மனோகர் கண் விழித்துப் பார்த்த போது மருத்துவமனையின் வாடை, தான் இறக்கவில்லை என்பதை உறுதியாக நம்ப வைத்தது.
நண்பனைப் பார்க்க மொழி தெரியாத ஊரில் அந்தப் பழைய பேருந்தில் மலைப்பாங்கான சாலையில் பயணித்தது மட்டும் அவருக்கு நினைவில் இருக்கிறது. அதன் பிறகு கேட்ட பெரிய சத்தம். பிறகான மரண ஓலம்.
அவரோடு பயணித்தவர்களில் பிழைத்த ஒரு சில பேரில் அவரும் ஒருவர். மனோகரிடம் கேட்டால் ‘நான் பிழைக்காமலேயே இருந்திருக்கலாம்’ என்பார்.
மலையின் கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது எதிரில் வந்த லாரி கட்டுப்பாடு இழந்து மோதியதில் பேருந்து மலைச் சரிவில் உருண்டு புறண்டு உருத்தேறிக் கிடக்கிறார் மனோகர்.
பேருந்தைவிட்டு வெளியே தூக்கி வீசப்பட்டவர் ஒரு புதரில் கிடந்தார்.அணிந்திருந்த கீழ் உள்ளாடை தவிர அவரிடம் வேறு எந்த அடையாளமும் இல்லை. முகம் முற்றிலும் சிதைந்து போயிருந்தது. விபத்து நடந்தப் பகுதிக்கு அருகில் உள்ள நகரத்தில், தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருந்ததால் மனோகர் உயிரோடு இருக்கிறார்.
அவர்களுக்கு இவர் ஒரு சவாலான நோயாளி. அவர்களுக்கு இவர் மிஸ்டர் எக்ஸ்.இவரைப் பற்றிய எந்தக் குறிப்பும் அவர்களுக்குத் தெரியாது. கை ரேகைகள் சிதைந்து விட்டது. முகத் தாடை பாதிக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு வகுப்பு எடுக்க தேவைப்பட்டதால் அவர்களின் அத்தனை முயற்சிகளும் வெற்றியடைந்து அவரின் முகத்தை சீரமைத்துவிட்டார்கள். அந்த வகையில் அது மகத்தான பணி. இவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிகிச்சைக்கு இவர் நான்கு ஐந்து தலைமுறை சம்பாதித்து அடைத்தாலும் அந்தக் கடன் தீராது.
மருத்துவக் குழுவின் பரிந்துரையில் அவரிடம் யாரும் எதுவும் தேவைக்கு அதிகமாகப் பேசக்கூடாது என்று கட்டளைப் பிறப்பித்து இருந்தது. அவர் வந்தவர்களிடம் பேசியதில் தன் உடல் நோவினையில் ஓரளவு தனக்கு என்ன நடந்தது. தான் என்னவாக மாறி இருக்கிறோம் என்பதை அனுமானித்து வைத்திருந்தார்.
அவரை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்கின்ற நாள். மருத்துவர்களுக்கு மத்தியில் இருந்த அவரிடம் தமிழ் தெரிந்த மருத்துவர் கேட்டார்.
“ஐயா உங்கள் பெயர் என்ன.”
“மனோகர்”
அங்கிருந்த அத்தனைப் பேரும் மிஸ்டர் எக்ஸ் இனி மனோகர் என்பதால் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்துக் கொண்டார்கள்.
முன்பு அவருக்கு ஒரு சில வார்த்தைகள் பேசும் வாய்ப்புகள் இருந்தது. மொழி தெரியாத ஊர் என்பதால் அதைப் பயன்படுத்தும் சந்தர்ப்பமும் வாய்க்காமல் போனது. இப்பொழுது தான் மனோகர் பேசக் கூடிய சூழலுக்கு ஆளானார்.
அவர் பேசும் போது நாக்கு குழறியது. தாடை எப்பொழுதாவது தன் கட்டுப்பாட்டை இழந்து ஆடியது. நாற்பது வயதில் அவர் ஒரு வயோதிக நிலையில் தான் இருப்பதாக உணர்ந்தார். தன் குரல் முற்றிலும் வேறாகி இருந்ததை அவர் அறிந்தார்.
அவர் தடுமாறி தழுதழுத்துப் பேசியதில் அவரைப் பற்றி அநேக விவரங்களை அங்கிருந்தவர்கள் அறிந்து கொண்டார்கள்.
“மிஸ்டர் எக்ஸ். சாரி.. மன்னிக்கவும். இப்பொழுது உங்களை நாங்கள் டிஸ்சார்ஜ் செய்யவேண்டும். நீங்கள் போகத்தயாராக இருக்கிறீர்களா.”
“நான் கிளம்புகிறேன் சார். கடந்த போன இரண்டு வருட காலத்தில் நான் இறந்து விட்டதாகக் கூட என் வீட்டில் நினைத்திருக்கலாம். என் மனைவி, மகன்கள் என்னை எதிர் பார்த்து காத்திருப்பார்கள் சார். என்னிடம் ஊருக்கு செல்வதற்கு பணம் இல்லை சார்.”
” நாங்கள் உங்களுக்காக விமான டிக்கெட் எடுத்துக் கொடுக்கலாம் என பணம் வசூலித்து வைத்திருக்கிறோம்.”
மனோகர் எழுந்து எல்லோரையும் கும்பிட்டார்.
“எனக்கு அது தேவையற்ற செலவு சார். இரயில் டிக்கெட்டிற்கு மட்டும் பணம் கொடுங்கள். அது போதும்.”
“இல்லை மனோகர். இங்கு இருக்கும் எல்லோருமே உங்களுக்காக பணம் கொடுத்து இருக்கிறார்கள். அதை நீங்கள் கண்டிப்பாக வாங்கிக் கொள்ள வேண்டும்”
“இல்லை சார். வேண்டாம். நீங்கள் எல்லோரும் என்னை மறுபிறவி எடுக்க உதவி இருக்கிறீர்கள். வழிச் செலவிற்கு மட்டும் பணம் கொடுங்கள் போதும்.”
“வெளியில் சென்று சிரமப்படுவீர்கள் மனோகர். அதற்காகத்தான் இந்தப் பணத்தை உங்களுக்கு நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் கொடுக்கிறோம்.”
“உங்கள் அசோசியேஷனிலையே பணத்தை வைத்துக் கொள்ளுங்கள். எனக்குத் தேவைப்பட்டால் உங்களிடம் வாங்கிக் கொள்கிறேன்.”
“பழையபடி உங்களால் செயல்பட முடியும் என்று நம்புகிறீர்களா மனோகர்.”
“இந்த குரல் மாற்றம் உருவ தளர்ச்சியைத் தாண்டி. மனம் அப்படியே தான் இருக்கு சார். என்னால் வாழ்ந்துவிட முடியும்.”
அங்கு மௌனம் நிலவியது. அத்தனைப் பேரும் அவரை இரக்கத்தோடுப் பார்த்தார்கள். அதிலிருந்த ஒருவர் பேசியதை தமிழ் தெரிந்த டாக்டர் மனோகரிடம் இப்படிச் சொன்னார்.
“உங்களை நீங்கள் கண்ணாடியில் பார்த்திருக்கிறீர்களா.”
மனோகர் யோசிக்க ஆரம்பித்தார். அது ஏன் தனக்குத் தோன்றவில்லை என்று அவரே தன்னை நொந்து கொண்டார். டாக்டர்கள் அவரைப் பெட்டில் வைத்தே ஈரத் துணியால் துடைத்து சுத்தம் செய்யும் வசதி செய்திருந்தார்கள். யாராவது எப்பொழுதாவது அவரைக் குளிக்க வைத்தார்கள்.
“சார் நான் பார்க்கலாமா சார்.”
அவர்கள் முன் ஏற்பாடாக ஆள் உயரக் கண்ணாடியை பக்கத்தில் துணியால் மறைத்து நிறுத்தி வைத்திருந்தார்கள். தமிழில் பேசிய டாக்டர் கையை அசைக்க துணி கண்ணாடியிலிருந்து எடுக்கப்பட்டது.
மனோகர் எழுந்து கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்தபொழுது அப்படியே மயங்கி கீழே விழுந்துவிட்டார். இது அவர்கள் எதிர்பார்த்ததுதான்.
கொஞ்ச நேரத்தில் மனோகர் கண் விழித்து விட்டார். அதிலிருந்து அவரால் தனது அழுகையை நிறுத்த முடியவில்லை. அவர் அழுகட்டும் என எல்லோரும் காத்திருந்தார்கள்.
மனோகரேப் பேசினார்.
“ஐயா என்னை நான் பார்த்ததும். அது நான் இல்லை என்று தெளிவாக புரிகிறது சார். இந்த உருவத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சார். நான் மனோகர் என்று எப்படி சார் இங்கு எல்லோரையும் நம்பச் சொல்வது.”
“எங்களுக்கே நீங்கள் மனோகர் என்பது இப்போது தான் தெரியும்.” என்றார் அங்கிருந்த டாக்டர் ஒருவர். மனோகருக்கு அதை தமிழ் டாக்டர் மொழி பெயர்க்கவில்லை.
அவரின் சொந்த ஊரான அந்த சிறு நகரத்திற்கு மாலையில் வந்து சேர்ந்தார். இரயில் நிலையத்தில் நின்ற ஆட்டோக்களில் அவருக்கு நீண்ட நாட்களாக பழக்கமான சுதாகர் நின்றிருந்தான். அவன் பக்கத்தில் சென்றபோதும் அவன் அவரை வெளி ஆளாகவே நினைத்து
“ஆட்டோ வேணுமா சார்.” என்றான்.
அவர் அவனையேப் பார்த்தார். அவன் அடுத்த சவாரி ஆள் அழைக்க அவர்களை ஏற்றிப் புறப்பட்டு விட்டான். பத்து வருடங்களாக பிள்ளைகளை பள்ளிக்கு ஏற்றிச் சென்ற சுதாகராலையே கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் இங்கு எவரும் தன்னை அடையாளம் காண முடியாது என்பதை மனோகர் அறிந்து கொண்டார்.
தன் வீட்டிற்கு ஆட்டோவில் செல்வதைவிட நடந்து செல்வதே அவருக்கு சரி எனத் தோன்றியது. அங்கிருந்து அவர் ஹை ஸ்கூல் வழியாக செல்லலாம் என சென்றபோது வழியில் லைப்ரரி இருக்க அதற்குள் நுழைந்தார்.
அங்கிருந்த நோட்டில் பெயர் எழுதியபோது அழகான அவர் எழுத்துக்கள் கிறுக்கலாக மாறி இருந்தது. முன்பெல்லாம் மனோகர் கையால் எழுதியதைப் பார்த்தால் அவரோடு பழகியவர்கள் அது அவருடையது தான் என்று சத்தியமிட்டுச் சொல்வார்கள்.
அங்கிருக்கும் பல பேரை மனோகருக்குத் தெரியும். ஒவ்வொருவரும் பார்த்துவிட்டு படிக்கத் தலை குனிந்தார்கள். லைப்ரரி கந்தசாமி அண்ணன் மூடும் நேரத்தைச் சொல்லிவிட்டு எழுதுவதைத் தொடர்ந்தார்.
செல்ஃபில் அவர் படித்தப் புத்தகங்கள் ஒவ்வொரு வரிசையிலும் இருந்தன. படித்து பாதியில் விட்டு வந்தப் புத்தகத்தை தேடினார். அதற்காவது தன்னைத் தெரியுமா என்று யோசித்தார்.
பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் புத்தகத்தில் விஜிலாவின் கடிதப்பக்கம் வரை படித்ததை யோசித்து, விட்டுச் சென்றதை மீண்டும் தேடினார். அதைப் படித்து முடித்தததும்.’டேய் ச.பா’ என ஆரம்பிக்கும் கடிதத்தை மீண்டும் வாசிக்க அவருக்கும் தன் மனைவிக்கு கடிதம் எழுதும் ஆசை முளைத்தது. புத்தகத்தை வைத்துவிட்டு லைப்ரரியை விட்டு வெளியே வந்தார். தன் கையெழுத்து தலை எழுத்தைப் போலத் தாறுமாறாக ஆனதை நினைத்த பொழுது அவரை அறியாமலையேக் கண்ணீர் வழிந்தது.
சன் ஜெராக்ஸ் வழியாக நடந்தபொழுது கலையைப் பார்க்கலாமா என்ற ஆசை எழுந்தது. வெற்றியும் கலையும் ஏதோவொரு புத்தகத்தை மேஜையில் வைத்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.
“சார் என்ன வேணும்” என்றார். ‘நான் மனோகர்’ என்று சொல்லலாமா எனத் தோன்றியது. வெற்றியை ஏதாவது வம்பிற்கு இழுத்து கிண்டலடிக்கலாமா எனவும் தோன்றியது.
“சார் என்ன வேணும்.” என்ற வெற்றியின் குரலில் கொஞ்சம் கடுமை இருந்தது.
“பட்டா ப்ரிண்ட் எடுக்கனும் சார்.”
“சர்வே எண், ஊர் டீடெல் சொல்லூங்க சார்.” கலை.
மனோகருக்கு எங்கே எழுதச்சொல்லி காகிதத்தை நீட்டிவிடுவார்களோ என்ற கவலை எட்டிப்பார்த்தது. லைப்ரரியில் பெயரை எழுதி கையெழுத்துப் போட்டபோதே கை நடுங்கியது. அவர் விவரங்கள் சொல்லியதும்.
“மனோகரா சார்.”
மனம் மகிழ்சியில் துள்ளியது. கலை கண்டுபிடித்து விட்டார் என்ற சந்தோசத்தை வெற்றி உடைத்து எறிந்தார்.
“சார் யோசிச்சுக்கிட்டே நின்னா. நாங்க அடுத்த வேலையைப் பார்க்கறதா இல்லையா சார்.”
வெற்றி வாயிற்குள் முனங்கிய வார்த்தை மனோகருக்குத் தெரியும். அவரின் அதே ட்ரேட் மார்க் வார்த்தைதான்.
‘வெற்றி இப்போ இதானே சொன்னீங்க. நான் மனோகர் சார்’ . வெற்றி வெடிச் சத்தமாக ஒரு சிரிப்பு சிரிப்பார். மனோகருக்கு அப்படி செய்ய ஆசையாக இருந்தது. அவரை அவர்களால் கண்டுபிடிக்க முடியாததால் சண்டைக்கு வந்துவிடுவார்களோ என்ற கவலை வந்தது. ஆமாம் என்று சொல்லிப் பட்டாவை வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டார்.
வெறும் கையோடு வீட்டிற்குச் செல்ல வேண்டாம் என பழங்கள் வாங்கியபோது ஜெயராமனுக்கும் இவரைத் தெரியவில்லை.
அழுகையும் இயலாமையும் அவரின் நடையில் சோர்வைக் கூட்டியது. எங்காவது கொஞ்ச நேரம் உட்கார்ந்தால் படபடப்பு அடங்கும் என்றுத் தோன்றியது. உட்காரப் பயமாகவும் இருந்தது.யாரையாவது கட்டிப்பிடித்து ஓவென்று அழுதால் தேவலாமென்று நினைத்தார்.
வீட்டில் மனைவி, பசங்க தன்னை எப்படி அறியப் போகிறார்கள் என்ற சிந்தனை வந்ததும் உடல் ஒருவித நடுக்கத்திற்கு உள்ளானது. இதற்குமேல் தன்னால் நடக்க முடியாது என்பதை அவர் தெளிவாக உணர்ந்தார். மனம் தன் இயல்பு நிலையைக் கடந்து தாறுமாறாக சிந்தித்தது. ‘அது தன் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் போய்விடுமோ’ என்ற கவலை மேலும் அவரை இயலாமலாக்கியது. அப்போதுதான் மருத்துவர்கள் இது போன்ற சூழ்நிலை வந்தால் போட்டுக்கொள்ள கொடுத்த மாத்திரை நினைவுக்கு வர, அதை எடுத்து வாயில் போட்டு உமிழ் நீரிலையே விழுங்கிவிட்டு, மூடி இருந்த கடையின் படிக்கட்டில் உட்கார்ந்தார்.
அவரின் வீடு சற்றே உள் வாங்கி கட்டப்பட்டு முன் பகுதியில் பூச்செடிகள் இருக்கும். அவர் காம்பவுண்டில் இருந்த அழைப்பு மணியை அழுத்தினார். மனம் பதை பதைத்தபடி இருந்தது. வீட்டிற்குள் லைட் எரிந்தது. ரிசப்ஷனில் டியூப் லைட்டிற்குப் பதிலாக குண்டு பல்ப் மாற்றப்பட்டிருந்தது. பன்னீர் ரோஜாச் செடிகள் சில பூத்திருந்தது. காம்பவுண்டை ஒட்டி இருக்கும் மருதாணிச் செடி, செம்பருத்திச் செடி கழித்து ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. காம்பவுண்டின் மேல் புதிதாகத் தொட்டிகளில் சிறு செடிகள் வைக்கப்பட்டு இருந்தது.
மறுபடியும் அழைப்பு மணியை அடிக்கலாமா என நினைக்கும்போது பின் பக்கம் தெரு நாய் வாலை ஆட்டி உடலை வளைத்து வளைத்து வினோதமாக முனகியது. அது தன்னைக் கண்டு கொண்டதில் மனோகருக்குள் முதல் முறையாக ஒரு அந்நியத்தன்னமை லேசாக விலகியது. தான் வைத்திருந்த பிஸ்கெட் ஒன்றைப் பிரித்து அதற்குப் போடும்போது அது முனகியது, பேசுவது போலவே மனோகருக்கு தோன்றியது.
உள்ளே இருந்து கணேசன் ஓடி வந்தான். அவனைத் தூக்கிக் கொஞ்ச ஆசையாக அவருக்கு இருந்தது.
“சார் என்ன வேணும்.” என்றுக் கேட்டபோது அந்த உணர்வு காணாமல் போனது. அவர் ஓரளவு தன்னைத் தயார் படுத்திக் கொண்டு தான் இங்கு வந்தார்.
“மனோகர் சாரைப் பார்க்க வந்தேன்.”
“அம்மா… அப்பாவைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க.”
அந்த யாரோ என்ற வார்த்தையால் அவரின் உடல் நடுங்க தயாரானது.
‘உன்னை இந்த உலகத்தில் யாருக்கும் தெரியாதுடா. முதல்ல நீ மனோகரே இல்லைடா’ என்று தனக்குள் விடாமல் சொல்லிக்கொண்டே இருந்தார். அப்படிச் சொல்லச் சொல்ல மனம் லேசானது.
சசிகலா அதே வசீகரத்தில் இருந்தார். முகத்தில் நிரந்தரமாக கவலை இருந்தது. அவரால் மட்டும் தான் அந்தச் சேலை அவ்வளவு திருத்தமாக கட்ட முடியும். சேலையும், அவர் அணியும் ஜாக்கெட்டும், அவருக்கு அத்தனைப் பாந்தமாகப் பொருந்தும். மனோகர் மனைவியைப் பார்த்து கட்டிப் பிடித்து மடியில் தலை வைத்து அழ வேண்டும் என ஆசைப் பட்டார்.
“சார் யாரைப் பார்க்கணும்.”
‘செத்துத் தொலைந்திருக்கலாமோ’ என்று மனோகர் நினைத்தார். உருக்குலைந்த உடலை உருமாற்றி உயிரை மட்டும் அவர்கள் அப்படியே வைத்திருக்க வேண்டியதில்லை.அதையும் அவர்கள் மாற்றித் தொலைத்து இருந்தால் இத்தனை வேதனைகள் இருந்திருக்காது. ‘மனதை மாற்றும் சிகிச்சை தெரியாமல் என்ன மயிரப்புடுங்கின உலக சாதனை’ என மனோகர் வெறுப்பு நிலைக்கு ஆளானார்.
‘உன்னை இந்த உலகத்தில் யாருக்கும் தெரியாதுடா. முதல்ல நீ மனோகரே இல்லைடா’
“மனோகர் ப்ரண்ட்ம்மா. சென்னையிலிருந்து வந்தேன். அவனைப் பார்த்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன்.”
வாசலில் நிற்க வைத்து பேசுவது அநாகரிகம் என நினைத்தாலும் ஆண் இல்லாத வீட்டிற்குள் அழைக்கும் தயக்கம் சசிகலாவிடம் தெரிந்தது. கேட்டைத் திறந்து ரிசப்ஷனில் இருந்த நாற்காலியில் உட்காரச் சொல்லிவிட்டு சசிகலா நின்று கொண்டு இருந்தார்.
“கணேசனைக் கொஞ்சம் தண்ணி கொண்டு வரச் சொல்லுங்கம்மா.”
கணேசன் என்று பெயர் சொன்னதும் சசிகலாவிற்கு கொஞ்சம் முகத்தில் நிம்மதி பரவியதை மனோகர் கவனித்தார்.
“முரளியை எங்கக் காணோம்.”
“அவன் ஹோம் ஒர்க் முடிச்சிட்டு தூங்குறான்.”
பேசியவைகளை உள்ளே இருந்து கேட்டுக்கொண்டிருந்த கணேசன் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்தான். அவனிடம் தண்ணியை வாங்கிக் குடித்தவர். வாங்கி வந்திருந்தப் பழங்களைக் கொடுத்தார். அவன் சசிகலாவைப் பார்க்க. அவர் தலையசைத்ததும் வாங்கிக் கொண்டு உள்ளே வைத்துவிட்டு, அவன் புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டு இருந்தான். மனோகரருக்கு ‘சசிகலா குழந்தைகளை சிறப்பாக வளர்த்திருக்கிறாள்’ என்ற எண்ணம் அவருக்குள் வந்தது.
“மாமா உங்களைப் பத்தி எதுவும் என்கிட்ட சொன்னதில்லையே. நீங்கள் யாரு சார்.”
சசிகலா பேச்சுக்களுக்கு இடையே மாமா என்று சொல்லிக் கொண்டே இருந்தால் நன்றாக இருக்கும் என்று மனோகர் நினைத்தார்.
“அவனோட காலேஜ் சீனியர் நான். என்னை அவன் உங்களிடம் சொல்ல வாய்ப்பு இல்லை. அவன் எங்கப் போயிட்டான்.”
சசிகலா இந்தக் கேள்வியை எதிர் கொள்ள முடியாமல் அழுதார். அவர் அழுகும் வரை மனோகர் காத்திருந்தார்.
“அவர் ப்ரண்ட்டப் பார்த்துட்டு வர்றேன்னு நார்த் சைடுப் போனார். ஹரியானாவோ ஹரித்துவாரோ அதைக் கூட நான் சரியாக் கேட்கலை.இரண்டு வருஷமாச்சு. இன்னும் வரலை சார். சொந்தக்காரங்க அவன் இருக்கானா செத்துட்டானான்னு கேட்குறாங்க. போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணி இருக்கு. போன் நம்பர் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது. பிறகு இப்போது சேவையில் இல்லைன்னு சொல்லுது. போன மாசம் அந்த நம்பரை வேறு ஒருத்தர் எடுத்து ஏதோ ஒரு மொழி பேசுறார். அந்த சிம்ம அவர் புதுசா வாங்கினாராம். மாமா செத்துட்டார்ன்னு சொந்தக்காரங்க முடிவு பண்ணிட்டாங்க.”
சசிகலா மறுபடியும் அழுதார். மனோகரும் அழுவதை சசிகலா கவனித்துவிட்டு தனது அழுகை நிறுத்திவிட்டு சொன்னார்.
“மாமா உயிரோட இருக்காரா,இல்லையான்னு தெரியாம ஒவ்வொரு முறையும் தாலியைப் பார்க்கும்போது உயிரை என்னமோ பண்ணுது சார்.”
‘நான் தான் உன் மாமா’ என்று சசிகலாவிடம் சொல்ல அவருக்கு தயக்கமாக இருந்தது. அந்நிய ஆளை அவளால் எப்படி ஏற்க முடியும். அவர்தான் மனோகர் என்று நிருபிக்க அவரிடம் எந்த ஆதாரமும் இல்லை. அவரால் அவருடைய ஆதார் கார்டு கூட மீண்டும் வாங்க முடியாது. அவரின் உடலில் மிகச்சில இடங்களைத் தவிர அவருடையது என்று சொல்ல ‘பசிக்கும் வயிறும்.சிந்திக்கும் மனமும்.சிரிப்பாய் சிரிக்கும் இந்த உயிரும் தான்’ இருக்கிறது. அதை வைத்து யாரிடம் மனோகர் என்று நிரூபிப்பது.
அவர் கையில் வைத்திருக்கும் சொம்பில் மனோகர் என்று எழுதி இருக்கிறது. இதே மாதிரி உள்ளே உள்ள சொம்பில் மனோகரன் என்று எழுதி அதில் உள்ள ‘ன்’ அடிகப்பட்டு பிறகு மனோகர் சண்டை போட்டு முழுப்பெயரை அடித்துவிட்டு சசிகலா என்று எழுதச் சொன்னதை சொன்னால் சசிகலா நம்புவாரா.இப்படி எத்தனையோ இருக்கிறது.
‘உன்னை இந்த உலகத்தில் யாருக்கும் தெரியாதுடா. முதல்ல நீ மனோகரே இல்லைடா.’
“மாமா செத்துப் போயிட்டாருன்னு மனசு ஏற்கவே மாட்டேங்குது.”
சொம்பைச் சுற்றியபடி பார்த்துக்கொண்டிருந்த மனோகர் சசிகலா பேசியதை கேட்காதது போல பாவனையில் அவரைப் பார்த்தார்.
“மாமா செத்துப் போயிட்டாருன்னு மனசு ஏற்கவே மாட்டேங்குது.”
இன்னொரு மாமா சொல்லட்டும் என்ற அவரின் திட்டம் கை கொடுத்தது.
“ஆமாம்.கண்டிப்பாக இருப்பார்ம்மா”
“இல்லை சார். அந்த நம்பிக்கை நாளுக்கு நாள் குறைஞ்சுக்கிட்டே வருது சார்.”
மனோகர் பேச்சை மாற்ற நினைத்து
“வருமானத்திற்கு என்ன செய்கிறீர்கள்” என்றார்.
“சொந்த வீடு. போஸ்டல்ல வேலைக்கு சேர்ந்திருக்கேன். அது ஒன்னும் பிரச்சினை இல்லை. மாமா இல்லாதக் குறை மட்டும் தான். பாட்டி ஊருக்கு போயிருக்காங்க. இல்லைன்னா இங்கையே தங்கிட்டுப் போங்கன்னு சொல்வேன்.”
“எந்தப் பாட்டி.”
“என்னாக் கேட்குறீங்க.”
“பாட்டி இருப்பதாக மனோகர் சொன்னதில்லையே. அதான்ம்மா கேட்டேன்.”
“வேலைக்கு வச்சிருக்கேன்.”
அவருக்கு முரளியையும் பார்த்துவிட்டால் கிளம்பிவிடலாம் என்று தோன்றியது. கேட்க கூச்சமாக இருந்தது. ஏதாவது ஒரு அதிசயம் நடந்து நம் வீட்டிலேயே தங்கிவிட்டால் எத்தனை சந்தோசமாக இருக்கும் என்று நினைக்கும்போதே மனம் சந்தோசமாக உணர்ந்தது.
“உங்க போன் நம்பர் கொடுங்க மாமாவைப் வந்தததும் பேசச் சொல்றேன்.”
மறுபடியும் சசிகலா அழ ஆரம்பித்துவிட்டார். பிறகு அவரேப் பேசினார்.
“போலீஸ் மொபைல் நம்பரை ட்ராக் பண்ணப்போ. ஹரித்துவார்ல ஏதோ மலையில் ட்ராக்கானதோட . அதுக்கு மேல எதுவும் தெரியலையாம். அங்க உள்ள போலீஸ் ஸ்டேசன்ல இதே மாதிரி தேடச் சொல்லி பல கம்ப்ளைண்ட் இருக்காம். ‘ஏதாவது ஆசிரமத்தில் இருக்கலாம். இல்ல செத்திருக்கலாம்.’என்று அவர்கள் சொன்னார்களாம்.”
அப்போதுதான் அவருக்கு மருத்துவமனையில் டாக்டர்கள் போன் வாங்கிக்கொடுத்தது மனோகருக்கு நினைவுக்கு வந்தது. அதை எடுத்து ஆன் செய்து கணேசனை அழைத்து அவனோடு செல்ஃபி எடுத்தபோது சசிகலா தான் வராமல் ஒதுங்கிக் கொண்டார். கணேசன் வீட்டிற்குள் சென்று அவர்கள் வீட்டு போனிலும் செல்ஃபி எடுத்தான். மனோகர் அந்த கைபேசியில் எழுதி ஒட்டி இருந்த நம்பரை குறித்துக்கொள்ளச் சொல்லி ‘அதுதான் என் நம்பர்’ என்றார்.
அவரால் அழுகையை அடக்க முடியாமல் அழுதார்.
“ஏதாவது பிரச்சனையா.உதவி எதுவும் கேட்டு வந்தீங்களா.”
“மாமா.. மாமான்னு வார்த்தைக்கு வார்த்தை பேசுறீங்க. அவன் எங்கே இருக்கானோ தெரியலையேம்மா.”
அங்கு நிலவிய மௌனத்தைக் கலைத்து மனோகர் கிளம்ப தன்னை தயாராக்கிக் கொண்டார். இனி இவர்களுக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
‘உன்னை இந்த உலகத்தில் யாருக்கும் தெரியாதுடா. முதல்ல நீ மனோகரே இல்லைடா.’
அவர் வெளியே வந்தபோது தெரு நாய் மட்டும் பின்னால் வந்து கொண்டு இருந்தது. ஆட்டோ பிடித்து இரயில் நிலையம் வந்தவர். இறுதியாக தற்கொலை செய்வது என முடிவு எடுத்துவிட்டார்.
‘இது என்னுடைய ஊர். இங்கு இருக்கும் ஒவ்வொரு தெருவிலும் எனக்குத் தெரிந்தவர்களும்.என்னைத் தெரிந்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால் யாருக்கும் என்னைத் தெரியாது. குடும்பமும் சொந்த பந்தமும் இருக்கிறது. அவர்களுக்கும் என்னைத் தெரியாது.’
மிகவும் குழம்பினார். மீண்டும் அதே மாத்திரையை எடுத்துப் போட்டார்.
‘சசிகலாவிடம் உண்மையைச் சொன்னால் அவள் ஏற்பாளா. யாரோ வயதானவரோடு குடும்பம் நடத்துகிறாள் என்று உறவுகள் பேசும் என்று பயப்படுவாளா.’
அவருக்கு இரயிலில் தலையை வைத்து படுப்பதைத் தவிர வேறு சிறந்த வழி இருப்பதாக தெரியவில்லை. யாரையுமே தெரியாத உலகத்தில் யாருக்காக வாழவேண்டும்.
சசிகலாவிற்கு தெரியாமல் எடுத்த போட்டோவை பார்க்கலாம் என கைபேசியை எடுத்தபோது தமிழில் பேசிய டாக்டருக்கு போன் செய்யலாமா என நினைத்தார். இந்த நேரத்தில் அவர் தூங்கினாலும் தூங்கலாம். நாம் பேசினால் அவரும் போனை எடுத்து பேச வேண்டும் என்று என்ன உறவு இருக்கிறது என்று தயங்கினார். இரயில் நிலையத்தில் யாரும் இல்லாததால் தரையில் படுத்தால் தேவலாம் எனத் தோன்ற அப்படியே படுத்து வானத்தைப் பார்த்தார். வானம் விண்மீன்களால் மின்னியது. அது அவரின் பழைய நாட்களை நினைவூட்டியது.அதனால் அவரைக் கடித்த கொசுக்களை அவர் உணரவே இல்லை.
எழுந்து உட்கார்ந்ததும் அவருக்குத் தற்கொலை செய்யும் வேகம் குறைவாக இருந்தது. ‘ஏதோவொரு காரணத்தால் அந்தக் கல்லூரி தன்னை எத்தனையோ லட்சம் செலவுகள் செய்து காப்பாற்றி இருக்கிறது என்றால் இந்த உடல் அவர்களுக்குத்தான் சொந்தம். அது அந்தக் கல்லூரிக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாக அமையும். ஏதாவது ஒரு வேலை வாங்கி அங்கேயே காலத்தைக் கடத்திவிட வேண்டியதுதான்’ என மனோகர் முடிவு எடுத்து டிக்கெட் எடுக்கும் இடத்திற்கு சென்றார்.
கல்லூரியின் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்த போது மனோகருக்கு போன் வந்தது. அவருக்கு போன் செய்ய யாருமே இல்லை. தவறான கால் வந்தால் நன்றாக இருக்கும் என இந்த உலகத்தில் ஆசைப்பட்ட ஒரே ஆள் மனோகர் தான்.
“மனோகர் மாமா இருக்காரா.”
அவருக்கு சசிகலா தான் என தெரிந்ததால் அவரது தொண்டை கட்டியது.அந்த நேரம் பார்த்து தமிழ் பேசும் டாக்டர் லிஃப்ட்டில் போக வந்தார்.
“சொல்லுடீ.”
இது சசிகலா விரும்பும் வார்த்தை.
“மாமா… மாமா… மாமா….”
இது மனோகருக்கு பிடித்த வார்த்தை.
கைபேசியை தமிழ் டாக்டரிடம் கொடுத்துவிட்டு அவரின் காலில் விழுந்தார். அவர் பதறி தூக்கிவிட்டு போனில் பேசினார்.
“நான் மனோகரடோ டாக்டர் பேசுறேன்ம்மா.”
“நான் சசிகலா பேசுறேன் சார்.”
“கடவுளே…. என்ன ஆச்சரியம்மா. உங்கள் கிட்ட அவர் சொல்லவே கூடாதுன்னு தெளிவா இருந்தார். ஆனா அவர் உங்க போட்டோவைப் பார்த்து பேசாம இருந்த நேரமே இல்லே. யோவ்… பைத்தியமாயிரப் போறய்யான்னு கண்டிச்சேன். ஆனா அப்படி பேசுறதுலதான். அவர் உயிர் வாழ்றார்ன்னு பிறகு எனக்குப் புரிஞ்சுது.” கைபேசியை மனோகரிடம் ‘தரவா’ என செய்கையில் டாக்டர் கேட்க மனோகர் வேண்டாம் என மறுத்துவிட்டார்.
கல்லூரியே மனோகரைக் கொண்டாடியது. அவரைக் கடக்கும் ஒவ்வொருவரும் அவரின் இடது காது மடலின் மேல் தலை முடியை ஒட்டி இருக்கும் கருப்பு மச்சத்தைப் பார்க்காமல் இருக்கமாட்டார்கள். மிளகு அளவில் இருக்கும் சசிகலா விரும்பும் அந்த மச்சம் தான் மனோகருடன் மீண்டும் வாழ வைத்தது.பலூனில் தண்ணீர் நிரப்பி தொடுவது போல அத்தனை மிருதுவாக இருக்கும் அந்த மச்சம் சசிகலாவின் நாக்கு வருடல் பட்டதால்தான் நாசமாகாமல் இருந்ததோ என்னவோ. கணேசன் எடுத்த போட்டோவை ஒரு நாள் பார்த்தபோது சசிகலா அந்த மச்சத்தைப் பார்த்து மகிழ்ந்து போனார்.
தன் சொந்த ஊரில் இருப்பது தனக்கு மனம் அழுத்தம் தரும் என்பதாலும் இந்த மருத்துவக் கல்லூரியில் வேலை பார்ப்பது தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்ற தன் புரிதலில் மனோகர் உறுதியாக இருந்துவிட்டார் மனோகர், கணேசன் ,முரளி இவர்களின் மரபணு டெஸ்ட் ரிப்போர்ட்டை அனுப்பி மனோகருக்கு ஆதார் கார்டு வாங்க கல்லூரி அரசுக்கு கடிதம் எழுதியது.
மனோகருடைய நண்பரின் நண்பர் அருள் செல்வன் தபால் துறையில் அவர் ஊரில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அவர் யூனியனில் பெரிய பதவியில் இருந்தார். அவர்தான் சசிகலாவிற்கு கல்லூரி இருக்கும் நகரத்திற்கு மாறுதல் வாங்கிக் கொடுத்ததோடு குவாட்டர்ஸிலும் வீடு கிடைக்க உதவினார்.
மனோகரை முதல் வருட மாணவர்கள் தாத்தா என்று அழைப்பதும் பிறகு கொஞ்ச நாட்கள் கழித்து அவர்களே அங்கிள் என மாற்றி அழைப்பது மட்டும் அவர் வாழ்வில் மாறவே இல்லை.
****
பிகு:
நான்,மணிவண்ணன்,பிரபு ராம் மூவரும் பரோட்டாக் கடையில் சாப்பிடும்போது வந்த எங்களது நண்பர் விபத்தில் முகத்தோற்றமே மாறியதால் நாங்கள் அறியவில்லை என்பதை அறிந்து.தன் பர்ஸை எடுத்து அதற்குள் வைத்திருந்த தன் பழைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோவைப் பார்க்கக் கொடுத்தார்.நாங்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டோம் அவருக்கும் இந்தக் கதையின் சம்பவங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.இந்தக் கதை எழுத காரணமாக அமைந்த அவருக்கு இந்தக் கதையை சமர்ப்பிக்கிறேன்.
நன்றி
