சிலர் தப்பிச்சிருக்காங்க” என்று அதிகாரி சொன்னார்.

“கிராமத்துக்குள்ள மறைஞ்சிருக்கலாம்” என்றார் மற்றொருவர்.

சமன் அமைதியா கேட்டுக்கிட்டே இருந்தான். ரோஷன் முகம் அவன் கண் முன்னால வந்து போனது. 

‘இந்த மண்ணு எதுக்காக இவ்வளவு உயிர் வாங்குது?’ என்று அவன் மனசு கேட்டது.

கிராமத்துக்குள் இராணுவ வாகனங்கள். மண் தூசு. கத்தல். கேள்விகள்.

“யாராவது புலியைப் பார்த்தீங்களா?” என சிப்பாய் சின்னையாவைக் கேட்டான்.

“நான் நேத்து முழுக்க வீட்டுக்குள்ளதான்” என்று சின்னையா நேரடியாகச் சொன்னான்.

அவன் குரலில் பயம் இல்லை. அதே நேரம், முழு உண்மையும் இல்லை. சமன் அந்த முகத்தைக் கவனித்தான். சின்னையாவின் கண்களில் ஏதோ சொல்ல முடியாத சோகம்.

வீடுகள் சோதனை. ஒரு குடிசையில் இரத்தத் துளிகள். ஒரு மூலையில் கிழிந்த துணி. 

“இங்க யாரோ காயப்பட்டிருந்தாங்க” என்று சிப்பாய் சொன்னான்.

வள்ளி நெஞ்சு அடிச்சுக்கிட்டாள். சின்னையா அமைதியா நின்றான். அவன் உள்ளுக்குள்ள புயல். அந்த நேரம் சமன் முன்னே வந்தான்.

“இங்க எதுவும் இல்லை” என்று மழுப்பலாக அவன் அதிகாரியிடம் சொன்னான்.

அந்த ஒரு வாக்கியம், அந்தக் குடும்பத்தைக் காப்பாத்தியது.

வாகனங்கள் கிளம்பின. கிராமம் மீண்டும் அமைதியாய் மாறியது. ஆனா அந்த அமைதி, நிம்மதி இல்லை. வள்ளி சின்னையாவைப் பார்த்தாள்.

“அந்தச் சிப்பாய்…” என அவள் ஏதோ சொல்ல வந்தாள்.

“ஆமா” என்று சின்னையா மெதுவாகச் சொன்னான்.

‘அவனும் ஒரு மனிதன்தான்.’ என்று இருவரும் நினைத்துக் கொண்டனர்.

அதே மாலை. காடுக்குள்ள ஒரு தற்காலிக முகாம். அருண் வந்தான். அவனைப் பார்த்ததும் சிலர் சிரிச்சாங்க, சிலர் அழுதாங்க. 

“300 பேர்ல இவனும் ஒருத்தன் தப்பிச்சான்” என்று யாரோ சொன்னாங்க.

கமாண்டர் அவனைப் பார்த்தார்.

“நீ உயிரோட வந்ததே பெரிய விஷயம்” என்று அவர் சொன்னார்.

அருண் எதுவும் சொல்லல. அவன் மனசுக்குள்ள அந்த 300 என்ற எண்ணிக்கை மட்டும் நிழலாடியது.

இரவு. அருண் தனியா உட்கார்ந்திருந்தான். துப்பாக்கி அவன் அருகில். அவன் அதைப் பார்த்தான். பின் வானத்தைப் பார்த்தான்.

“இந்தத் துப்பாக்கி இல்லாம நான் யார்?” என்று அவன் வானத்தைப் பார்த்துக் கேட்டான்.

அதற்கு வானம் பதில் சொல்லல.

சின்னையா ஓயா கரைக்குப் போனான். நீரைத் தொட்டு பார்த்தான்.  குளிர்ச்சி.

“எத்தனை இரத்தம் வந்தாலும், நீ ஓடுறதை நிறுத்தல” என்று அவன் ஓயாவிடம் பேசினான். ஓயா சத்தமில்லாம ஓடியது.

மறுநாள் செய்தி பரவியது. 

“போர் முடிஞ்சுட்டுதாம்” என்று யாரோ சொன்னாங்க.

“இல்ல, இது இடைவேளைதானாம்” என்று மற்றொருவர் சொன்னார்.

சின்னையா சிரிச்சான். 

“இந்தப் போருக்கு முடிவு இல்ல” என்று சின்னையா சொன்னான்.

சிலர் அவனை உற்றுப் பார்த்தனர்.

சின்னையா, “ஆனா, மனிதனுக்குள்ள ஒரு முடிவு வரணும்” என்றான்.

சமன் முகாமுக்குள் ரோஷன் பெயரை ஒரு காகிதத்தில் எழுதினான். அந்தக் காகிதம் மடிச்சு சட்டைப் பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டான்.

‘நான் வீட்டுக்குப் போகணும்’ என்று அவன் மனசுக்குள்ள சொன்னான்.

வெளி ஓயா ஓடிக்கிட்டே இருந்தது. ஒருபுறம் – துப்பாக்கி. மறுபுறம் – குடிசை. இந்த இரண்டுக்கும் நடுவில சின்னையா, அருண், சமன் மாதிரி மனிதர்கள். போர் அவர்களைத் தேர்வு செய்யல. அவர்கள் போருக்குள் தள்ளப்பட்டாங்க. ஓயா ஓடும்.

போர் வரும். மனிதம் மட்டும்… நடுவில சிக்கிக்கிடக்கும். 

வெளி ஓயா கரையிலே அன்றைக்கு வெயில் கொஞ்சம் மிதமாக இருந்தது. ஆனா மனித மனசுக்குள்ள இருந்த சூடு குறையவே இல்லை. போர் முடிஞ்ச மாதிரி பேசினாலும், மரணத்தோட வாசனை இன்னும் காற்றிலே இருந்தது.

சின்னையா வீட்டுக்குள்ள, வள்ளி அரிசி அளந்து போட்டுக்கிட்டிருந்தாள். 

“இந்த வாரத்துக்கு போதுமா?” என்று அவள் கேட்டாள்.

“போதணும்” என்று சின்னையா சொன்னான். 

அவன் மெல்லத் தயங்கி, “இல்லாட்டியும் போதுமுன்ணு நினைச்சுக்கணும்” என்றான். 

அவன் வெளியே பார்த்தான். வெளி ஓயா கரையிலே சில பெண்கள் நின்றிருந்தாங்க.

அவர்கள் கண்களில் ஒரேயொரு கேள்விதான் இருந்தது. அது, ‘எங்க பிள்ளை?’ என்பது மட்டுந்தான்.

அதே நேரம், காடுக்குள்ள முகாம். 300 பேர் என்ற எண்ணிக்கை இப்போ ஒரு நிழல் மாதிரி மாறியிருந்தது. யார் உயிரோட, யார் இல்லை – பட்டியல் முழுமையாத் தெரியவே இல்லை. 

அருண் ஒவ்வொரு பெயராகக் கேட்டான்.

“முருகன்?”

பதில் வரல.

“செல்வம்?”

அமைதி.

அவன் கண்கள் சிவந்தது. கண்ணீர் வரல. கண்ணீர் வர முடியாத அளவுக்கு மனசு வெறிச்சோடி இருந்தது.

கமாண்டர் கூட்டம் வைத்தார்.

“நம்ம இழப்பு பெரிசு” என்று சொன்னார்.

“ஆனா போராட்டம் நிற்காது” என்றும் சொன்னார்.

சிலர் கைத்தட்டினாங்க. சிலர் தலையாட்டினாங்க. அருண் மட்டும் தரையைப் பார்த்தான்.

‘இந்தப் போராட்டத்துக்குள்ள நம்மளே தொலைஞ்சுட்டோமா?’ என்று அவன் மனசு கேட்டது.

இராணுவ முகாமில், சமன் ஒரு கடிதம் எழுதிக்கிட்டிருந்தான்.  ‘அம்மா, நான் நல்லா இருக்கேன்…’ என்று எழுதியதும் அவன் கை நடுங்கியது. ‘ரோஷன் இறந்ததை எப்படி எழுத?’ என நினைத்தான். அவன் காகிதத்தை மடிச்சு வைத்தான். அந்த உண்மை இன்னும் கொஞ்ச நாள் உள்ளேயே இருக்கட்டும்.

அன்றிரவு, வெளி ஓயா கரையிலே ஒரு தாய் வந்தாள். கையில் ஒரு பழைய சட்டை. அது அவள் மகனுடையது.

“யாராவது என் பிள்ளையைப் பார்த்தீங்களா?” என்று அவள் கேட்டாள்.

யாரும் பதில் சொல்லல.

சின்னையா அந்தப் பெண்ணைப் பார்த்தான். அவனுக்கு வார்த்தை வரல.

300 என்ற எண்ணிக்கைக்குள்ள, இந்தப் பெண்ணின் உலகமே அடங்கியிருந்தது.

அதே நேரம், அருண் கனவு கண்டான்.

வெளி ஓயா நீர் சுத்தமாக இருந்தது. இரத்தம் இல்ல. அந்தக் கரையில அவன் அம்மா நின்றிருந்தார்.

“மகனே! வீட்டுக்கு வா” என்று அழைத்தார்.

அவன் ஓட முயன்றான். கால்கள் நகரல. அவன் அலறியபடி எழுந்தான்.

மறுநாள் காலை. இராணுவம் சில உடல்களை எடுத்துச் சென்றது. அடையாளம் தெரியாத உடல்கள். சமன் ஓர் உடலைப் பார்த்தான். அவன் வயசு, ரோஷன் வயசு. 

“இவனுக்கும் யாரோ அம்மா இருக்கா” என்று சமன் மெதுவா சொன்னான். அவன் கண்களில் நீர்.

கிராமத்தில் ஒரு கூட்டம். 

“நம்ம பிள்ளைகளை எடுத்து போறாங்க” என்று யாரோ கத்தினாங்க.

“சும்மா இருங்க” என்றார் மற்றொருவர்.

பயம். கோபம். அசமர்த்தம். சின்னையா முன்னே வந்தான்.

“கத்துறதால எதுவும் மாறாது” என்றான் சின்னையா.

எல்லோரும் அவனைப் பார்த்தனர். 

“நம்ம மனிதம்தான் மாறணும்” என்றான்.

யாரும் சிரிக்கல. ஆனா, இப்போது சிலர் அவனைப் பார்க்கவில்லை.

அருண் ஒரு முடிவுக்கு வந்தான். அவன் கமாண்டரிடம் போனான்.

“எனக்கு ஓய்வு வேணும்” என்று கேட்டான்.

கமாண்டர் அவனைக் கூர்ந்து பார்த்தார்.

“போர் ஓய்வு கொடுக்காது” என்று அவர் சொன்னார்.

தீர்க்கமான குரலில், “ஆனா மனுசன் உடைஞ்சா, போருக்கு வீரன் இருக்க மாட்டான்” என்றான் .

அந்த வாரம் முடிவில், வெளி ஓயா கரையில் சிறிய நினைவுச் சின்னம்.  பெயர்கள் இல்லை. எண்ணிக்கைகள் இல்லை. சின்னையா தீபம் ஏற்றினான். வள்ளி கையைக் கூப்பினாள். அந்தத் தாய் அழுதாள். அருண் தொலைவில் நின்று பார்த்தான். சமன் முகாமிலிருந்து அந்த ஒளியைப் பார்த்தான்.

வெளி ஓயா மெதுவா ஓடியது. அது சொன்ன மாதிரி இருந்தது – “நீங்கள் என்னை சாட்சி ஆக்குறீங்க. ஆனா நான் தீர்ப்பு சொல்ல மாட்டேன். தீர்ப்பு உங்கள் மனசுக்குள்ளதான்.”

போர் இன்னும் முடிவடையல. ஆனா சில மனிதர்களுக்குள்ள ஒரு கேள்வி பிறந்துட்டு இருந்தது. 

“இந்தப் போரில் நாம் ஜெயிக்கிறோமா, அல்ல நம்ம மனிதத்தையே இழக்கிறோமா?”

வெளி ஓயா ஓடிக்கிட்டே இருக்கு. அந்தக் கேள்வியும் அதோட சேர்ந்து ஓடிக்கிட்டே இருக்கு.

2

வெளி ஓயா அந்த நாளில் கொஞ்சம் மெதுவாக ஓடியது. நீர் குறைஞ்ச மாதிரி தெரிந்தாலும் அதுக்குள்ள அடங்கிய நினைவுகள் குறையவே இல்லை.  போர் முடிஞ்சுட்டு சில நாள்களாகி இருந்தன. ஆனா அமைதி இன்னும் வந்துசேரல. அமைதி வரணும்னா, முதல்ல மனசுக்குள்ள இருக்குற சத்தம் நிக்கணும்.

சின்னையா வீட்டுக்கு அந்த காலை ஒரு மனிதன் வந்தான். வயசு நாற்பது இருக்கும். முகத்துல சோர்வு. கையில ஒரு சின்ன நோட்டு. 

“அண்ணா… நேத்து காட்டுப்பக்கம் போயிருந்தேன். சில உடல்கள் இன்னும் அப்படியே இருக்கு” என்றான்.

சின்னையா நெஞ்சு இறுக்கமா ஆனது. 

“யாராவது அடையாளம் கண்டீங்களா?” என்று கேட்டான்.

“இல்ல… அதுதான் பிரச்சனை” என்றான்.

அந்த வார்த்தை, ஒரு கல்லு மாதிரி சின்னையாவின் நெஞ்சுக்குள் விழுந்தது.

அதே நேரம், கிராமத்து பெண்கள் சேர்ந்து முடிவு எடுத்தாங்க.

“அப்படியே இதை விட முடியாது” என்று ஒரு பெண் கூறினார்.

“அவங்க யாரோ பிள்ளைகள்” என்றார் ஒரு பெண்.

வள்ளி முன்னே வந்து, “போர் யாரோடது இருந்தாலும் சாவு நம்ம எல்லாரோடதும் தான்” என்றாள்.

அந்த நாளில், பெண்கள் கையில மண் குடுவைகள், பழைய துணிகள், விளக்குகள் எடுத்துக்கிட்டு வெளி ஓயா பக்கம் போனாங்க.

காடுக்குள்ள முகாம். அருண் இன்னும் அமைதியா இருந்தான். அவன் சிரிப்பு மறஞ்சு போச்சு. அவன் பேசுறது குறைஞ்சு போச்சு. 

அவனிடம் இளைஞன், “அண்ணா! நம்ம இழந்தவங்க வீணா போயிடுவாங்களா?” என்று கேட்டான்.

அருண் சற்று நேரம் யோசிச்சான்.

“வீணா போகுதுன்னா, நாம அவங்களை மறந்தா தான்” என்றான்.

இராணுவ முகாமில் மாற்றம். சில படைகள் மாற்றப்பட்டாங்க. சிலர் விடுமுறை. 

சமன் அந்தப் பட்டியலிலிருந்தான்.

“நீ வீட்டுக்குப் போ” என்று அதிகாரி சொன்னார்.

சமன் சிரிக்க முயற்சி பண்ணினான். ஆனா அந்தச் சிரிப்பு, கனவுக்குள்ள தொலைஞ்ச மாதிரி இருந்தது.

வெளி ஓயா கரையிலே பெண்கள். ஓர் உடல். அதன் கையில் இன்னும் கைவளை.

“இது என் பிள்ளை இல்லை” என்றார் ஒரு பெண்மணி.

ஆனா அவள் அழுதாள். வள்ளி அந்த உடலை மூடினாள். குழிதோண்டப்பட்டதும், உடலை இறக்கினார்கள். வள்ளி மண்ணை மெதுவாக அதன் மீது இட்டாள்.

“பெயர் தெரியாதா இருந்தாலும் மண் எல்லாருக்கும் ஒரே மாதிரிதான்” என்றாள்.

அந்தச் செய்தி பரவியது. 

“கிராமத்துப் பெண்கள் உடல்களை அடக்கம் செய்றாங்க” என்று யாரோ சொன்னாங்க.

சிலர் பயந்தாங்க. சிலர் கோபப்பட்டாங்க.

சின்னையா, “இதுவும் ஒரு போராட்டந்தான். ஆனா இது மனிதத்துக்காக” என்றான்.

அருண் இரவு நேரம் தனியா வெளியே வந்தான், துப்பாக்கியை முகாமில் விட்டுட்டு.  அவன் வானத்தைப் பார்த்தான். 

“அம்மா! நான் சரியா செய்றேனா?” என்று அவன் மெதுவாகக் கேட்டான்.

வானம் பதில் சொல்லல. ஆனா காற்று அவன் முகத்தைத் தொட்டது.

சமன் வீட்டுக்கு போற வழியில், ஜன்னலுக்கு வெளியே ஓடும் நிலத்தைப் பார்த்தான். பச்சை வயல். ஆறுகள். மக்கள்.

‘இவங்க எல்லாரும் இதுக்காகத்தானா?’ என்று அவன் மனசுக்குள்ள கேட்டான்.

ரோஷன் முகம் மீண்டும் வந்தது. அவன் கண்கள் மூடிக்கிட்டான்.

கிராமத்தில் இரவு. வெளி ஓயா கரையிலே தீபங்கள். பெயர் இல்லாத நினைவுகள். சின்னையா, வள்ளி, அந்தத் தாய், மற்ற பெண்கள் என எல்லாரும் மௌனமா நின்னாங்க. அந்த மௌனம், பெரிய சத்தமா இருந்தது. 

அருண் தொலைவில் நின்று பார்த்தான். அவன் மனசுக்குள்ள ஒரு முடிவு.  ‘நான் போருக்கு மட்டும் இல்லை’ என்று அவன் தனக்குள்ள சொன்னான். சற்று உறுதியான மனத்துடன், ‘நான் மனிதத்துக்காகவும் இருக்கணும்’ என்று சொல்லிக்கொண்டான்.

வெளி ஓயா ஓடியது. அது சொல்ற மாதிரி இருந்தது – “சத்தம் மட்டுந்தான் போர் இல்லை. மௌனமும் ஒரு போராட்டந்தான்.”

இந்தப் போரில் யார் ஜெயிச்சாங்கன்ணு வரலாறு எழுதும். ஆனா யார் அழுதாங்க,

யார் மௌனமா நின்னாங்க, யார் மனிதமா நடந்தாங்க என்று அதை வெளி ஓயாதான் நினைவில் வைக்கும். 

வெளி ஓயா அந்த நாளில் சூரியனை மிதமா பிரதிபலிச்சது. நீரிலே சின்ன அலைகள். அலைக்குள்ள நினைவுகள். போர் ஓய்ந்த மாதிரி இருந்தாலும் மனசுக்குள்ள ஓசை இன்னும் நிக்கல.

சமன் வீட்டுக்கு வந்தான். அம்மா வாசலிலே நின்னிருந்தார். அவனைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கிட்டார்.

“எனக்குத் தெரியும், நீ திரும்பி வருவேன்ணு” என்று அவர் சொன்னார்.

சமன் எதுவும் பேசல. அவனுக்கு வார்த்தை இல்ல. 

அந்த இரவு, அவன் தூங்கல. ரோஷன் குரல், வெடிப்பு சத்தம், வெளி ஓயா நீர் என எல்லாம் கனவுக்குள்ள கலந்தன.

அடுத்த நாள், சமன் ஒரு முடிவு எடுத்தான். அவன் அம்மாவிடம் சொன்னான் – “நான் திரும்ப போகப்போறேன். ஆனா துப்பாக்கியோட இல்லை.”

அம்மா அவனைப் பார்த்தாள். அவள் கண்களில் பயம். ஆனா அதைவிடப் பெரிசா  நம்பிக்கை.  

“மனுசனா போ” என்று அவள் சொன்னாள்.

கிராமத்தில் சின்னையா. பெண்கள் செய்த அந்த அடக்கம், ஒரு பேசாத செய்தி மாதிரி பரவிச்சு.

“அவங்க பைத்தியம்” என்று சிலர் சொன்னாங்க.

“இல்ல, அவங்கதான் சரி” என்றனர் சிலர்.

சின்னையா வள்ளியிடம் சொன்னான் – “நம்ம கையால ஓர் உயிருக்கு மரியாதை கொடுத்தோம்னா, நம்ம மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.”

அருண் முகாமை விட்டு வெளியே வந்தான். அவன் கையில் துப்பாக்கி இல்லை. ஒரு சிறிய பை மட்டும்.

“நீ எங்க போற?” என ஓர் இளைஞன் கேட்டான்.

“வீட்டுக்குள்ள” என்று கூறிவிட்டு, அதோடு சேர்த்து மற்றொன்றும் சொன்னான் – “அதுக்கு முன்னாடி, நான் மனிதனா போகணும்.”

யாரும் அவனைத் தடுக்கல. 

அருண் நடந்து வந்த பாதை, மீண்டும் வெளி ஓயா கரை. அவன் தொலைவிலே தீபம் பார்த்தான். அதே நினைவுச் சின்னம். அவன் நின்றான். கால் நடுங்கிச்சு. 

‘நான் இங்க இருக்குறதுக்கு தகுதி இருக்கா?’ என்று அவன் மனசுக்குள்ள கேட்டான்.

அந்த நேரம், சமன் அந்தக் கிராமத்துக்குள் வந்தான். சாதாரண உடை. துப்பாக்கி இல்லை. சின்னையா அவனைப் பார்த்தான். கண்ணு சுருங்கியது.

“நீ…” என்று சொல்லி நிறுத்தினான்.

“ஆமா” என்றான் சமன்.

தொடர்ந்து அவன், “நான் நேத்து வந்தவன்தான்” என்றான்.

அந்த இரண்டு பேருக்கு நடுவிலும் ஒரு நிமிஷம் மௌனம். பின்னாடி, வெளி ஓயா சத்தம்.

அருண் அந்த இருவரையும் பார்த்தான். ஒரு பக்கம் – நேத்து எதிரி. மற்றொரு பக்கம் – அவன் உயிரைக் காப்பாத்திய மனிதன். அருண் மெதுவா முன்னே வந்தான். சின்னையா மூச்சைப் பிடிச்சான்.

யாரும் பேசல. மூன்று பேர். ஒரே கரை. ஒரே ஓயா. அந்த மௌனம், போரைவிடக் கனமானது.

சமன்தான் முதலில் பேசினான்.

“நேத்து நான் உங்க வீட்டைச் சோதனை செய்யாம விட்டேன். அது உங்களைக் காப்பாத்தியிருக்கலாம். ஆனா அது என்னையும் காப்பாத்திச்சு.”

சின்னையா அதை ஏற்றுக்கொள்வது போலத் தலையையாட்டியபடியே, “நம்ம எல்லாரையும் இந்த ஓயாதான் காப்பாத்துது” என்றான்.

அருண் கண்ணீர் தடுக்க முடியல. 

“நான் நிறைய பேரை இழந்தேன். “ஆனா இங்க வந்துதான் நான் என்னைக் கண்டுபிடிக்கிறேன்.”

சமன் அவனைப் பார்த்தான். எதிரி மாதிரி இல்லை. ஓர் இளைஞன் மாதிரி.

வெளி ஓயா மெதுவா ஓடியது. அது சொல்லுற மாதிரி இருந்தது – “நீங்கள் என்னைக் கடக்கிறீங்க. ஆனா ஒருநாள், நீங்கள் ஒருவரையொருவர்தான் கடக்கணும்.”

அந்த நாள், யாரும் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடல. யாரும் ஜெயம் அறிவிக்கல. ஆனா மூன்று மனிதர்கள் ஒரே கரையில நின்றாங்க. போருக்குப் பிறகு,

திரும்பிப் பார்க்குற ஒரு வழி அங்க ஆரம்பிச்சது. வெளி ஓயா அந்த மாலை சூரியனை மெதுவாக விழுங்கிக் கிட்டிருந்தது. சிவந்த வானமும் அலை இல்லாத நீரும் மூன்று மனிதர்களுக்குள்ள நடந்த அந்தச் சந்திப்பைச் சாட்சி சொல்ல மாதிரி இருந்தது. யாரும் பெரிய வார்த்தை பேசல. ஆனா அந்த மௌனம், ஓர் ஒப்பந்தத்துக்குச் சமம்.

சின்னையா முதல்ல உட்கார்ந்தான். அவன் கையில மண்ணு. அதை மெதுவா விரலுக்குள்ள சுருட்டினான்.

“இந்த மண்ணு” எனறு கூறிவிட்டு, அவன் சொன்னான், “யாரோடது தெரியுமா? யாரோடதும் இல்ல. ஆனா எல்லாரையும் தாங்குது” என்றான்.

சமன் அந்த மண்ணைப் பார்த்தான். அவன் பூட்ஸில ஒட்டியிருந்த மண், ரோஷன் உடல் விழுந்த இடத்து மண் மாதிரியே இருந்தது.

அருண் மெதுவாக, “நேத்து வரை நான் இந்தக் கரையை எதிரி இடம்ணுதான் பார்த்தேன்” என்று கூறினான்.

அவன் ஓயாவைப் பார்த்துவிட்டு, “இப்போ… இது ஒரு கண்ணாடி மாதிரி இருக்கு. என்னோட முகத்தை நான் இங்கதான் பார்க்குறேன்” என்றான்.

சின்னையா தலையாட்டினான்.

“போர் நம்ம முகத்தை மறைக்குது. ஆனா தண்ணீர் உண்மையைக் காட்டும்” என்றான்.

அந்த நேரம், கிராமத்திலிருந்து சிலர் வந்தார்கள்.  பெண்கள். முதியவர்கள். குழந்தைகள். அவர்கள் மூவரையும் பார்த்ததும் அவங்களுக்குள்ள ஒரு தயக்கம்.

“இவன் யார்?” “அவன் யார்?” 

வள்ளி முன்னே வந்தாள். 

“இவங்க யார்ணு கேட்டா, எல்லாருக்கும் ஒரே பதில், ‘இவங்க உயிரோட இருக்குற மனிதர்கள்’ ” என்று அவள் சொன்னாள்.

அந்த வார்த்தை காற்றிலே அசைஞ்சது.

முதியவர் முன்னே வந்தார். 

“நாங்க நிறைய பார்த்துட்டோம். இப்போ பார்த்தது புதுசு” என்றார்.

அவர் சமனைப் பார்த்தார். அருணைப் பார்த்தார். பின்னர் அவர், “நீங்க பேசுறதுதான் எங்களுக்கு நம்பிக்கை” என்றார்.

சமன் நெஞ்சு நிறைந்தது. 

“நான் இங்க யாரையும் தேட வரல. நான் என்னையே தேட வந்தேன்” என்றான்.

அவன் கையிலிருந்த ரோஷன் பெயர் எழுதிய காகிதத்தை மடிச்சு வைத்திருந்தான்.

“என் நண்பன் இங்க சாவடைந்தான். அவன் பெயர் ரோஷன்” என்றான்.

சற்று அமைதியாகி, பின்னர் அவன், “அவனுக்கும் ஒரு நினைவு வேணும்” என்றான்.

அருண் உடனே சொன்னான், “என் நண்பன் முருகன். செல்வம். பேரில் எல்லாம் இழந்துட்டோம். நினைவுகள் மட்டும் எஞ்சிருக்கு” என்று. 

அவன் குரல் உடைந்தது.

அந்த மாலையே, வெளி ஓயா கரையில் சிறிய நினைவிட முடிவு எட்டப்பட்டது. கல்லு. ஒரு மரம். ஒரு விளக்கு. பெயர்கள் இல்லை. கொடி இல்லை. 

சின்னையா சொன்னான் – “பெயர் போட்டா மீண்டும் பிரிவு வரும்.”

குழந்தைகள் அந்த மரத்தைச் சுற்றி ஓடினாங்க. அவர்களுக்குப் போர் தெரியாது. அவர்கள் சிரிப்பு மட்டும் தெரியும். அருண் அந்த சிரிப்பைப் பார்த்தான். அவன் கண்கள் ஈரமாகின.

அவன் எல்லோரையும் பார்த்து, “இவங்க வாழ்க்கை நம்ம கையில இருக்கணும்” என்றான். 

அந்த இரவு, மூன்று பேரும் ஓயா கரையில உட்கார்ந்திருந்தாங்க. வானத்துல நட்சத்திரங்கள். நீரில அவைகளின் நிழல். 

சமன் மெதுவாகக் கேட்டான், “நாளைக்கு என்ன?”

சின்னையா சிரிச்சான். பின்னர், “நாளைக்கு நாம எழுந்து வாழணும்” என்றான்.

அருண் ஒரு முடிவு சொன்னான் – “நான் மீண்டும் துப்பாக்கி எடுக்க மாட்டேன்.”

அந்த வார்த்தை காற்றை நிக்க வைத்த மாதிரி இருந்தது. 

சமன் அவனைப் பார்த்தான்.

பின்னர் கூறினான், “நானும்” என்று.

வெளி ஓயா ஓடியது. அது சொல்லுற மாதிரி இருந்தது – “கரைகள் இருக்கலாம். ஆனா தண்ணீர் ஒன்றாகத்தான் ஓடும்.”

அந்த நாளில் போர் முடிவடையல. அரசியல் மாறல. ஆனா சிறிய இடத்தில, ஒரு கரையில், மூன்று மனிதர்களுக்குள்ள ஒரு புதிய உலகம் முளைக்க ஆரம்பிச்சது. வெளி ஓயா இன்னும் ஓடிக்கிட்டே இருக்கு. ஆனா அந்த ஓட்டத்துக்குள்ள, மனிதம் கரையைத் தாண்ட ஆரம்பிச்சுது.

3

வெளி ஓயா அந்த நாளில் அமைதியா இருந்தது. அமைதின்னா நிம்மதி இல்லை. அமைதின்னா, சத்தம் சேமிச்சுக்கிட்டிருக்குற தருணம். கரையோரம் நட்ட அந்தச் சிறிய மரம், இன்னும் பச்சை இலை விடலை. ஆனா மண் ஈரமா இருந்தது. அது போதும் விதை உள்ளுக்குள்ள உயிரோட இருக்குன்ணு சொல்ல.

அடுத்த சில நாட்கள் கிராமம் ஒரு விதமான நிலைமையில இருந்தது. போர் இல்ல.

அமைதியும் இல்ல. இராணுவம் முழுக்கப் போகல. புலிகள் முழுக்க மறையல. நடுவில – கிராமம்.

சின்னையா இதைத்தான் “நடுவில நிற்கும் நாட்கள்”ன்னு சொன்னான்.

“இப்போ எதுவும் திடீர்ணு மாறாது” என்று அவன் வள்ளியிடம் சொன்னான்.

“ஆனா சின்ன சின்ன விஷயந்தான் பெரிசா மாற வைக்கும்” என்றும் சொன்னான்.

சமன் கிராமத்திலேயே தங்கினான். அவன் எந்த முகாமுக்கும் போகல. எந்த ஆயுதமும் எடுத்துக்கல. கிராமத்து ஆண்கள் சிலர் அவனைச் சந்தேகமாப் பார்த்தாங்க.

“இவன் உளவாளியா?” என்று யாரோ குசுகுசுன்னாங்க.

சமன் அதை கேட்டும் கேட்காத மாதிரி இருந்தான். அவன் ஒவ்வொரு காலையிலும்

ஓயா கரைக்குப் போயிட்டு வந்தான். ரோஷன் பெயர் எழுதப்பட்ட அந்தக் காகிதம்,

இப்போ அவன் பாக்கெட்டுக்குள்ள இல்லை. அதை அவன் நினைவிடத்துல புதைத்துட்டான்.

அருண் காடுக்குள்ள திரும்பிப் போகல. அவன் கிராமத்துக்கு வெளியே ஒரு கைவிடப்பட்ட குடிசையில தங்கினான். புலிச் சீருடை இல்லை. ஆனா உடம்புல காயங்கள் இன்னும் இருக்குது.

ஒரு நாள் மாலையில் சிறுவன் அவனைப் பார்த்து கேட்டான், “அண்ணா! நீ யார்?” என்று

அருண் சிரிச்சான்.

“நான் யார்னு தெரியாது. ஆனா நான் இங்க இருக்குறவன்” என்றான்.

சிறுவன் தலையாட்டினான். அவனுக்கு அது போதும். இவனுக்கும் இதுவே போதும்.

கிராமத்துப் பள்ளி திறந்தது. கட்டடம் பாதி இடிந்து போயிருந்தது. ஆனா குழந்தைகள் வந்தாங்க. வள்ளி பலகையைத் துடைத்தாள். சின்னையா மேஜையைச் சரி செய்தான். சமன் கதவுக்கருகே வந்து நின்னான்.

“நான் உதவட்டுமா?” என்று கேட்டான்.

ஒரு நிமிஷம் அமைதி.

பின்னர் வள்ளி சொன்னாள், “குழந்தைகளுக்குக் கணக்குத் தெரியணும். கணக்குப் போட்டு உயிர் எண்ணிக்கையைக் கூட்டக் கூடாது” என்று.

அந்த வார்த்தை சமன் நெஞ்சுக்குள்ளே ஆழமா போனது.

அருண் குழந்தைகளுக்கு மாலை நேரம் ஓட்டம் கற்றுக்கொடுத்தான். விளையாட்டு. சிலர் முதல்ல பயந்தாங்க. பின்னர்ச் சிரிச்சாங்க.  ஒரு பெண் சொன்னாள், “இவன் கையில துப்பாக்கி இல்லை. அதுதான் பெரிய விஷயம்” என்று. 

அருண் அதை கேட்டான். அவன் கண்ணு சுருங்கிச்சு.

அந்த வாரம் முடிவில் ஒரு செய்தி வந்தது. “மேலிருந்து உத்தரவு. இந்தப் பகுதியில

மீண்டும் நடவடிக்கை.”

அந்தச் செய்தி காற்றிலே கனமா தொங்கிச்சு. சமன் அதைக் கேட்டதும் சின்னையாவைப் பார்த்தான்.

“நான் போகணுமா?” என்று அவன் கேட்டான்.

சின்னையா பதில் சொல்லல. அவன் வெளி ஓயாவைப் பார்த்தான்.

“நீ போனாலும், இங்க நீ இருந்த தடம் போகாது” என்றான்.

அருணும் அந்தச் செய்தியைக் கேட்டான்.

“நீ மறுபடியும் காடுக்குப் போவியா?” என்று சின்னையா கேட்டான்.

அருண் ‘இல்லை’ என்பது போலத் தலையாட்டிவிட்டு, “இந்தத் தடவை ஓட மாட்டேன். நின்னு சொல்லுவேன் ‘நான் மனிதன்’ என்று” எனக் கூறினான்.

அந்த இரவு வெளி ஓயா கரையில் மூவரும் மீண்டும் சேர்ந்தாங்க. வானம் மேகமூட்டம். மழை வரப்போற சூழல். சமன் மெதுவா சொன்னான் – “நாளைக்கு என்ன நடக்கும் எனக்குத் தெரியாது.”

அருண், “எனக்குந்தான்” என்றான்.

சின்னையா சிரிச்சான். பின்னர் அவன், “நாளைக்கு என்ன நடந்தாலும் இன்னைக்கு நாம இங்க மனிதர்களா நிக்குறோம். அது போதும்” என்றான்.

மழை விழுந்தது. மண் மணம். நீர் ஓட்டம் அதிகம். வெளி ஓயா சத்தமா ஓட ஆரம்பிச்சது. அது சொல்லுற மாதிரி இருந்தது – “நீங்க நடுவில நின்னாலும் நான் முன்னே தான் ஓடுவேன். உங்களையும் ஒருநாள் கூட்டிக்கிட்டுப் போவேன்.”

‘நடுவில நிற்கும் நாட்கள்’ எப்போதும் ஆபத்தானவை. ஒரு பக்கம் – பழைய பயம். 

மற்றொரு பக்கம் – புதிய நம்பிக்கை. இந்த இரண்டுக்கிடையில் சின்னையா, சமன்,

அருண் மாதிரி மனிதர்கள் சிறிய கோடு இழுத்துக் கிட்டிருந்தாங்க. அந்தக் கோடுதான் போருக்கும் மனிதத்துக்கும் நடுவில இருக்குது. 

மழை நின்றதும் வெளி ஓயா இன்னும் அகலமா ஓடியது. கரைகள் நனைஞ்சு மண்ணிலிருந்து புதுவாசனை எழுந்தது. அது சாவு வாசனை இல்லை. அது வாழ்க்கைக்கான வாசனை.

அடுத்த நாள் காலை கிராமம் சற்று பரபரப்பா இருந்தது. 

“இராணுவ வண்டிகள் வருதாம்” என்று யாரோ ஓடி வந்து சொன்னாங்க.

பெண்கள் பிள்ளைகளை உள்ளே இழுத்தாங்க. ஆண்கள் வீடுகளுக்குள் மறைந்தாங்க. 

பயம் திரும்பி வந்தது. நம்பிக்கை கொஞ்சம் பின்னாடி போனது. சின்னையா ஓயா கரையில் நின்றான். அவன் கண்ணு நீரிலே பதிந்திருந்தது.

‘மழைக்குப் பிறகு நீர் கலங்கும்’ என்று அவன் மெதுவாகச் சொல்லிக் கொண்டான்.  பின்னர்ச் சத்தமாகச் சொன்னான், “ஆனா கொஞ்ச நேரத்துல மீண்டும் தெளிவாகும்” என்று.

அந்த வண்டிகளின் சத்தத்தைக் கேட்டதும் சமனின் நெஞ்சு இறுக்கமா ஆனது. 

“நான் இங்க இருந்தா இவங்களுக்குப் பிரச்சனை வருமா?” என்று அவன் கேட்டான்.

வள்ளி, “நீ இங்க இல்லாட்டியும் பிரச்சனை வரலாம். நீ இங்க இருந்தா எங்களுக்காக ஒரு குரல் இருக்கும்” என்றாள்.

அந்த வார்த்தை சமன் நெஞ்சுக்குள்ள நின்றது.

அருண் தன் குடிசையிலிருந்து வெளியே வந்தான். அவன் முகத்தில் பயம் இல்லை. ஆனா தயக்கம் இருந்தது.

‘இப்போ, ஓடுறதுக்கு நேரமில்லை’ என்று அவன் தனக்குள்ள சொல்லிக் கொண்டு, வெளி ஓயா கரையை நோக்கி நடந்தான். அவன் கையில் எதுவும் இல்லை. வெறும் கைகள்.

இராணுவ வண்டிகள் கிராமத்துக்குள் நுழைந்தன. தூசு. சத்தம். கட்டளைகள். அதிகாரி இறங்கினார்.

“இந்தப் பகுதியில சிலர் சட்டவிரோதமாக இருக்காங்கன்ணு எங்களுக்குத் தகவல் வந்தாச்சு” என்று அவர் சொன்னார்.

சின்னையா முன்னே வந்து, அமைதியான குரலில், “இங்க பிள்ளைகள், பெண்கள்தான் அதிகம்” என்று கூறினான்.

பின்னர் சற்றுக் குரலைத் தடித்து, “சட்டம் தேடுறதா இருந்தா, முதல்ல மனிதத்தைப் பாருங்க” என்றான். 

அதிகாரி அவனைக் கூர்ந்து பார்த்தார்.

அந்த நேரம் அருண் வெளியில் வந்தான். கிராமம் முழுக்க ஒரு மௌனம். சமன் ஒருபடி முன்னே வந்தான்.

“இங்க யாருக்கும் யாராலையும் ஆபத்து இல்லை” என்றான்.

அதிகாரி சமனைப் பார்த்தார். அவன் முகத்தில் குழப்பம்.

“நீ யார்?” என அவர் கேட்டார்.

“நான் ஒரு சிப்பாய்” என்றான் சமன்.

அவர் கண்கள் சுருங்கின.

சமன், “இப்போ இங்க நான் ஒரு மனிதன்” என்றான்.

அந்த நிமிஷம் நேரம் நின்ற மாதிரி இருந்தது. அருண் தரையைப் பார்த்தான். சின்னையா மூச்சைப் பிடிச்சான். வள்ளி குழந்தையை இறுக்கப் பிடிச்சாள். 

அதிகாரி சொன்னார் – “இன்னைக்கு சோதனை இல்லை. ஆனா எச்சரிக்கையா இருங்க.”

இராணுவ வண்டிகள் திரும்பிப் போயின.

கிராமம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.  ஒருத்தி அழுதாள். ஒருத்தி சிரிச்சாள். அந்த இரண்டு உணர்ச்சியும் ஒரே நேரத்துல வந்தன. 

சின்னையா சமனைப் பார்த்து, “நீ பேசினதால தான்” என்றான்.

சமன் தலையாட்டினான்.

“நான் பேசல. எனக்குள்ள இருக்குற என் நண்பன் ரோஷன் பேசினான்” என்றான்.

அருண் மெதுவாகச் சின்னையாவிடம் வந்தான்.

“நான் இங்க இருக்குறது சரி தானா?” என்று கேட்டான்.

சின்னையா அவன் தோளில் கை வைத்து, “இந்த மண்ணு யாரையும் வெளிய தள்ளல. தள்ளாது. மனுசந்தான் மனுசனைத் தள்ளுறான்” என்றான்.

மாலையில் கிராமத்து மக்கள் சேர்ந்து ஒரு வேலையை ஆரம்பிச்சாங்க. மழையால உடைந்த பாதையைச் சரி செய்யத் தொடங்கினர். யாரும் கட்டளை கொடுக்கல. யாரும் கொடி ஏந்தல. அருண் மண் சுமந்தான். சமன் கல் அடுக்கினான். சின்னையா வழி காட்டினான். குழந்தைகள் சிரிச்சாங்க. பாதை உருவாச்சு.

வெளி ஓயா அந்த மாலையில் புது நிறத்துல ஓடியது. அது சொன்ன மாதிரி இருந்தது – “மழை வந்தா நான் கலங்குவேன். மழை நின்னா நான் தெளிவாகுவேன். மனுசனும் அப்படித்தான்.”

அந்த நாள் ஒரு பெரிய மாற்றம் வரல. ஆனா ஒரு பெரிய விபத்துகூட வரல. இந்த நடுவில இருக்குற நாட்கள்ல, அதுவே பெரிய ஜெயம். மழைக்குப் பிறகான வாசனை

வெளி ஓயா கரையில மெல்லப் பரவ ஆரம்பிச்சது. அது புதிய வாழ்க்கைக்கான வாசனையா இருந்தது.

வெளி ஓயா அந்த நாளில் அமைதியா ஓடினாலும் கரையோர மனிதர்களுக்குள்ள அமைதி முழுசா வரல. மழைக்குப் பிறகான வாசனை இன்னும் காற்றிலே இருந்தது. ஆனா அந்த வாசனையோட சேர்ந்து ஒரு வினாவும் மிதந்துக் கிட்டிருந்தது – “இது எத்தனை நாளைக்கு?”

அடுத்த சில நாட்கள் கிராமம் மெதுவா வேலை செய்ய ஆரம்பிச்சது. பாதை சரி செய்யப்பட்டது. பள்ளி மாடியில் ஓட்டை மூடப்பட்டது. வீடுகளுக்கு முன்னாடி புதுசா செடி நடப்பட்டது.  சின்னையா எல்லாத்தையும் பார்த்துக் கிட்டிருந்தான். அவன் மனசு மகிழ்ச்சியாக இருந்தாலும் ஓரத்துல பயமும் இருந்தது. 

‘நல்லது வந்தா, அதுக்குப் பின்னாடி ஒரு சோதனை வரும்’ என்று அவன் தனக்குள்ள நினைத்துக்கொண்டான்.

அந்தச் சோதனை அவ்வளவு தூரம் இல்ல. ஒரு மாலை காட்டுப் பக்கம் இருந்து சில இளைஞர்கள் வந்தாங்க. அவர்கள் முகத்தில் கடுமை. கண்களில் சந்தேகம். 

“இங்க என்ன நடக்குது?” என்று ஒருத்தன் கேட்டான்.

“எதிரியோட சேர்ந்து வாழற மாதிரி பேசுறீங்களே?” என்று மற்றவன் கேட்டான்.

அருண் முன்னே வந்தான்.

“எதிரி யார்?” எனக் கேட்டான்.

பதிலில்லை.

தன் கேள்வியைச் சற்று நீட்டி, “நீங்களா? அவங்களா? அல்ல நம்ம பயமா?” என்று கேட்டான். 

அந்தக் கேள்வி காற்றைக் கிழிச்ச மாதிரி இருந்தது.

அந்த இளைஞர்களில் ஒருவன், “நீ துப்பாக்கி போட்டுட்டு இங்க நாடகம் ஆடுறே!” என்று கத்தினான்.

அருண் தலையாட்டியபடியே, “ஆமா. நான் போட்டேன். அதால என்ன கிடைச்சு? சாவுதானே?” என்று கேட்டான்.

யார் குரலும் அங்கு உயரல. அதேதான் அதன் வலிமை.

சமன் அந்தக் குழுவைப் பார்த்தான். அவன் முகம் அடையாளம் காட்டிக் கிட்டிருந்தது – பயம் இல்ல, அவசரம் இல்ல.

“இங்க யாரும் யாரோடையும் ஒப்பந்தம் போடல” என்று அவன் சொன்னான்.

அவன் தொடர்ந்து, “இங்க குழந்தைகள் இருக்காங்க. அவங்களுக்கு நாளை வேணும்” என்றான்.

ஓர் இளைஞன் சிரித்துவிட்டு, “நாளை?”  என்று எள்ளலாகக் கேட்டான்.

பின்னர் அவன் முகத்தையும் குரலையும் கடுமையாக்கிக்கொண்டு, “இந்த மண்ணுக்கு நாளை இருக்கா, என்ன?” என்று கேட்டான். 

சின்னையா முன்னே வந்து, “நாளை இல்லன்ணு நினைச்சுத்தான் நேத்து எல்லாம் அழிந்தது” என்று கூறிவிட்டுச் சற்று நிதானித்து, “இப்போ நாளை இருக்குணு நினைக்க ஆரம்பிச்சோம்” என்றான். 

அவன் கை வெளி ஓயா பக்கம் நீண்டு, “இந்த ஓயா நாளை இல்லன்ணு நினைச்சிருந்தா, நேத்தே ஓடாம நின்றுருக்கணுமே?” என்று கேட்டான். 

அந்தக் குழுவில் ஓர் இளைஞன் மட்டும் அமைதியா இருந்தான். அவன் கண்கள் பள்ளிக் கட்டடம் பக்கம் போனது. குழந்தைகள் சிரிப்பு கேட்டது. 

அவன் மெதுவா சொன்னான், “என் தங்கை… இந்தப் பள்ளியிலதான் படிச்சா” என்று.

அந்த ஒரு வாக்கியம் அந்தக் குழுவின் கடுமையைச் சிறிது உடைத்தது.

அவர்கள் போனாங்க. எச்சரிக்கையோட. முழு நம்பிக்கையோட இல்லை. கிராமம் மீண்டும் ஒரு மூச்சு விட்டது. அருண் தரையில் உட்கார்ந்தான். அவன் கைகள் நடுங்கிச்சு.

‘நான் சரியான வழியில இருக்கேனா?’ என்று தனக்குள் கேட்டுக்கொண்டான். 

சமன் அவன் பக்கத்துல உட்கார்ந்தான்.

“சரியான வழி சுலபமானது இல்ல. அதனாலதான் அது சரி” என்றான்.

அந்த இரவு வெளி ஓயா கரையில ஒரு சின்ன கூட்டம். யாரும் உரை பேசல. யாரும் கோஷம் போடல. ஒரு விளக்கு. ஒரு மௌனம்.  வள்ளி மெதுவா பாட ஆரம்பிச்சாள். ஒரு பழைய தாலாட்டு. அந்தப் பாடல் நீரோட சேர்ந்து ஓடிச்சு.

அருண் வானத்தைப் பார்த்தான்.

‘அம்மா…’ என்று மனசுக்குள்ள சொன்னான்.

‘நான் உயிரோட இருக்குறது சரியா?’ என்று கேட்டுக்கொண்டான்.

அவனுக்குப் பதில் குழந்தை சிரிப்புல கிடைச்சது.

வெளி ஓயா அந்த இரவில் மிக மெதுவா ஓடியது. அது சொல்லுற மாதிரி இருந்தது – “நம்பிக்கைன்னா பயம் இல்லாம இருப்பது இல்ல. பயத்தோடேயே முன்னே போவது.”

இந்தக் கிராமம் இன்னும் பாதுகாப்பில்ல. இந்தப் பாதை இன்னும் சுலபமில்லை. ஆனா ஒரு விஷயம் தெளிவா இருந்தது. வெளி ஓயா கரையில, மனிதம் இப்போ சோதிக்கப்படுது. அந்தச் சோதனையைத் தாண்டினா, போர்கூட ஒருநாள் மறைஞ்சழியும்.

வெளி ஓயா அந்தக் காலை சற்றே வேகமாக ஓடியது. நேத்து இரவு பாடல், மௌனம், விளக்கு – எல்லாம் நீருக்குள்ள கரைந்துபோன மாதிரி. ஆனா மனித மனசுக்குள்ள அவை இன்னும் அசையாம நின்றன.

அந்த நாள் அதிகாலையில் ஒரு சத்தம் கிராமத்தை எழுப்பிச்சு. தூரத்துல வெடிப்பு. பெரிசா இல்லை. ஆனா தெளிவா கேட்டது. பெண்கள் எழுந்தாங்க. குழந்தைகள் அழுதாங்க. 

“மறுபடியும் ஆரம்பமா?” என்று யாரோ சொன்னாங்க.

சின்னையா வெளியே வந்தான். வானத்தைப் பார்த்தான். அவன் கண்களில் கோபம் இல்ல. ஒரு சோர்வு மட்டும்.

“அமைதி உடைஞ்சா, முதல்ல உடையறது நம்பிக்கைதான்” என்றான்.

அருண் உடனே நிமிர்ந்தான். அவன் மனசு அதிர்ந்தது. 

“இது எங்கிருந்து?” என்று அவன் கேட்டான்.

சமன் தூரத்தைப் பார்த்தான்.

“காட்டுப்பக்கம்” என்றான்.

அருண் கையைக் கட்டிக்கிட்டான். அவன் உடம்பு பழக்கத்தால முன்னேற நினைச்சது. ஆனா மனசு தடுத்தது.

அந்தச் சத்தம் கிராமத்துக்குள்ள ஒரு பழைய நினைவைக் கிளப்பிச்சு. மூதாட்டி கதறினாள்.

“இதே சத்தம்தான் என் பிள்ளையை எடுத்தது” என்றாள்.

வள்ளி அவளை அணைத்துக்கொண்டு, “இன்னைக்கு யாரையும் எடுக்க விடமாட்டோம்” என்றாள்.

சில மணி நேரத்துக்குள் செய்தி வந்தது – “இரண்டு பேர் காயம். ஒருத்தன் சாவு.” ‘யார்? எந்தப் பக்கம்?’ என்ற விவரம் தெரியல. அந்த அறியாமையே பெரிய பயந்தான்.

அந்த மதியம் கிராமத்துக்கு வெளியே ஓர் உடல் கொண்டுவரப்பட்டது. இளைஞன். முகத்தில் சின்னதா காயம். அடையாளம் தெரியாத நிலை. கிராமத்தார் சுற்றி நின்னாங்க. யாரும் பேசல. அருண் முன்னே வந்தான். ஒரு கணம் பார்த்தான். அவன் கண்ணு விரிந்தது.

“இவன்…” என்று கூறினான். உடனேயே அவன் குரல் உடைந்தது.

அந்த உடல் நேத்து வந்த குழுவிலிருந்த அமைதியான இளைஞன். ‘என் தங்கை இந்தப் பள்ளியில்…’ என்று சொன்னவன். அந்த வார்த்தைகள் அருண் காதுக்குள்ள மின்னல் மாதிரி அடித்தன.

‘நேத்து பேசுனவன் இன்னைக்கு ‘எண்’ ஆகிட்டானா?’ என்று தனக்குள்ள கேட்டுக் கொண்டான்.

கிராமம் முழுக்க கோபம் எழுந்தது.

“பேச்சு போதாது” என்று யாரோ கத்தினாங்க.

“இது எல்லாம் நாடகம்” என்றார் மற்றொருவர்.

சமன் முன்னே வந்தான்.

“உங்க கோபம் புரியுது” என்று அவன் சொல்லிவிட்டு, “ஆனா இப்போ கோபம் எடுத்தா, அவனோட சாவு வீணா போயிடும்” என்றான்.

அவன் அந்த உடலைப் பார்த்தான். பின்னர் அனைவரையும் பார்த்து உரத்த குரலில், “இவன் நேத்து பள்ளியை நினைச்சான். அதை மறக்க விடாதீங்க!” என்றான். 

அருண் அந்த உடலருகே உட்கார்ந்தான். மண்ணைத் தொட்டான்.

“நான் உனக்கு ஒரு பதில் கொடுக்க முடியல” என்றான் மெதுவாக.

மீண்டும் மண்ணைத் தொட்டான்.

“ஆனா உன்னை ‘எண்’ ஆகவிட மாட்டேன்” என்றான் சத்தமாக.

அவன் கண்ணீர் மண்ணில் விழுந்தது.

அந்த மாலை அந்த இளைஞனைக் கிராமமே சேர்ந்து அடக்கம் செய்தது. 

‘யார் பக்கம்? யார் எதிரி?’ என்று இப்போது யாரும் கேட்கல. கேட்டிருந்தால் அதற்கு ஒரே பதில்தான் இருந்தது. அது ‘அவன் ஒரு மனிதன்’.  

வெளி ஓயா அந்த மாலையில் சிவந்த நீரா தெரியல. அது சூரியனின் நிழல். ஆனா அந்த நிழலுக்குள்ள ஒரு சத்தியம் ஒளிந்திருந்தது.

அந்த இரவு அருண் சின்னையாவிடம், “இன்னைக்கு நான் புரிஞ்சிக்கிட்டது, ‘போர் சத்தத்தால மட்டும் இல்ல; பேசாத இடைவெளியாலகூட மனுசனைக் கொல்லும்’ என்பதைத்தான்” என்றான்.

சின்னையா தலையாட்டிவிட்டு, “அதனாலதான் நாம பேசணும்” என்றான்.

மீண்டும் தலையாட்டிவிட்டு, “பயந்தாலும் பேசணும்” என்றான்.

அமைதி உடைஞ்சது. ஆனா அது முழுசா சிதையல. ஓர் உடல் மண்ணுக்குள் போனது. ஒரு முடிவு மனசுக்குள் பிறந்தது. வெளி ஓயா இன்னும் ஓடிக்கிட்டே இருக்கு. அதோட ஓட்டத்துல, இப்போ ஒரு நிழலும் ஓர் உறுதியும் ஒன்றாகப் பயணம் செய்ய ஆரம்பித்தன.

அந்த இரவு வெளி ஓயா கரை வழக்கம்போல அமைதியா இருந்தது. ஆனா அந்த அமைதி நம்பிக்கையால வந்தது இல்ல. பயத்தால வந்தது. காற்றுகூட சத்தம் போடாம மரங்களுக்குள்ள ஒளிஞ்சு மிதந்து போனது.

அருண் தூங்கல. அவன் கண் மூடினாலும் நேத்து பார்த்த முகம் மறுபடியும் தோன்றிச்சு. “பள்ளிக்குப் போகணும்…” என்ற அந்த வார்த்தை மூச்சா வந்து நெஞ்சை அடிச்சது. அவன் எழுந்து ஓயா கரை போனான்.

சமன் அங்கேயே இருந்தான். இருவரும் பேசல. தண்ணீரை மட்டும் பார்த்தாங்க. 

நீண்ட நேரத்துக்குப் பிறகு சமன்தான் சொன்னான் – “இப்போ திரும்பிப் போனா,

எல்லாம் பழைய இடத்துக்கே போயிடும்.”

அருண் தலையாட்டினான். 

அவன் சமனிடம், “நான் பயப்படுறேன். ஆனா திரும்ப போனா அந்த அச்சம் என்னை முழுசாச் சாப்பிடும்” என்றான். 

சின்னையா மெதுவா வந்தான். 

“நீங்க இரண்டுபேரும் ஒரே இடத்துலதான் நிக்கிறீங்க. ஆனா உலகம் உங்களை எதிர் பக்கம்னு தான் பார்க்கும்” என்றான்.

அவன் ஓயாவை காட்டி, “இந்தத் தண்ணீர் மாதிரி நீங்க ஓடினா, யாரும் உங்களைத் தடுக்க முடியாது” என்றான்.

அந்தக் காலை கிராமத்துல ஒரு கூட்டம். சின்ன கூட்டம் இல்ல. பெரிய கூட்டம். பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள். எல்லாருக்கும் முகத்துல ஒரே கேள்வி. “இப்போ என்ன?”

அருண் முன்னே வந்தான். இது அவன் வாழ்க்கையில முதல்முறை துப்பாக்கி இல்லாம மக்கள் முன்னே நிக்கிற நேரம். 

“நான் யார்ணு நீங்க எல்லாருக்கும் தெரியும். அதை நான் மறுக்க மாட்டேன்” என்றான்.

கூட்டத்தினரின் சிறிய முணுமுணுப்பு. 

“ஆனா இன்னைக்கு நான் ஒரு சிப்பாய் இல்ல. ஒரு மனிதன்” என்றான். 

சமன் அவன் பக்கத்துல நின்னான். 

“நானும் அதே!” என்றான்.

“என் சீருடை என்னைப் பாதுகாக்கல. என் மனசுதான் இப்போ என்னைக் காப்பாத்துது” என்றும் கூறினான்.

ஓர் இளைஞன் உரத்த குரலில், “பேச்சால சாவு நிக்குமா?” என்று கத்தினான்.

அருண் நேரா அவனைப் பார்த்தான்.

“நிக்காது! ஆனா பேசாம இருந்தா சாவு மட்டுந்தான் பேசும்” என்றான்.

அந்த வார்த்தை கூட்டத்தை அமைதிப்படுத்துச்சு.

வள்ளி முன்னே வந்தாள். 

“நேத்து புதைச்சவன் ‘எண்’ ஆகக்கூடாது. அவனோட நினைவுக்கு ஓர் அர்த்தம் வேணும்” என்றாள்.

“என்ன அர்த்தம்?” என்று யாரோ கேட்டாங்க.

சின்னையா, அழுத்தமாக, “இந்தக் கரை இனிச் சந்திப்பு இடம் மட்டுந்தான். போர் இடம் இல்ல” என்றான்.

அந்த முடிவு எளிதா வரல. பயம் இருந்தது. சந்தேகம் இருந்தது. ஆனா ஓர் அம்மா சொன்னார் – “என் பிள்ளை இன்னொரு சாவுக்குப் போகக் கூடாது.”

அந்த வார்த்தை அனைத்து அரசியலையும் அடக்கிச்சு.

அந்த நாளிலிருந்து வெளி ஓயா கரையில் ஒவ்வொரு மாலையும் மக்கள்கூட ஆரம்பிச்சாங்க. யாரும் கொடி எடுத்துவரல. யாரும் ஆயுதம் எடுத்துவரல. விளக்கு மட்டும். 

அருண் ஒரு மாலையில் அந்த விளக்கை ஏந்தினான்.  அது நம்பிக்கையின் ஒளியாகச் சுடர்ந்தது. அவன் மனசுக்குள்ள ஒரு பாரம் இறங்கின மாதிரி இருந்தது.

“இதுதான் என் உண்மையான சேவை” என்று மெதுவாகச் சொன்னான்.

சமன் புன்னகைத்துவிட்டு, “இப்போதான் நாம் போர்ல இருந்து வெளிய வந்தோம்” என்றான்.

போர் முடிவடையல. அரசியல் மாறல. ஆனா ஒரு கரையில், ஒரு கிராமத்தில், மௌனம் உடைக்கப் பட்டது. வெளி ஓயா இன்னும் ஓடிக்கிட்டே இருக்கு. அந்த ஓட்டத்துல, இப்போ முடிவுகள் தண்ணீர் மாதிரி பரவ ஆரம்பிச்சது. வெளி ஓயா கரை இனி வெறும் தண்ணீர் ஓடும் இடமல்ல. அது பேசும் இடம். கேட்கும் இடம். ஆனா அந்த மாதிரி இடங்களுக்கு எப்போதும் எதிரிகள் இருப்பாங்க.

மூன்றாவது நாளிலேயே அந்தச் சந்திப்புகள் யாருக்கோ பிடிக்காம போச்சு. காட்டுப்பக்கம் இருந்து இரண்டு பேர் வந்தாங்க. முகம் மூடியிருந்தது. குரல் கடினம்.

“இது எல்லாம் நாடகம்” என்றனர்.

“யாரோ ஒருத்தனோட வேல” என்றும் கூறினர்.

கூட்டத்துல முணுமுணுப்பு.

அருண் முன்னே வந்தான்.

“நாடகம் எதுன்னா..” என்று கூறிவிட்டு, “இத்தனை நாள் நாம நம்பிக்கையில்லாம

வாழ்ந்ததுதான்” என்றான்.

வந்தவர்கள் சிரித்தனர்.

“நீ யார், எங்களுக்குப் பாடம் சொல்ல?” என்று கேட்டனர்.

அந்த கேள்வியே விஷம் மாதிரித்தான் இருந்தது. 

சமன் அந்த இடைவேளையில், “நாங்க யாருன்ணு முக்கியம் இல்ல. நீங்க யாராக இருக்க விரும்புறீங்க? அதுதான் முக்கியம்” என்றான். 

ஒரு கணம் அந்த இருவர் பேசாம நின்னாங்க. 

அந்த இரவு கிராமத்துக்கு வெளியே ஒரு சத்தம். கல். விளக்கு உடைந்த சத்தம். யாரும் காயம் இல்லை. ஆனா செய்தி தெளிவா இருந்தது.

“பேசாதீங்க!.”

கிராமம் கலங்கிச்சு. 

“இனி இங்குக்கூட வேண்டாம்” என்று யாரோ சொன்னாங்க.

“பயம்தான் புத்திசாலித்தனம்” என்றார் மற்றொருவர்.

வள்ளி அழல. அவள் கோபமா சொன்னாள் – “பயம் தான் எங்களை இத்தனை நாள் அடிமையாக்கி வைச்சது.”

அடுத்த நாள் காலை அருண், சமன், சின்னையா மூவரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தாங்க.

“இனி மாலை மட்டும் இல்ல, பகலும் இங்கு வந்து கூடுவோம்” என்று சின்னையா சொன்னான்.

அருண் தலையாட்டிவிட்டு, “ஒளிச்சு பேசுறதுக்கு இருள் தேவையில்லை” என்றான்.

அந்தப் பகல் கூட்டம் இன்னும் பெரியது. சுற்றிய கிராமங்களிலிருந்தும் மக்கள் வந்தாங்க.

ஒருத்தன் கேட்டான், “நீங்க அரசியலா பேசுறீங்களா?” என்று.

சமன் சிரித்துவிட்டு, “அரசியல் எங்களைப் பிரிச்சது. நாம இங்க மனுசனாப் பேசுறோம்” என்றான்.

முதிய ஆசிரியர், “நான் முப்பது வருஷம் குழந்தைகளுக்குப் பாடஞ்சொல்லி வந்தேன். வார்த்தைகள் ஆயுதத்தைவிட வலிமைன்ணு” என்றார்.

சொல்லிமுடித்ததும் அவர் குரல் உடைந்தது. 

பின்னர் அவர், “இன்னைக்கு அதை நானே மறுபடியும் கத்துக்குறேன்” என்றார்.

அந்த மாலை மீண்டும் கல் எறியப்பட்டது. இந்த முறை யாரும் ஓடல. அருண் கல்லை எடுத்தான். அதை ஓயாவுக்குள் போட்டான்.

பின்னர் அவன், “கல் மூழ்கிடும். வார்த்தை மிதக்கும்” என்றான்.

4

அந்த இரவு சின்னையா தனியா உட்கார்ந்திருந்தான். அவன் மனசுக்குள்ள ஒரு பயம். ‘இது எவ்வளவு நாள்?’ என்று கேட்டுக்கொண்டு, அவனே அந்த வினாவுக்கு விடையும் கூறினான் –  ‘ஒரு நாள்கூட மனிதமா வாழ்ந்தா அதுவே போதும்’.

வெளி ஓயா அந்த இரவு சத்தம் இல்லாம ஓடியது. ஆனா அதன் ஓசைக்குள்ள ஓர் எச்சரிக்கை இருந்தது. மாற்றம் எப்போதும் அமைதியா வராது. வார்த்தைகள் பேச ஆரம்பிச்சதும் எதிரிகள் வந்தாங்க. ஆனா அந்த எதிரிகளுக்கும் ஒரு பயம் பிறந்தது. வெளி ஓயா இன்னும் ஓடிக்கிட்டே இருக்கு. அந்த ஓட்டத்துல, இப்போ வார்த்தைகள்

கல்லைவிட கனம் அடைய ஆரம்பிச்சது. வெளி ஓயா கரை இனிப் பாதுகாப்பான இடம்ணு யாரும் சொல்ல முடியாத நிலை. ஆனா அது பயமூட்டும் இடம்ணு யாரும் சொல்லவும் முடியல. அமைதி அப்படித்தான். எப்போதும் நடுவுலதான் நிக்கும்.

அந்த வாரத்தின் நான்காவது நாள். காலை வெயில்கூட சாதாரணமா இல்ல. அது எரிச்சலோடு நின்ற மாதிரி இருந்தது. கிராமத்துக்குள்ள ஒரு செய்தி சுழன்றது – “மேலிருந்து கண்காணிப்பு இருக்கு.”

‘யார் மேல? எதுக்காக?’ என்று யாருக்கும் முழுசாத் தெரியல.

சமன் சின்னையாவிடம், “இது நீண்ட நாளைக்கு யாருமே கவனிக்காம போகாது” என்று கூறினான்.

சின்னையா மெல்லச் சிரித்துவிட்டு, “கவனிச்சாத்தான் என்ன? நாம குற்றம் செய்யலையே!” என்றான்.

அருண் அமைதியா இருந்தான். அவன் அனுபவம் அவனைப் பேச விடல.

மதியம் ஒரு வாகனம் கிராமத்துக்குள் வந்தது. பொடி பறக்க நின்றது. சீருடை. அடையாளம் தெரியாத ரேங்க். மக்கள் தூரமா நின்னாங்க. அதிகாரி இறங்கினார்.

“இங்க என்ன நடக்குது?” என்று அவர் கேட்டார்.

அந்த கேள்வி சாதாரணமா இல்ல. அதுல ஓர் எச்சரிக்கை இருந்தது. அருண் முன்னே போனான்.

“மக்கள் பேசுறாங்க. அவ்வளவுதான்” என்று அவரிடம் கூறினான்.

அதிகாரி அவனை மேலிருந்து கீழே பார்த்தார். 

“பேசுறது எப்போ இருந்து அனுமதி தேவைப்படுது?” என்று அவர் எள்ளலாகக் கேட்டார்.

சமன் உடனே, “பேசுறது தடை செய்யப்பட்டா, அப்போ சத்தம் மட்டுந்தான் உரிமை ஆகிடும்” என்றான்.

அந்த வார்த்தை அதிகாரி முகத்தைக் கடினமா ஆக்கிச்சு.

“இந்தக் கூட்டங்களை நிறுத்தணும்” என்று அவர் சொன்னார்.

மக்கள் ஒருவரையொருவர் பார்த்தாங்க.

அவர், “இது பாதுகாப்புக் காரணம்” என்று அழுத்தமாகக் கூறினார்.

பயம், கோபம், சந்தேகம் ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் எழுந்தன.

வள்ளி முன்னே வந்தாள்.

“பாதுகாப்பு யாருக்கு?” என்று அவள் கேட்டாள்.

அதிகாரி அவளை முறைத்தார்.

“நாங்க பேசினா யாருக்கு ஆபத்து?” என்று கேட்டாள்.

அதிகாரி பதில் சொல்லாமல் கூட்டத்தைச் சுற்றிக் கண்ணோட்டிவிட்டு, சற்று தாழ்ந்த குரலில், “உங்களுக்குத்தான்” என்றார்.

சின்னையா கூட்டத்தைப் பார்த்து மெதுவாக, “சாவுக்கு நாம பழகிட்டோம். பேசுறதுக்கு இன்னும் பழகல” என்றான்.

அந்த வார்த்தை மக்களை நிமிர வைத்தது.

அதிகாரி ஒரு முடிவை அறிவித்தார். 

“இன்னைக்கு மாலைக்குப் பிறகு யாரும் இங்கக் கூட்டம் போடுறது, கூடி நின்னுப் பேசுறது எல்லா இருக்கக் கூடாது” என்று கூறிவிட்டு, வாகனத்தில் ஏறினார். பொடி மீண்டும் பறந்தது.

அந்த வாகனம் போனதும் அமைதி. அது நிம்மதி இல்ல. அது புயலுக்கு முன்னாடி  வரும் அமைதி.  

அருண் மக்களிடம்,  “இப்போ நாம நிறுத்தினா, இந்த இடம் எப்போதும் பேசாத இடமா மாறிடும்” என்றான்.

சமன் அவனைப் பார்த்து, “அப்போ?” என்று கேட்டான்.

அருண் ஒரு மூச்சு இழுத்துவிட்டு, “அப்போ நாம விதிகளை உடைக்க மாட்டோம். ஆனா மனிதத்தையும் நிறுத்த மாட்டோம்” என்றான்.

அந்த மாலை கூட்டம் இல்லை. ஆனா மக்கள் தனித்தனியா ஓயா கரைக்கு வந்தாங்க. இரண்டு பேர். மூன்று பேர். யாரும் உரையாடலுக்கு மேடை அமைக்கல.

யாரும் முழங்கல. ஆனா பேசினாங்க. மெல்ல, உண்மையா பேசினாங்க.

சின்னையா அந்தக் காட்சியைப் பார்த்து மனம் நிறைந்தான்.

‘அமைதிக்கும் விலை இருக்கு. ஆனா பயத்தைவிட அது குறைவுதான்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அந்த நாளில் சட்டம் சொன்னது – “கூடாதுன்ணு.” ஆனா மனித மனசு மறுபடியும் சொன்னது – “வேணும்ணு.”  வெளி ஓயா இன்னும் ஓடிக்கிட்டே இருக்கு. அந்த ஓட்டத்துல, இப்போ அமைதி ஓர் ஆபத்தான கனவா மாற ஆரம்பிச்சது. 

அந்த இரவு வெளி ஓயா கரை முழுசா இருளா இருந்தது. விளக்குகள் இல்லை. கூட்டம் இல்லை. ஆனா சத்தம் இல்லாத ஓர் அசைவு நதிக்குள்ள ஓடிக்கிட்டே இருந்தது.

அருண் வீட்டுக்குள்ள அமைதியா உட்கார்ந்திருந்தான். சுவரில் தொங்கியிருந்த பழைய சீருடையைப் பார்த்தான். ஒரு காலத்தில் அது அவனுக்கு அடையாளம். இப்போ ஒரு சுமை. அவன் அதை எடுத்து, மடிச்சு, பெட்டிக்குள்ள வைத்தான். 

‘இது முடிவு இல்ல. இது ஒரு மாற்றம்’ என்று தனக்குள் சொன்னான்.

அதே நேரம் சமன் கிராமத்துக்கு வெளியே நின்றுகிட்டிருந்தான். அவன் கண்கள் காட்டுப்பக்கம். அவனுக்குத் தெரியும் கவனிப்பு இன்னும் இருக்குணு. ஆனா இப்போ அவன் பயப்படல. ‘பார்க்குறவன் என்ன நினைக்குறான் என்பதைவிடு, நாம என்ன வாழுறோம்றதுதான் முக்கியம்’ என்று அவன் நினைச்சான்.

சின்னையா அந்த இரவு ஒரு முடிவெடுத்தான். அவன் கிராமத்து இளம் பையன்களைக் கூப்பிட்டான்.

“இனிமே கூட்டமாகக் கூடக் கூடாதுன்ணு சொன்னாங்க. அதனால நாம வீடுவீடாப் போயி பேசுவோம்” என்றான்.

பையன்கள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தாங்க. 

“அபாயமா?” என்று ஒருவன் கேட்டான்.

சின்னையா சிரித்துவிட்டு, “அபாயமில்லாம இந்த வாழ்க்கை எப்போ இருந்துச்சு?” என்று கேட்டான்.

அடுத்த நாள் கிராமம் வேற மாதிரி இருந்தது. வீட்டுக்குள்ள குரல்.  முற்றத்தில் விவாதம். அரசியல் இல்ல. கொடி இல்ல. வாழ்க்கை. வலி. கனவு.

ஒரு வீட்டில் ஒரு அம்மா சொன்னாள் – “என் பையன் இன்னும் ராத்திரி தூங்கல. சத்தம் கேட்டா நடுங்குறான்.”

அருண் அந்தப் பையனின் அருகில் உட்கார்ந்து, “நானும் அப்படித்தான்” என்றான்.

அந்தப் பையன் அருணின் கண்களையே பார்த்தான்.

அவனிடம் அருண், “ஆனா பயம் இருக்குன்ணு ஒத்துக்கிட்ட நாளிலிருந்து அது சின்னதா ஆக ஆரம்பிச்சது” என்றான்.

மற்றொரு வீட்டில் ஒரு முதியவர், “நான் மூன்று ஆட்சியைப் பார்த்துட்டேன். ஒவ்வொண்ணும் நமக்கு ஒரே வாக்குறுதியத்தான் தந்தது” என்றார்.

பின்னர் அவர் புன்னகைத்துவிட்டு, “இன்னைக்கு எந்த வாக்குறுதியும் இல்லாம மனுசன் மனுசனோட பேசுறான். அதுதான் புதுசு” என்றார்.

இந்த ‘வீடு-வீடு பேச்சு’ விரைவாகப் பரவிச்சு. யாரும் அறிவிப்பு போடல. யாரும் அழைக்கல. ஆனா செய்தி போனது. 

மூன்றாவது நாள் மறுபடியும் ஒரு வாகனம் வந்தது. இந்த முறை அதிகாரி இறங்கல. தூரத்துல நின்ணு பார்த்தார். வீடுகளுக்குள்ள எரியும் விளக்குகள். சிரிப்பு கேட்குது. அவன் குழம்பினான். ‘இது கூட்டமா, இல்லையா?’ என்று தனக்குள் கேட்டுக்கொண்டார்.

அந்த மாலை வெளி ஓயா கரை மீண்டும் அமைதியா இருந்தது. ஆனா நீருக்குள்ள

கற்கள் மட்டும் இல்ல. வார்த்தைகள். நினைவுகள். சின்ன சின்ன நம்பிக்கைகள். அருண், சமன், சின்னையா மூவரும் நதிக்கரையில் நின்னாங்க. யாரும் பேசல.  சின்னையாதான் முடிவா சொன்னான் – “சத்தம் அடக்கப்படலாம். ஆனா நதிக்குள்ள மறைஞ்ச சத்தம் எப்போதும் ஓடிக்கிட்டேதான் இருக்கும்.”

அந்த நாளில் வெளி ஓயா பேசல. ஆனா அதைக் கேட்கத் தெரிந்தவர்களுக்கு அது தெளிவாகச் சொன்னது – “மனிதம் என்பது தடுக்க முடியாத ஓட்டம்.”

வெளி ஓயா அந்த நாளில் வழக்கத்தைவிட அமைதியா ஓடியது. ஆனா அந்த அமைதி நிம்மதியால வந்ததா அல்ல கவனிப்பால வந்ததா என்று யாருக்கும் புரியல.

‘வீடு-வீடு பேச்சு’ நான்காவது நாளுக்குள் ஒரு வலையா மாறிச்சு. யாரும் தலைவன் இல்ல. யாரும் மேடை இல்ல. ஆனா ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு குரல். ஒரு கதவு திறந்தா பயம் குறைந்தது.

இளம் பெண் அருணிடம், “நான் இதுவரை எதையும் கேட்காம, கேட்டதையே நம்பி வந்தேன்” என்று சொன்னாள்.

அவள் ‘க்ளுக்’ எனச் சிரித்துவிட்டு, “இப்போ கேள்வி கேட்க பயமில்லை” என்றாள்.

அந்த வார்த்தை அருண் நெஞ்சுக்குள்ள ஒரு சின்ன வெற்றியா ‘க்ளுக்’ என ஒலிச்சது.

அதே நேரம் காட்டுப்பக்கம் வேற மாதிரி அசைவு. இரண்டு நிழல்கள். மூன்றாவது நிழல். பேச்சு இல்ல. சைகை மட்டும். அங்கேயும் ஒரு கூட்டம் உருவாகுது. ஆனா அது வார்த்தையால இல்ல.

சமன் அந்த அசைவைப் பார்த்தான். அவன் உடம்புக்குள்ள பழைய பழக்கம் துடிச்சது. 

‘எச்சரிக்கையா இருக்கணும்’ என்று நினைத்தான். உடனே அவனுடைய ஆழ்மனசு, “பழைய வழி இப்போ வேலை செய்யாது” என்றது.

அவன் சின்னையாவைச் சந்திச்சான்.

“கவனிப்பு இருக்கு” என்றான்.

சின்னையா, “அப்படியா?” என்று கேட்டான். 

“பேசுறதுக்கு எதிரியா யாரோ தயாரா இருக்காங்க” என்றான்.

சின்னையா, “எல்லை எங்கன்ணு தெரியுமா?” என்று கேட்டான்.

சமன் ‘இல்லை’ என்பதுபோலத் தலையை ஆட்டி, “கண்ணுக்குத் தெரியல” என்றான்.

அந்த மாலை ஒரு வீட்டு முற்றத்தில் பெரிய விவாதம்.

ஒருத்தன் கத்திப் பேசினான் – “நாம அதிகமா பேசுறோம். இது ஆபத்து.”

மற்றொருத்தன் சொன்னான் – “அதனாலதான் பேசணும்.”

இரு தரப்பும் சரிதான். அந்த உண்மை விவாதத்தை நிறுத்திச்சு.

அந்த இரவு ஒரு வீடு மட்டும் விளக்கு ஏற்றல. அது அந்த நாளைக்குப் பேசாத வீடு. 

யாரும் கேள்வி கேட்கல. யாரும் குற்றம் சுமத்தல. 

“பயம்கூட மனித உணர்ச்சிதான்” என்றாள் வள்ளி.

அடுத்த நாள் காலை அந்த வீட்டுக் கதவு திறந்தது. உள்ளிருந்து அந்த வீட்டுத் தலைவர் வெளியே வந்து, பிறரிடம், “நேத்து நான் பயந்தேன்” என்றார்.

மற்றவர்கள் அவரை உற்றுப் பார்த்தனர்.

“இன்னைக்கு அதைச் சொல்லத் துணிவு வந்திருக்கு” என்றார்.

அந்தத் துணிவு மற்றவர்களையும் நிமிர வைத்தது.

காட்ப்பக்கம் இருந்த நிழல்கள் இதைக் கவனிச்சுக்கிட்டே இருந்தது.

“இவங்க விதி உடைக்கல” என்று ஒரு குரல் சொன்னது.

“ஆனா எல்லையை நகர்த்துறாங்க” என்றது மற்றொரு குரல்.

பிறிதொரு குரல், “அதுதான் ஆபத்து” என்றது.

அந்த மாலை வெளி ஓயா கரையில் மூன்று பேர் மீண்டும் நின்னாங்க. அருண். சமன். சின்னையா. யாரும் சிரிக்கல. யாரும் பயப்படல. சின்னையா சொன்னான் – 

“எல்லை கண்ணுக்குத் தெரியாதபோது மனசுதான் வரைபடம்.”

அந்த நாளில் யாரும் கைது ஆகல. யாரும் காயம் அடையல. ஆனா ஒரு விஷயம் தெளிவானது. வெளி ஓயா இன்னும் ஓடிக்கிட்டே இருக்கு. அந்த ஓட்டத்துல, இப்போ மக்கள் கண்ணுக்குத் தெரியாத எல்லைகளை மெல்ல மெல்ல நகர்த்த ஆரம்பிச்சாங்க.

வெளி ஓயா அந்த வாரம் மழையில்லாமலே நிறைய தண்ணீர் எடுத்துக்கிட்ட மாதிரி இருந்தது. மேலிருந்து வந்ததா? இல்ல உள்ளுக்குள்ள ஊறினதா? யாருக்கும் சரியாத் தெரியல.

‘வீடு-வீடு பேச்சு’ இப்போ ஒரு பழக்கமா மாறிக்கிட்டிருந்தது. மாலைனா விளக்கு எரியும். கதவு திறக்கும். குரல் எழும். ஆனா பழக்கமா மாறும் விஷயங்கள்தான் அதிகமா பயமுறுத்தும்.

அந்த நாளில்தான் முதல்முறையா ஓர் இளைஞன் காணாம போனான். பெயர் – கதிர். வயசு – இருபத்து இரண்டு. அவன் நேத்து ஒரு வீட்டில தெளிவாப் பேசினவன். ‘நமக்கு பயம் இருக்கக் கூடாது’ என்று சொன்னவன். இன்னைக்கு அவன் இல்லை.

கிராமம் அசைந்தது. 

“இது தற்செயலா?”, “எச்சரிக்கையா?” – ஆனால் யாரும் இதைச் சத்தமாக யாரிடமும் கேட்கவில்லை. அந்த மௌனம் மீண்டும் பழைய காலத்தை நினைவூட்டிச்சு.

அருண் முதல்முறையா கோபப்பட்டான். 

“இப்போ பேசாம இருந்தா, நாம எல்லாம் ஒத்துக்கிட்டதா ஆகும்” என்றான்.

சமன் அவன் தோளைப் பிடிச்சு, “கோபம் வேணாம்” என்றான்.

அருண் திமிறினான்.

“தெளிவு வேணும்” என்றான் சமன்.

சின்னையா ஒரு வேற வழி சொன்னான்.

“நாம தேடப் போறது ஓர் ஆள் மட்டும் இல்ல. நாம தேடப்போறது நம்ம எல்லையை” என்றான். அவன் குரல் நிதானமா இருந்தது.

அந்த இரவு யாரும் கூட்டமா கூடல. ஆனா ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஓர் ஆள் வெளியே வந்தான். ஒவ்வொருத்தரும் ஒரு விளக்கு எடுத்துக்கிட்டாங்க. பேச்சு இல்ல. முழக்கம் இல்ல. தேடல்.

வெளி ஓயா கரை, காடு, பாதைகள். எங்கும் விளக்குகள் நகர்ந்தன. அது ஊர்வலம் இல்ல. அது ஒரு கேள்வி. தேடலுக்கான அடிப்படைக் கேள்வி 

“எங்க இருக்குற?”

அந்த நேரம் தூரத்துல ஒரு வாகன சத்தம். யாரும் ஓடல. யாரும் மறையல. விளக்குகள் கீழே வைக்கப்படல. அந்த நிதானம் சத்தத்தைவிட பெரிசா இருந்தது.

ஒரு மணி நேரம் கழிச்சு கதிர் கிடைத்தான். காயம் இல்லை. பயம்தான் அதிகம். அவன் பேச முடியாம நின்னான்.

“யாரும் அடிக்கல” என்று அவன் மெதுவா சொன்னான்.

“ஆனா பேசாதுன்ணு சொன்னாங்க” என்றான்.

அந்த வார்த்தை கிராமத்தை உறைய வைத்தது. 

அருண் அவனை அணைத்துக்கொண்டு, “நீ பேசலன்னா, நாம பேசுவோம்” என்றான்.

அந்த இரவு யாரும் உறங்கல. பயம் இருந்தது. ஆனா அதைவிட ஒரு கோபம். அந்த கோபம் அழிக்குறதுக்கானது இல்ல. அது நிற்க மறுக்குறதுக்கானது.

சின்னையா அந்த இரவு ஒரு முடிவைச் சொன்னான் – “நாம நாளைக்கு ஒரே இடத்துல ஒரே நேரத்துல ஒளியோட நிக்கணும்.”

அந்த நாளில் யாரும் சாகல. யாரும் சுடப்படல. ஆனா ஒரு விஷயம் தெளிவானது. 

5

வெளி ஓயா இன்னும் ஓடிக்கிட்டே இருக்கு. அந்த ஓட்டத்துல, இப்போ மாற்றம் பயமுறுத்த ஆரம்பிச்சது. ஆனா பின்னோக்கித் திரும்புற வழி இல்ல. வெளி ஓயா மௌனத்துல ஓடிக்கிட்டே இருந்தது. ஆனா அந்த மௌனம் முழுசா அமைதி இல்லாம ஓர் எதிர்பார்ப்பைச் சொல்லிக் கொண்டிருந்தது.

அந்தக் காலை அருண் வீடு முன்னே நின்றான். கண்கள் வானத்தை நோக்கின.  

“என்ன நடக்கப்போகுதுன்ணு நான் இன்னும் தெரியல” என்று தனக்குள் பேசிக் கொண்டான்.

‘ஆனா நம்பிக்கை இருக்கணும்’ என்று நினைத்துக் கொண்டான்.

சமன் அவனைப் புரிந்துகொண்டு, “நம்பிக்கை இல்லாம நாம் வாழவே முடியாது” என்று மெதுவா சொன்னான்.

சின்னையா வீட்டுக்கு உள்ளே சென்றான். ஒரு பையன் வெளியே வந்தான். 

“நாளைக்கு என்ன செய்யணும்?” என்று அவன் கேட்டான்.

சின்னையா மெதுவா சொன்னான் – “நாளை இல்லாம இன்றுதான் சொல்லணும்.

நாம் செய்யப் போகுறதெல்லாம் உண்மை.”

அந்த நாள் கிராமம் முழுக்கவும் ஒரே வண்ணத்தில் இருந்தது. மனசுகள் கலந்தது.

மீண்டும் தோளோட தோளா மக்கள் ஒன்றாக இருந்தது. 

அருண் குரல் உயர்த்தி, “நாம் பேசுவோம். பேச்சுதான் ஒரே ஆயுதம்” என்றான்.

காடுப்பக்கம் இருந்து மெல்ல ஓடியபடியே ஒரு குழு வந்தது. முகமூடி. ஆனா கண்ணில் பயம். அவர்கள் அருணையும் சமனையும் பார்த்துச் சுற்றினாங்க.

“இது போரா?” என அவர்கள் கேட்டார்கள்.

அருண் சிரித்தபடியே, “போர் இல்ல. உண்மை பேசுற இடம்” என்றான்.

மாலை கிராமம் மீண்டும் கூடுதல் அமைதி. ஆனா சின்ன சின்ன சத்தங்கள் அந்த அமைதியை உடைக்க ஆரம்பிச்சு. குழந்தைகளின் சிரிப்பு. வயசானவர்களின் பேசு.

இவை எல்லாம் ஒரு புதிய ஒத்துழைப்பின் தொடக்கம். 

அருண், சமன், சின்னையா மூவரும் ஒரே கடலில் நின்ற மாதிரி ஒரே இடத்தில் நின்றனர்.

அருண் சொன்னான் – “நாம் ஒரு நாளில் பல நாளை உருவாக்குறோம். ஒரு வார்த்தை பல உயிர்களைக் காப்பாற்றும்.”

அந்த இரவு கிராம மக்கள் மனதில் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தனர். பயமும் இருந்தது. ஆனா ஒரு புதிய நம்பிக்கை அந்த பயத்தைத் தாங்கி நிற்க ஆரம்பிச்சது. 

சின்னையா கூறினான் – “மனிதம் மாற்றத்தைச் சந்திக்க தயாரா இருக்கணும். அதேதான் உண்மை சக்தி.”

அடுத்த நாள் காலை வெளி ஓயா கரை சூரியன் ஒளியில் விளங்கினது. நதியின் ஓசை அறிவோட சேர்ந்து ஒரு புதிய இசை போல ஒலித்தது. 

அருண், சமன், சின்னையா அந்த ஒலிக்குள் நின்றனர். 

அருண் மெதுவா சொன்னான் – “இது நம் மாற்றத்தின் ஆரம்பம். போருக்கு இடமில்லை. ஆனா மனிதத்தின் மனசுக்கு இல்லாத இடம் எங்கும் இல்லை.”

அந்த நாளில் வெளி ஓயா மனித மனசின் குரலைக் கேட்டது. நிழல்கள், பயம், எதிர்பார்ப்புகள் எல்லாம் ஒரே நேரத்தில் ஓடினாலும் மனிதன் நம்பிக்கையோடு முன்னேற முடியும்.

வெளி ஓயா கரை இந்த வாரம் முழுதும் அமைதியாக இருந்தது. ஆனா அந்த அமைதி முழுசா ஓய்வா இல்ல. அது ஒரு கவனிப்புக் குறிப்பு மாதிரி. மண்ணும், காடும், நதி என ஒவ்வொன்றும் பேசியது.

அருண், சமன், சின்னையா கிராமத்தின் நடுப்பகுதியில் நின்றனர். 

அருண் மனசுக்குள்,  ‘நாம் பேசிய வார்த்தைகள் நமது பாதுகாப்புதான். அவை உயிருக்குக் கம்பம் போல’ எனச் சொல்லிக் கொண்டான்.

சமன் தலையையாட்டி, “ஆனா அது மட்டும் போதாதே! அவற்றை நாம உறுதி செய்யணும்” என்றான்.

சின்னையா வானத்தைப் பார்த்து, “உறுதி சொன்னால் மனிதன் முன்னேறுவான்” என்றான்.

கிராமம் முழுவதும் மெதுவா மக்கள் வெளியே வந்தனர். ஒரே நேரத்தில் அனைவரும் பேச தொடங்கினர். பேச்சு – ஒற்றுமையின் அடையாளம். கோபமும், பயமும், சந்தேகமும் மெதுவாக அழிக்கப்பட ஆரம்பித்தது. அந்த நேரம் சின்னையா ஒரு முடிவை எடுத்தான் – “இப்போ நாம சத்தம் இல்லாம பேசினால், நாளைக்கு இதுதான் பழக்கமா மாறும்.”

மாலை நிழல் நதிக்கரையில் விழுந்தது. மனிதர்கள் கூடுதல் கவனத்துடன் நின்றனர். ஒரு குரல் மேலே இருந்து கேட்டது – “பயந்தால் என்ன, பேசினால் என்ன?”

அருண் பதில் சொன்னான் – “நாம் பேசாம இருந்தால், பயம் மட்டும் பெரிதாகும். நாம் பேசினால், நம்பிக்கை வளரும்.”

அந்த இரவு கிராமத்தில் புதிய சபை ஆரம்பித்தது. ஒரே விதி – ஒவ்வொருவர் உண்மையோடு பேச வேண்டும். அதிகாரிகள்கூட தொலைவில் இருந்து கவனித்தனர். ஆனா அவர்கள் குத்தமாடல. 

சின்னையா மெதுவா கூறினான் – “நாம தனியாக இல்ல, நாம ஒருங்கிணைந்தோம். மனிதன் குரல் – அதுவே நம் ஆயுதம்.”

அடுத்த நாள் காலை வெளி ஓயா கரை மாற்றத்தை உணர்ந்தது. நதியின் ஓசையும் மண்ணின் வாசனையும் இணைந்து நெளிந்தன. 

அருண், சமன், சின்னையா மக்களை நோக்கி நின்றனர். 

அருண், “நாம் ஒரு பயமில்லாத வார்த்தையை ஒவ்வொருவருக்கும் அளித்தோம்” என்றான்.

சமன், “நம்பிக்கை – அது மனதை மாற்றும்” என்றான்.

மாலையில் குழந்தை வெளிப்புறம் ஓடியது. கண்ணில் பயம் இல்ல. சிரிப்பு மட்டுமே. அந்தக் காட்சியைப் பார்த்து அருண் தனக்குள்ள, “இது நம்பிக்கையின் வெற்றி” என நினைத்தான்.

அந்த இரவு கிராமம் முழுவதும் ஒற்றுமையின் வாசல் திறந்தது. குழந்தைகளும், வயசானவர்களும், பெண்களும் ஒவ்வொருவரும் பேசினர்.

அருண் மனத்துக்குள், ‘நாம் பயமில்லாம பேசினால், எந்த எதிரியாலும் நம்மைத் தடுக்க முடியாது’ என்று நினைத்துக்கொண்டான்.

சமன், “வெளி ஓயா ஓடிக் கொண்டே இருக்கிறது. ஆனா இப்போ, அது மனித மனசின் குரலைக் கேட்கிறது” என்றான்.

வெளி ஓயா இன்னும் ஓடிக்கிட்டே இருக்கு. இப்போ அதன் ஓட்டத்துல மனிதக் குரல் அதிக சக்தியாக வெளிச்சம் பெற ஆரம்பிச்சாச்சு.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *