தற்புனைவு

அட்டகாசமான வாணவேடிக்கைகள், அகல் விளக்குகள், புத்தாடை அணிந்த குழந்தைகள், சுவாசத்தை முட்டும் காற்று. ஆண்டின் புத்துயிர் காலம் வந்தும் நான் மட்டும்தான் துயருற்று இருக்கிறேனா அல்லது எழுதி எழுதி அழகு பார்த்து பின் உலப்பில் வீசிய வார்த்தைகள் தங்கள் வாசிப்பினால் வாசகனின் சிந்தையில் வாணவேடிக்கைகளைக் காட்ட முடியவில்லையே என்று அவைகளும் ஏங்கித் துயருற்று இருக்கின்றனவா? தெரியவில்லை. விட்டு விட்டு எழுதும் என் பேனாவைப்போல தூரத்து வானத்தில் வெடிக்கும் பட்டாசு வெளிச்சமும் இருளும் என் முகத்தின் எலும்பையும் பள்ளங்களையும் மாறி மாறி காட்டின. முடியட்டும், இன்றுடன் இது முடியட்டும். வெகு காலம் இந்தப்பாரத்தை சுமந்துவிட்டேன்.

“விடியலுக்கு முன் நீ என்னை மூன்று முறை துறப்பாய்”

பயமில்லை, ஏனெனில் துணிந்துவிட்டேன். நூறு பணம் தேவை இப்போது, நம்பிக்கை அல்ல. அடிவயிற்றில் அலைகளைப் போல சீரில்லாமல் தோன்றி மறையும் வலிக்கு புனைவு தேவனின் சாபம் எம்மாத்திரம்? இரண்டு நாட்களில் கேளிக்கைகள் முடிந்துவிடும். புதுக் கணக்குகள் தொடங்கப்படும். அதில் ‘செலவு’ என்ற பிரிவில் என் பெயருக்கு எதிரில் பத்து ரூபாயாவது எழுதப்பட வேண்டாமா? கருணை உடையவன் புனைவு தேவன். அவனைத் துறந்தால் எனக்குத்தான் பயன். வரலாறு அவனைப் போற்றும், அவன் பெயரில் கொல்வார்கள் , கொல்லப்படுவார்கள். போராளிகளை வரலாறு நினைவு கொள்ளாது. அரசர்களையும் ஸ்தாபனர்களையும் நினைவு கொள்ளும். அற்பனை நினைவு கொள்ளல் வேண்டாம்.

பேருந்து நிலையத்தில் நான் ஒருவனே பயணி. இந்நேரத்தில் பேருந்து இருக்குமா என்பதே சந்தேகம். என் நிலையைப் புரிந்தோ அறிந்தோ பேருந்து ஒன்று தூரத்தில் வருவது தெரிந்தது. விடம் வாங்க சேமித்திருந்த பணத்தில் சீட்டு வாங்கினேன்.  என் இருத்தலின் மீதம் இருப்பது இருக்கையை தேடியது. சாய்ந்திருந்த கம்பியிலிருந்து நழுவி விழாமல் கூரை கம்பிகளைப் பிடித்துக்கொண்டது வலது கை. கண் விழித்து வரையற்ற  இருளை நோக்கியது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னும் கரும் இருளின் கனிவான பார்வைக்கு  என்னை அர்ப்பணித்து கொண்டிருக்கிறேன். ஆனால் இம்முறை அதன் பார்வை கனிவெனக் கூறமுடியவில்லை.  மெதுவாக அது வலது கால் கட்டை விரலை வேவு பார்ப்பதை உணர்ந்து விழித்தேன். எதிரில் ரயில் நிலையம். சாலை கடக்கையில் அடிபடாமல் தப்பித்தது எப்படியென எனக்கே புரியவில்லை. நடைமேடையின் முடிவில் எல்லையில்லா பள்ளம் இருப்பதைப் போல ஒரு பிரமை. அது நிஜமாகவும் இருக்கலாம். நடைமேடையின் முடிவு வரைக்கூட போகவேண்டியதில்லை பக்கம் இருந்த தடங்கல் என்னை,  ‘வா வெகுதூரம் செல்லலாம். மறந்துவிடு, ஓடிவிடலாம்…பார்! இரு கோடுகள் ஊழியில்தான் இணையும்…வா’. 

ஊதா பனியில் நானே நடந்தேனா அல்லது நடவிக்கப்பட்டேனா நினைவில்லை. தோள்பட்டையில் கனத்த தள்ளல் மறுகணம் கூச்சல், குழப்பம். நடைமேடையின்  கழிவறைக்கும் கதவிற்கும் இடையில் எறியப்பட்டதும், நெற்றியை பிளந்து குருதி கசிந்து கண்ணுக்குள் கரைந்ததும் ஊதா கரை அப்படியே இருந்தது. உணர்வின்மை சிந்தையை கவ்வியது, புலன்கள் செயலிழந்தன, வேர்கள் என் கால்களிலிருந்து வளர்ந்தன, என்னால் அவற்றை உணரமுடியவில்லை. இருதயம் வெடிக்க தொடங்கியது. கட்டை விரலுக்குள் குளிர்ந்த தலையுடன் நீண்ட வாளுடைய மீனைப் போன்ற உயிரி மீண்டும் ஊடுருவத் தொடங்கியது. மெதுவாக நரம்புகளின் மூலம் மேலேற தொடங்கியது. கால்கள், முட்டி, இடுப்பு ஒன்றொன்றாய் பனியில் உறைந்தது. கடைசியில் இருதயம் நின்று சிந்தைக்குள் புகுவது தெரிந்தது. திடீரென ஒருவரை ஒருவர் சந்தித்த்தோம். ஒரு சிறு தள்ளல் பின்னர் அதிவேக வெளியீடு, காற்றில் மிதந்தேன். மேலிருந்து என்னையே பார்த்தேன். என் கூடு, இதுவரையில் நான் வசித்த ஓடு இரண்டாகப் பிளவுபட்டு யாருமில்லா நடைபாதையின் மேல், ஒற்றை விளக்கின் கீழ், பெயரில்லா பலகைக்குப் பக்கத்தில். 

நானும் என் கூடும் பயணித்த பாதையைப் பின்னோக்கி பார்த்தேன். கூடப் பிறந்தவர்கள் நாங்கள். பால்யம் வரை எங்கள் விருப்புகள் ஒத்துப்போயின. எப்போது உரசல்கள் ஆரம்பித்ததோ  தெரியவில்லை. அது வேறு பக்கம் திரும்பியது, இன்பத்தை நாடியது. அதனிடம் சொல்லிப்பார்த்தேன், கேட்கவில்லை. கடைசியில் சிதைந்து போனது. திடமான திரவியம் நிலப் பரப்பின்மேல் பரவுவதைப் போல உணர்ந்தேன். சில நிமிடங்களில் திடத்தன்மை போய் முற்றிலும் எடையற்ற ஆற்றல் மட்டுமே என் ரூபம் ஆனது. என் இனமறியா நறுமணம் அல்லது நாற்றம் காற்றில் கரைவதை உணர்ந்தேன். மிதக்க மிதக்க இருள் என் ஸ்நேகிதனானது. இருளில் பல திணைகள். அச்சம் விளைக்கும் திணையல்ல இது. பாதை தெரிந்தால் இருளும் வழிகாட்டிதான். நட்சத்திரங்களைப் பார்த்தேன். விண்மீன்கள் என்னைத் தாலாட்டின. பிறகு கரைய ஆரம்பித்தேன். நாலாப் பக்கமும் பரவினேன். மர்மத்தின் வேரில் ஒருவள் குளத்தின் நீர் பரப்பில் முகம் பார்த்துக்கொண்டிருந்தாள். நீரில் தெரிந்த அழகிய முகம் நிஜத்தில் தெரியவில்லை. 

“என்னை ஏன் எழுதவில்லை? ” என்றாள்

“எழுதும் லட்சியத்துடன்தான் புறப்பட்டேன். எழுதி என்ன பயன் என்ற மனச்சிக்கலில் மறந்தேன்” என்றேன்.

“நீ எழுதவில்லை. அதனால்தான் நான் இங்கிருக்கிறேன்” என்றாள். எழுதப்படா பாத்திரங்களுக்கு நான் எப்படி பொறுப்பாவேன்? பாத்திரங்களின் கதைகளைப் பூமிக்குள் நினைவு விதைகளாய் யார் புதைத்து? கதைக் குருக்களுக்கு இறக்கைகள் முளைத்து வறண்ட நிலப்பரப்பில் கலக்க யார் சொன்னது? எழுத்து மாரியை எதிர்நோக்கி ஏன் காத்திருக்க வேண்டும்? தானே வேரூண்டு சுயசரிதை எழுதக் கூடாதா? ஆயிரம் கோடி விதைகள் புதைந்துள்ள நிலத்தில் ஒரு சிலரின் நினைவே விருட்சமாகிறது. நான் முடிந்தவரை என் எழுத்தால் நீரூற்றி நினைவாஞ்சலிகளை படைத்தேன்.மீதம் என் பொறுப்பல்ல. 

மெல்லிய நறுமண காற்றிலும் காகிதம் நித்தியமாய் பறப்பதில்லை,  அதில் எழுதியது காதலே என்றாலும். பருவத்தில் முளைத்த உணர்ச்சி துணுக்குகள் எத்தனையோ. அவை அனைத்தின் காரணங்களையுமா எழுத முடியும்?

“எனக்கு எழுதியிருக்கலாம்” இருளில் அவள் முகம் மட்டும் ஜொலித்தது. 

“எனக்கு எழுதியிருக்கலாம்” மீண்டும் சொன்னாள். 

அன்னாடம் காய்ச்சிக்கு துணை, மிதத்தாவரத்திற்கு நுங்கூரம், இரண்டும் சமம். இருவரும் அழிந்திருப்போம். ஜடைகளில் சொன்னேன் அதை எழுதிச்  சொல்லவேண்டுமா? எழுத நினைத்தாலும் எப்படி எழுதுவது? ஏன் இந்தப் பச்சாதாபம்?  

“நான் புனைவு எழுதுபவன். காதல் புனைவல்ல” என்றேன்.

அவள் கண்கள் விரிந்தன. “நான் எழுதினேன்…கண்களால் எழுதினேன். உனக்கு அது தெரியும்” என்றாள் 

“வார்த்தைகள் வர மறுத்தன. கேள்விகள் மட்டுமே வந்தன” என்றேன். அவள் நொடிப்பொழுதில் மறைவதற்குள் அவள் கண்களில் இருளைக்  கண்டேன். 

என் மீதம் மேலும் உயர்ந்தது. இருள் மெதுவாக விலகத் தொடங்கியது.  விளிம்பில் தோன்றிய வெளிச்சம் என்னை அத்திசைக்கு ஈர்த்தது. வெளிச்சம் பிரகாசமானது. சிந்தைக்குள் ஒளித்தது. தூய வெள்ளை வெளிச்சம்.

“என்னைத்தான் எழுத முயன்றாயோ?” என்றது குரல் 

“ஆம். உன்னைப் பார்க்க முடியாமல் தவித்தேன். எங்கு ஒளிந்திருந்தாய்?” என்றேன்

“பார்க்க முடியவில்லை என்பதால் தானோ என்னைப் புனைவாக்கினாய்?” என்றது குரல்.

அப்போது முழுக்கவும் கரைந்தேன். தீயில் எரியவில்லை, இளவேனில் தோழமை கொண்டு மகிழவில்லை, வேறு கூடும் தேடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *