பார்த்தவை
ஓருநாள் பயணமாக சேலம் சென்றேன். உடன் நண்பர்கள் இருவர். நான் பணியாற்றி வரும் அலுவலக ஊழியர்களின் சங்கப்பணி.
திருநெல்வேலியில் இருந்து சேலம். ஆம்னி பேருந்து. இரவு 10.30 க்கு வண்ணார்பேட்டையில் ஆப்பிள் ட்ரீ ஓட்டலுக்கு எதிரே. எட்டு மணிக்கே சென்று சேர்ந்து விட்டேன். இரண்டு மணி நேரத்திற்கும் மேலான உபரி நேரம். என்ன செய்யலாம் என்று யோசனை. ஏதாவது புத்தகக்கடை இருந்தால் சென்று பார்த்துக்கொண்டு வரலாம். அது ஒன்றே உற்காசம் அளிக்கும் ஏக்கமாக இருந்தது. ஆனால் பாளையங்கோட்டைக்குச் செல்ல வேண்டும். ஈகிளில் கொஞ்சம் இலக்கியப் பனுவல்களும் இருக்கின்றன. அதைவிட்டால் ஜங்சன் இரட்டைப் பாலத்திற்கு அடியில் உள்ள நியூ சென்சுரி புத்தக விற்பனை நிலையம். அங்கு செல்ல நினைப்பதே எரிச்சலை அளிக்கும் எண்ணம். இடது சாரி சிந்தனையோடு தொடர்புடையவர்களின் புத்தகங்களை மட்டுமே புரட்டிப் பார்க்க முடியும். ஒரு புத்தக விற்பனை நிலையம் கூட அரசியல் கோட்பாட்டு வரையறையோடு பொதுவெளியில் இயங்குவருவதைச் சகிக்க முடியவில்லை. ஆகவே அங்கே எட்டிப்பார்க்கவே தோன்றாது.
எதிரே ஒரு துணிக்கடை இருந்தது. மின்னும் ஒளி வெள்ளத்தில் தகதகத்தது. உள்ளே சென்று மிக நிதானமாக ஆயத்த ஆடைகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று வெவ்வேறு பிரிவுகளில் பலவிதமான ஆடைகள். தமிழர்கள் உணவிற்கு அடுத்து அதிகம் செலவு செய்யும் ஒன்றாக ஆடைகள் உள்ளன. அதனால்தான் எந்த ஒரு நகரத்திலும் புதிது புதிதாக உணவு விற்பனை நிலையங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அதைப்போல துணிக்கடைகளும்.
விலைகள் அனைத்தும் தாறுமாறு. முன்பென்றால் முன்னுாறு ரூபாய்க்கு ஒரு சட்டையை எடுத்துவிடமுடியும். இப்போது குறைந்த விலையே ஆயிரந்தான். இருநுாறுக்கு வாங்கச் சாத்தியமான டீ ஷர்ட்கள் ஐநுாறுக்கு. கடந்த சில ஆண்டுகளில் அனைத்துமே கடுமையான விலையேற்றம். பத்து ரூபாய்க்கு விற்ற டீ பதினான்கு ரூபாய் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
அரைமணி நேரத்திற்கு முன்பே ஆப்பிள் ட்ரீ வாசலுக்கு வந்துவிட்டேன். ஐம்பது பேர்களுக்கு மேல் நின்றுகொண்டு அலைந்தபடி இருந்தார்கள். அதுதான் வண்ணார்பேட்டையில் ஆம்னி பஸ் நிறுத்தம். அது மாநகராட்சிக்கு மிக நன்றாகத் தெரியும். அங்கே பயணிகளை ஆறுதல்படுத்தும் சில அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருக்கலாம். உட்கார இருக்கைகள் அவசியம். கழிவறையோ மிக அத்தியாவசியம். பேரழகி ஒருவர் ஜீன்சும் டீ சர்ட்டும் அணிந்து காதில் செல்போனின் ஒலிமயக்கம் பாய தெருப்புழுதி படிந்து மஞ்சள் படலம் உறைந்திருந்த அடைத்த கடையொன்றின் படிக்கட்டில் அமர்ந்திருந்தார். மனிதர்கள் அமர்ந்து எழுந்து சென்றிருந்த இடங்களில் மட்டும் புழுதித்தடயம் அழிக்கப்பட்டிருந்தது. எனக்கும் கால் வலித்தது. ஒருவர் அமர்ந்து சென்றிருந்த சுத்தமான இடத்தில் அமர்ந்து கொண்டேன். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கொசுக்கள் தேடித்தேடி ஊசிக்குத்தல்களை அளித்தன.
காத்திருந்த நேரத்தில் கவனித்தபோது பத்திருபது அரசுப்பேருந்துகள் கடந்து சென்றன. நடத்துநர்கள் “ சென்னை ஊட்டி மதுரை மாட்டுத்தாவணி கோவை திருப்பூர்” என்று கூவி அலைத்தனர். வெள்ளி இரவு என்றாலும் பெரும்பாலான பேருந்துகளில் இருக்கைகள் காலியாகத் தென்பட்டன. ஆம்னி பேருந்துகளில் எண்பது விழுக்காட்டினர் நெடும் பயணத்தை கடக்க விரும்புகின்றனர். அடித்தட்டு மற்றும் நடுத்தட்டு வர்க்கப் பயணிகள், அவசரப் பயணத்திற்கு தள்ளப்பட்டோர் ஆகியோரை நம்பியே அரசுப்பேருந்துகளின் ஓட்டம். பண்டிகைக் காலங்களில் மட்டுமே அரசுப் பேருந்துகள் நிரம்பி வழியும் போலும்.
சேலம் சென்று இறங்கிய அதே பேருந்தில் திரும்பினோம். சேலம் புதுப்பேருந்து நிலையத்திற்கு ஒன்பது மணிக்கு வந்து விட்டோம். சுற்றியிருந்த ஓட்டல்களில் உணவருந்த விரும்பவில்லை. சேலம், கரூர் போன்ற நகரங்களில் கையேந்தி பவன்கள் அருமையானவை என்ற அனுபவம். கையேந்தி பவன்களின் வரிசையில் இடமிருந்த தள்ளுவண்டியின் முன் சென்று அமர்ந்தோம். தோசையும் இட்லியும் மட்டுந்தான். முட்டைத் தோசைகள் சொன்னோம். முன்னதாக இட்லிகள் இரண்டு வாங்கிக்கொண்டோம். மிக மிக தரந்தாழ்ந்த சாம்பாரும், சிவப்புக்கலர் சட்னியும். வாயில் எந்த ஒரு ருசியும் எழுந்துவரவில்லை. ஆனாலும் வேறு வழியில்லை. பிரியாணிக்கடைகளில் வாசலில் நின்று கூவிக்கொண்டிருந்தார்கள்.
ஆம்னி பேருந்துகள் நிற்கும் இடத்தினை சென்றடைய பேருந்து நிலையத்தை ஊடுருவிச் செல்ல வேண்டும். வாசலில் வாசனைத் திரவியங்கள் மணக்கும் மூன்றாம் பாலினத்தர். குறுக்கும் நெடுக்கும் திரிந்து கொண்டிருந்தார்கள். பார்த்தும் கவனிக்காத பாவனையில் கடந்து சென்றோம். முதுகிற்குப் பின்னால் ஒருவர் ஒரு இளைஞனை கடும் ஆபாச வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தார். பத்திருபது மூன்றாம் பாலினத்தவர்களை எதிர்கொண்டு கடந்து சென்றோம். சம காலத்தின் பெரிய சங்கடம் இவர்கள். எல்லாப் பேருந்து நிலையங்களிலும் இவர்கள் இரவுகளில் அலைந்து திரிகிறார்கள். பாலியல் வறட்சியில் தத்தளிக்கும் ஆண்களைச் சுண்டியிழுக்கிறார்கள். பல இடங்களில் வன்முறையும், கையிலிருக்கும் பணம் செல்போன் பர்சுகளை பறித்துவிட்டு விரட்டி விடும் சம்பவங்களும் நடக்கின்றன.
நெரிசலான ஊடுபாவுகளுக்குள் நீந்திச்சென்று பஸ் நிற்பதைக் கண்டுபிடித்துவிட்டோம். எதிரே பெரிய மைதானம். சென்றாண்டு அங்குதான் புத்தகக் கண்காட்சி நடந்தது. ஏதோ தொழிற் கண்காட்சி அப்போதும். அந்த மைதானத்திற்கும் பஸ் நிலையத்திற்கும் நடுவில் ஒரு மேம்பாலம். அதன் அடியில் பஸ்நிலையக் குடும்பங்கள். மூத்திரம் நுரைத்து தேங்கி நின்று நாறின. ஆண்களுக்கு வேறு போக்கிடம் இல்லை. மேம்பாலத்தை கூரையாகக்கொண்டு அடியில் தங்கியிருந்த குடும்பங்கள் அதிர்ச்சியை அளித்தன. பல்வேறு கழிவுகளின் நாற்றம். கொசுக்கள் ரீங்கரித்தன. மணற்பரப்பு முழுக்க எலிப்பொந்துகள். மீதமாக துாக்கி வீசியெறிப்படும் உணவினை நம்பி வாழ்கின்றவை. மணற்பரப்பெங்கும் வளைகள். எலிகள் வெளியே வந்து அரவம் கண்டு அஞ்சி உள்ளே சென்று ஓடின. அவற்றின் மத்தியில் ஒரு குடும்பம் மஸ்லின் துணிபோன்ற மெல்லிய ஒரு துணியில் தடுப்பரண் அமைத்து உள்ளே துயின்று கொண்டிருந்தது. அங்கேயும் ஆண்ட்ராய்டு செல்போனில் ரீல்ஸ்கள் கண்டு களிக்கும் ஒரு கரத்தை காண முடிந்தது.
மூன்று நபர்களுக்கு போகும்போது பஸ் கட்டணம் ஆயிரத்து ஐநுாறு. அதே பேருந்தில் திரும்பும்போது பஸ் கட்டணம் இரண்டாயிரத்து இருநுாறு. வெள்ளிக்கும் சனிக்கும் இடையில் எழுநுாறு ரூபாய் வேறுபாடு. இது இப்படித்தான் பல தசாப்தங்களாக நடந்து கொண்டு இருக்கிறதாம். பண்டிகைக் காலங்களில் இந்த வேறுபாடு வானத்திற்கும் பூமிக்கும் உள்ள இடைவெளி அளவு அகலித்துப்போகுமாம். சகல விதங்களிலும் நுகர்வோர்கள் சுரண்டப்படுகிறார்கள். கேட்கவோ கண்காணிக்கவோ சமரசமற்ற அமைப்புகள் அருகிவிட்டன.
படித்தவை

சாகித்ய அகாடமி வெளியிடுள்ள இந்திய இலக்கியச் சிற்பிகள் நுால் வரிசையினை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
பி.எஸ்.ராமையா குறித்து மு.பழனி இராகுலதாசன் எழுதிய நுால். 125 பக்கங்கள் 25 ரூபாய் விலை.
வத்தலக்குண்டு நகரத்தின் பெருமைகளில் சி.சு.செல்லப்பா, பி.எஸ்.ராமையா, பி.ஆர்.ராஜம் ஐய்யர் ஆகியோர் முதன்மையானவர்கள். இவர்கள் அனைவரும் பிராமணர்கள் என்பது வரலாற்று நிர்ப்பந்தம். ஆகவே இவர்களைப் பற்றி பொதுவெளியில் யாரும் எளிதில் பேசுவதில்லை. அவர்கள் ஆற்றிச் சென்றிருக்கும் முன்னோடிப் பணிகள் நினைவு கூரப்படுவதில்லை. தமிழின் நீண்ட கால அவலங்களில் இதுவும் சேர்த்தி.
பி.எஸ்.ராமையாவை நிலைப்படுத்தும் ஒரே நுால் இதாகத்தான் இருக்கிறது. தமிழ் விக்கி போன்ற சிலவற்றைத் தவிர்த்தால் வேறு பதிவுகள் காணக்கிடைப்பதில்லை.
பி.எஸ்.ராமையாவை மிகவும் கொண்டாடியவர் சி.சு.செல்லப்பா ஒருவர்தான். பிற அனைவரும் அவர்மீது இலக்கியத் தரத்தில் பொருட்படுத்தும் விதமான மதிப்பீடுகள் எதையும் முன்வைக்கவில்லை. பி.எஸ்.ராமையா நிறைய எழுதியிருக்கிறார். சி.சு.செல்லப்பா பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப் பாணி என்ற பெயரில் ஒரு நுாலை அவரே எழுதி வெளியிட்டு உள்ளார். பி.எஸ்.ராமையா 300 மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். சி.சு.செல்லப்பா எழுதியுள்ள அந்த ஒரு நுாலே அவற்றை ஆவணப்படுத்தி வைத்துள்ளது.
முந்நுாறு சிறுகதைகளில் எப்படியும் பத்துக் கதைகளாவது தேறாதா என்ன? இலக்கிய ஆர்வலர்கள் யாரேனும் பி.எஸ்.ராமையாவின் சிறுகதைகளுக்கு மறுபிறப்பு அளித்தால் பயனாக இருக்கும். புதுமைப்பித்தனுக்கு கிடைத்த யோகத்தில் பத்து விழுக்காடு கூட அவர் காலத்தைச் சேர்ந்த பி.எஸ்.ராமையா போன்றோருக்கு வாய்க்கவில்லை.

சி.சு.செல்லப்பா பி.எஸ்.ராமையாவை அவரின் சிறுகதைகளுக்காக பாராட்டியுள்ளார். ஆனால் பி.எஸ்.ராமையாவின் எந்த ஒரு புனைவும் தற்போது படிக்க கிடைப்பதில்லை. பெரிய நுாலகங்கள் எதிலாவது தேடினால் தென்படக்கூடும்.
பி.எஸ்.ராமையா எழுதியுள்ள மணிக்கொடிக்காலம் என்ற நுால் விற்பனைக்கு கிடைக்கிறது. அது ஒரு முக்கியமான நுால்.
பி.எஸ்.ராமையா பன்முக ஆற்றல் வாய்க்கப் பெற்றவர். ஆரம்பத்தில் ராஜம் அய்யரால் துாண்டுதல் அடைந்து நாவல்கள் எழுதியுள்ளார். சிறுவனாக இருக்கும்போதே படிப்பை கைவிட்டு பிழைப்பின் பொருட்டு பல்வேறு உடல் உழைப்பு சார்ந்த வேலைகளைப் பார்த்துள்ளார். நிலையற்ற வாழ்வு. இடையில் அவரை நிலைநிறுத்திய ஒரே உன்மத்தம் இந்திய சுதந்திரமும் அதற்கான அர்ப்பணிப்பும். காந்தி, நேரு போன்ற மகத்தான் ஆளுமைகளோடு நேரடித் தொடர்பு கொண்டிருந்த தமிழ்ப்படைபாளிகளும் இவரும் ஒருவர்.
மணிக்கொடி பத்திரிகையை சிறுகதை மணிக்கொடியாக மாற்றி நடத்தியதில் இவரின் பங்களிப்பு இப்போது நினைவு கூரப்படுகிறது. நவீன தமிழ்க் கவிதைக்கு சி.சு.செல்லப்பாவின் எழுத்து சிற்றிதழ் ஆற்றிய பங்களிப்பிற்கு இணையானது பி.எஸ்.ராமையாவின் சிறுகதை மணிக்கொடி இதழ் தமிழ்ச் சிறுகதைகளுக்கு ஆற்றிய பங்கு.

பி.எஸ்.ராமையா குறித்து மிக விரிவாக எழுத வேண்டும். அவரிரன் படைப்புகளைத் தேடி வாசிக்க வேண்டும். உண்மையில் இன்று முக்கியத்துவம் உள்ள ஒரு பத்து கதைகள் கூடவா அவர் எழுதியிருக்க மாட்டார். மீள் கண்டுபிடிப்பு நிகழ்ந்தால் நல்லது.
