அடுநறாக் காமம் – நவீன உளவியல் நோக்கில் திருக்குறள் -1. அழகி

1.

‘காதல்’ உடலுக்கு மட்டும் அன்று, அது உள்ளத்துக்கும் அறிவுக்கும் இடையே ஏற்படும் ‘அழகிய நடனம்’. திருக்குறள் இன்பத்துப்பாலில் ‘களவியல்’ என்ற பகுதியில் முதல் அதிகாரமாக இடம்பெற்றிருப்பது ‘தகையணங்குறுத்தல்’ ஆகும். இதில் வள்ளுவர் காதலின் முதல் பருவத்திலேயே ஏற்படும் மனநிலை, உளவியல் உணர்வுகள் மற்றும் சமூகத்திற்குள் நுழையும் காதலரின் பயணம் ஆகியனவற்றை வர்ணித்துள்ளார். 

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலும்என் நெஞ்சு

அவள் தெய்வ மகளா, மயிலின் அழகை ஒத்தவளா அல்லது கனமான நகைகள் அணிந்த மனிதப் பெண்ணா என்று அவர் எண்ணித் திணறுகிறார். அவளின் அழகு எந்த உருவத்தையும் கடந்ததாய் இருப்பதால் அதைச் சரியாக விவரிக்க முடியாமல் போகிறது. அந்த மயக்கும் அழகால் கவிஞரின் மனம் குழப்பத்துடன் மயங்கி விடுகிறது.

நாம் இந்தக் குறட்பாவினை மனக் கலக்கம், பிரமிப்பு மற்றும் காதலால் வந்த மனநிலை ஆகியவற்றின் உளவியல் வெளிப்பாடாகவும் காதல் உந்துதல் பெறும் நெஞ்சின் நிலைப்பாடாகவும் பார்க்கலாம்.

ஓர் அழகிய பெண்ணைக் கண்டவன் அவளின் அழகில் மயங்கி,  “இவள் மனிதப் பெண்ணா?” என ஐயப்படுகிறான்! இதுவே காதல் உருவாகும் ஒரு முக்கியமான உளவியல் தருணம். இது ஒரு தனிப்பட்ட அனுபவமாக இருந்தாலும், பலருக்கும் பொது அனுபவமாகவும் உள்ளது. ‘காதல்’ என்ற உணர்வு உருவாகும் நேரத்தில் மனித மனம் வெளியுலகைவிட அந்த ஒரே ஒருவரையே நெருங்கிப் பார்க்கத் தொடங்குகிறது.

அந்தப் பெண் அவனுக்கு ஓர் அணங்கு (தெய்வீகப் பெண்) போன்று தெரிகிறாள். இது உளவியலின் மிகைப்படுத்திப் பார்ப்பது (Idealization) என்ற மனநிலையை நினைவுபடுத்துகிறது. காதலின் தொடக்க நிலையில், ஒருவர் மற்றொருவரை வழக்கமான மனிதராக அல்லாமல், பரிபூரண வடிவமாக, குற்றமற்ற ஒருவராகப் பார்க்கின்றனர். இதுவே அவனின் “அணங்குகொல்?” என்ற வார்த்தையில் வெளிப்படுகிறது.

அடுத்ததாக, “ஆய்மயில் கொல்லோ?” என்கிறான். இது ஓர் உவமை. காதலியின் நடை, உடல் அமைப்பு, மென்மை ஆகியன மயிலின் நடையை ஒத்ததாக அவனால் உணரப்படுகிறது. 

உளவியலில், மனிதன் இயற்கை வழியாகவே அழகைப் பற்றிய தங்களது பார்வைகளை உருவாக்குகிறார்கள். மயில் என்பது அழகு, நேர்த்தி, மென்மை ஆகியவற்றின் குறியீடு. அதனால்தான் அந்தப் பெண் ‘மயிலைப்போல் இருக்கிறாள்’ என்று அவன் மனம் நம்புகிறது.

அடுத்து, “கனங்குழை மாதர்கொல்?” என்பது, ‘உண்மையிலேயே அவள் மனிதப் பெண்தானா?’ என்று ஐயப்படும் வகையில் உண்டான கேள்வியாக உள்ளது. ‘கனங்குழை’ என்பது பெருமை மிகுந்த நகை. அதில் அவள் பெண்ணாக இருந்தால்கூட, அவளது மேன்மை நம்மை மயக்கவைக்கும் அளவிற்கு உள்ளது.

“மாலும்என் நெஞ்சு” என்ற இறுதி வரி, இக்காதல் உணர்வுகளின் உச்சநிலையை உணர்த்துகிறது. இது காதலின் உளவியல் விளைவு. மனத்தின் முழுமையான ஆக்கிரமிப்பு (Emotional overwhelm). இது மனம் ஒருவரால் மட்டுமே நிரம்பி, மற்றவை மறக்கப்படும் நிலை.

இந்தக் குறள், காதலால் வரும் உளவியல் மாற்றங்களை மிக அழகாகச் சொல்லுகிறது. இது ஒரேநேரத்தில் விசித்திரமானதும் பரிதாபகரமானதும் ஆனந்தம் மிக்கதுமான மனநிலையைக் காட்டுகிறது. மனம் உணர்வுகளால் ஆட்பட்டுவிட்டதை இது அழகாகச் சொல்கிறது. 

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண் டன்ன துடைத்து

அவள் தன் கண்களால் நேராக அவரைப் பார்ப்பது, தன்னால் தனியாகவே யாரையும் வெல்லக் கூடிய சக்தி கொண்ட தெய்வம் போலத் தோன்றுகிறது. அவள் பார்வை வெறும் பார்வை அல்ல, அது போருக்குத் தயாரான படைகளைச் சேர்த்துத் தாக்க வருவது போலச் சக்தியுடன் உள்ளது.

இந்தத் திருக்குறள் காதலின் உளவியல் பாதிப்பை மிக ஆழமான நுணுக்கத்துடன் விவரிக்கிறது. கவிஞன் இங்கே ‘பார்வை’ என்ற ஒரு மிகச் சிறிய நிகழ்வை எடுத்துக்கொண்டு, அது தன் நெஞ்சில் ஏற்படுத்தும் பெரும் தாக்கத்தை உணர்த்துகிறார். இது காதலின் ஆரம்பக் கட்டத்தில் ஒருவருக்குள் ஏற்படும் மனவியல் பதட்டங்கள், ஆர்வம், எதிர்பார்ப்பு, மயக்கம் ஆகியனவற்றின் வெளிப்பாடாகும்.

காதலின் ஆரம்ப நிலையில், ‘பார்வை’ என்பது மிகச் சிக்கலான உளவியல் நிகழ்வாகவே அமைகிறது. ஒருவர் மற்றொருவரை நோக்குவது மட்டுமே போதுமானது; அந்த நோக்கில் மறைந்திருக்கும் அன்பு, ஈர்ப்பு, ஐயம், விருப்பம் போன்றன அனைத்தும் மனித மனத்தின் ஆழங்களில் தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

இக்குறளில், “நோக்கினாள்” என்ற ஒரு சொல்லில் காதலியின் பார்வை முதற்கட்டமாக அமைகிறது. அதற்கு எதிராக “நோக்கெதிர் நோக்குதல்” எனக் கூறுவதை உளவியல் முறைப்படிச் சிந்தித்தால், இது ஒரு துலங்கல் மறுமொழி (Rresponse mechanism) ஆகும். அதாவது, ‘பார்வைக்குப் பார்வையால் பதிலளிப்பது’ என்பது ஓர் ஈர்ப்பு உணர்வின் முதற்கட்டமாகும். இது மனத்தின் ஆழத்திலிருந்து வரும் ஓர் இயற்கைத் தாக்கம். இந்தத் தாக்கம் எதிர்ப் பாலியல் ஈர்ப்பின் காரணமாக ஏற்படுகிறது.

பார்வையின் பரிமாற்றத்துக்குப் பிறகு, அதை ஒரு யுத்தம் போன்று உணர்கிறார்: “தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து.” – அவளது பார்வை ஒரு தெய்வப்பெண் சேனையுடன் வந்து தாக்கியதுபோல் இருப்பதாகக் கூறுகிறார். இங்கு ‘அணங்கு’ என்பது அழகு, மயக்கம், மர்மம் ஆகியவற்றுக்கான குறியீடு. ஓர் அழகிய பெண்ணின் பார்வை தன்னை ஈர்த்தது மட்டுமல்ல, தன் மீது ஆதிக்கம் செலுத்தியது என்றும் அந்தப் பார்வையின் காரணமாக மனம் முழுமையாகத் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து, அவளுக்குக் கட்டுப்பட்டு விட்டதெனக் கூறுகிறார்.

காதலின் போது ஒருவர் மற்றவரிடம் நிலையான ஈர்ப்பு உணர்வில் அகப்பட்டுக் கொள்கிறார். இது சிக்கலான சிந்தனைகளை, தவிப்பினை, மனக்குழப்பங்களை உருவாக்கும். ‘பார்வை’ என்பது, பற்றுறுதியையும் (விசுவாசம்), உறுதிப்பாட்டையும் (மனத்திடம்) பிணைக்கும் சக்தியாகும். அந்தப் பார்வையால், கவிஞனின் உள்ளம் யுத்தத்தில் பங்கேற்ற வீரனைப்போலச் சோர்வடைந்து விடுகிறது.

இவ்வாறு, பார்வையின் ஒரு சிறு சம்பவம் காதலின் உளவியல் தாக்கங்களை மிக விரிவாகப் பரிமாணிக்கச் செய்கிறது. இது உணர்ச்சியின் உச்சக்கட்ட நிலையில் உணர்வுகள் மனிதனை முற்றிலும் ஆட்கொள்கின்றன. சொல்லாத வார்த்தைகளைச் சொல்வதற்கும் மனத்தைக் கிளர்த்துவதற்கும் காதலில் ஒருவரின் பார்வையே போதுமானது.

இந்தக் குறள், காதல் உருவாகும் நொடிகளில் மனத்தில் ஏற்படும் தாக்கங்களை அழகாக எடுத்துரைக்கிறது. ‘பார்வை’ என்பது, காதலின் தொடக்கமாக மட்டுமல்ல, ஒருவரை முழுமையாக மாற்றும் உளவியல் துருத்தியாகவும் அமைகிறது. இது அழகும் உணர்வும் ஒன்றிணையும் காட்சியால் ஏற்படும் மனவியலின் மெய்ஞானப் பிம்பம்!

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கட்டு

கவிஞர் எமன் பற்றிய உணர்வை ஒரு பெண்ணின் பார்வையின் மூலம் வெளிப்படுத்துகிறார். அவர் முன்பு நூல்களில் எமன் பற்றிக் கேட்டிருந்தாலும், அதை நேரில் காணவில்லை. ஆனால், இப்போது அந்தப் பெண்ணின் கண்களைப் பார்த்தபோது, அதுவே எமனாக இருப்பதை உணர்கிறார். அவளின் கண்கள் பெண்ணின் இயல்பான நல்ல குணங்களையும் கொண்டிருந்தாலும் அதே நேரத்தில் போரிடத் தயாரான வலிமையையும் தன்னகத்தே வைத்துள்ளன. ஒரு பார்வையால் மனிதனை அடக்கக்கூடிய சக்தி அவளிடம் இருப்பதை இது காட்டுகிறது. பெண்ணின் அழகும் வலிமையும் எமனின் வலிமையை ஒத்ததாக உள்ளது.

இந்தத் திருக்குறள், காதலின் உளவியல் தாக்கத்தையும் அந்தத் தாக்கம் எவ்வளவு வலிமையானது என்பதை அற்புதமான உவமையுடன் சொல்கிறது. இதில் இடம்பெற்றுள்ள உரையாடல் காதலரின் உள்ளார்ந்த வேதனையையும் மயக்கத்தையும் உணர்வுகளால் ஏற்படும் மனவியல் மாறுதலையும் வெளிக் கொணர்கிறது.

“பண்டறியேன் கூற்றென்பதனை” என்ற வரியில், ‘கூற்று’ என்றால் என்னவென்றே முன்பு (பண்டு-முன்பு) அறிந்திருக்கவில்லை என்கிறார். ‘கூற்று’ என்பது எமன், மரணம் அல்லது உயிரைப் பறிக்கும் சக்தி என்று பொருள்படும். ஆனால், இப்போதுதான் உண்மையான ‘கூற்றின்’ வலிமையையும் அச்சத்தையும் உணர்கிறேன் என்கிறார். காரணம், ஒரு பெண்ணின் அழகில் மயங்கியதால் ஏற்பட்ட மனச்சலனம்!

இந்த வரிகள் காதலால் ஏற்படும் உளவியல் தீவிரத்தைத் (Iintensity) தெளிவாக வெளிப்படுத்துகின்றன. பொதுவாக, ‘மரணம்’ என்பது, மனிதனுக்கு மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்துவாகும். ஆனால் இங்கு, மரணம் பற்றிய அச்சத்தையும்விட மேலானது, ஒரு பெண்ணின் கண்களின் தாக்கம் என்று கூறுவது உணர்ச்சித் தீவிரத்தின் உச்சநிலையை எடுத்துக்காட்டுகிறது. இது காதல் மனநிலையின் ஒரு மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சி (Emotional exaggeration). ஆனால், அந்தத் துளியின் உள்ளே வாழும் உண்மை மிக ஆழமானது.

“பெண்டகையால் பேரமர் கட்டு” என்பது அந்த தாக்கம் எவ்வளவு வலிமையானதென்றும், அது நம்மைக் கட்டிப்பிடிக்கும் போர் போலவே என்பதையும் சொல்கிறது. ‘பெண்டகை’ என்பது, பெண்ணின் அழகு. பேரமர் – பெரிய அமர். அமர் – பெரிய கண் அல்லது போர். நேர்த்தியான பெரிய மயக்கம் தரும் கண்கள். மௌனமான போரின் வடிவம். ‘பேரமர் கட்டு’ என்றால் மிகப் பெரிய போரில் போராளியின் கட்டுப்படுத்திக்கொள்வதைக் குறிக்கும்.

இது அன்பு அல்லது காதல் என்பது ஒருவரை முழுமையாக ஆட்கொள்ளும் ஓர் உணர்ச்சியால் சிறைப்பட்ட நிலை (Emotional captivity). இதனால் அவர்கள் உணர்வுகளால் கட்டுண்டுபோவார்கள். நாமே நம்மை அன்பின் முன் ஒப்படைக்கும் நிலையிது. காதலின் ஆரம்பக் கட்டத்தில் ஏற்படும் ஒருவித மன ஈர்ப்பு, வேட்கை, அச்சம், வியப்பு ஆகியவற்றின் கலவையே இக்குறளில் சித்தரிக்கப்படுகிறது.

மனிதர்கள் காதலில் விழும்போது, அவர்கள் பழையதெல்லாம் மறந்து, புதிய உலகில் நுழைகின்றார்கள். அந்த உலகில் தவிப்புக்கூட இனிமையாயிருக்கும். அந்த வேதனை இங்கு மரணத்தின் உவமையோடு ஒப்பிடப்படுகிறது. ஆனால், இது ஓர் இனிமையான மரணம். உணர்ச்சிகளைச் சிதைக்கும் அளவுக்கு வேதனையைக் கொடுக்கும். ஆனால், ஒரேநேரத்தில் அந்த வேதனையிலேயே வாழும், தாழும் மனநிலையைக் கொண்டது இது. வாழ்வும் மரணமும் ஒன்றிணைந்து நிலையிது.

இந்தக் குறள், காதலில் மனம் சிக்கிக்கொள்ளும் உளவியல் உண்மைகளை மிகவும் தீவிரமாகவும் சிந்தனையைத் தூண்டும் வகையிலும் வெளிப்படுத்துகிறது. அழகு, ஈர்ப்பு, பாவனை ஆகியன ஒருவரின் உள்ளத்தை எப்படி மாற்றிவிடக்கூடும் என்பதையும் அந்த மாற்றம் எமனைப் (கூற்றுவனைப் அல்லது யமனைப்) புரிந்துகொள்ளும் அளவுக்குக்கூட வலிமையானதென்பதையும் கூறுகிறது. காதல் என்பது ஒரு போர்க்களம். ஆனால், அந்தப் போரில் நாம் தோல்வியடைந்தாலும் அதில் (அந்தக் களத்தில்) இருப்பதே வெற்றிதான்!

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்

பேதைக்கு அமர்த்தன கண்

இயல்பில் மெல்லிய, நற்குணம் மற்றும் அறிவு மிக்க பெண்ணாக இருந்தாலும், அவளின் கண்கள் அதைவிட வித்தியாசமான சக்தியை வெளிப்படுத்துகின்றன. அவற்றைப் பார்ப்பவரின் உயிரையே பறிக்கும் அளவுக்கு அவை தாக்கம் மிக்கதாக உள்ளன. அதனால் அவளின் மென்மையான குணத்திற்கும், கூர்மையான அறிவிற்கும் முரணாக அவளின் கண்கள் போர்ச் செய்பவை போலத் தோன்றுகின்றன. பெண்ணின் இயல்பை மீறிய அவளின் கண்கள் ஒருவரை ஈர்த்து அடக்கக்கூடிய வலிமை கொண்டவை.

இந்தத் திருக்குறள், காதலின் உளவியல் தளத்தில் கண்களால் ஏற்படும் தாக்கத்தை மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறது. கவிஞர் இங்குக் காதலியின் கண்களை வைத்துத் துடிக்கவைக்கும் உளவியல் உவமையைக் கட்டுகிறார். ஒருவரின் கண்களில் ஏற்படும் ஈர்ப்பு, அந்தக் கண்களைக் கண்டவர்கள் மனத்திலும் உடலிலும் ஏற்படும் தாக்கம், அது எப்படிக் காதலாக மாறுகிறது என்பது இந்தக் குறளின் காட்டுகிறது.

“பெண்டகைப் பேதைக்கு” எனக் கூறுவது காதலியைக் குறிக்கும். இவள் ஒரு ‘பேதை’. (அக்காலத்தில் பெண்களை அவர்களின் வயதை அடிப்படையாகக் கொண்டு ஏழு பருவத்தினராகப் பிரித்திருந்தனர். பேதை: 5-7, பெதும்பை: 8-11, மங்கை: 12-13, மடந்தை: 14-19, அரிவை: 20-25, தெரிவை: 26-31, பேரிளம்பெண்: 32-40).  “பெண்டகை” என்பது, பெண்மை நிறைந்த அற்புதமான இயற்கை வடிவம். இவளது அழகு சாதாரணமானதல்ல; அது கண்களில் ஒளிந்திருக்கும். இந்தக் கண்கள்தான் கவிஞனை மட்டுமல்ல, யாரையும் சிக்க வைக்கும்.

“அமர்த்தன கண்” என வருகிற சொல், அந்தக் கண்கள் வெறும் பார்வைக்கருவிகள் மட்டுமல்ல, மனத்தைக் கிளர்க்கும் சக்திவாய்ந்த ஆயுதங்கள் என்று குறிப்பிடுகிறது. அவை அமைந்திருப்பது அழகிய கட்டமைப்பில், ஆனால் அதன் தாக்கம் உயிரை உண்ணக்கூடிய அளவுக்கு வலிமையானது. அந்தக் கண்கள் எதிர்ப்பாலினரை ஈர்த்து வீழ்த்திவிடும் கண்ணிகள். 

“கண்டார் உயிருண்ணும் தோற்றம்” என்பது மிகவும் வலிமையான உளவியல் உவமை. ‘கண்கள்’ என்பன மனத்துக்குச் செல்வதற்கான கதவுகள். அந்தக் கண்களில் தோன்றும் பார்வை, விருப்பம், வெட்கம், ஈர்ப்பு, ஆசை போன்றன ஒருவரை மயக்க நிலைக்குக் கொண்டுசெல்லும். ஒருவர் காதலில் விழும் ஆரம்ப நிலையிது. இந்தக் கண்கள், பார்வையால் மட்டுமே உணர்ச்சிகளைத் தூண்டி, மனத்தைச் சிக்க வைக்கும். அப்போது, உள்ளத்தில் ‘உயிருண்ணும்’ உணர்வு தோன்றுகிறது. மனம் பாதிப்படைகிறது. மனம் கலங்குகிறது. மனம் தன்னுடைய உறுதியினை இழக்கிறது. உளடவியல் அடிப்படையில் நம் மனம் நமது வசத்திலிருந்து நழுவும் நிலையிது.

இங்கு, கவிஞர் “உயிருண்ணும் தோற்றம்” என்ற வார்த்தையை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்துகிறார். இது உயிரைப் பறிக்கும் வகையிலும், அதேநேரத்தில் அன்பில் திளைக்கும் வகையிலும் இருவகை அர்த்தங்களைச் சுமக்கிறது. காதலின் உச்சநிலையில், ஒருவர் இன்னொருவருக்காக முழுமையாக வீழ்வது ஒரு மரணத்தைப் போல இருக்கலாம் ஆனால், அது இனிமை வாய்ந்த தியாகம்தான்.

மன உளைச்சலும் தீவிர ஆசையும் அந்தக் கண்களில் திரண்டிருக்கும் உளவியல் மாயையும் சேர்ந்துவிட்டால், அது உயிரை உண்ணும் வலிமையைப் பெறுகிறது. இந்தக் குறள், பார்வை என்ற ஒரு சாதாரண நிகழ்வை, மனத்தின் ஆழ நிலைகளில் ஏற்படும் அதிர்வுகளுடன் இணைத்து, உளவியல் அடிப்படையில் நம்மைச் சிந்திக்க வைக்கிறது.

இந்தத் திருக்குறள், காதலில் கண்களின் தாக்கம் எவ்வளவு ஆழமாயிருக்கும் என்பதை வலியுறுத்திக் கூறுகிறது. ஒருவரின் மனத்தைக்கட்டி வைக்கும் பார்வை, ஒருபோதும் வெறும் பார்வையல்ல; அது உள்ளத்தை அசைக்கக்கூடிய, உயிரை உண்ணக்கூடிய சக்தி வாய்ந்ததே! அந்த உணர்வுதான் காதலை இயற்கையான, அதேசமயம் ஆழமான உளவியல் அனுபவமாக மாறிவிடுகிறது.

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கமிம் மூன்றும் உடைத்து

கவிஞர் பெண்ணின் பார்வையின் பலவிதமான தாக்கங்களை விவரிக்கிறார். அவளின் பார்வை அவரைத் துன்புறுத்தும் எமனைப் போலவும், முழு உடலிலும் பரவி மயக்கும் கண்ணைப் போலவும், ஏதோவோர் அச்சத்தை ஏற்படுத்தும் பெண்மானைப் போலவும் தோன்றுகிறது. ஒரு பெண்ணின் கண்கள் இவ்வாறு மூன்று வலிமைகளையும் கொண்டுள்ளன என்பதை அவர் உணர்கிறார். அவை மரண சக்தியையும், மயக்கும் கவர்ச்சியையும், அச்சமூட்டும் வலிமையையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்துகின்றன. பெண்ணின் பார்வை எளியதல்ல; அது பல நிலைகளில் மனிதனைத் தாக்கும் வல்லமை கொண்டது.

இந்தக் குறட்பா காதலின் உளவியல் கூறுகளை மிகுந்த சாகசத்தோடு, கவிமொழியில் நெஞ்சைக் கொள்ளைகொள்ளும் வகையில் கூறுகிறது. இக்குறளின் மையப்பொருள் காதலியின் பார்வை குறித்ததே!

கவிஞன் இங்கு இளம்பெண்ணின் நோக்கம் (பார்வை) பற்றிப் பேசுகிறார். அது சாதாரண பார்வை அல்ல. அதன் தாக்கம் மூன்று வலிமையான உருவங்களுடன் ஒப்பிடப்படுகிறது. 

  1. கூற்று – எமன், மரணம். 
  2. கண் – அழகு, ஈர்ப்பு. 
  3. பிணை – காதல் வலை, மனத்தைக் கட்டிப்பிடிக்கும் ஆசை. 

இந்த மூன்றும் ஒவ்வொன்றாகவே மனத்தின் மீது பெரும் தாக்கம் செலுத்தக் கூடியதே!. ஆனால் இளம்பெண்ணின் பார்வை, இந்த மூன்றின் கலவையாக இருக்கிறது என்று கவிஞர் உணர்கிறார். இதுதான் இக்குறளின் உளவியல் ஆழம்.

கூற்றமோ?” – மரண உவமை

பார்வையால் ஏற்படும் தாக்கம் ஒருவரை உளவியல் அடிப்படையில் சிதைக்கும் அளவுக்கு வலிமை வாய்ந்ததாக இருக்கிறது. காதலின் ஆரம்பத்தில் ஏற்படும் வேட்கை, அச்சம், குழப்பம் மற்றும் திருப்தியற்ற ஏக்கம் மனத்தைக் கொந்தளிக்கச் செய்யும். இவையே கவிஞனுக்கு “மரணம் போலத்” தோன்றுகிறது. அதாவது, காதலால் ஏற்படும் மனக்கொலை.

“கண்ணோ?” – அழகின் ஆழம்: 

அந்தப் பார்வை வெறும் நோக்கம் அல்ல, அது கண்களின் சிறப்பு. அந்தக் கண்கள் சொல்பவை உணர்வுகள். அவை பேசாமல் பேசும் நுண்ணியத் தூண்டுதல்கள். மனம் எதையோ எதிர்பார்க்கத் தூண்டும் அந்தக் கண்கள், அழகின் உச்சமாகத் தெரிகின்றன.

“பிணையோ?” – வலையிட்ட காதல்: 

பிணை என்றால் காதல் வலை. இது உளவியலில் உணர்ச்சி வயப்பட்டுப் பொறியில் சிக்கிக்கொள்ளும் நிலை (Emotional entrapment) ஆகும். பார்வை வழியாக ஏற்படும் ஈர்ப்பு, ஒருவரை ஆழமாகக் கட்டிவிடும். வலைக்கும் வலிமையும் உள்ளது. அந்த உணர்வுவலைக்கு ஒருவர் அகப்பட்டுக்கொண்டால் மீள இயலாத நிலையை அடைவார்.

இவையெல்லாம் சேர்ந்துவந்தால் என்ன நடக்கும்? மனம் முழுமையாக ஒரு நரம்பு வேதனைக்குள் சிக்கிக் கொள்கிறது. இதுவே உளவியல் அடிப்படையில் முழுமையாக ஆக்கிரமித்து ஆட்டிப்படைக்கும் (Obsession) நிலையை உருவாக்கும். ஒருவரின் பார்வை மூலம் இன்னொருவர் மனத்தில் நிரந்தர பிம்பம் பதியும்போது, அது காதலின் மிக ஆழமான கட்டமாகிறது. இதில் வேதனை, ஆசை, மரணம், மீட்பு போன்றன அனைத்தும் கலந்திருக்கின்றன.

இந்தத் திருக்குறள், காதலின் உளவியலை அழகாகச் சொல்லுகிறது. ‘காதல்’ என்பது வெறும் உணர்வு அல்ல, அது முழு மனத்தையும் ஆட்கொள்ளும் ஓர் உளவியல் போராட்டம். ஒரு பெண்ணின் பார்வை மூன்றே மூன்று (மரணத்தின் தாக்கம், அழகின் ஈர்ப்பு, காதல் வலையின் பிடிப்பு) வலிமைகளை உள்ளடக்கி இருக்கிறது. இக்குறள் காதல் என்ற உள்ளுலகத்தை நுட்பமாக எடுத்துக்காட்டியுள்ளது.

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்

செய்யல மன்இவள் கண்

கவிஞர் பெண்ணின் புருவங்களும் கண்களும் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிக்கிறார். அவளின் வளைந்த புருவங்கள் நேராக நின்று தடுக்குமானால், அவளின் கண்கள் தன்னிடம் ஏற்படுத்தும் நடுக்கமும் துன்பமும் குறையும் என அவர் கூறுகிறார். அதாவது, அவளின் புருவங்களும் கண்களும் சேர்ந்து மிகுந்த ஈர்ப்பையும் அதேநேரத்தில் துன்பத்தையும் தருகின்றன. புருவங்கள் கண்களின் தாக்கத்தைத் தடுக்க முடியாமல் போகின்றன என்பதால் அவை தன் மனத்தை ஆட்கொள்கின்றன. இவ்வாறு பெண்ணின் பார்வையின் வலிமையும் அதன் காரணமாக மனத்தில் ஏற்படும் அதிர்வையும் கவிஞர் நயமாக வெளிப்படுத்துகிறார்.

இந்தத் திருக்குறள் காதலின் உளவியல் வெளிப்பாடுகளுக்குச் சிறந்த சான்று. ஒருவரின் உணர்வுகள் எவ்வாறு வெளிப்படுகின்றன, அவை இன்னொருவரின் மனத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதையே இது நுணுக்கமாக எடுத்துரைக்கிறது.

காதலின் உளவியல் சிக்கல்கள், அதன் எதிர்பார்ப்பு, சாயல், அச்சம், விருப்பம், வெறுப்பு என அனைத்து மனநிலைகளும் இந்தக் குறளில் இடம் பெற்றுள்ளன. இங்குக் கவிஞன் தன் மனத்திற்கு ஏற்படும் “நடுக்கம்” என்பதையே முதன்மையாகச் சித்தரிக்கிறார்.

“கொடும்புருவம்” எனும் சொல், இளம்பெண்ணின் வளைந்து எழுந்த புருவங்களைச் சுட்டுகிறது. இதுவே அந்த ‘நரம்புவாதப் பார்வை’யின் ஆரம்பமாகவும் இருக்கிறது. இந்தப் புருவங்கள் கோணும் (வளைந்து நெளியும்) விதமே தன்னிச்சையாகக் கண்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. உளவியல் அடிப்படையில் கண், இமை மற்றும் புருவங்கள் ஆகியன ஒருவர் உணர்வுகளை வெளிப்படுத்தும் மிக முக்கியமான கருவிகள்.

ஒருவர் சினத்தில் இருப்பது, வருத்தத்தில் இருப்பது, ஆசையில் இருப்பது ஆகிய அனைத்தும் சப்தமில்லாமலேயே அவர்களின் கண்கள், இமைகள் மற்றும் புருவங்களில் வெளிப்படும். இங்கும், அவளது புருவங்களின் வளைவு அவள் உள்ளத்தின் நிலையைச் சொல்கிறது. ஆனால், அந்த வளைவு நேராக இருந்தால், அந்தப் பார்வை மறைந்துவிடும்; மறைந்தால், கவிஞனின் மனத்துக்கு  ஏற்படும் துன்பமும் தவிர்க்கப்படும்.

“நடுங்கஞர் செய்யல மன்இவள் கண்” – இங்கு ‘நடுங்கம்’ என்பது அச்சத்தின் உச்சமாக இல்லை. அது உணர்ச்சிகளால் ஏற்படும் அதிர்வுகள். காதலன், காதலியின் பார்வையில் இருக்கும் பொருளைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் பொழுது, அந்தப் பார்வையிலிருந்து ஏற்படும் திகைப்பு, குழப்பம், ஐயம், மனஅழுத்தம் ஆகியனவற்றை உருவாக்கும். இவையே நடுக்கமாகவும் மயக்கமாகவும் மாறும்.

‘மன உளைச்சல்’ என்பது காதலில் ஒரு பொதுவான நிலை. குறிப்பாக, காதலியின் பார்வையில் இருப்பது சினமா? விருப்பமா? ஏமாற்றமா? என்று அறியமுடியாத வகையில் ஏற்படும் குழப்பம் ஒரு போருக்கே சமமான மனச்சோர்வை உண்டாக்கும். இது உளவியலில் ‘தெளிவற்ற குறிப்புகள்’ மற்றும் ‘மன உளைச்சல்கள்’ (Ambiguous cues and mental distress) என்று குறிப்பிடப்படுகின்றது.

மனத்தின் இந்தத் தளர்வு காதலில் நன்றாகவே காணப்படுகிறது. கவிஞர் அவளது கண்கள்தான் இத்தனை வேதனைக்கும் மூலக்காரணம் என்கிறார். ஆனால், அதை மறைத்துவிடும் புருவங்கள் கோணாமல் (வளைந்து நெளியாமல்) நேராக இருந்தால், இதனைத் தவிர்க்கலாம் என்பதுபோல ஒரு காதல் குழப்பத்தின் கம்பீரமான உளவியல் குரல் இங்கு வலுத்து ஒலிக்கிறது.

இந்தத் திருக்குறள், பார்வையின் உளவியல் தாக்கத்தையும் காதலின் எடைதாங்காத உணர்வுப்பூர்வமான அச்சத்தையும் நுட்பமாகச் சொல்கிறது. இளம்பெண்ணின் கண்கள், இமைகள் மற்றும் அவற்றை வழிநடத்தும் புருவங்கள் ஆகியன காதலனின் உள்ளத்தை எந்தெந்த வகையில், எவ்வளவு சிக்கலாக்கும் என்பதை உளவியல் அடிப்படையில் இங்குச் சித்தரித்துள்ளன. ‘காதல்’ என்பது, கண்ணோட்டத்தில் தொடங்கி, நரம்பின் நடுக்கமாக மாறிவிடும் என்பதையே இந்தக் குறள் நமக்குச் சொல்கிறது.

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்

படாஅ மார்புமேல் துகில்

மதம் கொண்ட யானையின் நெற்றியில் அணியப்படும் அலங்காரம் பார்ப்பதற்கு, இளம்பெண்ணின் உறுதியான மார்பின் மீது மெதுவாக அசையும் ஆடைபோலத் தோன்றுகிறது. இது இயற்கையின் வலிமையையும் பெண்ணின் மென்மையையும் இணைக்கும் அழகிய உவமையாகும். யானையின் வலிமைமிக்க தோற்றமும் பெண்ணின் நளினமுமான அழகும் ஒன்றாகக் கலந்த இந்த ஒப்புமை, இரண்டின் சிறப்பையும் வெளிப்படுத்துகிறது. கவிஞர் இயற்கைக் காட்சியையும் மனித அழகையும் இணைத்துக் கலைநயம் மிக்க சித்திரமாக இங்குக் காட்டுகிறார்.

இந்தக் குறளில், தோழர் திருவள்ளுவர் உடல் உளவியலையும் மன உணர்ச்சிகளையும் கூர்மையாகப் புரிந்து, ஆழமான உளவியல் சிந்தனையுடன் கவிதையாக வடித்துள்ளார். இங்குக் கவிஞன் கூறுவதுபோல, பெண்ணின் மார்புகளின்மேல் படிந்துள்ள ஆடை நன்கு ஒட்டியிருந்தாலும் உணர்வுப்பூர்வ தாக்கத்தை உருவாக்குவதில்லை. அதாவது, அது வெறும் மூடியதுமல்ல, முற்றிலும் மறைப்பதுமல்ல என்பதே கவிஞனின் கூரிய பார்வை.

இந்தக் குறளின் உள்ளார்ந்த பொருளினைத் “தற்காப்பு உணர்வு மற்றும் வாஞ்சைத் தூண்டல்” என்று உளவியல் அடிப்படையில் சுருக்கமாகக் கூறலாம். ஆணின் மனத்தில், பெண்ணின் உடலின் மீது படிந்திருக்கும் ஒட்டிய ஆடைக்கூட, முழுமையான மறைவு தரவில்லை என்பதைக் கவிஞன் ஒப்பீட்டால் கூறுகிறார். மதம் பிடித்த களிற்றின் மேல் முகபடா வைத்தாலோ அது நிலைத்து இருக்க முடியாது என்பதுபோல, இங்குப் பெண்ணின் மார்புகளின் வளைவில் ஆடையும் சாயாமல் இடைமறைவாகவே இருக்கிறது என்று கூறுகிறார்.

இதனை உளவியலில் சிற்றின்ப கருத்து, கற்பனை விழிப்புணர்வு (Sensual perception and imaginative arousal) என்கிறார்கள். சில நேரங்களில் நேரடிப் பார்வைவிட, இலைமறைகாயான பார்வைகள் ஒருவரின் மனத்தில் அதிகமான சுவாரஸ்யத்தை உருவாக்குகிறது. இது ஆர்வவளையம் (Curiosity loop) எனும் உளவியல் விளைவை ஏற்படுத்துகிறது. அதாவது, முழுமையாக மறைந்திருந்தால் மனம் அமைதியடையும்; ஆனால், மறைந்தும் மறையாமலிருப்பது மனத்தில் வாஞ்சையைத் தூண்டும்.

உளவியலில் ‘பார்வை’ என்பது, முக்கியமான உணர்வுப்பாடாகப் பார்க்கப்படுகிறது. ஒருவரின் உடலை உடனடியாகத் தீண்ட முடியாத சூழலில், பார்வை மூலம் ஏற்படும் மன உந்துதல் அதிகமாகவே இருக்கும். அதனால்தான் கவிஞன் “படாஅ மார்புமேல் துகில்” எனப் புலப்படுகிற எளிமையான ஆடை ஒட்டியிருப்பினும் மனத்திலே கிளர்ச்சி மறைவாகவே இருக்கிறது என்கிறார்.

இந்தக் குறள், ஈர்ப்பு – விலகல் (Attraction-Avoidance) என்ற உளவியல் நிகழ்வையும் குறிக்கிறது. அந்த ஆடை இருக்கிறதா, இல்லையா என்பது கவிஞனுக்கே குழப்பமாகத்தான் இருக்கிறது. இதுவே ஒரு காதலனின் உள்ளத்தில் உருவாகும் குழப்பம், ஆர்வம், வாஞ்சை, விருப்பம் ஆகியவற்றின் அரைகுறையான நிலையை நமக்குச் சொல்லுகிறது.

இந்தக் குறள், உடலை மூடுவது என்ற அளவிற்கு மட்டும் இல்லாமல், அது மனித மனத்தில் ஏற்படுத்தும் உள் தாக்கங்களை, வாஞ்சைத் தூண்டல்களை, குறிப்பாக ஆண் மனத்தில் எழும் ஈர்ப்பை உளவியல் அடிப்படையில் புலப்படுத்துகிறது. காதலில் தோன்றும் உணர்ச்சி வேகங்கள், பார்வையின் வலிமை, மறைபாடுகள் ஆகியனவற்றை உள்ளடக்கியது. திருவள்ளுவர் இதனை மிக அழகாக, நேர்த்தியான உவமையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்

நண்ணாரும் உட்குமென் பீடு

கவிஞர் காதலின் வலிமை போரின் வலிமையைவிட மிகுந்தது என்பதைச் சொல்கிறார். போர்க்களத்தில் பகைவரை அச்சமூட்டிய தன்னுடைய வலிமை இப்போது காதலியின் பிரகாசமான நெற்றியின் முன் வளைந்து, தளர்ந்துவிட்டதாகக் கூறுகிறார். அதாவது, காதலியின் அழகு, ஒளி, கவர்ச்சி ஆகியன வீரனின் பெரும் வலிமையையும் அடக்கி விடுகின்றன. போரில் வெல்லும் வலிமை இருந்தாலும், காதலின் சக்திக்குச் சமமாக அது இல்லை. பெண்ணின் அழகும் காதலும் மனிதனை அடக்கிவிடும் வல்லமை கொண்டவை.

இக்குறட்பாவில்  தோழர் வள்ளுவர், காதலனின் உள்ளுணர்வுகளை மிக அழுத்தமாகவும் உளவியல் அடிப்படையிலுமான உண்மையோடு வெளிப்படுத்துகிறார். பார்வையின் தாக்கம், ஒரு வீரனின் மனத்தையும் வசியப்படுத்தும் வலிமை உடையது என்பதே. பொதுவாக, பீடு என்பது ஆண் ஒருவரின் ஆளுமை, தைரியம், மன உறுதி, வீர மனப்பான்மை ஆகியவற்றைக் குறிக்கிறது. பீடு என்பது உணர்ச்சியைத் தாண்டிய, ஆழமான உளவியல் அடித்தளத்திலான மனநிலை. இது தன்மானத்தின் வெளிப்பாடாகவும் பலத்தை உணர்த்தும் உள்மன உறுதியாகவும் இருக்கிறது.

ஆனால் இங்கு, அந்த ஆண்மையின் பீடு – காதல் பார்வையின் தாக்கத்தில் நொடியில் சிதறுகிறது. இது மன உளவியலில் உணர்ச்சிப் பாதிப்பு மூலம் அடையாள மாற்றம் (Identity shift through emotional vulnerability) என அழைக்கப்படுகிறது. அதாவது, ஒருவர் எப்போதும் வைத்திருக்கும் தன்மான நிலை (அதாவது ‘நான் ஒரு வீரன்’, ‘நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்’ என்ற தன்னம்பிக்கை) ஒரு கணம் நடந்த உணர்வுப் பாதிப்பால் முற்றிலும் சிதைகிறது. இக்கவிதையில், அந்த மாற்றத்தை ஏற்படுத்தியது பெண்ணின் ஒளிரும் பார்வையே!

இந்த நிகழ்வை உளவியலில் உணர்ச்சி நிராயுதபாணியாக்குதல் (Eemotional disarmament) எனக் கூறலாம். ஒரு புறம் போர்க்களத்தில்கூட அச்சம் இல்லாதவனின் உள்ளத்தில், ஒரு பெண்ணின் அழகிலும் பார்வையிலும் உள்ள உள்மன ஈர்ப்பு (subconscious attraction) தன்னம்பிக்கையை, மன உறுதியை முற்றிலும் தேய்த்துவிடுகிறது.

“ஞாட்பினுள்” என்பது மிகவும் முக்கியமான சொல். அது, அந்த நெற்றிப் பார்வை உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாது, நினைவாக மனத்துக்குள் ஊன்றி, தொடர்ந்து அந்த வீரனை மனத்தளவில் உடைத்து கொண்டிருப்பதாகவும் உணர்த்துகிறது. இது ‘உளவியல்முத்திரை’ (Psychological imprinting) எனப்படும் ஒரு விசேஷமான அனுபவம், மனத்தில் நீடித்து தாக்கம் ஏற்படுத்தும் நிகழ்வு.

இந்தக் குறள், காதல் என்பது வெறும் உடற்பாசம் மட்டுமல்ல; அது ஒருவரின் ஆளுமையைத் துளைக்கும் உளவியல் சக்தியாகவும் இருக்கக்கூடும் என்பதைக் கூர்மையாக உணர்த்துகிறது.

இந்தக் குறள் காதலில் ஏற்படும் உளவியல் மாற்றங்களை மிக அழுத்தமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் சித்தரிக்கிறது. காதல் என்பது எம்மின் வில்லும் உடைக்கும் அளவிற்கு நம் உள்ளத்தை மாற்றக் கூடியது. ஒருவனின் வீரபீடாக இருந்த மன உறுதி பெண்ணின் பார்வையின் நினைவால்கூட உடையக்கூடியது என்பதனை உளவியல் அடிப்படையில் திருவள்ளுவர் நமக்குக் காட்டியுள்ளார்.

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு

அணியெவனோ ஏதில தந்து

இங்குக் கவிஞர் பெண்ணின் இயல்பான அழகையும் உள்குணங்களையும் புகழ்கிறார். அவளின் கண்கள் பெண்மானைப் போல அச்சத்தை ஏற்படுத்துகின்றன. அவளின் உள்ளம் நாணத்தால் நிரம்பியுள்ளது. இவைதான் அவளுக்கு இயற்கையாகவே கிடைத்த அழகான நகைகள். இப்படிப்பட்ட இயல்பான குணங்களைக் கொண்டவளுக்கு வெளிப்புற நகைகள் தேவையா? என்று அவர் கேள்வி எழுப்புகிறார். பெண்ணின் நாணமும் பார்வையுமே அவளின் உண்மையான அழகு என்கிறார்.

இந்தத் திருக்குறள், காதலனின் உள்ளம் வெதும்பும் ஐயத்தையும் அதிலுள்ள உளவியல் குழப்பத்தையும் மிக அழகாக வெளிப்படுத்துகிறது. இது பொறாமை, உளஉணர்ச்சி, அடையாளக் குழப்பம் ஆகியனவற்றை உள்ளடக்கிய காதலின் ஒரு முக்கியமான உளவியல் பரிமாணத்தைக் குறிக்கிறது. 

இவள் பார்வை பிணைபோன்ற மென்மை உடையது. அதன் ஒளி ஒருவரின் உள்ளத்தை ஈர்க்கும் வலிமையுடைத்தது. அத்துடன் அவளிடம் நாணமும் உள்ளது. நயவஞ்சகமற்ற இயற்கையான மடமை. இவை இரண்டும் கூடும்போது, காதலனின் மனத்தில் அவளைப் பற்றிப் பரிசுத்தமான, பாவனையோடு நிறைந்த உளவியல் உருவாக்கம் தோன்றுகிறது. அவள் ஒருவனுக்கே சொந்தமானவள், மற்றவர்களோடு தொடர்பில்லாதவள் என்ற நம்பிக்கையை அவன் வளர்த்துக் கொள்கிறான்.

ஆனால், அவளது மேனியில் அவனுக்குத் தெரியாத, ஏதிலாரால் அளிக்கப்பட்ட அணிகள் காதலனுக்கு உள்மன உலைச்சலையும், அடையாளப் பிளவையும் ஏற்படுத்துகிறது. இவள் யார்? என்னுடையவளா? அல்லது மற்றொருவரிடம் தொடர்புள்ளவளா? என்ற கேள்விகள் அவனின் உள்ளத்தை உருக்குலைக்கத் தொடங்குகின்றன.

இது ‘அறிவாற்றல் மாறுபாடு’ (Cognitive dissonance) எனப்படும் உளவியல் நிலையை உருவாக்குகிறது. காதலனின் மனம் அவளை ஒரு பரிசுத்தமான பெண்ணாக வைத்திருப்பதுடன், ஒரேநேரத்தில் அவளது செயல்களில் பரிசுத்தம் இல்லாத சாயல் தெரிகிறது என உணர்கிறான். இந்த இருமை உணர்வுகள் அவனிடம் உளவியல் சார்ந்த தாக்கத்தை, வேதனையை ஏற்படுத்துகின்றன. 

காதலன் அந்தப் பெண்ணிடம் உரிமை உணர்வும் ஈர்ப்பு உணர்வும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறான். அவளது சிறிய செயலும்கூடத் தனக்கெதிராக மாறி, அந்த நம்பிக்கையை உடைத்துவிடும் என்று அவன் அஞ்சுகிறான். 

இது அச்சமோ, பொறாமையோ அல்ல, உண்மையில் தன்னிலைப்படை உணர்வின் பூரிப்பு. யாரேனும் உள்நுழைவதைப்போல அவன் உணர்கிறான். அதனால்தான், “அணியெவனோ ஏதில தந்து?” என்ற வினாவைத் தோற்றுவிக்கிறான். இது நம்பிக்கையின் திரும்பப்பெறுதல் அல்ல; மாறாக, நம்பிக்கையின் வலிமை எனக்கே ஏன் அவள் இதைச் செய்ய வேண்டும்? என்ற மனக்குறையாகத் தோன்றுகிறது.

இதில், காதலன் நெஞ்சில் தோன்றும் நுண்மையான உளவியல் தாக்கத்தையும் அவன் உருவாக்கும் காதல் உலகத்துக்குள் ஏற்பட்ட சிறிய சிலிர்ப்பையும் மிக அழகாகச் சித்தரிக்கிறார். நம் மனநிலையை, பார்வை, நாணம், அணிகள் போன்ற வெளிப்படையான சிறு விவரங்கள் எப்படி மாற்றக் கூடியவை என்பதே இக்குறளின் உளவியல் பின்புலம் ஆகும்.

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்

கண்டார் மகிழ்செய்தல் இன்று

மதுபானம் உடலை மயக்கச் செய்யும். அதேபோல் காதல் மயக்கத்தைத் தருகிறது. மதுபானத்தின் மயக்கம் உடலை மட்டுமே பாதிக்கும்; காதல் மயக்கம் மனத்தையும் இதயத்தையும் ஆழமாகத் தொட்டுவிடும். ஒரே பார்வை, ஒரு சந்திப்பு இதேபோல் மகிழ்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். ‘காதல்’ என்பது, மதுபானம் போல உடலை மட்டுமே அல்ல மனத்தையும் உணர்வுகளையும் மயக்கும் சக்தி கொண்டது.

இந்தத் திருக்குறள், காதல் என்பது வெறும் இருவருக்கிடையேயான உட்புற உணர்வாக இல்லாமல், சுற்றியுள்ளோருக்கே உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சக்தி என எடுத்துரைக்கிறது. இதை நவீன உளவியலில் ‘பாதிப்புத் தொற்று’ (Affective contagion) என்ற சொல்வழியாகப் புரிந்துகொள்ளலாம். ஒருவரின் உணர்ச்சி, அதனை உணராதோருக்கே பரவக் கூடியது.

மது அல்லது கள் உட்கொள்பவர் தனக்கு மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும். கள் குடித்தவர் மட்டுமே தளர்ச்சி, மயக்கம், பேரானந்தம் அல்லது துயரம் போன்றவற்றைப் பெறுகிறார். ஆனால் காமம், அதுவும் ஒளி பாயும் கண்கள், நெருக்கம், மென்மையான சிரிப்பு அல்லது பரிதாபமான பிரிவு என எந்த வடிவத்தில் வந்தாலும் அது அதைக் காணும் அந்நியனையும், மீண்டும் மீண்டும் நினைவுப் பதிவில் பதிய வைத்துவிடும்.

இந்தத் திருக்குறள் கூறுவது, “காமம் என்பது உட்கொண்ட (அனுபவித்த) காதலருக்கே மட்டுமல்ல; கண்டவருக்கே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது” என்ற உண்மை. இது ஓர் உணர்ச்சி எதிர்வினை.  ஒருவரின் சோக நிறைந்த கண்கள், அல்லது ஆழ்ந்த ஆசை நிரம்பிய பார்வை, மற்றொருவரிடம் உற்சாகத்தையும் அல்லது தொலைந்து போன நினைவையும் தூண்டக் கூடியது.

இதில் காதலனின் மனநிலை முக்கியமானது. அவன் காமத்தை ஒரு தனிப்பட்ட அனுபவம் என்று நம்பியிருக்கிறார். ஆனால், இப்போது அவன், “இது தனக்கு மட்டும் கிடைத்த அனுபவம் அல்ல. இவளை மற்றவர்கள் காணும்போதும் இவர்கள் மனத்தில் ஏதோ பசப்பூட்டுகிறாள்” என்று புரிந்துக்கொள்கிறான். இந்தக் கண்ணோட்டம் அவனுள் பொறாமை, ஆவல், தனிமையின் சுளிப்பு போன்ற உளவியல் தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

இது ‘சமூக அடிப்படையில் உணரப்பட்ட நெருக்கத்துடன் சுய மைய நெருக்கம்’ (Self-centric intimacy to socially perceived intimacy) என்பதற்கான மாற்றம். அதாவது, “இவள் என்னோடு மட்டுமே பகிர்ந்துகொள்ளும் உணர்வுகள்” என்ற நம்பிக்கை, இவள் தனக்கல்லாத மற்றவரையும் தன்னுள் இழுத்துக்கொள்கிறாள் என்ற உணர்வில் மாறுகிறது. இது காதலனின் மனத்தில் குழப்பத்தையும், ஒரு பாதுகாப்பற்ற உணர்வுநிலையை (Emotional insecurity) உருவாக்குகிறது.

திருவள்ளுவர், காதலின் உளவியல் சிக்கல்களை எளிய முறையில் கூறுகிறார். ‘கள்’ ஒருவரையே மட்டும் மயக்குகிறது; ஆனால் காமம்? அது பார்த்தவரைக்கூட விலகச் செய்யாத பெருந்தாக்கம் கொண்டது. காதல் என்பது தனிப்பட்டது என்பதையே கேள்விக்குள்ளாக்கும் இக்குறள், காதலின் உளவியல் பரிணாமங்களை ஆழமாகப் பரிசீலிக்கிறது.

‘தகையணங்குறுத்தல்’ அதிகாரத்தில் உள்ள பத்துக் குறட்பாக்களையும் நவீன உளவியல் கோட்பாடுகள் மூலம் மீளாய்வு செய்யப்படும்போது, ‘காதல்’ என்பது, ‘உடனடியாகக் கட்டியழுத்தும் மனச்சுழற்சி’ என்பதை நம்மால் உணர முடிகிறது.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *