“நாம…. இல்ல இல்ல, நான் சாவும்போது என் கண்ணு முன்னாடி விஜயாதான் வருவான்னு நினைச்சுட்டு இருந்தேன், இப்போ என்னடான்னா அந்த கடன்காரன், ஊர அடிச்சு உலையில போடுறவன் மூஞ்சி நியபாகத்துக்கு வந்து நிக்கிது… எப்படி இளிச்சுட்டு வந்து நின்னான்… அவன் நின்னான், எனக்கு எங்க போச்சு புத்தி… அட இப்போ அதுவா முக்கியம், பேசாம ஒரு லெட்டர எழுதி வச்சிடவா… லெட்டர்னதும் சோமு மாமா பையனும் மருமகளும் தற்கொலை பண்ணிக்கிறப்போ LICகாரனுக்கு எழுதி வச்ச லெட்டர் நியபாகத்துக்கு வருது. அவ்ளோ ஏன்? மூத்தவன், நான் கட்டின வீடு பிடிக்காம உயரமான இடம்தான் பிடிக்கும்னு சொல்லி 27 மாடி இருக்க மாதிரி அபார்ட்மென்ட்ல ஒரு வீடு வாங்கினான். பேங்க்ல கடன் வாங்கித்தான். அப்போ அங்க வந்த பேங்க்காரன் சொன்னான் ‘சார் இந்த லோனுக்கு கண்டிப்பா இன்சூரன்ஸ் போட்டாகனும், ஒருவேளை உங்களுக்கு எதும் நடந்துட்டா, வீடு உங்க மனைவி பேருக்கு போயிடும், இயற்கை மரணம்னு இல்ல, ரகசியம் சொல்லுற மாதிரி, நீங்க சூசைடு பண்ணிக்கிட்டாலும் பணம் கிடைக்கும்னு’ சொல்றான் காலத்த பாருங்க, ஆனா என் பையன் அந்த வீட்டையும் வாடகைக்கு விட்டுட்டு அமெரிக்கா போயிட்டான்.
நான் முன்ன சொன்னனே சோமு மாமா பையன், அந்தாளு LIC க்கு எழுதின லெட்டர்ல…. ஐயோ நான் செய்ய வேண்டியது என்ன இப்போ என்ன செஞ்சிட்டு இருக்கேன், இப்படித்தான் செய்ய வேண்டிய வேலைய விட்டுட்டு தேவை இல்லாத வேலைய பாத்துட்டு இருக்கேன், இப்போன்னு இல்ல வாழ்க்கை முழுக்கவே.
“விஜயா, ச்ச.. என்ன ஒரு அறிவான பொண்ணு, நான் சாதாரண T.A, அவ DGMமோட பொண்ணு, ஆனா என்னையும் ஒரு ஆளா மதிச்சு காதலிச்சா. நானும் அவதான் உலகம்னு இருந்த காலம் அது. அப்படியே இருந்திருக்கலாம். இப்போக்கூட நல்லா ஞாபகம் இருக்கு, எங்க விவகாரம் தெரிஞ்சு அவள, அவ மாமா வீட்டுக்கு தஞ்சாவூர் அனுப்பி வச்சிட்டாங்க. அது தெரியவே எனக்கு ரெண்டு நாள் ஆச்சு. பின்ன, சாதாரண டெக்னிக்கல் அசிஸ்டென்ட் காதலிச்சா, பொண்ணா தூக்கி கொடுத்துடுவாங்களா. அந்தாளு வேற Maintenance department நான் வேலை செஞ்சது Factoryகுள்ள, எங்க விவகாரம் தெரிஞ்சதும் விஜயாவோட அப்பா சும்மா இல்ல, எங்க ஊரு வரைக்கும் ஆள் அனுப்பி மிரட்டி இருக்காங்க. எங்க அப்பா டெலிபோன் பண்ணி திட்டுறாரு, ஆன விஜயா தஞ்சாவூர்ல இருக்கான்னு தெரிஞ்சு அடுத்தநாளே அங்க போய் நின்னேன். அடடா, ஏன் இப்போ மாத்தி மாத்தி யோசிச்சிட்டு இருக்கேன். நான் எங்க யோசிக்கறேன், மனசு நினைக்கிறதெல்லலாம் தானா ஓடிட்டு இருக்கு. பேசாம லெட்டரே எழுதிடலாம் போல, என்னன்னு எழுதறது, விஜயாகிட்ட மன்னிப்பு கேட்டு எழுதலாம் ஆனா எதுக்குனு மன்னிப்பு கேக்கறது, இந்த உதவாக்கரைய நம்பி நடு ராத்திரி வீட்டு சுவர் ஏறிக் குதிச்சு வந்தாளே மகராசி, ச்ச எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கலாம். நாங்களும் நல்லாதானே வாழ்ந்தோம்.
நல்லா வாழ்ந்தோம்னா, நிசமாவே நல்லா வாழந்தோம். நல்ல வேலை, நல்ல சம்பளம், அழகான காதல் பொண்டாட்டி, எப்படி? காதல் பொண்டாட்டி. யாருக்கு கிடைக்கும் இப்போ நினைச்சு என்ன பண்ணுறது.
அவ மேல எந்த தப்பும் இல்ல. குடும்ப வழ்க்கையில நானும் ரொம்ப நல்லவனாதான் இருந்தேன். தேவா பிறந்தான் மூத்தவன், சின்னவன் தயா. சத்தியமா சொல்றேன், பல பேரு ஏங்கிட்டு இருக்கிற கனவு வழக்கை அது. இன்னும் கொஞ்ச நேரத்துல முடிய போகுது. இல்ல இல்ல, அந்தக் கனவு வழக்கை முடிஞ்சு ஆறு மாசம் ஆச்சு, நான் முடிச்சுக்க போறது இப்போ இருக்கற இந்த ஒன்னுமில்லாத வாழ்க்கைய.
இதுல ஒரு விசேசம் என்னன்னா, இப்பக்கூட என்னோட அந்த நல்ல வாழ்க்கை போயிடுச்சேனு வருத்தப் பட்டெல்லாம் சாகல, இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க என்னைய தேடி வந்து என மானம் போயிடுமேன்னு பயந்துதான் இந்த முடிவு. போன் என கையிலதான் இருக்கு, விஜயாவுக்கு கூப்பிட்டு பேசிடவா, வேண்டாம் வேண்டாம். மது, மாது, சூது மனுசன அழிக்கும்னு சொல்லுவாங்க, இதுல எல்லாம் அழியாதவன பணத்தாசை அழிச்சிடும். அதுக்கு என் வாழ்க்கை ஒரு சாட்சி, இல்ல என சாவு ஒரு சாட்சி, அப்படியும் இல்ல என் சாவு எனக்கு மட்டும்தானே முடிவு அப்படி பாத்தா…. இப்போ இந்த வழ்க்கைத் தத்துவமெல்லாம் ரொம்பம் முக்கியம் இல்ல.
தெர்மல் ஸ்டேஷன் இளங்கோவன். அந்த ஆளு மேல விசாரணை வந்தப்போ இப்படித்தான் பதட்டப்பட்டாறான்னு தெரியல. அவருக்கு என்ன பதட்டம்? தப்பு செஞ்சிருந்தாதானே பதட்டம். எல்லாரும் உத்தமனுங்கதானே மாட்டாத வரைக்கும். மாட்டின அப்புறம் நாலு பேரு ‘அவரு அப்படி செய்வருன்னு எதிர் பாக்கலன்’னு உச்சு கொட்டுவாங்க. உள்ளுக்குள்ள சந்தோஷத்த மறைச்சு வச்சுகிட்டு வெளியிலே பரிதாப படுறதுல நம்மள மிஞ்ச ஆள் கிடையாது. ஆனா இளங்கோவன் கதை வேற, விஜிலென்சே வீடு முழுக்க தேடியும் ஒண்ணும் கிடைக்காம போயிட்டாங்க, குறிப்பா அவரு வீட்ல இருந்த கிழிஞ்சு போன சோபாவ பத்தி எல்லாரும் பேசினாங்க. அவளோ எளிமையான மனுசனாம். அடுத்த நாள் தீ குளிச்ச சீதை மதிரில்ல நெஞ்ச நிமித்திக்கிட்டு வந்தாரு மனுஷன். என் கதை அப்படியா, நான் நிஜமாவே தீ குளிச்சாலும்..
அந்த contractor நாயல வந்தது வழ்க்கைக்கு சனி. வாழ்க்கையில ரொம்ப கஷ்டத்துல இருக்கவன், நினைச்சது ஏதும் கிடைக்காதவன், அவன்பாட்டுக்கு ஒழுங்கா வந்துட்டு போயிடுவான். ஏன்னா அவனுக்கு வாழுறதே பெரிய பிரச்சனை. இந்த எல்லாம் கிடைக்குற குரங்குக இருக்குதே அதுக, தானே ஏதாச்சும் பிரச்சனைய இழுத்து விட்டு மொத்த வழக்கையையும் கெடுத்துடுங்க. அப்படிப்பட்ட குரங்கு நான், ரிடயர்மென்ட் வாங்கிட்டு ஒழுங்கா வீட்டுக்கு வர்ற சமயம், கடைசி ஆறு வருஷ சர்வீஸ், பெரியவன் அமெரிக்கால இருக்கான், சின்னவன் லண்டன்ல இருக்கான். என்ன குறை எனக்கு..
விஜயா எப்பவும் சும்மா இருந்தது இல்ல, கல்யாணம் ஆனா புதுசுல பக்கத்துலயே ஒரு இடத்துல தைக்க போவா, நான்தான் சம்பாதிக்கிறேனேனு சொன்னா, நாம சீக்கிரம் முன்னேறனுமின்னா நானும் வேலைக்கு போயிதான் ஆகனும்ன்னு சொல்லுவா, பெரியவன் பொறந்து கொஞ்ச நாள்லயே குடும்பம் ஒண்ணு சேர்ந்துடுச்சு, டிகிரி சார்டிபிகேட்டெல்லாம் வந்ததும் டீச்சர் வேலைக்கு போக ஆரம்பிசுட்டா. அவளுக்கு எட்டு வருஷ சர்வீஸ் மிச்சம் இருக்கு. நான் சொன்னனே நாங்க நிசமாவே நல்லா வழந்தோம்னு, அப்போ வரைக்கும் அப்படிதான் வாழ்நிதிருக்கோம், கிட்டதட்ட 30 வருஷம்.
மாகராசின்னு சொன்னனே, அது எந்த அளவுக்கு நிஜமன்னா, ஒரு T.Aவா இருந்த என்ன அதப்படி இதப்படின்னு விரட்டி இ-1 லெவல்ல இருந்து இ-6 வரைக்கும் கொண்டு வந்தா, தெர்மல் பிளாண்ட்ல transformer கூடவே முடிஞ்சு போயிருக்க வேண்டிய வாழ்க்கை, கார்ப்பரேட் ஆபீஸ்ல AC ரூம்ல உக்கார வச்சா. விஜயாவுக்கு தொண்டையே போயிடுச்சு, ஸ்கூல்ல கத்துறது பத்தாதுன்னு வீட்டுக்கும் வந்து டியூசன் எடுப்பா, பணத்துல அவளோ கெட்டி, சேர்த்தி வச்சு அப்போவே தஞ்சாவூர்ல இடம் வாங்கினா, அப்புறம் சென்னைல ஒரு வீடு, ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வச்சிருப்பா, கேஸுக்கு, பாலுக்குனு தனித்தனியா ரப்பர் பேண்டு போட்டு கட்டி வச்சிடுவா, அநாவசிய செலவுன்னு ஒரு ரூவா இருக்காது.
Coal and ash cleaning ப்ராஜக்ட்லதான் அவன் முதல்ல வந்தான். அந்த ப்ராஜக்ட்ல அவன் ஒழுங்காதான் L1 ஆனான். என் நேரமோ அவன் நேரமோ ஒருநாள் BHEL ஆர்ச்சுகிட்ட தலை சுத்தற மாதிரி வந்து அப்படியே தரையில உக்காந்துட்டேன். அந்தப் பக்கம் வந்த இவன் கைத்தாங்கலா புடிச்சு, ஓரமா உக்கார வச்சு, ஆட்டோல ஏத்தி கூடவே வந்து இறக்கிவிட்டுட்டு போனான். யாரோவா இருக்கிறவரைக்கும் எல்லாரும் நல்லவங்கதானே.
ஆமா அவன்கிட்ட காசு வாங்கிட்டு நிறைய கான்ட்ரேக்ட்ல அவன L1னா வரவச்சேன். பணம் அவ்ளோ பணம். அந்த கம்பெனில என்னோட ரெண்டு வாழ்நாள் முழுக்க வேலை செஞ்சாலும் கிடைக்காத காசு. அதை முதலீடு பண்ணவும் அவனே யோசனை சொன்னான். ரியல் எஸ்டேட். காசு எங்க இருந்து வருதுனு தெரியாத அளவுக்கு வந்துச்சு, ஆனா நான் வெளிக்காட்டிகாம தெளிவாதான் இருந்தேன்.
போன வருஷம் விஐயாவோட பிறந்தநாளன்னைக்கு துவாக்குடி – புதுக்குடி ரோட்டுல வாங்கின இடத்துக்கு கூட்டி கொண்டுபோயி காட்டினேன், இது நம்ம இடம்’னு சொல்லிட்டு அவ சிரிப்ப எதிர்பாத்து நின்னேன், ‘இந்த பொழப்பு நமக்கு தேவையா’ன்னு கேட்டுட்டு அவபாட்டுக்கு நடந்து போறா.
30 வருச வாழ்க்கையில ஒரு காதலியா, மனைவியா அவளப்பத்தி எல்லாமே தெரியும்னு நினைச்ச எனக்கு, ஒரு மனுசியா அவ யாருன்னு தெரிஞ்சுக்கலையோன்னு தொணுச்சு. அவளுக்கு நான் ஏதோ தப்பு பண்ணுறேன்னு தெரிஞ்சிருந்திருக்கு. அவங்க அப்பா DGMமாவே இருந்திருந்தாலும் என் வேலைக்காக சிபாரிசு வேண்டாம்ன்னு சொன்ன நேர்மைக்காரிய, பணம் மறக்க வச்சிடுச்சு.
அதுக்கப்புறம் அடிக்கடி சண்டை. செய்ய முடியாத, செய்யக்கூடாத சூழல்லதானே தப்பு செஞ்சே ஆகனும்னு தோணும். அப்படி மறுபடி அந்த சண்டாளனுக்கு உதவி செஞ்சேன். அவ ரொம்ப வெறுத்துப் போயிட்டா, தொண்டை பிரச்சினைய காரணம் காட்டி VRSம் கொடுக்க ஏற்பாடு பண்ணிட்டு சின்னவனோட லண்டன் போயிட்டா. நானும் நிறுத்தல. பண அரிப்பா, கள்ளத்தனம் செய்யறதுல இருந்த சுவாரஸ்யமா தெரில. எனக்கு குற்ற உணர்ச்சியே இல்லாம போயிடுச்சு. கக்கூஸ் போற மாதிரி, பல்லு விளக்குற மாதிரி என் வாழ்க்கையோட கலந்துடுச்சு. யாராச்சும் லஞ்சம் வாங்கி கைதாகிற செய்தி பாத்தா ஊருல மத்தவனெல்லாம் ஒழுங்கானு நினைக்க தோணுச்சு, மனசு சீழ்பட்டு போச்சு.
எல்லாமே முடியப்போகுது, ஆனா ஒன்னு, இந்த மாதிரி இக்கட்டான சூழல் வரும், அதில் இருந்து தப்பிச்சு போகனும்னு விஜயா நினைக்கல. என் சாமி அப்படி நினைச்சிருக்காது. அவ சொல்லியும் நிறுத்த முடியாத அளவுக்கு தப்பு செய்யறவனா மாறிப்போன என் பக்கத்துல இருக்கறோமேன்னு மனசு வெம்பி, அந்த வெக்கை தாங்க முடியாம போயிட்டா. அவ இருந்திருந்தா..….
நான் மாட்டிக்க பெரிய காரணம் எல்லாம் இல்ல, பல நாள் திருடன் அவ்ளோதான். இளங்கோவனுக்கு நடந்த மாதிரி ஆதாரத்தை தேடியெல்லாம் வரல, ஆதாரத்தோட என்னை கைது செய்ய வராங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க விஜிலென்ஸ் போலீசோட வந்திரும்.
நான் சின்ன பையனா இருக்கப்போ, ரொம்ப காய்ச்சல் அடிக்கும்போது மாரிமுத்து டாக்டர் கிட்ட போவோம். அவரு ஊசி போடுறதுக்காக டவுசர கொஞ்சமா கீழ இறக்கிவிட சொல்லுவாரு, எந்த நொடி ஊசி போடுவாறோங்கிற பயத்துல நிக்கிறப்ப, நர்ஸுகிட்ட எதாச்சும் பேசுவாறு, அங்கதானே பேசுறாருன்னு நினைச்சு நாம அசந்த வேளையில ஊசிய குத்திவிட்டு, ..ண்டிய தொடச்சுவிட்டு போக சொல்லுவாறு, நானும் அந்த அதிர்ச்சிலயே வந்திடுவேன், அந்த யோசனைய நான் முதல்ல பயன்படுத்தினது, நானும் விஜயாவும் முதன் முதல்ல அந்தரங்கமா இருந்தப்போ, இது ஏன் இப்போ நியாபகம் வருதுன்னா, இதோ என கை மணிக்கட்டுகிட்ட………, அவ்ளோதான் எல்லாம் முடிஞ்சது, நான் முன்ன சொன்ன மாதிரி எனக்கு இப்போ விஜயாதான் நினைவுல இருக்கா. ஆமா இதுதான் அந்த நிமிஷம் என் கடைசி நிமிஷம், ரத்தம் அதிகமா வெளில போகுது, எல்லாம் கனவு மாதிரி இருக்கு, இல்ல ரத்ததோட சூடு தெரியுது, நான் விஜயா வீட்டுகிட்ட நின்னுட்டு இருக்கேன், விஜயா அவ வீட்டு கம்பவுண்ட் சுவர் ஏறி குதிச்சு என்ன பாத்து ஓடி வந்து என கைய இறுக்கமா புடிச்சுக்……..”
