மதுரையிலிருந்து இரவு எட்டு மணிக்கு மைசூர் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. திருமணத்திற்குப் பிறகு நான்காண்டுகள் நண்பர்களுடன் பிரயாணம் சாத்தியப்படவில்லை. அதற்கு முன் வருடம்தோறும் பொங்கலையொட்டி எங்காவது சென்றுவிடுவோம். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பிரயாணிக்கிறோம். மொத்தம் எங்களுக்கு நான்கு நாட்கள் இருக்கின்றன. இரண்டு நாட்கள் ஹொய்சாளர் காலச் சிற்பங்களைப் பார்த்துவருவதாகத் திட்டம். மீதி இரண்டுநாட்கள் முதுமலை மற்றும் ஊட்டி. என் கல்லூரிக் காலத்து நண்பர்கள் கண்ணன் மற்றும் அமர்நாத்துடன் பிரயாணிக்கிறேன். கண்ணன் சென்னையில் மெடிக்கல் ஷாப் வைத்திருக்கிறார். அமர்நாத் அரசலுவல். நானும் அமர்நாத்தும் மதுரையிலிருந்து கிளம்ப, கன்ணன் சென்னையிலிருந்து கிளம்பினான். இரயிலில் பிச்சைக்காரர்கள் பத்துநிமிடத்துக்கொருமுறை வந்தபடியே இருந்தனர். திருநங்கைகள் ஐந்தாறுமுறை வந்திருப்பார்கள். டாய்லெட் படுமோசம். சில டாய்லெட்டுகள் ஓவர்ஃப்ளோ ஆகி நாறடித்துக் கொண்டிருந்தது. கடுமையான குளிர்.
பெங்களூர் தாண்டி ஒரு ஸ்டேஷனில் இறங்கிப்பார்த்தேன். தோசையளவுக்கு இட்லி வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். வாங்கிச்சாப்பிட்டுப் பார்க்கலாம் என்று நினைத்தேன். சட்னியைப் பார்த்ததும் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். காலை ஆறுமணிக்கு ஒரு பெண் சொல்லாமல் கொள்ளாமல் எங்கள் இருக்கையில் வந்து அமர்ந்தாள். பெருமூச்சு விட்டுக்கொண்டோம். வடக்கே செல்லச்செல்ல இப்படித்தான். மூன்று மணிநேரத்துக்குப் பிறகு டிடியார் வந்தார். அந்தப் பெண் சாதாரண டிக்கெட் எடுத்து ரிசர்வேஷனில் ஏறியதால் நூறு ரூபாய் ஃபைன் என்று இரசீது போட்டுப் பணம் வாங்கிவிட்டுச் சென்றுவிட்டார். இப்படிச் செய்தால் அவர்கள் சந்தோஷமாக இதே தவறைத்தானே திரும்பச் செய்வார்கள்?
காலை பத்துமணிக்கு மைசூர் சென்றடைந்தோம். கண்ணன் ஆறுமணிக்கே சென்றுவிட்டதால் ஒரு லாட்ஜில் ரூம் ஏற்பாடு செய்திருந்தான். சாதாரணமான லாட்ஜ். படுமோசம் என்றுதான் சொல்லவேண்டும். சென்னையின் முக்கியமான பகுதிகளில் எப்படி இண்டு இடுக்குகளில் கூட அதை நிரப்பி ஏதாவது தொழில் நடத்துவார்களோ, அதைவிட மோசமாக இருந்தது அறை. வாடகை சற்று அதிகம்தான். அரைநாள் வாடகை எழுநூறு ரூபாய். குளித்துவிட்டு சோமநாதபுரம் கிளம்பினோம்.
சோமநாதபுரம் மைசூரிலிருந்து 35 கி.மீ. ஆட்டோ பிடித்தோம். அந்த வழியில் பஸ் போக்குவரத்து அதிகமில்லை. ஒவ்வொரு பஸ்ஸிலும் நல்ல கூட்டமிருக்கிறது. சிற்றிலும் விவசாய நிலங்கள்தான். அறுவடை முடிந்து ஆங்காங்கே வைக்கோல் போர் குவித்து வைக்கப்பட்டிருந்தன. புழுதி பறக்கும் பழுப்பு நிற மண். இங்கு சென்னகேசவர் ஆலயம் இருக்கிறது. (நுழைவுக்கட்டணம் ஐந்து ரூபாய். அயல்நாட்டவருக்கு ரூ. 100). முன்புறம் இடப்பக்கத்தில் அருங்காட்சியகம் இருக்கிறது. நாங்கள் போகையில் பூட்டிக்கிடந்தது. நீண்டு பரந்த புல்வெளி நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இக்கோவில் பதிமூன்றாம் நூற்றாண்டில் மூன்றாம் நரசிம்மரின் ஆட்சிக்காலத்தில் அவரது தளபதியான தண்டநாயக்கர் என்ற சோமர் என்பவரால் கட்டப்பட்டது. சோமநாதபுரம் என்ற ஊர்ப்பெயரும் இவரது பெயராலேயே வழங்கப்பட்டது. இந்தப் பகுதி முதலில் சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. ஹொய்சாள மன்னர் விஷ்ணுவர்த்தனால் கி.பி. 1117 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்டது. பின்னர் விஜயநகரப் பேரரசினாலும் அதன்பின் மைசூர் உடையார்களாளும் ஆளப்பட்டது. கிழக்கு நோக்கியிருக்கும் இந்த ஆலயம் மூன்று கருவறைகள் கொண்டது. இவ்வகைக்கு திரிகுடாச்சலம் என்று பெயர். கருவறைகள் மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு நோக்கி உள்ளன. மேற்கு நோக்கியிருக்கும் கருவறையில் கேசவர் மூலவராக வீற்றிருக்கிறார். தெற்கில் வேணுகோபால். வடக்கில் ஜனார்த்தனர்.
கேசவர் கோவிலுக்கு நாங்கள் செல்கையில் ஒருசில அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், ஒரு பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்த முப்பதுக்கும் குறைவான குழந்தைகளும் இருந்தனர். சப்தங்களை மீறி அமைதி ஆக்கிரமித்திருந்தது. சப்தங்களே மௌனத்தை உணர்த்துவது போல, மௌனத்தின் உச்சாடனம் போலிருந்தது.
அதிகபட்ச சிற்ப வேலைப்பாடு கொண்ட கோவில் இது. மிக நுணுக்கமாக அரைவிரல் அளவுக்கெல்லாம் சிற்பங்கள் உள்ளன. தெய்வங்களின் முகங்கள் வித்தியாசமாய் இருந்தன. அருள் கூர்ந்து, கருணை பொங்கும், மர்மப் புன்னகை புரியும் தமிழ்நாட்டுக் கடவுள் முகங்கள் இல்லை. இவை எங்கோ தூரத்தில் நிற்கின்றன. சிற்பங்கள் புடைப்பாய் இன்றி, இருப்பதில் செதுக்கிச் செதுக்கி, மிக நுண்ணிய துளைகள் இட்டு பற்பல வடிவங்களையும், அழகுபடுத்தியிருக்கிறார்கள். காதை அடைக்கும் அளவுக்கு கோயிலினுள் ங்கொய் என்று அமைதி அறைகிறது. பார்த்துப் பார்த்து திகட்டாத தூண்கள். அத்தனை பிரமாண்டமாய் நிற்கின்றன. ஒவ்வொன்றும் உருளையின் பல்வேறு வடிவங்களிலோ, சின்னச் சின்ன சிற்ப வேலைப்பாடுகளுடனோ காணப்படுகின்றன. இந்தச் சிற்பங்கள் மற்றும் தூண்கள் சோப் ஸ்டோன் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஒருவகை மாவுக்கற்களால உருவாக்கப்பட்டவை. இது புகழ் பெற்ற சிற்பியும் கட்டிடக்கலைஞருமான ருவாரி மலிதம்மா என்பவரால் கட்டப்பட்டது. கோவிலைச் சுற்றிலும் தூண்களால் தாங்கப்பட்ட ஐம்பத்திரண்டு சுற்று மண்டபங்களும் உள்ளன. கோவிலின் அடிப்புறத்தை நட்சத்திர வடிவிலான தளம் தாங்கி நிற்கிறது. மேலுள்ள விமானங்களும் அதே வடிவத்தில் உள்ளது.
கோவிலின் வெளிப்புறத்தில் கற்களிலேயே செதுக்கப்பட்டு காற்றும் ஒளியும் போதிய அளவுக்கு நுழையும் வண்னம் ஜன்னல் அமைப்பு உள்ளது. அதற்குக் கீழே கீழிருந்து யானைப்படை, குதிரைப்படை, யாழி, மக்களின் வாழ்வியல்-விழாக்கள் என்று வரிசையாய் காணப்படுகின்றன. இவற்றில் பல சிற்பங்கள் அரைவிரல் அளவே உள்ளன. இதற்கும் மேல் காண்டாமிருக உடலமைப்பில் உள்ள விலங்கு வரிசை. அதற்குமேல் அன்னப்பறவைகளின் வரிசை. ஜன்னலுக்கும் இந்தச் சிற்ப அடுக்குகளுக்கும் இடையில் முழங்கை உயரம் உள்ள வெவ்வேறு தெய்வங்கள். இது வைணவக் கோவிலாக இருந்தாலும் வெளிப்புறத்தில் சிவ பார்வதி சிற்பங்களும் உள்ளன. கூரைமேல் வெவ்வேறு வடிவங்களில் பல சிற்பங்கள் உள்ளன. கீழ்நோக்கிக் குவியும் தாமரை வடிவம், பின்னிக்கிடக்கும் சர்ப்பம், தெய்வங்கள் இப்படிப் பல.
வெளியே வரும்போது மதியம் 2.30. ஒரு ஷேர் ஆட்டோ பிடித்து அன்னூர் வந்தோம். பஸ் ஸ்டாண்டில் உள்ள ஒரு சாதாரண ஓட்டலில் சாப்பிட்டோம். கர்நாடகா பொன்னி அரிசியில் சாதம். திருப்தியாக இருந்தது. தாளித்த மோர் இரண்டு முறை கேட்டு வாங்கிக் குடித்தேன். சாப்பாடு நாற்பது ரூபாய் தான். அங்கிருந்து மைசூர். மைசூரிலிருந்து ஹசன் வந்தோம். அது நான்கு மணிநேரப் பயணம். எப்போதும் பஸ்ஸில் நல்ல கூட்டம் இருக்கிறது. ஹசனில் ரூம் வாடகை ரொம்பக் கம்மி. மூன்று பேர் தங்க பேமிலி ரூம் கொடுத்தார்கள் (இரண்டு தனிப் படுக்கைகள் ஒரு இரட்டைப் படுக்கை). வாடகை ரூ. 650 தான். கீழேயே ஓட்டல் இருந்தது. அங்கேயே சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுத் தூங்கினோம். நாளை ஹளபீடு மற்றும் பேளூர் செல்ல வேண்டும்.
Sit back, relax and enjoy the true spirit of class and finesse,
Let the World Wait!
(Black Dog ஸ்காட்சின் பின்புறம் உள்ள வாசகம்)
2
காலையில் எழும்போதே வலதுகண் வலித்தது. சூடு பிடித்ததனால் இருக்கும். ஏழுமணிக்கு காலைக்கடன் முடித்து வெளியே தேநீர் அருந்தக் கிளம்பினோம். இந்த லாட்ஜ் பஜாருக்கு மிக அருகே இருக்கிறது. பொங்கல் நாளை இங்கே மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாளாகும். இன்றிலிருந்து பகல் நேரம் கூடுதலாவது கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் இது தானிய அறுவடையோடு ஒன்றுவதால் அறுவடை திருவிழாவாகவும் சூரியனுக்கு வரவேற்பும் நன்றியும் தெரிவிக்கும் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது. சாலையோரங்களில் எல்லாம் விதவிதமான பூக்களைக் குவித்து வைத்திருந்தார்கள். கரும்புக்கட்டுகளும் நிறைய விற்பனைக்கு இருந்தன. தள்ளுவண்டிகளில் பொறி, பொறிகடலை, கற்கண்டு கலந்து குவியலாக நிறையக் காண முடிந்தது. கரும்புகள் நம்மூர்ப் பக்கம் போல கருஞ்சிவப்பில் இன்றி கொஞ்சம் பச்சையாய் ஆனால் நல்ல தடிமனோடு, நீள முளிகளோடு இருந்தன.
ரோட்டோரக் கடையில் தேநீர் அருந்தினோம். ஒரு தேநீர்க்கடையைக் கண்டுபிடிப்பது சிரமம்தான். இங்குபோல பாய்லர்கள் கிடையாது. கடைகளில் பிளாஸ்கில் போட்டு வைத்திருக்கிறார்கள். வடக்கே செல்லச் செல்ல டீக்கப்பின் அளவு குறைந்துகொண்டே வருகிறது. ஒடிசாவில் இரண்டு அவுன்சுகளே பிடிக்கும் மிகச்சிறிய கப். அந்தக் குளிருக்கு ஆளுக்கு இரண்டு மூன்று என்று வாங்கிக்குடித்தோம். சும்மா கால்போன போக்கில் நடந்து போனோம். நான் முன்பின் தெரியாத ஊரில், ஆளில்லாத வீதிகளில் நடக்க ஆசைப்படுவேன். கண்ணனுக்கும் அமர்நாத்துக்கும் மக்கள் கூடும் வீதிகளில் நடக்க விரும்புவார்கள். எனவே மெஜாரிட்டி காரணமாக பஜாரைச் சுற்றினோம்.
அறையைக் காலி செய்துவிட்டு ஒரு கார் வாடகைக்கு எடுத்தோம். ஹளபீடும், பேளூரும் பார்த்துவிட்டு ஹசன் வருவதாகத் திட்டம். ஹசனிலிருந்து ஹளபீடு 32 கி.மீ. முதலில் ஹளபீடுவில் உள்ள ஹொய்சாளேஷ்வரர் கோவிலுக்குச் சென்றோம். இங்கும் செல்லும் வழியெங்கும் விளைச்சல் நிலம்தான். இது ஒரு சிவன் கோவில். ஹொய்சாள மன்னர் விஷ்ணுவர்த்தன் காலகட்டத்தில், கி.பி 1120 முதல் 1150க்குள் கட்டி முடிக்கப்பட்டது. மன்னர் விஷ்ணுவர்த்தன் வைஷ்ணவராக இருந்தும் இரண்டு சிவன் கோவில்களைக் கட்டியிருப்பது ஆச்சரியம்தான். வரலாற்றாசிரியர்கள் இது அந்நகரில் வாழ்ந்த பெருந்தன சைவர்களான கேதமல்லர் மற்றும் கேசரசேத்தி என்பவர்களின் பங்களிப்பின் மூலம் சாத்தியமானதாகச் சொல்கிறார்கள். இந்தக் கட்டட வேலை நடக்கையில் இந்தக் கோவிலுக்கும் பேளூர் சென்னகேசவர் ஆலயக் கட்டுமானத்துக்கும் கடும் போட்டி. பதினான்காம் நூற்றாண்டில் இஸ்லாமியப் படையெடுப்பின் காரணமாக ஹொய்சாளேஷ்வரர் கோவில் சிதிலமடைந்து கவனிப்பற்றுக் கிடந்தது. இல்லாவிடில் இன்று பேளூர் சென்னகேசவர் ஆலயத்துக்கு இணையான சிறப்புடன் இன்று நம்மால் காண முடிந்திருக்கும். இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் படங்களில் ஒன்றில் இடக்கையில் ஏடும் வலக்கையில் மணிமாலையுடனும் நடனமாடும் நிலையில் இருப்பது சரஸ்வதி என்று சொல்கிறார்கள். கைடு இதை குறி சொல்லும் பெண் என்று சொல்கிறார். கையில் வீணை இல்லாமல் இருப்பதால் அவர் சொல்வது சரியாக இருக்கலாம். இடுப்பளவு மட்டும் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இங்கு கொடுத்திருக்கிறேன். கொஞ்சம் கவனித்து இதை எப்படி செதுக்கியிருக்கக் கூடும் என்று எண்ணிப்பாருங்கள். அதன் அருமை புரியும். மரத்தில் தவிர இப்படி ஒன்றை கல்லில் வடிப்பது சாத்தியமே இல்லாதது போலத் தோன்றுகிறது. இத்தனை நெருக்கமான நுணுக்கமான சிற்பங்களைப் பார்த்து முடிக்க முழுநாளும் கூடப் போதாது.
இந்தச் சிற்பங்களையும் தூண்களையும் உருவாக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவகை மாக்கல்லைக் கொண்டு சிலேட்டில் எழுதலாம் போலத் தோன்றுகிறது. இந்தியச் சிற்பக்கலையின் உச்சமாக இந்தக்கோவிலும் பேளூர் சென்னகேசவர் ஆலயமும் கொண்டாடப்படுகின்றன. கோவிலின் உள்புறம் பெரும்பாலும் அதிக வேலைப்பாடுகள் கிடையாது. வெளிப்புறத்தில் சாத்தியமான அத்தனை இடங்களிலும் சிற்பியின் கரங்கள் விளையாடியிருக்கின்றன. இங்கு சிவலிங்கம் தவிர்த்து சூரிய கடவுளுக்கும் 7 அடி உயர சிலையுடன் ஒரு சன்னதி இருக்கிறது.
ஹொய்சாளேஷ்வரர் கோவிலிலிருந்து அரைகிலோமீட்டர் தூரத்தில் சமண கோவில் ஒன்று உள்ளது. பார்ஷ்வநாதர் மூலவர். இங்கு பெரும்பாலும் யாரும் வருவதில்லை போலும். நாங்கள் போனபோது ஒருவருமில்லை. சமண மதத்தைச் சேர்ந்த ஒரு காவலாளி கூட்டிக் காண்பித்தார். நுழைந்தவுடன் முன்னால் ஒரு ஸ்தூபி உள்ளது. சமண ஸ்தூபிகளுக்கு மானஸ்தம்பம் என்று பெயர் (இந்துக்கோவில்களுக்கு கருட ஸ்தம்பம்). அதன் உச்சியில் ஒரு ஏகாம்பரர். ஒற்றையாடையுடன் இருப்பவர் ஏகாம்பரர். நிர்வாணிக்கு திகம்பரர் என்று பெயர். இங்கு மூன்று கோவில்கள் உள்ளன. ஆதிநாதர், சாந்திநாதர் மற்றும் பார்ஷ்வநாதர். பார்ஷ்வநாதர் சிலை 18 அடி உயரத்தில் ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்டது. அவரது பின்புறத்தில் ஏழுதலை நாகம் பாதத்திலிருந்து வளைந்து வளைந்து தலைக்குமேல் படமெடுத்திருக்கிறது. இவர் 23-வது தீர்த்தங்கரர். இங்கு 24 தீர்த்தங்கரர்களுக்குமே கோவில்கள் இருந்ததாம். இஸ்லாமியப் படையெடுப்புகளுக்குப் பின் மிச்சம் இந்த மூன்று கோவில்கள் மட்டும் உள்ளன. மகாவீரரின் சிலை மட்டும் சோமநாதபுரம் கோவிலில் முன்புறத்தில் வைத்திருக்கிறார்கள். பேளூரில் ஆதிநாதரின் (முதலாம் தீர்த்தங்கரர்) மகனான மகாபலிக்கு இந்தியாவின் மிகப்பெரிய சிலை ஒன்று உள்ளது. ஆனால் அவர் தீர்த்தங்கரர் அல்ல. தீர்த்தங்கரர்களின் சிலைகள் ஒன்றுபோலவே இருந்தாலும், சிலையோடு இணைந்த பிறகூறுகளைக் கொண்டு அடையாளம் காண்கின்றனர். இங்கு அப்படி ஒரு அமைதி நிலவுகிறது. மனம் தானாகவே ஒருங்குகிறது. மேல் கூறையில் எண்கோணத்தில் மூன்று சுற்றுகளாக சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. எண்கோணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு தீர்த்தங்கரர் வீதம் 24 தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. இங்கும் அதேவகையான் தூண்கள். காவலாளி வெவ்வேறு இடங்களில நின்று உடலின் நிழல் தூணில் ஒவ்வொரு தூணிலும் எப்படி வெவ்வேறு விதமாகப் பிரதிபலிக்கிறது என்று காட்டினார். (கண்ணன் என் காதில் போகும் போது அவருக்கு காசு கொடுக்கவேண்டும் என்று கிசுகிசுத்தான்).
சாந்திநாதர் பதினாறாவது தீர்த்தங்கரர். ஆதிநாதர் முதலாவது. ஆதிநாதர் சன்னதியின் மேல்கூரை சிற்பங்கள் ஏதுமின்றி உள்ளன. எண்கோண அமைப்பு மட்டும் உள்ளது. விஷ்ணுவர்த்தரிடம் அமைச்சராகப் பணியாற்றிய கங்கராஜாவின் மகன் போபன்னாவால் கிபி 1130 -களில் இக்கோவில் கட்டப்பட்டு வந்தது. விஷ்ணுவர்த்தர் சமணத்திலிருந்து வைணவத்துக்கு மாறியபின் இந்தக் கட்டடப்பணி பாதியிலேயே விடப்பட்டிருக்கிறது. கோயிலின் இடப்புற ஓரத்தில் ஆயிரம் வருடப் பழைய கிணறு ஒன்று இருக்கிறது. காவலாளிக்கு நூறு ரூபாய் கொடுத்துவிட்டு வெளியே வந்தோம்.
அடுத்ததாக இதன் அருகில் உள்ள கேதார்நாத் ஆலயத்துக்குச் சென்றோம். இக்கோவில் ஹொய்சாள மன்னர் இரண்டாம் பல்லாளனால் கி.பி. 1219-ல் கட்டப்பட்டது. திரிகுடாச்சல முறையில் கருவறைகள் அமையப்பெற்றுள்ளது. பெரும்பாலும் இங்குள்ள கோவிலகள் அனைத்திலும் பொதுவான சிற்பங்களே அதிகமும் காணப்படுகின்றன. அர்ஜூனன் திரௌபதியின் சுயம்வரத்தில் அம்பினால் மீன் இலச்சினையை அடிப்பது, நாகப்படம் மீது நர்த்தனம் ஆடும் கிருஷ்ணன், இராமாயணக் காட்சிகள், நரசிம்மர் என்று அனைத்துக் கோவில்களிலும் ஒன்றுபோலவே உள்ளன. கவனித்துப் பார்த்தால் சின்னச் சின்ன நுட்பமான வேறுபாடுகள் தெரிகின்றன. இங்கிருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ள பேளூர் கிளம்பினோம்.
பேளூர் சென்னகேசவர் ஆலயம் ஹொய்சாளச் சிற்பக்கலையின் உச்சம் என்றே சொல்லலாம். இக் கோயில் கி.பி 1117 ஆம் ஆண்டில் ஹொய்சால மன்னனான விஷ்ணுவர்த்தனனால் கட்டுவிக்கப்பட்டது. மன்னர் விஷ்ணுவர்த்தனன் சமணசமயத்தில் இருந்து வைணவத்துக்கு மாறியபின் கட்டப்பட்ட கோவில் இது. இராமானுஜர் இங்குவந்து வைணவத்தைப் பரப்பியதன் மூலம், அதில் ஏற்பு கொண்டு மன்னன் மாறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மூலவர் கேசவநாராயணன் கல்லால் ஆன பீடத்தின் உயரத்தையும் சேர்த்து 15 அடி உயரம். கிழக்குப் பார்த்த கோவில். ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் இங்கே ஆண்டாளுக்கு (இரங்கநாயகி என்றும் அழைக்கிறார்கள்) ஒரு சந்நதி உள்ளது. ஆண்டாள் இராமானுஜரின் பெண் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. முன்னே இராஜகோபுரம். உள் நுழைந்தவுடன் வலப்புறம் ஒரு குளம். ஆமைகளும், கெளுறு மீன்களும் மேலே சுற்றிக்கொண்டிருந்தன. விஸ்தாரமாய்ப் பரந்து விரிந்த பிரகாரம். வெளிச்சுவரோடு இணைந்த சின்னச் சின்ன மண்டபங்கள். கோவிலின் உள்ளே நுழைந்ததும் கடைந்தெடுத்தது போன்ற தூண்கள் பிரமிப்பூட்டுகின்றன. ஒவ்வொரு தூணும் வெவ்வேறு வகையான விதத்தில் செதுக்கப்பட்டுள்ளன. கோவில் சுற்றுச்சுவரில் கற்களுக்கு இடையே பூச்சு விட்ட இடங்களில், சுண்ணாம்பு கலந்த காரை மண்ணைப் பார்க்க முடிகிறது. இரண்டு கற்களை இணைக்க இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
கோயிலைச் சுற்றி செதுக்கப்பட்ட சிற்பங்களைப் பார்த்துமுடிக்க ஒருநாள் போதாது. Its a visual treat. நாம் ஒரு கைடு வைத்துக் கொள்வது நல்லது. 250 ரூபாய் வாங்குகிறார்கள். முக்கால் மணிநேரம். ஓரளவு நுட்பமான சிற்பங்களை விளக்குகிறார்கள். அதற்குப் பின்பு தனியாக நாம் மட்டும் சுற்றிப் பார்த்தால் அற்புதமான மன எழுச்சியைத் தரும். இந்த வகைக் கற்களைப் பார்க்கும்போது கடல் குச்சியைப் போல எடுத்து சிலேட்டில் எழுதமுடியும் போல இருக்கிறது. கற்களில் இப்படி நுட்பமாய் சிற்பங்களைச் செதுக்க முடியும் என்பதே ஆச்சரியம். மரவேலைப்பாடுகளைப் போல இருக்கின்றன. தையல் ஊசியின் அளவேயுள்ள உளிகளைக் கூட பயன்படுத்தியிருக்கக் கூடும். இஸ்லாமிய கட்டடக் கலையைப் போல சுற்றுச் சுவர்களில் காற்றும் வெளிச்சமும் நுழையும் வண்ணம் ஜன்னல் அமைப்புகள். நிழல் இருக்கும் இடங்களில் கற்கள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கின்றன. கீழ் வரிசையில் யானைகள். அடுத்தது குதிரைப்படை, பூ வேலைப்பாடுகள், விழாக்காலத்தில் மக்கள் மற்றும் வாழ்வியல், ஆடல் மங்கையர் என்று ஒரே வரிசைப் பிரகாரம் வெவ்வேறு வகையான சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வரிசைக்கு மேல் வெவ்வேறு தெய்ய்வங்கள். மேலே கூரையைத் தாங்கி நிற்பதுபோல இரண்டடிக்கொரு ஆடல் மங்கையரின் சிற்பங்கள். இந்த நங்கைகளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஒவ்வொருவரின் சிகை அலங்காரமும் ஒவ்வொரு விதமாக உள்ளன. பாதிவரை ஆடை கட்டி முடித்த பெண், கண்ணாடியில் முகம் பார்க்கும் பெண், வேட்டை முடிந்து வேட்டையாடப்பட்ட விலங்குடன் வரும் வேட்டுவப்பெண், வெவ்வேறு நடன நிலையில், இசைக்கருவி வாசிக்கும் பெண் என்று வரிசையாய் துல்லியமான ஆடை அணிகளுடன் செதுக்கியிருக்கிறார்கள். நிறைய இடங்களில் ஹொய்சாள அடையாளமான சிங்கத்தை அடக்கும் இளவரசனின் சிற்பங்களைக் காண முடிகிறது.
ஒருவழியாய்ப் பார்த்துமுடித்து வெளியே வந்தோம். கண்ணை மூடினால் சிற்பங்கள் உள்ளே மிதக்கின்றன. கடலில் வெகுநேரம் குளித்துவிட்டு வெளிவந்த பின் உடலோடு ஒட்டிக் கிடக்கும் அலையாட்டம் போல. நிறைவான நாள். மதியம் பேளூரிலேயே கோவிலுக்கு் நேர் எதிரே உள்ள சாலையில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டோம். சாம்பாருக்கும் இரசத்துக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. இரசம், தயிர் மட்டும் சேர்த்துக் கொண்டேன். சாப்பிட்டுவிட்டு ஸ்ரவணபெலகுலா கிளம்பினோம். பேளூரிலிருந்து 100 கி.மீ. அங்கு மாலை 5.30க்குப் பிறகு அனுமதியில்லை என்பதால் சீக்கிரம் கிளம்பினோம்.
4.
இங்கு மொழி அவ்வளவு பிரச்சினை இல்லை. நிறையபேர் திக்கித் திக்கியாவது தமிழ் பேசுவது நமக்கே கூச்சமாக இருக்கிறது. எனக்கெல்லாம் தமிழைத்தவிர பிற இந்திய மொழிகள் எதுவும் தெரியாது. ஒவ்வொரு ஊருக்கும் இடையில் நல்ல தூரம் இருக்கிறது. நடுவில் முழுக்க விவசாய நிலங்கள் தான். காரைவீடுகளைக் கூட நிறையப் பார்க்கமுடிந்தது. வரிசையான ஓட்டுவீடுகளும், புழுதி படிந்த இலைகள், குண்டும்குழியுமான சாலைகள் என்னை எங்கோ கொண்டு சென்றன. ஒரு மேயச்சல் நிலத்தில் ஏழெட்டு கன்றுக்குட்டிகள் மட்டும் தனியே நின்றுகொண்டும், துள்ளிக்குதித்துக் கொண்டும் அட்டகாசம் செய்தன. பெரிசுகள் அந்தப்பக்கம் தள்ளி அசைபோட்டுக் கொண்டிருந்தன. நேற்று நடந்த ஒருசம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. ஹசனுக்குப் போகும் பஸ்ஸில் ஒரு தமிழருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்தான் ஹசனில் ஆட்டோ பிடித்துவிட்டார். ஆட்டோ டிரைவரிடம் அவர் சிரவனபெலகுலா எப்படிச் செல்வது என்று அரைகுறை கன்னடத்தில் கேட்டார். அப்போது அவர் சொன்னது (தமிழில்) ‘இந்த ஜட்டிகூட போடாம ஒரு சாமி உண்டே, உயரமா?’ நான் எடுத்துக்கொடுத்தேன் ‘ஜெய்னுன்னு சொல்லுங்க’ அவர், ‘ஆங் ஜெயின்’. டிரைவருக்குப் புரியவேயில்லை.
ஸ்ரவனபலகுலா போய்ச் சேர நான்குமணி ஆகிவிட்டது. இங்கு பாகுபலிக்கு சிலை இருக்கிறது. உலகின் மிக உயர்ந்த ஒற்றைக்கல் சிலை இது. அறுநூறுக்கும் மேற்பட்ட படிகள். முப்பது படிகளுக்கொருமுறை நானும் அமர்நாத்தும் மூச்சு வாங்கினோம். கண்ணன் நிற்காமல் சென்றுகொண்டே இருந்தான். வழியில் ஒரு 70 வயதுப் பெரியவர் எங்களைப் போலவே மூச்சுவாங்கி எங்களுடனேயே வந்துகொண்டிருந்தவர், எங்களை முந்திவிட்டார். அமர்நாத்துக்கு உயரத்திலிருந்து கீழே உற்றுப்பார்க்கப் பார்க்க பீதியாய் இருக்கும் என்றான். எனக்கு ஆஸ்துமா பிரச்சினை. மக்கள் புழங்கும் இடத்திலிருந்து வசதியில்லாத, பாதுகாப்பற்ற இடத்துக்கு நகர்கிறோம் என்ற உணர்வும், இளைப்பும் ஒன்று சேர்ந்து panic ஆக இருந்தது.
மேலே உச்சிக்குச் சென்றடைந்ததும் படியில் பேசாமல் உட்கார்ந்திருந்தோம். பேசாமல் அப்படியே கூட வெறுமனே திரும்பிவிடலாம் என்பது போன்றதொரு மனநிலை. அசோகர் காலத்திலேயே இந்தப்பகுதி கோவில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. சந்திரகுப்த மௌரியர்கூட இங்குவந்து தியானித்ததாகவும் சொல்கிறார்கள். 57 அடி உயரத்தில் பாகுபலி சிலை ஒற்றைக்கல்லில் நிற்கிறது. உடலைச் சுற்றி கொடி படர்ந்திருக்கிறது. அதுதான் அடையாளம். சிலையைச் சுற்றிலும் சின்னச்சின்ன மண்டபங்கள். அதில் ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் சிலைகள் உள்ளன. இங்குள்ள பாறைகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கன்னடம், சமஸ்கிருதம் மற்றும் தமிழில் குறிப்புகள் உள்ளன. இது இந்தியாவில் உள்ல சமணர்களின் வழிபாட்டுத்தலமாக இன்றும் விளங்குகிறது. நன்கொடையை வரவேற்க நோட்டும் கையுமாக ஒருவர் சிலைக்கு முன்பாகவே பட்டறை போட்டு உட்கார்ந்திருந்தார். இங்குதான் அதிகளவில் திகம்பரர்களின் (நிர்வாணி) சிலைகளும் கல்வெட்டுக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பாகுபலி முதலாம் தீர்த்தங்கரரான ஆதிநாதரின் மகன். ஆதிநாதர் தன் மூத்த மகன் பரதனுக்கு அயோத்தியையும், இளைய மகன் பாகுபலிக்கு பாடனபுரத்தையும் அளித்தார். சகோதரர்கள் இருவருக்குள் பிணக்கு ஏற்பட்டு, போரைத் தவிர்க்கும் பொருட்டு இருவரும் ஒற்றைக்கொற்றை சண்டைக்கு சம்மதித்தனர். மல்யுத்தம் முதற்கொண்டு மூன்றுவகையான சண்டைகள் நடைபெற்றன. மூன்றிலும் பாகுபலி வெற்றி பெற்றார். கோபத்தில் பரதன் மறைத்துவைத்திருந்த ஒரு சக்கராயுதத்தை எடுத்து பாகுபலி மீது எறிய அது அவரைச் சுற்றிவந்து காலடியில் விழுந்ததாம். அதிலிருந்து பாகுபலி அனைத்தையும் துறந்து ஓராண்டு தியானத்திலிருந்தார். அவர் மீது எறும்புப் புற்றும் பின்னர் நாகங்களும் குடியேறின. இங்குள்ள சிற்பத்தில் அவர் காலடியில் இருக்கும் புற்றையும் நாகங்களையும் காணலாம்.
ஒரு பதின்வயதுப் பெண், பையன், பெற்றோர் போட்டோவாகச் சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தனர். அந்தப் பையனும் பெண்ணும் ஆளுக்கொரு கையை உயர்த்தியபடி பாகுபலியின் தலையைத் தொடுவதுபோல போஸ் கொடுத்துக்கொண்டிருந்தனர் (அதாவது தாஜ்மகாலைப் பிடிப்பதுபோல போஸ்கொடுப்பார்களே). அப்புறம் அப்பாவும் அம்மாவும் அதே போல போஸ். அங்கிருந்து கீழே விரிந்த ஊரை மாற்றி மாற்றி போஸ்கள். கண்ணன் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான். கீழே இறங்கி வந்து அங்கிருந்த கடைவீதியில் கொஞ்சம் சாமான்கள் வாங்கினோம். அழகழகான பாண்டுகள் இருந்தன. 40 மாடல்கள் அந்தக்கடையில் உண்டாம். அதில் ஒன்றை மனைவிக்கு வாங்கினேன். வீட்டிற்கு வந்தபிறகு மனைவி தலையில் அடித்துக்கொண்டாள். அது் தலைமுடிக்குரியது இல்லையாம். கையில் மாட்டுவதாம்.
5
சிரவனபெலகுலா பார்த்துவிட்டு ஹசன் வரும்வழியில் காபி குடிக்க சாலையோரக் கடையில் இறங்கினோம். அங்கே ஆனந்தபவன் இருந்தது. ஆனால் அதற்கு அருகில் உள்ள கடையில் குடித்தோம். நெடுஞ்சாலையின் ஓரத்தில் டேபிள் சேர் போட்டு சாவகாசமாய் காபி அருந்தியது ஒரு சுகானுபவம். மனைவிக்கு ஹசனில் ஒரு புடவை எடுத்தேன். ரூமை காலையிலேயே காலி செய்துவிட்டிருந்ததால் பைகளைத் தூக்கிக்கொண்டு இரயில்வே ஸ்டேஷன் சென்றோம். விடியறதுக்கு முன் 3 மணிக்கு மைசூருக்கு இரயில் ஒன்று இருக்கிறது. அதைப் பிடிக்க வேண்டும். கவுண்டரில் கொஞ்சவயதுப் பையன் இருந்தான். அப்போது மணி இரவு 9. 3 மணி இரயிலுக்கு டிக்கெட் 2 மணிக்குத்தான் கிடைக்கும் என்றான். சரியென்று டார்மெட்டரி டிக்கெட் 3 கேட்டேன். பக்கத்திலிருந்தவனிடம் ‘நம்மகிட்ட டார்மெட்டரி இருக்கு?’ என்று கேட்டுவிட்டு ஒரு லெட்ஜரை எடுத்து வரிசையாய் எழுதி கையெழுத்து வாங்கிக்கொண்டு ஆளுக்கு 60 ரூபாய் வீதம் 180-க்கு ஒரு டிக்கெட் கொடுத்தான். அப்படியே ஒரு சாவியும். ஆச்சரியமாய் இருந்தது. டார்மெட்டரி ரூமைத் திறந்ததும்தான் தெரிந்தது அதன் காரணம். மாதக்கணக்காய் அந்த அறை திறக்கப்படவே இல்லை. ஒரே தூசு. எனக்கு ஏற்கெனவே ஆஸ்துமா. மூச்சு முட்டியது. படுக்கைகள் எல்லாம் படுமோசமான லாட்ஜ்களில் இருப்பது போல இருந்தன. மூன்று பெட்டுகளை ஒட்டிப் போட்டு மேலே எங்கள் போர்வையை விரித்து பேனைப் போட்டுவிட்டு பேச ஆரம்பித்தோம். பேசினோம் பேசினோம் 3 மணி வரைக்கும் பேசினோம் (உபயம் Black Dog)
அமர்நாத்துக்கு உணவு எதுவோ ஒத்துக்கொள்ளவில்லை. ஏப்பமாய் விட்டுக் கொண்டிருந்தான். கண்ணன் எப்போதுமே இப்படி சுற்றுலா கிளம்பும்போது அவசரத்திற்கென்று ஒரு டப்பா நிறைய மாத்திரைகள் வைத்திருப்பான். என்னென்னவோ கொடுத்துப் பார்த்தான். கேட்கவே இல்லை. சரியென்று 11 மணிக்கு மெடிக்கல் ஷாப் ஏதாவது இருக்குமாவென்று தேடக் கிளம்பினோம். கடைகள் எல்லாமே 7 மணியிலிருந்தே மூட ஆரம்பித்து விடுகிறார்கள். ஒரு ஆசுபத்திரி அரைகிலோமீட்டர் தூரத்தில் இருப்பதாகவும் அங்கு மெடிக்கல் எப்போதும் திறந்திருப்பதாகவும் சொன்னார்கள். நடக்க ஆரம்பித்தோம். ஸ்வெட்டர் போட்டு, குல்லா வைத்திருந்தும் குளிர் ஊசியாய்க் குத்தியது. ஒரு ஒயின் ஷாப் வந்தது. அதன் அருகில் வழக்கம்போல பெட்டிக்கடை. கண்ணன் ஏதோ ஞாபகம் வந்து ஈனோ வாங்கிக் கொடுத்தான். என்ன ஆச்சரியம் உடனே ஏப்பம் நின்றது. மைசூர் இரயில் சரியான நேரத்திற்கு வந்தது. இரயிலில் அந்த நள்ளிரவிலும் பயங்கரக்கூட்டம். தூக்கம் அப்படிச் சொக்கியது. பேசாமல் கீழேயே உட்கார்ந்து சாய்ந்துகொண்டு உறங்க ஆரம்பித்தோம்.
ஹசனிலிருந்து அருகிலேயே பார்ப்பதற்கு இன்னும் நிறைய இடங்கள் இருந்தன. இருந்தும் முதுமலை செல்லலாம் என்று கடைசி நேரத்தில் அமர்நாத் சிபாரிசு செய்தான். ஊட்டியில் அரசு அலுவலில் உள்ள ஒரு நண்பர்மூலம் காட்டிலாகாவுக்குச் சொந்தமான ஒரு காட்டேஜ் தங்குவதற்கு ஏற்பாடாகியிருப்பதாகச் சொன்னான். மைசூரிலிருந்து காலை ஐந்தரைக்குக் கிளம்பினோம். முதுமலை சாலையைப் போல நான் பார்த்ததேயில்லை. நல்ல சாலை. சுற்றிலும் காடு. புள்ளி மான்கள் நிறைய நின்று மேய்ந்து கொண்டிருந்தன. வழியில் நிறையபேர் வண்டியை நிறுத்தி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். சில்லென்றிருந்தது. அமர்நாத்தின் நண்பர் ஏற்பாடு செய்திருந்த காட்டேஜில் எங்களுக்கு ரூமை ஒதுக்கித் தருபவர் இல்லை. அமர்நாத்தின் நண்பர் இன்னொரு இடத்தில், மசினக்குடியில் அறை காலியாக இருப்பதாகவும் அங்கே தங்கிக் கொள்ளச் சொன்னர். முதுமலையில் இருந்து 7 கி.மீ. அங்கு சென்றோம். அங்கு முத்து (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் சமையல் மற்றும் மேற்பார்வையாளர். அவர் அறை ஏற்கெனவே இன்னொருவருக்கு ஏற்பாடாகி விட்டதாகவும், பத்து நிமிடங்கள் பொறுத்திருக்கச் சொன்னார். நடுவே டீ கொடுத்தார். குடித்துவிட்டுக் காத்திருந்தோம். அறை கிடைத்தது.
மரத்தாலேயே கட்டப்பட்ட இரண்டு படுக்கைகள் கொண்ட அறை. ஒட்டினாற்போல் அறையின் முக்கால் பங்களவுக்கு பாத்ரூம். திறந்திருந்த ஜன்னல் மேல் சிட்டுக்குருவிகள மூன்று அமருவதும் பறப்பதுமாக இருந்தன. வெளியே சுற்றிலும் உயர்ந்த மரங்கள். கரண்டி வாயன் பறவைகள் சில. சற்று தூரத்தில் தண்ணீர் தேங்கி குளம்போல கிடந்தது. வெளியே சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது. ஜன்னலை ஒட்டி மேலே உள்ள அறைக்கும் கீழுள்ள அறைக்கும் நடுவில் மரப்பட்டைகளுக்கு நடுவே சின்ன ஓட்டை போட்டு சிட்டுக்குருவிகள் தங்க வசதி செய்திருக்கிறார்கள். நரம்புபோன்ற கால்களை வைத்துக்கொண்டு கீச் கீச் என்று சுற்றிக்கொண்டே திரிந்தன. அப்படியே அள்ளிக்கொண்டு அதன் கால் நகங்களால் முகத்தில் கீச்சிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.
மதியம் பன்னிரெண்டு மணி இருக்கையில் முத்து வந்தார். ‘சார் 12 மணிக்கு ஹயர் அபிசியல் யாருக்காவது ரூம் தேவைப்படும். நீங்க வேற ரூம் பாத்துக்கங்க’ என்றார். ஏற்கெனவே நாங்கள் தங்கிக்கொள்ள ஏற்பாடான அறையைக் கேட்டால் அது காலியில்லை. இதுவும் இல்லாமல் என்ன செய்வது. அமர்நாத் ஏற்கெனவே எங்களிடம் சொல்லியிருந்தான் ‘டேய் அடுத்த ரெண்டு நாள் பாருங்கடா. எப்படி புரோகிராம் பிளான் பண்றேன்னு’. அவனுக்கு கடுப்பாகி விட்டது. அவன் நண்பனைப் பிடித்து வாங்கு வாங்கென்று வாங்க, அந்த நண்பர் உடனே காட்டேஜ் பொறுப்பாளரைப் பிடித்து ஏற, முத்துவுக்கு போன் மேல் போன். அவர் ‘ஐயோ சார், நான் அவரைக் காலி செய்யச் சொல்லவேயில்ல சார்.’ என்று மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்தார். அமர்நாத் சொன்னான் ‘இவன் நம்மகிட்டயே கேம் பிளே பண்றான். இப்படிச் சொன்னா நாம காசு குடுப்போம்னு நினைச்சு்ருக்கான். நாம யாருன்னு தெரியாம பேசிட்டான்’. அப்புறம் எங்களுக்கு பயங்கர கவனிப்பு. சாப்பாடு கூட அறைக்கே வந்தது. சும்மா சொல்லக்கூடாது முத்து சிக்கன் அருமையாக சமைத்திருந்தார்.
சாப்பாடு அங்கேயே தயாரானது. அறையை ஒட்டியே டைனிங் ஹால் இருந்தது. தோசை, இட்லி மற்றும் பொங்கல். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, வெங்காயச் சட்னி, சாம்பார். திருப்தியாய் சாப்பிட்டோம். கொஞ்ச நேரம் உறங்கினோம். அன்று யானை மீது காட்டுலா இல்லை என்று சொல்லிவிட்டார்கள். வேனில் செல்லலாம். எங்களுக்கு விஐபி டிக்கெட் ஏற்பாடாகி இருந்தது. கவுண்டரின் முன் ‘Its a matter of luck to see an animal’ என்று போட்டிருந்தது. டிக்கெட் விலை 450 ரூபாய். ஆட்கள் வந்துகொண்டே இருந்தார்கள். என்ன பிரச்சினை என்றால், இவர்கள் வெவ்வேறு பாதைகளில் பயணிப்பதில்லை. சென்ற வழியிலேயே அரைமணிக்கொருமுறை செல்வதால் மிருகங்கள் அந்தப் பக்கம் வருவதில்லை என்று சொல்கிறார்கள். எனவே காட்டுலா வேண்டாம் என்று முடிவு செய்தோம். சாலையில் நடந்தால் ரேஞ்சர்கள் அப்படியெல்லாம் கண்டபடி நடக்கக்கூடாது, காரில் இல்லை பைக்கில் வேண்டுமானால் செல்லலாம் என்றார்கள். அந்தப்பக்கமாய் சிற்றருவி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. கரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.
கண்ணன் வால்காவிலிருந்து கங்கைவரை புத்தகத்தைப் பிடித்து தொங்கிக்கொண்டிருந்தான். ஆதியில் பெண்வழிச்சமூகமே இருந்தது என்பது அவன் வாதம். அப்புறம் அப்படியே உரையாடல் திசைமாறி கால்செண்டர்கள், அமெரிக்க கலாச்சாரம், இந்தியாவில் முதலாளித்துவம் என்று ஒரு சுற்று போய்விட்டு வெயில் சுள்ளென்று அடிப்பதை உணர்ந்து எழுந்து கொண்டோம். உண்மையில் சொல்லப்போனால் முதுமலையில் ஒருநாளில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. நடக்கவும் கூடாது. காட்டுலாவும் பிடிக்கவில்லை. ஒரு காட்டேஜில் சாப்பாடு கிடைத்தது. படு மோசம். அறைக்கு வந்து கொஞ்சம் ஓய்வெடுத்தோம்.
சாயங்காலம் அறைக்கு வெளியே சுற்ற ஆரம்பித்தோம். முத்து அங்கிருந்து குரல் கொடுத்தார். ஒரு குறிப்பிட்ட எல்லைக்குமேல் போக வேண்டாம் என்று எச்சரித்தார். சலிப்பாய் இருந்தது. நிறைய பேர், அரசுத்துறை சார்ந்தவர்கள் வந்து தங்கியிருந்தார்கள். இலந்தை மரங்கள் மிக உயரமாய் வளர்ந்து பரந்து இருந்தன. கீழே நிறைய இலந்தைப் பழங்கள். ஆளாளுக்கு பொறுக்க ஆரம்பித்தோம். சாயங்கால வேளையில் அங்கிருந்த பார்க்கில் மௌனமாய் அமர்ந்திருந்தோம், அங்கிருந்த மரங்களைப் போல. அமர்நாத் ஒரு மரத்தைக் காட்டினான். என்ன என்று கண்ணன் கேட்டான். அந்த மரம் இருக்கிறதா? என்று கேட்டான். கண்ணன் மௌனமானான். ஐந்து நிமிடங்கள் கழித்து ‘அசைவே இல்லை’ என்றான். அமர்நாத் அது மூச்சு விடுவது தெரியவில்லையா என்றான். மாலை பித்துப் பிடிக்கச் செய்கிறது. எழுந்து அறைக்கு வந்தோம். பழங்கள், நொறுக்குத் தீனிகள், சிக்கன் மற்றும் Black Dog. இந்த இரவுக்குப் போதும்.
