மண்ணும் மனிதரும்- சிவராம காரந் – நாவல் வாசிப்பனுபவம்

ஒரு நூல் வாசித்த பிறகு கிடைக்க வேண்டிய முதல் விசயம் மனநிறைவு என்று நினைக்கிறேன். சிவராம் காராந்தின் மண்ணும் மனிதரும் நூல் இந்த மன நிறைவை அளித்தது. ஒரு கடலோர கிராமத்தில் வாழும் ஒரு பிராமண குடும்பத்தின் மூன்று தலைமுறையின் வாழ்வினை சொல்லும் நாவல். நாவலின் வழியாக  அக்கால கட்டத்தில் பெண்களின் வாழ்நிலை, அந்த கால கட்டத்தின் வாழ் சூழ்நிலை மாற்றம், விவசாயம், அதையொட்டிய வாழ்க்கை, கிராமத்தில் இருந்து நகரத்தில் சென்று வேலை தேடுபவர்கள், வாழ்பவர்கள் நிலை, மேலும் மனிதர்களின் குணங்கள் என பல விஷயங்கள் பேசப் படுகின்றது. மேலும் மழை, கடல், பருவ மாற்றங்கள் போன்ற இயற்கை விசயங்கள் மனிதனோடு எந்த அளவு பிணைந்து இருக்கிறது என்பதையும் காட்டுகிறது .
ராம ஐதாளர், அவர் மனைவிகள் பார்வதி ( முதல் மனைவி ), சத்யபாமை( இரண்டாவது மனைவி ), சகோதரி சரஸ்வதி, மகன் லட்சுமன நாராயணன், அவன் மனைவி நாகவேணி, இவர்கள் மகன் ராமன், இவர்கள் தான் நாவலின் மையப் பாத்திரங்கள். நாவலை வாசித்த பிறகு இவர்களை நாம் என்றும் மறக்க மாட்டோம். அந்த அளவு இவர்களின் பாத்திரங்கள் மனதில் தங்குகின்றன. இன்னொருவர் பச்சி இவர்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் பெண் , இவளது சுபாவமும் மனதை ஈர்க்கின்றது.
ஒரு பாத்திரம் நமக்கு எப்படி நெருக்கமாக அமைகிறது என்று யோசிக்கும் போது அந்த பாத்திரத்தின் குணாதிசயம் முக்கியமாக அமைகிறது என்று சொல்லலாம். எனக்கு இந்த நாவலில் பிடித்த பாத்திரம் பேரன் ராமன . நற்குணம் ஒரு காரணம் என்றாலும் அதை விட பிறரை அவமதிக்ககாத அவனது கேலிப் பேச்சுகள் மிகப் பிடித்திருந்தன. அது அவனில் சந்தோசமாக ஊரில் இருக்கும் போதுதான் வெளிப்படுகிறது . பச்சியுடன், அத்தை சுப்புவுடன், செம்படவ மீனவனிடம் அவன் பேசும் கேலிப் பேச்சுகள் ( நகைச்சுவை வெளிப்படும் பேச்சுகள் ) மிக பிடித்திருந்தன. நாவல் இவனது மகிழ்ச்சி அமைந்த வாழ்வுடன் முடிகிறது. இவனும் இவனது அன்னையான நாகவேணியும் மகிழ்ச்சியுடன் வாழும் சூழல் அமைவதில் நாவல் முடிவதுதான் நாவல் வாசித்த மன நிறைவினை நமக்கு அளிக்கிறது .
ஒவ்வொரு பாத்திரமாக பார்க்கலாம். முதலில் ராம ஐதாளரின் மனைவி பார்வதி. இவளது மற்றும் ஐதாளரின் சகோதரியான ( கணவன் இறந்ததால் சகோதரனின் வீட்டில் வாழ்பவள் ) சரஸ்வதியின் குடும்ப வேலைகள் பார்க்கும் பொழுது அந்த காலகட்டத்தில் அன்றாட வாழ்க்கையே கடினமான ஒன்று என்பதை உணர முடிகிறது. அடுப்பெரிக்க விறகுக்காக மழைகாலத்தில் ஆற்றில் வரும் விறகுக் கட்டைகளை பொறுக்க தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள். வீட்டு வேலைகள் தாண்டி விவசாயப் பணிகள் செய்கிறார்கள். விடியலில் எழுவது, மாடுகளை பராமரிப்பது, மழைக் காலங்களுக்கு முன்பே தேவையானவற்றை சேர்ப்பது, விவசாய பணிகளில் ஈடுபடுவது, ஆற்றில் இருந்து வண்டல் மண் எடுத்து வந்து விவசாய நிலத்தில் கொட்டுவது என துளியும் ஓய்வற்ற உழைப்பை அளிக்கிறார்கள். இன்றைய நகர வாழ்வில் இருக்கும் ஒரு பெண்ணிடம் ஒப்பிடும் போது மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசம் தெரிகிறது . L.p.g. காஸ் வந்தது பெண்களின் வாழ்வின் பெரிய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது .
இந்த நாவல் காட்டும் காலத்தில் மழையில் நனைந்த விறகை காயவைக்க முயன்று பின்பு இயலாமல் அதை வைத்து அடுப்பு எரிக்கும் சூழலை, கண் எரிச்சலை, புகையை பார்க்கும் போது இன்றைய காஸ் அடுப்பு மகத்தான மாற்றம் என்பதை உணர முடிகிறது. பார்வதியின் கண்கள் புகையால் வெண்மை நிறம் அடைந்ததே இல்லை என்று நாவலில் வரும். இந்த வாழ்வு தாண்டி பார்வதிக்கு நிலையான ஒரு துயரம் இருந்தது, அது அவளின் குழந்தை பெற முடியாமை. இதன் காரணமாக இவளுக்கு சக்களத்தி அமைகிறாள். கணவனுக்கு இரண்டாம் பட்சமாகிறாள், ஆனால் இந்த வருத்தத்தை அவள் வெளிப்படுத்துவதில்லை. தன்னிடம் ஒரு வார்த்தை கூட கூறாமல் இரண்டாம் திருமணத்தை ஏற்பாடு செய்யும் கணவனிடம் அவள் சிறு எதிர் கேள்வி கூட கேட்க வில்லை. இரண்டாம் திருமணத்தில் உற்சாகமாக கலந்து கொள்பவளாக புறத்தில் காட்டி கொள்கிறாள். இரண்டு காட்சிகளில் அவளது உணர்வுகளை நன்றாக உணர முடியும். ஒன்று கணவன் இரண்டாம் திருமணத்திற்காக மணக் கோலத்தில் இருப்பதை அவள் பார்ப்பது, இன்னொன்று அவள் மரணத் தருவாயில் கணவனின் மடியில் மரணிக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தும் இடம். பார்வதியின் திருமண சமயத்தில் மழை, மரங்களை பிய்த்து வீசும் காற்று அடித்துக் கொண்டு இருக்கும் . பார்வதி இந்த அமைதியற்ற கொந்தளிப்புதான் தன் வாழ்நிலை என்று எண்ணுவாள் .
ராம ஐதளார் இந்த நாவலின் முதன்மைப் பாத்திரம்.  தீயவர் என்று சொல்ல முடியாது . ஆனால் தனது முதல் மனைவியையோ, சகோதரியையோ அவர் பொருட்படுத்தியவர் அல்ல . மாறாக இரண்டாவது மனைவி மீது மட்டும் அக்கறை செலுத்தியவர். நன்றாக உழைப்பவர். புரோகிதம் செய்ய இவர் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும், மரணத்தை தொட்டுச் செல்லும் சூழல்தான்.  ஆனால் அது அன்றாட வாழ்வின் ஒரு செயல் அவருக்கு . மழைக் காலத்தில் சிரமப்பட்டு அவர் மறுகரை செல்லும் காட்சியை இந்த பக்கத்தில் இருந்து அவர் மனைவியும் சகோதரியும் பயந்து கொண்டு பார்க்கும் காட்சி நாவலில் உண்டு. நூறு அடி கூட நடக்க விரும்பாமல் பைக் எடுத்து செல்லும் என் மனநிலைக்கு அந்த சூழல் நேர் எதிராக இருக்கிறது. தொழில் நுட்பம் மக்களின் வாழ்கையை எந்த அளவு மேம்படுத்தி, சுவாரஸ்யமற்றதாக்கி வைத்திருக்கிறது என்பதை உணர முடிகிறது !
நாவல் திருமண நிகழ்வை, அதும் நான் அறியாத பிராமண திருமண நிகழ்வை விரிவாக காட்டுகிறது. மக்கள் கூறுவது, ஊர்வலம், பல்லக்கில் செல்வது, பெண் வீட்டிற்குச் செல்வது, கூட்டமாக படகுகள் மூலம் ஆற்றைக் கடந்து செல்வது, இரவில் தீப்பந்தங்கள் வைத்துச் செல்வது , உணவு வகைகள் போன்றவை காண ரம்மியமாக இருக்கின்றன. வீட்டின் முன்பு பந்தல் போட்டு திருமண நிகழ்வுகள் நடக்கின்றன. நகரத்தில் வசித்த. எனக்கு திருமண மண்டபங்களில் கோவில்களில் மட்டுமே இந்து திருமணங்களைப் பார்த்து இருக்கிறேன் !
ராம ஐதாளரின் நல்ல அம்சம் என்று பார்த்தால் சேமிக்கும் இயல்பை கூறலாம். நிலம் வாங்குகிறார் , மகன் ,மகள் திருமணங்களை நடத்துகிறார். கடன் வாங்குவது இல்லை . மாறாக இவரது மகன் லட்சுமி நாராயணன் ( லச்சா ) இவருக்கு நேர் எதிராக தீய இயல்பு கொண்டவராக இருக்கிறார், கடன் வாங்குகிறான், நிலங்களை விற்கிறான், ஊதாரித்தனம் செய்பவனாக இருக்கிறான் !
லச்சாவின் பாத்திரம் தீய குணம் கொண்டவனின் இயல்பை மிகச் சரியாக காட்டுகிறது . இந்த அளவு சரியாக காட்டும் எதிர் பாத்திரங்களை குறைவாகவே வாசித்து இருக்கிறேன். வெளியே தங்கிப் படிக்கும் போது தந்தையை ஏமாற்றி பணம் பறித்தல், தாத்தாவிடம் பணம் பறித்தல், அதை கொண்டு தாசிகளிடம் செல்வது போன்ற தீய செயல்களில் ஈடுபடுதல் ,  சீட்டாட்டம் , அடுத்தவன் மனைவியை அடைய முயற்சித்தல் , பிறகு தன் மனைவியை ஏமாற்றுதல், அவளிடம் இருந்த சொத்தை பறித்தல், மகனை கண்டு (அன்பு) கொள்ளாததல், கடைசியில் அவனிடமே தன் தீய இயல்பைக் காட்டுதல் என முற்றிலும் எதிர் நிலை கொண்ட பாத்திரம். இந்த பாத்திரம் சிறு வயதில் தொடங்கி முடியும் வரை நாம் வாசிக்கும் போது காண்பதால் இந்த பாத்திரத்தை நெருங்கி நம்மால் அறிய முடிகிறது. இவனுடன் சேர்ந்து இன்னொரு தீயவன் ஒரட்டன் எனும் இவனது நண்பன், அவனும் குடும்பத்தை விட்டு, சொத்தை அழித்து, தன் சகோதரன் நன்றாக இருப்பதை கூடக் விரும்பாதவன்தான். பேரன் ராமன் தன் அப்பா லச்சாவை காண வரும் காட்சி நாவலில் உண்டு. சிறுவயதில் பார்த்த பிறகு இப்போதுதான் பார்க்க வருவான்.  தந்தையை அடையாளம் தெரியாமல் எப்போது வருவார் என்று கேட்பான் . அங்கு லச்சா அவனைக் கண்டு கொள்ளாது, சீட்டு ஆட்டத்தில் மூழ்கி இருப்பான். பிறகு வெட்டிக் கர்வத்துடன் நேராக பேசாமல் இன்னொருவனிடம் அவனை விசாரிப்பது போல பேசுவான். இது போல சிலரை நேரடியாக அறிவேன் என்பதால் இந்த பாத்திரம் மிகத் தெளிவாக உண்மைக்கு நெருக்கமாக உருவாகி வந்திருப்பதை உணர முடிந்தது .
நாவலில் இருக்கும் இன்னொரு பாத்திரம் சரஸ்வதி, ராம ஐதாளரின் தங்கை. இளமையிலேயே கணவன் மறைந்ததால் சகோதரனின் வீட்டில் இருப்பவள். கடும் உழைப்பின் உதாரணம் என இவளைச் சொல்லலாம் . தனது நெஞ்சுக்கு தவறு என்று தோன்றுவதை தைரியமாக சொல்பவள். நாவலில் சொல்லப்படா விட்டாலும் எனக்கு அவளது துணையுடன் வாழ்வது, உறவு கொள்வது சார்ந்த இன்பம் இல்லாததன் வருத்தம் பற்றிய எண்ணம் இருந்தது. நாவலில் அது காட்டப்படவில்லை. அவனது அண்ணன் திருமணம் செய்கிறான், அவனது திருமணத்தில் இவள் முன்னின்று பணிகள் செய்கிறாள். ஆனால் இவளுக்கு மறுமணம் பற்றியோ, இவளது விருப்பம் பற்றியோ நாவலில் எதுவும் இல்லை. கடவுள் மீது பக்தி கொண்டவளாக, கணவன் இறப்பிற்கு பிறகு இரவு உணவை தவிர்ப்பவளாக இருக்கிறாள். ஒருவேளை அந்தக் கால சூழல் பெண் தன் கணவனை இழந்தவுடன் முற்றிலும் மறந்து விடும், தவிர்த்து விடும் விசயமாக இது இருந்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. இன்னொன்று உடல் உறவுகள் வரும் காட்சிகள் எதுவும் வாய்ப்பு இருந்தும் அந்த பகுதிகளை காரந்த் எழுத வில்லை. தாசி வீட்டிற்குச் செல்லும் காட்சியை கூட ஒருசில வார்த்தைகளில் சொல்லி கடந்து விடுகிறார் !
நாவலின் இன்னொரு சுவாரஸ்ய பாத்திரம் ராம ஐதாளரின் நண்பரான சீனமய்யன் . பல நிறங்கள் கொண்ட பாத்திரம் இது. நெருங்கிய நண்பனாக இருப்பான், பொறாமை கொள்வார். பணம் வந்ததும் நன்பனையே எதிரியாக எண்ணி அவரது நிலம் சுற்றி இருக்கும் நிலங்களை வாங்கி நண்பனை சிக்கலுக்குத் தள்ள முயற்சிப்பார். நண்பனின் மகனை நண்பனுக்கு எதிராக இருப்பதை வளர்ப்பார். ஆனால் நண்பன் இறக்கும் தருவாயில் நண்பனை பார்த்தவுடன் இந்த பிழை எல்லாவற்றையும் உணர்ந்து நண்பனிடம் சென்று மன்னிப்புக் கேட்பார் !
நாவலின் கிரீட பாத்திரம் என்றால் நாகவேணி என்று சொல்லாம். துன்பத்திலேயே எப்போதும் இருக்க வேண்டும் என்று வரம் வாங்கி வந்தவள் போல இருக்கும் இவள் பாத்திரம். லச்சாவை மணந்ததால் இவளது வாழ்வே துயரமானது. லச்சா திருமணத்திற்கு முன்பே தாசிகளிடம் சென்றவன் என்பதால் அவனிடம் இருந்து இவளுக்கு நோய் பகர்ந்து குழந்தை வளரும் பொழுதே இல்லாமல் ஆகி வலியால் இவள் துன்பப் பட்டு என இவளது இல்வாழ்க்கை தொடங்கும் முன்பே இவளது துன்ப வாழ்வும் தொடங்கி விடுகிறது. மிக நல்ல குணங்கள் கொண்டது இவளது பாத்திரம். கணவன் தனக்கு கிடைத்த சொத்தையும் அபகரித்து ஓடிப் போனவன் . புகுந்த வீட்டையே தன் வீடாக நினைத்து வாழ்பவள். இவளுக்கும் சரஸ்வதிக்கும் இடையே இருந்த அன்பு அழகானது. கிட்டத்தட்ட சரஸ்வதிக்கு மகள் போல இருக்கிறாள். நாகவேணி தன் மகனுடன் உணவுக்கு சிரமப்படும் வேளைகளில் வாசிக்கும் நமக்கும் கண் கலங்கி விடுகிறது . வாசிக்கும் நமக்கும் அவளது துன்பம் பற்றிக் கொள்கிறது . அவள் தன் மகன் வழியாக இந்த துன்ப வாழ்வில் இருந்து வெளியேறுகிறார் என்பதே இந்த நாவல் வாசித்த பிறகு மகிழ்வு மனநிலை வருவதற்கு முதன்மை காரணம் .
நாவலில் ஆண் பாத்திரங்களில் நேர்மறையான கதாபாத்திரமும், கதைநாயக பாத்திரமும் ராம ஐதாளரின் பேரனும், நாகவேணியின் மகனுமான ராமன்தான் . அம்மா நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக நன்றாக படிக்கிறான், தனியாக அன்றைய சென்னை சென்று படிக்க முயற்சிக்கிறான். நன்றாக படித்தும் வேலை இல்லாததால் ஹோட்டலில் பில் போடும் வேலைக்கு செல்கிறான், பின்பு பாம்பேவிலும் வேலைக்கு முயற்சிக்கிறான். பிறகு எதுவும் முடியாததால் ஊருக்கே திரும்ப வருகிறான் . இவனுக்கு ஒரு அதிர்ஷ்டமாக தாத்தா சுவரில் மறைத்து வைத்திருந்த நகை கிடைக்கிறது . அதை கொண்டு நிலம் மீட்டு விவசாயம் செய்து சந்தோச வாழ்விற்கு செல்கிறான். இவன் பாத்திரம் சுவாரஸ்யம் ஆக காரணம் இவனுக்கு இருக்கும் கலைக் குணம் . இயற்கை மீது முக்கியமாக கடல் மீது கொள்ளைப் பிரியம் கொண்டவனாக இருக்கிறான் . ஓவியத்தின் மீது பற்றுக் கொண்டவனாக, பம்பாயில் ஓவியப் பயிற்சிக்கு செல்பவனாக இருக்கிறான். அவனது ஓவிய ஆசிரியர் ஒரு யூதப் பெண் , அதுவும் இந்த நாவலில் உள்ளே இருக்கும் அழகான துயரம் கொண்ட குட்டிக் கதை.  அவன் தன்னை சேர்த்து கொள்ள உரையாடும் இடம் , இவன் பயிற்சி பெறும் சூழல் , இவன் அவளுக்கு வயலின் வாசித்துக் காட்டி ஓவியப் பயிற்சி வாய்ப்பு பெறுவது ,  கடைசியில் பிரியும் இடம் , இவள் அவனுக்கு தன் பூர்வ நிலத்தின் மலையின் ஓவியத்தை விடைபெறும் பரிசாக அளிப்பது, அவன் தன் ஊர் கடற்கரையை வரைந்து அவளுக்குத் தர முயற்சிப்பது போன்ற இடங்கள் அழகானவை .
இன்னொன்று நாகவேணியும், மகன் ராமனும் தங்கள் வீட்டு அருகில் இருக்கும் கடற்கரைக்குச் சென்று அமர்ந்து இரவுகளில் மாலைகளில் பேசுவது. அம்மாவிடம்  கற்ற வயலினை அப்போது ராமன் வாசிப்பது, நாகவேணி வாசிப்பது , இருவரும் பேசிக் கொள்ளும் உரையாடல்கள் எல்லாம் மனதை ஈர்க்கின்றன. நாவலில் மிகப் பிடித்த இடங்கள் அவை .
நாவலில் வரும் சிறு பாத்திரம் பச்சி.  இவர்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் காளனின் மனைவி . இவளது வெள்ளந்தி இயல்பு , இவளும் ராமன் இவனிடம் பேசும் புன்னகைக்க வைக்கும் கேலி பேச்சுகளும் அழகாக இருக்கின்றன .
நாவலில் இயற்கை, பருவ கால மாற்றம் அதற்கு ஏற்ப இயங்கும் மனித வாழ்க்கை எல்லாம் அழகாக காண முடிகின்றன .
இன்னொரு சுவாரஸ்யம், ராமன் சென்னையில் படிக்கும் சமயத்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கும் காட்சிகள். அவனது மனநிலை எல்லாம், அக் காலகட்டச் சூழலை நன்றாக பதிவு செய்கின்றன .
……
மனித மனதின் விசித்திரத்தை காட்டும் காட்சிகளும் உண்டு . உப்புக் காய்ச்ச முயன்ற ஒருவனை விசாரித்து மிரட்டி / அடித்து இருப்பார்கள். ராமன் கோபம் கொண்டு அவனுக்கு ஆறுதல் சொல்ல அவனிடம் போய் ஆற்றுப்படுத்துவான், அடுத்த நாள் பார்த்தால் போலீஸ் உப்பு காய்சியவனுடன் ராமன் வீட்டுக்கு வரும், இவர்தான் என்னிடம் உப்பு வாங்கினார் என்று ராமனை அவன் சிக்க வைப்பான்!
ராமன் சுதந்திர தாகத்தினைப் பெற நண்பன் ஒருவன் வைத்திருந்த ரகசிய புத்தகம் ஒரு காரணம். அவன் வழியாக இவன் சுதந்திர வேட்கை அடைவான் . ஆனால் பிரச்சனை வரும் பொழுது நண்பன் ஒதுங்கிப் படிப்பு என்று சென்று விடுவான் , இவன் போய் படிப்பு கெட்டு சிறையில் அடைபடுவான் .
ராமன் பாம்பேவில் வசிக்கும் நண்பர்கள் அறையும் நண்பர்களும் இருக்கும் சூழலும் நன்றாக இருக்கும் . ராமன் வயலின் வாசிப்பதை அந்த ஞானத்தை பார்த்து சினிமா பாட்டு எப்போதும் பாடி கொண்டிருக்கும் ஒருவன் பாடுவதை , அவன் முன் பாடுவதை நிறுத்தி விடுவான். இந்த நண்பர்கள் எல்லோரும் முதலாளித்துவத்திற்கு எதிராக இரவு முழுதும் பேசுவார்கள், காலையில் பெரிய நிறுவனங்களில் வேலை தேடி அலைவார்கள் . அந்த அறையில் ராமனை தவிர மற்ற எல்லோருக்கும் சினிமாவில் இயங்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள் !
சுதந்திர போராட்டத்தில் ஆர்வத்தில் இருக்கும் ராமனிடம் வாழவே சிரமப்படும் சூழலில் இந்த போராட்டங்களுக்கு செல்வது எதற்கு என்ற கேள்வி வந்து விழும். அதெல்லாம் வயிற்றுக்குப் பிரச்னை இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்று வரும். இன்றைய காலகட்டத்தில் பொது அரசியலில் ஈடுபடுவது ( நேர்மையாக ) , கலை இலக்கியங்களில் ஈடுபட முதன்மைத் தகுதி அல்லது இதை அடைந்த பிறகே மேற்சொன்ன விசயத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஒன்று. அன்றாட வாழ்க்கை நடத்தக் கூடிய பிரச்னை இல்லாமை என்று தோன்றுகிறது .
……
 கதை நிகழும் இடம் நம் மனதில் அழுத்தமாக பதிந்து விடுகிறது . இந்த குடும்பத்தின் வீடு இருக்கும் இடம் !, ஆறு கடலில் கலக்கும் இடத்திற்கு, கடலுக்கு அருகாமையில் இருக்கிறது. கடலும் அதன் அலைகளும், ஆறும், அந்த பகுதியில் வரும் மழையும், வீட்டின் பின்பகுதியில் இருக்கும் சிறுகுன்றும் தொடர்ந்து நாவலில் வருகின்றன. அந்த பகுதி வாசிக்கும் நமக்கு நேரில் பார்த்து மிக பரிச்சியமான ஒரு இடம் போல நம்முள் மனதில் தங்கி விடுகிறது . நாவலுள் நாம் ஒன்றி போக அந்த நிலம் சார்ந்த பதிவுகள் முக்கிய காரணம் என்று தோன்றுகிறது . நாகவேணியின் வீடு அது , அவள் நகரத்தில் வளர்ந்தவள் , ஆனால் அவளுக்கு மிக பிடித்து தன் வாழ்நாளை கழிக்க விரும்பிய இடம் இந்த வீடும் இந்த சுற்றுச் சூழ்நிலையும்தான் . நகரத்தின் தாக்கம் நுழையாத கடற்கரை கிராமம் அது . ராம ஐதாளர் நகரம் அறியாத கிராமத்தில் நன்றாக வாழ்ந்த மனிதராக இருப்பார் . அவர் மகன் லச்சா நகரத்தில் படிக்கச் சென்று ஊதாரி ஆகி வீணாவான், அவன் மகன் ராமன் நகரத்தில் சென்று படித்தாலும் தனது நல்இயல்பை இழக்காதவன், ஆனால் பணி நகரத்தில் அமையாததால் முடிவில் கிராமத்திற்கு திரும்பி விடுவான் .அவனுக்கு கிராமத்தில் சந்தோசமாக வாழ்வு அமையும் நிலையில் நாவல் முடியும் !
நாவல் ஆங்கில கல்வி இந்தியச் சூழலில் நுழையும் காலத்தையும் காட்டுகிறது . ஆங்கிலம் படித்தால் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், வாழ்க்கை அமையும் என்ற எண்ணம் உருவாகிறது . அதன் காரணமாக ராம ஐதாளர் பழைய வழக்கத்தில் இருந்த ஊரில் இருக்கும் ஆசிரியரிடம் பையனைச் சேர்க்காமல் அந்த காலத்தில் புதிதாக உருவாகி வந்த கவர்மென்ட் பள்ளியில் சேர்கிறார்.  இதில் இருந்த சுவாரஸ்யம் , சாதி சார்ந்த பார்வைகள் , பையனை கவர்மென்ட் ஸ்கூலில் சேர்க்க ஊரில் இருந்த பழைய கற்று கொடுக்கும் ஆசிரியரும் , ராம ஐதாளரின் தங்கையும் எதிர்க்கின்றனர் , காரணம் மற்ற சாதிப் பையன்களுடன் சேர்ந்து அமர்ந்து இருக்க வேண்டும் என்பது . சாதி எதிர்ப்பாளர்கள் வழக்கமாக பேசும் சாதி வெறுப்பு இவர்களிடம் இல்லை , ஆனால் சாதி சார்ந்த தூய்மை பார்க்கும் இயல்பு இருக்கிறது . அதுவும் இப்போதைய நாம் பார்க்கும் சாதிய கண்ணோட்டம் கூட அல்ல , உதாரணமாக அவர்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் அவர்கள் நிலத்தில் பணியாற்ற வரும் சூரன் குடும்பம் அவர்களுக்கு நெருக்கமானது , நாகவேணியும் சூரனின் மருமகளான பச்சியும் அவ்வளவு சினேகமாக இருக்கின்றனர் . பேரன் ராமன் மீனவர்களிடம் அவ்வளவு சிநேகமாக பேசுகிறான் . ராம ஐதாளரிடம் , சரஸ்வதியிடம் கூட சாதி சார்ந்த சில சமயம் வெளிபடுவதே தவிர அது வெறுப்பு இயல்பாக வெளிபடுவது இல்லை .
…..
இந்த வீட்டின் குடும்ப மாந்தர்கள் பற்றி யோசிக்கும் போது இவர்கள் வளர்க்கும் பசுவும் ஞாபத்திற்கு வருகிறது . பசுக்கள் குடும்ப பெண்களின் ஒரு அங்கமாக அன்றாட வாழ்வின், சினேகமாக, செயலாக ( பராமரிப்பு )  இருக்கின்றன . பார்வதிக்கு குழந்தைகள் அமையாததால் தான் வளர்க்கும் பசுவின் கன்றுகளை குழந்தையாக பாவிக்கிறாள். கிராமங்களில் பசுக்கள் எந்த அளவு ஒன்றிக் கலந்தவை என்பதை நாவல் வாசிக்கும் போது உணர முடிகிறது .
சமீபத்தில் என் தொழில் சார்ந்து ஒரு மாட்டுப் பண்ணை ஷெட் அமைக்கும் பணி செய்திருந்தேன். அந்த சமயத்தில்தான் மாடு வளர்ப்பு பற்றிய பரிச்சயம் ஏற்பட்டது . பிறக்கும் கன்று ஆணாக இருந்தால் உடனே இறைச்சிக்கு அனுப்பி விடுகின்றனர் . சில நாள் கூட விட்டு வைப்பது இல்லை . பிறந்த ஒன்றிரண்டு நாளில் இருக்கும் புஷ்டி சில நாட்களில் வற்றி விடும், அப்பறம் விலை குறைந்து விடும், எனவே உடனே அனுப்பி விடுவோம் என்றார் . வளர்த்து விற்பனைக்கு அனுப்பலாம் , ஆனால் செலவு அதிகம் பிடிக்கும் வேலை என்றார் , இந்த கன்றுகள் பீப் சில்லிக்கு போகின்றன என்றார் . இந்த நாவலிலும் ஆண் கன்று பிறந்தால் அது சில ஆண்டுகளில் பிறருக்கு கொடுக்கப் பட்டு விடுகிறது . பெண்ணாக இருந்தால் மட்டுமே மதிப்பு. பார்வதி வளர்க்கும் பசு ஆறு கன்றுகளை ஈனும் , அனைத்தும் ஆண் கன்றுகள் , அனைத்தும் கொடுக்கப் பட்டு விடும் . பார்வதி தான் இறந்த பிறகு சடங்கு செய்யக் கூட தனக்கு ஒரு ஆண் பிள்ளை அமைய வில்லையே என்று நினைப்பாள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *