உம்மாச்சு – ஒரு கிளாசிக் நாவல்

தொடர்ச்சியாக வாசித்த நாவல்களில் உம்மாச்சு மாதிரி, வாசகனை உள்ளிழுத்து தன்வசப்படுத்திக்கொள்ளும் நாவல் வேறொன்று இல்லை என்று தோன்றுகிறது. லட்சிய இந்து ஓட்டல், வனவாசி, இரத்த உறவு, வாழ்க்கைப் பாதை, கதை இல்லாதவனின் கதை என்ற வரிசையில் வாசிப்பின்பத்தில் முதலிடம் உம்மாச்சுக்குத்தான் .

ஒரு வாசகனாக மலையாள படைப்புகள் முதலில் என்னை வியப்பில் ஆழ்த்தின. பஷீரும், தகழியும், பொற்றெக்காடும், மாதவிக்குட்டியும், கேசவதேவும் என எத்தனைச் சிறந்த படைப்பாளிகள். மிகக்குறைந்த அளவில்தான் அவர்களை வாசிக்க வாய்த்திருக்கிறது. இன்னும் மொழிபெயர்ப்பில் கிடைக்காத படைப்பாளிகள் அதிகம் அங்கே இருக்கக்கூடும். கைம்மண்  அளவுதான் கற்றது என்றாலும் மலையாள இலக்கியத்தின் மீது கட்டுப்படுத்தமுடியாத காதலும் ஆச்சரியமும் ஏற்பட்டுவிட்டது. அதன் ஒரு உந்துதலால்தான் அந்நிலத்தின் மேல் பெரும்பித்தோடு அலைந்து  கொண்டிருக்கிறேன்.

வயநாடு இதுவரை சென்றதில்லை. உம்மாச்சு வயநாட்டினை நிலக்காட்சிகளாக கொண்டுள்ள நாவல். உம்மாச்சு எழுதப்பட்ட ஆண்டினை ஒப்பிட்டுப்பார்க்கும் போது புரட்சிகரமான நாவல். ஒரு தரவாடு நாயர் ஸ்த்ரி , இஸ்லாமியன் ஒருவனை காதலித்து மணந்துகொள்வது, சாதித் திரட்சி மிகுந்த கேளர நிலத்தில் நம்ப முடியாததுதான்.

இந்நாவலும் கேரளப் பெண்களின் நிமிர்வினைத் தான் சொல்கிறது. உம்மாச்சுவும் அவள் மருமகள் சின்னம்முவும் மையப்பாத்திரங்கள். ஆளுமை மிகுந்த பெண்கள். அவர்களின் ஆண்களை அவர்களே தேர்வு  செய்கிறார்கள். அதற்காக எந்த எல்லை வரையிலும் செல்லத் தயங்கவில்லை. தன் காதலனை அடைய வேண்டும் என்பதற்காக தன் கணவனை கொல்லும் காதலனை மன்னிக்கும் மனநிலைவரை உம்மாச்சு சென்றடைகிறாள். காதலனை இழந்து திருமணம் ஆனது வசதியான வீடுதான் என்றாலும் உம்மாச்சு அடையும் துயரம் அசலானது. ஒரு சிறிய சதி மூலம் பிரான் உம்மாச்சுவை மாயனினிடமிருந்து தட்டிப்பறிக்கிறான். பீரானுக்கு உம்மாச்சு அடையவேண்டிய இலக்கு. திட்டமிட்டு அடைந்தும் விடுகிறான். ஆனால் மாயனுக்கு அது ஒரு சதி. பலிதீர்த்துக்கொள்ளும்விதமாக பீரானை கொலைசெய்துவிடுகிறான். உம்மாச்சுவின் அனுமதியின்றியா அது நடந்திருக்கும். வயநாடு சென்று பெரும் பொருளீட்டி, ஊருக்குத் திரும்பி விதவையான உம்மாச்சுவை மீண்டும் மனைவியாக்கிக்கொள்கிறான் மாயன். நாவலின் வலுவான முடிச்சு இதுதான். காதலும் காதலை அடைவதற்காக மேற்கொள்ளும் சதியும். குற்றமும் அதற்கான தண்டனையும் என்ன என்பதை முன்வைத்து மன ஆழங்களின் தத்தளிப்பினை விவரிக்கும் நாவலாகவும் இதை விரித்துகொள்ளலாம்.

ஒரு மலையாள கிராமத்தின் அசல் வாழ்க்கை இந்நாவலில் உள்ளது. அக்காலத்திய கிராமங்களில் நிலவி வந்த சமூதாய படிநிலைகள், பொருளாதார போக்குவரத்து, சாதிகளும் மதங்களும் கொண்டிருந்த சர்வ வல்லமை பதிவு செய்யப்பட்டு இணை வரலாறாகவும் நாவல் உள்ளது. பிரிட்டிஷ்காரன் ஆட்சி நடந்துகொண்டிருந்த காலத்தின் நாவல். மிகப்பெரும்பாலான வங்க நாவல்களைப் போன்று இருபதாம் நுாற்றாண்டு முற்பகுதியை காலமாக கொண்டுருக்கிறது.

சில நாவல்களை வாசிக்க வாசகர் மெனக்கெட வேண்டும். மீண்டும் மீண்டும் அக்கறையோடு நாவலைப் பின்தொடர வேண்டும். வாசிப்புத்தடைகளை கடந்து வரவேண்டும்.  கிளாசிக் நாவல்களில் பலவும் இத்தன்மையைக் கொண்டிருக்கின்றன. எனக்கேற்பட்ட சமீபத்திய உதாரணம் இரத்த உறவு. பல நாட்கள் அந்நாவலை மடியில் ஏந்தி விட்டதைத் தொடர்ந்திருக்கிறேன்.  ஆனால் உம்மாச்சு மாதிரி விதிவிலக்கான நாவல்களும் இருக்கின்றன. கிளாசிக் நாவல்களுக்கு உரிய ஆழமும் விரிவும் கொண்டிருந்தாலும் ஒரு அமர்வில் வாசித்து முடித்துவிடத் துாண்டும் கதைச் சுவாரசியம் கொண்டிருக்கிறது இந்நாவல். பெரும் நாவல்களை புத்தகங்களாக வாசித்துப் பழகிய எனக்கு ஒரு நாவலை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து வாசித்த முதல் அனுபவம்.  முதல் சில அத்தியாயங்களைப் படித்துவிட்டு சும்மா இருக்கமுடியவில்லை.

மனித மனங்களின் ஆழுள்ளம்  வெளிப்படும் தருணங்களே ஒரு நாவலை மகத்தான படைப்பாக மாற்றிவிடுகின்றன.  இந்நாவலில் அத்தருணங்கள் மிகுதி.  விரும்பியவனை அடைந்த பின்னரும் உம்மாச்சு மகிழ்ந்திருக்க முடியவில்லை. மகன்களின் மூலம் செய்த குற்றத்திற்கான தண்டனை அவளை வந்தடைகிறது. பெரும் செல்வம் சேர்ந்த வீட்டை கிராமம் ஒதுக்கிவைக்கிறது. தனிமைப்படுத்துகிறது. உம்மாச்சுவை தனிமை வாட்டி வதைக்கிறது. தனிமையைத் தாண்டும் முகமாக ஒரு காட்சியில் வேலைக்காரியை அழைத்து ஏதாவது பேசு என்கிறாள் உம்மாச்சு. பலமுறை கேட்டுமுடித்த ஒரு கதையை வேலைக்காரி சொல்கிறாள்.  வெற்றிபெற்ற ஆளுமையாக முதலில் தோன்றிய உம்மாச்சுவின் பிற்கால வாழ்க்கைப்பாடுகள் அவள் மீது பரிதாபத்தை உண்டாக்குகின்றன.

உம்மாச்சுவின் மூன்று மகன்கள். முதல் கணவனுக்கு அப்து, இரண்டாம் கணவன் மாயனுக்கு இருவர்கள்.  அப்துவின் மொத்த வாழ்க்கையையும் மாயன் ஓரிரவில் வீடு புகுந்து உம்மாச்சுவை அவனிடம் இருந்துதட்டிப்பறித்த பீரானை   கொலைசெய்வதால் பாதிப்படைகிறது. அவன் இயல்பான ஆண் குழந்தையாக வளர முடியவில்லை. அப்பனைக்கொன்றவன் என்று தெரிந்தும் அவனை தன்னுடைய தந்தையாக வீட்டிற்குள் எ திர்கொள்ள நேரிடுகிறது அப்துவிற்கு. இக்கதைக்கோணத்தில் நாவலை மீள் வாசிப்பு செய்தால் இன்னும் வலுவான சிக்கல்கள் எழுந்து வரும்.

வீழ்ந்த பெண்களின் உலகத்தைவிட வெற்றி பெற்ற பெண்களின் வாழ்க்கைக் கதைகள் அபூர்வம். உம்மாச்சுவிற்கு இறுதியில்  வெற்றிதான். அப்துவின் காதலை ஏற்றுக்கொள்ள அவள் ஆடும் இரட்டை வேடம் அவளின் ஆளுமையின் ஒரு பகுதியாக இருக்கிறது.

எத்தனை வெறுப்பு இருந்தாலும் குழந்தைகள் உறவுகளை கொண்டு வந்து பிணைக்கின்றன. அப்து- சின்னம்முவின் குழந்தையின் அழுகுரல் கேட்டு, தாத்தாவாக சாப்புண்ணி நாயர் உணர்ச்சி மேலிட்டு கண்ணீர் மல்க  வாசலில் அமர்ந்துவிடும் இடத்தில் நாவல் முடிகிறது. மனித வாழ்வின் தீராத விநோதங்களைச் சொல்லி நாவலை முடிக்கிறார் உரூப். இன்னும் ஒரு முறை புத்தகமாக வாசிக்க வேண்டும். மறுவாசிப்பில் பல நுண் தருணங்கள் சிக்கக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *