
அசோகமித்திரனின் பெண்களை ஒருபோதும் எதிர்மறையாக எண்ண முடிவதில்லை. அவர்களின் இருப்பு நம்மை தொந்தரவிற்குள்ளாக்குவது. எண்ணி எண்ணி மனக்கவலை கொள்ளச் செய்வது. ஒரு கோணத்தில் நவீன தமிழ் இலக்கியத்தில் பெண்களின் உலகத்தை உண்மைக்கு மிக நெருக்கமாக எழுதிய படைப்பாளிகளில் அசோகமித்திரனே முதன்மையானவர் என்று கூட மதிப்பிட்டு விடலாம்.
தமிழ் சினிமா உலகில் பெண்களின் நிலை என்ன என்ற கேள்விக்கு அசோகமித்திரனின் பெண் கதாப்பாத்திரங்கள் மிகச் சிறந்த பதில்களாக இருக்கக்கூடும். இன்றும் அதன் நிலைமை மாறிவிடவில்லை. பெண்ணுடல் அகன்ற வெண் திரையில் ஒரு நுகர்வுப் பண்டமாக ஒளிரும் வண்ணச்சேர்க்கையுடன் காட்சிப்படுத்தப்படுகிறது. பெண்ணுடல் வணிக சினிமாவின் ஆதாரம் என்கிற அவதானிப்பு தமிழ் சினிமாவின் வணிக வெற்றி உத்தியையும் உள்ளடக்கியே உள்ளது. பெண்ணுடல் மீதான மிகைப் பதற்றங்களை உண்டாக்கியதில் தமிழ் சினிமாவின் லாபவெறி கட்டற்றது. எத்தனை புரட்சிகர மாற்றங்கள் வந்தாலும் வெண்ணிற பெண்ணுடலும், காதலை அள்ளித்தரத் தவிக்கும் தேவதைப் பாத்திரமும் ஒருபோதும் தமிழ் சினிமாவில் இருந்து நீக்கப்பட்டதில்லை. மிக மிக அபூர்வமாக ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர. தமிழ் சினிமா பாலியல் வறட்சியால் ஏங்கித்தவிக்கும் ஆண் பெண் இதயங்களை சுரண்டிக் கொழுக்கும் ஆபாசந்தான். மனக்குகையில் பொங்கி நுரைத்துக்கிடக்கும் பகல் கனவுகளின் நிழலாட்டம் என்று சொல்வது மிகையாகாது. கோடிகளில் புரளும் பொய்மை.
எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவில் பங்கேற்பது தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் இருந்தே உள்ளது. புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, ஜெயகாந்தன், பூமணி, வெங்கட்சாமிநாதன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன் என்று அதற்கு ஒரு நீண்ட பட்டியல் உண்டு. அது என்றும் நிலைத்திருக்கும் ஒரு நிரை. தமிழ் சினிமாவைத் தாண்டிய எந்தக்கலை வடிவங்களிலும் தமிழர்களுக்கு அக்கறையில்லை என்பது ஊர்ஜிதமான ஒன்று. அத்தனை கலைஞர்களையும் கலைஞர்களாக்கும் ஒரே தகுதி அவர்கள் சினிமாவில் என்ன செய்தார்கள் என்பது ஒன்றே. ஆனால் தமிழ் சினிமா உண்மையில் என்னவாக இருக்கிறது? என்கிற கேள்விக்கு மிகக்குறைந்தளவிலான படைப்பாளிகளே தங்கள் படைப்புகளின் வழியாக, தங்கள் கதாப்பாத்திரங்களின் வழியாக பதில் சொல்லியிருக்கிறார்கள். தமிழ்சினிமாவில் வெற்றிபெற்றவர்களை விட அதில் தோல்வியடைந்த படைப்பாளிகளின் படைப்புகள் நம்பத் தகுந்தவையாக உள்ளன. அந்த வகையில் அசோகமித்திரன் ஒருவரே தமிழ் சினிமாவின் அசல் வாழ்க்கையை எழுத்தாக்கியவர்.
இனி வேண்டியதில்லை என்கிற சிறுகதை தமிழ் சினிமாவின் ஒரு விளிம்பினைக் கதைக்களமாக கொண்டிருக்கிறது. அதில் பகைப்புலமாக சினிமா உலகம் வந்துபோகிறது. ஆனால் கதையின் மையக் கரு பெண்மை. ஆண் பெண் உறவின் புதிர் தன்மையைப் பேசும் கதை.
சந்தரும் சுஜாதாவும் காதலர்கள். டெல்லியில் நாடகப் பள்ளியில் நடிப்புக்கலையில் பட்டயப்படிப்பு படிக்கும் போது இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டு நாளடைவில் அது காதல் என்கிற புள்ளிக்கு வந்துவிடுகிறது. சென்னையில் மூன்றாண்டுகளாக ஒரு நாடக பயிலரங்கில் பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தின் நிதி உதவியின் அடிப்படையில் செயல்பட்டு வரும் பள்ளி அது. ஒரு வாரத்தில் நான்கு வேலைநாட்கள். அதுவும் மாலையில் மட்டுமே செயல்படக்கூடியது. பத்துப்பதினைந்து மாணவர்கள் நாடகக் கலையில் தேர்ச்சி அடையும் நோக்கத்தோடு அங்கே பயின்று வருகிறார்கள். அரசாங்கத்தின் நிதி ஆதாரம் இருப்பதால் குறைந்த பட்ச ஊதியம் என்றாலும் அது நிரந்தரமானது. ஒன்றாம்தேதியில் தவறாமல் கிடைத்துவருவது. அந்தப் பள்ளியில் உள்ள சிக்கல் அங்கே புதிதாக தேர்வு செய்யப்பட்டு சேர்மனாக வந்திருக்கும் ஒரு பெண்மணி. அவருக்கு நாடகக்கலையில் அரிச்சுவடி கூட தெரிவதில்லை. நடிப்பினை சொல்லித்தரும் சந்தரையும், சுஜாதாவையும் சகல காரியங்களுக்கும் பயன்படுத்துகிறார். அவர்களை அப்பள்ளிக்கு வருகைதரும் கெஸ்ட் புரபசருக்கு எடுபிடி வேலைகள் பார்க்கும் நிலைக்கும் ஆளாக்குகிறார். சிறப்பு வருகைதரு பேராசியர்களுக்கும் நடிப்புக்கலைக்கும் பாரதுாரம். அதுதான் அவர்கள் இருவரையும் சங்கடப்படுத்துகிறது. எப்படியாவது அந்தப்பள்ளியில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என்கிற நெருக்கடியை உண்டுபண்ணுகிறது. கலைஞர்கள் அடையும் தத்தளிப்பும் ஆவேசமும்.
சந்தர் டெல்லி நாடகப் பள்ளியில் படித்த போது அந்தாண்டின் முதல் மதிப்பெண் பெற்றவன். நல்ல நடிகனும் கூட. மூன்று ஆண்டுகளாக சென்னையில் அவர்கள் ஒன்றாக வேலை செய்கிறார்கள். ஒன்றாக சுற்றி அலைகிறார்கள். இருவரின் வீட்டிலும் அவர்களின் நட்பு நன்றாகவே தெரிந்து விடுகிறது. சந்தரின் அம்மாவே “அவளை கல்யாணம் செய்து கொண்டுவிட்டு அவளோடு சுற்றித்திரியலாமே?” என்று சொல்கிறார். சந்தருக்கு திருணம் செய்துகொள்ள தைரியம். இல்லை. நிரந்தரமாக வேலை இல்லாதபோது எதை எதையோ தைரியமாக செய்துவிட முடிகிறது. கல்யாணம்தான் செய்து கொள்ள தைரியம் வருவதில்லை. ஆகவே அவர்கள் காதலர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சந்தரின் நடிப்புத்திறமைக்கு ஏற்ற ஒரு வாய்ப்பினை சினிமாவில் ஏற்படுத்தித் தருவது தன்னுடைய தார்மீகக்கடமை என்று சுஜாதா எண்ணிக்கொள்கிறாள். அவளால் முடிந்த அத்தனை வழிகளிலும் அதற்காக முயற்சிகள் செய்கிறாள். அவள் தரும் நெருக்கடிகளே சந்தரை நடிக்க வாய்ப்புத் தேடச் செய்கின்றன. சந்தர் தமிழ் சினிமாவில் நடித்து நல்ல பெயரையும் புகழையும் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை சந்தரை விட சுஜாதாவிற்கு அதிகம். அதற்காக அவள் மேற்கொள்ளும் முயற்சிகள் நம்ப முடியாதவை. தன்னை முற்றாக ஒப்படைத்துவிடும் தியாக வாழ்க்கையை சுஜாதா தன்னியல்பாகக் கொண்டிருக்கிறாள்.
தன் நடிப்பின் மீதோ, தன் கலையின் மீதோ சந்தருக்கு எந்தவித நம்பிக்கையும் உற்காசமும் இருக்கவில்லை. அவன் சதா சலிப்பில் இருக்கிறான். சுஜாதா அழைத்துச் செல்லும் ஒவ்வொரு முறையும் அவனுக்கு நம்பிக்கை வறட்சிதான் பதிலாக கிடைக்கிறது. எத்தனை வாசல்களை ஏறி இறங்கியும் அவனுக்கு வாய்ப்புதான் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் நடிப்பினை அவன் முறையாக கற்றுக்கொண்டதுதான். அகடமிக் பின்புலத்தில் இருந்து நல்ல நடிகன் உருவாக முடியாது என்று சினமா உலகம் நம்புகிறது. சினிமா உலகில் அது ஒரு ஆருடந்தான். ஆயினும் சுஜாதா சோர்ந்துவிடவில்லை. அவளும் சிறந்த நடிகைதான் என்றாலும் அவள் கனவு முழுக்க சந்தரைப் பற்றியது. அவனை வெற்றி பெற்றவனாக ஆக்க வேண்டும் என்பதில் அவள் சமரசம் கொள்வதே இல்லை.
சுஜாதாவின் சித்தப்பா மகன் பிரகாஷ் ராவ் ஒரு சினிமா ஸ்டுடீயோவில் தயாரிப்பு மேலாளர். அவன் மூலமாக சந்தருக்கு சினிமா வாய்ப்புத் தேடி சுஜாதாவும் சந்தரும் முயற்சிக்கிறார்கள். இரண்டு மூன்று முறை அவர்கள் தேடிவந்தபோதெல்லாம் பிரகாஷ் ராவ் அவர்களைச் சந்திப்பதை முடிந்தளவு தவிர்க்கிறான். உள்ளே இருந்துகொண்டே “இல்லை வெளியே சென்றிருக்கிறான்” என்று சொல்லச் சொல்கிறான். அதன் பின்னரே அவன் வெளியே கிளம்பிச் செல்கிறான். இதை சந்தரும் சுஜாதாவும் உறுதி செய்துகொள்கிறார்கள். கதை ஆரம்பிக்கும் தருணமும் அத்தகைய ஒரு சங்கடத்தில்தான்.
அன்றும் அவர்கள் வாய்ப்புத் தேடி பிரகாஷ் ராவ் ஸ்டுடியோ வந்து காத்திருக்கிறார்கள். அவர்கள் வந்த பின்னர்தான் அவன் அன்றும் வெளியே கிளம்பிச்செல்கிறான். அவர்களுக்கு அது சங்கடமாக இருக்கிறது. ஆயினும் அவர்கள் வந்து சென்றதை பிரகாஷ் ராவிற்குத் தெரிவிக்குமாறு ஸ்டுடியோ வரவேற்பாளரிடம் சொல்லிவிட்டு கிளம்ப முயற்சிக்கும்போது ஒரு கார் உள்ளே வருகிறது. அதில் பிரகாஷ் ராவ் இருக்கிறான். அவனும் அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே உள்ளே செல்கிறான். சென்றவன் அவர்கள் இருவரையும் தன் அறைக்கு வருமாறு அழைக்கவும் செய்கிறான்.
பிரகாஷ் ராவின் அறை அடைசலானது. நெருக்கடி மிகுந்தது. சந்தருக்கு அவனைப் பார்க்கும் விதத்தில் அமர வாய்க்கவில்லை. முதுகை வளைத்து அமர்ந்தபடி இருக்கிறான். பிரகாஷ் ராவ் அவர்களை வரவேற்று அறிமுகம் செய்துகொள்கிறான். அவர்கள் அருந்த காபி வரவழைக்கிறான். பிரகாஷ் ராவ் சந்தரை முழுதாகப் பார்க்க தயக்கம் கொள்கிறான். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அன்று அங்கே சூட்டிங் நடந்துகொண்டிருந்த சினிமாவின் புரடக்சன் மேனஜர் சுப்பிரமணியம் வருகிறான். அவனிடம் அவர்கள் இருவரையும் அறிமுகம் செய்து வைக்கிறான் பிரகாஷ் ராவ். அவர்கள் தேடிவந்ததே அந்த சினிமா படத்தின் இயக்குநரைத்தான். அவர் இருக்கிறாரா என்று கேட்கிறான். சுப்பிரமணியம் இயக்குநர் முன்னரே கிளம்பிச் சென்றுவிட்டார் என்கிறான். அவர்களின் படமும் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது என்கிறான். வாய்ப்புத் தேடி வந்திருக்கும் சந்தரைப் பார்த்து “இந்த எழவெடுத்த சினிமா பீல்டுக்கு வரவேண்டாம். இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் வேலையிலேயே இருங்க?” என்று புத்திமதி சொல்கிறான்.
பிரகாஷ் ராவ் சந்தரின் புகைப்படங்களை கேட்டு வாங்குகிறான். அதை உள்ளே வைக்க மேஜை டிராயரை திறக்கும்போதுதான் சந்தருக்குத் தெரிகிறது அவன் ஏன் தன்னைப் பார்ப்பதை தவிர்க்கிறான் என்பதன் காரணம். ஏனெனில் டிராயர் நிறைந்து வழியும் நி லையில் புகைப்படங்கள் குவிந்திருக்கின்றன. அவை அத்தனையும் நடிக்க வாய்ப்புத் தேடி வந்தவை. ஆயினும் அவன் நம்பிக்கை அளிக்கிறான். இரண்டொரு நாட்களில் இயக்குநரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாகச் சொல்கிறான். சந்தரும் சுஜாதாவும் கிளம்பிச் செல்கிறார்கள்.
திரும்பிச் செல்லும் வழியில் சுஜாதாவே அவனுக்கு டிபன் வாங்கிக் கொடுக்கிறாள். அது எப்போதும் உள்ள நடைமுறைதான். அவள் தனக்குக்கிடைக்கும் குறைந்தளவு சம்பளத்தில் தங்கும் விடுதிக்கு மாதக் கட்டணம் கொடுத்து, ஊரில் இருக்கும் பெற்றோருக்கு ஒரு தொகையை மாதந்தோறும் அனுப்பிவிட்டு, மீதமிருக்கும் குறைந்த தொகையைக்கூட சிக்கனம் பாராமல் செலவு செய்யக்கூடியவள். அவர்கள் ஓட்டலில் உணவருந்தும் ஒவ்வொரு முறையும் அவள்தான் பில் கொடுக்கிறாள். பிரதிபலனாக அவள் சந்தரிடம் எதிர்பார்ப்பது அவளின் நைந்த புடவைகளை அவ்வப்போது இஸ்திரி போட்டுத் தருவது. அதையும் அவன் அரைகுறையாகத் தான் செய்வான்.
சில நாள்களில் சந்தருக்காக ஒரு இயக்குநரைச் சந்திக்க அனுமதி வாங்கித் தருகிறான் பிரகாஷ் ராவ். அவன் தன் காரில் அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு இயக்குநர் சித்தார்த்தாவைப் பார்க்க அழைத்துச் செல்கிறான். உண்மையில் அன்று சந்தர் மட்டுமே செல்வதாக இருந்த நிலையில் சுஜாதாவை இரவு எட்டுமணிக்கு மேல் தனியாக அனுப்ப மனமின்றி பிரகாஷ் ராவ் தன் காரில் ஏற்றிக்கொள்கிறான்.
இயக்குநர் தங்கியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் கார் பார்க்கிங்கில் சுஜாதாவைத் தனியே இருக்க சம்மதிக்காமல் அவளுடன் இயக்குநரின் அறைக்குச் செல்கிறார்கள். சித்தார்த்தா கதவைத் திறந்து அவர்களை உள்ளே அழைத்து அமரச் செய்கிறான். பிரகாஷ் ராவ் அவர்கள் இருவரையும் அறிமும் செய்து வைக்கிறான். சந்தருக்குத்தான் தான் வாய்ப்புத் தேடி வந்த விவரத்தையும் சொல்கிறான். யதேச்சையாக அங்கே ஒரு அதிசயம் நடக்கிறது. சுஜாதா பெயரைக் கேட்டதும் இயக்குநருக்கு அவளை எங்கோ பார்த்த நினைவு வருகிறது. டெல்லி இன்ஸ்ட்டியுட்டில் படித்தவள் என்றதும் உறுதி செய்து கொள்கிறான். அவள்தான் சித்தார்த்தா இரண்டு ஆண்டுகளாக தேடிக்கொண்டிருந்த பெண். மிருச்ச கடிகா நாடகத்தில் வசந்த சேனாவாக நடித்தவள். அவன் மனதைக் கொள்ளை கொண்ட நடிகை. எதிர்பாராமல் அமைந்த அக்கணத்தில் அவன் அவளைத் தன்னுடைய படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆட்சேபனை உள்ளதா? என்று கேட்டு ஆச்சரியப்படுத்துகிறான்.
சுஜாதா இதை எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற எண்ணமும் இருக்கவில்லை. அவள் ஏக்கமெல்லாம் சந்தரை நடிகனாக்கிப் பார்க்க வேண்டும் என்பதுதான். அவள் தயக்கம் கொள்கிறாள். இயக்குநரும் உடனே முடிவு சொல்லிவிட வேண்டாம் இரண்டொரு நாட்கள் யோசித்து முடிவு சொன்னால் போதும் என்கிறான். பிரகாஷ் ராவ் மூலம் அந்த வருகையின் நோக்கமே சந்தருக்கு சினிமாவில் நடிக்க ஒரு வாய்ப்பு தேடித்தான் என்பதை குறிப்பால் உணர்த்தவும் செய்கிறாள் சுஜாதா. அந்த சினிமாவில் கதாநாயகனாக ஏற்கனவே ஒருவரைத் தேர்வு செய்துவிட்டதால் அடுத்து சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தருவதாகச் சொல்கிறான் சித்தார்த்தா.
பிரகாஷ்ராவ் அவர்கள் இருவரையும் தன் காரில் ஏற்றிக்கொள்கிறான். சுஜாதாவை அவளுடைய விடுதியில் கொண்டுவந்து இறக்கிவிடுவதாகச் சொல்கிறான். அவள்தான் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. கடற்கரைக்குச் செல்லலாம் என்கிறாள்.
மணி இரவு பத்திற்கும் மேல் இருக்கும். சந்தரின் வீட்டருகே அவர்கள் இருவரும் இறங்கிக்கொள்கிறார்கள். சந்தரின் முகத்தில் உற்சாகமே இல்லை. அவள் அவனைப் பின் தொடர்ந்து ஓட வேண்டி இருக்கிறது. சந்தர் அவளுக்காக நிதானம் கொள்ளாமல் விடுவிடுவென்று வீட்டை நோக்கி ஓடுகிறான். சுஜாதா ஓடிச் சென்று அவனை இடைமறித்து “தன் மேல் என்ன கோபம்?” என்று கேட்கிறாள். அவனோ எரிந்து விழுகிறான்.
“என்ன நடுத்தெருவில் இருந்துகொண்டு கூப்பாடு போடுகிறாய்? நீ படித்தவளா? என்று கேட்கிறான்.
அவள் அவனை நெருங்குவதற்குள் அவன் வீட்டை அடைந்து கதவைத் தட்டுகிறான். சந்தரின் தங்கை கதவைத் திறந்த உடன் உள்ளே பாய்ந்து கதவைச் சாத்துகிறான். அவனின் தங்கையோ தெருவில் சுஜாதா வருவதைப் பார்த்துவிடுகிறாள். அவளும் உள்ளே வரட்டுமே என்று காத்திருக்கிறாள். ஆனால் சந்தர் அதற்கு அனுமதிக்காமல் வாசல் கதவை அறைந்து சாத்துகிறான். அவனுக்கு உள்ளே நடுக்கந்தான். சிறிது நேரம்கழித்து கதவை மெதுவாகத் திறந்து வெளியே எட்டிப்பார்க்கிறான். சுஜாதா சந்தில் இல்லை. அவள் விடுதிக்குத் திரும்ப மின்சார ரயில் நிலையத்திற்கு சென்றிருப்பாள். பதினோரு மணி என்றாலும் அவளுக்கு மின்சார ரயில் இருக்கும். அவள் அறைக்குத் திரும்பிய பின்னர் தனிமையில் கண்ணீர் விட்டு அழுவாள். அவளை அவன் மீண்டும் நடுத்தெருவில் நிற்க வைத்து சங்கப்படுத்திவிட்டான் என்று எண்ணி குற்ற உணர்ச்சியில் நடுங்கிப் போகிறான். ஆனாலும் அவனுக்கு அது விடுதலையாக இருக்கிறது. அவன் இனிமேல் புடவையை இஸ்திரிப்போட வேண்டிய தேவை இருக்காது என்று ஆறுதல் அடைந்தான் என்பதாக கதையை முடிக்கிறார் அசோகமித்திரன்.
என் பாத்திரங்களில் எனக்குப் பிடித்தது என்கிற கட்டுரையில் அசோகமித்திரன் இனி தேவையில்லை சுஜாதாவைத்தான் சொல்கிறார்.
ஒரு பெண்ணின் அளக்கவியலா நுணுக்கங்களையும் திடத்தையும் சிக்கல்களையும் ஓரளவாவது எனக்கே தெளிவு படுத்திய கதை இது என்கிறார்.
அன்று நடந்து முடிந்த காதல் முறிவு இருவருக்குமே நல்லது என்கிறார் அசோகமித்திரன். ஒருவிதத்தில் இருவரின் வளர்ச்சிக்கும் தடையாக இருந்தது அவர்களின் காதல்தான். அதுதான் சுஜாதாவின் வளர்ச்சியை மட்டுப்படுத்தியது. அவளுக்கும் அவள் நடிப்புக் கற்றுத்தரும் சேர்மனுக்குமான நல்ல உறவு ஏற்படுவதை தடுத்தது. சந்தரின் பொருட்டுத்தான் அவள் தன் ஓய்வு நேரத்தில் பெரும்பகுதியை அவனுக்கு வாய்ப்புத் தேடி அலைவதில் செலவழிக்கச் செய்தது. செலவுகள் போக மீந்த சிறிய தொகையையும் அவனுக்காக ஓட்டல்களில் பில்கொடுக்கத் துரண்டியது. இனி அவள் நடிகையாக மாறத் தடையில்லை. மூன்றே மாதங்களில் அவள் நாடறியும் சிறந்த நடிகை என்ற புகழினை அடைந்துவிடலாம். மேலே மேலே பறக்கத் தடையில்லை.
சந்தரின் மனச் சிக்கல்கள் வெளிப்படையாக சொல்லப்படவில்லை என்றாலும் வாசக ஊகங்களாக அதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இயக்குநர் சித்தார்த்தாவைப் பற்றிய வர்ணணையில் அவன் படத்தில் நடித்த கதாநாயகிகள் எவர் என்றாலும் படப்பிடிப்பு நடக்கும் நாட்கள் வீடு, உறவு, கணவன், பெற்றோர் என அனைத்திலும் இருந்து விலகி முழுக்க அவனுடனே அப்பிக் கிடப்பார்கள் என்ற சித்தரிப்பு வருகிறது. அதேபோல கல்லிற்கு சேலை கட்டினாலும் உற்றுப்பார்ப்பவன் என்கிற நினைவும் அவனைக் குறித்து சொல்லப்படுகிறது. அவன் படத்தில் கதாநாயகியாக சுஜாதா நடிக்க ஒத்துக்கொண்டால் என்ன நடக்கும் என்பதை சந்தரால் கற்பனை செய்து கொள்ள முடிகிறது. அதுதான் அன்றிரவு அவளை நடுத்தெருவில் அவன் கைவிடக் காரணமா?
மற்றொரு கோணமும் திறந்து கிடக்கிறது. கலைஞர்களுக்குள் புதைந்து கிடக்கும் ஆற்றாமையும் பொறாமையும். வாய்ப்புத் தேடி அலைந்த போதும் தனக்குக்கிடைக்காத ஒரு நல்வாய்ப்பு சுஜாதாவிற்கு அமைந்ததை எதிர்கொள்ள முடியாமல் சந்தர் படும் அவஸ்தை இக்கதையின் முக்கியப் புள்ளி. எத்தனை நெருக்கமான உறவுகள் என்றாலும் பொறாமை கொள்ளும் கணங்கள் பிரிவிற்கு காரணமாக அமைந்துவிடக்கூடும்.
சுஜாதாவின் பாத்திர வார்ப்பு தனித்துவமானது. அவள் பெண்மையின் மகத்துவத்தை கொண்டிருப்பவள். எதிர்பார்ப்பின்றி தன்னை ஒரு காதலுக்கு அர்ப்பணிக்கத் துணிந்தவள். அவளின் பெண்மைக்கு சிறுமை நேர்ந்த போது பொறுத்துக்கொள்ளாதவளும் கூட.
காதல் சுரண்டலின் ஊற்றுமுகமாக இருக்கிறது என்கிற பார்வையும் இக்கதையில் துலங்கி நிற்கிறது.
