நிர்விகல்பம்

 

யாரையும் யாரும் எதுவும் சொல்லித் திருத்த முடியாது. அவுங்களாகவே உணர்ந்து திருந்தினாத்தான் உண்டு….இதுதான் பொதுவான நியதி…“. – அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் நாறும்பூ. 

திரும்பி நின்று அவரையே சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் கார்த்தியாயினி. தன் கணவனிடமிருந்து வந்து விழும் வார்த்தைகளின் அழுத்தத்தை அவள் அறிவாள். அதற்குப்பின் தம்பிடி பேறாது என்பது அவளுக்குத் தெரியும். ஆனாலும் அவரைத் தவிர வேறு யாரிடம்தான்  அவள் சொல்ல முடியும்? 

பையனிடம் சொல்லப் புகுந்தால் எடுத்த எடுப்பில் எரிச்சல் படுவான். அது தப்பித்தல் என்றும் கொள்ளலாம் அல்லது சொல்ல பயம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். காரணம் எதைச் சொன்னாலும் அதற்கு ஒரு விபரீத எதிர்வினையை முன் வைப்பவள் அவன் மனைவியான தீபிகா. அது அறிவுபூர்வமாக நினைத்து எதிர்வினை ஆற்றுவதாக அவளால் நினைக்கப்படுகிறது என்றுதான் தோன்றியது. ஆனால் அதில் பொதிந்துள்ள அடிப்படையான வளர்ப்பு முறையை அவள் உணர்ந்தாளில்லை. அதைச் சொல்லப் புகுந்தால் தன் தாய் தந்தையரைக் குறை சொல்வதாக உணரப்படும் அபாயம் உண்டு. அப்படித்தான் அவளின் பட்டுத் தெறிக்கும் வார்த்தைகள் உணர்த்துகின்றன. நேர் கோணத்தில் இதுவரை எதுவுமே எடுத்துக் கொள்ளப்பட்டதில்லை. அது வளர்ப்பு சார்ந்த விஷயம் என்பதை நன்கு உணர்ந்திருந்தார் நாறும்பூநாதன். 

அது சமாதானமாகச் சொன்னாலும் சரி அல்லது கோபமாய்ச் சொன்னாலும் சரி..ஒரே விகிதத்தில்தான் எடுத்துக் கொள்ளப்படும். நிச்சயம் மறுக்கத்தான் போகிறாள்…எதற்கு வீணாய் வார்த்தைகளை விரயமாக்கிக் கொண்டு?  என்று விலகிச் செல்கிறான் அவன். ஏற்கனவே ஆபீசில் மண்டை காய்கிறது. இதில் இவள் காய்ச்சல் வேறா? ஆம்…காய்ச்சல்தான். ஒன்றுக்குப் பத்தாக அவள் பேசுவதைக் கேட்டால் யாராலேயும் சகிக்க முடியாதுதான். இவள் என்ன உறிஸ்டீரியா பேஷன்டோ? என்று நினைக்குமளவுக்கு அந்தப் பேச்சு தீயாய்த் தெறிக்கும்? நாறும்பூ, கார்த்தியாயினி, பிரசாந்த் என்று மூவரும் அந்தரத்தில் பறப்பார்கள்.  தீபிகாவின் வார்த்தைகள் தீக்கங்குகளாய்ப் பறந்தனதான். 

“விட்ரு…எல்லாம் காலப் போக்குல சரியாகும்…“.என்றார் நாறும்பூ மனைவியைப் பார்த்து. 

“காலப் போக்குலன்னு காலம்தான் போகுது…எங்க சரியாச்சு….வருஷம் எட்டாச்சு…இன்னொரு குழந்தையும் வந்தாச்சு…இதையும் நாமதான் கட்டிக் காக்கணும்….அது அதுபாட்டுக்குத்தான் இருக்கும்…இதுக்கும் நமக்குத்தான் பொறுப்பு. பெத்துப் போட்டதோட சரி…பெத்த கடனுக்குப் பால் கொடுக்குது…நல்லவேளை அதுவாவது இருக்கே…? இல்லன்னா அந்தப் பவுடர் இந்தப் பவுடர்னு  நாமதான் கலக்கி ஃபீடு பண்ணியாகணும்…அது ஒண்ணைக் கவனிச்சீங்களா…எனக்கென்னன்னு விட்டுட்டுப் போறதை?“ – கொதித்துப் போய்ச் சொன்னாள் கார்த்தியாயினி. 

“எதச் சொல்றே?“ – என்று புரியாதவர்போல் கேட்டார். எல்லாக் குறைகளுமாய்த்தான் இருக்கிறது அந்தப் பெண். யாராவது கேட்டால் அல்லது பார்த்தால்…உங்க கண்ணுக்கு எல்லாமும் குத்தமாகவே படுது என்றுதான் சொல்வார்கள். கூட இருந்து பார்த்தால்தான் எதுவும் தெரியும்…புரியும்…அது கூடப் பத்தாது. கூடவே இருந்து அனுபவித்துப் பார்க்க வேண்டும். 

“உங்களுக்குப் புரியலயா? எதத்தான் நீங்க கவனிக்கிறீங்க?“ என்று அலுத்துக் கொண்டாள் கார்த்தியாயினி. 

“என்னன்னுதான் சொல்லேன்…“.என்றார் இவர். தான் நினைப்பதையெல்லாம் அவளும் நினைக்கிறாளா என்று ஒரு சோதனை. அவ்வளவே…

“சாவகாசமா ஒன்பதரை பத்துன்னு இது படுக்கையவிட்டு எழும்புமாம். குழந்தையைக் கொண்டு வந்து நடு உறால்ல விட்டுட்டு கண்டுக்காத மாதிரி பாத்ரூமுக்குள்ள நுழைஞ்சிக்குமாம். நாமளும் கவனிக்காதது போல இருந்தா? குழந்தை நிலைமை என்னாகுறது? எதையாச்சும் தரைலர்ந்து பொறுக்கி வாயில போட்டுண்டதுன்னா? இங்கென்ன வீடு வீடாவா இருக்கு? கோடவுன் மாதிரிக் கெடக்கு….எந்த விபரீதம் நடக்காதுன்னு சொல்றது? “

“அதுதானே அதோட டிரிக்கே? நீயோ நானோ எப்டியும் ஓடி வந்து தூக்கிக்கிடுவோம்னு தெரிஞ்சிதானே அப்டிக் கொண்டு வந்து விடுது…“

“அதத்தாங்க சொல்ல வர்றேன்.   அம்மா…குழந்தை இந்தாங்க…கொஞ்சம் பார்த்துக்குங்க…ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துடறேன்…ங்கிற சுமுகமான வார்த்தையில்லையே? ஒரு பணிவு இல்லியே…? ரெண்டு வார்த்தை பேசிக் கொடுத்திட்டுப் போனா குறைஞ்சி போயிடுவாளா? கிரீடம் இறங்கிடுமா?  அப்டியென்ன பெரிய கௌரவம் கிழியறது? திமிருங்கிறேன்…“ – கோபத்தில் சொல்கிறாளா? இயலாமையால் சொல்கிறாளா? ஐயோ பாவம்…அவள்…! 

“திமிரெல்லாம் இல்லடி….அதுக்குத் தெரிஞ்சதே அவ்வளவுதான். அதுதான் அதோட லட்சணம்….!“

“என்ன லட்சணம்? எல்லாமும் பொறுப்பாச் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டாமா ஒரு பொண்ணை? இப்பிடியா லங்கிணியா வளர்த்து விடுறது? “

“லங்கிணின்னா தாடகைன்னு அர்த்தம். எதையாச்சும் சொல்லாதே!  அது இப்படித்தான்னு உனக்கு எப்பத் தெரிஞ்சிது? கல்யாணத்துக்குப் பிறகுதானே? முன்னாடியே கண்டுபிடிக்க முடிலயே? அப்டிக் கண்டு பிடிக்கணும்னா குறைஞ்சது ஒரு மாசமாவது அவுங்க வீட்ல டேராப் போடணும். அது சாத்தியமா? அதான் தலைவிதிங்கிறது. லங்கிணிய அவுத்து விட்டுட்டாங்க…அவுங்க ஃப்ரீ ஆயிட்டாங்க…நாம மாட்டிக்கிட்டோம்….எதையும் இனிமே சொல்லிப் புண்ணியமில்லை…அவ்வளவுதான்..எல்லாத்தையும் சரி பண்ணிட வேண்டியது அவனோட பொறுப்பு…நாம அந்த எடத்துல இல்லை…..அதப் புரிஞ்சிக்கோ…”. பேச்சை முடிக்க நினைத்தார் இவர். 

“ஏன், உங்களுக்கு வாயில்லையா? நீங்க சொல்லப்படாதா? எங்கிட்ட வேண்டாம்…ரூம்லதானே நீங்க இருக்கீங்க…அப்பா…குழந்தையைக் கொஞ்சம் பார்த்துக்குங்கன்னு கொண்டு விடப்படாதா? அதென்ன யாரையும் மதிக்காத தன்மை? “

அமைதியாகிப் போனார் நாறும்பூநாதன். இவள் கிளப்பும் பூகம்பத்தைப் பார்த்தால் அழிவில்தான் கொண்டு விடும் என்று அவருக்குத் தோன்றியது. இதுக்குத்தான் நான் அன்றைக்கே சொன்னேன்….நாம நம்ம ஊருக்குப் போயிடுவோம்னு….என்று திரும்பவும் ஆரம்பிக்க முடியுமா? அந்தப் பேச்செடுத்தாலே அவளுக்குப் பழியாய்க் கோபம் வருகிறதே?. 

“நான் வரல்லே….நீங்க வேணும்னா போங்க….“- என்று ஒரே உதறாய்  உதறி விடுகிறாள். அதாவது தனியாய் அடிமையாய்க் கிடந்து கொள்கிறேன் என்கிறாள். அடிமைதானே…பிறகென்ன? காலை விழித்ததிலிருந்து ராத்திரி பத்துக்குப் படுக்கைக்குப் போகும்வரை வேலை…வேலை..வேலை…சலிக்காமல் செய்கிறாளே? அடிப் பாவி! இப்படியொரு அர்ப்பணிப்பா? நிர்விகல்ப சமாதி! மனம் சிந்தனையற்ற, எண்ணங்கள் அற்ற  ஒரு நிலை. ஆத்மா, அறிவு மற்றும் அறியப்படும் பொருள் ஆகிய வேறுபாடுகள் மறந்து, மறைந்து எண்ணங்களின் குறுக்கீடுகள் எதுவுமின்றி ஆழ்ந்த அமைதியோடு அறிவின் ஒளியின் துணையோடு ஒரு ஆழ்நிலை தியானத்திற்கு ஒப்பாக இயங்குதல்…! இது அவளால் மட்டுமே முடியும்.! தெய்வ சங்கல்பம்…இல்லையானால் சாத்தியமேயில்லை!

 முடிகிறதோ இல்லையோ…வாயை மூடிக்கொண்டு அமைதியாய் மாங்கு மாங்கு என்று  இயங்குகிறாள். பலிகிடா போல் செய்கிறாள். கடைசி மூச்சு நிற்கும்வரை செய்வாள் போலிருக்கிறது. பிரதிக்ஞை. யாருக்கும் இந்த மனசு வரவே வராது. 

அட…அவனுக்காவது தெரிய வேண்டாமா? அம்மா இத்தனை கஷ்டப்படுகிறாளே என்று? இப்படியா ஒருத்தன் எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பான்? மனசாட்சி வேண்டாமா? பொண்டாட்டி சொகுசாக நடமாடுவாள்…தேர் போல் அலுங்காமல் குலுங்காமல் நகர்ந்து கொண்டிருப்பாள். உன் அம்மா கிடந்து சாக வேண்டுமா? என்ன நியதி இது?  ஆசை அறுபது நாள்…மோகம் முப்பது நாள் என்பார்களே…வருஷம் ஏழாயிற்றே…இன்னும் ஆசை அடங்கவில்லையா? அலுக்கவில்லையா? அப்படியென்ன அவள் பிரசித்தம் …? இவரும் ஓரிரு முறை தெறித்துத்தான் பார்த்தார். சமையலுக்கு ஆள் போடு என்றார். பொறுக்கமாட்டாமல் கூப்பாடு போட்டார். மனசு தாளவில்லை. 

“என் பெண்டாட்டி மட்டும் கிடந்து சாகணுமா? நாங்க தனியா இருந்தா இன்னும் பதினஞ்சு வருஷம் அவ எனக்குத் துணையா இருப்பா…நான் அவளுக்குத் துணையா இருப்பேன். இப்போ நீ அதைக் கெடுக்கிறே…அதான் உண்மை…உழைச்சு உழைச்சு சீணிச்சுப் போய் சீக்கிரம் பொட்டுன்னு அவ கத முடியப் போகுது. நான் அநாதையாயிடுவேன்…அதானே உன் விருப்பம்? செய்…நல்லாச் செய்…அந்தப் பாவம் பூராவும் உன்னைத்தான் சேரும்….வயிறெஞ்சு சொல்றேன்…அவ போயிட்டான்னு வச்சிக்கோ…அடுத்த நிமிஷம் நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன்…அது மட்டும் சத்தியம். என் ஊர்ல என் வீட்டுக்குப் போயி அங்க கிடையாக் கிடப்பனே தவிர…உங்க கூட இருந்து மாய மாட்டேன். காலும் கையும் முடங்கித்துன்னா நகர்ந்து நகர்ந்தாச்சும் என் வேலையைச் செய்திண்டு, சக்கர நாற்காலி வாங்கி அதுல உட்கார்ந்துண்டு என் வேலைகளைப் பார்ப்பேன். ..அதுதான் நடக்கப்போறது…அவ புண்ணியவதி…பொட்டுன்னுபோயிடுவா…நான்தான் சீரழியப்போறேன்…அதுக்குத்தான் நீ வழி பண்றே….!“ – எல்லாவற்றையும் காதாரக் கேட்டுக் கொண்டு கல்லுளிமங்கனாய் இருக்கிறான். இவனை என்னென்று சொல்வது? மனிதர்கள் சுயநலமானவர்கள்தான். தனக்கென்று ஒரு வாழ்க்கை அமைந்த பின்னால் அடியோடா அப்படி மாறிப்போவார்கள்? தன் நலம் தவிர வேறெதுவுமே கண்ணுக்குத் தோன்றாதா? 

இளம் பிரயாத்தில் தான் எழுதி பத்திரிகையில் பிரசுரமான ஒரு கவிதைதான் அப்போது இவருக்கு ஞாபகம் வந்தது. 

அம்மா கையால் சாப்பிட்டு சாப்பிட்டு அயர்ந்து போச்சு… அப்பா கம்பால் அடி வாங்கி அலுத்துப் போச்சு…தங்கையை வாயால் திட்டித் திட்டித் தளர்ந்து  போச்சு…தம்பியை வீச்சாய் விரட்டி அடித்து வீணாய் ஆச்சு… எல்லாம் சலித்து, எதிலும் ஒன்றாமல் …புதிதாய் எதைச் செய்ய?- ம்ம்…அதுதான் சரி…சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணனும்…!! 

அந்தக் கவிதை பிரசுரமாகி, ஆசிரியரே ஃபோன் செய்து பாராட்டியது பசுமையாய் மனதில். எல்லாமும் சலித்து எதிலும் ஒன்றாமல் கடைசியாய்த் தன் மகன் பிரசாந்த் இப்படியாகிவிட்டானோ? அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்து விட்டானா?  அவள் குறித்து வாயே திறக்க மாட்டேங்கிறானே? 

 டமையையெல்லாம் ஒழுங்காச் செய்தவன் கடைசி காலத்துல தனியாப் போய்க் கிடந்து கஷ்டப்படணும்னு என்ன தலைவிதியா? – என்று இவரும் பலமுறை கேட்டுத்தான் விட்டார். அவள் அசந்தால்தானே? 

“அப்ப கம்முன்னு கிடங்க…உங்கள யாரு போகச் சொன்னாங்க?“ – இப்படி அவள் சொல்வதிலும் ஒரு சூட்சுமம் இல்லாமல் இல்லை என்றுதான் நாறும்பூவுக்குத் தோன்றியது. 

நான் அப்படித் தனியே போய்க் கிடக்க மாட்டேன் என்கிற தைரியம் ஒரு புறம். இங்கிருக்கையில் அவளின் வீட்டுக் காரியங்களுக்கு உதவியாய் இருக்கிறேனே…அது கை விட்டுப் போய்விடக் கூடாதே என்கிற  பயம் இன்னொரு புறம். மறு பேச்சுப் பேசாமல் சரி சரி என்று செய்ய இவன்தானே லாயக்கு? 

நானேதான் பலவீனனாகிவிட்டேனோ…! என்று தன்னைத்தானே நொந்து கொண்டார் நாறும்பூ. அதிகபட்சம் ரெண்டு வருஷத்துக்கு முன்னால் இருந்த மன தைரியம் இப்போது தன்னிடம் இல்லையே? உடல் பலவீனப்பட்டுப் போனால் மனசும் பலவீனமாகிவிடுமோ? 

இங்கேயே கிடந்து இவளுக்கே உதவியாய் இருந்து கடத்தி விடுவோமே நாட்களை! யார் முந்தி, யார் பிந்தி…யார் கண்டது? என்னை வேண்டாம் என்று அவளால் சொல்ல முடியாதுதான். அவனும் சொல்லி விடுவானா என்ன? அன்றாடம் என் பணிகளைக் கண்கொண்டு பார்க்கிறானே…? காய்கறி நறுக்கிக் கொடுக்கிறேன். பால் காய்ச்சுகிறேன்…டிகாக் ஷன் போடுகிறேன்…தோசைக்கு வாரா வாரம் மாவு அரைக்கிறேன்….கடைக்குப் போகிறேன். சாமான்கள், காய்கறி வாங்கி வருகிறேன்….மோட்டார் போடுகிறேன். மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் ஏற்றுகிறேன்…தண்ணீர் சம்பில் இருக்கிறதா, தீர்ந்து விட்டதா என்று பார்த்துப் பார்த்து சுதாரித்து லாரிக்கு ஃபோன் பண்ணிச் சொல்லி தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் நிரப்பி விடுகிறேன். செப்டிக் டாங்க் நிறைந்தால் கழிவு நீர் லாரிக்குச் சொல்லி வரவழைத்து எடுக்க வைத்து சுத்தம் செய்கிறேன். குடி தண்ணீர் கேன் தடங்கலில்லாமல் வரவழைத்து தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் பாதுகாக்கிறேன். இப்படி எத்தனையெத்தனை உதவிகள் என்னால்? சமயங்களில் காலை டிபன் முழுக்கத் தான்தானே பார்க்கிறோம்?

இதெல்லாம் உதவிகளா? இவைகளுக்கு உதவி என்றா பெயர்? கடமையில்லையா? நீயும்தானே இருந்து அனுபவிக்கிறாய்? எல்லோரும் சேர்ந்து இருப்பது உன் வீடு இல்லையா? அது எப்படி பையன் வீடு என்று உன்னால் பிரித்துப் பார்க்க முடிகிறது? அப்படிப் பிரித்து நினைத்துப் பார்ப்பதால்தானே மனதுக்குள் வேற்றுமை வளர்கிறது? வேற்றுமை எண்ணங்கள் ஓடிக்கொண்டேயிருப்பதால்தானே, தனியாப் போகணும்…தனியாப் போகணும் என்கிற எண்ணம் வலுப்படுகிறது? 

பையனே சேர்ந்து இருக்க முனையும்போது, அப்பாம்மாவைத் தனியே விடக் கூடாது என்று கூடி வைத்துக் கொண்டு கூத்தடிக்கும்போது, தனக்கு அந்த எண்ணம் வரலாமா? சதா ஊரில் போய் இருப்போம்…இருப்போம் என்று அவளை அனத்தலாமா? – தனக்குத்தானே எண்ணி எண்ணித் தன்னைத் தணித்துக் கொண்டார் நாறும்பூநாதன். உடம்பு வலுவற்றுப் போனதுதான் மிச்சம். காலம் மனிதனை எப்படியெல்லாம் புரட்டிப் போட்டு விடுகிறது? 

பெரிசு அடங்கிக் கிடக்க மாட்டார் போலிருக்குதே? ஓட்டப் பாய்க்குள்ள நண்டு விட்ட மாதிரி சதா முணு முணுன்னுட்டே …! ? 

யாரோ பின்னாலிருந்து முனகுவதுபோல் உணர்ந்தார் நாறும்பூநாதன்.

நிற்சிந்தையாய், நிச்சலனமாய், நிற்விகற்ப சமாதியாய்த் தன் கடமைகளை இம்மி குறையாது இன்றும் கண்ணும் கருத்துமாய்ச் செய்து கொண்டிருக்கும் தன் அன்பு மனையாளை மனதில் கொண்டார்….

கார்த்தியாயினி…! அவள் அவள்தான்…ஈடு இணையில்லாதவள்!! அவள் காலடியே சரணம்…அதுதான் சொர்க்கம்….! – தனக்குத்தானே ஆத்மார்த்தமாய் உணர்ந்தவராய், கசிந்த கண்ணீரை யாரும் அறியாமல் துடைத்து விட்டுக் கொண்டார் நாறும்பூநாதன்.

———-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *