
அசோகமித்திரனும் சுந்தர ராமசாமியும் சம காலத்தவர்கள். நவீனத்துவர்களும் கூட. தமிழ் நவீனத்துவச் சாதனையாளர்களில் முக்கியமான இருவர்.
கால் நுாற்றாண்டுக்கால இடைவெளிக்குப் பின்னர் இருவரின் படைப்புகளை மறுவாசிப்பு செய்யும் போது ஒரு எண்ணம் தோன்றியது. இருவரும் மேதைகள்தான். சந்தேகமில்லை. ஆனால் சுந்தர ராமசாமியின் புனைவுகளை விட அசோகமித்திரனின் படைப்புகளின் மீது ஒரு கையளவு கூடுதல் பிரியமும் ஆச்சரியமும் எனக்கேற்பட்டது.
ஏன் என்று கேட்டால் சுந்தர ராமசாமி மூளையால் எழுதியவர், அசோகமித்திரன் மூளையாலும் இதயத்தாலும் எழுதியவர் என்ற அவதானிப்பு வலுப்பெற்றது. சுந்தர ராமசாமியின் தீவிரமான கலைப் பிரக்ஞை ஒரு அசௌகர்யமாக இன்றைய வாசிப்பிற்குத் துருத்திக்கொண்டு நிற்கிறது. வடிவ போதம் மட்டுமே காலத்தின் களிம்பில் இருந்து கலையைக் காக்கும் என்ற அவரின் நம்பிக்கை இன்று மங்கிப்போயுள்ளது. எழுத்தின் மீது அவர் கொண்டிருந்த கண்காணிப்பு புனைவுச் சாத்தியத்தின் பெறுமதியான கதாப்பாத்திரங்களின் மன ஆழங்களுக்குள் செல்வதை மட்டுப்படுத்திற்று. மிகுந்த தன் உணர்வுடன் மேற்கொண்ட காரியமாக எழுத்து தொழிற்பட்டு, கலையின் இயல்பாக இருக்க வேண்டிய அத்து அலையும் பித்தேறிய தருணங்கள் சுந்தர ராமசாமியின் எழுத்தில் குறைபட்டு நிற்கின்றன. சுதந்திரத்தின் அழகு முழுக்க அவரிடம் வெளிப்படவில்லை.
அசோகமித்திரனின் புனைவுலகம் சுந்தர ராமசாமியை விட விரிவானது. அசோகமித்திரனின் படைப்பு மொழி சுந்தர ராமசாமியின் மொழியோடு ஒப்பிட்டால் மிகவும் பலகீனமானது. ஆனால் அன்றாடத்தின் ஆழங்கள் கூடியது. அசலான அனுபவத்தின் ரத்தமும் சதையும் கொண்டது. அவரின் அக உலகில் சிந்தனைச் சிதறல்களின் அடர்த்தியும் அதிகம். அசோகமித்திரனின் புனைவுலக மாந்தர்களில் எவரும் சோடை போனதில்லை. ஒரு கதாப்பாத்திரத்தின் ஒரு ”உம்” என்கிற சொல்கூட அக்கதையின் பகைப்புலத்தை வலுப்படுத்தும் நிகழ்தலாக இருக்கிறது.
மனித மனங்களின் பல்வேறு பாவனைகளின் மீதும், கணந்தோறும் போட்டுக்கொள்ளும் பலநுாறு வேடங்களின் மீதும் தனித்த அக்கறையும், கவனிப்பும் கொண்டவர் அசோகமித்திரன். அதுதான் வாழ்க்கையை, கதாப்பாத்திரங்களை ஒற்றறிந்து, அதன் நுட்பங்களை தேடித்தேடி கண்டடைந்த காரியமாக அவரின் கலையை மாற்றியுள்ளது. அசோகமித்திரனை அவர் காலத்தின் மகா கலைஞனாக்கியுள்ளது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை என்கிற அசோகமித்திரனின் கதை அவரின் ஆகச்சிறந்த கதைகளில் ஒன்று. முத்துசுவாமி ஐயருக்கு நான்கு குழந்தைகள். இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள். மூவருக்கும் திருணம் ஆகி தனித்தனியே வசிக்கிறார்கள். ஆண்கள் இருவரும் முத்துசுவாமி ஐயருக்கு உதவுவதில்லை. முத்துசுவாமி ஐயர் பணி ஓய்வுபெற்று கடைசிக் குழந்தையான விசாலாட்சியின் தயவில் அதிகமும் சிரமம் இல்லாமல் சொந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரின் மனைவிக்கு வீட்டுக்காரியங்கள் மட்டுமே முக்கியம்.
கதை ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நிகழ்கிறது. ஒரு விடுமுறை நாளின் ஆசுவாசமும் எதிர்பார்ப்பும் என்னவாக இருக்க முடியும் என்கிற அக்கறை கதை முழுக்க வெளிப்படுகிறது. முத்துசுவாமி ஐயர் பணி ஓய்வு பெற்றவர். அவருக்கு ஞாயிற்றுக்கிழமைகள் இல்லை. அல்லது அத்தனை நாட்களும் ஞாயிற்றுக்கிழமைகள்தான். அவரின் அன்றாடத்தில் பரபரப்பும் அவசரங்களும் கிடையாது. சாவகாசமான பொழுதுகள். உடல் சதா இயலாமையின் அனுகூலத்தை எதிர்பார்க்கிறது. மனம் இயலாமையின் எதிர்வினைகளை உண்டாக்கிக்கொண்டே இருக்கிறது. வயதான காலத்தில் அதிகப் பாடுகள் அற்று, மிச்ச ஆண்டுகளைக் கழித்துவிட்டுப் போக தந்திரங்கள் மேற்கொள்கிறது. கடமையைச் சுமையாக கருதுகிறது.
பேபி தலையையும் போர்த்திக் கொண்டு படுத்திருந்தாள் என்பதில்தான் கதையே ஆரம்பமாகிறது. முத்துசுவாமி ஐயரின் கடைசி மகளான சௌ.விசாலாட்சிக்கு முதிர் கன்னி வயதாகிறது. ஆனால் அவள் அப்பவும் சிறு குழந்தைகளின் மனோலோகத்தைக் கொண்டிருக்கிறாள் என்பதை அவள் தலையையும் போர்த்திக் கொண்டு துாங்குகிறாள் என்பதைச் சொல்வதன் மூலம் உணர்த்திவிடுகிறார் அசோகமித்திரன். பேபி பேபியாக இருப்பது அவள் அக்குடும்பத்தின் கடைசிக்குழந்தையாக இருப்பதாலும் கூட. அதே போல சௌ.விசாலாட்சியை முத்துசுவாமி ஐயர் பேபி என்றுதான் எண்ணுகிறார். கூப்பிடுகிறார். சிந்திக்கிறார். கதாப்பாத்திரமாக அசோகமித்திரனும் பேபி என்றே வர்ணிக்கிறார். ஏன் சௌ.விசாலாட்சி பேபியாக காணப்பட வேண்டும்?. கதை முத்துசுவாமி ஐயரின் கோணத்தைக் காட்டுகிறது. வளர்ந்து பருவம் எய்திய பெண்ணை குழந்தையாக கற்பனையில் உறையச் செய்வது முத்துசுவாமி ஐயரின் தந்திரம்.
பணி ஓய்வு பெற்றபின் ஆணுக்கு ஏற்படும் அவலங்களையும் இக்கதையின் வழியாக காணமுடிகிறது. பெண்கள் அதிக அதிகாரம் கொண்டு ஓய்வு பெற்ற ஆண்களை வழி நடத்திச் செல்கிறார்கள். பெண்களின் கட்டாய ஏவலாளிகளாக ஆண்கள் இருந்தாக வேண்டியுள்ளது. குடும்பக் காரியங்களை கவனித்துக்கொள்ளும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள். மகளை நம்பி வாழ்வதால் பேபியை கண்டிக்க முடிவதில்லை. அதையே அவளுக்கு அளிக்கும் சலுகையாக மாற்றிவிடவும் முடிகிறது. எங்குவேண்டுமென்றாலும் போ, என்ன வேண்டுமானாலும் செய்துகொள். ஆனால் மாதம் பிறந்தால் சம்பளக்கவரினை என்னிடம் கொடுத்துவிடு பேபி. இதுதான் அவரின் சுதந்திரம்.
முத்துசுவாமி ஐயரின் மனைவிதான் முத்துசுவாமி ஐயரின் மேலதிகாரி. வீடு கண்காணிப்பு மிக்கதாகிறது. சீக்கிரமாக தன் மகளை எழுப்ப முயலும் மனைவியைக் கண்டிக்கிறார் முத்துசுவாமி ஐயர். “அவள்தான் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏழு மணிக்கு முன்னால் குரல் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறாளே. இன்றைக்கு ஒரு நாள் தானே குழந்தையால் இப்படித் துாங்க முடியும்? என்று பேபிக்கு ஆதரவாக செயல்படுகிறார்.
“குழந்தை! கையில் ஒன்று, இடுப்பில் ஒன்றாக நான்கு குழந்தைகள் இருக்க வயசாயிற்று“ என்று சொல்லிவிட்டு அவர் மனைவி உள்ளே சென்றாள் என்ற கதைத் தொடர்ச்சியின் வழியாக நமக்கு நிறைய விசயங்களை ஊகிக்க முடிகிறது. வாசக இடைவெளியின் அர்த்தப்பாடுகள்.
பேபியின் மீது ஒரு தாயாக மங்களத்திற்கு இருக்கும் மனக்குறை. பேபியின் வயது ஏற்படுத்தும் பதற்றம். பேபியின் வயதில் தன்னுடைய நிலை என்னவாக இருந்தது என்பதோடு ஒப்பிட்டு அடையும் ஆற்றாமையும் பொறாமையும். ஒரு தலைமுறை இடைவெளியில் இரு பெண்களின் உலகங்கள் முட்டி மோதிக் கொள்கின்றன. மங்களத்துக்கு முத்துசுவாமி ஐயருடன் திருமணம் ஆனபோது பத்து வயது. பத்துவயதில் நடந்த குழந்தைத் திருமணத்தை எதிர்கொண்டு வந்த அன்னை அவள். இயல்பாகவே அவளுக்கு தன் பெண் குழந்தைகளின் வயதின் மீது ஒரு அக்கறை. வயதாவதன் தத்தளிப்பு.
முத்துசுவாமி ஐயர் அன்றைய தினசரியை வாசிக்க பிரிக்கிறார். அவரின் முதற்கவனம் விளம்பரங்களாக இருக்கிறது. மணப்பெண் தேவை பகுதியில் அன்றைக்கு ஒன்றும் தோதாக இல்லை என்பதே ஆறுதல். அப்பாடா என்ற நிம்மதி. மனைவியோ சென்றவாரமே சென்று பார்த்து ஜாதகம் வாங்கி வந்திருக்கவேண்டிய ஒரு வரன் குறித்து நினைவுப்படுத்துகிறார். அன்றாவது ராகுகாலத்திற்கு முன்பாக கிளம்பிச் சென்று பையனின் ஜாதகக்குறிப்பினை வாங்கி வர வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். பிற்பகல் மூன்று மணிக்கு கிளம்பிச் சென்றால் சரியாக இருக்கும். ராகு காலத்திற்கு முன்பாக வரன் இருக்கும் வீட்டை அடைந்துவிடலாம்.
பேபி குளித்துவிட்டு, வெளியே கிளம்ப ஆயத்தம் ஆகிறாள். அவள் அணிந்திருந்த சேலை புதிதாக இருப்பது முத்துசுவாமி ஐயரை கவனிக்கச் சொல்கிறது. “இந்தப் புடவையை எப்போது வாங்கினாய்?” என்று அவர் பேபியிடம் கேட்கிறார். பேபி “உம்” என்கிறாள். உடனே பதில் சொல்லவில்லை. பதிலைத் தயாரிக்க சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. முத்துசுவாமி ஐயருக்கு புதிய சேலை என்பது சென்ற மாதத்தில் ஏற்பட்ட கூடுதல் செலவாக இருக்கவும் கூடும். உடனே அவர் “வருகிற முதல் தேதி வீட்டு வரிக்காரனை வரச்சொல்லி இருக்கிறேன். உன் சம்பளம் வந்துதான் வரி கட்ட வேண்டும்” என்பதைச் சொல்கிறார். பேபியின் சம்பளம் பேபிக்கு மட்டுமே உரியதல்ல என்பது குறிப்புணர்த்தப்படுகிறது.
பேபி பதிலுக்கு முத்துசுவாமி ஐயரிடம் அவரை நேர்காணலுக்கு வரச் சொல்லியிருந்த அழைப்புக் கடிதத்தை நினைவுப்படுத்துகிறாள். அதன் மூலம் அவள் தந்தையின் பணம் சார்ந்த அக்கறையை திரும்பி அனுப்புகிறாள். நீங்களும் ஏதாவது வேலைக்குச் சென்று குடும்பச் செலவில் பங்குபெறலாமே என்பதை சுட்டிக்காட்டுகிறாள்.
சனிக்கிழமையே சென்றிருக்க வேண்டிய நேர்காணல் அது. முத்துசுவாமி ஐயர் மறந்து விடுகிறார். வயோதிகம் அளிக்கும் வாய்ப்பு மறதி. பதினோரு மணிச் சாப்பாட்டிற்கு பிறகு அன்றைய பத்திரிகையை முழுக்க வாசிக்க அமர்கிறார். கண்கள் சோர்ந்து துாக்கம் வருகிறது. கண் கண்ணாடியை கையில் வைத்தபடியே ஆழ்ந்த துயிலுக்குள் செல்கிறார். விழித்துப் பார்த்தால் மணி மூன்று அடித்துவிடுகிறது.
மதியச் சாப்பாட்டினை அறைகுறையாக எடுத்துக்கொண்டு சேட் காலனிக்கு கிளம்புகிறார். அப்போதே அவருக்கு தலையை வலிக்கிறது. மனைவியிடம் தலையை வலிப்பதைச் சொல்லி ஒரு பதற்றத்தை உண்டு பண்ணுகிறார். தலைவலி மருந்தை மனைவி தேய்த்து விடுகிறாள். தலைவலி கடுமை குறைந்து அவர் வீட்டை விட்டு கிளம்ப நான்கு மணி ஆகிவிடுகிறது.
ராகு காலம் ஆரம்பித்த பின்னர்தான் அவரால் சேட் காலனியை அடைய முடிகிறது. அதுவே ஆசாரம் கொண்ட குடும்பத்தின் வரன் கிடைக்காமல் போக காரணமாகிறது. ராகு காலம் தாண்டி ஜாதகம் கேட்க வந்தவரை தவிர்க்க வைக்கும் உபாயத்தை அளிக்கிறது. நல்ல மாப்பிள்ளை. கண்ணை மூடிக்கொண்டு கொடுக்கலாம் என்ற பரிந்துரைக்கு அர்த்தம் இல்லாமல் ஆக்கிவிடுகிறது. மாப்பிள்ளையின் அப்பா “ஆயிரம் காலத்துப் பயிர் ராகுகாலத்தில் விதைக்கப்படலாமோ” என்று எண்ணி திருமண முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். தேவைப்பட்டால் நான் கடிதம் போடுகிறேன் என்று முத்துச்சுவாமி ஐயரிடம் சொல்கிறார். ஜாதகப் பொருத்தம் இருந்தும் பயனில்லை. பளு குறைந்த மாதிரியான மனநிலை. உடனே அதுவரை இருந்த தலைவலியும் இல்லாமல் போகிறது.
அந்த பகுதியில் இருந்த நண்பரின் வீட்டிற்குச் சென்று உபநிசத் சாரம் கேட்கிறார். அங்கே உள்ள ஒரு நண்பர் அவரை எக்மோர் ரயில் நிலையத்தில் விட்டுச் செல்கிறார். மாம்பலம் செல்ல டிக்கெட் வாங்கிக்கொண்டு, சரியான சில்லறையைக் கொடுக்காத ரயில்வே ஊழியரிடம் மனதிற்குள் சண்டையிட்டுவிட்டு, நடைமேடைக்கு படியேறிச் செல்கிறார்.
வரிசையாக அமர்ந்திருந்த பெண்களின் மத்தியில் பேபியும் அமர்ந்திருப்பதை பார்க்கிறார். பகல் காட்சி சினிமாவுக்கென்று கிளம்பி வந்தவள் அவள். அவளுக்கு எதிரே நான்கு இளைஞர்கள் உரக்கச் சிரித்தபடி, பாட்டுப்பாடி ஆர்ப்பாட்டம் செய்தபடி நின்று கொண்டிருக்கிறார்கள். பேபி இறுகிய முகத்துடன் வானத்தைப் பார்த்து அமர்ந்திருக்கிறாள். அவர்கள் பேபியைத்தான் இலக்காக்கி நின்றிருக்கிறார்கள் என்பதை உடனே முத்துசுவாமி ஐயர் தெரிந்துகொள்கிறார்.
முத்துசுவாமி ஐயர் தன்னிச்சையாக பேபியின் கண்ணில் தட்டுப்படாதவாறு மறைவான இடம் தேடி ஒதுங்கிக்கொள்கிறார். ஒரு தந்தையாக அவர் மனம் ஆத்திரம் கொள்கிறது. நான்கு தடிமாடுகளையும் அவரால் என்ன செய்ய முடியும்? அந்த இளைஞர்களை தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பது உறைத்தாலும், அவரின் ஆத்திரம் அடங்க மறுக்கிறது. அவரின் இயலாமையோடு தந்தைமையின் நீர்மையும் சுரக்கிறது.
பேபி எல்லா வேலை நாட்களிலும் இருட்டிய பிறகுதான் வீட்டிற்குத் திரும்புகிறாள். ரயில் நிலையத்திலாவது ஆட்கள் இருப்பார்கள். பாதகமில்லை. ஆனால் இருட்டும் தனிமையும் நிறைந்த பகுதிகளில் பேபியின் நிலைமை என்னவாகும் என்று எண்ணி வருத்தம் கொள்கிறார். வேலைக்குச் செல்லும் இடத்திலும் வேலைக்குச் சென்று வரும் இடங்களிலும் பேபி அயோக்கியர்களைக் கடந்து வர என்ன பாடுகள் படவேண்டி இருக்கும்? தந்தையாக அவர் அடையும் சஞ்சலங்கள் உடனே அவளை கல்யாணம் செய்து அனுப்பி வைத்துவிட்டால் நிம்மதி என்று எண்ணச் செய்கிறது.
ரயில் வந்தாலும் அவர் அதில் ஏறிக்கொள்ளவில்லை. பேபியின் தலை மறையும் வரை ஒளிந்தே இருக்கிறார். ஒரு புறம் தன் சுயநலத்திற்காக பேபியின் இருப்பை நிலைப்படுத்தும் முத்துசுவாமி ஐயரின் விருப்பம். மற்றொருபுறம் தந்தையாக தன் மகள் மீது அவர் கொள்ளும் அக்கறையும் அன்பும். இரண்டு பிளவு பட்ட ஆளுமை அவர். சுய நலமும், சுய நலத்தை மீறிய தந்தைமையும் கலந்த கோலம். திருமணம் தள்ளிப் போக அவரின் கையாலாகத் தனம்தான் காரணம் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். உள்ளம் உணர்ந்த உண்மையை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “ஈசுவரா என்னை என்னிடம் இருந்து காப்பாற்று” என்று வேண்டிக்கொள்கிறார்.
அசோகமித்திரனின் கதைகளுக்குள் நிகர் வாழ்க்கையின் உச்சக்கட்ட தருணங்கள் குறிப்பால் உணர்த்தப்பட்டிருக்கும். அவை நெஞ்சில் அறைந்து கொண்டு வெளிப்படுவதில்லை. உறைந்த பனிமலையின் மௌனம் கொண்டிருக்கும். அசோகமித்திரன் தன் கதாப்பாத்திரங்களின் மீது எந்தவித தணிக்கையும் கொண்டிருப்பதில்லை.
இங்கே சுந்தர ராமசாமியை ஒப்பிட்டுப் பார்ப்பது கூடுதல் வெளிச்சத்தை, அசோகமித்திரன் மேதைமையின் மீது பாய்ச்சக் கூடும். சுந்தர ராமசாமியின் கதை மாந்தர்களும் சுந்தர ராமசாமியின் பாதிப்பினைக் கொண்டிருப்பார்கள். உதாரணமாக பிராமணக் குடும்பத்தின் மத ஆச்சாரங்களை அவரின் கதாப்பாத்திரங்களும் பொருட்படுத்துவதில்லை. இக்கதையில் மங்களம் குளியல் அறையில் இருந்து குளித்துவிட்டு வெளியே வருகிறாள். மங்களத்தை பேபி நெருங்கும் போது அவள் பதறி விலகும் சித்திரம் இருக்கிறது. தாயும் மகளும்தான் என்றாலும் மடி ஆசாரம் இங்கே நுட்பமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர் குடிப் பண்பாட்டின் எச்சம் அது. சுந்தர ராமசாமிக்கு இத்தருணத்தை எழுத்தில் பதிவு செய்ய தயக்கம் இருந்திருக்கும். அதே போல ஜாதகத்தின் நான்கு பக்கங்களும் ஆள்காட்டி விரல் நுனியால் குங்குமத்தைத் தொட்டு ஒற்றி யெடுக்கும் மத ஆச்சாரத்தையும் இங்கே சொல்லிவைக்கலாம். சுந்தர ராமசாமியின் கலையை ஒரு கனவானும் மார்க்சியரும் தணிக்கை செய்து கொண்டே இருக்கிறார்கள். அசோகமித்திரனிடம் அவர்கள் இல்லை. கலை பிரக்ஞைக்கு நேர் எதிரான ஒரு மார்க்சிய மனம் சுந்தர ராமசாமியை இயக்கியுள்ளது. அவரையும் மீறி வெளிப்பட்டவையே அவர் கலையை உன்னதம் நோக்கி உந்தியவை.
அதே போல முத்துசுவாமி ஐயர் உபந்நியாசம் கேட்கச் செல்லும் இடம். வரன் பார்க்க சென்றவரால் அப்படியே நேரடியாக ரயில் நிலையத்திற்குச் சென்றிருக்க முடியும். அவர் ஏன் தன் மகளின் திருமணம் தள்ளிப்போவதைக் குறித்து குற்ற உணர்ச்சி கொள்கிறார்? அதனை சமன் செய்யத்தான் உபநிசத் சாரம் கேட்கச் செல்கிறாரா?
வாழ்க்கை சிடுக்குகள் நிறைந்தது. மனித மனங்கள் மேலும் கடுமையான சிக்கலுக்குள் தளைப்பட்டுள்ளன. கலை சிக்கல்களைச் சுட்டுகிறது. அசோகமித்திரனின் மேதைமை வெளிப்படுவது அவரின் சுட்டுவிரல் தீட்டும் சித்திரங்கள் வழியாகத்தான்.
( ஒரு ஞாயிற்றுக்கிழமை சிறுகதையை முன்வைத்து)
