
நான் இருளத் தொடங்கும் நேரத்தில்தான் வீட்டுக்குத் திரும்பினேன். வீட்டின் முன்வாசல்நிலைக்கதவு அடைக்கப்பட்டிருந்தது. உட்புறம் பூட்டப்பட்டதா, வெளிப்புறம் பூட்டப்பட்டதா எனத் தெரிந்துகொள்ள முடியாதபடி அமைக்கப்பட்ட செம்மரக்கதவு அது.
அம்மா தனியாக வெளியே எங்கும் செல்வதில்லை. அம்மா வீட்டில் இருக்கும்போது கதவு அடைக்கப்படுவதும் இல்லை. அழைப்பு மணியை அழுத்தினேன். வீட்டுக்குள் இருக்கும் ஐந்து அறைகளுக்குள்ளும் அழைப்பு மணியோசை அதிர்ந்து, சுழன்று, சுற்றி சுற்றி வந்து எதிரொலித்தது. அந்த ஒலி இறுதியாகக் வாசற்கதவின் இடுக்குகளுக்குள் நுழைந்து வெளியேறி என் செவிகளில் மெல்ல வந்து விழுந்தது.
கதவு திறக்கப்படவில்லை. நான் காத்திருந்தேன். நொடிகள் நிமிடங்களாக மாறிக்கொண்டிருந்தன. மீண்டும் அழைப்பு மணியை அழுத்த மனமின்றிக் காத்திருந்தேன். வீதியில் ஒளி மங்கிக்கொண்டிருந்தது. நாய்களின் குரைப்பொலிகள் கேட்டன. வீதிகளில் மனிதர்களைவிட நாய்களின் நடமாட்டம் மிகுந்துவிட்டது.
வீட்டுக்குள் அம்மா இருப்பதுபோலத்தான் எனக்குத் தோன்றியது. அதற்குக் காரணம், சமையல் அறையில் பாத்திரங்களைக் கழுவும் ஓசை எனக்குக் கேட்பது போல இருந்திருக்கலாம். அது என் பிரம்மையாகக்கூட இருக்கலாம்.
வீட்டுக்குள் அம்மாவின் காலடி ஓசைகள் கேட்பது போல உணர்ந்தேன். அது பொய்யாகவும் இருக்கலாம். மிக நுட்பமாக அம்மாவின் கொலுசுகளில் உள்ள ஆறுமுத்துக்களின் சிணுங்கள் ஓசையும் கேட்டது. இதுவும் ஒரு பிரம்மைதானோ?
எப்போதும் அம்மா அதிர்ந்துதான் நடப்பார். உடல் விசையின் வேகம் அவர் கால்களில் அழுத்தம் கொடுக்கும். அவரின் ஒவ்வொரு அசைவிலும் அந்த வேகம் இருக்கும். அவர் எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறார், பதற்றமாகவே இருக்கிறார் என்று சிலர் அம்மாவின் இந்த வேகத்தைத் தவறாகப் புரிந்துகொண்டார்கள்.
வீட்டுக்குள் சமையல் பாத்திரங்களின் ஒலி கேட்டது. எதையோ தாளிக்கும் ஓசையும் கேட்டது. ‘அம்மா, ஏன் இன்னமும் கதவைத் திறக்க வில்லை?’ என்று நினைத்துக்கொண்டே மீண்டும் அழைப்பு மணியை அழுத்த விரலை நீட்டினேன். ஆனால், அழுத்தவில்லை.
ஒருமுறைக்கு மேல் அழைப்பு மணியை ஒலிக்கச்செய்வது அம்மாவுக்குச் சினத்தை ஏற்படுத்திவிடும். அம்மாவுக்குச் சப்தம் ஆகாது. அதிர்வான ஓசையும் ஆகாது. இரைச்சலான ஒலிகளும் பிடிக்காது. இசைகூட மிக மெல்லியதாக, உயராத ஓசையுடையதாக இருக்க வேண்டும் அம்மாவுக்கு.
ஆனால், அம்மா உரத்த குரலில்தான் பேசுவார்கள். கைப்பேசியிலும் சரி, நேரிலும் சரி. ‘தன்னோசை’ எல்லோருக்கும் பிடிக்கும்தானே! தன்னோசை என்றைக்கும் தனக்கு எந்த வகையிலும் இடையூறாக இருக்காதுதானே! அம்மா தூங்கும்போது சில சமயம் குறட்டைஒலியும் வரும். அதுவும் உரத்த ஒலியாகத்தான் இருக்கும். அப்போது அம்மா தன்னை மறந்து எங்கோ இருப்பார் அல்லவா?
வீட்டுக்குள் எதையோ வெட்டும் ஓசை கேட்டது. அந்தச் சப்தத்தைச் செவிமடுத்துக்கேட்டேன். அது எதையோ உறிக்கும் ஓசைதான். ஒருவேளை அது தேங்காயாக இருக்கலாம். இரவு தோசைக்குச் சட்னி அரைக்கப்பதற்காக அவர் தேங்காயை உறித்துக்கொண்டு இருக்கலாம். நான் இரவில் ஏழரை மணிக்குச் சாப்பிடுவதால், அம்மா மாலை ஆறரை மணிக்கே இரவு உணவுகளைத் தயாரிக்கத் தொடங்கிவிடுவார். எட்டு மணிக்கு மேல் மறுநாள் காலை உணவுக்குத் தேவையான காய்கறிகளை வெட்டத் தொடங்கிவிடுவார். காலை உணவுவினைத் தயாரிப்பதற்காக ஐந்தரை மணியிலிருந்தே சமையல் அறையில் வேலைகளைச் செய்துகொண்டிருப்பார். நான் காலையில் ஏழரை மணிக்கு உணவு உண்பேன். மீண்டும் அம்மா பகல் பத்துமணிக்கெல்லாம் மதிய உணவினைச் சமைக்கத் தொடங்கிவிடுவார். நான் மதியம் பன்னிரண்டரை மணிக்குச் சாப்பிடுவேன். அம்மா சமைக்கும் நேரமும் நான் சாப்பிடும் நேரமும் எனக்குத் தெரியும். அம்மா சாப்பிடும் நேரம் எனக்குத் தெரியாது.
அம்மா இன்னமும் கதவினைத் திறக்கவில்லை. மிக்ஸி ஓடும் சப்தம் கேட்டது. அது என் வீட்டுக்குள்ளா அல்லது அக்கம் பக்கத்து வீடுகளுக்குள்ளா என்பதை என்னால் கணிக்க இயலவில்லை. நான் பொறுமை இழந்தேன். மீண்டும் அழைப்பு மணியை அழுத்தினேன். வீட்டுக்குள் அழைப்போசை சுழன்று திரும்பிவந்தது. அம்மா வரவில்லை. கதவு திறக்கப்படவில்லை.
வீட்டுக்குள் இருந்து எந்த ஓசையும் கேட்கவில்லை. கேட்பதுபோல எனக்கு பிரம்மையும் ஏற்படவில்லை. எனக்குப் பதற்றமாக இருந்தது. வீதியில் இருள் கவியத் தொடங்கியது. அக்கம்பக்கத்து வீடுகளில் வாசல் விளக்குகள் எரியத் தொடங்கின. நான் என் வீட்டு வாசல் விளக்கினை எரியச் செய்வதற்காக வெளிச்சுவரில் இருந்த இருமுனைப் பொத்தானை அழுத்தினேன். விளக்குச் சுடர்ந்தது. வாசல் வெளிச்சமாகியது. நான் எனக்குள் இருளத் தொடங்கினேன்.
மீண்டும் அழைப்பு மணியை அழுத்தினேன். ஒலித்தது. மீண்டும் மீண்டும் அழுத்தினேன். மீண்டும் மீண்டும் ஒலித்தது. அம்மா வரவில்லை. கதவு திறக்கப்படவில்லை.
என் மீது அம்மாவுக்கு ஏதும் சினமோ? என்று சிந்தித்தேன். எத்தகைய சினமாக இருந்தாலும் அம்மா என்னைத் தெருவில் நிறுத்தியதில்லை. நான்குபேருக்கு முன்னால் திட்டியதுகூட இல்லை. எந்த பிரச்சினையானாலும் அம்மா பேசித்தான் தீர்க்கப் பார்ப்பாரே தவிர, இப்படிப் புறக்கணித்து அல்ல.
உள்ளே வானொலியின் ஓசை கேட்பதுபோல இருந்தது. ஒரு பழைய பாடல். ‘தேன் சிந்துதே வானம்…’ வழக்கமாக அம்மா ஞாயிற்றுக்கிழமை மதியப் பொழுதுகளில் விரும்பிக் கேட்கும் பாடல் இது. ‘இந்த நேரத்தில், எந்த அலைவரிசையில் இந்தப் பாடலை ஒலிபரப்புகிறார்கள்?’ என்று சிந்தித்துக்கொண்டே மீண்டும் அழைப்பு மணியை அழுத்தினேன்.
அந்தப் பாடல் முடிவதற்குள் தொலைக்காட்சியில் ஒரு நெடுந்தொடரின் வசனங்கள் கேட்கத் தொடங்கின. அந்த வசனங்கள் என் வீட்டுத் தொலைக்காட்சியில் இருந்துதான் கேட்கின்றனவா என்பதில் எனக்கு ஐயம் எழுந்தது.
சில நேரங்களில் ஊர் முழுக்க ஒரே நெடுந்தொடர்தான் பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் தெருவில் இருந்தபடியேகூட அந்தத் தொடரின் முழு வசனத்தையும் கேட்டுவிட முடியும். தாகத்துக்குத் தண்ணீர்க் கேட்பது போல, ‘இந்தத் தொடரை மட்டும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று எந்த வீட்டிலாவது கேட்டால்கூட, அவர்கள் மனமிறங்கி ஒத்துக்கொள்வார்கள்தான். அந்த அளவுக்கு நெடுந்தொடர்களின் மீது அவர்களுக்குப் பற்று இருந்தது.
அம்மாவும் தொலைக்காட்சி நெடுந்தொடர்களைப் பார்ப்பார்தான். ஆனால், அப்போதும் அவரின் கைகள் ஏதாவது வீட்டுவேலைகளைச் செய்துகொண்டே இருக்கும். கீரையை ஆய்வார். கொத்தமல்லி, புதினா கட்டுக்களைப் பிரித்துச் சரிசெய்வார். காய்கறிகளை வெட்டுவார். வாழைப்பூவைப் பிரித்தெடுப்பார். தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பார். அம்மாவின் கைகள் ஓய்ந்திப்பதை அவர் தூங்கும்போதுதான் பார்க்க முடியும்.
நான் மீண்டும் அழைப்பு மணியை அழுத்தினேன். எதிர் வீட்டுச் சன்னல் ‘மடார்’ என்ற ஓசையுடன் திறந்தது. நான் மீண்டும் மீண்டும் அழைப்போசையை எழுப்பது அவர்களுக்குத் தொல்லையாக இருந்திருக்கலாம். அதனால்தான் அவர்கள் சன்னலை இவ்வளவு சப்தத்துடன் திறந்திருக்கிறார்.
சன்னல் வழியாக ஒரு தலை தெரிந்தது. வெளியே விளக்கொளியின் வெளிச்சம். அறைக்குள் இருள். அதனால், முகம் தெரியவில்லை.
சன்னல் வழியாகப் பார்த்தவர் சற்று உரத்த குரலில், “வீட்டுச் சாவி இல்லையா?” என்று கேட்டார்.
நான் என் சட்டைப் பையைத் தடவிப் பார்த்தேன். வீட்டுச் சாவி தட்டுப்பட்டது.
நான் அவரிடம் மெதுவான குரலில், “இருக்கு” என்றேன்.
உடனே அவர், “பின்ன என்ன? வீட்டைத் திறக்க வேண்டியதுதானே!. ஆள் இல்லாத வீட்டுல ‘காலிங்பெல்’ல அடிச்சுக்கிட்டே இருக்குற?” என்று சற்று எரிச்சலுடன் கேட்டுவிட்டு, சன்னல் கதவினை இழுத்து ‘சடார்’ என அடைத்துக்கொண்டார்.
‘ஆள் இல்லாத வீடு’ என்று அவர் கூறிய சொற்கள் என் பின்னந்தலையை அடித்ததுபோல இருந்தன. பின்னந்தலை வலிக்கத் தொடங்கியது. இடது கையால் நான் என் பின்னந்தலையைத் தடவிப் பார்த்தேன். பத்து நாள்கள் வளர்ந்த முடி ஊசிபோல என் விரல்களைக் குத்தியது.
நான் மொட்டை போட்டுப் பத்து நாள்கள் ஆகிவிட்டன என்பதை உணர்ந்தேன். பத்து நாள்களுக்குப் பின்னர் நான் இன்றுதான் வேலைக்குச் சென்றுள்ளேன் போலும். நான் எனக்குள் அதிரத் தொடங்கினேன். அழுகைக்கு முன்னதான அதிர்வு அது. அதாவது அது மனம் அழும் ஓசை. மனம் அழுத பின்னர்தான் உடல் அழும்போல. என் உடல் நடுங்கத் தொடங்கியது.
நடுங்கம் விரல்களால் வெளிச்சுவரில் இருந்த இருமுனைப் பொத்தானை அழுத்தி, வெளிவிளக்கினை அணைத்தேன். வீட்டுவாசல் இருண்டது. அதைவிட பேரிருளாக என் மனம் மாறியிருந்தது.
நான் என் கைகளைப் பார்த்தேன். இந்தக் கையால்தான் அம்மாவுக்குக் கொள்ளி வைத்தேன். என் கைகளில் வெப்பத்தை உணர்ந்தேன். அம்மாவின் உள்ளங்கைகளும் இதே வெம்மையோடுதான் எப்போதும் இருக்கும். அம்மாவின் ஓயாமல் வேலைசெய்யும் கைகளை நினைத்துக்கொண்டே வீதியில், கால்போன போக்கில் நடக்கத் தொடங்கினேன். என் முதுகுக்குப் பின்னால் யாரோ என்னைக் கைநீட்டித் தொட வருவதுபோல உணர்ந்தேன். ஆனால், நான் திரும்பிப் பார்க்கவுமில்லை ஆள் இல்லாத அந்த வீட்டுக்கு நான் திரும்பிச் செல்லவுமில்லை.
– – –
