ஆடல்

காமம் என்ற எளிய திரையைத் தாண்டி ஒரு ஆணால் பெண்ணை பார்க்க முடிவதில்லை. இல்லையா?” என்றாள். இரண்டு பிளேட்கள் போன்ற அவளது சிறிய உதடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நிமிர்ந்து அவளின் விழிகளின் கருமணிகளைப் பார்த்தேன். மண்ணிறமான தொட்டாச் சிணுங்கியின் மலர்களைப் போல விரிந்திருந்திருந்தன. சில கணங்கள் அவளது கண்களையே பார்த்து விட்டு விலத்தி தூரத்தில் தெரிந்த ஆமை போன்ற சிறிய தீவைப் பார்த்துக் கொண்டே பதில் சொன்னேன்

முடியும் என்று தான் தோன்றுகிறது. குருதி உறவுகள், அணுக்கமானவர்கள் என நெருங்க நெருங்க காமத்தின் எளிய திரைகள் உதிர்கின்றனஎன்றேன்

அதற்கு வெளியே அத்தனை பெண்களும் ஒன்று தான் இல்லையா?” 

ரசனை, மானுட நிலமைகள், உடல் நோய்கள், உளச் சிக்கல்கள், தன்னறங்கள் என பல அடுக்குகள் இருக்கின்றன இல்லையா?” 

அவை அளவைக் குறைத்தாலும் ஒருவனுக்கு ஒருத்தி போதாது இல்லையா?”

ம்ம்.. போதும். ஆனால் அது ஒரு சாத்தியம் மட்டும் தான். பெரும்பாலானவர்களுக்கு அது சாத்தியமில்லை. மனிதன் கற்பனையால் வாழும் விலங்கு. கற்பனை போல நுணுக்கமான ஒன்று இருப்பதிலேயே ஆழமான சிக்கல். கற்பனையே நம் வேட்கையின் தீவிரத்தை தீர்மானிக்கிறது. பெரும்பாலான ஆண்களின் கற்பனைக் காமங்கள் பகற்கனவுகள். அதற்கு மிஞ்சி அவர்களால் நிகர்வாழ்வில் ஒன்றையும் புரிய முடியாது. காமம் மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகம் என நம்மைச் சொல்லும் பொழுதே துலக்கமாகத் தெரிவது என்ன? ஒடுக்கப்படும் ஒவ்வொன்றும் கனவாய் மாறும் தன்மை கொண்டது. கனவுகள்! நாம் எல்லோரும் கனவுகளின் தீராத அலைக்கழிப்புகள்

காமமும் காதலும் ஒன்றின் இரண்டு தோற்றங்கள் தானே?” 

இல்லை. காதலும் காமமும் இரண்டு வேறு வேறு திசைகளில் இருப்பவை. சூரியன் உதிப்பதும் அஸ்த்தமனமாவதும் போல

இருவரும் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தோம். அவள் ஒரு சிங்களஜெர்மானிய கலவை. அவளது அப்பா சிங்களவர், அம்மா ஜெர்மானிய தூதரகத்தில் பணியாற்றியிருந்தார். அப்பா இறந்ததும் ஜெர்மனிக்கே திரும்பிச் சென்று விட்டார். இவள் இங்கே ஒரு துணிக்கடையும் நாயும் வைத்திருக்கிறாள். அவளது கணவன் என் தோள்களில் கைவைத்தபடி மதுவில் நெளிந்து கொண்டிருந்தான். அவன் ஒரு சிங்களவன். அவளுடன் உரையாடத் தொடங்கும் போதே என்னை எச்சரிக்கை செய்திருந்தான். “அவள் பேசும் பேச்சுகளை ஊக்கப்படுத்தாதே நண்பா, பிறகு வருந்துவாய்“. இந்த வினோத எச்சரிக்கை யாரைத் தான் விலகி ஓட வைக்கும்

உன் கண்களிலும் காமம் கொப்பளிக்கிறதே, உன்னை எப்படி நம்புவது?” என்றாள். பச்சை வண்ண ஆடையில் மயில் போலிருந்தாள்

நான் சிகரெட்டை எடுத்து மூட்டினேன்

நீ சிகரெட்டை எப்போதும் இவ்வளவு வசீகரமானதாகத் தான் பற்ற வைப்பாயா?” 

இல்லை. அழகான பெண்கள் முன்னால் இருக்கும் போது மட்டும்என்றேன்

வலக்காலால் நான் அமர்ந்திருந்த வெண்ணிற பெயிண்ட் அடித்த இரும்புக் கதிரையை எட்டி உதைத்தாள். நான் பாதாளத்திற்குள் விழுந்து மீண்டு வந்து திடுக்கிட்டு நேராகினேன். சிரித்தாள். குழந்தையினுடையவை போல வெண்ணிறப் பற்கள். நாங்கள் அமர்ந்திருந்த விருந்து முற்றத்தில் பழைய தேவாலயமொன்றில் பிடுங்கப்பட்டவை போன்ற கற்சிலைகளை வைத்திருந்தார்கள். நடன அரங்கில் ஆங்கிலப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. கொக்டெயில்கள் விரும்பிய அளவு பெருக்கெடுத்தன. குஷ்ஷின் வாசனை பழங்கால அரண்மனை போலிருக்கும் அந்த கட்டடத்தினை இன்னும் வெகுகாலம் பின்னே கொண்டு சென்றிருந்தது. பெரும்பாலானவர்களின் விழிகள் சிவந்த படலம் போல மினுங்கி மேலும் ஆழத்திற்கென அலைந்தன

இரண்டு கற்சிறகுகளை விரித்தபடி ஏரியை நோக்கி வலக்கை விரலை நீட்டியபடியிருந்த ஆண் தேவதையொன்றின் சிலையின் விரல் நுனியில் ஒரு நட்சத்திரம் ஒளிரத் தொடங்கியது. அவளுக்கு அதைக் காட்டினேன். முழு போதையும் அகன்று துள்ளிக் குதித்து போனை எடுத்து அதைப் படம் பிடித்தாள்

ஒரு குட்டி மீனைக் காட்டி குழந்தையை ஈர்ப்பதைப் போல என்னை நீ மயக்கப் பார்க்கிறாய்என்றாள்

தன்னைக் குழந்தையாக உணரச் செய்யும் ஆண்களைத் தானே பெண்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்” 

இல்லைஎன்றாள். சிறிது நேரம் யோசித்து விட்டு தலையை மெல்லச் சரித்து ஆட்டி விட்டு என் தோளில் அடித்து சிரித்தாள். மேலும் அழகு கூடி வந்தது. காது வரை குறுகத் தரித்த அவளது சிகை விம்மித் தழைந்தது

உண்மையைச் சொல். என்னை உனக்குப் பிடிக்கவில்லையா? கோபமும் ஆக்ரோஷமுமான பெண்ணை ஆண்கள் விரும்புவதில்லை” 

சிலர் விரும்புவார்கள். மூளையுள்ள பெண்களை விரும்பும் ஆண்களும் இருக்கிறார்கள். அவர்கள் ரசனை அப்படி” 

தன்னறம் என்றாயே, அதுக்கும் காமத்துக்கும் என்ன இணைப்பு. விளங்கவில்லை?” 

ஒருவனுக்கு ஒருத்தியென்பது ஒரு அறம். அது இலக்கியங்களால் உருவாக்கி அளிக்கப்பட்டது. மதங்களால் நெறிப்படுத்தப்பட்டது. மானுட குலம் வரலாறு நெடுக காமத்தை என்ன செய்வதென்று விளங்காமல் திகைத்தபடியே இருக்கிறது. ஒவ்வொரு மதத்தையும் அது ஏளனம் செய்கிறது. தன் வளைந்த வாலை நேராக்க முடியாத நாயைப் போல அது காமத்துடன் அலைகிறது.

விரும்பினாலும் இல்லையென்றாலும் மண்ணுக்கு அடியில் வேரைப் போல காமம் அனைத்தையும் தொட்டு விட மென்மையான நுண் விரல்களால் துழாவிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் கோடிக்கணக்கானவர்கள். அவர்களை ஒரு போதும் ஒன்றென ஆக்கவே இயலாது. நாம் ஆணின் பெண்ணின் காமங்களிற்கு அப்பால் குயர்களையும் அல்லவா வரலாறு நெடுகிலும் பார்க்கிறோம். அது அத்தனை நுட்பமான அடுக்குகள் கொண்ட இழைப்பு. நீ ஒன்றென ஆக்கும் தோறும் அது இன்னொன்றை விரித்துக் கொள்ளும் மலர்

அறத்திற்கும் தன்னறத்திற்கும் உள்ள வேறுபாடு அதனால் முக்கியமானது என நினைக்கிறேன். அறம் பொதுவாக நிறுவப்பட்டது. மலைகளைப் போல நெடுங்காலம் வளர்ந்து நிற்பது. ஆனால் அது அனைவருக்கும் பொதுவென ஆக முடியாது. எல்லாக் காலங்களிற்குமான பொது அறம் என ஒன்றில்லை. அதை நீயே அறிவாய். காமத்தை ஒழுங்குபடுத்துவதின் சிக்கல் நாளுக்கு நாள் பெருகுவது. கற்பனையைப் போல. ஆகவே தான் தன்னறம் என அதை வகுக்க வேண்டியிருக்கிறது. ஒருவர் பொது அறத்தை மீற முடியும். அது ஏற்புள்ளது. தன்னறமும் மாறக் கூடியது தான். ஆனால் அது அடிப்படையானது. ஒருவரின் சொந்த அழிவும் மீட்பும் தன்னறத்தில் தான் நிலை கொண்டுள்ளது. ஆகவே தான் காமத்தில் ஒருவரின் தன்னறம் முக்கியமானது. அதை அவர் பிறரிடம் வெளிப்படுத்தத் தேவையில்லை. அது மனசாட்சி. அதன் முன் நிற்பது அந்த ஒருவர் மட்டுமே

பனி மெல்ல மெல்ல அடர்ந்து வந்தது. நடன அரங்கில் பாயும் பலவர்ண விளக்கு வெளிச்சங்கள் இருட்டைச் சுழன்று விரட்டின

வா, ஏரிக்கரையின் விளிம்பில் நின்று புகைக்கலாம்என்றாள். அவனது கணவன்என்னை விட்டு விடுங்கள்என மன்றாடினான். அவனுக்கு ஒரு உதட்டு முத்தம் கொடுத்து விட்டு பேப்பரையும் சிறு துண்டு குஷ்ஷையும் அவனது ஜீன்ஸ் பொக்கற்றுக்குள் இருந்து எடுத்துக் கொண்டாள். செவ்வியல் நாடகத்திற்கான அரங்கைப் போல ஏரிக்கரையின் தனிமை மெளன வெளியில் திரை விலகியிருந்தது. கரிய தீவின் மரங்களில் இருள் அசைந்தது

நீ தமிழன் தானே, உங்கள் பெண்களில் இல்லாத எது என்னிடமிருக்கிறது?” என்றாள்

தெரியவில்லை. பெண்ணென்றால் பெண் தான். எங்கு பிறந்தாலும் என்ன செய்தாலும். நான் அப்படித் தான் பார்க்கிறேன். மேற்பரப்பினால் ஏரி அழகாவதில்லை. ஆழத்தினால் உண்டாகும் மாயமே அதை வசீகரிக்கிறது” 

நீ கவிஞன் தான். ஒத்துக் கொள்கிறேன். அதற்காக சொற்களால் விளையாடாதே” 

அப்படியென்றால் நீயே சொல், நீ அறிந்த சிங்களப் பெண்களுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்? உடை உடுத்தும் முறையா? ஆபரணங்களா? நீளமான அருவிக் கூந்தல்களா? சொல்?”

அது எல்லாம் வித்தியாசம் தானே?” 

வெறும் விவாதத்திற்காக முரண்டு பிடிக்காதே, நீ அறிவாய். இங்கிருக்கும் எல்லோருக்கும் ஒருவரை இன்னொருவருக்குத் தெரியும். அனைவருக்கு அடியிலும் இருப்பது எதுவோ அதுவே அனைத்திற்கும் அடியிலும் இருக்கிறது. மேற்பரப்பை அறியாதவர்கள் இருக்கலாம், ஆனால் ஆழம் அனைவரும் அறிந்தது தான்

அவள் சற்றுச் சீற்றமானாள். பூவரசம் இலையை நொடியில் மடித்து குழல் செய்யும் சிறுமியின் கைநயத்துடன் குஷ்ஷை மடித்து பேப்பரில் உருட்டினாள், பற்ற வைத்து இழுத்துக் கொண்டு தன் சிறிய கறுப்பு ஸ்வெட்டரை எடுத்து தோளில் போட்டுக் கொண்டாள். பின்னால் அலறிக் கொண்டிருந்த பாடலின் இரைச்சல் மெல்ல மெல்ல நீருக்கடியிலென அமிழ்ந்து கொண்டிருந்தது

ஆக இங்கு நடப்பதெல்லாம் நாடகம் என்று சொல்கிறாய், எல்லாம் நடிப்பு இல்லையா?” என்றாள்

புகையைக் கையில் தந்தாள், ஒரு கைமாற்றைப் போல

இல்லை. மேற்கு இலக்கியங்களில் தான் இதுவொரு நாடகம், கீழைப் பண்பாட்டில் இதுவொரு ஆடல்என்றேன்.

ஆடலென்றால், ஆடுவதா?” 

ஆங்கிலத்தில் இதை விளக்கிச் சொல்ல முடியாது. ஆனால் ஆடினால் உனக்கு விளங்க வைக்க முடியும்என்றேன்

இத்தனை நேர்மையான தந்திரத்துடன் எவனும் என்னை ஆட அழைத்ததில்லை. நீயொரு கள்வன்என்றாள்

புன்னகையுடன்நீ தமிழ் ஆணிடம், குறிப்பாக கவிஞனை இதற்கு முன் சந்தித்தது இல்லை அல்லவா? அவர்கள் அப்படித் தான். குலத் தொழிலே பாடி மகிழ்வித்தல், பெண் நாடல்என்றேன்

அடிவயிற்றைப் பிடித்தபடி சிரித்தாள். “அயோக்கியர்கள்!” என்றாள்

எல்லா மொழிகளிலும் ஒரு கவிஞனின் முதன்மைத் தொழில் அது தான். சொற்களைச் சாணை பிடிக்கும் கல்லைப் போன்றது காமம். கவிதை என்பது மயங்கச் செய்து நம்ப வைப்பது. அது உண்மை இல்லை என சொல்பவரும் கேட்பவரும் அறிவார்கள். ஆனால் அது அப்போதைக்கான பெரிய உண்மை என இருவரும் நம்புவார்கள். கவிதை என்பதை இருவர் நம்பும் ஒரு பொய் எனச் சொல்லலாம்என்றேன்

என் கண்களை நேராகப் பார்த்துஉன்னை எனக்குப் பிடித்திருக்கிறதுஎன்றாள்

சந்தேகமேயில்லாமல், நானும் நீயும் நேற்று மாலை சந்தித்துக் கொண்ட போதே உனக்கு இது தெரியும் தானே. எனக்கும் அது தெரியும். அது தான் நான் சொன்ன ஆழம்என்றேன்

நிச்சலனமாக ஏரியைப் பார்த்தாள், தலையைச் சரித்துத் தூக்கி ஆகாயத்தைப் பார்த்தாள்

நீ உண்மையாக யாரையாவது காதலித்திருக்கிறாயா? அப்படி ஒரு உணர்வு உனக்கு வந்திருக்கிறதா?” என்றாள்

அவளது கண்களில் இரண்டு விண்மீன்கள் நீந்தி என்னை நெருங்கின. அத்தனை தீவிரமான பார்வை. தொட முடியாமல் கண்களைத் தாழ்த்திக் கொண்டே சொன்னேன்

யெஸ். நான் ஒரு முறை வாழ்வில் காதலை உணர்ந்திருக்கிறேன். ஒரே ஒரு முறை

அவள் கைகளைத் தட்டி ஆகாயத்திற்கும் ஏரிக்குமிடையில் தேவதை போலக் காற்றில் துள்ளிக் குதித்தாள்

யெஸ். நான் நினைத்தேன், நான் நினைத்தேன். உன் கண்களில் காதலை அறிந்தவனின் நிதானம் இருக்கிறது. என்னிடம் நீ வெறுமனே விளையாடுகிறாய். உன் திறமைகளைப் பரிசோதித்துப் பார்க்கிறாய். பொம்மைக் கடையில் சிறுவனைப் போன்ற உன் கண்களில் அனைத்தும் உள்ளதுஎன்றாள்

யெஸ்.. இது ஒரு ஆடல்” 

“Ahhh.. சொல், ஆடலென்று என்னைக் கொல்லாதே, எங்கிருக்கிறது அதன் முடிச்சு?” 

நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது

வாலைப் பிடித்துக்கு கொண்டு தலையை விட்டு விடுகிறாய். சரி, உனக்கு காதல் வந்ததை எப்படி நீ நம்பினாய்?”

அவளை நான் பார்த்து பல காலங்களுக்குப் பின்னர், என்றுமே நான் அவளைக் காதலிக்கும் எண்ணம் இருக்கவில்லை. குறிப்பாகச் சொன்னால் காதலையே நான் மறுப்பவனாக அப்போது இருந்தேன். அவளுக்கும் எனக்கும் இடையில் இருந்த ஆடலே அது தான். அவள் காதலை மட்டுமே உண்மையான ஒன்றென நம்புபவள், நான் அதன் மறு அந்தத்தில் நின்றேன். இருவரது எந்த விவாதமும் உச்ச கோபத்திலோ உச்ச சிரிப்பிலோ தான் முடியும். கோபம் தான் அதிகம்

இரண்டு நம்பிக்கைகள் மோதிக் கொள்வது கோபத்தின் ஆற்றலிலே மட்டும் தான் சாத்தியம். அவள் எங்கள் இலக்கியங்களின் ஆதார கதாபாத்திரங்களின் கனவின் திரண்ட உரு. நான் ஓஷோவின் மாணவன். அவரது காதல், காமம் பற்றிய பார்வைகளே எனக்கிருந்தன. இரண்டு வலிமையான தரப்புகள் மோதிக் கொள்வதே மெய்யான விவாதம். தர்க்கங்கள் ஐஸ் கட்டிகளை எறிந்து முட்டிக் கொண்டு வெடித்தன. பளிச்சென்ற முனைகள். உடைகையில் துண்டு துண்டாகத் துமித் துமியாகச் சிதைபவை. என்றுமே இருவரும் ஒருவரை இன்னொருவர் தர்க்கத்தால் வெல்ல முடியாது திகைத்தோம்

ஒரு பின்மாலைப் பொழுதில் என்னதென்று இன்று விளக்க முடியாத உவகையில் மனம் திளைத்திருந்தது. கனியப் போகும் கனிக்குள் உள்ள இனிப்பைப் போல, கனிந்து ஊறப் போகும் அதன் உள்ளுணர்வே கனியாவதைப் போல

ஒரு குளக்கரையில் நான் அமர்ந்திருந்தேன். அவள் அவளது வீட்டில். இருவரும் உரையாடிக் கொண்டிருந்தோம். தர்க்கங்கள் கரைந்த பின்னர் எஞ்சும் நீரில் இரண்டு மீன்களைப் போல என இப்போது சொல்லத் தோன்றுகிறது. தீவிரமாகப் போரிட்ட இணையான வீரர்கள் களைத்து சாய்ந்து அமர்ந்திருக்கும் பொழுது இருவர் மட்டுமே உணரும் அந்தரங்க நெருக்கம் அது. அதைச் சொற்களால் என்னால் விவரிக்க முடியவில்லை. ஆகவே தான் உவமைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்எனச் சொல்லி அதற்கு மேல் சொற்கள் எழாமல் திக்கித்தவன் போல நின்றேன். திடீரென்று விழித்துக் கொண்ட தபஸ்வியைப் போன்று குலைந்து சுற்றையும் பார்த்தேன்

மகத்தானதை மட்டுமே அப்படிப் பார்க்க முடியும் எனும் நோக்கால் அவள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். விழுங்கி விடும் பார்வை. அரிதானதை நோக்கும் நுண்மை கூடியது. புன்னகையுடன் எனக்கு புகையை நீட்டினாள். வாங்கி இழுத்து அந்த மனநிலையிலிருந்து இறங்க விரும்பினேன். பாதத்தின் உறுதியான இருப்பைப் போல அந்த உணர்ச்சிகரம் என்னை விட்டு நீங்காமல் அப்படியே இருந்தது. அப் பாதத்திலிருந்து ஏறும் குளிர் போல காதல் என்னுள் ஓங்கி வளர்ந்தது

சிரித்தபடிகாதலை நான் உணர்ந்தேன்என்றேன்

எப்படி?” 

அவளுடன் உரையாடி முடித்து எழுந்தேன். கால்களால் நடக்கவே முடியவில்லை. நரம்புகள் பின்னிக் கொண்ட பாம்புகளைப் போலக் குழைந்தன. என் மூச்சு எனக்கே அந்நியமானது போல இருந்தது. காதலைப் போல தாங்கிக் கொள்ள முடியாத உணர்வு உடலுக்கு மிகவும் புதிதானது. உண்மையாகவே தாங்க முடியாதது. உலகை மறந்து அதைப் பிளந்து காற்றைப் போல நடந்தேன். எல்லாம் எனக்கென வழி பிரிந்து விலகின. என் மேல் விழுந்தனவும் எனக்குப் பொருட்டே இல்லாமல் இருந்தன. கொஞ்சத் தூரத்திற்கு மேல் நடக்க முடியாமல் நகரத்தின் வீதிக்கரையில் விழுந்து படுத்து விட்டேன். புன்னகை மட்டுமே உடலாக ஆக முடியும் என்பதை அன்று அறிந்தேன். தித்திப்பது எத்தனை தாங்க முடியாது என்பதை அறிந்த முதற்கணம் அது. காதல் உண்மையாகவே நிகழ்வது உள்ளத்தில் அல்ல. உடலில். உடலும் உள்ளமும் இரண்டில்லைஎன்றேன்

நடன அரங்கின் ஓசை நீருக்குள்ளிருந்து எழுந்து வரும் செவியைப் போல கேட்கத் தொடங்கியது. நான் முன்னர் கேட்டேயிராத பாடல்கள் தான் அங்கே ஒலித்துக் கொண்டிருப்பதால் எனக்கு ஒரு குறையும் இல்லை

எப்படி இது சாத்தியம்! ஹோலி ஷிட்! எப்படி இது நிகழ முடியும்?” எனக் கூவினாள்

என்ன ஆயிற்று?” 

வா, இங்கே வா, ஒரு சொல்லும் சொல்லாதே, உலகிலேயே எனக்கு மிக மிகப் பிடித்த பாடல் இது தான். மிகச் சரியாக இந்த நொடியில் இது எப்படி ஒலிக்கிறதுஎன்று சொல்லிய பின்னர் ஏரியில் ததும்பும் மென்னலை ஆட்டத்துடன் ஒத்திசைந்து தன் உடலை அசைய விட்டாள்

நான் என் பாட்டுக்குக் கோணலாக அசைந்தேன். காற்று விட்ட திசைக்கு பாய்மரம் போல என் பெரிய சேர்ட் ஆடியது. அது நான் ஆடுவது போலிருக்கவே நான் அதில் பொதிந்து கொண்டேன். குளிரான பனிக்காற்றும் குஷ்ஷின் கதகதப்பும் சேர அசைந்தேன். அவள் உடல் நடுங்கத் தொடங்கியது. வரிவரியாக அவளது பிளேட் உதடுகள் அப்பாடலின் சொற்களை மிகத் துல்லியாமாக அசைத்தன. சொல் ஓசையின்றி உதடுகளில் துடித்துக் கொண்டிருந்தது

திரும்பி நடன அரங்கைப் பார்த்தேன். நிழல்களும் உடல்களும் வேறு வேறு காலங்களில் ஆடிக் கொண்டிருந்தன. ஒரு நிழல் இன்னொரு நிழலைத் தழுவி விலகியது. இன்னொரு நிழலின் அபிநயம் இன்னொன்றிற்கு மிகச் சரியாக ஈடு கொடுத்தது. சிலர் அதன் ஓரங்களில் சாய்ந்து படுத்திருந்தனர். ஒரு பக்கத்தில் குவிந்திருந்த சாறமும் சேர்ட்டும் அணிந்த சிப்பந்திகள் இந்த மேட்டுக் குடிக் கொண்டாட்டத்தை அசையாத உறைந்த முகங்களுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்

நீ ஏதோ விளங்க வைக்கப் போகிறாய் என்றாயே? அது என்ன?” 

நீ ஆடுவது உனக்குப் பிடித்திருக்கிறதா?” 

ஓம் எனத் தலையசைத்தாள். சூரியகாந்தி சுழல்வதைப் போல தலையை ஆட்டினாள். கைவிரல்களில் நளினம் அசைந்தது. ஒரு துள்ளல் துள்ளி ஈரம் படிந்த புற்களில் கால்களை வைத்து சிறகைப் போல கைகளை விரித்தாள்

ஆட விரும்பும்  எண்ணத்தை உனக்குள் தோன்றச் செய்வது எது? இந்தப் பாடலா? அதன் இசையா? வரிகளா? அதில் உள்ள காதல் பற்றிய மிகையான கற்பனைகளா? சொல்?”

நானும் உன்னைப் போலத் தான் நண்பா, என் உடலில் காதலை உணர்கிறேன். ஆனால் பெரிய தனித்த காதல். ஒரு போதும் அது நிறையவே இல்லைஎன்றாள்

பெருகிக் கொண்டிருக்கும் மலையருவியின் ஊற்றைப் போல, தொடங்கும் இடத்தில் குளிர்ந்து தளிர் போன்ற தீ நீர். பெருகுகையில் ஆங்காரமான பேரிரைச்சலுடன் கொந்தளிப்பான அக்கினிப் பெருக்குஎன்றேன்

யெஸ்.. நீ சரியாகத் தான் சொல்கிறாய். ஆனால் ஏன் என்னால் முழுமையை நோக்கி செல்ல முடியவில்லை?” 

உன்னிடம் ஆன்மீகமில்லை. ஆன்மீகமில்லாத காதல் நிறைவடையாது. தகித்துக் கொண்டிருக்கும் எரிமலையின் உடல் அது” 

ஆன்மீகமா, ஷிட். நீ ஓஷோவின் ஆள் இல்லையா, அந்த தாடி வைத்த செக்ஸ் சாமியாரின் சீடன்

ம்ம். செக்ஸும் ஆன்மீகமென்று அவர் சொல்லியிருக்காவிட்டால் அது வெறும் விலங்குணர்ச்சி என நம்பியிருப்பேன். எந்த ஒரு மானுட உணர்ச்சியும் ஆன்மீகத்தைத் தொடாமல் நிறைவை அளிக்காது

இப்பொழுது நான் தியானம் செய்ய வேண்டுமா!” எனச் சொல்லி சின் முத்திரை பிடித்துக் கொண்டு நடித்துக் காட்டினாள். உதறலான ஒரு பர்ர்ர் ஒலியை குறட்டையைப் போலச் செய்து காட்டி விட்டுகண்ணை மூடி அமர்ந்தால் நான் உறங்கி விடுவேன். தியானம் எல்லாம் ஏமாற்றிக் கொண்டே உறங்கும் வேலை” 

நீ ஒரு குறையைச் சொன்னாய் நான் அது நிறையும் வழியைச் சொன்னேன். மிகுதி உன் விருப்பம். ஆனால் நான் உண்மையாகவே உணர்ந்த ஒன்றைச் சொன்னேன். புத்தகங்களில் வாசித்ததை அல்ல

அமைதியாக ஆனாள். ராட்சத பலூன் போல ஊதிய இருக்கை ஒன்றில் அமர்ந்தாள். எண்ணையில் நீரென அதில் ஆடினாள்

ஒரு வைன் கிண்ணத்தில் சோடாவைக் கொணர்ந்து கொடுத்தேன். ஒரு மடக்கு குடித்து விட்டு உதடுகளை உரசி மினுக்கினாள். பளபளவென்ற இளஞ்சிவப்பு நிறமென்பது அது மட்டும் தான் எனத் தோன்றியது

ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே கைகளை என் நெஞ்சை நோக்கி நீட்டிஅப்படியென்றால் எனக்குக் காதல் நிறையவே நிறையாதா?” என்றாள்

அதற்கு நீ தியானமெல்லாம் செய்யத் தேவையில்லை. தியானமென்பது என்ன? உன்னை நீயென அறிதல், நீயாகவே மட்டும் இருக்கும் நிலையை எய்தல். மனமோ உடலோ இதயமோ இல்லை, தியானம் உன்னைக் கூட்டிச் செல்வது துரியத்திற்கு என்று ஓஷோ சொல்வார். அனைத்து உயிரின் ஆழமும் தழுவியோடும் மாபெரும் நதி அது” 

எனது தத்துவங்கள் வாழ்க்கையை இப்படியும் அப்படியும் கத்தரிக்கோலால் அறுப்பவை. துயரத்தை அடிப்படையான உண்மை என நிறுவுபவை. மேற்கின் எல்லாக் குப்பையும் என் தலைக்குள் தான் இருக்கின்றன” 

உண்மை தான், அவை ஆன்மீகத்தை ஒரு மீட்பெனக் கருதுபவை, ஓஷோ அந்தப் புள்ளியைத் தான் தன் கூர்மையான வாதங்களால் தகர்த்தார். கீழை உலகம் மகிழ்ச்சியை அடிப்படையான ஆன்மீகமாக என்றோ கொண்டு விட்டது. காலனித்துவம் யானைக் கூட்டம் நுழைவது போல இந்தப் பண்பாட்டின் ஆழங்களைக் குலைத்து விட்டது. சேற்றுக் கலங்கலெனவே இங்கு இப்போது ஆன்மீகமும்” 

ஹ்ம்ம்..” என்றாள். சொற்கள் விடாய் போலப் பெருகுபவை, சொற்களின் ஆழத்தை உணர உணர தாகம் அடங்கி விடுகிறது

நீ ஞானியா?” 

இல்லை. கவிஞன்” 

ஆன்மீகமான கவிஞர்களும் இருக்கிறார்கள் தானே, கபீரைப் போல ரூமியைப் போல” 

ஒரு நாள் அப்படி நான் ஆகலாம். ஆனால் காதலை என் வாழ்க்கையில் உணர்ந்து உலகியலில் நிறைந்து விட்டேன். இதுவும் ஒரு பேறே. இங்கிருந்தும் நான் அடையக் கூடியவை நிறையவே உண்டு” 

சிரித்தாள். “யெஸ். நீ ஞானியில்லை. உன் கண்களில் இருப்பது காதலின் குறுகுறுப்பு. நுண்ணியதாக, ஒரு கனவின் வால் நுனி போல” 

நீயும் கவிஞை தான்” 

உரக்கச் சிரித்தாள்

உனக்கு நெஞ்சம் பதறத் தொடங்கி விட்டதா, பயப்படாதே நான் உன்னை விழுங்கி விட மாட்டேன். நீயொன்றும் அத்தனை மகத்தான காதலனில்லை” 

நானும் அறிவேன். இங்கு யாரும் அத்தனை மகத்தான காதலனில்லை

பிறகு எதற்கு என்னை மயக்க இத்தனை பிரயத்தனப்படுகிறாய்?” 

ஆடலின் நிமித்தம்என்றேன்

என்ன?”

சரி, நேற்று மாலை உன்னை நான் பார்த்த முதற் கணம் உனக்கு நினைவிருக்கிறதா?” 

நான் பார்த்துக் கொண்டிருந்த நேரத்திலேயே ஏதோவொரு இமை வெட்டுக் கணத்தில் அநாயசமாகச் சுற்றிய புகையை நீட்டினாள்

இது உனக்காகஎன்றாள். அவளது நாவிளிம்பின் எச்சில் பேப்பரின் முடிச்சை பிணைத்து மின்னியது

ம்ம்.. சொல். நினைவிருக்கிறதா?” 

தலையை இடமும் வலமும் ஆட்டி விரல்களாலும் No என காட்டிஅதற்கு என்ன?’ என்பது போல புருவத்தை தூக்கி வினவினாள்

இது தான் ஆடல், நானறிவேன், வானுக்கு இடக்கை சுட்டுவிரல் உயர்த்திய பெண் தேவதையின் சிலையின் முன்னிருந்த தடாகத்தின் பிம்பத்தில் பார்த்துக் கொண்டோம். தேவதையின் பின்னே உரோமாபுரி அரண்மனைகளின் உயர்ந்த தூண் போன்ற மரமொன்று நின்றது. அந்தச் சிலையின் பின்னால் சூரியன் காட்டுக்குள் இறங்கியபடி இருந்தது. போர்வையைப் போல மாலைப்பனி அணைத்தது. வெய்யிலின் இளஞ்சூடும் இருந்தது. நான் நீரில் விழுந்த என் பிம்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அசைவில்லாத நீர்மேற்பரப்பில் சில ஊதா நிற மலர்கள் விழுந்திருந்தன. சில ஊதா நிற அல்லிகள் அவிழ்ந்திருந்தன. பெரிய ஆழமில்லாத அந்தத் தடாகத்தின் மறுமுனையில் அந்த தேவதை தலை குனிந்திருந்தாள். நீ என்னருகில் வந்து நின்றாய், நீர்ப்பரப்பை பார்த்து விட்டு தேவதையை உற்றுப் பார்த்தாய். நான் உன்னை நீரில் விழுந்த உன் பிம்பத்தில் பார்த்தேன். அத்தனை அழகான பெண்ணை கவனிக்காது விடும் அளவிற்கு எனக்கு முட்டாள்த்தனமில்லை. நானும் தேவதையை நிமிர்ந்து பார்த்தேன். நீ என்னருகில் ஐந்து நிமிடத்திற்கு மேல் தொடுகையே இல்லாமல் பறந்து கொண்டிருக்கும் வண்ணத்துப் பூச்சியைப் போல மிதந்து கொண்டிருந்தாய். நீ எனக்கு அருளினாய், எல்லா பெண் தெய்வங்களும் எளிய பக்தனுக்கு காட்டும் சிறிய அருளலை. அதுவே நம் ஆடலின் துவக்கம்என்றேன்

நீயொரு கள்வன், மோசமானவன், அயோக்கியன். எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கிறாய்என்றாள்

முதல் மூன்றும் நான் தான், ஆனால் நீ என்னை விடக் கள்ளி, மோசமானவள், அயோக்கியை. உனக்கு என்னை விட அந்தக் கணம் அதிகம் நினைவிருக்கும்

சீண்டப்பட்ட பூனையைப் போல விலகி நகர்ந்தாள். சோடாவைக் குடித்து முடித்துகொண்டு வா, போஎன அதட்டினாள். அவளது கணவனைப் பார்த்தேன். மேசையின் மீது கவிழ்ந்து நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். திருமணத் தம்பதிகள் இருவரும் நடன அரங்கில் காதல் பாடலொன்றுக்கு ஆடிக் கொண்டிருந்தனர். அவர்களை நோக்கி வைன் கிண்ணத்தை உயர்த்தி சியேர்ஸ் சொன்னேன். அவளிடம் திரும்பி நடந்த போது கற்சுவரில் அமர்ந்திருந்தாள். அவளது கால்கள் இரண்டும் மெழுகுத் துண்டுகள் போல ஒளிவீசின. கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள். துமித்துத் தூறும் மழையைப் போல அழுதழுது ஏரியைப் பார்த்தாள். பல்லாயிரம் கால்களில் காற்று ஏரியின் மீது நடக்கும் தடங்கள் தோன்றி வந்து எங்களையும் உழக்கியபடி நகர்ந்து சென்றது. உடல் மயிர்கள் புல்லரித்தன. சிகரட்டைப் பற்ற வைத்து அவளிடம் நீட்டினேன். உதடுகள் நடுங்க வாயில் வைத்து இழுத்து ஊதினாள். அந்தப் புகையைக் குடிக்க வேண்டும் போலிருந்தது. கேட்டிருந்தால், மறுத்திருக்க மாட்டாள்

இமைகளைத் திறக்காமல், “உண்மையைச் சொல், உன்னால் உண்மையாகவே என்னைக் காதலிக்க முடியாது இல்லையா, என்னை மட்டுமே காதலி என மூர்க்கமாகச் சொல்லும் பெண் என மாறிவிடுவேன் என நினைக்கிறாய் இல்லையா? குடித்து விட்டு புலம்பும் ஒரு பொறுக்கிப் பெண் என நினைக்கிறாய்? யெஸ். நான் அறிவேன். நான் சுதந்திரமானவள், ஆனால் கோபக்காரி. எனக்குக் கோபம் அடிவயிற்றில் பிறந்தது. இங்கிருக்கும் அனைத்திலும் அது எதிரொலிக்கிறது

கோபம் பெண்ணுக்கு ஒரு வரம். அதுவே அவளை வெல்லுதற்கு அரியவள் ஆக்குகிறது. அனைத்திலும் அனல் உண்டென்கிறது ஒரு இந்து நம்பிக்கை. ஆடும் சிவனென்பது தீயின் நெளிவு, பெருக்கு. பிரபஞ்சமே ஒரு ஆடல் என்கிறது இன்னொரு நம்பிக்கை” 

அவள் அமைதியானாள். அடிவயிற்றை மெல்லிதாக தடவிக் கொண்டாள். “தண்ணீர்?” என்றாள். எடுத்து வந்து கொடுத்தேன். கற்பரப்பில் படுத்திருந்து கைகளை தலைக்கு அடியில் கோர்த்திருந்தாள். அவளது முகத்துக்கு நேரில் வந்து நின்று நீரைக் கொடுத்தேன். நீரில் இத்தனை நிறைவுடன் தான் விழுந்து கிடந்தாய் எனச் சொல்ல விரும்பினேன். அவள் என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள் என எண்ணம் தோன்றவும் சிரித்தேன். அவள் சந்தேகமான இனிய புன்னகையை அருளினாள். நீரைக் குடித்து விட்டு ஏரியை நோக்கி ஒரு கை தலைக்குக் கொடுத்து சயன அமர்வில் திரும்பினாள். அருகில் அமர்ந்து கொண்டேன். மீண்டும் சிகரெட். மீண்டும் புகை

எனக்குத் தெரியவில்லை. எது என்னை இந்தக் காதலை நம்பச் செய்கிறது, மடத்தனமான இந்தக் காதல் எங்கிருக்கிறதென்று தெரியவே இல்லை. புத்தகங்களில் வாசித்தேனா, வாழ்க்கையில் பார்த்தேனா, கனவா தெரியவில்லை. உனக்குத் தெரியுமா?”

தெரியும்என்று சொல்லி நிறுத்தினேன்

ஆடலா?” எனச் சொல்லிச் சிரித்தாள். அவளது தேகம் சயன அமர்வில் வெல்வெட் பூச்சியைப் போல மிருது காட்டியது

இல்லை, உண்மையாகவே தெரியும். நான் கவிஞன்” 

உன்னிடம் நான் கெஞ்ச வேண்டுமா? சொல், இல்லையென்றால் நரகத்திற்குப் போ” 

உலகின் அழகான ஒவ்வொன்றும் காலமின்மையில் இருக்கிறது. காலத்திற்கு உள்ளே வாழ்ந்து மடியும் ஒவ்வொரு அழகும் காலமின்மையில் சென்று சேர்கிறது. மழைத்துளி கடலிலென

காதல் மிக மிக அழகானது, ஆனால் அதுவும் காலமின்மையில் நின்று கொண்டிருப்பது. காலமின்மையின் சிக்கல் என்னவென்றால் அது காலத்திற்குள் பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்த மட்டுமே முடியும். மேகம் மண்ணில் மிதக்க முடியாதது போல, துளித்துளியாக மண்ணைத் தொட்டு விடுவதைப் போல, தொட்டுத் தொட்டு நிறைவதைப் போல, நானும் நீயும் எல்லோரும் ஒவ்வொரு சின்னஞ்சிறு துளிகள், நாம் பூமியெங்கும் காதலைப் பெய்கிறோம். ஆகவே நாம் பூரணத்தை அடைய முடியாது. அந்தத் துளிக்கணத்தில் விரியும் வேகமும் அடையும் நிறைவும் நம்மில் எஞ்ச முடியும். பெண்ணால் அதை ஒரு போதும் ஏற்க முடியாது. அவள் ஆழத்தில் கடல் எனத் தன்னை எண்ணிக் கொள்பவள். ஆணுக்கு காதல் ஒரு நிமித்தம் தான், ஆடலே பொருட்டு. பெண்ணுக்கு காதலே பொருட்டு. இதை ஒரு வகையில் இந்த ஆடலின் நியதி எனச் சொல்லலாம்” 

என்ன உளறுகிறாய், எங்கிருந்து இந்தக் குப்பைச் சிந்தனைகளை அள்ளி வருகிறாய்” 

சிரித்தேன்.

ஆடலின் மிக முக்கியமான சிக்கல் எதுவெனத் தெரியுமா?” என்றேன்

தெரியும்என்றாள்

அவளைப் பார்த்தேன். பிடரி முடிகள் உலைந்து கொண்டிருக்க தியானத்தில் இருப்பவள் போல அமர்ந்து கொண்டாள்

சொல்” 

நடன அரங்கு வெறிச்சென்று இருந்தது. காதில் பாடலோ சிறிய பேச்சுக் குரல்களோ கூடக் கேட்கவில்லை. அவளது மூக்கு நுனியின் வாளிப்பைப் பார்த்தேன். அகன்ற பொன்னிற நெற்றியில் சிகை தவழ ஏரியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது மூக்கைத் தொட்டால் எவ்வளவு குளிருமோ அவ்வளவு குளிர் என் நெஞ்சில் இருந்ததை உணர்ந்து கொண்டிருந்தேன். சிகரெட்டை எடுத்து மூட்டினேன். மார்பு மயிர்கள் சூடாகி வந்தன. அவளால் அந்தக் குளிரைத் தாங்க முடியாது என மூளை ஒரு கணம் அதிர்ந்தது. “போகலாம் வா, ஒரு போர்வை வேண்டும் உனக்குஎன்றேன்

ஏரி நீரின் நிச்சலனத்துடன் அவளது குரல் கேட்டது, “அது ஆடலென்பதை நாம் அறியவே கூடாது. புறவயமாக நாம் அதைச் சொல்லாக மாற்றக் கூடாது. இப்போது இக்கணம் என் இதயம் உணரும் ஒன்றைப் போல”  

நான் கற்சுவரிலிருந்து இறங்கினேன். இடுப்பில் கையை ஊன்றி ஒரு கையால் சிகரட்டை இழுத்தபடி அவளைப் பார்த்தேன். அவள் ஏரியை நோக்கியிருந்தாள். நான் அவளது முதுகைப் பார்த்தேன். மெல்லிய கூன் விழுந்தது போல வளைந்திருந்தாள். தலை கவிழ்ந்திருந்தது

சரி தான், என்னுடன் ஆட வருகிறாயா?” எனக் கேட்டேன். உண்மையில் வாயால் அந்தச் சொற்களை நான் உச்சரித்தேனா? அவள் மறுப்பாள் என என்னுள் உறுதியாகச் சொல்லியது எது

அவளது உடல் சுருங்கி வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். விதைக்குத் திரும்ப பூ விரும்புவதைப் போல. அவளில் நிறைந்து ததும்பும் தனிமையை நெருக்கமாக உணர்ந்தேன். அருகருகே உரசும் மேனி மயிர்களின் தொடுகையென

அவளது பிளேட் உதடுகள் கூர்மையாக அச்சொல்லை உச்சரித்துப் பார்த்தன.  

ஆடல்“. 

தனக்குள் அது இல்லையெனச் சொல்வது போல தலையை ஆட்டி மறுத்தாள். விம்மினாள். கண்ணீர் பெய்யும் விழிகளை மூடிக் கொண்டு நெஞ்சைப் பிடித்தபடி குறண்டினாள். தொட்டு வருடி விட்டிருக்க வேண்டும் நான். அதைச் செய்யக் கூடாது. விரல்களின் நுனியில் எழாத தொடுகை வெறும் காமம். நான் புகையை எடுத்து மூட்டினேன். இழுத்து நுரையீரலை நிறைத்து ஊதினேன். அவளைக் கடந்து அப்பால் இருந்த தீவின் மரங்கள் காற்றை ஊதின. ஏரியின் மார்பில் பட்டு எழுந்த குளிர்காற்று எங்களைத் தழுவிச் சென்று கொண்டிருந்தது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *