மனம் கவர்ந்த விமர்சகர்- சி.மோகன்

எப்போதுமே விரும்பி வாசிக்கும் விமர்சகர்களில் ஒருவர் சி.மோகன். நற்றிணை வெளியிட்டுள்ள அவரின் தொகை நுால் முக்கியமானது.

சி.மோகன் இலக்கிய விமர்சகர், மொழி பெயர்ப்பாளர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், நாவலாசிரியர் என்ற பன்முகத்தன்மை கொண்டுள்ளவர். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்ச்சூழலில் இயங்கிக்கொண்டிருப்பவர்.

இந்து தமிழ்திசையில் நவீன இலக்கிய ஆளுமைகள் குறித்து அவர் எழுதிய தொடர் புத்தகமாக வெளிவந்துள்ளது. அதைத்தான் இப்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன். முக்கியமான நுால்.

எழுத்தில் வாசிக்கக் கிடைப்பதைத் தாண்டி நேர்ப்பேச்சில் மட்டுமே காணக்கிடைக்கும் அரிய அனுபவங்கள் எப்போதுமே படைப்பாளிகளிடம் உண்டு.  சிந்தனையாளர்களை, படைப்பாளிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடுவது என்றுமே முக்கியத்துவம் வாய்ந்தது. சி.மோகன் இந்த நுாலில் 16 எழுத்தாளர்களைப் பற்றிய அனுபவக் குறிப்புகளைப் பதிவு செய்திருக்கிறார். அவர்கள் அத்தனைப் பேருடனும் அவருக்கு படைப்புகள் வழியாகவும் நேர் அனுபவங்கள் வாயிலாகவும் கிடைத்த அறிதல் முறைகளை முன் வைக்கிறார்.

உதாரணமாக வெங்கட் சாமிநாதன் பற்றிய அவருடைய பதிவில் எழுத்தில் காணக்கிடைக்காத வெங்கட் சாமிநாதன் தோன்றுகிறார்.

பீடிகள் புகைத்தபடி, மாமிசமும் மதுவும் விரும்பி உண்ணும் வெங்கட் சாமிநாதனை அவருடைய எழுத்தில் எங்குமே காண முடிவதில்லை.

வெங்கட் சாமிநாதனுக்கும் சி.மோகனுக்கும் ஏற்பட்ட நெருக்கம். அதில் கருத்து வேறுபாடு காரணமாக உண்டான பிளவு. பின்னர் ஒரு சந்திப்பில் அந்த தயக்கம் சட்டென்று பனி விலக்கம் போல மறைந்து மீண்டும் துளிர்க்கும் நல்லுறவு என பல்வேறு காலகட்டத்தில் நிகழ்ந்த குணச்சித்திரங்களை காணக்கிடைக்கிறது.

வாழ்க்கைதான் மிக மேலான மகோன்னதமான சாதனம். அதுவே முழுமையான, பிரதானமான சாதனம். இலக்கியம் கலை போன்ற பிற சாதனங்கள் அனைத்தும் அந்த முழுமையின் அங்கங்கள். அந்த முழுமையோடு மனிதர்கள் ஆழ்ந்த உறவுகொண்டு தம்மை மேம்படுத்திக்கொள்வதற்கும் செழுமைப்படுத்திக் கொள்வதற்குமான அங்கங்கள். எழுத்து போன்ற ஓர் அங்கத்தில் ஒரு படைப்பாளியின் வெளிப்பாடு எத்தன்மையதாக இருந்தாலும் வாழ்க்கை என்ற முழுமையில் அந்த வெளிப்பாடு எவ்வாறு அங்கம் வகிக்கிறது, இசைகிறது என்பதே முக்கியம் என்று கருதியவர் வெங்கட் சாமிநாதன் என்று வெங்கட் சாமிநாதனை மதிப்பிடுகிறார் சி.மோகன்.

 கலை இலக்கியங்களைத் தனித்த துறைகளாக அல்லாமல் வாழ்க்கை எனும் மைய நீரோட்டத்தில் வந்திணையும் கிளை நதிகளாகப் பார்த்தார். அதன் காரணமாகவே நவீன ஓவியம், நாட்டார் கலைகள், திரைப்படம், அரங்கக் கலை, இலக்கியம் அனைத்தோடும் நாம் கொள்ள வேண்டிய உறவின் அவசியத்தை வலியுறுத்திய முதல் குரல் வெ.சா.விடம் இருந்து எழுந்தது. அனைத்து கலை அனுபவங்களின் வழியாகவும் வாசகன்பெறுமதியான அனுபவங்களைப் பெறுவதற்கான களமாகச் சிறுபத்திரிகை இயக்கம் அமைய வேண்டும் என்ற அடிப்படையை வலியுறுத்திய குரல் வெங்கட் சாமிநாதனுடையது.

வெங்கட் சாமிநாதன் மட்டுமல்ல அந்தக்காலத்திய சிறுபத்திரிகைச் சூழலின் மீதான சரியாக மதிப்பீடாக இதை நாம் எடுத்துக்கொள்ளலாம். குமாஸ்தாக்களாக எங்கங்கோ வேலை பார்த்துக்கொண்டு தமிழ்ச்சிந்தனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கனவுகளோடு நம் முன்னோர்கள் தீவிரமாக இயங்கி்ககொண்டிருந்திருக்கிறார்கள்.

ஆனால் மேதைகள் என்று இன்று நாம் மதிப்பிடக் கூடிய அத்தனைப் பேரிடமும் சில கோணல்களும் சேர்ந்தே இருந்திருக்கிறது. அது வெங்கட் சாமிநாதனிடமும் உண்டு என்பதையும் சி.மோகன் எழுதி உள்ளார்.

யாத்ராவில் வெங்கட் சாமிநாதன் எழுதிய கட்டுரை ஒன்றில் மதுரையில் பிரமிள் ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்த போது அந்த நண்பரின் குழந்தை- பிரமிளின் விசித்திர நடவடிக்கை காரணமாக இருக்கலாம் – அவரைக் கிறுக்கு என்று கூறிவிட்டதை வெளிப்படுத்தி, “குழந்தையின் வாக்கு தெய்வ வாக்குதானே“ என்றும் குறிப்பிட்டிருந்தார்.  அவருடைய இந்த கோணலான வெளிப்பாட்டிற்கு  சுந்தர ராமசாமியும் நானும் எதிர்வினை ஆற்றியிருந்தோம் என்கிறார் சி.மோகன்.

இந்தச் சிறுகட்டுரையில் வெங்கட் சாமிநாதன் மீது பல்வேறு கோணத்திலான பார்வைகளை மிகக் கச்சிதமாக சி.மோகன் பாய்ச்சியிருக்கிறார். அதற்குத் தேவையான விரிவான வாசிப்பு அவரிடம் இருக்கிறது.

சுந்தர ராமசாமி வெங்கட் சாமிநாதனின்  ஒரு எதிர்ப்புக் குரல் நுாலுக்கு எழுதிய முன்னுரையில் எழுதிய வரிகள் இவை.

”தமிழ்க் கலைத்துறைகள் மீது வெங்கட் சாமிநாதன் கொண்டிருக்கும் ஆவேச ஈடுபாடு வெகு அபூர்வமானது. தமிழ் இனத்தோடு தன்னைப் பிணைத்துக்கொண்டிருக்கும் தன்மையில் இவரை பாரதியுடன் மட்டுமே ஒப்பிட முடியும்”

“ஒரு நோயாளியைப் பரிசீலனை செய்து, நோய்க்கூறு பற்றிய தங்கள் ஆய்வில் வேற்றுமை கொள்ளும் காரியமாகக் க.நா.சு. செல்லப்பா ஆகியோரின் நிலைகளை நாம் கண்டால், மூன்றாவது மருத்துவர் ஒருவர் புகுந்து, தன் வாதங்களையும் நிரூபணங்களையும் முன்வைத்து, “நோயாளி இறந்து பல்லாண்டுக்காலம் ஆயிற்று“ எனக் கூறிய காரியமாகத்தான் வெ.சா.வின் நிலை இருந்தது” என வெங்கட் சாமிநாதனின் கலை இலக்கியச் செயல்பாடுகளை சுந்தர ராமசாமி மதிப்பிடுகிறார்.

இந்த நுால் அளிக்கும் கண் திறப்புகள் அநேகம். பசித்த புலிகள் தேடிக் கண்டடைந்தால் போஷாக்கான ஊன் நிரம்பக் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *