மேலக்குடியின் காலைப் பொழுது எப்போதும் போலத்தான் விடிந்தது. பரந்தாமன் வழக்கம்போல எழுந்து, காலைப் பணிகளை ஒவ்வொன்றாக வேகமாக முடித்தான். அடுத்து காலை ஏழரை மணி அளவில் அவனது வீட்டுத் திண்ணை ஓரமாக நிறுத்தி இருந்த அவனது இருசக்கரவாகனத்தை சற்று எட்டிப் பார்த்தான். அதன் பின் சக்கரத்தில் காற்றின் தேக்கம் மிகவும் வலுவிழந்து, பல நாள் பட்டினி கிடந்தவனைப் போல மிகவும் பரிதாபமாக இருந்தது. வாகனத்தில் இருந்த எரிதிரவமும் திராணியற்று மரணித்திருந்தது. அவன் உடனே “இன்று அலுவலகத்திற்கு மிதிவண்டியில் தான் பயணம். வேறு வழி இல்லை” என்று முடிவு செய்து கொண்டான்.
அவன் வேலை பார்க்கும் நிதி நிறுவனம் அவனது வீட்டில் இருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் தான் இருக்கின்றது. அதனால் அவன் மிதிவண்டியில் அலுவலகத்திற்குச் செல்வதை அவன் பெரும்சிரமமாக நினைக்கவில்லை.
காலை எட்டு மணிக்கு அவன் தனது மிதிவண்டியில், தான் வேலை பார்க்கும் தனியார் நிதி நிறுவன அலுவலகத்தை நோக்கிப் புறப்பட்டான். மிதிவண்டியின் சக்கரம் சுழலச் சுழல, சாலையோரத்து மரங்கள் பின்னோக்கி ஓடிக்கொண் டிருந்தன.
பரந்தாமன் நாற்சந்தியை நெருங்கியபோது, வழக்கத்திற்கு மாறான ஒரு நிசப்தம் அங்கே நிதானமாக நின்று கொண்டிருந்தது, அருகே இருந்த சிறிய தெருவோரத்தில் ஒரு பெரிய கூட்டம் கூடி இருந்தது. ஆர்வத்தோடு அருகே சென்று பார்த்தபோது, அவனது இரத்தமே ஒரு நிமிடம் உறைந்து போனது.
சாலையோரத்து புல் பூண்டுகளின் நடுவே மூன்று உடல்கள் கிடக்கின்றன. இரண்டு ஆண்கள், ஓர் இளம் பெண். அந்தப் பெண்ணின் கோலம் அவன் நெஞ்சைக் கிழித்து, அவனை நிலைகுலைய வைத்தது. சிதைந்த ஆடைகள், உடலில் நகக்கீறல்கள், வன்புணர்வின் வடுக்கள் என அவளது உடல் ஓர் அலங்கோலமான ஓவியமாக அவனுக்குத் தெரிந்தது. அந்த இரண்டு ஆண்களின் உடல்களிலும் இரத்தக் கறைகளும், அடியுண்ட காயங்களும் உறைந்து போயிருந்தன.
சுற்றிலும் நின்றவர்களில் சிலர் மௌனமாக வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் அரசல் புரசலாக தங்களின் ஐயங்களை வெளிப்படுத்திக் கொண்டும் பலவிதமாக பேசிக்கொண்டும் இருந்தார்கள். அவர்கள் பேசியதில் “காவல்துறைக்குத் தகவல் சொல்லியாச்சு” என்ற ஒரு குரல் மட்டும் அவனுக்கு தெளிவாய்க் கேட்டது. அங்கே இருப்பவர்களுக்கு அந்த மூன்று நபர்களைப் பற்றி எந்த விதமான தகவலும் தெரியவில்லை.
அப்போது நேரம் வேகமாய் நகர்ந்து கொண்டிருந்தது. பரந்தாமன் ஒன்பது மணிக்குள் நிதி நிறுவனத்திற்குச் செல்ல வேண்டும். இல்லையென்றால் நிதி நிறுவனத்தின் நிர்வாகி கோபித்துக் கொள்வார். கண்ணா பின்னாவென்று திட்டித் தீர்த்து விடுவார். அவரது திட்டல்கள் மதியம் வரை நீடித்துக் கொண்டிருக்கும். அவை காதுகளை புண்படுத்திவிடும் அளவிற்கு மிக மோசமானதாக இருக்கும். ஆகவே அவன் அங்கே அதிக நேரம் நிற்காமல் உடனே வேலைக்குப் புறப்பட முயன்றான். ஆனால் அவனது மனம் அங்கிருந்து நகர மறுப்பு தெரிவித்துக் கொண்டிருந்தது. ஒரு வழியாக அந்தப் பரிதாபக் காட்சியை அங்கேயே விட்டுவிட்டு, அவன் கனத்த இதயத்தோடு மிதிவண்டியை மிதித்தான்.
“உலகில் நாள்தோறும் எத்தனையோ விபத்துகள், எத்தனையோ மரணங்கள்… இதில் நான் என்ன செய்துவிட முடியும்?” என்ற தர்க்கவாதம் ஒருபுறம் இருந்தாலும், அந்தப் பெண்ணின் முகமும் கண்களும் அவன் மனத்திரையில் நீங்காமல் ஓடிக்கொண்டிருந்தன.
அவன் அலுவலகத்திற்குள் நுழையும்போது மணி ஒன்பது ஐந்து. நிர்வாகி எதுவும் சொல்லவில்லை என்றாலும், அவரது பார்வையில் ஒருவித விகாரமான எரிச்சல் தென்பட்டது. கணினியின் முன் அமர்ந்தானே தவிர, அவனது விரல்கள் வேலை செய்ய மறுத்தன. அந்த மூன்று முகங்களும் ஜன்னல் வழியாக அவனைப் பார்ப்பது போலவே இருந்தது. குறிப்பாக அந்தப் பெண்ணின் சிதைந்த கோலம், ஒரு தீராத குற்றவுணர்வை அவனுக்குள் விதைத்துக் கொண்டே இருந்தது.
மனம் ஒரு சண்டித்தனம் செய்யும் குழந்தையைப் போல வினாக்களை திரும்பத் திரும்ப அவனிடம் கேட்டுக் கொண்டிருந்தது. யார் அவர்கள்? பசியால் இடம்பெயர்ந்தவர்களா? அல்லது திசைமாறி வந்த பறவைகளா? அந்த இரண்டு ஆண்களும் அந்தப் பெண்ணைப் பாதுகாக்கப் போராடி இருப்பார்களோ? அல்லது மதுவும் காமமும் கண்ணை மறைத்த யாரோ ஒரு கூட்டத்தின் வெறிச்செயலுக்கு இவர்கள் பலியாகி இருப்பார்களா? விடையில்லாத கேள்விகள் அவன் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தன.
மதியம்வரை பலவாறான கேள்விகள் அவனுள் எழுந்தபடி இருந்தது. அவற்றிற்கான விடையைத் தேடித் தேடி அவனது மனம் களைத்துப் போனது.
பிற்பகல் மூன்று மணி அளவில் பரந்தாமன் தேநீர் அருந்துவதற்காக அருகில் உள்ள தேநீர் கடைக்குச் சென்றான். அப்போது அந்தத் தேநீர் கடையில் ஒரு பெரியவர் நேற்று நடந்த அந்த துயரச் சம்பவத்தை நேரில் பார்த்த அனுபவத்தை, அங்கே இருந்த இரண்டு நபர்களுக்கு கண்ணீர் மல்க எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். இவனும் அவருக்கு அருகில் சென்று அமர்ந்து அவரது கூற்றை மிக உன்னிப்பாகக் கவனித்தபடி கேட்டான்.
சாலை ஓரத்தில் இருந்து சற்று தள்ளி அந்த கிராமத்திற்கு அருகில் இருந்த, அந்தப் பெரியவரின் ஒரு ஏக்கர் பரப்பு கொண்ட அவரது தென்னந்தோப்பில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. எங்கிருந்தோ வந்த அந்த மூவருக்கும். “அமைதிப் பூங்கா” என்று போற்றப்படும் இந்தத்தமிழ் மண்ணில், கிடைத்தது வன்மம் மட்டுமே என்பதை இந்த பெரியவரின் கூற்று தேனீர் கடையிலிருந்த அனைவருக்கும் தெளிவு படுத்தியது.
அந்த துயரச் சம்பவத்தைக் கேட்ட போது அவன் கைகள் நடுங்கியது. அதன் பின்னணி, அவன் நெஞ்சைப் பதற வைத்தது. முந்தைய நாள் மாலைப் பொழுதில்தான் அந்த விபரீதம் அரங்கேறியிருக்கிறது. அவன் தேநீர் கடையிலேயே நான்கு மணி வரை பெரியவரின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தான்.
மாலை நான்கு மணிக்கு அவன் அலுவலகத்திற்கு வந்தபோது அங்கே மாலை நேர செய்தித்தாள் அவன் அலுவலகத்தில் மயங்கிக் கிடந்தது. அருகில் சென்று. பார்த்தான். படித்தான். சம்பந்தப்பட்ட செய்தியும் அதில் சிறப்பாக வந்திருந்தது. அதையும் ஆர்வமுடன் படித்தான். பெரியவரின் கூற்று மற்றும் பத்திரிகை செய்தி இரண்டையும் ஒருங்கிணைத்து பார்த்தான். ஏன்? எதனால்? எப்படி? அவனது அனைத்து கேள்விகளுக்கும் விடை உடன் கிடைத்தது.
பிழைப்புத் தேடி ஆயிரம் மயில்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்தவர்கள் அவர்கள். வட மாநிலத்தின் ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து, வயிற்றுப் பசிக்காக இந்த மண்ணை நம்பி வந்திருந்தனர். ஒரு கையில் சிறிய துணி மூட்டையும், மறு கையில் அரைகுறைத் தமிழில் யாரிடமாவது வேலை கிடைக்குமா என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருந்தது. ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்துத் தெருக்களில் அவர்கள் திக்கற்று அலைந்து கொண்டிருந்தனர்.
நேற்று மாலை அந்த ஊரைச் சேர்ந்த நான்கு நடுத்தர வயதினர் அவர்களின் பாதையை மறித்தனர். மதுவின் போதையில் இருந்த அந்த நால்வருக்கும், இந்த அந்நியர்களின் வருகை ஏனோ எரிச்சலைத் தந்திருக்கிறது.
“ஏலேய்… வடக்கிருந்து வந்த பரதேசிகளா! இங்க எதுக்குடா வர்றீங்க? நீங்க வர்றதுனால தான் எங்க ஊர்க்காரங்களுக்கு வேலையில்லாமப் போகுது. குறைந்த சம்பளத்துக்கு வேலை செஞ்சு எங்க வயித்துல அடிக்கவா வந்தீங்க?” என்று பேசியபடி அவர்களை வம்புக்கு இழுத்திருக்கிறார்கள். அப்போது இந்த பெரியவர்தான் அவர்களை தடுத்திருக்கிறார்.
“ ஏன்டா தம்பிகளா! நீங்க எல்லாம் ஒழுங்கா வேலையப் பாத்துட்டு இருந்தா, ஏன் இந்தப் பயலுக அங்கிருந்து வர்றாங்க! இதுக்கு முன்னாடி எல்லாம் இப்படி வந்துகிட்டு இருந்தாங்களா இல்லையே! இப்ப நீங்க எல்லாம் சரியா வேலை பாக்குறது இல்ல! அப்படியே வேலை பார்த்தாலும் உங்களுக்கு சாயந்தரத்துக்கு மருந்து வாங்குவதற்கும் சேர்த்து கூலி கொடுக்கணும். இங்க விவசாயிங்க எல்லாம் என்ன கொள்ளை அடிச்சா வச்சிருக்காங்க? நீங்க ஒழுங்கா பொறுப்ப உணர்ந்து வயலுக்கு போய் பாடுபட்டு இருந்தா நீங்க ஏன் இப்படி நிதானம் இல்லாமல் இருக்கப் போறீங்க? நீங்களும் வேலை செய்யமாட்டீங்க! வேலை செய்ய வர்றவனையும் கெடுத்துக் குட்டிச்சுவர் பண்ணுவீங்க! அவங்க என்ன பாகிஸ்தான்ல இருந்தா வந்துருக்காங்க? அவங்களும் நம்ம நாட்டுக்காரங்க தானடா? எப்படியாவது போங்கடா? கேடுகெட்டப் பசங்களா” இப்படி அந்தப் பெரியவர் சொன்னதை அவர்கள் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. மாறாக அந்த நால்வரில் ஒருவன் இந்தப் பெரியவரை வேகமாக தள்ளிவிட, பெரியவர் அப்படியே கீழே சாய்ந்தார்.
பயந்துபோன அந்த வடநாட்டு இளைஞர்கள், தங்களுக்குத் தெரிந்த உடைந்த தமிழில், “ஐயா… எங்களை ஒருத்தர் இங்க வேலை இருக்குன்னு வரச் சொன்னார். அவர் பேர் தெரியல, ஆனா இந்த ஊர்தான்னு சொன்னாங்க…” என்று கெஞ்சினார்கள். ஆனால் அந்தப் போதை ஆசாமிகள் கேட்பதாக இல்லை.
வாக்குவாதம் முற்றியது. சட்டென்று ஒருவன் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுக்க, நிலைமை விபரீதமானது. அவளுடன் வந்த ஆண்கள் பதறிப்போய் தடுக்க முயன்றனர். “பெண்ணைத் தொடாதே!” என்று அவர்கள் கதறியது அந்த நால்வரின் காதுகளில் விழவில்லை. ஆத்திரம் கண்ணை மறைக்க, அந்த நான்கு பேரும் சேர்ந்து வட மாநில இளைஞர்களை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.
அடியைத் தாங்க முடியாமல் அவர்கள் சுருண்டு விழ, தற்காப்பற்ற அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக அருகில் இருந்த பெரியவரின் தென்னந்தோப்பிற்குள் இழுத்துச் சென்றனர். பெரியவரும் உடல் வலியை பொருட்படுத்தாமல் சிரமப்பட்டு எழுந்து மெல்ல மெல்ல நடந்து அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்.
அங்கே மதுவின் வெறியும், காமத்தின் விகாரமும் ஒன்று சேர்ந்து மாநாடு நடத்திக் கொண்டிருந்தது. அந்த நால்வரும், அந்தப் பெண்ணை மனிதநேயமற்ற முறையில் சித்திரவதை செய்து, கூட்டு வன்புணர்வு செய்திருக்கிறார்கள்.
குடிகாரர்களின் கொடூரச் செயலை பார்க்கப் பார்க்க, பயம் பெரியவரைப் பதறச் செய்து விட்டது. அவருக்கு மயக்கம் வருவது போல் இருந்தது உடனே அருகில் இருந்த மண் மேட்டில் அப்படியே சாய்ந்து விட்டார். அவரால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அங்கே நடந்ததை அவரால் அரைகுறையாக பார்க்க மட்டுமே முடிந்தது.
மதுவின் வெறியில் அந்தப் பெண்ணின் உயிர் பிரியும்வரை அவர்கள் ஓயவில்லை. கடைசியில் அந்தப் பெண்ணின் உயிர் அடங்கிப்போன பின்னர் தான் அவர்களின் ஆட்டம் முடங்கிப்போனது.
அந்தப் பெண் தன் உயிரைக் காக்கப் போராடிய போராட்டத்தின் அடையாளங்கள்தான் அவள் உடலில் இருந்த அந்த நகக்கீரல்களும் காயங்களும். விஷயம் முற்றிவிட்டதை உணர்ந்த அவர்கள், வெளியே அடிபட்டுத் தவித்துக் கொண்டிருந்த அந்த இரண்டு ஆண்களையும் அடித்துக் கொன்று, தடயங்களை மறைக்க மூவரின் உடல்களையும் தூக்கி வந்து விடியற்காலையில் அந்த நாற்சந்தித் தெருமுனையில் வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
சட்டத்தின் கண்கள் உறங்கவில்லை. அந்தப் பகுதியில் கிடைத்த தடயங்களையும் தகவல்களையும் வைத்து தமிழகக் காவல்துறை துரிதமாகச் செயல்பட்டு சில மணி நேரங்களிலேயே அந்த நான்கு நடுத்தர வயதினர்களையும் கைது செய்திருந்தது. தவறு செய்தது அந்நியர்கள் அல்ல, இந்த மண்ணைச் சேர்ந்த ‘வீரம்’ பேசும் மனிதர்கள் என்பதுதான் பெரும் வலியாக இருந்தது
எங்கும் இருள் மெல்ல கவிழத் துவங்கிய வேளையில், பரந்தாமன் தனது அலுவலக வேலையை முடித்துக் கொண்டு மாலை ஆறரை மணிக்கு வீட்டிற்குத் திரும்பும் போது, அதே நாற்சந்தியை மிதிவண்டியில் கடந்தான். அவன் காலையில் பார்த்த கூட்டம் இப்போது அங்கே இருக்கவில்லை. ஆனால் அந்த இடத்தின் வடு அவன் ⁶மனதின் ஓரத்தில் இன்னும் நிழலாடிக் கொண்டிருந்தது.
அவனது மிதிவண்டி புது ஆற்றங்கரை பாலத்தை மெல்ல நெருங்கியது.
அப்போது அவனுக்கு முன்னால் ஒரு நடுத்தர வயது மனிதர் தனது பழைய டிவிஎஸ் 50 வாகனத்தில் மெதுவாக பாட்டுப் பாடியபடி சென்றுகொண்டிருந்தார். “மேகம் கருக்குது மழை வரப் பாக்குது” என்ற கே ஜே ஏசுதாஸ் அவர்களின் அந்த அழகான பாடல் வரிகள், காற்றின் வழியே வந்து அவனது காதுகளை உரசிச் சென்றன. ஆனால் இப்போது அவனால் அந்தப் பாடலை ரசிக்க முடியவில்லை. அதனை ரசிக்கும் மனநிலை இப்போது அவனிடம் இல்லை. அப்போது வானம் இருட்டிக்கொண்டு, இடி மின்னலோடு அவனை மிரட்டிக்கொண்டு இருக்க, அவனுக்குப் பின்னே… ஓர் இளம் பெண்ணின் ஆவேசமான கூக்குரலும், இரண்டு இளைஞர்களின் கதறலும் கேட்டது. பரந்தாமன் திரும்பிப் பார்த்தான். ஒரு வட இந்திய பெண்ணும், இரண்டு இளைஞர்களும் அவனைத் துரத்திக்கொண்டு, வேகமாக பின்னே ஓடிவந்து கொண்டிருந்தார்கள். அப்படித்தான் அவனுக்குத் தோன்றியது. பயத்தில், அவனது கால்கள் மிக மிக வேகமாக மிதிவண்டியை மிதிக்க ஆரம்பித்தன.
000.
