நுண்ணுணர்வின் நிறப்பிரிகை -சாரு நிவேதிதாவின் சமீபத்திய இரு நாவல்களை முன்வைத்து

பிறழ்வெழுத்து என்கிற இலக்கிய வகைப்பாட்டின்கீழ் சாரு நிவேதிதாவின் புனைவெழுத்தினை ஜெயமோகன் வகைப்படுத்துகிறார். தமிழில் பிறழ்வெழுத்தின் மிகச்சிறந்த முன்மாதிரியாக சாரு ஒருவரே தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருக்கிறார்.

சாருவின் புனைவுலகத்தை புரிந்துகொள்ள சில முன் தயாரிப்புகள் அவசியம். எளிய வாசக மனம் ஏற்கனவே எழுதப்பட்டுள்ள புனைவு அனுபவங்களை எதிர்நோக்கி சாருநிவேதிதாவின் நாவல்களை வாசிக்க நேரிடும் போது முதலில் ஏற்படுவது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.  நவீனத்துவம் முற்றாக ஆக்கிரமித்துள்ள ஒரு நுாற்றாண்டு புனைவு வரலாறு தமிழ் மொழிக்கு உண்டு. ஆகச்சிறந்த படைப்பாளிகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளவர்களில் மிகுதியும் நவீனத்துவர்களே.  நவீனத்துவம் கொண்டுள்ள படைப்புக்குணங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட இயல்புகளைக் கொண்டிருப்பது சாருவின் எழுத்து. ஆகவே ஒரு வாசகர் சாருவின் புனைவுலகத்தை உள்ளபடியே உணர்ந்துகொள்ள சில முன் தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.

சாரு நிவேதிதாவின் இலக்கிய ஆளுமையை அறிந்து கொள்ள மிகச்சிறந்த வழி அவரின் இரண்டு நேர்காணல்கள் தொகுதிகளான ஒழுங்கின்மையின் வெறியாட்டம் மற்றும்  அந்நியனுடன் ஓர் உரையாடல் என்கிற நுாற்களை வாசித்தாலே போதுமானது.

தமிழில் பின்நவீனத்துப்பாணியிலான படைப்பாளிகளில் முதன்மையானவர் சாரு நிவேதிதா. சாருவின் புனைவுகளுக்கு முன்மாதிரி தமிழில் இல்லை. புதுமைப்பித்தன்,  அசோகமித்திரன், நகுலன், ப.சிங்காரம், கோபி கிருஷ்ணன் என முன்னோடிகளில் அவரின் வேர்களைக்காணலாம். மிகக்குறைந்தளவே அவையும் உள்ளன. மற்றொரு பின்நவீனத்துவப்                படைப்பாளியான ரமேஷ்  பிரேதனை நாம் நினைவில் கொள்ளலாம். ஆயினும் சாரு நிவேதிதா தனித்த பாட்டையில் தன்னுடைய பயணத்தை கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இடைவிடாமல் மேற்கொண்டிருப்பவர். தொண்ணுாறுகளில் தமிழில் வெடித்துக்கிளம்பிய பின் நவீனத்துவ அலையை வெற்றிகரமான சிந்தனை முறையாக மாற்றியவர்களில் சாரு நிவேதிதாவிற்கு தனித்த இடம் உண்டு.  தமிழவன், எம்.ஜி.சுரேஸ், எம்.டி.முத்துக்குமாரசாமி போன்றோரின் பங்களிப்புகளை விட அசலான சாதனையாக சாருவின் தொடர்ந்த படைப்புச் செயல்பாடினை நாம் இணங்காண வேண்டும். தமிழ் இலக்கிய வரலாற்றில் சாருவின் இடம் இந்த வகையில் தவிர்க்க இயலாத ஒன்று.

சாரு நிவேதிதா இதுவரை பத்து நாவல்கள் எழுதியுள்ளார். அவை முறையே எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்ஸி பனியனும், ஸீரோ டிகிரி, ராஸ லீலா, காமரூப கதைகள், தேகம், எக்ஸைல், நான்தான் ஔரங்ஸேப், அன்பு ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு , பெட்டியோ மற்றும் கடைசி நாவலான ஜோடிப்புறாவை எங்கே காணோம்? கூடவே ஐம்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைத் தொகுதிகளும் இரண்டு நாடகங்களும், மூன்று கவிதைத்தொகுதிகளும், ஐரோப்பிய சினிமா குறித்த தனித்த பார்வைகள்  கொண்ட கட்டுரைத் தொகுப்புகளும் உள்ளடங்கும்.

சாரு நிவேதிதாவின் புனைவுலகினை சேதாரங்கள் இன்றி உள்கிரகித்துக் கொள்ள சில புரிதல்கள் வழிகாட்டி கூட்டிச்செல்லக்கூடும். சாருநிவேதிதா அவரின் புனைவுலகத்தை சிறப்பாக எதிர்கொள்ளவது எப்படி என்பது குறித்து விரிவாக எழுதியுள்ளார்.  பின்நவீனத்துவம் ஓர் அறிக்கை என்கிற முன்னுரையில் பின்வருமாறு வழிகாட்டுகிறார்.

”ஒரு பிரதி எழுதப்பட்டவுடனேயே அதை எழுதிய ஆசிரியருக்கோ அல்லது உண்மையான வாழ்க்கைக்கோ சொந்தமானதல்ல என்று ஆகி விடுகிறது. அர்த்தம் என்பது மொழியின் அமைப்பு ( ), வாசகரின் அர்த்த உருவாக்கம் மற்றும் புரிந்து கொள்ளல் ஆகியவற்றின் மூலமாக உருவாகிறது. பிரதியை எதார்த்த வாழ்க்கையோடு பொருத்திப் பார்ப்பதன் மூலமாக அல்ல.  எனவே ஒரு கற்பனையான கதாபாத்திரத்தை நிஜமான மனிதருடன் அடையாளப்படுத்துவது  —ஆகத்தான் இருக்க  முடியுமே தவிர அது பிரதியின் உண்மை அல்ல. அப்படிப்பட்ட வாசக அத்துமீறலுக்கு பிரதியோ, பிரதியை உருவாக்கிய எழுத்தாளரோ பொறுப்பாக முடியாது.

சாருவின் புனைவுலகு முழுக்க முழுக்க அவரின் ஒற்றை உலகத்தைச் சார்ந்தது. நாகப்பட்டிணத்தில் கழிந்த பால்யகாலம், அரசாங்க வேலைகளை அடைந்து அல்லற்பட்ட கோலம், டில்லியில் தன்னை முற்றாக கலைகளுக்காக அர்ப்பணித்துக் கற்றுக்கொண்ட பித்தேறிய காலம், ஒரு எழுத்தாளனாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் பொருட்டு பார்த்து வந்த அரசாங்க வேலையை உதறித்தள்ளி முழுநேர படைப்பாளியாக செயல்பட்டு வரும் சமகாலம் என்பதுதான் நான் குறிப்பிடும் அவரின் தனித்த ஒற்றை உலகம். அவரின் புனைவுலகின் தனித்த அந்த ஒற்றை உலகத்தை அலைந்து திரிபவனின் அழகியல் என்று வரையறை செய்யலாம். சாருவின் நாவல்கள் அனைத்தும் வாசிப்பு இன்பம் அளிப்பதை முதன்மையாக கொண்டுள்ளன. நான்தான் ஔரங்கஸேப் என்கிற நாவலைத் தவிர்த்தால் பிற ஒன்பது நாவல்களும் ஒன்றிற்குள் ஒன்றாக ஊடாடும் தன்மை கொண்டுள்ளன. ஒரே புனைவுலகத்தின் பல்வேறு பகைப்புலங்களின் வரிந்த கதையாடல்கள் என்று அவற்றைத் தொகுத்துவிடலாம். சூர்யா, பெருமாள், கொக்கரக்கோ என்று பெயர்கள் மாறுபட்டாலும் மூன்று கதாப்பாத்திரங்களும் ஒன்றை ஒன்று பிரதி செய்துகொள்கின்றன. ஒரு எழுத்தாளன் தன்னுடைய வாசகர்களுடன் மேற்கொள்ளும் உறவாடல்களும், எழுத்தாளன் தன்னுடைய குடும்ப உறவினர்களிடம் எதிர்கொள்ளும் சங்கடங்களும் என்ற இரண்டு வகைமைகளுக்குள் அவரின் அத்தனைப் படைப்புகளும் மையம் கொண்டிருக்கின்றன. நவீன தமிழ் இலக்கியத்தில் அவரின் இலக்கியப்பங்களிப்பை நிராகரிப்பவர்களின் மீது அவர் கொள்ளும் சீற்றமும் ஒவ்வாமைகளும், ஒரு எழுத்தாளனாக எழுத்தை பிழைப்பு உபாயமாக தேர்வு செய்து வாழ நேரிட்டதின் அவலங்களும்  அவரின் நாவல்களில் மீண்டும் மீண்டும் பேசுபொருட்களாக உள்ளன. இது ஒரு வகையில் தேய்வழக்கான புனைவுலகமாக ஒரு வாசகனுக்கு தோன்றக்கூடும்.

 தமிழ் மொழியின் பெயரால் இங்கே நடக்கும் பிணத்தைக் கொண்டாடும் மனோநிலையை கடுமையாக நிராகரிப்பதே சாருவின் இருப்பாக இருக்கிறது. அவரின் இருப்பை கண்டுகொள்ளாமல் சினிமா போன்ற வெகுஜன ஊடகங்களால் மதிமயங்கிக்கிடக்கும் தமிழ்ச் சமூகத்தின் மீதான கடும் விமர்சனம் எனவும் அவரின் சீற்றங்களை நாம் கருத வேண்டியுள்ளது. அவரின் நாவல்களில் கட்டுதிட்டமான கதைக்களங்கள் இருப்பதில்லை. தொடர்ச்சியாக ஒரு வாழ்க்கையின் சித்திரிப்புகளோ, ஒரு கதாப்பாத்திரத்தின் வளர்சிதை மாற்றங்களோ சொல்லப்பட்டிருப்பதில்லை. சிதறுண்ட ஒரு மனதின் அலைபாய்தலைப்போல அவரின் புனைவுலகமும் ஒன்றுக்கொன்று தொடர்பற்று விரிந்து பரந்து சிதறுண்டு கிடக்கிறது. இது வாசகர்களை சலிப்புறச் செய்யலாம்.  ஏமாற்றும் தன்மை கொண்ட புனைவுப்பாவனை. அவரின் நாவல்கள் அனைத்தும் இந்த பாவனையை கட்டாயமாக்கியுள்ளன. அவரின் தனித்த புனைவு அழகியலாக காணப்படும் இத்தன்மையே அவரை முழுதாக எதிர்கொள்வதில் உள்ள தடையாகவும் வாசக மனம் உணரக்கூடும்.

சாரு  நிவேதிதா  ”நாவல் என்ற எழுத்து வடிவம் வாழ்க்கையின் கண்ணாடி அல்ல, அது ஒரு மொழியியல் நிகழ்வு மட்டுமே ” என்கிறார். மேலும் வாசகர்கள் கதாப்பாத்திரங்களை நிஜ மனிதர்களுடன் ஒப்பிட்டுப்பார்க்க விரும்பினால் அவர்கள் ரொலாந் பார்த் சொல்வது போல படு சராசரி வாசகர்களே ஆவர் என்று விமர்சிக்கிறார்.

பின்நவீனத்துவப் பிரதிகள் எதார்த்தத்தை பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை. பிரதிபலிப்பதும் இல்லை. அவை எதார்த்தத்தை ஸிமுலெட் செய்கின்றன.  அப்படியானால் ஸிமுலேட் என்றால் என்ன? என்கிற கேள்விக்கு ஸிமுலேசன் என்பது எதார்த்தத்தை இமிடேட் செய்வது மட்டுமல்ல- அது எதார்த்தத்தை முழுமையாக மாற்றி, அதற்குப் பதிலாக மாடல்ஸ் அல்லது குறியீடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய எதார்த்தத்தை உருவாக்குகிறது. எதார்த்தம் பிரதியாக உருமாறும்போது வேறு சில மாயாஜாலங்கள் நிகழ்கின்றன. எதார்த்தத்துக்கு அங்கே முகமூடி அணிவிக்கப்படுகிறது. எதா்த்தம் குலைக்கப்படுகிறது. எதார்த்தத்திற்கு சம்பந்தமே இல்லாமல் அது ஒரு ஹைப்பர் ரியாலிட்டியாக மாறிவிடுகிறது. கதாப்பாத்திரம் வாழ்க்கையிலிருந்து பிரதி செய்யப்படவில்லை. வாழ்க்கைதான் கதாப்பாத்திரத்தைப் போல் தோன்றுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்கிறார் சாரு நிவேதிதா.

சாரு நிவேதிதாவின் எழுத்துக்களை புரிந்துகொள்ள வாசகரின்  கடமையாக சிலவற்றை அவர் முன்வைத்துள்ளார்.  பின் நவீனத்துவப் பிரதி தன் வாசகரிடம் அறம் சார்ந்த கடமையைக் கோருகிறது என்கிறார்.  மேலும் ஊடகங்களும் சினிமாவும் அரசியலும் மற்றும் வாழ்வின் சகல தரப்பும் மனிதர்களிடம் எட்டிப் பார்க்கும் ஆர்வத்தைத் துாண்டி விட்டிருப்பதால்தான் இலக்கிய வாசகர்களும் கூட இலக்கியப் பிரதிகளை கிசுகிசுக்களாகவும், நிஜ வாழ்வின் பிரதிபலிப்பாகவும் காணும் அவலம் நேர்கிறது என்கிறார்.

முடிவாக அவரின் புனைவுகளை இப்படி தொகுத்துக்கொள்ளலாம். அவரே சொல்களின் ஊடாக.  ”வாழ்க்கை குழப்பமாகவும், சிதறுண்டபடியும், ஒரு அமைப்புக்குள் சிக்காததாகவும்  தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் பிரதி என்பது எழுத்தாளரால் கட்டமைக்கப்படுகிறது. செப்பனிடப்படுகிறது. ஒரு அமைப்புக்குள் கொண்டு வரப்படுகிறது. ஒவ்வொரு வார்த்தை குறித்தும் எழுத்தாளருக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அனுபவத்திலிருந்து எடுத்தாலும், புனைவெழுத்து என்பது வாழ்க்கையை ஒரு வடிவத்துக்குள் கொண்டு வருகிறது. அனுபவம் மொழியினால் அழிக்கப்பட்டு, மீண்டும் கட்டமைக்கப்பட்டு அதன் பின்பே பிரதியாக மாறுகிறது”.

ஹைப்பர் ரியாலிட்டியை ரியாலிட்டியாகப் பார்ப்பது பெரும் சமூகச் சீரழிவை ஏற்படுத்தக் கூடியது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் சாரு.  ஒரு மாயவலையில் சிக்கும் ஒரு மனிதன் சமூகத்திலிருந்து அந்நியமாகி, மாயையைத் துரத்திக்கொண்டு ஓடுகிறான். இதில்  நிஜமான அனுபவமும் காணாமல் போகிறது. ஒரு சினிமா ஹீரோ ஹீரோயினுக்கு முத்தம் கொடுக்கும் காட்சியில் ரசிகர்கள் விசில் அடித்துப் பரவசம் அடைவதை இதற்கு உதாரணமாகச் சொல்கிறார். இலக்கியத்தில் ஹைப்பர் ரியாலிட்டியை சிலாகிப்பதன் மூலம் சமூகத் துயரத்திலிருந்து விடுபடுகிறோம். ஸிமுலேஷன்களால் நிரம்பிய உலகில் நாம் பயணிப்பதற்கு சாருவின் பின்நவீனத்துவ வாசிப்பு நமக்கு பயிற்சி அளிக்கிறது. எல்லா எதார்த்தங்களும் புனைவுகளே என்பதை அவை நினைவூட்டுகிறது.

2.

அன்பு ஒரு பின்நவீனத்துவவாதியின் மறு சீராய்வு மனுவும், ஜோடிப்புறாவை எங்கே காணோம்? என்ற இரண்டு நாவல்களும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை.  கண்ணாயிரம் பெருமாள் என்கிற எழுத்தாளனுக்கும் அவனுடைய மனைவியான வைதேகிக்கும் உள்ள உறவுச்சஞ்சலங்களே இரு நாவல்களின் மைய இழையாக உள்ளது. அன்பு ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு நாவலில் அன்பின் பெயரால் ஒரு நுண்ணுணர்வு கொண்ட படைப்பு மனத்தை அவருடைய சுற்றமும் நட்பும் கையளிக்கும் நெருக்கடிகளை மிகச் சிறிய சம்பவங்களின் விரிந்த சித்தரிப்புகளின் மூலம் நிகழ்த்திக்காட்டுகிறார்.  நுண்ணோக்கியின் ஊடாக காண நேரிடும் கிருமிகளின் இருப்பு ஏற்படுத்தும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் இவை ஏற்படுத்த தவறுவதில்லை. குடும்ப உறவுகள் அன்பின் பெயரால் ஒவ்வொருவரையும் வதைக்கின்றன. தாள முடியாத வன்முறைகளின் ஊற்றுமுகமாக அன்பும் அக்கறையும் இருக்கிறது.  ஒவ்வொருவரும் தன் செருப்புகளில் நின்று யோசித்தால் மட்டும் போதாது பிறரின் காலணிகளில் நின்றும் யோசிக்க வேண்டும் என்பதைச் சுட்டுக்காட்டுகிறது.  பிறரின் இருப்பை அறிந்து கொள்ளாமல் வலிந்து திணக்கப்படும் அன்பே உறவுகளின் வன்முறையாக உள்ளது என்பதை இந்நாவலின் நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

ஜோப்புறாவை எங்கே காணும் நாவலில் வைதேகியின் கோணம் முன்வைக்கப்படுகிறது. சேர்ந்து வாழ தகுதியே இல்லாத ஒரு எழுத்தாளனோடு அடுத்த பிறவியிலும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஏங்குகிற காதலியின் இருப்பை நமக்கு உணர்த்துகிறது. அன்பு நாவலில் எதிர் மறைக்கோணத்தில் விவரிக்கப்பட்ட வைதேகியின் உடனிருப்பு ஜோடிப்புறாவை எங்கே காணோம் நாவலில் காதலின் உன்மத்த இருப்பாக உணர்த்தப்பட்டுள்ளது.

சாரு நிவேதிதாவின் நாவல்களை நாம் ஒரு ஒற்றை வரியிலான கதைகளாகச் சொல்லிவிட முடிவதில்லை. அவை இறந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையே ஊடாடித் திரியும் அலைபாய்தல்களைத் தன்னியல்பாக கொண்டிருக்கின்றன.  நுண்ணுணர்வும் தன்னுணர்வும் மிகுந்த ஒரு படைப்பு மனத்தின் தத்தளிப்புகள். பிறர் மீதான புரிதலின்மை ஏற்படுத்தும் வன்முறைச் சித்திரங்கள்.  குடும்ப உறவுகளைப் போலவே எழுத்தாள வாசகர் உறவுகளும் ரணப்படுத்துகின்றன. சுரண்டலும், காயப்படுத்தும் தன்மையும் எல்லா உறவுகளின் நிழலாக பின்தொடர்கின்றன.  மனித இருப்பே சதா சங்கடங்கள் நிறைந்தது என்பதை இரு நாவல்களும் பிரதியாக்கம் செய்துள்ளன.

ஓஷோவின் முக்கிய புனைவுப்பாத்திரமான ஸோர்பாவில் இருந்து புத்தா என்கிற பாத்திரத்தை சாருவின் புனைவுலகத்திற்கும் போட்டுப் பார்க்கலாம். அப்படியே அச்சு அசலாக அவை பொருந்திப்போகின்றன. பெண்ணுடல்கள் மீதான பெரும்பித்து, கட்டற்ற குடியும் கேளிக்கையும், வாழ்க்கை என்பதே உண்பதும் பெண்களுடன் படுத்து உறங்குவதும் என்கிற கொண்டாட்ட நோக்கு கூடவே தன்னை உற்றுநோக்கும் மையம் கொண்டுள்ள தன்னுணர்வு என்று சாரு நிவேதிதாவின் கதாமண்டலம் விரிந்துள்ளது.

சமகாலத்தன்மை என்பது சாரு நிவேதிதாவின் தனித்த உலகமாக உள்ளது. பாலியல் மீறல்கள் சார்ந்த பல்வேறு கதைச்சித்தரிப்புகளின் ஊடாக வாசக மனம் தமிழ்ச் சமூகத்தை புரிந்து கொள்ள முன் அனுபவங்களை பெற்றுக்கொள்கிறது. அதன் பிறகு வாசக மனத்திற்கு அதிர்ச்சி அடையும் அவசியம் ஏற்படுவதில்லை. சாரு நிவேதிதாவின் புனைவு உலகத்தில் அலைந்து திரிவது தமிழில் சொல்லப்படாத குற்றப் பிரதேசங்களில் தீர்த்த யாத்திரை  செல்வதைப் போன்றதுதான்.

பிற உயிர்களிடத்தில்  அதுவும் குறிப்பாக பூனைகள் நாய்கள் மீதான ஜீவகாருண்யத்தை கொண்டிருக்கின்றன சாருவின் நாவல்கள் அனைத்தும்.  மேற்குறிப்பிட்டுள்ள இரண்டு நாவல்களிலும் பூனைகளும் நாய்களும் மனிதர்களோடு கொள்ளும் உறவுச்சித்திரங்கள் அநேகம் இடங்களில் வந்து போகின்றன.

தமிழின் சமகாலப் படைப்பாளிகளில் சாரு நிவேதிதா முதன்மையானவர். பின்நவீனத்துப் பாணியிலான படைப்பாளிகளில் அவரே முதன்மையானவர். அந்த வகையில் அன்பு ஒரு பின்நவீனத்துவாதியின்  மறுசீராய்வு மனுவும், ஜோப்புறாவை எங்கே காணோம்? என்கிற அவரின் இரண்டு நாவல்களும் முக்கியப் படைப்புகள்.  அவற்றை வாசிப்பதன் மூலம் நவீன தமிழ்இலக்கிய உலகத்தினை அறிந்துகொள்ளவும், உலக இலக்கியத்தின் குறுவெட்டுத்  தோற்றங்களை அறிமுகம் செய்துகொள்ளவும் வாய்க்கும். வாசிப்பு இன்பம் என்பதும் கண்டடைதலின் பரவசம் என்பதும் உறுதியளிக்கப்பட்டுள்ள பிரதிகள்.

3.

ஜோடிப்புறாவை எங்கே காணோம்?

ஒரு அமர்வில் வாசித்துவிட முடிகிற நாவல். சாருவின் எழுத்து மாயாஜாலம் நிறைந்தது. உண்மையைத்தான் சொல்கிறேன். என் மேல் விழுந்து அழுத்தி மண்ணுக்குள் புதைக்கும் மத்தியதர மனநிலையை அல்லது கூன்விழுந்த குமாஸ்தா மனநிலையை உணரச் செய்ய சாரு நிவேதிதாவைத்தான் எப்போதும் வாசிக்க விரும்புகிறேன்.

சாருவின் எழுத்தினை ஒரு சஞ்சாரியின் பயணக்குறிப்புகள் என்றும் வரையறை செய்துகொள்ளலாம். இரண்டு அடுக்குள் உடையது அவருடைய புனைவு உலகம். ஒன்று அனுபவங்களின் வண்டல். ஒரு எழுத்தாளன் அவன் வாழும் சமூகம். இவற்றின் ஊடாட்டங்களின் வர்ணபேதங்கள். தமிழ்ச் சூழலில் எழுத்தை நம்பி உயிர் வாழ ஆசைப்பட்ட ஒருவனின் விரக்திகளும் சங்கடங்களும். மற்றொன்று பயணங்களின் வழியாக அவன் அடையக்கூடிய புதிய அனுபவங்கள். பயண வழித்துணைகளோடு எழுத்தாளன் மேற்கொள்ளும் உணர்வாட்டங்கள்.

சாரு நிவேதிதாவைப் போல தன் வாழ்வை அப்பட்டமாக பொதுவெளிக்கு அம்பலப்படுத்திய சமகால எழுத்தாளர் வேறு ஒருவரில்லை. அவருடைய நாவல்களுக்கு ஒரு கதைத் தொடர்ச்சி உள்ளது. அவரின் முதல் நாவலான எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்ஸி பனியனும் நாவலில் இருந்து அவருடைய அன்றாடம் எழுத்தில் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. புனைவற்ற அவருடைய எழுத்தும் மிகுதி. புனைவிற்கும் அபுனைவிற்கும் மான இடைவெளி என்பது மிகவும் சல்லிசானது. கட்டுரைகளைத் தொகுத்தால் அவருடைய புதிய நாவல் கிடைத்துவிடும்.

ஜோடிப்புறவை எங்கே காணோம் நாவலும் அவருடைய மற்ற நாவல்களைப் போல வாசிப்புச் சுவாரசியமும் சமகாலத்தன்மையும் பயணக்குறிப்புகளும் அடங்கியதுதான். சாரு நிவேதிதாவின் உலகில் எனக்கு மிக முக்கியமாகப் படுவது ஒரு எழுத்தாளனாக தாக்குப்பிடிக்க அவர் மேற்கொள்ளும் பிரயத்தனங்கள். எத்தனை கைவிடல்கள், எத்தனை நெருக்கடிகள், எத்தனை நுண்ணுணவர்ற தடித்தனங்கள். இவைகளுக்கு மத்தியில் ஒரு நுண்ணுணர்வு கொண்ட மனம் தாக்குப்பிடிப்பதே சவாலானது.

அடுத்த மனிதனே நரகம் என்கிற இருப்பியல் தத்தளப்பினை அவர் நாவல்களின் பிரதான பேசு பொருளாகச் சொல்லலாம். பிறருக்கும் தன்னிலைக்கும் இடையேயான பாரதுாரமான ஒத்திசைவின் அதிர்வுகளைத்தான் அவர் எழுத்தில்  தொடர்ச்சியாகப் பார்க்க முடிகிறது.

அன்பு நாவலின் வேறொரு கோணத்தை இந்தநாவல் பேசுகிறது. கண்ணாயிரம் பெருமாள் என்கிற எழுத்தாளனை அவன் மனைவி வைதேகி எவ்விதம் சகித்துக்கொண்டு இருக்கிறாள் என்கிற கோணம் இந்நாவலில் பேசப்பட்டுள்ளது. எழுத்தாளனின் இருப்பிற்கு இணையாக அவனை ஒரு குடும்ப உறுப்பினராக ஒரு குடும்பம் எவ்விதம் எதிர்கொள்கிறது. அவனுடைய உறவினர்களுக்கு அவன் இருப்பின் அர்த்தம் என்ன என்கிற கேள்விகள் முக்கியத்துவம் அடைகின்றன.

சாருவின் மீது ஒரு அபாண்டமான இலக்கிய அபிப்ராயம் உண்டு. அவர் கிசுகிசு எழுத்தாளர் என்று. உண்மையில் அவருடைய உலகம் கிசு கிசுத் தன்மையால் ஆனது. அதைப்போல இந்திய ஆன்மிகத்தின் ஒரு பகுதியான சார்வாகத்தன்மை சாருவின் புனைவுலகத்தின் தனித்த அடையாளம். காமத்தை அதிகபட்சமாக எழுத்தின் வழியாக சித்திரித்து அதை ஒரு இயல்பான மனநிலைக்குரியதாக மாற்றியதில் சாருவின் புனைவுச்சாத்தியங்கள் முக்கியமானவை. கடும்பாலியல் வறட்சியில் வாடித்தவிக்கும் இந்திய மனங்களுக்கு சாருவின் உலகில் வெளிப்படும் பாலியல் சம்பவங்கள் அட என ஆச்சரியம் அளிப்பதோடு அவரின் மீது மெல்லிய பொறாமையை ஏற்படுத்தக் கூடியவை.

நயோமியினுடனான உன்மத்தக் கூடல். தன்நாதஸ்வரம் இசைக்க மறந்த இயலாமை குறித்த வருத்தம். ஜப்பானின் ஓன்சென் வாழ்க்கை வர்ணனை என்று கண்ணாயிரம் பெருமாள் சுட்டிக்காட்டும் வாழ்க்கைத் தருணங்கள் அபூர்வமானவை.

ஓன்சென் குளியல் ஜப்பானின் கொண்டாட்ட வெளி. ஆண்களும் பெண்களும் நிர்வாணிகளாக அங்கே இளைப்பாறுகிறார்கள். அங்கே கண்ணாயிரம் பெருமாள் ஒன்றைக் கவனிக்கிறான். ஜப்பானியர்களின் நிர்வாணத்தின் வழியே அவன் சென்டையும் மதிப்பீடு அது. ஜப்பானியர்களின் நாதஸ்வரம்பிரமாண்டமான சைஸில் தொங்கிக்கொண்டிருக்கிறது.  அது மட்டுமில்லாமல் அந்த ஜப்பானியர்கள் நாதஸ்வர ஏரியாவை சவரம் செய்திருக்கவில்லை. ஒவ்வொருத்தனுக்கும் ஜடாமுடியாய்த் தொங்கியது ரோமம். அடப்பாவிகளா இத்தனை முடியை வைத்துக்கொண்டு எப்படிடா சாத்தியம் ப்ளோஜாப் என்று கவலைப்படுகிறான் உத்தமத் தமிழ் எழுத்தாளன் அல்லாத கண்ணாயிரம் பெருமாள்.அத்தனை ஜப்பானியப் பெண்களும் ஜப்பானிய ஆண்களின் பெரிய பெரிய நாதஸ்வரத்தால் எந்தப் பயனும் இல்லை என்கிறார்கள் என்கிற அவதானிப்பு வேறு. அதற்கான காரணமாக கட்டாய உழைப்பு இருக்கிறது. சனி ஞாயிறுகளில் குடியில் மூழ்கிக்கிடக்கிறார்கள். கடுமையான உழைப்பினை இவ்வாறாக அவர்கள் ஈடு செய்கிறார்கள். இப்படி சமகால உலகின் ஒரு பார்வைக்கோணம்.

மறுபிரசுரம்- நன்றி- இனிய உதயம் மாத இதழ் ஜீன் 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *