காட்டுதலெனும் மன நிறைவு
ஓய்வு நாளின்
இறுதிவரை
சாத்தியப் பட்டதை எல்லாம்
சந்தோசமென
விழுங்கியபொழுது
மதிப்புகள் கூடிய அட்டைகள்
கரைந்து கொண்டு இருந்தது.
பிரச்சனைகள்
நீர்ப் பாம்பாக
தலை தூக்கியபொழுது
பலூனாக பறந்த
மனம்
விடுபட்ட காற்றாக
சோர்வில்
வீட்டை நோக்கியது.
ஒவ்வொரு வருடமும்
ஒரு பயணத்திட்டமிருந்தால்
மன முடிச்சுகள்
அவிழ ஏதுவாகத்தான் இருக்கும்
பதட்ட உலகில்
படும் பாடுகளுக்கு.
வாழ்வின் எதார்த்தத்தில்
ஏக நம்பிக்கை இருந்தாலும்
இன்னொரு வாய்ப்பு
இனிவரும் காலங்களில்
மனதை வெளுப்பாக்கும்
மகிழ்வுப் பயணம்
இருக்கத்தான் போகிறது
கடனட்டை உபாயத்தில்
இந்த
இன்ஸ்டா, ஸ்டேட்டஸ், ரீல்ஸ்கள்
இருக்கும் வரை
***
வெகுமதி வாசம்
பார்த்தப் படத்தின்
முக்கிய முகங்கள்
நினைவைப் பிடித்து
முகத்தை ஆக்கிரமித்தது
திரைக்குள்
என்னைத் தொலைத்ததால்.
புனைவின் பிம்பத்தில்
மிதந்ததை
அழைத்துவிட்டது
பலாச் சுளைகளின்
வசீகர மணம்
மதிய உணவின் சேர்மானப் பண்டமாக
உமிழ் நீர் ஊறி.
பிளந்த பழத்தின்
நரம்பு பிரித்து
சேதாரமாக்காத
கத்தி
அனுபவத்திற்கு
சாட்சியாக
அடுக்கப்பட்டது
பலாச் சுளைகள்
இராணுவ மிடுக்கில்
சுவை உறுதிக்கு
கொடுத்த ஒன்றை இழந்து.
நகரப் பிரபலங்கள்
நால்வர்
பள்ளித் தோழர்களென
அவர் விட்டப் பெரு மூச்சில்
வீசிய காற்றுக்கும்
வியர்த்தது
குளுமை கொண்டு வந்தாலும்.
எனக்கும் அவர்களைத் தெரியுமென இன்னலுரும்
அவர்களது
பக்கங்களைச் சொன்னதும்
எதேச்சையில் நிமிர்ந்து
பதிவெடுத்துக்கொண்டது
எனது முகத்தை
அவரது இயலாமை.
தள்ளாடும் வண்டியைப் பார்த்தவாறேச் சொன்ன
அவரிடமிருந்த தனிப்பெரும்
அசாத்தியத்தைக் கேட்டு
சற்றே நிமிர்ந்தார்
வானம் முட்ட.
எழுதப்பட்ட உணவை எடுத்துக்கொண்டபொழுது
சுவைத்த சுலைக்கும்
பணம் கொடுத்த உறுதியில்
அவரது
வாழ்வின் பார்வைக் கோணம்
விரும்பி மாறியது
விழித்த வெளிச்சத்தில்.
***
கொதிகலனின் லாவக மிடறுகள்
என் தூரத்தின் முடிவுக்கான
கனவு கையில் இருக்கிறது
வெளிச்சத் துகளாய்.
அதை இடது வலது என்று கைமாற்றும் பொழுதான வலி அறியாமல் பேதமை கொள்கிறது புறங்கள்.
விழுந்து உருண்டோடும் கலைப்பில் பற்றி எடுப்பதில்
பாரம் மிகைக்கிறது
நேர் கோடாகாமல்
குனிந்து.
உறவின் பிடிமானங்களில்
கரையும் கனவினை
கடமையெனப் பொறுக்க வேண்டியதாகிறது
மின்மினியாக மிளிர்வதால்.
நிறைந்து கிடக்கும்
ஸ்தாபனங்களில்
விசையேற்ற
அழைப்பு மணிகளில்
ஓசை எழுப்பினாலும்
பிறப்புச் சரடின்
பிற்போக்கில் மறத்துப் போனது
செவிகள்.
சினத்தின்
செம்பிழம்புகளால்
சூடான தேநீரை
உறுஞ்சியபொழுது
கனவுகள் கரைந்து
ஆவியாக மேலெழும்பிச் செல்கிறது
யாதொரு பிடிமானமற்ற லயத்தில்
வானத்தை நோக்கிய ருசிக்காய்
யாதுமாகி.
***
அனல் கூடிய வெக்கைப் புறங்கள்.
கோடையில் சொட்டிய வெறுப்பு
கரிப்பு வாடையில் இருந்தது
சதசதத்து.
ஆவியான மேகங்கள்
ஒளிந்த இடம் தெரியாமல்
அலைகள் தவிக்கின்றன
மையத்தில் கரைந்து.
அனல் காற்றில் மறைந்த குளிர்மைக்கு அஞ்சி இலைகளை மரங்கள் உதிர்க்கின்றன
மழை நாளை நம்பி.
வளை கோட்டில்
நகரும்
தீப்பந்து
கக்கும் வெறுப்பிற்கு
குளிர் பானங்கள்
வேலைகளை நினைவூட்டி தோள் தட்டித் துரத்துகிறது
ஜில்லிட்ட வார்த்தைகளை சேப்பியில் வைத்து.
கைபேசிக் குரல்கள்
காலநிலை பயணத்தில்
ஒலியிடாமல்
ஓட்டைகளிட
ஓசோனைக் கரண்டுகிறது
வெக்கைகள் உதிர்த்து.
இடம் மாறியப் பணத் தாள்களின்
மொட மொடப்பு
ஒட்டிக் கிடக்கிறது
வியர்வைத் துளிகளில்
சற்றே இளைப்பாறி.
***
நிச்சலனப் பெருக்கம்
மரணத்தைத் துடைத்து
பளபளப்பாக்கித் தொடர்கிறது
பயணங்கள் தினம்.
சீர் கேட்டின்
கவனப் பிசகின்
துல்லியச் சறுக்கலை
அவதானத்தானங்களற்று
கிடக்கிறது
காற்புள்ளிக் கணங்கள்.
தன்னுணர்வற்றப்
பயணத்தின் நொடிகளில்
மிகைக்கும்
ஆட்டத்தில் சூழ்கிறது
பயம்.
நிதானப் போக்கின்
ஒன்றில் சுழல்கிறது
பூமி
சந்தை மனதை
சற்றே
நிர்மூலமாக்கிய நிதர்சனத்தில்
பருக அழைத்து.
***
-ரவி அல்லது.
