தேவகியின் மாப்பிள்ளை 

 “தேவகி இங்க வாம்மா “

“ ம்.. சொல்லுங்கப்பா”

“நான் நேத்திக்கே இதை உன்கிட்ட சொல்லணும்னு பார்த்தேன். சொன்னா நீ ரொம்ப மனசு சங்கடப்படுவேன்ணு   சொல்லவில்லை.”

“சரி என்ன விஷயம் சொல்லுங்க?”

“நம்ம மாப்பிள்ளைய பற்றி கேள்விப்பட்டேன்.”

“என்ன  கேள்விப்பட்டீங்க ?”

“20 நாளைக்கு முன்னாடி மருதாநல்லூரில் இருந்து சீனிவாசன் எங்கிட்ட ஒரு விஷயத்தை சொன்னாரு”

“என்ன சொன்னாரு?”

“நம்ம மாப்பிள்ளைய அவரு இஞ்சிகுடி சாராய கடையில பார்த்ததா சொன்னாரு”

“அவரு அங்க  தெரிஞ்சவங்க யாரையாவது பார்க்க போயிருந்திருப்பாரு. அதுக்கு என்ன?”

“அப்புறம் நம்ம ஊரு ராசாத்தி புருஷன் ரெண்டு வாரத்துக்கு முன்னாடி மாப்பிள்ளைய மேட்டுப்பட்டி சாராயக்கடையில பார்த்திருக்காரு.”

“சரிப்பா இந்த கல்யாணத்தை நிறுத்துவதற்காக சில பேரு இட்டுகட்டி கூட பேசுவாங்க. அதெல்லாம் நீங்க காதுல வாங்கிக்காதீங்கப்பா”

“நீ சொல்றது சரிம்மா. ஆனா உன் சித்தப்பன், பத்து நாளைக்கு முன்னாடி மாப்பிள்ளைய நரிக்குடியில பார்த்திருக்காரு.” 

“சித்தப்பா யாரோ சொன்னத வச்சு கூட தான் பார்த்ததா சொல்லி இருப்பாரு” 

“அப்புறம் உன் மாமன் அஞ்சு நாளைக்கு முன்னாடி மாப்பிள்ளைய கந்தகுடியில்  பார்த்திருக்காரு”

“எங்க சாராயக்கடையிலயா?”

“ஆமாம்மா சாராயகடையில தான்!”

“எனக்கு ஒன்னும் புரியலப்பா. இதுல  சூழ்ச்சியா யாரோ ஏதோ பண்ற மாதிரி எனக்கு தோணுது ”

“நான் மாப்பிள்ளைய நேத்திக்கு தாளப்பட்டி சாராயக்கடையில ஒரு ஓரமா ஒதுங்கி நின்னு பார்த்துகிட்டு இருந்தேன். மாப்பிள்ளை தனியா உட்கார்ந்து போறவங்க வாரவங்களை எல்லாம்  பார்த்துகிட்டு இருந்தாரு. எல்லாரும் போன பிறகு கடைசியா குடிச்சிட்டு போகலாம்னு இருந்திருப்பாரோ என்னவோ!”

“என்னமோ தெரியலப்பா எனக்கு அவர பார்த்தா அப்படி தோணல”

“இல்லம்மா எனக்கு என்னமோ இது சரிப்பட்டு வராதுன்னுதான் தோணுது.  போயும் போயும் உங்களுக்கு ஒரு குடிகார மாப்பிள்ளதான் கிடைச்சானான்னு ஊரு உலகம் நம்மள தான் கேவலமா நினைக்கும். அதனால நான் நாளைக்கே மாப்பிள்ளை வீட்டுக்கு போய் சம்மந்தி கிட்ட இப்ப மாப்பிள்ளை ஓட நடவடிக்கைகள் சரியில்ல! ஒரு தினமும் சாராயக் கடையை கதின்னு கிடக்கிறாரு. அதனால நீங்க வேற பொண்ண பார்த்துக்குங்கன்னு சொல்லிட்டு வரலாம்னு இருக்கேன். நீ என்னமா சொல்ற?”

“ஏம்பா அவசரப்படுறீங்க. கொஞ்சம் பொறுமையா இருங்க. கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசத்துக்கு மேல இருக்கு. இன்னும் ஒரு வாரம் பார்ப்போம்”

“எனக்கு ஒன்னும் இல்லம்மா கட்டிக்க போறது நீ. நல்லா யோசனை பண்ணிக்க.”

“சரிப்பா இதை பத்தி எதுவும் கவலைப்படாம நல்லா போய் நிம்மதியா தூங்குங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்.”

000

“என்னடி சாந்தி நான் சொன்னபடி போய் விசாரிச்சு பாத்தியா?”

“ ம்.. நானும் நாலு நாளா ஒரு 20 பேத்துக்கு மேல விசாரிச்சு பாத்துட்டேன்டி. தேவகி நீ உன் மனச கல்லாக்கிக்க. இந்த கல்யாணம் நடக்காதுன்னு தான் எனக்கு தோணுது.”

“என்னடி சாந்தி சொல்ற?”

“ஆமாண்டி நானும் விசாரிச்ச வரைக்கும் உங்க மாப்பிள்ளை தினமும் ஒவ்வொரு ஊரா போய் சாராயக்கடைல  ஒக்காந்து இருக்காராம். இது உறுதி ஆயிடுச்சு.”

“சரிடி ஊரு உலகம்  சொல்றதெல்லாம் இருக்கட்டும் நீயும் அவர பத்தி தப்பா தான் நினைக்கிறாயா?”

“நீ என்னடி பைத்தியம் மாதிரி பேசுற. இந்த காலத்துல சாராயக் கடைக்கு போறதெல்லாம் சர்வ சாதாரணமான விஷயம். உன் மாப்பிள்ளை மட்டும் என்ன விதி விலக்கா.“

“இல்லடி அவர்  அப்படி எல்லாம் செய்ய மாட்டார். நான் நிச்சயமா சொல்ல முடியும்.”

“ஒருத்தன் சாராயக் கடைக்கு தினமும் போறான்னா அவன் வேற எதுக்கு போவான்? குடிக்கத்தான்  போவான். சரி உங்க அப்பா இப்ப என்ன சொல்றாரு?.”

“அவரு கல்யாணத்தை நிறுத்தணும்கிற முடிவுல தான் இருக்காரு. அதை போயி அவங்க கிட்ட எப்ப எப்படி  சொல்றதுங்கிறது தான்  இப்ப அவருக்கு  பிரச்சனையா இருக்கு.”

“தேவகி ஏன் நீ மாப்பிள்ளை கிட்ட நேரடியா பேச வேண்டியதுதானே? அப்படி பேசினா தானே ஒரு முடிவுக்கு வர முடியும். அவரைப் பற்றி  முழுசா தெரிஞ்சுக்க முடியும்.”

“அப்பா நிச்சயதார்த்ததுக்கு அப்புறம் மாப்பிள்ளை நேரடியா பாத்து பேசறதோட மட்டும் வச்சுக்கணும். கல்யாணம் வரைக்கும் வேற எந்த வகையிலையும் தொடர்பு வச்சுக்க கூடாது அப்படின்னு கண்டிப்பா சொல்லிட்டாரு அதனாலதான்..”

“சரிடி இப்பதான் பிரச்சனை முத்தி போச்சுல்ல. இப்பயாவது மாப்பிள்ளை கிட்ட அலைபேசியில  பேச வேண்டியதுதானே?”

“ரெண்டு நாளா அவர்கிட்ட பேச முயற்சி பண்ணிட்டு தான் இருக்கேன். ஆனா அவரு எடுத்து பேச மாட்டேங்குறாரு. இப்ப நான் என்ன பண்றதுன்னு தெரியல”

“சரிடி  தேவகி, நான் இன்னும் நல்லா விசாரிச்சு பார்க்கிறேன். ஏதாவது தகவல் கிடைச்சா உனக்கு சொல்றேண்டி. சரி நான் இப்ப கிளம்புறேன்”

“சரிடி சாந்தி”

0000

“தேவகி சீக்கிரம் புறப்படுமா ஆஸ்பத்திரிக்கு போகணும்.”

“என்னப்பா சொல்றீங்க?” 

“நம்ம மாப்பிள்ளைய யாரோ சாராயக்கடையில  உடைஞ்ச கண்ணாடி புட்டியினால கையில குத்திட்டாங்களாம். நாம உடனே போய் ஒரு தாட்டி பாத்துட்டு வந்துருவோம். சீக்கிரம் கிளம்புமா.”

“எந்த ஆஸ்பத்திரிப்பா?”

“அன்னமேரி ஆஸ்பத்திரி தான்”

“சரி வாங்க போலாம்”

இருவரும் புறப்பட்டு சென்றார்கள். 

ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து மாப்பிள்ளை இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சம்மந்தி வீட்டினர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அருகில் சென்று தேவகியின் அப்பாவும் தேவதையும்  அமர்ந்தனர். 

“என்ன சம்பந்தி மாப்பிள்ளைக்கு என்ன ஆச்சு?”

“செந்தமிழ் சாராயக்கடைல ஒரு ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்திருக்கான். அப்ப ரெண்டு பேரு குடிச்சிட்டு சண்டை போட்டுக்கிட்டு இருந்திருக்காங்க. இவன் சும்மா இருக்க முடியாம அவங்கள போய் விலக்க  முயற்சி பண்ணி இருக்கான். அதுல ஒருத்தன் உடைஞ்ச கண்ணாடி புட்டியினால இன்னொருத்தனை குத்தி இருக்கான். அது தவறி இவன் மேல  கையில நல்லா வேகமா குத்திடுச்சு.  அதான் பிரச்சனை.”

“காயம் சீக்கிரம் ஆறிடும் இல்ல.”

“எப்படியும் ஒரு வாரம் ஆகும்”

“மாப்பிள்ளைய இப்ப  பாக்கலாமா?”

“இப்ப அவன் தூங்கிட்டு இருக்கான். இன்னும் அரை மணி நேரம் கழிச்சு பாக்கலாம்.” இப்படி சொல்லிவிட்டு செந்தமிழின் தந்தை தேவகியின் தந்தையை கட்டித் தழுவி கொண்டார். 

“சம்மந்தி உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. ரொம்ப சந்தோசமாவும் இருக்கு. ஊர் உலகமே என் பையன பார்த்து அப்படி இப்படின்னு சொல்றப்ப நீங்க இதுவரைக்கும் அது பத்தி ஒரு வார்த்தை கூட என்கிட்ட கேட்கல. உங்க இடத்துல வேற யாரா இருந்தாலும் இந்நேரம் கல்யாணத்தையே நிறுத்தி இருப்பாங்க. ஆனா நீங்க அப்படி செய்யல.  உங்களை எப்படி பாராட்டுவதுன்னு  தெரியவில்லை.”

தேவகியின் தந்தை, தனது சம்மந்தியிடம் கேட்க நினைத்ததை கேட்க முடியாமல் தவித்தபடி நின்றார். 

வைதேகி மெல்ல எழுந்து செந்தமிழ் இருந்த அறையை நோக்கிச் சென்றாள்.  வாசலில் நின்ற செவிலி பெண் அவளை  எதுவும் சொல்லவில்லை. செந்தமிழ் நன்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவனது தோள்களுக்கு கீழே பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. வைதேகி சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.  அருகில் சென்று கட்டிலில் அமர்ந்தாள். அவள்  கழுத்தைச் சாய்த்து படுக்கையில் இருந்த செந்தமிழின் நெற்றிலும் கன்னத்திலும் முத்தங்களை பதித்தாள். அங்கே கட்டிலில்,

”தமிழ்நாட்டு மதுபான கடைகளும் மது பிரியர்களின் செயல்பாடுகளும் _ ஓர்  ஆய்வு” என்ற எம். பில் படிப்பிற்கான ஆய்வறிக்கை புத்தகம் அவளைப் பார்த்து புன்னகை சிந்தியபடி அவளின் வருங்கால துணைவனின் அருகில் படுத்து கிடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *