
கவிஞர் சீனு ராமசாமியின் மேகங்களின் பேத்தி கவிதைத் தொகுப்பு வாசித்தேன்.
ஓவியர் ரவி பேலட்டின் அழகான முன்னட்டை மற்றும் கவிஞரின் பின்னட்டை ஓவியங்கள் அருமை.
கவிஞர் லார்க் பாஸ்கரின் சிறப்பான வடிவமைப்பு. வெளியிட்ட எழுத்து பிரசுரத்திற்கு வாழ்த்துகள்.
கவிஞர் கரிகாலனின் அருமையான அணிந்துரை. தீக்கதிர் மேனாள் ஆசிரியர் அ.குமரேசன் அவர்களின் ஆய்வுரை மிகச் சிறப்பு.
எனக்குப் பிடித்த இந்தியாவின் தலைசிறந்த நடிகரான விஜய் சேதுபதிக்கு, இத்தொகுதியை அர்ப்பணம் செய்துள்ளார்.
நூற்றுக்கணக்கான கவிதைகள். கவிஞரின் பாடுபொருள்களுக்கு வானமே எல்லை.
முதல் கவிதையே சிறப்பு:
அம்மா பசிக்குது என்றால்
ஒவ்வொரு பருவத்துக்கும்
ஒருத்தியாக வருகிறாள்
ஒரு தாய்.
பசிக்குது என்றால் எந்தப் பெண்ணாலும், உணவிடாமல் போக இயலாது . ஏனெனில் ஒவ்வொரு பெண்ணிலும் ஒரு தாயிருக்கிறாள்.
அடுத்த கவிதையும் அருமை.
யாரோ இயற்பெயரை
சுருக்கி அழைக்கிறார்கள்
சட்டென்று திரும்புகிறது
பால்ய நதியின் வழியே
போன உயிர்.
இயற்பெயரை சுருக்கி அழைப்பவர்கள், நிச்சயமாக நமக்கு பால்ய வயதிலிருந்தே நட்பானவர்களாகத்தான் இருக்கும். ஒரு கணம் சட்டென்று திரும்புவோம்.
அடுத்த கவிதையான, விஷ உலகு, முக்கியமான பிரச்சினையான செயற்கை விவசாயம் பற்றிப் பேசுகிறது. எல்லாவற்றிலும் ரசாயனம். எல்லாப் பூச்சிகளுக்கும் மருந்து. இந்த இரண்டு வரிகள் போதும்:
முன்பல் இரண்டில் ஒட்டியிருக்கிறது
அதர்மத்தின் லாப விஷம்
கலைஞனின் விண்ணப்பம் கவிதையில் இலக்கிய உலகின் போட்டி, பொறாமைகளைச் பாடுகிறது:
யாருக்கும் யாரும்
போட்டியல்ல
என்பவர், எவ்வளவு அழகாக முடிக்கிறார் பாருங்கள்:
தெப்பக்குளத்தில் மிதக்கட்டும்
சிறு தீபங்கள்,
எண்ணெய் இருக்கும் வரை
மகிழ்ந்து எரியட்டும்
அதன் காலங்கள்.
தலைப்புக் கவிதையான, மேகங்களின் பேத்தி ஒரு அழகான கவிதை.
வெளியில் போக வழி
தெரியாத மழைநீரை
சிலேட்டால் அள்ளி வாசலுக்கு
அனுப்புகிறாள்
மழையைப் பார்த்து ஊருக்குப் போ என்பவள், தனது பள்ளியைப் பார்த்து வர ஆசைப்படுபவளுக்கு,
ஓடிச் செல்லவும்
பாதைகள் அறிவாள்.
நோக்கத்தின் விசை கவிதை ஒரு சிறப்பான, தன்னம்பிக்கையூட்டும் கவிதை. இதை நாம் முன்னெடுக்கும் எந்த ஒரு செயலுக்கும் பொருத்திப் பார்க்கலாம்:
சுவரொட்டி ஒட்ட
நினைப்பவர் உலகில்
திசையெல்லாம் சுவர்
சுவரெல்லாம்
வேட்கையின் பசை.
கடவுளிடம் விண்ணப்பம் வைக்கும் மற்றும் ஒரு அருமையான கவிதை:
உலோபியிடம்
கையேந்தும் நிலையிலேயே
நெடுவாழ்வை நீடிக்கச் செய்யும்
கடவுளின் மீது பிரியங்கள்
குறைகின்றன.
இதை அவரும்
கவனிக்க வேண்டும்.
குருவே சரணம் கவிதையின் கடைசி வரிகள் மிகவும் பிடித்த வரிகள்:
வழிப் போக்கனுக்கு
அன்னமிடும் கோயில்போல
மாமாவின் வாழ்வு கவிதை போல, எத்தனையோ வாழ்வுகள், ஒரே இடத்திலேயே வாழ்நாள் முழுவதும் கழிந்த பின், முடிகிறது. அழகுணர்ச்சி குறைந்திருந்தாலும், உண்மை சுடுகிறது இக்கவிதையில்.
சூத்திரம் கவிதை – ரௌத்திரம்.
மழையின்றி இருட்டி
இசைக்கிறது காடு
எளியவனை முன்னர்
அடித்திருந்தால் இம்முறை நீ
தப்ப முடியாது.
நேற்று போல் இருக்கிறது என்று தொடங்கும் கவிதை, உத்வேகம் ஊட்டுமொன்று. இப்படி முடிகிறது:
நேற்று முடிந்து விடவில்லை
இன்று இருக்கும் வரை.
இன்று இருக்கும் வரை, எதுவும் முடிந்து விடவில்லை. மீண்டும் ஒரு முறை ஆரம்பிக்கலாம்.
விழுந்தது என்று தொடங்கும் மற்றும் ஒரு ஊக்க மருந்துக் கவிதை:
விழுந்தது
என்
விருப்பத் தேர்வாக இருந்ததில்லை
எழுந்தது
என்
தேர்வு
ஓடிக்கொண்டிருப்பது
நான்.
பெண் உயிர் கவிதை, வறுமையில் வாடும் வீட்டில் பிறக்கும் பெண் குழந்தையின் நிலையைச் சொல்கையில், நம் கண்களில் கண்ணீர்:
கோழிகளுக்குத் துணையாக
இன்று பிறந்தவள்
இனி இருக்கப் போகிறாள்
ஊற்றின் சிரிப்பு மற்றும் பலா கவிதைகள் நெகிழ்வு.
எழுத்துயிர் கவிதையில் வரும் அத்தனைப் படிமங்களும், எனக்குப் பிடித்தவை.
ஜெபம் கவிதையில் மீண்டும் சவுக்கை எடுக்கிறார் கவிஞர். கடவுளைச் சவுக்கை எடுக்கச் சொல்லி ஆணையிடுகிறார்.
தாத்தா வாழ்ந்தார் கவிதை எனது தாத்தாவை ஞாபகப் படுத்தியதால், படித்தவுடன் கன்னங்களில் கண்ணீர் தானாக வழிந்தது. பெரு வாழ்வு வாழ்ந்தவர்கள் நமது தாத்தாக்கள்.
தந்தையின் கடைசி மூச்சு கவிதை, எனது தந்தையின் கடைசி காலத்தை ஞாபகப் படுத்தியது.
உள்ளுணர்வு காதலின் ஆவேசம்.
சிறப்பான வாசிப்பு அனுபவம்.
