
1.
‘மனிதனைப் பற்றி ஏதாவது சொல்வதாக இருந்தால் மனிதன் மகத்தான சல்லிப்பயல்” என்கிற பிரபலமான அவதானிப்புக்குச் சொந்தக்காரர் ஜி.நாகராஜன். நகை முரணாக இக்கூற்றுக்கு மிகச் சிறந்த உதாரணமும் அவர்தான்.
ஜி.நாகராஜன் நவீன தமிழ் இலக்கியத்தின் அசலான கலகக்காரர். ஆனால் அவருடைய படைப்புகளுக்காக மட்டுமே இன்று தமிழ் வாசகர்களின் நினைவில் நிற்கிறார். தமிழ் நாவல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு படைப்பு ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே நாவல். தமிழில் முதல்முதலாக லும்பன்களின் உலகத்தைப் பற்றி, விளிம்பு நிலை மக்களைப்பற்றி எழுதியவர் என்ற பெருமை ஜி.நாகராஜனுக்கு உண்டு.
இன்று அவருடைய பங்களிப்பாக இரண்டு நாவல்கள் – குறத்தி முடுக்கு. நாளை மற்றுமொரு நாளே- 33 சிறுகதைகள், சில கட்டுரைகளோடு மேலும் சில எழுத்தாக்கங்கள் என்று கிட்டத்தட்ட 650 பக்கங்கள் மட்டுமே வாசிக்கக் கிடைக்கின்றன. 24 சிறுகதைகள் எழுதி இறவாப் புகழ் பெற்ற மௌனியைப் போல, இரண்டு நாவல்கள் படைத்து சிறந்த பத்து தமிழ் நாவல்களின் பட்டியலில் நிரந்தரமாக இடம் பிடித்த ப.சிங்காரம் போல, நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு பெயர் ஜி.நாகராஜனுடையது.
ஜி.நாகராஜனுக்கு மட்டுமே உரிய சிறப்பு ஒன்றைக் குறித்த கட்டுரைதான் இது. நவீன தமிழ் இலக்கியத்தில் வேறு எந்தப் படைப்பாளிக்கும் கிடைத்திராத ஒரு பெருமை. ஒரு படைப்பாளியைப் பற்றி ஐந்து வெவ்வேறு படைப்பாளிகள் சிறுகதைகள் எழுதிய இலக்கிய அதிசயம் ஜி.நாகராஜனுக்கு மட்டுமே உரியது. ஜி.நாகராஜனுடன் பழகிய படைப்பாளிகள் ஐவர் எழுதிய 5 சிறுகதைகள் ஜி.நாகராஜனை இன்றும் இரத்தமும் சதையுமாக அனுபவம் கொள்ளும் சாத்தியத்தைக் கொண்டிருக்கின்றன. எழுத்தாளர் சி. மோகனுக்கு இதற்காக பிரத்யேகமாக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். புதுமைப்பித்தனுக்கோ, பிரமிளுக்கோ, தி.ஜானகிராமனுக்கோ, அசோகமித்திரனுக்கோ, சுந்தர ராமசாமிக்கோ வாய்த்திடாத பெருநிகழ்வு இது.
அசோகமித்திரன் எழுதிய “விரல்”, திலீப்குமாரின் “ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக்காரரும்”, பிரபஞ்சனின் “ஒரு நாள்”, சுந்தர ராமசாமியின் “நண்பர் ஜி.எம்”, மற்றும் சி.மோகன் எழுதிய ”விலகிய கால்கள்” என்பவை ஜி.நாகராஜனை மையப் பாத்திரமாக வைத்து எழுதப்பட்ட ஐந்து தமிழ்ச் சிறுகதைகள். இவ்வைந்து கதைகளும் ஜி.நாகராஜனோடு நேர்ப்பழக்கம் உள்ளவர்களின் சொந்த அனுபங்கள். பெரும்பாலும் அவை ஜி.நாகராஜனின் வெவ்வேறு குணாதிசயங்களைப் பதிவு செய்கின்றன. பித்தனின் பத்து முகங்களை இக்கதைகள் கொண்டுள்ளன. இன்றும் வாசிப்பிற்கு உகந்தவையாக உள்ளன. பிரபஞ்சனின் சிறுகதையை மட்டும் என்னால் தேடிக் கண்டடைய முடியவில்லை. அவருடைய பெருந்தொகுப்பில் ஒரு நாள் சிறுகதை இடம் பெறவில்லை.
மேற்கண்ட ஐந்து சிறுகதைகளைத் தவிர்த்துப் பார்த்தால் ஜி.நாகராஜன் குறித்து ஒரு வாசகர் மேலும் அறிந்து கொள்ள தமிழில் சில பக்கங்களே உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று சுந்தர ராமசாமி எழுதிய ஜி.நாகராஜன் குறித்த நினைவோடை நுால். மிகச்சிறப்பானது. மற்றொன்று சி.மோகன் எழுதிய ஐந்தாறு கட்டுரைகள். அவை சி.மோகன் கட்டுரைகள் என்ற தொகைநுாலிலும், நடைவழி நினைவுகள் என்ற தொகுப்பிலும் உள்ளன. ஜி.நாகராஜனோடு பழகியவர்கள் இன்னும் நிறையப் பேர்கள் எழுதியிருக்கலாம். குறிப்பாக மதுரையில் அவருடன் நெருங்கிப் பழகிய எஸ்.இராமகிருஷ்ணன் (மொழி பெயர்ப்பாளர்). கம்யூனிஷ்ட் கட்சி நண்பர்கள். ஆனால் அவையெல்லாம் கண்டறிந்து தொகுக்கப்படவில்லை.
ஜி.நாகராஜன் 1929 செப்டம்பர் 1 ஆம் தேதி மதுரையில் பிறந்தார். தந்தை கணேச அய்யர். வழக்குரைஞர். பழனியில் வக்கீல் தொழில் பார்த்து வந்தார். ஜி.நாகராஜனுக்கு நான்கு வயதாக இருந்த போது அவரின் அன்னையார் ஒன்பதாவது பேறுகால சிகிச்சையில் மரணமடைகிறார். ஜி. நாகராஜன் மதுரையில் தாய்வழிப் பாட்டி வீட்டில் வளர்கிறார். திருமங்கலத்தில் இருந்த தாய்மாமன் வீட்டில் தங்கி நான்காம் வகுப்பு வரைப் படிக்கிறார். பள்ளி மேற்படிப்பு பழனியில் தந்தையாரின் ஏற்பாட்டில். மதுரைக் கல்லுாரியில் இண்டர்மீடியட். கணிதத்தில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்றதனால் சி.வி.ராமனிடமிருந்து தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார். சிறந்த படிப்பாளி என்கிற பெருமை பால்யத்திலேயே வாய்த்திடுகிறது.
பட்டம் பெற்றதும் காரைக்குடி கல்லுாரியில் டியூட்டர் பணி. பின்னர் சென்னை ஏ.ஜி. அலுவலகத்தில் ஓராண்டு அரசாங்கப் பணி. அங்கு ஒத்துப்போகாமல் வேலையைவிட்டு விலகுகிறார். மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் விரிவுரையாளர். எந்த ஒரு பணியிலும் நீடித்து நிலைக்கும் மன அமைப்பு ஜி.நாகராஜனிடம் காணப்படவில்லை. இக்காலத்தில்தான் அவருக்கு பொதுவுடைமைக் கட்சித் தோழர்களோடு அறிமுகம் ஏற்படுகிறது. நவீன தமிழ் இலக்கியத்தோடு தீவிர பரிச்சயமும் உண்டாகிறது. தந்தையின் வழியாக இயல்பாகவே அவருக்கு வாசிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.
வானமாமலையின் அறிமுகத்தோடு நெல்லையில் தனிப்பயிற்சிக் கல்லுாரியில் ஆசிரியப் பணி. இங்கு இடதுசாரி தோழர்களோடு இணைந்து களப்பணிகளும் போராட்டங்களும் நடத்தியிருக்கிறார். குறத்தி முடுக்கு –டவுண் கல்லத்தி முடுக்கு- என்கிற குறுநாவல் எழுதுவதற்கான அனுபவம் இக்காலகட்டத்தில் தான் அவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு மதுரை திரும்பி மீண்டும் ஒரு தனிப்பயிற்சி கல்லுாரியில் ஆசிரியப்பணி. சுயசாதி அல்லாத ஒருவருடன் முதல் திருமணம். மணமான சில மாதங்களில் மனைவி தீ விபத்தில் இறந்து விடுகிறார். முதல் மனைவியின் தீ விபத்து ஒரு தற்கொலையாக இருக்கலாம் என்றும், அதற்கு ஜி.நாகராஜன் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் ஒரு ஊகம் நிலவி வந்ததாக சுந்தர ராசமாமி தன்னுடைய நினைவோடை நுாலில் தெரிவித்துள்ளார். அக்காவின் ஏற்பாட்டில் இரண்டாவது திருமணம் நடந்து ஆண், பெண் என இரு குழந்தைகள். அவரின் இரண்டாவது மனைவிக்கு பள்ளி ஆசிரியர் உத்தியோகம்.
1957 ஆம் ஆண்டு ஜனசக்தி இதழில் ஜி.நாகராஜனுடைய அணுயுகம் என்கிற சிறுகதை வெளியாவதில் இருந்து இவருடைய படைப்புச் செயல்பாடுகள் ஆரம்பம் ஆயின. தொடர்ந்து இடதுசாரி இதழ்களில் எழுதினார். பித்தன் பட்டறை என்ற பெயரில் சொந்தப் பதிப்பகம் தொடங்கி தன்னுடைய இரு நாவல்களையும், கண்டதும் கேட்டதும் என்கிற முதல் சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார். கடைசி பத்தாண்டுகள் குடியும் கஞ்சா போதையும் அவரை நாடோடி வாழ்க்கையில் அத்து அலைந்து திரியச் செய்துள்ளது. அந்நாட்களில் நண்பர்களைத் தேடிச் சென்று பொருள் உதவி பெற்று வாழ்ந்து வந்தார். கடைசி வரை அவருக்கு நிலையான தங்குமிடம் என்று எதுவும் இருந்ததில்லை.
ஜி.நாகராஜனுக்கு மார்க்சிஸ்ட் கட்சியோடு உறவிருந்து, அறுபதுகளில் கட்சியில் நம்பிக்கை இழப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அரவிந்தர் மீது ஈடுபாடு கொண்டுள்ளார். காந்தியும் அவரைக் கவர்ந்துள்ளார். குடியும் கட்டற்ற பாலியல் நாட்டமும் சரி செய்ய முடியாத நோய்களுக்கு அவரை ஆளாக்கியுள்ளது. பால்வினை நோயும் புற்றுநோயும் நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டு 1981 ஆம் ஆண்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்து, அருகில் யாருமற்ற தனிமையில் மரணமடைந்துள்ளார். இறப்பின்போது அவருடைய சொத்தாக இருந்தவை ஒரு சார்மினார் சிகரெட்டும், கொஞ்சம் கஞ்சாவுந்தான்.

ஜி.நாகராஜனைப் பற்றி எழுதப்பட்டுள்ள ஐந்து கதைகளில் சுந்தர ராமசாமி எழுதிய கதையே சிறப்பானது. ஜி.நாகராஜனுக்குள் இருந்த கலைஞனை அடையாளம் கண்டு கொள்ள உசாத்துணையாக அமையக் கூடியது. ஜி.நாகராஜனின் கனிவான ஒரு பகுதியைக் காட்டிய கதை அது. சுந்தர ராமசாமியின் வெற்றியடைந்த கலைப்படைப்புகளில் ஒன்று.
சுந்தர ராமசாமி தொழில் நிமித்தமாக மதுரைக்கு அடிக்கடி வந்து செல்லக் கூடியவர். அப்படி ஒரு நாள் இரவில் மதுரைக்கு ரயிலில் வந்து இறங்குகிறார். காலேஜ் கபே என்கிற விடுதியில்தான் அவர் அறையெடுப்பது வழக்கம். அதற்கு முன்பு ஜி.நாகராஜனோடு நிறைய மோசமான அனுபவங்கள் அவருக்கு ஏற்பட்டிருக்கின்றன. அதனால் தன் வருகையை அவருக்குத் தெரிவிக்கவில்லை. தெரிந்து விடக்கூடாது என்கிற பயமும் இருந்தது.
ஜி.நாகராஜனோடு மதுரையின் சந்து பொந்துகளில் இரவுகளில் சுற்றித் திரிந்த அனுபவங்கள் நிறைய. அப்போதெல்லாம் ஜி.என். அறிமுகம் செய்து வைக்கும் அம்மாதிரிப் பெண்கள் பிற்பாடு சுந்தர ராமசாமியை நேரில் பார்க்க நேரிடும்போது சிரித்துப் பேசத் தயங்குவதில்லை. அது சுந்தர ராமசாமிக்கு தர்மசங்கடத்தை அளித்தது. மதுரையில் சுந்தர ராமசாமியைத் தெரிந்தவர்கள் அநேகம். அம்மாதிரியான பெண்களோடு நடுத்தெருவில் சுந்தர ராமசாமி பேசிக்கொண்டு நிற்கிறார் என்பது தெரியவந்தால் அவர்கள் வழியாக தன்னுடைய தந்தைக்கும் சங்கதி தெரிந்துவிடும் என்கிற பயம். அவரின் மதுரை வருகையின் நோக்கம் களங்கப்படுத்தப்படும்.
அவர் பயந்த மாதிரியே ஜி.என். அவரை வழியில் கண்டுபிடித்து விடுகிறார். “நீங்க அறைக்குப் போங்க நான் இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லியவாறு இடது கையால் வேட்டி நுனியை ஏந்திப்பிடித்தபடி விறுவிறுவென்று நடந்து செல்கிறார் ஜி.என். அவர் அவ்வாறு நடந்து சென்றால் அதன் அர்த்தம் என்ன என்பது சுந்தர ராமசாமிக்குத் தெரியும். பயந்தவாறு அறைக்குச் சென்று காத்திருக்கிறார். கண் அசந்த நேரத்தில் அவரைத் தட்டி எழுப்புகிறார் ஜி.என். முகம் பளபளத்திருப்பதை கண்டுகொள்கிறார். ஜி.என். முகத்தில் பூத்து நின்ற அசட்டுப் புன்னகை கன்னத்துச் சதைகளைத் துாக்கிப்பிடித்துக்கொண்டிருந்தது என்று விவரிக்கிறார். போதையோடு வந்தவர் மணக்கோலத்தில் யாரையாவது உடன் அழைத்து வராமல் வந்தாரே என்று ஆறுதல்.
இரவில் இரண்டு மணி வரை அழைப்பு மணியை அடித்துக்கொண்டே இருக்கிறார் ஜி.என். பிறரைப் பற்றிய அக்கறையே அவருக்கு இருப்பதில்லை. அந்த இரவிலும் அவருக்கு ஏதாவது ஒன்று தேவைப்படும். அதுவே விடுதி மேனஜர்களுக்கு நிறைய சங்கடங்களை உண்டாக்கும். நிசிகளில் ரூம்பாயை எழுப்புவார். அவை சுந்தர ராமசாமிக்கு பயம் கலந்த மனக்கூச்சத்தை ஏற்படுத்தும் காரியங்கள்.
கொஞ்ச நேர உரையாடலுக்குப்பிறகு திடிரென்று ஜி.என். “ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்து விடுகிறேன்” என்று சொல்லியபடி கிளம்பிச் செல்கிறார். அவர் அந்த நேரத்தில் ஏன் கிளம்பிச் செல்கிறார் என்பது சு.ரா.விற்குத் தெரியும். அவருடைய வாடிக்கைகள் வெளியே வரும் நேரமது. அவர் திரும்பி வந்தாலும் வரலாம், படிந்த வாடிக்கை வீண் போகக் கூடாது என்ற எண்ணத்தில் வாடகைக்கு வேறு அறை எடுத்துக்கொண்டு பின்னர் திரும்பியும் வரலாம். அவர் மறுபடியும் கண் அசந்த நேரம் வரவேற்பறையில் ஜி.என். கத்திப் பேசும் குரல் கேட்கிறது. அறையை விட்டு வெளியே வருகிறார். ஜி.என். ஆங்கிலத்தில் கத்தி சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார். வரவேற்பறையின் மேசைக்குப் பின்னால் இருந்தபடி மூன்று பேர்கள் பதிலுக்கு சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். அதில் ஒருவர் “போலிசுக்குப் போன் பண்ணுங்க” என்று கத்துகிறார்.
“போலீஸ் வந்தா என்னப்பா செஞ்சிடுவாங்க? கொலையா? கொள்ளையா? பேசிக்கிட்டிருக்கோம் அவ்வளவுதானே? ஓட்டல் பொதுவிடமுங்க. நாலு பேர் வருவாங்க, போவாங்க. கொஞ்சம் முன்ன பின்ன இருக்கத்தான் செய்யும். காந்திக்கு மட்டுந்தான் ரூம் தருவீங்களோ? என்று ஜி.என். சண்டை போடுகிறார். அச்சண்டையின் நடுவே மானேஜர் சுந்தர ராமசாமியை ரூமைக் காலிபண்ணச் சொல்கிறார். சண்டை தீவிரம் அடைகிறது. சுந்தர ராமசாமிக்கு சோர்வாக இருக்கிறது. அந்நேரத்தில் எங்கு போய் வேறு அறையைத் தேட ? ஒரு நுட்பமான தருணத்தில் ஜி.என். மீண்டும் அறைக்குள் நுழைகிறார். அதற்கு முன்னர் “பிஸினஸ் என்பதே வளஞ்சு கொடுத்து துட்டடிக்கறது தானுங்களே. எதுக்குப் பிரதர் கோபப்படுறீங்க? என்று கேட்டு விடுதிப் பணியாளர்களைச் சாந்தப்படுத்துகிறார். ஜி.என்.மிரடடலுக்குப் பயந்து அவர்கள் திரும்பிச் செல்கிறார்கள்.
அன்றிரவு மீண்டும் நகர்வலம். “ஒரு டீ குடிச்சிட்டு வருவோமா வாங்க” என்று சு.ரா.வினை கிளப்புகிறார். ”ஸ்டேஷனுக்குப் போய்ப் பார்ப்போம். குருஷேத்திரத்திலே எல்லாரும் வீரமரணம் அடைந்து கிடப்பதைப் பார்க்க வேண்டாமா?” என்று இரவு நேர ரயில் நிலையத்தை வர்ணிக்கிறார். விடிந்ததும்தான் அறைக்குத் திரும்புகிறார்கள். கண்விழித்துப் பார்த்தால் ஜி.என். அருகில் இல்லை. ஒரு குறிப்பு மட்டும் ஆங்கிலத்தில். ”மாலை வருகிறேன். ஒரு முக்கிய விஷயம் பேச இருக்கிறது” என.
ஞாயிற்றுக்கிழமை காலையில் அறை வராந்தாவில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த போது ஜி.என்.வருவது தெரிகிறது. அறைக்குள் வந்ததும் அன்றைய பயணத் திட்டத்தை விவரிக்கிறார். அவருடைய தெருக்களைச் சு.ரா.விற்கு அன்று காட்டித் தருவதாகச் சொல்கிறார். “ஒண்ணு ரெண்ட பாத்துப் பேசுங்க தோழர். பயப்படாதீங்க. வெறும் அறிமுகம்தான்” என்ற பீடிகை வேறு.
பதினோரு மணியைப் போல கிளம்ப திட்டம். அப்போது குட்டியானை ஒன்று விடுதியின் முற்றத்திற்கு வருகிறது. அறைகளில் தங்கியிருந்த குழந்தைகள் ஆர்ப்பாட்டம் எழுப்பியபடி வராண்டாவில் நின்று யானையைப் பார்த்து மகிழ்கின்றன. பக்கத்து அறைக்குள் இரண்டு குழந்தைகள் சன்னல் விளிம்பில் நின்றபடி எட்டி எட்டிப்பார்ப்பதை ஜி.என். கவனித்து விடுகிறார். அறைக் கதவுகள் வெளியே பூட்டப்பட்டிருந்தன. அக்குழந்தைகளின் பெற்றோர் அவர்களை அறைக்குள் போட்டு பூட்டிவிட்டுச் சென்றிருந்தனர். குழந்தைகளுக்கு யானையைப் பார்க்க ஆர்வம்.
ஜி.என். அறையின் பூட்டை இழுத்துப் பார்க்கிறார். காலால் கதவை உதைக்கிறார். ”மாத்துச்சாவி இருக்கும் நான் வாங்கிட்டு வருகிறேன்” என்று சு.ரா. கிளம்புகிறார். “அந்தப் பிச்சைக்காரங்ககிட்ட நீங்க ஒண்ணும் போய்க் கெஞ்ச வேண்டாம்” என்றபடி ஜி.என். அறைக்கதவுகளை ஓங்கி மிதிக்கிறார். களேபரம் கேட்டு அறையைச் சுற்றி ஆட்கள் குழுமுகிறார்கள். விடுதிப்பணியார்கள் ஓடி வருகிறார்கள்.
“பக்கத்துலே யாராவது வந்தால் கழுத்தை நெரிச்சுக் கொன்னுப்புடுவேன்” என்று ஜி.எம். மிரட்டுகிறார். பின்னால் நகர்ந்து வந்து மீண்டும் பாய்ந்து கதவை உதைக்கிறார்.
“தப்பா நினைக்காதீங்க.. ஏன் கதவை உடைக்கிறீங்க? என்று ஒரு முதியவர் கேட்கிறார். “குழந்தைகளை உள்ளாரப் போட்டு பூட்டிட்டுப் போயிருக்காங்க. அவங்களுக்கு யானையைப் பார்க்கணும். அது அவங்க அடிப்படை உரிமை ” என்று அந்த நிலையிலும் ஜி.என். தன் காரியத்தை விளக்குகிறார். கதவைத் திறந்து குழந்தைகளை யானைப் பார்க்க விடுவிக்கிறார். போலீஸ் வந்து அவரை அழைத்துச்செல்கிறது. பேசிச் சிரித்தபடி போலிஸ்காரர்களுடன் படியிறங்கிச் செல்கிறார் ஜி.என். கதை முடிகிறது.

அசோகமித்திரனின் விரல் சிறுகதையில் ஜி.நாகராஜன் வேறு பெயரில் வேறு கதாப்பாத்திரமாக வருகிறார். ”என்னால் எழுத முடியாத அளவு விரல்கள் கதவிடுக்கில் சிக்கி விட்டதே” என்று புலம்பும் வரிகள்தான் அக்கதாப்பாத்திரம் ஜி.நாகராஜனுடையது என்பதை தெரிந்து கொள்ளச் செய்கிறது. அக்கதையும் இரவில்தான் நடக்கிறது. சென்னையில் நடக்கும் கதை.
இரவு பத்துமணிக்குமேல் கதவு தட்டும் சத்தம் கேட்டு பதறி எழகிறான் ரங்கநாதன். அவன் மனைவி “கதவைத் திறக்காதீங்க..அந்தக் குடிகாரன்தான் வந்திருக்கிறான்“ என்று ரங்கநாதனின் நண்பன் ராமசாமி ஏற்கனவே தேடி வந்துவிட்டுப் போனதைச் சொல்கிறாள். அப்போது மதுவிலக்கு நடைமுறையில் இருந்தது. ரங்கநாதனுக்கு கோபம் வருகிறது. அவன் வீடு தேடி வந்ததை ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கோபம் கொள்கிறான். “அவரை வீட்டிற்கு வரவேண்டாம் என்று சொல்லுங்கள். பிள்ளைகள் அவரைக் கண்டு பயப்படுகின்றன” என்று அவன் மனைவி சொல்கிறாள்.
ரங்கநாதன் கதவைத் திறக்கிறான். விரல்களில் இரத்தம் சொட்டியபடி தள்ளாடிக்கொண்டு ராமசாமி நிற்கிறான். அவனை வீட்டிற்குள் அழைக்கிறான். குழந்தைகளை சமையல் கட்டிற்குள் அழைத்துச் சென்று படுக்க வைக்குமாறு மனைவியை கேட்டுக்கொள்கிறான். சமையலறை அந்த நேரத்தில் தரையெல்லாம் ஈரம் பிசுபிசுக்க இருக்கும் என்பது நினைவிற்கு வருகிறது. ராமசாமியை அறையில் இருந்த நாற்காலியில் சாய்ந்து அமர வைக்கிறான். கை விரல்களில் இரத்தம் கசிகிறது. வெளிச்சத்தில்தான் காயத்தின் தீவிரம் புரிகிறது. சிகிச்சை அளிப்பதற்காக அவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ரிக்ஷா தேடிப்போகிறான் ரங்கநாதன். அந்த இரவில் அங்கு எந்த வண்டியும் நிற்க வில்லை. திரும்பி வந்து கைத்தாங்கலாக ராமசாமியை ஏந்தியபடி அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே ராமசாமியின் கோலத்தைப் பார்த்து சிகிச்சை தர மறுக்கிறார்கள். போலிஸ் கேஸ். அரசு மருத்துவமனைக்கு கொண்டு போகச் சொல்கிறார்கள். ரங்கநாதன் கேட்டுக்கொண்டதற்கு பிறகு கிளினிக் உதவியாளன் முதலுதவி செய்கிறான். ராமசாமியின் ஆள்காட்டிவிரல். நடுவிரல் இரண்டும் பாதிக்கு மேல் நசுங்கித் தொங்கிக் கொண்டிருந்தன. ரங்கநாதனுக்கு அதைப் பார்த்து தலையைச் சுற்றுகிறது. ரங்கநாதன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆட்டோ ரிக்ஷா தேடிச்செல்கிறார். ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டும் என்றதும் ஒரு ஆட்டோக்காரர் மறு பேச்சு பேசாமல் வண்டியைக் கொண்டு வருகிறார். “உன்னை ரொம்பத் தொந்தரவு தரேன், ரங்கநாதன்” என்று ராமசாமி வருத்தம் தெரிவிக்கிறான். ஆட்டோவில் அரசு மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். “கையே போச்சு..இனிமே எழுதவே முடியாது ” என்று ராமசாமி புலம்புகிறான்.
மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவிற்குச் சென்று சேர்கிறார்கள். எப்படி அடிபட்டது என்று சீட்டு எழுதுபவன் கேட்கிறான். ஒரு ரிக்ஷா இடிச்சது என்று ரங்கநாதன் பதில் சொல்கிறான். ரிக்ஸா இடிச்சா கை நசுங்குமா? என்று அவனுக்குச் சந்தேகம். ராமசாமிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ராமசாமியின் கைவிரல்களை எக்ஸ்ரே எடுக்கிறார்கள். காலையில்தான் பரிசோதனை முடிவு தெரியவரும் அது வரை ஒன்னும் சொல்ல முடியாது என்கிறார்கள். இருவரும் வீட்டிற்குத் திரும்புகிறார்கள். ராமசாமிக்கு பசிக்கிறது.
ரங்கநாதன் ராமசாமிக்கு எப்படி அடி பட்டது என்று கேட்கிறான். முதலில் ரங்கநாதன் வீட்டிற்குத்தான் ராமசாமி குடித்துவிட்டு வந்திருக்கிறான். அவனுக்கு அன்று நிலைகொள்ள முடியாத போதை. வழியில் எங்காவது விழுந்துவிடலாம் என்று பயந்து கொண்டுதான் ரங்கநாதனை தேடிவந்தது. ரங்கநாதனின் மனைவி திருப்பி அனுப்பியதும் மற்றொரு நண்பனான ராமப்பன் வீட்டிற்குச் சென்றிருக்கிறான். அவனுடைய மனைவி கதவைத்திறந்து பார்த்ததும் பயந்து போய் உடனே கதவைச் சாத்துகிறாள். கதவிடுக்கில் ராமசாமியின் விரல்கள் சிக்கிக்கொள்கின்றன. வலியால் ராமசாமி அலறுகிறான். அவளோ அவளைத் தாக்கிவிடுவான் என்று பயந்து போய் வேகமாக கதவைச் சாத்துகிறாள். பக்கத்து வீடுகளில் இருந்து ஆட்கள் வந்து கதவிடுக்கில் இருந்து ராமசாமியை மீட்டிருக்கிறார்கள்.
ராமசாமியின் கை கதவிடுக்கில் மாட்டிக்கொண்டதைக் கேள்விப்பட்டபோது வாய்வரை குடல் புரண்டு வந்தது என்று அசோகமித்திரன் எழுதுகிறார்.
(தொடரும்)
மறுபிரசுரம்- நன்றி இனிய உதயம் சூலை 2026
