இரகசிய நடுக்கம்.
இப்பொழுதெல்லாம்
சன்னலோர இருக்கைகள்
வாய்த்தாலும்
அமருவதில்லை
காற்றில்
வாடை பிடித்து
வானேறும்
எண்ணத்திற்குப் பயந்து.
அன்றந்த
நிறுத்தத்தில்
அந்தப் பேருந்து
நிற்காமல்
சென்றிருந்தால்
நீயும் கூட
எங்கோ
வாழ்ந்து கொண்டு
இருந்திருப்பாய்.
உன் பக்கம்
சிலரும்
என் பக்கம்
சிலரும்
இறந்ததற்கு
நாம்தான்
காரணமென்று
கடந்துவிட முடியாதபடி
நேற்றும்
நிகழ்ந்தது
அதே போலவொன்று.
நொறுங்கிய
உடலுக்குள்
நூலாம்படையாக
பிடித்திருக்கும்
வாழ்வின்
எஞ்சியபொழுதில்
எப்பொழுது
வாய்த்தாலும்
சன்னலோரப் பயணம்
எனக்கு
சற்றேப் பதட்டமானதுதான்
நிறுத்தங்களுடைய
பேருந்துப் பயணத்தில்.
***
வானம் பார்க்கும் ஓடை.
என் நாட்களில் ஒன்று
வாடி உதிர்ந்ததை
நான் கண் முன்னேக் கண்டேன்.
அதன் முன் நாட்களில்
அந்த நாளுக்கான தயாரிப்புகள் நிகழ்ந்த வண்ணமிருந்தது.
நினையாத புறத்திலிருந்து வந்த செய்தியில் மிகுந்த வாஞ்சைகள் இருந்ததுதான் யாவையும் அதன் போக்கில் அழைத்தது.
என் தருணங்கள் யாவிலும் உள்ளே ஒட்டி இருந்த ஒற்றை எண்ணம் சற்றைக்கு முன்பு வரை இருந்ததுபோல எவருக்கும் இருந்ததாவென்று எவரிடம் கேட்பதெனத் தெரியவில்லை.
அந்த நாளின் முன்பிருந்த இரவை இழுத்துத் தள்ளி விடியலை நானே அழைத்து வந்தேன்.
இன்றந்தச் சூரியன் தகிக்காமல் உதித்தெழுந்து பாரிய சுகம் தந்து போனது.
என் தெருவின் நாய் என்னை விடாமல் நோட்டமிட்ட படி படுத்திருந்தது.
என் பூரித்தலின் வாசனை அதற்கு எதனை நினைவூட்டயதென்பதை நான் அறியேன்.
காலை நேரக் குதுகலிப்பில் காத்திருந்த மதியம் வருத்தத்தின் அனலைக் கக்கியது.
யாவும் சோர்ந்து போனதைக் கண்ட சூரியன் கதிர்கள் சுருங்கி இரவை எனக்கு கையளித்தது.
பிரவாகம் எடுக்கும் பேராசையின் ஊற்றுப் பொங்காமல் பொசுங்கி
வானம் பார்க்கும் ஓடையாக வருத்தங்களோடு அடங்கியது.
என் முன்னே அந்த நாள் என்னை சிலுவையில் அறைந்தபொழுதும் நான் நம்பினேன். உயிர்த்தெழும் சந்தர்ப்பம் வாய்க்குமென்று பிரவாகமெடுத்து சுகம் காண.
ஞாயிறுகள் வந்து வந்து போனது அவள் மட்டும் வாக்குறுதி மறந்து என்னை உயிர்ப்பிக்காமல் போனாள் சிலுவைப்பாடுகளிலேயே சிதைந்து போகுமாறு எப்பொழுதும்.
***
காகித ஓடம்
எனக்காக
அந்த மழை பெய்யவில்லை என
நான் சொன்னாலும்
தனக்காக பெய்ததாக
பிறர் நினைத்தார்கள்.
இங்கு
எதுவும் நமக்காக நடந்தேறுவதில்லை என்றாலும்
அது
நமக்காகவும் நடக்கலாம்தான்.
ஓடி ஒளிந்து
கரையாமல்
தன்னைக்
காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு
மத்தியில்
நனைந்து நடக்க ஆரம்பித்தேன்
ரோமங்கள்
சிலிர்க்க.
தலை துவட்ட
துண்டு வாங்கும்பொழுது
கிடைக்கும்
வசவுகள் பற்றிய
நினைவே இல்லை
காற்றும் கவனத்தை
ஈர்த்ததால்.
அரசியல் குழிகள்
ஆங்காங்கே
அச்சம் தந்தது
நிதானமாக
நடக்குமாறு.
தலை உயர்த்தி
விரித்த வாயில்
நிரம்பிய நீருக்கு
வானத்தின் சுவைதான்.
இரு சக்கர
வாகனத்தோடு
மகளும் இருந்திருந்தால்
இந்த மழை நேரம் மகோன்னதமாக
மாறி இருக்கும்
வெகு தூரம் அழைத்து.
முற்றிலும் நனைந்த
பிறகு
யாருக்காக
அசௌகரியப்பட வேண்டும்
முக்காடிட்டு மறைக்க.
காரை நிறுத்தி
கதவைத் திறந்தவன்
நண்பனாகத்தான் இருந்தான்
படுபாவியை
பகைவனென
பாரா முகமாய்
கடந்து விட்டேன்
கதவைச் சாத்தி.
அநேகமாக
இன்னும் கொஞ்ச நேரத்தில்
அலைபேசி அழைக்கலாம்
வீட்டிலிருந்து
பற்றிய நெருப்பின்
அனலாக.
இடது பக்க
சந்தின்
முதல் வீட்டு
வாசலில்
சாய்ந்து கிடந்த
காகித ஓடம்
கிழியாமல்
திண்ணையில்
வைத்தபோது
கிழிந்த சேலையில்
இருந்தவர்
முன்பு
இருந்தது
நனையாத ஓடமொன்று.
தேம்பித் தேம்பி
அழுதவளை
தேற்ற எனக்கு
திராணி இல்லை
பார்ப்பவர்கள்
பாதகக் கணக்கொன்று போடும்
பயத்தைத் தவிர.
நனையாத ஓடத்தை
நான் தண்ணீரில் விட
விடை பெற்றுப் போன
மழைக்கு
வேறெங்காவது
வேலைகள் இருக்கலாம்.
தாழ்வாரத்தில் சொட்டிய நீரில்
தன்னைச் சுற்றியக் ஓடத்தைப் பார்த்து
துள்ளிக் குதித்த
தாய்க்கு
குழந்தையின் மனசு.
கை கொட்டிச் சிரித்து
கண்ணீரை மறந்தவளிடம்
காகிதக் ஓடத்தின்
கதையை
எப்படிக் கேட்பதென
வந்து
தொலைத்தேன்
வாஞ்சைகள் கொண்டு.
திண்ணை வீட்டைத்
தினம் கடக்கும் பொழுதெல்லாம்
தேடித் துலாவுகிறது
மனம்
காணுமாசையில்
கவலைகள் சூழ
இன்றுவரை
கரிசனம் கொண்டு.
***
