
எழுத்தாளர் நிலா மகன் எழுதிய, நாற்கரம் பதிப்பகம் வெளியிட்டுள்ள “சிலுக்கு தேவதை” சிறுகதைத் தொகுப்பு வாசித்தேன்.
அழகான அட்டைப் படம் மற்றும் வடிவமைப்பு.
எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைக்கலைஞர் ரமேஷ் வைத்யா அவர்களின் சிறப்பான அணிந்துரை.
மொத்தமே ஏழு சிறுகதைகளை உள்ளடக்கிய, எளிமையான நடையில் சிறிய தொகுப்பு.
காளிதாசும் கண்ணதாசும் சிறுகதையில், அப்பாவின் வேறு ஒரு முகத்தைக் கண்டு கொண்ட அவரது மகன், அவரை மன்னிப்பதே கதை.
அவ்வளவு பாசமாக இருந்த, அவரது மனைவியும் அவரை மன்னித்திருக்கலாம்.
உறவினர்களை விட தனது அப்பாவின் சந்தோசமே முக்கியம் என்று நினைக்கும் கண்ணதாசன், வாசகனின் மனதில் உயரத்தில் நிற்கிறார்.
தொகுப்பின் தலைப்புக் கதையான சிலுக்கு தேவதையில், மகளின் மீதான அப்பாவின் பாசத்தில், படிக்கும் வாசகனும் உருகிப் போகிறான். மகளைத் தன் வீட்டில் கொஞ்சுவதைக் கூட இந்த சமூகம் விமர்சிக்கிறது என்பதை நினைத்தால், சலிப்பாக இருக்கிறது.சுயசரிதைக் கூறுகளுடைய சிறுகதை.
சக்கரை சிறுகதையில் வரும் சங்கரைப் போல, நாம் நமது அன்றாட வாழ்வில் பலரையும் சந்தித்திருக்கிறோம். தேனொழுகப் பேசுவார்கள் ஆனால் செயலில் ஒன்றும் இருக்காது. நேரில் ஒரு மாதிரியும், பின்னால் வேறு மாதிரியும் பேசுவார்கள். சங்கரின் குணக்கேட்டை பல சம்பவங்களின் வழியாக நமக்குக் காட்டுகிறது இச்சிறுகதை.
படிக்காசு சிறுகதையில் ஒரு சிறு நகரத்தின் டீக்கடையில் நாமும் அமர்ந்து, டீ சாப்பிடும் உணர்வு. டீக்கடையும் சலூனும் தான் இக்காலத்தில் நம்மவர்களின் திண்ணைகள். படிக்காசுவின் பாசம் கடைசியில் தெரிய வருகையில் வாசகனுக்கு ஒரு நெகிழ்வு.
கற்பகத்தின் ராஜாங்கம் சிறுகதை முதியவர்களின் பாசத்தை அழகான முறையில் கடத்துகிறது. ராஜாங்கத்தின் முடிவு திடுக்கிட வைத்தாலும், கற்பகத்திடம் பேசிய பிறகான அவரின் நிம்மதி நமக்கும் தொற்றுகிறது.
அளவி என்றால் அழகு. ஆவாரம்பட்டியாளைப் போல, எத்தனையோ பேர், தமது தாய்நாடு என்று இங்கே வந்து அவஸ்தைப் படுகிறார்கள் என்று நினைத்தால் வேதனையாக இருக்கிறது. அடைக்கலமாக வருபவர்களிடம் நாம் நடந்து கொள்ளும் விதம், அவர்களை தாழ்வு மனப்பான்மையில் தள்ளுகிறது. என்றேனும் இந்நிலை மாறும் என்ற நம்பிக்கையில், அளவிக்காக வருத்தப்படுவதைத் தவிர வேறென்ன செய்ய இயலும்? சிறப்பான கதை.
தப்புத் தாளங்கள் சிறுகதையில் பெற்றவர்கள் செய்யும் தவறுகள் பிள்ளைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை விவரிக்கிறது. நம் நாட்டில் மாசிலாமணியைப் போல கைவிடப்பட்ட எத்தனையோ பேர். ஆனாலும் கடை ஓனரம்மாவைப் போன்ற யாரேனும் இருப்பதால் தான் இங்கு இன்னும் மழை பெய்கிறது.
சிக்கலில்லாத எளிமையான நடை. நாம் தினமும் சந்திக்கும் மனிதர்கள் பற்றிய கதைகள். நிஜமும் புனைவும் கலந்த, சுயசரிதை கூறுகளுடைய கதைகள்.
சிறப்பான வாசிப்பு அனுபவம்.
