
சமீபத்தில் புதிய எழுத்தாளர்கள் சிலரது எழுத்துகளை வாசித்துவிட்டு மனம் நொந்து போயிருந்தேன். தேவையான இடங்களில்கூட புழக்கத்திலுள்ள தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தாமல் தங்கிலீஷில் எழுதியும் தேவையற்ற இடங்களில் மிகையான பழந்தமிழ்ச் சொற்களைப் போட்டும் மொழியைக் கையாளவே தெரியாதவர்கள் எல்லாம் என்ன நம்பிக்கையில் நாவல் எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை.
அந்த வகையில் பிறழ் வாசிக்க எனக்குச் சற்று ஆசுவாசமாயிருந்தது. வாசிப்புப் பழக்கமில்லாமலேயே எழுத வருவதுதான் மேற்சொன்ன புதிய எழுத்தாளர்களின் ஆகப் பெரிய குறை என்று நினைக்கிறேன். பிறழ் நாவலிலும் ஏகப்பட்ட வாக்கியப் பிழைகள் இருக்கத்தான் செய்கிறது. அவர் இருந்திருந்தால் அடுத்த பதிப்பில் நேர் செய்திருக்கக்கூடும். இது நிச்சயம் 100 பக்கங்களில் சொல்லிச் செல்லக்கூடியதல்ல. எல்லாவற்றிலும் நிஜந்தனுக்கு அவசரம்தான் போல.
எழுத்தாளரையும் எழுத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டும் என்பது என் கொள்கை. இங்கே அது குழப்பமாயிருக்கிறது. ஒரு வசதிக்காக அந்தக் கோட்டை இங்கே எடுத்துவிடுகிறேன். இந்நாவலின் மையப்பாத்திரத்தின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. பெயர் குறிப்பிடப்படும் இடங்களில் நட்சத்திரக் குறியீடு. இந்நாவல் தண்ணீரில் விரல்களை நனைத்து ஒரு துணியில் தெளித்தால் எப்படியோ அப்படித்தான் இருக்கிறது. இந்நாவலைப் பற்றி என்ன பேசினாலும் எத்தனை ஆழமாகச் சிந்தித்தாலும் அது நிஜந்தனின் அனுபவத்தை நெருங்கிவிட முடியாது என்பதே எனக்கு எழுத முடியாத அயற்சியைத் தருகிறது.
பிறழ்வு எங்கிருந்து தொடங்குகிறது? ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி எண்ணம் என்பதே பிளவுதான் என்கிறார். அதாவது அனைத்தும் ஒத்த நிலையில் இருக்கும்போது எண்ணமில்லை. வெறுமனே வினையாற்றுகிறோம். எண்ணம் தோன்றியதும் இருத்தலில் இருந்து பிளவு ஏற்பட்டு விடுகிறது. பிறழ் என்பது பிறழ்வு என்பதாகவும் ஒரு கட்டளைச் சொல்லாகவும் தொனிக்கிறது. இதில் நாயகனின் காதில் அடிக்கடி கேட்கும் ‘செத்துப்போ’ என்ற ஆணையின் அளவுக்கே பிறழ் என்ற ஆணையும் வலுவானதாகத் தோன்றுகிறது. பிறழ எவ்வளவு நேரம் ஆகும்?
பால்யகாலம் என்பது ஏதேன் தோட்டம். தாய்தான் கடவுள். அவள் கோபம் கொண்டால், தோட்டத்துக்கு வெளியில் விழுந்துவிடுகிறோம். இந்நாவலில் பீடி குடித்ததற்காக தாய் பேசாமல் இருப்பதில் இருந்து பிறழ்வு தொடங்குகிறது. அதுகூட இல்லை. ஏனென்றால் தாய் திரும்பவும் ஏற்றுக்கொள்வாள். புண்ணிலேயே திரும்பத் திரும்பக் குத்துவதுபோல அவன் அண்ணன் ‘விஷய வாயா’ என்று கூப்பிடுவதிலிருந்து தொடங்குகிறது காதில் ஒலிக்கும் குரல்.
பால்ய வயதில் திருமணமாகாத இளம் பெண்கள்மீது ஏற்படும் ஈர்ப்புக்குப் பெயருண்டா தெரியவில்லை. இரவில் மணமணக்கும் பவளமல்லியின் வாசம். ஓரடி தூரத்திலும் மேலே வீசும் கதகதப்பு. பவானிக்காவும் அவனுக்கு அப்படித்தான் இருந்திருப்பாள். அம்மாவுக்கு அடுத்து அந்தப் பாதுகாப்புணர்வு வேறெங்கு கிடைத்துவிடும்? அறியாப்பருவத்தில் கவட்டைக்காலன் வழியில் மறித்து ஆண்குறியை அவன் வாயில் திணித்து விந்தை ஒழுகவிட்டுச் சென்றது அவனைக் கடைசிவரை துரத்துகிறது. பவானிக்காவுக்கும் பிரச்சினையின் தீவிரம் தெரியவில்லை. அவளிடம் மட்டுமே நடந்ததைச் சொல்கிறான். அவள் தன் சுய இச்சைக்கு அவனைப் பலியாக்குகிறாள். பவானிக்கா அவன் நன்றாகப் படிக்க வேண்டுமென்பதில் அக்கறை இருக்கிறது. வீட்டில் சொல்லி அவனை ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்துவிடுகிறாள். வாசிக்கப் புத்தகங்கள் தருகிறாள். அவனது கற்பனைத் தோற்றத்தில் வரும் மஞ்சள் உடைக்காரிகூடக் கேட்கிறாள், ‘நீ ஏன் பவானிக்காவை உன்னை அப்யூஸ் செய்தவர்களோடு ஒப்பிடாமல், உன்மேல் அக்கறை கொண்டவர்களின் சாயலில் தேடுகிறாய்?’ இந்தக் கேள்விக்கு எளிதில் விடைகண்டுவிட முடியாது.
மூத்திர நாற்றம் அல்லது விந்து வீச்சம் வரும்போதெல்லாம் ‘செத்துப்போ’ என்ற குரல் அவனுக்குக் கேட்கிறது. மனநல மருத்துவமனை கழிப்பறையில் இருக்கையில் ஒரு நோயாளி உள்ளே வந்து அவன் வாயில் மலத்தை அள்ளித் திணிப்பதுவும் இதே அதிர்ச்சிகரமான சம்பவம்தான். ஆனால், அந்த நேரத்தைய பாதிப்பு என்பதைத் தவிர்த்து அது அவனுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது.
’வாழ்க்கை என்பதே ஒரு வேடப் போட்டி. அதில் என் உண்மை முகத்தைத் தூக்கிக் கொண்டு வந்ததில் அவமானமடைந்தேன்’ – காஃப்கா. நாவல் முழுக்க ’அவன்’ பால்யத்தின் பரிசுத்தத்தைத் தூக்கிக் கொண்டு திரிகிறான். அதன்மேல் விழுந்த நீக்க முடியாத கறைகளை எப்படிப் போக்குவது என்பது யாருக்கும் தெரியவில்லை. அப்படி எந்த உறவும் அவனுக்கில்லை. மருத்துவர்களாலும் தீர்வளிக்க முடியவில்லை. மிக அழகாக மலரும் காதல்கூட கருகிப் போகிறது. பவானிக்காவைப் பற்றி எழுதும்போது பேச்சு வழக்கிலும் யமுனாவைப் பற்றி எழுதும்போது நேர்த்தியான அறிவார்ந்த வரிகள் அமைந்திருப்பதையும் கவனிக்கலாம். சொல்லப் போனால், அவனுக்கு ஆறுதல் அளிப்பது அவன் கற்பனையாய் உருவாக்கிக் கொள்ளும் மஞ்சள் சுடிதார்க்காரிதான். அவள் ஒருத்திதான் அவன் மனமறிந்து பேசுகிறாள். ஏனென்றால் அவளே மனம் பிறழ்ந்தவள். அது அவனது இன்னொரு பிரதி. அவனது படைப்பு. உச்சபட்ச அழுகையில் தரிசனமாகும் கடவுளைப்போல அவனுக்குக் காட்சி தருகிறாள்.
காலத்தைப் பற்றிய வினவல்களாக வரும் 28ஆம் அத்தியாயத்தின் முதல் பத்தி திகைப்பூட்டுகிறது. ‘விழித்திருக்கும் நேரம் எது, நினைவில்லாமல் இருக்கும் நேரம் எது என்பதுதான் புரியாமல் இருக்கிறது. மாயத்தோற்றங்கள் வரும் நேரத்திற்கும் வேறு எதுவுமே செய்யாமல் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திற்கும் இடையே, அம்மாவின் அழைப்புகளும் தொடுதல்களும் மற்ற நோயாளிகளும் வெறுமனே சார்ஜ் போட மட்டுமே நிகழும் உரையாடல்களைக் கொண்டு எப்படிப் பிரித்தறிய முடியும்?’ இதற்கு எப்படிப் பதிலளிப்பது? நினைவென்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டது. நினைவில் இருப்பதெல்லாம் நினைவுகள்தானா? உதாரணத்திற்கு நடந்ததுபோல் தோன்றும் ஓர் உணர்வு, மிகத் தெளிவாக நினைவிலிருக்கும் யதார்த்தம் போன்றதொரு கனவும் நினைவாகத்தானே தங்கிவிடுகிறது? இதில் காலக் குளறுபடி வேறு.
பத்தாம் வகுப்புப் படிக்கும்போது ஒருநாள் மோட்டுவளையைப் பார்த்தபடி, சிறுவயதில் செய்த அறியாப் பிழைகளை, பாலியல் சேட்டைகளை அசைபோட்டுக் கொண்டிருந்தபோது மனதில் அந்த வரி விழுந்தது, ‘அறியாமல் ஒரு தவறு செய்தேன், இன்னும் அழியவில்லை நெஞ்சைவிட்டு’. இங்கே தவறுகூட இல்லை. அவன் தவறே செய்திருக்கவில்லை. அவன்மீது தொடுக்கப்பட்ட பாலியல் அத்துமீறல். ஒருவேளை அவன் மேற்கு நாடுகளில் பிறந்திருந்தால், இந்தளவு சித்திரவதையை பிறழ்வை எதிர்கொண்டிருக்க மாட்டானோ? 52ஆம் பக்கத்தில் `எச்சில் விழுங்க, அந்த இருட்டில் என் வாயில் திணித்த குறியைச் சொல்லி முடித்த வேகம், இப்போதுவரை அதையே செய்யச் சொன்ன, இல்லை…இல்லை…இவ்வளவு சொல்லிவிடக்கூடாது` என்று வருகிறது. நாவலின் தொடக்கத்தில் ஆசிரியரே சொல்லியிருப்பதுபோல இது தொடர்ச்சியான காலவரிசைப்படி அல்லாத, நினைவில் தோன்றுவதை எழுதி வைத்த ஒரு சிதறல். சொல்லப்படாத இருளும் பிறழ்வும் ஒரு கையை எதிர்நோக்கி ஏக்கத்துடன் காத்திருந்தது. இப்போது இல்லை.
