சமீப காலங்களாக வானத்தை அண்ணாந்து பார்க்கையில் யாரோ ஒருவர் திரும்பிப் பார்ப்பது போன்ற பிரமை. கண்களுக்குப் புலப்படாத ஆனால் உள்ளுணர்வால் உணர முடிந்த, உருவமில்லா முகம். அதற்கு முகமில்லையென்றாலும் புலன்கள் இருக்கின்றன; ஆயிரம் கண்கள், ஒரு லட்சம் நாவுகள். அத்துடன் வன்மத்தோடு தாக்க அல்லது அன்போடு அரவணைத்துக்கொள்ளக்கூடிய சிந்தையும் இருக்கிறது. மானுடத்தின் உத்தமமான படைப்புகளின் உச்சியில் நின்று உலகமெங்கும் விரிந்திருக்கிறது இந்த முகம் / கொடை. அதை முகம் அல்லது கொடை என்பதைவிட கண்ணாடி எனச் சொல்லலாம். அதனால் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள ஒருவரை உங்களுடன் பேசச் செய்ய முடியும். இதற்கு முன் இருந்த தொலைபேசியைப் போலன்றி, முக பாவனைகளைக் காட்டும் திறன் உடையது. ஆனால் ஒன்று, ஒருவருடன் பேச முடியும் ஆனால் அவரைப் புரிந்து கொள்ள முடியாது; புரிந்து கொள்ள முடியும் ஆனால் உணர முடியாது; உணர முடியும் ஆனால் கட்டி அணைக்க முடியாது. ஆரம்ப காலங்களில் இந்த விசித்திரத்தை எல்லோரும் புகழ்ந்தனர். உலகத்தைச் சுருக்கிவிட்டது என்றனர், வாழ்வாதாரத்தைப் பெருக்கும் மேடை என்றனர். அக்காலப் பார்வையில் இவை அனைத்தும் உண்மையே. சமீப காலமாகத்தான் அது கொடை அல்லது முகம் காட்டும் கண்ணாடியைவிட தப்ப முடியாத வலை என்பதும் புலப்பட்டது. Imperfections cannot create perfection என்பதன் உன்னத நிரூபணம் இணையம்.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இரு கணினிகள் ஒன்றோடு ஒன்று பேசத் தொடங்கியதோடு ஆராய்ச்சியை நிறுத்தியிருந்தால் இந்தச் சூழ்நிலை வந்திருக்காதோ எனத் தோன்றுகிறது. நுட்பத்தை ஒரு ஆயுதமாகவும், இணைய மென்பொருள் நிறுவனங்களை வர்த்தக வல்லரசுகளாகவும், சமூகத்தின் விருப்பு வெறுப்புகளைத் தணிக்கையின்றி வெளிப்படுத்தும் மேடையாகவும் வளர விட்டது யாருடைய தவறு எனக் கேட்க யாருமில்லா நிலையில், அம்பெர்ட்டோ எகோ, ‘இணையத்தில் அனைவரும் அறிவுஜீவிகளே’ எனச் சொன்னது நிஜமாகிவிட்டது. நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களைப் போலப் புதுப் பணக்காரர்களையும் நிறுவனங்களையும் வளர்க்கும் வயல்வெளியாகிவிட்டது இணையம். இப்படி எங்கும் விரிந்திருப்பதன் காரணமாகவோ என்னவோ இணையத்திற்கு மேகத்தைக் குறியீடாக்கிவிட்டனர். நிஜத்தில் இணையம், விண்கலங்களை விடத் தரைக்கு அடியில், ஆழ்கடலின் மடியில் புதைக்கப்பட்டிருக்கும் மின் கம்பிகளால் சிலந்தி வலையைப் போல விரிந்திருக்கிறது. மானுடச் சமூகத்தைப் போல இணையமும் ஓர் சமூகமாகி, பாஸ்போர்ட் இன்றிப் பயணிக்கும் உலகமாகிவிட்டது. இந்தச் சமூகத்தில் நிஜச் சமூகத்தைப் போல அனைத்து ரக மனிதர்களையும் தர்க்க இருமைப் பிரதிபலிப்பாகக் காணலாம். ஒரே வித்தியாசம் இணையத்தில் நேரிடும் மனிதர்களின் அடையாளம்.
இணையத்தை தப்ப முடியாத வலையாகக் கருதுபவர்கள் இருக்கும் அதே நேரத்தில், அதை ஓர் போர்வையாகவும் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். மேலிருந்து பார்க்கும் கண்களுக்கு உச்சந்தலையில் முகமூடி தரித்து வேறு முகம் காட்டி, நேர் கோணலில் நிஜ முகத்தைக் காட்டும் மனிதர்களின் நிஜ ஆளுமையை இணையத்தில் வெளிப்படுத்தும் இரட்டை ஆளுமை மனிதர்கள் இருக்கிறார்கள். இணையத்திற்கு முன் ஒரு மனிதனின் குணங்களைப் புரிந்துகொள்ள அந்த நபருடன் நெருங்கிப் பழக வேண்டியிருந்தது. அப்போதும் நேரடியாகத் தன் விருப்பு வெறுப்புகளைச் சொல்லாமல் மூடி மறைப்பவர்கள் இருந்தார்கள். இப்போது அதற்கு அவசியமில்லை; இணையத்தில் ஒருவரின் அறிமுகத்தை மறைப்பது மிகச் சுலபம். சில விதிவிலக்குகளைத் தாண்டிச் சொந்தப் பெயருடன் இணையத்தில் வலம் வருபவர்கள் மிகக் குறைவு.
**
சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் நிறுவனம் ஒன்றில் கௌரவமான பணியில் சில காலம் மென்பொருள் நுட்பத்தை முறையாகக் கற்றுப் பயன்படுத்திய நாட்கள் இருந்தன. உலகப் பொருளாதாரம் இணையத்தினால் வெகுவாகச் சுருங்கியதின் பின்விளைவாக, வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்காக மென்பொருள் தயாரித்துத் தர முடிந்தது. சுரேஷ் சில வருடங்கள், ‘காலை ஜப்பானில் காபி, மாலை நியூயோர்க்கில்…’ என்ற ஜெட் வேக வாழ்வை அனுபவித்தான். அந்த மாயை அதிக நாட்கள் நீடிக்கவில்லை. அவனுக்கு நன்கு பழக்கமான நுட்பங்கள் பழையதாகிப்போனதனால், திடீரென முன் எச்சரிக்கை இன்றிப் பணிநீக்கம் செய்யப்பட்டான்.
அவன் பணிநீக்கத்தைச் சாதாரண நடப்பாகப் பார்த்தது அவனது நிறுவனம். மூன்று மாத சம்பளம் கொடுத்த அடுத்த நிமிடமே நிறுவனத்தின் சகல அனுமதிகளும் ரத்து செய்யப்பட்டன.
‘நீங்க நல்ல ஊழியர். ஆனால் நடப்புக்குத் தேவையான நுட்பங்களில் உங்களுக்குத் தேர்ச்சி பத்தாது,’ என்றார் மனித வள மேலாளர். அதைக்கேட்டுக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவனுடைய நேர் மேலாளர் முகத்தில் சிறிய சிரிப்பு மின்னியதாகத் தோன்றியது சுரேஷிற்கு.
இருந்தவரை கைநிறையச் சம்பாதித்ததெல்லாம் தேவையற்ற வகையில் செலவழிந்துபோய், மூன்று மாத சம்பளத்தொகை மட்டும் கையிருப்பாக, வேலை வாய்ப்புகள் ஏதுமின்றி என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டில் உட்கார்ந்திருந்த சுரேஷிடம் அவன் நண்பன்,
‘மச்சான் கவலைப்படாதே. தலைவர் கிட்ட சொல்லி உனக்கு ஒரு வேலைய வாங்கித் தர வேண்டியது என் பொறுப்பு,’ என்றான்.
‘டேய் போடா! உன் தலைவனே எழுதப் படிக்கத் தெரியாதவன், அவன் என்னடா எனக்கு வேலை வாங்கித் தருவான்?’
‘என்ன மச்சி அப்படிச் சொல்லிட்ட!! கட்சியில் உன்னைய மாதிரி நிறைய பேரு தேவைப்படுது.’
‘என்னடா சொல்றே?’
‘இல்லையாப்பின்னே! முன்னாடியெல்லாம் பொதுக்கூட்டம் போட்டு, ஆவேசமா கத்துவங்க, சவால் விடுவாங்க, போராட்டம் பண்ணுவாங்க. அதெல்லாம் இப்பப் பழசாயிருச்சு. இப்ப சோசியல் மீடியாவில ஒரு மீம் போட்டா போதும். உனக்கு நிறைய ஃபாலோவர்ஸ் இருந்தா அந்த வீடியோ வைரலாகி லட்சக்கணக்குல அதப் பார்க்கறாங்க. நீ வா… நான் சொல்லித்றேன்…’ என்றான் அவன் நண்பன்.
‘டேய் அதெல்லாம் எனக்குத் தெரிஞ்சதுதான்டா. ஆனா எனக்கு இந்த அரசியல் எல்லாம் வேண்டாம்ப்பா. காலையில இவனைத் திட்டினா, சாயங்காலம் அவன் எதிர்க்கட்சி காரனையும் திட்டுவேன். வேண்டாம்பா விட்ரு.’
‘அப்ப வீட்ல வெட்டியா இருக்கப்போறியா?’
கடைசியில் வேறு வழியின்றி வரச் சம்மதித்த சுரேஷை கட்சி ஐடி கிளை செயலாளரிடம் அறிமுகப்படுத்தியோடு முதல் பணியையும் வாங்கித் தந்தான் அவன் நண்பன். சில காலம் அதிக ஊதியம் இன்றி கட்சியின் ஐடி கிளையில் கொள்கை பரப்புச் செயலாளராகப் பொழுதைக் கழித்தான்.
கட்சி வேலைகள் ஆரம்பத்தில் மிகச் சுலபமாகத்தான் தோன்றியது. திட்டங்களைப் பற்றிய தகவல்களை மக்களுக்குப் புரியும் வண்ணம் சித்திரங்களாக வரைந்து கட்சியின் பல ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கும், சமூக வலைத்தளங்களிலும் வெளியிடுவதே வேலை. சில நாட்களுக்குப் பின் எதிர்க்கட்சி கொள்கைகளையும் அதன் தலைவர்களைப் பற்றியும் மீம் போடச் சொன்னார்கள். சுரேஷிற்கு அது ஏதோ போலத் தோன்றியது. மிகவும் மென்மையாக, கண்ணியமாகக் கண்டித்துச் சில விமர்சனங்கள் எழுதினான்.
‘என்னப்பா இப்படிப் போட்டா வேலைக்கு ஆகாது. நீ என்ன சட்ட சபையிலையா பேசற? கண்ணியம் காக்க? அவங்க கட்சி போடுற மீம் பார்த்தியா, அம்மா, அக்கான்னு எழுதுறாங்க. உன்னால முடியலைன்னா சொல்லு, வேற வேலை பார்த்துக்கோ,’ என்றார் ஐடி கிளைச் செயலாளர்.
‘ஏன் தம்பி உன்னைய மிரட்டிருவாங்கன்னு பயமா? என்னடா இவன்? சொந்தப் பேர்ல யார் எழுதச் சொன்னது? நீ பெரிய கம்பெனில வேலை செஞ்சதா சொன்னானே? இது கூடவா சொல்லித்தறனும்?’
அப்போதும் சுரேஷ் மனதளவில் அத்தகைய காரியங்களைச் செய்யத் தயங்கினான்.
**
மாலதி (நிஜப் பெயர்), சுரேஷுடன் அதே நிறுவனத்தில் பணியாற்றியவள். சுரேஷ் அவளுடன் அத்தனை நெருக்கமாகப் பழகவில்லை; வேலை ரீதியான தொடர்புதான் இருந்தது. ஆனால் வேலை நீக்கம் செய்யப்பட்ட பின்னும் சுரேஷுடன் தொடர்பில் இருந்த ஒரே நபர் மாலதி ஒருவரே. வாட்ஸ்அப் மூலம் அடிக்கடி அலுவலகத்தில் நடப்பதை சுரேஷுடன் பகிர்வாள். ஒரு நாள், சுரேஷின் மேலாளர் சமூக வலைதளத்தில் எழுதிய ஒரு குறுஞ்செய்தியை அவன் கைபேசிக்கு அனுப்பியிருந்தாள். அதில்
‘புதிய நுட்பத்தில் தயாரான மென்பொருளை நானும் என் குழுவும் இணைந்து வாடிக்கையாளர் இடத்தில் வெற்றிகரமாக நிறுவினோம். இதில் முக்கிய பங்கு வகித்த அனைவருக்கும் நன்றி’ என எழுதியிருந்தார்.
அந்தச் செய்தி சுரேஷை மிகவும் பாதித்தது. அந்தப் புராஜெக்ட் குழுவில் வேலை நீக்கத்திற்கு முன் அவனும் முக்கிய பங்கு வகித்திருந்தான். ஏதோ தன்னை ஏமாற்றியது போலத் தோன்றியது. பணி நீக்கச் சந்திப்பில் அவர் முகத்தில் படர்ந்த மெல்லிய புன்னகை நினைவுக்கு வந்தது. செய்தி வெளிவந்த அதே தளத்தில், பொய் அறிமுகத்துடன்,
‘நீயெல்லாம் இந்த வெற்றியைப் பற்றிப் பேசக் கூடாது. ஓரமாக காபியில் உட்கார்ந்து அரை நிர்வாணப் படங்களைப் பார்க்கும் உனக்கு இந்த மென்பொருளைப் பற்றி என்ன தெரியும்? மடையா!!’,
என எந்தவிதத் தயக்கமும் இன்றிப் பதிவு செய்தான். சில நாட்களில் அந்தச் செய்தி இணையத்தில் வெகுவாகப் பகிரப்பட்டது; அலுவலகத்தில் மெளனமாகப் பேசப்பட்டது. அவன் மேலாளர் அந்தச் செய்தியைத் தளத்திலிருந்து நீக்கப் படாத பாடு பட்டதாக மாலதி சொன்னாள்.
‘அவரு மூஞ்சியப் பார்த்திருக்கணும்.. எவன் எழுதினானோ அவன் மேல போலீஸ் கேஸ் கொடுக்கப் போறேன்னு கத்தினாரு. எவன் எழுதினான்னு அலுவலகத்துல பெரிய பிரச்சனையே ஆயிடுச்சு. இப்ப அவரை காபினிலிருந்து தூக்கி வெளியே உட்கார வெச்சிட்டாங்க..’
சுரேஷிற்கு இந்தச் சம்பவம் முதல் ட்ரோலிங் அனுபவமானது. வினோதமாக மன நிறைவும், ஒருவிதச் சந்தோஷமும் தந்தது.
‘என்னையே தூக்கினபோது உன் மூஞ்சில இருந்த சிரிப்பு எங்கடா போச்சு இப்ப..’ எனத் தனக்குத் தானே நினைத்துக்கொண்டான்.
**
வேலை விண்ணப்ப நிராகரிப்புகளும், வீட்டாரின் சுட்டெரிக்கும் வார்த்தைகளும் சுரேஷை தனிமைப்படுத்தின. முழு நேரமும் இணையத்திலேயே கழித்தான். அவனுள் பல மாற்றங்கள் ஏற்பட்டன, உடலளவிலும் முக்கியமாக மனதளவில். கட்சியின் வேலைகள் குறையத் தொடங்கியபோது, ‘என்ன செய்யணும் சொல்லுங்க, இனிமே இங்கீதமெல்லாம் பார்க்க மாட்டேன்’ என்றான் ஐடி கிளை செயலாளரிடம். அவர் ஒரு பட்டியலைக் கொடுத்து,
‘இவங்க சோசியல் மீடியாவில என்ன செய்தி போட்டாலும் அதுக்கு எதிரா எழுதணும். எழுதணும்னா எப்படி எழுதணும்னு தெரியுமில்ல. அவங்க வாய அடைகுறைப்படி எழுதணும்’ என்றார்.
அன்றுடன் சுரேஷ் முழுநேர ட்ரோல் ஆனான்.
**
ஒரு நாள் மாலதியிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி கைபேசியில் வந்தது.
‘இன்னைக்கு ஈவினிங் மீட் பண்ணலாமா?’ என்றாள்.
அன்று மாலை தேநீர் விடுதியில் சந்தித்தனர்.
‘நேத்தோட என்னை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க வேணு. அதுக்கு நீ தான் காரணம். எப்படியோ என் வாட்ஸ்அப் மெசேஜை அவங்க பார்த்துட்டாங்க. வேலையிலிருந்து தூக்கின ஒருத்தனோட ஏன் தொடர்பில இருக்கேன்னு கேட்டாங்க. அதுல என்ன தப்புனு கேட்டேன். அவங்க நா உனக்கு ஃபார்வர்ட் பண்ண ஒரு மெசேஜை காமிச்சு, ‘வேணுதானே என்னை பத்தி கன்னாபின்னானு எழுதினது? எனக்கென்ன தெரியாதா?’ன்னு உன் மாஜி மேனேஜர் கேட்டாரு. ‘சே!! அவன் அப்படியெல்லாம் செய்ய மாட்டான்’னு சொல்லிட்டு, ‘என்னை சந்தேகப்பட்டுடீங்க இல்ல?, எனக்கு இந்த வேலை வேண்டாம்’னு சொன்னேன். ‘நீ ரிசைன் செய்யறதுக்கு முன்னாடியே நாங்களே உன்னை சஸ்பெண்ட் பண்ணிட்டோம்’னு சொல்லிட்டாங்க’. எனக்கு அதுல வருத்தமில்லை. ஆனா ஒன்னு மட்டும் சொல்லு வேணு, ‘நீ அப்படி செய்யல இல்ல?’.
