பங்குனியின் வெயில் உச்சத்தில் இருந்தது. கோபுரத்தின் நிழல் நீளவாக்கில் பிரகாரத்தில் விழுந்தது. சித்திரை திருவிழா தொடங்க இரண்டு நாட்களே இருப்பதால் கோவிலின் எல்லா இடங்களிலும் வேலை நடந்துகொண்டிருந்தது.
கொம்பையா நாதஸ்வரத்தில் பூர்ணசந்திரிகா ராகத்தில் வாசிக்கும் தீட்சிதர் கிருதியை உச்சிக்கால பூஜையில் கேட்பதற்கே எத்தனையோ ஜென்மத்தில் பாலும் தேனும் திரவியமும் கொண்டு நித்தியசுந்தரனுக்கு அபிஷேகம் செய்திருக்க வேண்டும்.
சொக்கையா பிள்ளை தவில் வாசிக்க, திரிபுட தாளத்தில் தளிகை மல்லாரியில் தொடங்கி பூர்ணசந்திரிகா அல்லது காமவர்த்தினியில் உச்சிக்கால பூஜை நடக்கும்.
நாதஸ்வர இசை முடிந்ததும் ருத்ர தாளத்தில் கைலாய இசை. அதன் பின் காளியப்ப ஓதுவார் நாவுக்கரசரின் எழாம் திருமுறையிலிருந்து பாடும் பதிகம். பிறகு மந்தாரி அல்லது முகாரியில் நடராஜனின் பாட்டு என்று உச்சிக்கால பூஜை நிறைவடையும்.
பரம்பரை பரம்பரையாக வந்த அந்த கோவில் பணியை, அப்பா தியாகராஜன் மறைவுக்குப் பிறகு முப்பத்தைந்து வயதில் நடராஜன் ஏற்றுக்கொண்டான். கடந்த இருபத்தெட்டு வருடங்களில் அந்த பணியில் எந்த பிசிரும் விழவில்லை.
ஆனால் ஏனோ இன்று நடராஜனின் குரலில் தடுமாற்றம் இருந்தது. மேலே எடுக்க வேண்டிய குரல் ஒரு இடத்தில் பாதியில் உடைந்து நின்றது. வியர்வையில் நனைந்த உடல் லேசாக அதிர்ந்துகொண்டிருந்தது.
அதைக் கண்ட காளியப்பா கொம்பையாவை சைகையால் அழைத்தார்.
“நடராஜனை கூட்டிண்டு போய் ஷண்முகர் சந்நிதியில் இரு. மடப்பள்ளியிலிருந்து ஏதாவது சாப்பிட எடுத்துக்கொண்டு வருகிறேன்.” என்று துடி தாளத்தில் விரைந்தான்.
ராஜப்பா பட்டர் சுவாமி கோவில் நடை அடைத்துவிட்டு திரும்பும்போது, ஷண்முகர் சந்நிதியின் பின்னால் நடராஜன் சாய்ந்து அமர்ந்திருந்தான்.
கொம்பையா, காளியப்ப ஓதுவார், நடராஜன் இவர்கள் மூவரும் உச்சிக்கால பூஜைக்குப் பிறகு பேசும் இடம் அது. யானைக் கொட்டடிக்கும் ஷண்முகர் சந்நிதிக்கும் இடையில் இருந்த அந்த நிழல்வாசல் அவர்களுக்கானது. சங்கராபரணம் முதல் சன்னதி தெரு ரகசியங்கள் வரை எல்லாமும் அங்கே பேசப்படும்.
காளியப்பா அருகில் வந்து பார்த்தபோது, நடராஜன் கண்களை மூடி சாய்ந்திருந்தான். தலை சற்று ஒருபக்கமாக இறங்கியிருந்தது. கொம்பையா அருகில் கையில் தண்ணீருடன் நின்றிருந்தான்.
சில நேரங்களில் ஒரு ராகத்தை மனோதர்மப் படி விரித்துப் பாடிவிட்டு நடராஜன் கண்களை மூடி அமைதியாக அமர்ந்திருப்பான். கண் இமைகளின் அசைவை கவனித்தால் தெரியும்.
“ஒரு ராகத்த எடுத்தோம்னா காலம் நேரம் வர்த்தமானம் எல்லாத்தையும் மறந்துடணும். கீழ இறங்கி வரணும்னு கூட தோணக்கூடாது. காத்துல இறகு மாதிரி அதுவா இறங்கி வரணும்,” என்று நடராஜன் சொல்வான். ஆனால் இன்று அவன் திரும்பி வரவில்லை. ஸ்வர எல்லைகளுக்கு அப்பால் எங்கோ தூரத்தில் சென்று விட்டான்.
ஏழு கால பூஜை நடக்கும் அபூர்வமான சிவன் கோயில் அது. நித்தியசுந்தரன் சமேத மரகதாம்பிகை. நால்வரில் மூவர் பாடியிருக்கிறார்கள்.
பெரும்பாலான நாட்களில் சிறுகாலசந்தி, உச்சிக்கால பூஜை முடிந்ததும் மூன்று பேரும் ஷண்முகர் சந்நிதியின் பின்புற நிழல்வாசலில் நின்றிருப்பார்கள். தல விருட்சமான மாமரத்தின் நிழல் எப்போதும் கருமையாக அங்கு சூழ்ந்திருக்கும்.
மூவரும் வீட்டில் இருந்ததைவிட இங்கு இருந்த நேரம் அதிகம். இன்று அதே இடத்தில் நடராஜன் கண்மூடி சடலமாக கிடந்தான்.
ராஜப்பா பட்டர் வந்தார். சந்திரமௌலி பட்டர் வந்தார். கோயில் பேஷ்கார் பாலசுப்பிரமணியம் பிள்ளை வந்தார். பாராகாரர்கள், அறநிலைத்துறை அதிகாரிகள் என எல்லோரும் கூடினார்கள்.
ஆகம வழக்கப்படி நடை அடைத்து தீட்டு கழிக்க புண்யாஹ வாசனம், கலச பூஜையும் செய்த பிறகே நடை திறக்க வேண்டும்.
நடராஜனின் உடல் தெற்கு ரதவீதியில் உள்ள பரம்பரை வீட்டில் இருந்தது. கொம்பையா அருகே அமர்ந்திருந்தான். விரல்கள் சப்தமில்லாமல் காற்றில் சுரங்களைத் தொட்டுக்கொண்டிருந்தன.
காளியப்பா கவனித்தான். கம்பீர நாட்டையின் ஆரோகணம்
— ஸ க ம ப நி ஸ — விரல்கள் ஒவ்வொரு சுரத்திலும் நின்று நின்று போயின. நிஷாதத்தில் விரல் நின்றது. காகலி நிஷாதம் — கம்பீர நாட்டையின் உயிர்சுரம். அந்த சுரத்தில் கொம்பையா விரல் வைத்து நகரவில்லை.
நடராஜன் எப்போதும் அந்த நிஷாதத்தை தனிவிதமாக தொடுவான். சற்று தாமதமாக, சற்று ஆழமாக அங்கே ஒரு கணம் உலகம் நிறுத்தப்படுவது போல் இருக்கும்.
சில வருடத்துக்கு முன்பு நடந்த சம்பவம் இன்றும் நினைவு இருக்கிறது. அன்றைய சுவாமி புறப்பாடு முடிந்தவுடன் நாங்கள் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது நடராஜன் “ கொம்பையா இன்னைக்கு நீ புறப்பாட்டு மல்லாரி வாசிக்கிறப்போ ஒரு சின்ன தடுமாற்றம் இருந்தது. மல்லாரில நடுவில் ஒரு இடம் இருக்கு. பஞ்சமத்துல இருந்து தார ஷட்ஜத்துக்கு தாவும் இடம். நீ இன்னைக்கு அதை கொஞ்சம் வேகமா எடுத்த” அந்த இடம் தான் மல்லாரியின் உயிர். அங்க தாவல் வேணாம். மிதக்கணும். காத்துல தூசி மாதிரி எங்கே போவதுனு தெரியாம மிதக்கணும் “ என்று சொன்னவுடன் கொம்பையா கண்களை துடைத்துக் கொண்டது இன்று நடந்தது போல் இருக்கிறது.
பதினைந்து வருடங்கள் வட இந்தியாவில் நாடோடியாக இசை பின்னால் அலைந்தபோது புரிந்தது என்று ஒருமுறை சொன்னான். இந்த ஸ்வரத்தை தொட்டால் செவியுள்ள எல்லோரும் அழுவார்கள் . அவர்களும் அப்படித்தான் ஆனால் பேர் மட்டும் வேறு.
கொம்பையா விரல் இன்னும் அங்கேயே இருந்தது.
வைதீஸ்வரனும் கோமதியும் வந்தார்கள். கோமதி நடராஜனின் முகத்தை பார்த்தாள். கை நீட்டி நெற்றியைத் தொட்டாள். விரல்கள் நடுங்கின. அவள் அழுகை சப்தமில்லாதது, ஆர்பாட்டமில்லாதது. வருடங்களாக பழகிய மௌனம் இன்னும் கூர்மை கொண்டிருந்தது.
வைதீஸ்வரன் தூரத்தில் நின்றான். காளியப்பா அவன் கைகளை பார்த்தான். இறுக்கமாக பிடித்துக்கொண்டிருந்தன. விரல்கள் வெளிரின. அவன் முகம் என்ன நினைக்கிறான் என்பதை காட்டவில்லை.
மாலையில் பேஷ்கார் பாலசுப்பிரமணியம் பிள்ளை வந்தார். நாளை மறுநாள் சித்திரை திருவிழா கொடியேற்றம். சீக்கிரம் காரியம் நடந்தால்தான் புண்யாஹ வாசனம் முடிந்து மற்ற எல்லா ஏற்பாடுகளும் செய்ய முடியும் என வைதீஸ்வரனிடம் கூறினார்.
யாருக்காகவும் காத்திருக்க வேண்டாம். கூடப்பிறந்தவர்களில் இருவர் இங்கே இருக்கிறார்கள். மற்ற இரண்டு சகோதரர்களான மணி பிரதர்ஸ் எந்த ஊரில் எந்த நாட்டில் கச்சேரி செய்துகொண்டிருக்கிறார்களோ யாருக்குத் தெரியும்.
இருபத்தெட்டு வருடம் கோவிலுக்காக பாடியவன் சரீரம் மூன்று நாழிகை நேரத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற நிதர்சனம் காளியப்பாவிற்கு கசப்பாக இருந்தது.
நாவிதன் சிவஞானம் எல்லா ஏற்பாடுகளையும் செய்தான். கல்யாணம் ஆகாத பிரம்மச்சாரி என்பதால் வைதீஸ்வரன்தான் காரியம் செய்தான். இரவோடு இரவாக எல்லாம் முடிந்தது.
கொம்பையா சடலம் எரிவதை பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு திரும்பி நடந்தான். காளியப்பா அவனோடு நடந்தான். மயானத்தின் கரும்புகை மேற்கு நோக்கி எழுந்தது. அவர்கள் திரும்பி வரும்போது வானம் கிழக்கே வெளுக்க ஆரம்பித்திருந்தது.
புண்யாஹ வாசனம் முடிந்து வாசந்தி இழுத்து பரிகார பூஜைகளை சிவாச்சாரியார்கள் செய்து முடித்தார்கள்.
மறுநாள் கொடியேற்றம். காலையில் தீர்த்த நீர் எடுக்க யானை கோயிலிலிருந்து புறப்பட்டது. தீர்த்த கலசங்கள் ஏற்றப்பட்டன. ஊர்வலம் நகர ஆரம்பித்தது.
சொக்கையா பிள்ளை திஸ்ர ஜதியில் திரிபுட தாளத்தில் ஆரம்பித்தார்.
கொம்பையா நாதஸ்வரம் எடுத்தான். காளியப்பா பார்த்தான். கொம்பையாவின் கைகள் வழக்கத்திற்கு மாறாக மெதுவாக நகர்ந்தன. நாதஸ்வரத்தை உதடுகளில் வைக்கும்போது ஒரு நொடி நின்றான். கண்களை மூடினான்.
திறக்கவில்லை.
முதல் நாதம் புறப்பட்டது. கம்பீர நாட்டையின் ஷட்ஜமம். அது நேரே வரவில்லை. கொஞ்சம் தாழ்ந்து, கொஞ்சம் தடுமாறி, பிறகு நிலைபெற்றது. கொம்பையாவின் திக்குவாய் , அந்த நாதத்தில் இருந்த சிறிய விரிசல் வழியாக காற்று நுழைந்தது.
காந்தாரம் வந்தது. மத்யமம் திறந்தது.
யானை நதியை நோக்கி நடந்தது. வழியில் ஊர் மெதுவாக விழித்துக்கொண்டிருந்தது.
காளியப்பாவின் உள்ளே நட்ட பாடையில் அப்பர் குரல் எழுந்தது. வெளியே வரவில்லை.
“மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்”
கொம்பையாவின் நாதஸ்வரம் பஞ்சமத்தை தொட்டது. அங்கே ஒரு கணம் எல்லாம் நின்றது போலொரு மௌனம்.
நதிக்கரையில் யானை நின்றது. தீர்த்தம் எடுக்கப்பட்டது. அந்த மௌனத்தில் காளியப்பாவுக்கு திடீரென்று நடராஜன் முகம் தெரிந்தது. இல்லை அது நடராஜன் அல்ல. தெளிவாக தெரியாத ஒரு பெண்ணுருவம்.
நாதஸ்வரம் மீண்டும் ஆரம்பித்தது. நிஷாதம் வந்தது — காகலி நிஷாதம். கொம்பையா அங்கே நின்றான். நடராஜன் எப்போதும் நிற்கும் இடம். அந்த சுரத்தில் கொம்பையா ஒரு நொடி, ஒரே ஒரு நொடி அதிகமாக இருந்தான்.காளியப்பா கண்கள் கலங்கின. திருப்பிக்கொண்டான்.
யானை திரும்பியது. சூரியன் உதித்தான். கோயில் நடை திறந்தது. காளியப்பா கோபுரத்தை பார்த்தான்.
“மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே”
கொம்பையா நாதஸ்வரத்தை சொக்கையா பிள்ளை கையில் கொடுத்துவிட்டு வேஷ்டியினால் முகம் துடைத்துக்கொண்டான். இருவரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.
கம்பீர நாட்டையில் ரிஷபம் இல்லை. தைவதமும் இல்லை. ஆனால் இல்லாத அந்த சுரங்கள் எங்கோ கேட்கின்றன என்று நடராஜன் சொன்னது நினைவு வந்தது
மயிர்
ஆசிரியர்: இராயகிரி சங்கர்
மயிர்
ஆசிரியர்: இராயகிரி சங்கர்