
என்னிடம்தான் அவள் அதிகம் பேசி இருக்கிறாள். பெண்ணாகப் பிறந்துவிட்டதால் வெளிப்படையாக எங்கு பேச முடியாது என்பதைக் கடந்து கலகலப்பாக இருந்தவள் காலப்போக்கில் மாறிப் போனாள்.
அடுக்களையில் சமையல் பாத்திரத்துடன் பேசி இருக்கிறாள். அவள் உண்டாக்கிய அத்தனைப் பூக்களிடமும் பேசி இருக்கிறாள்.
அவைகளிடம் எல்லாம் அலுப்பு உண்டானதோ என்னவோ என்னிடம்தான் கொட்டிக் கொண்டே இருந்தாள்.
எனக்கும் சொல்ல நிறைய செய்திகள் இருந்தன. நானும் பல முறை கத்தித் தான் சொன்னேன். அவளுக்கு புரிந்ததாக காட்டிக்கொண்டதே இல்லை.
அம்மா இருக்கும் வரை யாராவது பெண் பார்க்க வருவார்கள். அவர் செய்த முயற்சிகள் எதுவுமே பலிக்கவில்லை.அநேகமாக அந்த ஏக்கத்திலும் அவர் இறந்திருக்கலாம்.அவர் போன பிறகு ஆண்டுகள் தான் கடந்தன. அவளைப் பெண் பார்க்க யாருமே வரவில்லை.
அவள் என்னிடம் கடைசியாகப் பேசியது
“எனக்கு மட்டும் ஏன் இப்படியானது.”
அதன் பிறகு அவள் பேசவில்லை. அவளுக்குள் பேசுகிறாளா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது.
ஏனென்றால் அவள் தன்னை அலங்கரிப்பதையே நிறுத்திக் கொண்டாள்.
காந்தி நகரில் ஒருவர் இருக்கிறார்.பெரியார் நகரிலும் ஒருவர் இருக்கிறார். அண்ணா குடி இருப்பில் ஒருவர் இருக்கிறார். அக்கிரஹாரத் தெருவிலும் பலர் இருக்கிறார்கள்.
அங்கெல்லாம் என் முறையில் நான் சொல்லி விட்டுத்தான் வந்தேன். இங்கு இன்னும் அதிகமாகவும் அவளுக்கானவர்கள் இருக்கலாம்.
இந்த மனிதர்கள் விநோதமாகவே இருக்கிறார்கள். எதையோ எதிர்பார்த்து எங்கோ தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.
என்னைப் பற்றியும் என் உறவினர்கள் பலவாறு பேசுகிறார்கள். நான் சுயமற்று போனதாக சொல்கிறார்கள்.
நானும் அவளோடு வீதியைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
எனக்கும் வயதாகிறது.
“எனக்கு மட்டும் ஏன் இப்படியானது.”
அவள் கண்ணீர் என் காது மடலில் விழுந்ததற்காக நான் ஏன் அவளை திரும்பிப் பார்க்க தோன்றவில்லை என எனக்கேத் தெரியவில்லை.
***
–ரவி அல்லது.
