அடுநறாக் காமம் – நவீன உளவியல் நோக்கில் திருக்குறள் 3.பார்வை

‘புணர்ச்சி’ என்பது ஒருவருக்கொருவர் மீதான விருப்பத்தின் உச்சபட்ச வெளிப்பாடாகும். இதன் மகிழ்வும் உளவியல் தாக்கங்களும் மனத்தின் ஆழத்திலிருந்து வருகின்றன. இது ஒருபோதும் ஒரு தனி நிகழ்வாக இல்லை – ஊடல், ஏக்கம், நினைவுகள், கனவுகள், மனஉணர்ச்சி ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றின் பின்நிகழும் ஒருமித்த நிகழ்வாகும். இந்தக் கூட்டு நிகழ்வினைக் குறித்து திருக்குறள் இன்பத்துப் பாலில் ‘களவியல்’ என்ற பகுதியில் மூன்றாவது அதிகாரமாக இடம்பெற்றுள்ள ‘புணர்ச்சி மகிழ்தல்’ விளக்குகிறது. 

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள

காதலியுடன் மட்டுமே உணரக் கூடிய ஆனந்தம், எல்லா உணர்வுகளாலும் (கண், காது, நாக்கு, மூக்கு, தொடுதல், உடல் முழுவதும்) அனுபவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. மற்ற யாரிடத்திலும் இதுபோன்ற ஆழமான, முழுமையான அன்பும் இனமும் கிடைக்காது. மனத்தில் உள்ள நெருங்கிய தொடர்பும், ஒளிரும் ஒற்றுமையும், உடல்-மனம் இணைந்த சுகமும், உணர்வுப் பரிமாற்றமும், காதலி மட்டுமே வழங்குவாள் என்பதையே இது உணர்த்துகிறது. இது வாழ்வின் உண்மையான மகிழ்ச்சி, அன்பு, சிற்றின்ப நிறைவு ஆகியனவற்றின் பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது.

மனித உடலியல், உளவியலில் ‘ஐம்புலன்கள்’ என்பன மிக முக்கியமான அனுபவத் தளங்கள். நாம் உலகைப் புரிந்துகொள்ளும் வழிகளாக (வாயில்களாக, வாசல்களாக) இவை செயல்படுகின்றன. பார்வை, ஒலி, சுவை, மணம், தொடுதல் ஆகிய இவை மனத்தையும் உணர்வுகளையும் பாதிக்கும் முக்கியமான ‘உணர்ச்சி வாயில்கள்’.

இந்தக் குறளில் வள்ளுவர் கூறுவது, ஒரு பெண்ணின் கண்கள் மட்டும் இருந்தாலும், அந்த ஐம்புலன்களால் பெறக்கூடிய இன்பங்களைச் சமமாகவே உணர்த்தும் அளவிற்கு உண்டு என்பதே. இது உண்மையில் பார்வையின் உளவியல் ஆழத்தை மிக நுட்பமாக எடுத்துரைக்கின்றது.

கண் – உணர்வு அகம்: கண்கள், உணர்வுகளின் பிரதான வெளிப்பாடுகளாகும். ஒரு காதல் பார்வையில் காதலின் மென்மையும், கவர்ச்சியும், அழுத்தமும் நேரடியாகக் காணலாம். அழகான, காதல் நிறைந்த பார்வை, மனத்திற்குள் மகிழ்ச்சியை உருவாக்கும். இது உளவியலின் அடிப்படையில் உணர்ச்சித் தூண்டுதல் (Emotional stimulation) எனப்படும்.

ஒருவரின் பார்வையின் மேன்மை, மற்ற அனைத்துப் புலன்களின் அனுபவங்களை ஒருங்கிணைத்து மனத்துக்கு உணர்த்தக் கூடியதாயுள்ளது. இந்த மெய்யான உணர்வைச் ‘ஒற்றைமெய் அனுபவம்’ (Synesthetic experience) என்றும் உளவியலாளர்கள் கூறுவர். அதாவது, ஒரு புலனின் ஊடாக மற்ற புலன்களின் தாக்கத்தையும் உணர்ந்துகொள்ளும் மனநிலை.

‘ஒண்தொடி’ என்ற சொல், கற்பனை பாவனைக்கேற்ப அழகினைக் குறிக்கிறது. அழகான தோற்றம், கண்கள், முகபாவனை ஆகிய இவை அனைத்தும் மூளையில் அழகியல் இன்பத்தைத் தூண்டுகின்றன. இது, மனத்தின் வெகுமதி அமைப்பினைத் (Reward system) தூண்டி ‘டோபமைன்’ (Dopamine) போன்ற இன்ப ஹார்மோன்களைச் சுரக்கச் செய்யும். 

ஒருவர் கண்கள் மூலம் மற்றவரில் ஈர்ப்பை ஏற்படுத்துவது, அது காதலின் ஆரம்பக் கட்டமாகும். அந்தக் கண்கள் மற்றவரைப் பார்த்து ஒரு கருத்தை அளிக்கும்போது, அதனூடாகக் காதல் வளர்ச்சி பெறும். இதுவே “ஐம்புலன்களின் திரட்டாக அவளது பார்வை” என இந்தக் குறளில் கூறப்பட்டுள்ளது.

திருவள்ளுவர், ஒரு பெண்ணின் பார்வை — குறிப்பாக அவளுடைய கண்கள் — மற்ற அனைத்துப் புலன்களின் அனுபவங்களையும் தாண்டும் சக்தி கொண்டது எனக் கூறுகிறார். இது உளவியல் அடிப்படையில் உணர்ச்சிகளைத் தூண்டும் பார்வையின் ஆழத்தையும், அதன் மனத்துக்கு ஏற்படுத்தும் தாக்கத்தையும் விளக்கும். உணர்வுகள் வார்த்தைகளைக் கடந்தும் கண்களிலேயே வாழ்கின்றன என்பதற்கு இது உயிரோட்டமான சான்றாகும்.

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

தன்நோய்க்குத் தானே மருந்து

சாதாரணமாக நோய்களுக்கு அந்த நோயைக் குறைக்கும், நீக்கும் மருந்தே தீர்வு தரும்; ஆனால், இங்கு அற்புதமான நிலை சொல்லப்படுகிறது – கணவன் அல்லது ஒருவர் உணர்ந்த வேதனையை, கவலையை, மனக்குழப்பத்தை, அவரை நேசிக்கும் காதலி தான் அவற்றை இழக்கச் செய்யக்கூடிய, போக்கக்கூடிய, நீக்கும் மருந்தாக இருப்பாள். அன்பும் பரிவும், ஆதரவும், மன உறவின் உணர்வுகள், மருந்துகள் அளிக்க முடியாத அமைதியையும் நிம்மதியையும் தரும். மனமெல்லாம் சுகமடைந்து, வேதனைகள் மறைந்து, உள்ளம் அமைதியடையும் அனுபவம், காதலியை மட்டுமே சார்ந்தது என்பதே இதன் முக்கியக் கருத்து.

இந்தத் திருக்குறள், காதலால் ஏற்படும் உள் வேதனையை மற்றும் அதற்கான தீர்வை மிக அழகாகச் சொல்கிறது. உளவியல் அடிப்படையில் நோய்கள் இரண்டு வகைப்படும். 1. உடல்நோய்கள் (Physical illness), 2. மனநோய்கள் (Mental or Emotional distress). உடல்நோய்களுக்கு மருத்துவரும் மருந்தும் தேவைப்படும். ஆனால், காதலால் ஏற்பட்ட மனவலிக்கு, அதே காதலிலிருந்தே நிவாரணமும் கிடைக்கிறது என்பது இக்குறளின் உளமதிப்பீடு.

காதலில் மூழ்கும் ஒருவர், காதலரின் பிரிவை, உதாசீனத்தைக் கூடக் கடுமையாக அனுபவிக்கிறான். இதனால் சோர்வு, கவலை, உறக்கமின்மை, உண்ணாமை போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். உளவியலாளர்கள் இதனைக் காதல்நோய் (Love-sickness) என்று அழைக்கிறார்கள். இது உணர்ச்சி சார்ந்த இனிய வலியாகும், உடல்நிலை பாதிப்புக்கு ஈடானது.

காதலால் ஏற்பட்ட மனஅழுத்துக்கு மற்ற யாராலும் மருந்து வழங்க இயலாது. அது நம்மைப் புண்படுத்திய நபரால் மட்டுமே குணமாக முடியும். அதாவது, மனநோய் ஏற்படுத்திய காதலரின் பார்வை, அவருடைய பேசும் மென்மை, அவர் அளிக்கும் அன்பு ஆகிய இவை அனைத்தும் இனிமையான தைலம் போலச் செயல்படுகின்றன. இதுவே வள்ளுவர் “தன்நோய்க்குத் தானே மருந்து” எனக் கூறும் நுட்பமான உண்மை.

“அணியிழை” என்பது இவளது அழகிய தோற்றத்தையே குறிக்கிறது. இதன் மூலம், அழகு மட்டும் காதலரின் நோய்க்கு மருந்து அல்ல. அவளது அழகு, மென்மை, பார்வை, பேச்சு ஆகியன ஒன்றிணைந்து இதயத்தைத் தொட்டுக் குணப்படுத்த செயல்படுகின்றன. இதனை ‘மனநல சிகிச்சைமுறை’ (Psychosomatic healing) என்பர். மனநிலை உடலைப் பாதிக்கிறது. அதிலிருந்து உடலை மீட்டெடுக்க மனநிலையே தீர்வாகிறது.

நம் உணர்ச்சிப் பிணிகள், அவற்றை உருவாக்கிய நபரால் மட்டுமே தீர முடியும் என்பது மிக ஆழமான உண்மையாகும். இது காதல் மட்டுமல்லாமல், நட்பிலும், பெற்றோர்களுடனான உறவிலும் காணப்படும் உளவியல் சுழற்சி. ஆனால், காதலில் இது இன்னும் தீவிரமாக இருக்கும்.

இதில் தோழர் வள்ளுவர், காதலால் ஏற்படும் மனவேதனையையும் அதற்கான ஒரே மருந்தாக அந்தக் காதலரையே சுட்டிக்காட்டுகிறார். உளவியல் அடிப்படையில், உணர்வுகள் வந்த இடத்திலேயே தீர வேண்டும் என்பது துல்லியமான அடிப்படை. காதல் என்பது ஒரு மனநிலை; அதனால் ஏற்படும் நோயும் மருந்தும் அந்த மனநிலையைத் தோற்றுவித்தவரிடம்தான் இருக்கிறது. இந்த உண்மையைத் தோழர் வள்ளுவர் கவிதையாக்கியுள்ளார்.

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு

‘காதலும் மனநிறைவும் கலந்த இனிமையான தருணத்தைப் பேசுகிறது. ஒரு மனிதன் தன் மனமார்ந்த (விருப்பமான) காதலியின் மென்மையான தோளைத் தழுவித் தூங்கும்போது கிடைக்கும் அமைதியும் மகிழ்ச்சியும், உலகின் எந்த மாபெரும் சுகங்களையும்விட அதிகம் இனிமையுள்ளதாக இருக்கும்’ என்று இங்குக் கூறப்படுகிறது. தாமரைக் கண்ணனான திருமாலால் பெற்ற சுகமும் அன்பும் பரிபூரணமாக இருந்தாலும், தனிப்பட்ட அன்பின் அணிமையும் நெருங்கிய உறவின் அமைதியும், மனிதனை உண்மையான சந்தோஷத்தில் மூழ்க வைக்கிறது. உணர்வு, அன்பு, உடல் நெருக்கம் கலந்த அந்த நேரம் வாழ்க்கையின் மிகச் சிறந்த இனிமை எனத் தெரிவிக்கிறது.

இக்குறளில் வள்ளுவர் மிக அழகாக, மனிதன் அனுபவிக்கும் காதல் உணர்வின் உச்சரூபத்தைக் கவிதையாக எடுத்துரைக்கிறார். இங்கு வெளிப்படாமல் ஓர் உளவியல் அனுபவமும் பசுமையாகக் கலந்து காணப்படுகிறது. மெய்யான காதல் ஒரு மனநிலையை மட்டுமல்ல, அது ஒரு வாழ்வியல் அனுபவம். அந்த அனுபவத்தின் உச்சம், காதலியுடன் அன்பாக இருநிலை பகிர்ந்துகொள்ளும் அருகாமை என்பதில்தான் இருக்கிறது.

மனிதன் உணர்ச்சி சார்ந்த உயிரியாக இருக்கிறான். அந்த உணர்வுகளில், காதல் மிக ஆழமானதும், பெருமூச்சும் ஏற்படுத்தக் கூடியதும் ஆகும். ஒருவரிடம் ஏற்படும் காதல், அவரின் புன்னகை, பார்வை, தொடுதல் போன்றவற்றால் உருவாகும். இந்த உளஉணர்வுகள், மனத்தில் ஓர் ஆழமான அன்பும் நெருக்கமும் உருவாக்குகின்றன. அந்நெருக்கத்தின் உச்சம்தான், இங்கு வள்ளுவர் கூறும் “மென்றோள் துயில்”.

தூக்கம் என்பது உடலுக்குத் தேவையான ஓய்வு மட்டுமல்ல. அது மனத்திற்கும் அமைதியையும், பாதுகாப்பையும் தரும். ‘ஒருவருக்குப் பக்கத்தில் விருப்பமான நபர் இருந்தால், அந்த மனிதனுக்கு ஏற்படும் மனநிலை அமைதி, பாதுகாப்பு மற்றும் உரிமை உணர்வை அதிகரிக்கிறது. இதனால் தூக்கம் சிறப்பாக அமையும்’ என்று உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன. ‘காதலியின் தோளில் துயில்வது, உலகத்தில் உள்ள எல்லா இன்பங்களுக்கும் மேலானது’ என்று தோழர் வள்ளுர் இங்குக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு “தாமரைக் கண்ணான்” எனும் வார்த்தை, விஷ்ணுவைக் குறிக்கிறது. அந்தப் பரப்பெருஞ் சிறப்பு உடைய திருமாலின் உலகம் என்பது ஆனந்தமான, கமலப்பூவாக அழகிய உலகம். ஆனால், காதலியின் அருகில் இருப்பதே தோழர் வள்ளுவருக்கு அதைவிட இனிமையாக இருக்கிறது. இது உளவியல் அடிப்படையில் தனிப்பட்ட நபரின் மனநிலை சார்ந்த இன்பமான ‘அகவய மகிழ்ச்சி’யைத் (Subjective happiness) தூண்டுகிறது. ஒருவருக்கு ஏற்படும் ஆனந்தம், அவருடைய சூழ்நிலை, மனநிலை, ஆசை, விருப்பங்களின் அடிப்படையில்தான் அமைகிறது.

அன்புக்குரிய ஒருவரின் நெருக்கம், அவரது உடல் மொழி, மென்மையான தோள்கள், சுவாசத்தின் அலை இவை எல்லாம் தூங்குவதற்கேற்படும் தழுவலால் ஒரு பரம இன்பத்தையே உண்டாக்கும். இது மனத்தைத் தூண்டும், நினைவுகளை நெகிழச் செய்யும். இது நம் மூளையில் ‘டோபமைன்’ (Dopamine), ‘ஆக்சிடோசின்’ (Oxytocin) போன்ற ஹார்மோன்களை அதிகரிக்கும். இதனால் மனத்திற்கு அமைதி, மகிழ்ச்சி, நிம்மதி ஆகியன ஏற்படும்.

இக்குறளில், வள்ளுவர் கூறுவது ஒருபுறம் காதலின் உச்சரூபம் போன்றதும், மறுபுறம் உளவியல் உண்மைகளைக் கொண்டதும் ஆகும். காதலின் உணர்வு, இரு உள்ளங்களின் ஒத்திசைவு மற்றும் உடல் நெருக்கத்தால் உருவாகும் பாதுகாப்பு உணர்வை உருவாக்குகிறது. அந்த உணர்வுகளின் தொகுப்பே — ஒருவரை “உலகம் என்னும் பேரின்பத்தைவிட” அதிகமான இன்பம் என உணர வைக்கும். காதலியரின் தோளில் நிம்மதியாக உறங்குவது, உண்மையான ஆனந்தத்தின் வடிவமே என்பதே தோழர் வள்ளுவரின் உளவியல் பார்வையும் உணர்வும்கூட.

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள்

சாதாரணமாக நெருப்பு வெப்பமாகவே இருக்கும்; ஆனால், இங்கு மங்கை ஒரு புதுமையான நெருப்பைப் பெற்றிருப்பாள், அது மனிதனிடத்தில் நெருங்கினால் குளிர்ச்சி தரும், தொலைவில் இருந்தால் தீத் தீட்டும் தன்மையுடையது. இதன் மூலம், அவளின் சக்தியும் அழகும் ஆச்சரியமும் தனித்துவம் கொண்டதாகக் காட்டப்பட்டுள்ளது. அன்பும் ஆர்வமும் கலந்த உறவின் சக்தி, சாதாரண அனுபவங்களை மாற்றி மனத்தை ஆழமாகப் பாதிக்கும். மனிதன் அவளுடன் இருக்கும்போது அனுபவிக்கும் அந்த நெருப்பு, காதல், ஈர்ப்பு, ஆச்சரியம் ஆகிய அனைத்தையும் இணைத்து, மனத்தை இழுக்கிறது.

இந்தத் திருக்குறள், காதல் எதிர்மறையும் நேர்மறையும் கலந்து காணப்படும் உளவியல் அனுபவத்தை மிகவும் அழகாகவும் ஆழமாகவும் விவரிக்கிறது. மனம், உணர்வு, உடல் ஆகிய மூன்று பரிமாணங்களும் இந்த ஒரு குறளில் மையம் கொள்ளப்படுகின்றன. ‘காதல்’ என்பது ஒரேநேரத்தில் இன்பமும் வேதனையும் தரக்கூடியது என்று வள்ளுவர் விளக்குகிறார்.

“நீங்கின் தெறூஉம்” எனும் வரியில், காதலியிடமிருந்து விலகும்போது ஏற்படும் வலியைத் தோழர் வள்ளுவர் “சுடுதல்” எனக் குறிக்கிறார். இது உணர்வுசார் வலி. அன்பு கொண்ட நபரிடமிருந்து பிரியும் போது நம் மனத்தில் ஏற்படும் பிரிப்புக் கவலை (Separation anxiety) அல்லது உணர்ச்சி விலகல் (Emotional withdrawal) போன்ற உளவியல் நிலையைக் குறிக்கிறது. இச்சமயம், மனம் தனிமையால் சோர்கிறது, நினைவுகள் வேதனையாய் வெளிப்படுகின்றன. இது நம் உடல் மொழிக்கேற்ப நம்மை மன அழுத்தம், உறக்கம் குறைதல், உணவுப் பழக்க மாற்றம் போன்ற பக்க விளைவுகளுக்கு உட்படுத்தும்.

“குறுகுங்கால் தண் என்னும்” எனும் வரி, மன உளைச்சலுக்குப் பிறகு நெருக்கமடைவதால் ஏற்படும் நிம்மதியை வெளிப்படுத்துகிறது. காதலியிடம் அருகில் இருப்பது, மனத்தில் ஏற்படும் அமைதியின் ஒரு முக்கியத்துவமிக்க காரணியாகும். இது மனித மூளையில் உமிழப்படும் ‘ஆக்சிடோசின்’ (Oxytocin) எனும் காதல் ஹார்மோனை அதிகரிக்கச் செய்யும். இது நம் மனத்திற்கு அமைதி, நம்பிக்கை, உறவின் பாதுகாப்பு உணர்வுகளைத் தருகிறது. அந்த நெருக்கம் “தண்” எனப்படும் குளிர்ச்சியாய் அனுபவிக்கப்படுகிறது.

இந்தக் குறள், ஒரே நபரிடம் ஒரேநேரத்தில் எதிர் மற்றும் நேர்மறையான உணர்வுகள் தோன்றும் தெளிவற்ற உணர்ச்சிகள் (Ambivalent emotions) என்ற உளவியல் உண்மையை வெளிப்படுத்துகிறது. காதல் எனும் உணர்வு இன்பம் மட்டும் அல்ல; அது வேதனையையும் ஏக்கத்தையும் ஆவலையும் உள்ளடக்கியது. காதலிக்கிறார் என்றபோதும், காதலரின் நெருக்கம் இல்லாத நேரங்களில் ஏற்படும் சிதைவு உணர்வுகள், உளவியல் அடிப்படையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.

“தீயாண்டுப் பெற்றாள் இவள்” எனும் வாக்கியம், அந்தப் பெண்ணின் தன்மையை விசித்திரமான, புதுமையானதும் புரியாததும் எனக் கூறுகிறது. இங்குத் ‘தீ’ என்பது சாதாரணமான வெப்பம் தரும் தீ அல்ல; அது இரு தன்மைகளைக் கொண்டது – சுடும் மற்றும் குளிரும். இது காதலியின் உடல்மொழி, பார்வை, புன்னகை போன்றவற்றில் இருந்து ஏற்படும் எதிர்வினைகளைப் போலவே. அவளது புன்னகையில்கூட ஒரேநேரத்தில் வலியும் இனிமையும் இருக்கக்கூடும். இந்தக் கொந்தளிப்பான உணர்வுகளை மனிதன் புரிந்துகொள்ள முடியாமலிருப்பது காதலின் சிக்கலான உளவியல் இயல்பு.

பிரிவில் ஏற்படும் வலியும், சேர்வில் கிடைக்கும் இன்பமும், ஒரே நபரின் தாக்கத்தால் உருவாகின்றது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இது காதலின் சிக்கலான உளவியல் பிணைப்பை நமக்கு உணர்த்துகிறது. காதலின் இந்தத் தீயான அனுபவம், எங்குப் பிறந்ததோ என வியக்கும் வள்ளுவரின் பார்வை, உணர்ச்சி நெகிழ்வோடு நம்மையும் கண்களால் அல்ல, உள்ளத்தால் காதலிக்கச் செய்கிறது.

வேட்ட பொழுதின் அவையவை போலுமே

தோட்டார் கதுப்பினாள் தோள்

இது, இயற்கையின் அழகும், மனமார்ந்த மகிழ்ச்சியும் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்படுவது எப்படி என்பதைச் சொல்லுகிறது. நாம் விரும்பும் பொருள் எப்போதும் அருகிலிருப்பது, அதனால் வரும் மகிழ்வைப் போலவே, பூ முடித்த பூவையின் மென்மையான தோள்கள் மனத்திற்கு இனிமை அளிக்கின்றன. அவை அணைக்கப்படும்போது, ஒளிரும் அழகு, மென்மை, மற்றும் சுகமான உணர்வு அனைவரையும் ஈர்க்கிறது. இதன்மூலம், இயற்கை நமக்குத் தரும் சிறிய இன்பங்களும், அருகிலிருக்கும் நன்மையும் வாழ்க்கையின் இனிமையான அனுபவமாக மாறும் என்பது உணர்த்தப்படுகிறது.

இதில், காதலின் உடல்-மன உந்துதல்களையும் அவற்றின் உளவியல் தாக்கங்களையும் நுணுக்கமான கவிதை நடையில் விவரிக்கிறார். “வேட்ட பொழுதின்” என்பது, ஒரு நபருக்கு ஆசை அல்லது விருப்புத் தோன்றும் நிமிடம் எனப் பொருள்படும். அந்நேரத்தில், அவனது உள்ளத்தில் எழும் உணர்வுகள் — சுய நலனோடு கூடியவையாகவும் நுணுக்கமாகவும் அமைகின்றன. அதேபோன்று, காதலியின் தோள்கள் அவன் விரும்பும் பொருட்களின் வடிவம் எடுக்கும் போல உணர்ச்சித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மனித மனம் ஏதாவது ஒன்றை விரும்பும் பொழுது, அதற்குரிய படிமங்களை உருவாக்கும் தன்மை கொண்டது. இது ‘அறிவாற்றல் பிம்பங்கள்’ (Cognitive imagery) எனும் உளவியல் கோட்பாட்டில் அடிப்படையாகும். மனிதன் நினைக்கும் விருப்பமான உணவு, வாசனை, தொட்டு உணரும் பொருள் அனைத்தும் அக உணர்வு பிம்பங்களாக மாற்றப்படுகின்றன. அதுபோல் காதலியின் தோள்கள், அந்த நினைவுகளுடன் ஒத்த உணர்வைத் தரும். ஏனெனில், அவை உணர்வின் அகச்சிவப்பில் நன்கு பதிந்திருப்பவை.

இந்தக் குறளில் வள்ளுவர் கூறும் “கதுப்பினாள் தோள்” என்பது காதலியின் உடல் உறுப்பான தோள் மட்டுமல்ல; அது உணர்வின் தூதர். அந்த உடல் உறுப்புகள், ஒருவருடைய மனநிலை, ஆசைகள், காதல் ஆழம் ஆகியவற்றை உணர்த்தும் வடிவமாகிறது. மனிதனின் உடல் உணர்வுகள், குறிப்பாகக் காதலின்போது தோன்றும் சிற்றின்பத் தூண்டுதல்கள் (காம உணர்ச்சித் தூண்டுதல்கள்) (Sensual triggers) மிகவும் சக்திவாய்ந்தவை. அது ஒரு சுவை, வாசனை, கையொட்டுப் போல மனத்திற்கு உணர்ச்சி விழிப்புணர்வை (Emotional arousal) உருவாக்கும்.

“வேட்ட பொழுது” என்பது வெறும் உடல் ஆசைக்கான நேரம் அல்ல; அது ஒரு மன உற்சாகமும் இன்பத் தேடலுமாக இருக்கிறது. அந்நேரத்தில், காதலியின் தோள்கள் அவன் எண்ணத்தில் நிறைந்த பல்வேறு விருப்பங்களைப் பிரதிபலிப்பதாகக் காட்டப்படுகின்றன. இது திட்ட ஆசை (Projective desire) எனும் உளவியல் கோணத்தில் பார்க்கப்படலாம். அதாவது, ஒரு நபரின் மன உற்சாகங்கள் மற்றொரு நபரின் உடல்மூலம் பிரதிபலிக்கப்படுவது.

மனது ஒரே விருப்பத்தைத் தொடர்வதில்லை. அது வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு பொருட்களை விரும்பும். ஆனால், காதலியின் தோள்கள், அந்நேரத்து மனநிலையைப் பொருத்து பல வடிவங்களில் இன்பம் அளிக்கும் என்பதுதான் இங்குத் தோழர் வள்ளுவர் கூறும் ஆழ்ந்த உண்மை. இது, மனிதனின் உணர்வுகளில் இருக்கும் மாற்றங்கள் மற்றும் தகவமைப்பு உணர்ச்சி ரீதியான பதில் (Adaptive emotional response) எனும் உளவியல் கோணத்தை ஒத்திருக்கிறது.

இக்குறளில் வள்ளுவர், காதலியின் தோள்களை வெறும் உடல் அங்கமாக அல்ல, மாறும் மனநிலைக்கு ஏற்ப தத்தம் அமைவுடன் இன்பம் தரும் பன்முகத் தன்மை உடையதாகக் காண்கிறார். இது, மனித உணர்வுகளும் உடலூட்டத்தோடு நேரடியாகத் தொடர்புடையவை என்பதை வலியுறுத்துகிறது. மனம் விரும்பும் போது, காதலியின் தோள்கள் அவனது ஆசைகளை பிரதிபலிக்கின்றன. காதல் என்பது சிக்கலான உளவியல் நிகழ்வாகவே நமக்குப் புரிகிறது. இது தோழர் வள்ளுவரின் கற்பனையின் ஆழத்தையும் அவர் அறிந்துள்ள உளவியல் உண்மையையும் ஒரேநேரத்தில் வெளிப்படுத்துகிறது.

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு

அமிழ்தின் இயன்றன தோள்

மனம் வாடி சோர்ந்து இருக்கும்போது, அந்த காதலியின் தோள்களைத் தொடும் போது உயிர் மீண்டும் உயிரிழந்து புதுமையாகத் தளிர்கிறது என்று உணரப்படுகிறது. அவளின் தோள்கள் அமிழ்தத்தில் செய்யப்பட்டவைகளைப் போல் மென்மையாகவும் இனிமையாகவும் அணைத்தவரின் உள்ளத்தை ஈர்த்து மகிழ்ச்சியைத் தருகின்றன. இதன் மூலம், உடல் தொடுதல் மட்டுமல்ல, அதனுடன் உணர்வுகள் இணைந்து மனத்தை உயிர்ப்பிக்கும் சக்தியையும் காதல் மனிதனை இவ்வளவு ஆழமாக மகிழ்ச்சியடையச் செய்யும் தன்மையையும் வெளிப்படுத்துகிறது.

திருவள்ளுவர், இக்குறளில் காதலின் உடல் தொடுதலால் ஏற்படும் உளவியல் மாற்றங்களையும், அந்த மாற்றங்கள் நம்முடைய உணர்ச்சிமூட்டங்களோடு எவ்வாறு பிணைந்துள்ளன என்பதையும் நன்கு விளக்குகிறார். காதலின் ஒருவகைச் சூட்சுமமான ஆனந்தத்தை, மிகவும் நவநாகரிகமான உளவியல் மொழியில் பாராட்டலாம்.

மனித உடலுக்குள் ஏற்படும் எளியத் தொடுதல்களே பெரும் உணர்வுப் பொழிவுகளைக் கொடுக்கக் கூடியவை. இதனை நவீன உளவியல் தொட்டுணரக்கூடிய தூண்டுதல் (Tactile stimulation) எனக் குறிப்பிடுகிறது. காதலியால் ஏற்படும் தொடுதல், குறிப்பாக அவளது தோள்கள், காதலனின் நரம்பியல் அமைப்பில் பேரிசை நிகழ்த்துகின்றன. இதன் காரணமாக, அவனுக்குள் “உயிர் தளிர்ப்பது” போல ஒரு புதிய உயிர்த் தோற்றம் ஏற்படுகிறது.

தீண்டல் நிகழும்போது, மனித உடலில் ‘டோபமைன்’ (Dopamine), ‘ஆக்சிடோசின்’ (Oxytocin), செரோடோனின் (Serotonin) போன்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை அனைத்தும் விருப்பம், நெருக்கம் மற்றும் நிம்மதியினை ஏற்படுத்தும் ஹார்மோன்கள். இவைதான் “உயிர்த்தளிர்ப்பு” எனும் வார்த்தைக்கு உளவியல் அடித்தளம். காதலியின் தோள் இந்த ஹார்மோன்களைச் செயல்பாடுகளைத் தூண்டும் அளவுக்கு இயற்கை அன்பின் தூதராகத் தோன்றுகிறது.

தோழர் வள்ளுவர் இவளது தோள்களை அமிழ்தத்தால் ஆனவை எனும் அளவுக்கு மேலான அனுபவமாய்க் கூறுகிறார். இது, ஓர் அதிபரவளைய உருவகம் (Hyperbolic metaphor) என்றாலும், உண்மையில் இது ஓர் ஆழ்ந்த உளவியல் உண்மை. ஒருவரால் தூண்டப்படும் இனிமையான தொடுதல், அந்த நபரின் உள்ளத்தை வாழ்விப்பது போலவே இருக்கும். மனத்துக்குள் பதிந்த இன்ப அனுபவம், அந்த உடல் உறுப்பை “மெய்மறக்கும் இனிமையின் பிரதியாக” மாற்றுகிறது.

இங்கு “பேதை” என்ற சொல், மதிப்பில்லாதவனாக அல்ல; உணர்ச்சியில் தன்னை முழுவதுமாகத் தொலைத்துவிட்ட காதலனாகப் பொருள்படும். மனம் முழுவதுமாகக் காதலில் மூழ்கியவனுக்கு, காதலியின் சிறு தொடுதலும் “புதிய உயிர் பிறப்பது” போன்ற ஆழ்ந்த உணர்வுகளைத் தரும். இது ஒரு வகை காதலின் உச்சக்கட்ட நிலையாகக் கருதலாம்.

அன்பு, உணர்வு, தொடுதல் ஆகிய மூன்றும் இணைந்துள்ளபோது, மனத்

திலும் உடலிலும் நிகழும் மாற்றங்கள் மிக வலிமையானவை. காதலனுக்குள் தோன்றும் “உறுதோறு உயிர்தளிர்ப்பு” என்பது, நரம்பியல் தாக்கத்தின் உணர்வுப்பூர்வ விளைவாகும்.

இந்தக் குறட்பா காதலனின் உள்ளுணர்வுகளை நுணுக்கமாகப் பதிவு செய்கிறது. காதல், நம்மை மறந்து இன்னொருவரின் தொடுதலில் துளிர்விக்கும் அந்த அதிசய சக்தியாகும். வள்ளுவரின் வார்த்தைகளில், உடலின் தொடுதல் மட்டும் அல்ல; அதனுடன் பிணைந்துள்ள அன்பு, நெருக்கம், உணர்ச்சி ஆகிய அனைத்தும் ஒரு மனிதனின் உயிருக்குப் புதிய அர்த்தங்களைத் தருகின்றன. இது உணர்வு மற்றும் உடலை ஒன்றிணைக்கும் நவீன உளவியல் கோட்பாடுகளுக்குப் பொருந்துகிறது.

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு

காதலியுடன் சேர்ந்து அனுபவிக்கும் இனிமையானது உழைப்பின் பலனாகப் பெற்ற பொருட்களை நெருங்கியவர்கள், குடும்பத்துடன் பகிர்ந்து சாப்பிடும் மகிழ்ச்சியைப் போன்ற உணர்வைத் தருகிறது. அன்பு, பகிர்வு, உடல்நெருக்கம் மற்றும் மனநிறைவு அனைத்தும் சேர்ந்திருக்கிறன. இவ்வாறு, அன்பான உறவின் இன்பமும், உழைப்பின் சுகமும் ஒரேநேரத்தில் மனத்தை மகிழ்ச்சியால் நிரப்புகிறது.

இங்கு காதலின் உடலுணர்வு சார்ந்த அதிமனித அனுபவத்தை நுட்பமாகக் கூறுகிறார். காதலியின் அணைதல் அல்லது உறவு என்பது, ஒருவரது சொந்த வீட்டிலிருந்தே தமது உணவை எடுத்து உண்ணும் அளவுக்குச் அமைதியளிக்கும், பாதுகாப்பைத் தரும், மிக அருகிலான அனுபவமாகத் தரப்படுகிறது. இவ்வகை உணர்வை உளவியல் கோணத்தில் அணுகும்போது, இது உறவின் ஆழமான நெருக்கத்தையும், உடல்–மன உறவின் ஒன்றிணைப்பையும் வெளிக்கொணர்கிறது.

உணர்வுப்பூர்வமான தொடர்புகளில், மனிதனுக்கு ஏற்படும் முக்கியத் தேவைகள் பாதுகாப்பும் சுயமான செல்வமும்தான். இக்குறளில், காதலன் தன் காதலியுடன் உடலளவில் சேரும்போது, அது தன் வீட்டில் இருப்பதுபோல் நிம்மதியான அனுபவமாக இருக்கிறது. இது அச்சமற்ற, முழுமையான தன்னம்பிக்கையோடு கூடிய உறவினைக் குறிக்கிறது. நவீன உளவியல் மொழியில் இது பாதுகாப்பான இணைப்பு (Secure attachment) என அழைக்கப்படுகிறது.

காதலியின் மடியில் ஒருவர் ஓய்வெடுப்பது, உடல் தேவையை மட்டுமல்ல, மன நிம்மதியையும் கொடுக்கும். இது பரஸ்பர அன்பின் ஒரு வடிவமாகும். “தமதுபாத்து உண்டற்றால்” என்ற கூற்று, ஒரு வெளிச்சம் காட்டும்; அது தனித்துவம் அல்ல, பகிர்தல். காதலியின் இன்பம், தனக்கே உரியது என்று உணரும் காதலனின் மனநிலை, அவரை மன அமைதியுடன் நிறைக்கிறது.

இங்கு, காதலியின் உடல் இன்பத்தை மட்டும் தரவில்லை; அது ஓர் ஆன்மிக பூரணத்தையும் அளிக்கிறது. உடல் உறவு என்பது வெறும் சந்தோஷம் அளிக்கும் நிகழ்வாக அல்ல; அது ஒரு பரஸ்பர மன உறவின் உச்சமாகும். “அம்மா அரிவை முயக்கு” எனும் வள்ளுவரின் உச்சரிப்பு, அந்த இன்பத்திற்கும் சொந்தத்தின் உணர்வுக்கும் இடையே உள்ள மிக நெருங்கிய தொடர்பைக் காட்டுகிறது.

வள்ளுவர் “அம்மா அரிவை” எனக் குறிப்பதற்குப் பின்னால், காதலியின் உடலின் மென்மையும், அவரது அணைப்பின் மன அழுத்தம் நீக்கும் தன்மையும் குறிப்பிடப்படுகிறது. இது காதலன் உணர்ச்சிகளைச் சாந்தமாக்கும். இதனை நவீன உளவியலில் “உடல் நெருக்கம் மூலம் உணர்ச்சிக் கட்டுப்பாடு” (Emotional regulation through physical intimacy) என்பர். ‘காதலியின் அணைதல்’ ஒரு தனி மருந்தாக மாற்றப்படுகிறது.

இக்குறள் கூறுவது வெறும் இளமையின் இன்ப அனுபவம் மட்டும் அல்ல. இது, உண்மையான காதல் உறவின் முழுமையான நிலையைக் குறிக்கிறது. மனத்திலும் உடலிலும் ஒருவருக்கொருவர் உரியவராகவே இருக்கின்றனர். இப்போதுதான் அவர்கள் உண்மையிலேயே “தமது” எனக் கருதப்படுகிறார்கள்.

இங்கு காதலின் உயர் நிலையை உரைசாற்றுகிறார். காதலியின் அணைப்பில் ஏற்படும் அந்த இனிமை, ஒருவரது வீட்டிலிருப்பது போலவே நிம்மதியானது, நெருக்கமானது. இது உணர்ச்சிகளால் ஆன பரிமாற்றம். இந்நிலை, காதல் உறவின் உளவியல் ஆழத்தை நமக்கு உணர்த்துகிறது. காதலியிடம் பெறப்படும் அணைதல், மனத்துக்குள் ஏற்படும் “நான் இங்கே பாதுகாப்பாக இருக்கிறேன்” என்ற உணர்வை உருவாக்குகிறது.

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை

போழப் படாஅ முயக்கு

காதலர்கள் ஒருவருக்கொருவர் அருகில் மிக நெருக்கமாக, உற்சாகத்துடன் தழுவிக் கொண்டிருப்பது, மனத்திலும் உடலிலும் மகழ்ச்சியைத்தை தரும் அனுபவம் எனச் சொல்லப்படுகிறது. இந்த நெருக்கமான அணைப்பு, அத்தகைய ஆழமான தொடர்பு மற்றும் அன்பின் உணர்வுகளால் மனம் முழுவதும் மகிழ்ச்சி, பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாட்டைப் பெறுகிறது. காற்றும் இடையில் நுழைய முடியாத அளவிற்கு அணைத்துக்கொண்டிருப்பது, அவர்களது நெருங்கிய உறவின் தனித்துவத்தையும், அன்பின் முழுமையான ஆனந்தத்தையும் வெளிப்படுத்துகிறது. காதலின் அற்புதமான இனிமை இதுவே.

இங்கு காதல் உறவின் மிக நெருக்கமான, நேரடி உணர்வை மிக அழகாக வெளிப்படுத்துகிறார். “வீழும் இருவர்க்கு” எனும் தொடக்கம் காதல் நெருக்கத்தில் இணையும் இரு மனங்களையும் குறிக்கிறது. அவர்கள் தழுவும் தருணத்தில் “வளியிடை போழப்படா”தல் — அதாவது, காற்றுங்கூட இடையிலே செல்ல வாய்ப்பில்லாத அளவிற்கு நெருக்கமாய் இருக்கும் அந்தப் பாச உறவின் உளவியல் ஆழத்தை இந்தக் குறள் கூறுகிறது.

மனித மனம், நெருக்கம் மற்றும் அணைத்தலால் பெரிதும் ஆறுதல் பெறுகிறது. சின்ன வயதிலேயே தாயின் அணைதலால் நம் மனத்திற்குள் உருவாகும் பாதுகாப்பும், நேச உணர்வும், இளமையிலும் காதல் உறவிலும் தொடர்கிறது. இந்தக் குறளில், காதலியின் அணைதலால் ஏற்பட்ட நெருக்கம், காற்றுங்கூட இடைஞ்சலாக இருக்க முடியாத அளவு இன்பமாக இருக்கிறது என்று வள்ளுவர் கூறுகிறார்.

உடல் மொழி, வாக்குமூலத்தைவிட பலமையான ஒரு தொடர்பு வடிவம். இந்தக் குறளில் “வீழும் இருவர்க்கு” என்பது பரஸ்பரமாக ஈர்ப்புக் கொண்ட இரு உள்ளங்களும் ஒரு சேர சரணடைவது எனப் பொருள் பெறுகிறது. இது வெறும் ஆசை அல்ல; இது பரஸ்பர நெருக்கம் (Reciprocal intimacy) இருவரும் ஒருவருக்கொருவர் முழுமையாக வெளிப்படுத்திக்கொள்ளும், வழங்கிக்கொள்ளும்  உணர்ச்சி.

“வளியிடை போழப்படாஅ” என்பது, வெளிநிலைகளால் குறுக்கீடு இல்லாத பூரணத் தனிமையைக் குறிக்கிறது. இது காதலின் மிக நெருக்கமான தருணமாகும். மனத்தில் உள்ள அனைத்துத் தடையையும் மறந்து, வெளிச்சமில்லாத உலகில் ஒருவரையொருவர் மட்டுமே காணும் அந்தக் காதல் தருணம், உணர்வியல் அடிப்படையில் உணர்ச்சி நிரம்பியதும் பாதுகாப்பானதுமாக உள்ளது.

இரண்டு உயிர்கள் இடையில் உள்ள வேறுபாடுகள் அனைத்தும் தொலைந்து, அவர்கள் ஒரே உணர்வில் ஒன்றிணையும் தருணம் இது. இதை உளவியல் மொழியில் உணர்ச்சி இணைவு (Emotional fusion) எனக் கூறலாம். இங்கு, அவர்கள் ஒருவரையொருவர் முழுமையாக ஏற்கின்றனர். ஒருவருக்கொருவர் பிணைந்திருக்கின்றனர்.

வள்ளுவர் இங்கு உடலை மூலமாகக் கொண்டு மன உறவின் பெருமையைச் சொல்கிறார். காதல் என்பது வெறும் மன உறவாக மட்டும் இல்லாமல், உடலிலும் வெளிப்படும் ஒருமைப்பாடாகும். இங்கு “முயக்கு” எனும் சொல், காதலியின் அணைப்பைச் சுருக்கமாகவும் மனத்தை ஈர்ப்பதாகவும் எடுத்துக்காட்டுகிறது.

இக்குறள், காதலின் உச்சநிலையை, நெருக்கத்தை, பகிர்தலை அழகாக விவரிக்கிறது. இது மன அழுத்தங்களைத் தணைக்கும், தனிமையைப் போக்கும், இரண்டு உயிர்களையும் ஒன்றுபோலக் கலக்கும் ஓர் அழகிய உளவியல் சித்திரம். காற்றுங்கூட இடைவெளி கொள்ள முடியாதபடி, காதல் எனும் ஆனந்தத்தின் உச்ச நிலையைக் காட்டும் இக்குறள், உணர்வுகள் எவ்வளவு ஆழமாய் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவுகின்றன என்பதைக் கவிதையாக உணர்த்துகிறது.

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

கூடியார் பெற்ற பயன்

இது, காதலின் தனித்துவமான ஆனந்தங்களை விவரிக்கிறது. ஊடல் கொள்வதும் அதனால் வரும் சுகமும் வாழ்க்கையில் உண்டுதான். ஆனால், காதலர்கள் அதில் கூடுதலாக, மனத்தையும் உணர்வுகளையும் கலந்த இனிமையான அனுபவத்தைப் பெறுவர். அன்பும் நெருக்கமும் இணைந்த வாழ்வில், மனம் மயங்கி, உணர்வுகள் உச்சச் சிகரத்திற்குச் செல்வதைப் பற்றி இங்குச் சொல்லப்படுகிறது. காதல் வாழ்வில் உணவு மட்டுமல்ல, ஒருவரின் அருகிலும், அன்பிலும், பரிவிலும் கிடைக்கும் ஆனந்தமும் பெரிய பங்களிப்பாகும். இதுவே மனத்தையும் உடலையும் மகிழ்ச்சியால் நிரப்பும் உண்மையான இன்பம்.

திருவள்ளுவர், மனித வாழ்வின் எல்லாப் பரிமாணங்களையும் அலங்காரமில்லாத அழகில் விளக்கியவர். குறிப்பாகக் காமத்துப்பால் பகுதியில், காதலின் உள்நடப்புகளை ஆழமான உணர்வியல் பார்வையுடன் சித்தரிக்கிறார். இக்குறளில் காதல் உறவின் மூன்று முக்கியக் கட்டங்களாக ஊடல், உணர்தல், புணர்தல் ஆகியனவற்றைக் கூறி, இவை எல்லாம் காதலின் முழுப் பயன்களாகக் காட்டியுள்ளார்.

“ஊடல்” என்பது காதலர்களுக்கிடையிலான சிறிய மனச்சிறுமைகள் அல்லது தவறாகப் புரிந்துணர்வுகளால் ஏற்படும் இடைவெளி. உளவியல் அடிப்படையில், இது ஒரு சுய உணர்ச்சி வெளிப்பாடு. காதல் உறவுகள், இருவரும் ஒரேநேரத்தில் ஒரே திசையில் சிந்திக்க முடியாத நிலையிலும், அந்த வேறுபாடு வெளிவரும், வெளிப்படும் இடம்தான் ‘ஊடல்’.

ஊடலின் முக்கியமான உளவியல் அம்சம் என்னவென்றால், அது உணர்வுகளின் தீவிரத்தையும் உரிமையையும் காட்டுகிறது. ஒருவர் மீது மிகுந்த பாசம் உள்ளபோதே ஊடல் உருவாகிறது. அதுவே அவர்களுக்கிடையில் உள்ள உணர்வுப் பிணைப்பின் ஆழத்தைக் காட்டுகிறது.

ஊடலுக்குப் பிறகு, “உணர்தல்” என்பது அந்த ஊடல் உண்மையில் நேர்த்தியற்றதா? உண்மையான காரணமா? என்பதைப் பற்றிய விழிப்புணர்வு. இதுதான் உணர்தல். இது ஒருவரின் மனவளர்ச்சி, சுய அறிவு, பரிதாப உணர்வு மற்றும் பாசத்தின் மேன்மை ஆகியவற்றின் வெளிப்பாடாகும்.

உணர்தலின் உளவியல் நோக்கம், எதுவும் நிரந்தரமல்ல, தவறுகள் மனித இயல்பின் பகுதியாகும் என்பதை உணர்வதிலேயே உள்ளது. இத்தகைய உணர்தல் இல்லாத காதல் உறவு, தற்காலிக உணர்வெழுச்சி மட்டுமே.

‘புணர்தல்’ என்பது, காதலர்கள் மீண்டும் மனத்தின் பிணைப்புடன் இணைவது. இது உடல் மற்றும் மன இரண்டிலும் நிகழும். இது உடனடியாக ஏற்படக்கூடிய ஒன்றல்ல; உணர்தலின் தொடர்ச்சியாக, பரஸ்பர புரிதல், பொறுமை, பாசம் ஆகியவை இணைந்து உருவாகும் ஓர் இனிய அனுபவம்.

உளவியல் அடிப்படையில், ‘புணர்தல்’ என்பது, மன அழுத்தம் நீங்கும் ஓர் அமைதிக் கட்டம். இது இருவரிடையேயான நம்பிக்கையையும் உறுதியையும் வலுப்படுத்தும். இது காதலின் அடித்தளமான உணர்ச்சிப் பிணைப்பினைப் (Emotional bonding) பலப்படுத்துகிறது.

திருவள்ளுவர் இவை மூன்றையும் சேர்த்து “கூடியார் பெற்ற பயன்” என்கிறார். அதாவது, காதலுக்குள் நுழைந்தவர்கள், உண்மையான உறவின் இயல்புகளை இவற்றின் மூலம் மட்டுமே அனுபவிக்க முடியும். இது உணர்வுப் பயணமாகவும் மன வளர்ச்சியின் பாதையாகவும் பார்க்கப்படுகிறது.

இக்குறள், ‘காதல்’ என்பது வெறும் இன்ப அனுபவம் மட்டுமல்ல; அது ஊடல், உணர்தல், புணர்தல் என்ற மன நிலையாற்றல்களின் தொடர்ச்சியாகும் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த உளவியல் கட்டங்கள், மனித மனத்தின் ஆழமான பிணைப்பையும், உணர்வுகளின் பரிமாற்றத்தையும் காட்டுகின்றன. இவை இல்லாமல் உள்ள காதல், மேற்பரப்பில் மட்டுமே தோன்றும் நிழலான உறவாகிவிடும். எனவே, காதலின் உண்மையான பயன், இந்த உளவியல் உணர்வுகளின் முழுமையாக அனுபவிப்பதே என வள்ளுவர் நமக்கு உணர்த்துகிறார்.

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு

இது, காதல் உணர்வின் புதுமையையும் ஆழத்தையும் வெளிப்படுத்துகிறது. மனிதன் அறிவும் நூல்களும் கொண்டு அறிந்துகொள்ளும் போதும்கூட, முன் தெரியாதவை வெளிப்படுவதைப் போல, தன் அழகிய காதலியின் அருகில் இருக்கும்போது அன்பும் ஈர்ப்பும் எப்போதும் புதியதாகத் தோன்றும் எனச் சொல்லப்படுகிறது. அவளது நறுமணமான அணியும், அழகான தோற்றமும்கூட, ஒவ்வொரு தடவையும் மனத்தில் புதிய காதல் சுகத்தை ஏற்படுத்துகிறது. இதன் மூலம், உறவு, நெருக்கம், அன்பின் உணர்வு எப்போதும் புதிதாய், ஆழமாகவும் மகிழ்ச்சியூட்டுமென வெளிப்படுகிறது. காதல் ஒருபோதும் பழையதாக மாறாது என்பதை இது காட்டுகிறது.

தோழர் வள்ளுவர், காதல் உணர்வின் மனஉள்ளார்ந்த பரிமாணங்களை மிகத் தெளிவாகவும் சீராகவும் எடுத்துரைக்கும் பேரறிஞர். இவர் கூறும் இக்குறளில், காதலின் உளவியல் தன்மையை மிக அழகாகக் கூறுகிறார். இங்குக் காதல் என்பது அறிவு வளர்ச்சியுடன் மாறாமல், மாறி மாறி உணரத்தக்க ஒரு மாயையான அனுபவமாக இருப்பதை உணர்த்துகிறார்.

“அறிதோறு அறியாமை” என்ற வாக்கியம், காதல் என்பது அடையும் அளவுக்கு  அறிய முடியாமல்கூடி வரும் ஒரு பரபரப்பான உணர்வாக உள்ளது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. உளவியல் அடிப்படையில் பார்க்கும்போது, இது உணர்ச்சிப் புதுமை (Eemotional novelty) எனப்படும் மன உணர்வின் புதிய தன்மையைக் குறிக்கிறது. மனத்துக்கு  நெருக்கமாகச் செல்லும் ஒரு நபரிடம்   ஈர்க்கப்படும் போது, ‘அவரைப் பற்றித் தெரிந்துகொண்டன போதும்’ என்பதே இல்லாமல்,  ‘மேலும் மேலும் அவரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்’ என்ற ஆர்வம் மீண்டும் மீண்டும் உருவாகிறது. அதுவே அறிதோறும் அறியாமை.

தொடர்ந்து பார்க்கும்போது, “செறிதோறும் சேயிழை மாட்டு” என்கிற பகுதி, அந்த இளம் பெண்ணிடம் நெருக்கம் ஏற்படும் போதெல்லாம், காதல் உணர்வு புதிதாகவே தோன்றுகிறது எனக் கூறுகிறது. இது புதுமை விளைவு (Novelty effect) என்ற உளவியல் உண்மையைப் பிரதிபலிக்கிறது. ஒரே நபரிடம் தொடர்ந்து ஒரே மாதிரியான பாச உணர்வுகள் ஏற்படுவது என்பது, மனத்தின் இயல்பே அல்ல. ஏனெனில், மனித மனம் புதியதை விரும்பும் தன்மை கொண்டது. ஆனால், உண்மையான காதலில், ஒரு நபரிடமே தொடர்ந்து புதிய உணர்வுகள் தோன்றும் வகையில் மனத்தின் மீள்பிறப்பு நிகழ்கிறது.

உளவியல் அடிப்படையில், காதல் என்பது முழுமையாக அறிவால் பரிசோதிக்க முடியாத உணர்வாகும். இது அறிவின் எல்லைகளை மீறிச் செல்லக் கூடியது. இதற்குப் பின்னணி என்னவென்றால், காதலில் நம்மால் உணர்வுகளை விகிதமாகக் கணிக்க முடியாது. ஒருவரின் ஒரு பார்வை, ஒரு சிரிப்பு, ஒரு மெலிதான தொடுதல் — இவை அனைத்தும் எண்ணற்ற அளவுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

திருக்குறள் இங்கு அறிவோடு காதல் அணுக முடியாது என்பதையே உரைப்பது. காதல் என்பது அறிவு அடிப்படையிலான பகுத்தறிவால் பரிமாணிக்க முடியாததொரு ‘அறியாமை’யை மீண்டும் மீண்டும் சந்திக்க வேண்டிய மனநிலையாகும்.

மனிதன் தன் வாழ்நாளில் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். காதல் என்பது, ஆழமான நெருக்கமும் உணர்வுப் பரிமாற்றமும் அடிப்படையாகக் கொண்டது. அதனால், காதல் நெருக்கத்துடன் வரும்போது அறிவால் இல்லாமல் உணர்வுகளால் வழிநடத்தப்படுகிறது. அதுதான் இங்கு “அறிதோறும் அறியாமை” எனப்படுவது.

இங்கு, ‘காதல்’ என்பது, அறிவுச் சிந்தனையின் வெளி என்றும், அது மனத்தின் உள்ளார்ந்த தேடல்களால் இயக்கப்படும் என்றும் விளக்குகிறார். காதல் என்பது ஒருமுறை புரிந்துவிட்டாலே போதுமென்ற அளவுக்கு எளிமையானது அல்ல; மாறாக, அதன் ஒவ்வொரு தருணமும் புதியதாய், புதிராய், புதுமையாய் இருக்கிறது. இதனால்தான் காதல் உயிரின் ஒரு தீராத பயணம் எனும் உண்மையை இந்தக் குறள் உரைக்கின்றது.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *