தெருவோரம் தேங்கி நிற்கும் சிறு தண்ணீர் குட்டையின் அமைதியை கெடுக்கும்வாறு கள்ளன் ஒருவன் அதனில் குதித்து ஓடி சென்றான். காற்றுக்கு சவால் விடும் வேகம். துரத்துபவர்களின் நிழல்கள் சரணாகதி அடைந்ததும் விட்டன. ஆனால், இன்னும் அவன் ஓடி கொண்டிருக்கிறான். தெரியாமல், ஓடும் கவனத்தில் ‘விழிக்காத்தூரை’ கடந்து விட்டான்.
ஓர் இடம் தேர்ந்து நிலத்தை பார்த்தவாறு மூச்செறிந்தான். சிறிது ஆசுவாசம் அடைந்து தலையை தூக்கினான். விழிகாத்தம்மாளின் சிலை திடகாத்திரமாக நிற்பதை கண்டான்.
அவளின் விழிகள்…..
அவ்விருவிழிகளின் பிரகாசம் அவன் பிரக்ஞையில் ஊடுருவி சித்த சாற்றை உறிஞ்சி எடுத்தது. கண் சிமிட்டும் சக்தியை இழந்து நின்றான். எங்கிருந்தோ ஓரு பாடல் காற்றோடு கலந்து வந்தது!
“ஊ…. ஊ…… ஓ…. ஓ……
துயிலில் சிக்குண்ட மணமம்மா,
எல்லையை விரிவாக்கும் வித்தகன்னம்மா,
பிறிதொரு உலகை பந்தாடும் பிள்ளையம்மா,
இன்ப திரளை காக்கும்,
யான் விழி அமிர்தமம்மா!”
வெட்டிய மரம் விழுவது போல் “தொப்” என விழுந்தான். கண்கள் ஆகாயத்தை நோட்டமிட்டன. நிலம் இரண்டாக பிளந்து அவன் உடலை விழுங்கியது.
விழிக்காத்தூரில் உணவுக்கும் சரி, இனிமைக்கும் சரி பஞ்சம் என்று வந்ததே இல்லை. அவர்களின் நிலம் என்ற அக்ஷய பாத்திரம் அள்ள அள்ள குறையாமல் குடுக்கும் தேவியாகும். வயிற்றுக்கு உணவு உத்தரவாதம் என்பதால் அறிவின் பல்வேறு அம்சங்களை தொட்டு உறவாடினர். மக்களின் மத்தியில் இன்ப அருவியும்; கண் பட கூடாது என்பதற்காக சிறு சிறு சண்டைகளும் எட்டி பார்த்து மறையும். இவ்வூரை எல்லையில் நின்று சீராட்டி பாராட்டி காத்து வருபவள்தான் விழிகாத்தம்மாள்.
வழக்கத்திற்கு மாறாக ஊரே அமைதி தோற்றத்தில் காணப்பட்டது. சப்தங்கள் ஆறாக ஓடி கொண்டிருக்கும் இடங்களெல்லாம் வறண்டு போயின. ஊரே ஒரு இடத்தில் ஒன்று கூடி எதோ முக்கியமான விஷயத்திற்காக கலந்தாய்வு செய்து கொண்டிருந்தார்கள்.
“அது எப்டி அய்யா பண்ண முடியும்.. வேண்டம்யா” என்று தேன்வல்லி உரக்க கூறினாள்.
“தோ பாரு வல்லி.. ஆத்தாக்கு தெரியாம நடக்குற விஷயம் எதாச்சும் இருக்க முடியுமா? அந்த ஆத்தாவே தான் அவீங்களா அனுப்பிருக்கா! அந்த ஆத்தா தான் புல் வெளையர பூமியில பொன் வெளையட்டும்னு முடிவு பண்ணிருகக்கா!” என்று ஊர் தலைவர் தங்கையா அவளை ஆசுவாச படுத்தினார்.
“இருந்தாலும் ஆத்தாவோட அம்சமே அந்த கண்ணு தானய்யா.. அதனாலே தான அவள விழியாத்தான்னு கூப்பிட்ரோம்”
“வல்லி கேட்டுக்கோ.. பகலு ராத்திரினு மாறிட்டு கெடந்தாலும் சூறியோனடா இருப்பு மறையுமா என்ன? அதே மாதிரி தான் ஆத்தாவோட விழி மூடி இருந்தாலும் சரி தெறந்து கெடந்தாலும் அவ நம்ப நெலத்திலையும் உசுரலையும் சுவசமா நெறஞ்சி இருப்பா!”
“இருந்தாலும் மனசு நோவுது தலைவரே” என்று மலையன் குறுக்கிட்டான்.
“புது காரியம் பண்ணும்போது கொஞ்சம் தொந்தரவு இருக்க தான் செய்யும். பழக்கத்தால வர கேடு. ஊருக்கு வர மகாலட்சுமிய ஏன்யா தடுக்கிரீங்க. நம்ப பூமியில வைரம் வைடூரியம் இருக்குனு நீ கண்டையா மலையா”
“இல்லைய்யா..”
“உனக்குனு இல்ல நாம யாருக்குமே தெரியாது. அத கண்டு பிடிச்சு சொன்னது இந்த வெளியூர் வியபாரிதான்யா. சொன்னது மட்டும் இல்ல அத எடுக்குற ஏற்பாடும் பண்றன்ட்டு சொல்றான். அதுக்கான ஆளுங்களும் கருவிகளும் கொண்டு வரர்துற்கு ஒதவுறான். என்னமோ ஏதோ.. அவிங்களுக்கு ஆத்தா வோட கண்ண பாத்தா ஒதரல் எடுத்துகுதுனு சொல்றாங்க. ரெண்டு மூணு ஆளுகுகளுக்கு மூச்சி தெனரல் வருதான். அப்ரம் தீர்வு எண்ணன்டு நீயே சொல்லு. சொன்ன கேளுங்க.. ஆத்தவோட கண்ண மூடிடலாம்யா. இதான்யா அவ வாக்கு. தெய்வ வாக்கு தெய்வ குத்தம் ஆகாதுஸயா”
“ஆனா பாருங்கையா! ஏன் அவங்களுங்கு மூச்சு தெனரல் வரணும். அப்படினா…..”
என்று சரஸ்வதி இழுக்க.. தங்கையா தடுத்து,
“உனக்கு வெளியூர் சாப்பாடு ஒத்துக்காதுல.. அந்த மாறிதான் இதுவும். தோ.. பாருங்க எல்லாரோட ஒத்துழைப்பும் வேணும். அப்பதான் இந்த காரியத்த பண்ண முடியும். எல்லாம் நல்லதுக்கு தான்யா. பொன் எடுத்து இந்த பூமிய இன்னும் செம்மையாக்கலாம். சொல்லுங்க செரியா??”
கூடி இருந்த அனைவரும், “சரிங்கய்யா” என ஒரு சேர கூவினார்கள்.
நல்ல நாளாக தேர்ந்தெடுத்து ஊரில் இருந்த அனைவரும் விழியாத்தா முன் கூடினார்கள். அவள் முன் உட்கார்ந்து கண்களை மூடி, கை கூப்பி கும்பிட்டார்கள். வாய்கள் முணுமுணுத்தன. சப்த சுகங்கள் எல்லாம் அடங்கி நிசப்த்த ஸ்வரம் மீட்டின்ன. பூசாரி பூஜையை நடத்த ஆரம்பித்தார். அவளின் மனம் புண்பட கூடாது என்பதே அப்பூஜையின் சாராம்சம். விழிகாத்தாலோ அமைதியின் வடிவமாக நின்று கொண்டிருந்தாள். அவளுக்கென்ன யுகங்களோ நொடிகள். மக்களுக்கோ யுகங்கள் சுழன்றியே விடியல்.
அனைவரும் கண்களை திறந்தனர். அவளின் விழிகளை கண்டு தன்னையறியாமல் கலங்க ஆரம்பித்தனர். உணர்வு விழியை விட்டு பிரிய வேண்டாம் என துடித்தது. ஆனால் உளமுடிவு அதை துண்டித்து எரிந்தது.
பூசாரி களிமண்ணை கையில் வைத்து கூழாக்கினார். காட்டில் இருந்த மற்ற உயிரிகள் அதனதன் இடத்தில் சென்று ஐக்கியம் ஆயின. சிலு சிலுவென சத்தம் அங்கும் இங்கும் அலை பாய்ந்தன. பூசாரி களிமண்ணை எடுத்து மேல தூக்கி காண்பித்தார். எல்லோரும் கண்களை மூடினர். களிமண்ணை கொண்டு ஆத்தாளின் விழிகளில் பூசினார்.
விழி மங்கியது. வைடூரியம் மின்னியது. பாடல் தொலைந்து போனது.
“யான் விழி அமிர்தமம்மா……”
