வெண்முகில் நகரம் – நாவல் வாசிப்பனுபவம் 

வெண்முகில் நகரம் நாவல் வாசித்து முடித்தவுடன் மனதில் நின்ற முதல் கதாபாத்திரம் என்று பார்த்தால் பூரிசிரவஸ் வருகிறார். அழகான மூன்று காதல் வாய்ப்புகள் அமைகிறது. அமைந்த சில காலங்களிலேயே அவை இல்லாமல் ஆகி விடுகின்றன .கனவுடன் செல்லத் தொடங்கி முடிவில் வெறும் கையுடன் தனது நாட்டிற்கு செல்லும் நிலையில் நாவல் முடிகிறது. கனவுகளை பின்தொடர்ந்து முடிவில் வெறும் கையுடன் திரும்புகிறான் . இவனுக்கு இணையான இன்னொரு பாத்திரமாக நாவலில் சாத்யகி வருகிறான். அவனுக்கு தன்னை கிருஷ்ணனுக்கு அளிப்பதை தவிர வேறு கனவுகள் இல்லை. கிருஷ்ணனுக்கு தொண்டு செய்வதே அவனது விருப்பமாக இருக்கிறது .அதற்காக தொழுமர் ( அடிமை) பணியில் இணையும் அளவுக்கு கிருஷ்ணர் மீது அன்பு கொண்டிருக்கிறார். மற்றபடி அவருக்கு என தனி விருப்பம் ஏதும் இல்லை. ஆனால் அவருக்கு கிருஷ்ணனிடம் வந்த பிறகு இளவரசருக்கு இணையான மதிப்பை எல்லோரும் அளிக்கிறார்கள். எங்கும் அவனால் நிமிர்ந்து நின்று பேச முடிகிறது. எல்லாம் அவனிடம் வந்து அமைகிறது. கிருஷ்ணர் அவனுக்கு பானுமதியிடம் சொல்லி பெண் பார்க்கிறார், வில்லில் சிறந்தவரான அர்ஜுனனிடம் மாணவராக சேர்க்கிறார். அவர் எதுவும் அடைய விரும்புவதில்லை. ஆனால் எல்லாம் அவரிடம் வந்து சேர்கிறது . ஆனால் அவர் எதையும் தனக்குள் ஏற்றாமல் தான் கிருஷ்ணனின் அடிமை / சேவகன் என்று மட்டுமே தன்னை முன்வைக்கிறார் !
நாவலில் ஆரம்பம் என்பது பாண்டவர்கள் திரௌபதியை மணந்த பின் உறவு கொள்வதற்கு முன்பாக ஆரம்பிக்கிறது. ஐந்து கணவன்கள் ஒரு மனைவி என்பதை ஏற்க முடியாமல் தவிக்கும், என்ன செய்வது நிலையில் இருந்து ஆரம்பிக்கிறது. இதை வெறும் திரௌபதி – பாண்டவர்கள் நிலையில் இல்லாமல் சாதாரண ஒரு பெண் இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட கணவன்கள் இருந்தால் அதை அந்த கணவன்கள் எவ்வாறு அணுகுவது என்பதாகவும் காண இயலும். ஒரு கணவன் பல மனைவி என்பது நமக்கு அதிர்ச்சி அளிப்பது இல்லை, ஆனால் பல கணவன் ஒரு மனைவி என்பது சட்டென்று அதிர்ச்சி அளிக்கிறது . நம் வழக்கத்தில் மனைவிக்கு ஒரு கணவன், அவனுக்கு மட்டும் அவள் உரியவள் என்றே அணுகப் படுகிறது.  அப்படிதான் நாம் அணுகுகிறோம் . இந்த நாவல் எதிர் சூழலை எப்படி அணுக இயலும் என்பதைப் பேசுகிறது. அதிர்ச்சி அளித்தாலும் மனைவி என்ற இடத்தில் அன்னையை வைத்து இந்த நாவல் பேசுகிறது . அன்னைக்கு ஐந்து குழந்தைகள் இருக்குமெனில் ஏன் ஐந்து கணவன்கள் என்பது இருக்க கூடாது என்கிறது . அதாவது குழந்தைகள் அன்னையிடம் அன்பு செலுத்த, அன்னை குழந்தையிடம் அன்பு செலுத்த இன்னொரு குழந்தை தடையாக இருப்பது இல்லை , தடையாக தோன்றுவதில்லை அல்லவா, அது போல அணுகுங்கள் என்று பாண்டவர்களிடம் முன்வைக்கிறது. இன்னொருவருடன் உறவு என்பதை ஆண் யோசிக்கும் இடத்தில் நதியை காட்டி நதி இதுவரை வந்த பின்னணியும் , இனி செல்லும் பின்னணியும் நாம் பார்க்க வேண்டியதில்லை / பார்ப்பதில்லை தானே என்கிறது. உன்னுடன் இருக்கும் போது உன்னுடையவள் என்பதை மட்டும் எண்ணிக் கொள் என்று சொல்கிறது அல்லது அவ்வாறு நான் புரிந்து கொண்டேன் ! திரௌபதியை விளக்க புலோமை கதை சொல்லப்படுகிறது. திரௌபதியை புரிந்து கொள்ள நமக்கு மிக உதவும் பகுதி அது .
நாவலில் ஆரம்ப பகுதியில் நிறைய புராணக் கதைகள் சூதர் பாடல்கள் வழியாக சொல்ல படுகிறது. அதில் இந்திரத்யும்னன் கதை, நீரர மகளிர் கதை என நிறைய வருகிறது . அவை கதை மாந்தர் மற்றும் அந்நேர மனநிலை , அவர்கள் எதிர் கொள்ளும் சூழல் சாரந்து வாசிக்கும் நமக்கு மேலதிகமாக புரிந்து கொள்ள மிக உதவுகிறது . இதில் இந்திரத்யும்னன் கதை வழியாக தென்னக நிலமும் பாரத கதையில் இணைகிறது . மேலும் இந்த கதை கூட இரண்டு கதைகளாக வருகிறது. ஒன்று சூதர்கள் சொல்வது , இன்னொன்று திரௌபதி சொல்வது . இந்த கதை பற்றி இணையத்தில் தேடிய போது கதையில்  நாவலாசிரியர் உருவாக்கியிருந்த கோணம் முன்பு இருந்த கதை என இவற்றைக் கொண்டு ஆராய்ந்து அறிய நிறைய வெளிகள் இருக்கிறது . எனக்கு இந்திரத்யும்னன் தன்னை அறிந்தவரை தேடும் பகுதியில் கூட ஒரு வரிசை வைப்புமுறை இருக்கிறது என்று தோன்றியது . அவன் உடல் , அவன் மனத்தில் இருந்த காமம் , அதன் ஊற்றுமுகம் , அதைத் தாண்டிய அவனின் இருப்பு என செல்வதில் வைப்பு முறை இருப்பதாக உணர்ந்தேன் .
நாவலில் இருக்கும் ஒரு சுவாரஸ்யம் என்பது ஒரு பாத்திரத்தின் இயல்புக்கு நேர் எதிராக இன்னொரு பாத்திரம் கூடவே இருக்கும் . உதாரணமாக புலோமை நெருப்பு போன்றவள் நிலைகொள்ளாதவள் என்றால், அவள் தமக்கை காலகை குளிர்ந்தவள் என புலோமைக்கு நேர் எதிரான குணங்களுடன் இருக்கிறது .  நாவலில் போர்க் காட்சியும் வருகிறது . போர் என்றால் பலம் கொண்டவர்கள் வெல்வார்கள் என்று எண்ணுவோம் , இந்த போரில் வெல்ல வாய்ப்பு இருந்த, வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த கர்ணன் தோல்வியை அடைகிறான் . போரில் பங்கு பெறாத வெளியில் நின்று வேடிக்கை பார்த்த திரௌபதி தன் சமயோசித செயல்களால் வெற்றியை தங்கள் பக்கம் கொண்டு வருகிறாள் . வெல்லும் சூழலை உருவாக்கி அளிக்கிறாள் .
பாண்டவர்கள் திரௌபதியிடம் முதல் உடல் உறவு கொள்ளும் நாள் காட்சிகளில் பாண்டவர்களின் மனநிலையை அறிய முடிவதை போல திரௌபதியையும் அறிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக மாயை, அவள் திரௌபதிதான் என்று எண்ணுகிறேன் . அர்ஜுனனிடம் அப்படியே தன்னை அளிக்கும் மாயை திரௌபதியில் இருக்கும் ஒருத்திதான் என்று வாசிக்கும் போது தோன்றியது .
ஜெயமோகனின் முதன்மையான புனைவு திறன்களில் ஒன்று நிலகாட்சிகளை விவரிப்பது . நம்மால் அந்த நிலங்களை நேரில் பார்ப்பது போல வாசிக்கும் போது உணர முடியும் . பூரிசிரவஸ் பாத்திரம் துவங்கும் பகுதியில் மலை பிரதேசத்தில் பயணிக்கும் இடங்கள் மற்றும் மத்ர நாட்டில் பூரிசிரவஸ் காணும் காட்சிகள் , சாத்யகி வழியாக துவாரகை நில காட்சிகள் என பல பகுதிகளில் நில காட்சிகள் விரிவாக விவரிக்கப்படுகின்றன.
வெண்முரசில் இருக்கும் முக்கியமான ஒரு சிறப்பம்சம் என்பது எந்த ஒரு விசயத்திற்கும் ஒரு கோணம் இல்லாது பல கோணப் பார்வைகள் காட்டப் படுகிறது . உதாரணமாக வெண்முரசு ஆரம்பத்தில் வந்த பால்ஹிகர் தனது மூத்தவருக்கு மன்னர் வாய்ப்பு இல்லாத போது மூத்தவர் அரண்மனையில் இருந்து வெளியேறிய போது இனி தனக்கும் இந்த இடம் தேவையில்லை என்று அண்ணன் மீதான பற்றில் வெளியேறியது போல வரும் , பிறகு இந்த வெண்முகில் நகரம் படிக்கும் போது வேறு வேறு கோணங்கள் காட்டப்படுகிறது. அவை எல்லாம் சுவாரஸ்யமானவை மட்டும் அல்ல மேலதிக புரிதல்கள் சமூக ஏற்பு, மறுப்பு சார்ந்து , தனது என்று நாம் உணரும் தருணங்கள் சார்ந்து பல்வேறு புரிதல்களை வாசகனுக்கு அளிப்பவை .
எனக்கு இந்த நாவலில் மிக பிடித்த இடம் என்றால் அது பூரிசிரவஸ் – பிரேமை இணை கொள்ளும் காதல் / உறவு கொள்ளும் பகுதிகள் . இனிமையான பகுதி அது .
நாவலில் திருதராஷ்டிரர் கொள்ளும் மகன் சார்ந்த மனநிலை ,அது சார்ந்த மாற்றங்கள் , அதன் வழியாக தந்தை தன் மகனில் கொள்ளும் அன்பு , அது எந்த புற விசயங்களாலும்,   மகன் தவறு செய்தாலும் மாறாமல் இருப்பது . அது விலங்குணர்வு போன்ற மாறாத ஆதி உணர்வு போல ஒன்று என்பதை பற்றி எல்லாம் தர்மன் ,விதுரன் , கிருஷ்ணர் வழியாக எல்லாம் பேசப்படுகிறது . மேலும் திருதராஷ்டிரர் செயல்கள் வழியாகவும் காண முடிகிறது .
நாவலில் தர்மன் யார் மக்களை இணைக்கிறார்களோ அவர்களே பெரிய மன்னர்களாக முடியும், அந்த திறன் தனக்கும் கிருஷ்ணருக்கும் மட்டுமே இருக்கிறது என்று சொல்கிறார். இதைத் தாண்டி கிருஷ்ணரால் தனக்கு ஏற்ப தான் விரும்பும் விளைவுகளுக்கு ஏற்ப சூழலை , மாந்தர்களின் மனநிலையை மாற்ற முடிவதை இந்த நாவலில் விரிவாக பார்க்க முடிகிறது. எந்த பலிகளும் இல்லாமல் , யாரின் மனமும் வருத்தமும் ஏற்படாமல் நாட்டையே இரண்டாக அவனால் பிரிக்க முடிகிறது . எதை செய்தால் மக்கள் கவனம் திரும்பும், எதைச் செய்தால் மனிதனும் மனநிலை மாறும் ,எதை செய்தால் தான் விரும்பும் முடிவுக்கு மனிதர்கள் வருவார்கள் என்பதை உணர்ந்து அதை நிகழ்த்துகிறார். அவரால் அப்படி காட்டில் இருந்து தனிமையில் மூழ்கிய பீஷ்மரை கூட மனம் மாற்றி அரசவைக்கு கொண்டு வர முடிகிறது. எதையும் நேரடியாக செய்வது இல்லை, அந்த இடத்திற்கு அவர்களை அவர்கள் அறியாமல் நகர்த்துகிறார் ,அல்லது உரிய காரணங்கள் சொல்லி கொண்டு செல்கிறார் ! கிருஷ்ணர் சம்படையுடன் பேசும் காட்சி அவரை வேறு தளத்தில் கொண்டு செல்கிறது . அவர்கள் உரையாடுவது முற்றிலும் வேறு தளத்தில் என்று தோன்றியது. அன்றே சம்படை மரணிக்கிறார், அவர் மரணம் ஆவது முன்பே கிருஷ்ணருக்கு தெரியும் என்று தோன்றியது . இன்னும் பல குணங்கள் கிருஷ்ணர் சார்ந்து வருகிறது . மிக சாதாரண மக்களிடமும் உரையாடுவது என . இதை எழுதும் போது புரி சிரவஸ் விழா ஏற்பாட்டில் வேண்டுமென தவறு செய்யும் ஒருவனை கண்டு கொள்வதும் சரியாக அவனிடம் போய் கிருஷ்ணர் கண்டுகொண்டு உரையாடுவதும் ஞாபகம் வருகிறது !
இந்நாவலில் சில இடங்களில் வந்து இருந்தாலும் பூரிசிரவசின் மூத்தவரான சகனை பிடித்தது. நிகழ்வின் உணர்ச்சிகரத்துற்குள் சிக்கிக் கொள்ளாமல் வெளியில் நின்று பார்த்து தீர்வு காண்பவன் அவன் என்று வாசிக்கும் போது உணர முடிந்தது . இது தவிர பால்ஹிக நாடு சார்ந்த நில காட்சிகளும் மிக பிடித்தது . இது தவிர பூரிசிரவஸை ஆரம்பத்தில் விரும்பிய விஜயை, துச்சளை போன்றவர்கள் வேறு மணவாய்புகள் அமைந்த பிறகு பூரிசிரவசை எதிர்கொள்ளும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தன. பானுமதி பாத்திரமும் நன்றாக இருந்தது .
நாம் மிக விரும்பும் ஒன்று நமக்கு கிடைக்காமல் ஆகி விடும் போது அது நமக்கு வாழ்நாள் எதிராக இருக்கும் தரப்பிடம் சென்று விடும் போது உருவாகும் மனநிலை நச்சுமுள் என்ற அத்தியாயங்களில் விரிவாகப் பேசப்படுகிறது .
இன்னொரு இடம் காந்தாரியிடம் கிருஷ்ணர் சகுனியின் காந்தாரி மீது கொண்டிருக்கும் அன்பு/ வழிபாடு பற்றி பேசும் இடம் , மிக நுணுக்கமான மன இயல்பு பற்றி பேசும் இடம் அது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *